PDA

View Full Version : முரடன் முத்து



M.Jagadeesan
29-11-2012, 04:31 PM
கரடு முரடு முகத்தைக் கொண்டவன்
முரடன் முத்து என்னும் பெயரினன்
முறுக்கிய மீசை முகத்தில் வைத்து
முண்டா பனியனை உடலில் அணிந்து
இறுக்கிக் கட்டிய பச்சை பெல்ட்டு
இடுப்பில் தோன்ற கைலியைக் கட்டி
ஆறடி உயரமும் அகன்ற மார்பும்
வீரத் தோளும் விரிந்த பார்வையும்
கூற்றமும் கண்டு மிரண்டு போகும்
தோற்றம் கொண்டவன் முரடன் முத்து.

முதல் குற்றம்:
---------------
அரசு நடத்தும் டாஸ்மாக் கடையில்
முரடன் முத்து குடிப்பது வழக்கம்
ஒருநாள் முத்து டாஸ்மாக் கடையில்
பெருகிய போதையில் வீழ்ந்து கிடந்தான்.
குடித்த பின்பு காசு தராமல்
முரடன் முத்து போகும் வேளையில்
கல்லாப் பெட்டியில் இருந்த ஒருவன்
" நில்லுடா! மவனே ! என்று சொல்லி
முத்துவின் சட்டையைப் பிடித்து உலுக்கி
மொத்தினன் தலையில்; வெகுண்ட முத்து
கத்தியை உருவி அவனது வயிற்றில்
குத்தித் தள்ளினன்; குடலும் சரிய
தடுக்க வந்த மொத்தக் கூட்டமும்
நடுக்கம் கொண்டு எடுத்தது ஓட்டம்.
கல்லாப் பெட்டியில் கையை விட்டு
எல்லாப் பணத்தையும் எடுத்த முத்து
இன்று எனக்கு நல்ல வேட்டை
என்றே சொல்லி மகிழ்ந்து போனான்.

இரண்டாம் குற்றம்:
--------------------
சாலையில் தனியே சென்ற பெண்ணின்
சேலையைப் பிடித்து முத்து இழுக்க
"ஐயோ! என்னைக் காப்பீர் " என்றே
அபலைப் பெண்ணும் வாய்விட் டலற
அவ்வழி சென்ற ஒருசில மனிதர்
செவ்விய அவளது திருமுகம் கண்டு
இரக்கம் கொண்டு முத்துவை நோக்கி
அரக்கனே! உந்தன் அடாது செயலால்
நரகில் தள்ளி நசுக்கப் படுவாய்!
பெருகிய சுற்றம் தாயொடு தந்தை
தங்கை தமக்கை உனக்கு இருந்தால்
இங்கனம் நீயும் நடந்து கொள்வையோ?
மங்கலத் தாலி கழுத்தில் தொங்க
மங்கை அவளைக் கரந்தொட் டிழுத்த
உந்தன் கரத்தை வெட்டித் தள்ளி
ஊரில் உள்ள நாய்க்கும் நரிக்கும்
விருந்து படைப்போம் என்றே சொல்லி
அருவாள் கொண்டு அருகில் செல்ல
மலையைத் தூக்கிய அனுமன் போல
மங்கை அவளைத் தூக்கிய முத்து
காரில் வைத்துக் கடத்திச் செல்ல
ஊரார் பார்த்துச் செயலற நின்றனர்.

மூன்றாம் குற்றம் :
-------------------
பட்டப் பகலில் பத்து மணிக்கு
நட்ட நடுவில் நகரில் இருந்த
வங்கி ஒன்றில் துணிவுடன் புகுந்து
அங்கே இருந்த காவலர் தன்னை
சுட்டு வீழ்த்தி ஊழியர் தம்மைக்
கட்டிப் போட்டுக் காசுடன் நகையும்
கொள்ளை அடித்துச் செல்லுங் காலை
தடுத்த சிலரின் தலையை ஆங்கே
எடுத்த முத்து விரைந்து மறைந்தான்.

முத்து நோய்வாய் படுதல் :
--------------------------
காலம் இவ்விதம் மெல்ல மெல்ல
கோலம் காட்டிச் செல்ல செல்ல
வெடியில் சிதறிய பாறை போல
குடியில் தளர்ந்த முத்துவின் உடலில்
நரைதிரை தோன்றி நரம்பு தளர்ந்து
உரைதடு மாறி பார்வை மங்கி
இருமல் நோயும் ஈளை நோயும்
ஒருங்குடன் இணைந்து அவனை வாட்ட
இளமை முறுக்கில் அவனுடன் இருந்த
துணிவும் வீரமும் துவண்டு போக
தனக்குத் தானே பேச லுற்றான்.

"உருட்டும் விழிகளின் முரட்டுப் பார்வையில்
உயிரை விட்ட ஜனங்கள் ஆயிரம்
வீரம் விளைத்த விழிகள் இன்று
ஈரம் இன்றிக் காய்ந்து போனதே!
எத்தனை பெண்களைத் தொட்ட கைகள்
எத்தனைத் தலையைச் சீவிய கைகள்
எத்தனைப் பூட்டைத் திறந்த கைகள்
இத்தகு நிலையை அடைந்தது ஏனோ?
மிடுக்குடன் இருந்த கைகளில் இன்று
நடுக்கமும் தளர்வும் வந்தது ஏனோ?
ஆறும் மலையும் கடந்து அன்று
ஆயிரம் கற்கள் நடந்த கால்கள்
வேருடன் இன்று வீழ்ந்தது ஏனோ?
வேதனை காலில் வந்தது ஏனோ?
என்னுடன் பிறந்து என்னுடன் வளர்ந்து
என்னையே அழிக்க வந்த எமன்போல்
நோயுடன் நடந்த போரில் தோற்றுப்
பாயும் படுக்கையும் ஆகிப் போனேன்."
என்றே சொல்லிய முத்துவின் கண்களில்
கண்ணீர் வழிந்து கன்னம் நனைத்ததே!


நீதி :
----
எப்படிப்பட்ட கொடியவனாய் இருந்தாலும் , நோயின் கொடுமையிலிருந்து தப்ப முடியாது. " உடன் பிறந்தே கொல்லும் நோய் " என்பாள் ஒளவைப் பாட்டி.

கீதம்
29-11-2012, 10:20 PM
முரடன் முத்துவின் அடாவடி செயலால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைப்பேர்! ஆனாலும் இளமையை அவன் மனம் போனபோக்கில் மகிழ்வாய்க் கழித்துவிட்டான். முதுமையில் நோய் என்பது முரடனுக்கு மட்டுமல்ல, நல்லவர்களையும் வாட்டக்கூடியதே...

முதுமை அடையுமுன்னரே நோயால் பீடிக்கப்பட்டான் என்றிருந்தால் செய்த பாவங்களுக்கு தண்டனை அனுபவிக்கிறான் என்பது போல் வாசகர்மனத்துக்கு சின்னதாய் ஒரு நிம்மதி கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது.

நன்னெறி புகட்டும் ஒரு சிறு கதையை நயத்தோடும் கவித்துவத்தோடும் பதிந்தமைக்குப் பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
30-11-2012, 12:34 AM
முரடன் முத்துவின் அடாவடி செயலால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைப்பேர்! ஆனாலும் இளமையை அவன் மனம் போனபோக்கில் மகிழ்வாய்க் கழித்துவிட்டான். முதுமையில் நோய் என்பது முரடனுக்கு மட்டுமல்ல, நல்லவர்களையும் வாட்டக்கூடியதே...

முதுமை அடையுமுன்னரே நோயால் பீடிக்கப்பட்டான் என்றிருந்தால் செய்த பாவங்களுக்கு தண்டனை அனுபவிக்கிறான் என்பது போல் வாசகர்மனத்துக்கு சின்னதாய் ஒரு நிம்மதி கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது.

நன்னெறி புகட்டும் ஒரு சிறு கதையை நயத்தோடும் கவித்துவத்தோடும் பதிந்தமைக்குப் பாராட்டுகள் ஐயா.

உண்மைதான் ; முதுமை அடையும் முன்னரே முத்து நோயால் பீடிக்கப்பட்டான் என்றிருந்தால் , அவன் செய்த தவறுக்குத் தண்டனைபோல இருந்திருக்கும். தங்களின் பாராட்டுக்கு நன்றி கீதம்.