PDA

View Full Version : வவுனியா மண்ணிலிருந்து ஒரு குமுறல்மதுரகன்
27-11-2012, 10:03 AM
கொழும்பு மருத்துவ பீட வாணிவிழாவில் வாசிக்கப்பட்ட கவிதை..

http://youtu.be/dgZRWcgKpmk

ஆசியாவின் அதிசயம் ஒன்றுக்கு,
பசித்திருந்தும் பாசத்தலைவனுக்கு வாக்களிக்கும்
பாமரர்கள் பாடு அதிசயம்
இரண்டாயிரம்பேரும் இன்றி இருபதினாயிரம் வாக்குகள்
பெற்ற நேசப்பிள்ளைகள் அதிசயம்
புகழ்பாடி வாய் சோரா பாணப்பத்திர ஓணாண்டிகள் அதிசயம்
கால் துடைத்துக்கரையேறும் மங்குணி அமைச்சர்களும்
தேசபந்துக்களும் அதிசயம்..
சிங்கக்கொடி பற்றி facebookஇல் pose குடுத்து
ஒரே தேசம் ஒரே கிண்ணம் என முழங்கும்
சிறுபான்மைத் தேசியங்கள் அதிசயம்
கிழட்டுப்பூனைகள் உடலில் கூடக்கொஞ்சம் மயிர் முளைக்க
சிங்கமெனத்தம்மைப் புகழ்ந்துகொள்ளல் அதிசயம்
எங்களைப் பழிவாங்குவதாய் எண்ணிக்கொண்டு
தங்கள் மக்கள் கழுத்தறுக்கும் சகோதரத் தேசிய இனத்து
சலுகைவாங்கித் தலைவர்கள் அதிசயம்..

இவ்வளவு அதிசயங்கள் கொட்டிக்கிடக்கப் பிறகென்ன
இன்பமே எந்நாளும் துன்பமில்லை...

எங்கள் வாழ்க்கையிலும் வரலாற்றிலும்
அதிசயங்கள் கலந்து தான் வந்திருக்கின்றன..

எங்கள் குழந்தைகள் மட்டும்
பால காண்டம் முடிந்ததும் ஆரணிய காண்டம் புகுந்து
யுத்த காண்டத்தில் விதையாகின..

எங்கள் இளைஞர்களுக்கோ வனவாசத்தைவிட
நீண்டு கிடக்கிறது அஞ்ஞாதவாசம்.. (புனர்வாழ்வுக்காலம்)

கானகத்தில் காரிருளில் காரிகையாய் கைவிட்ட
காதலர்கள் மீண்டும் கை சேராமல் காணாமல் போயினர்...

எங்கள் பெண்களுக்கோ நெடுநல்வாடைகள் கிடையாது
களங்கண்ட கணவனைப் பற்றிய சேதியின்றி
நீண்ட நெடு வாடைகள் மட்டும் வீசிச்செல்கின்றன..

அநியாயமாய்ப் பலிகொடுத்த அன்புக்கணவர்களுக்காய்
நியாயம் கேட்கச்சென்ற நிறையக்கண்ணகிகள்
முலைகள் திருகித்தீயிடு முன் அவர்கள்
தலைகள் திருகித் தீ வைக்கப்பட்டன..

சுடுகாட்டில் பிரசவிக்கப்படும் சீவகர்களெல்லாம்
நடுக்காட்டில் குடியமர்த்தப்படுகின்றனர் நாதியின்றி..

மணிமேகலையிடம் இருந்து அட்சய பாத்திரத்தை
பிடுங்கிக்கொண்ட உதயகுமாரர்கள்
தமது அசோக வனங்களில் அவளை சிறை வைக்கிறார்கள்..

இன்னும் வருகின்றன நாம் பட்ட
கரை கடந்த இன்ப அலைகள் வரையின்றி..
கொஞ்சம் பொறுப்பீர்..

உங்கள் ஒப்பந்தங்களிலும்
அவை கிழித்தெறியப்பட்ட நிர்ப்பந்தங்களிலும்
சிதறி வீழ்ந்தன எங்கள் வரலாறுகள்..

உங்கள் மகிழ்ச்சி ஏப்பக்காற்றின் உவர்ப்புக்குள்
அடங்கிப்போகிறது
என் புளித்தவயிற்றின் அமிலக்காற்று..

அவ்வப்போது போடப்படும் எச்சிற்பருக்கைகளுக்காய்
வாலாட்டி வாலாட்டி
முதுகெலும்பே வாலாகிப்போனது..

குட்டப்பட்டுக் குட்டப்பட்டுக்
கழுத்தற்ற தவளைகளாய் திரிந்துநிற்கும் தலைமுறை..

எனது தெருவில் எனது காலில் எனது செருப்புடன்
நடப்பது எப்படி என்று எனக்குக் கற்பிக்க முயலும்
பூட்ஸ் அணிந்த புலம்பெயர் கால்கள்..

எத்தனையோ துரைகளிடம் நீதி கேட்டோம்,
கொல்லும்வரை கைகட்டிப் பார்த்திருந்து
புதைத்த பின்னர் கல்லறைகளைத் தோண்டி
அரசியல் செய்யும் அத்தனை ஓநாய்களையும் பூஜித்தோம்...
எத்தனைநாள் ஊர்வலத்தில் நாம் கரைந்தோம்
எத்தனை ஆணைக்குழு முன்புதான் அழுதுதீர்த்தோம்..
இத்தனைக்கும் பின்பு இன்று இடிந்து போனோம்..

தர்மம் இது அதர்மம் இது
என என் நெஞ்சு உரைப்பது சரியாயின்
பூஜைக்கு மட்டும் புன்னகைக்கும் கடவுளர்
கண்திறந்து பார்ப்பது இனி எக்காலம்...

உந்தன் கோயில்களே இடிக்கப்படுகையில்
யாரிடம் சொல்லி அழ..
உந்தன் விகாரைகளே ஆக்கிரமிக்கையில்
யாரிடம் பொய் முறையிட..
சாத்திரத்தில் மந்திரத்தில் நூலில் மையில்
தெய்வவாக்கில் நம்பி நின்றோம் பதிலேயில்லை..

சுத்திவரக் குண்டுகள் விழ மேளதாளங்கள் முழங்க நீ வரவில்லை
கொத்தணிக்குண்டுகள் வீழ்ந்து மூண்டெழுந்த தீபத்திலும் நீ வரவில்லை..
சேறும் சகதியும் தெறித்துப்பூசப்பட்ட சந்தனத்திலும் நீ வரவில்லை..
செங்குருதி சிதறி வைக்கப்பட்ட குங்குமத்திலும் நீ வரவில்லை..
உயிரச்சத்தில் ஓலமாய் ஒலித்த தேவாரத்திலும் நீ வரவில்லை..
தெறித்துச் சிதறிவிழுந்த மனிதச்சதைப் பிண்டத்திலும் படையலிலும் நீ வரவில்லை..
எரிந்தும் எரியாமலும் நீர்த்த சாம்பலின் நீறு பூசியும் நீ வரவில்லை..

இன்னும் இதற்குப் பிறகும் நீ வரக்காரணம் உண்டா
என அடியேன் அறியேன்..
சிலிர்க்கின்ற ரோமங்களையும்
துடிக்கின்ற மீசைகளையும் வழித்துக்கொண்டு,
இன்பமாய் உன் துதி பாடி
இன்னமும் துன்பமின்றித்தொடர்கிறோம்..

வாயைப்பொத்திய கைகளைத் துப்பித்துப்பித் திருப்திகொள்கிறோம்...
இன்னும் ஓரிரு வருடங்களில் பேதலித்த புத்தியோடு
இன்பமே எந்நாளும் துன்பமில்லை
எனப்புலம்பித்திரியும் பலர் இருப்பார்கள் உனக்காக..

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு...

ந.க
27-11-2012, 10:55 AM
'முலைகள் திருகித்தீயிடு முன் அவர்கள்
தலைகள் திருகித் தீ வைக்கப்பட்டன..'

இந்த வரியில் உள்ள சொல்லப்படும் கொடுமையை அதன் பின்னால் உள்ள வலியை அழுது கொள்ள ......

முடிவில் இயலாமையின் வெளிப்பாடு - நடைமுறையில் உள்ளே புழுங்கித் தவிக்கும் உண்மை சொல்லப்பட்டவிதம் சத்தியமான சத்தியம்.

'சிலிர்க்கின்ற ரோமங்களையும்
துடிக்கின்ற மீசைகளையும் வழித்துக்கொண்டு,'

இத்தகைய பதிவுகளுக்குப் பாராட்டுச் சொல்வதோ, வாழ்த்துவதோ, அருமைஎன்று புகழ்வதோ பொருந்தாது.

நாம் எமது துக்கத்தைச் சுமந்து கொள்கின்றோம், கொண்டாடமுடிவதில்லை.

காலம் பதில் சொல்லும் என்று ஆறுதல் அடைவோமாக.

'வாலாட்டி வாலாட்டி
முதுகெலும்பே வாலாகிப்போனது..'

ஒரு மனிதத்தின் தலை கீழ் பரிணாமத்தை வரிகளில் கூட அனுமதிக்க மறுக்கிறது என் மனது.

----வாளாகட்டும்!

' ஆற்றாது அழுத கண்ணீர் ... அழிக்கும் படை....!
இந்தக் குறளில் சொல்லும் தர்மம் வெல்லும் எனும் சத்தியம் சாகவில்லை.

எம்மவர் நிலை மாறும்,
எம்மைக் கீறிய காயங்கள் ஆறும்...

மிக்க நன்றி பதிவுக்கு...

lenram80
05-12-2012, 07:25 PM
21ம் நூற்றண்டில் நடந்த காலோகாஸ்ட்!
இதுவரை இந்த பூமியில் நடந்த அனைத்து நிகழ்வுகளும் கடந்த 40 ஆண்டுகளுக்குள் அங்கே நடந்து முடிந்து விட்டது!
இன்னும் எத்தனை காலம் தான் நல்லானை வல்லான் அடக்கும் அதிசயம் நடக்கும்???

வலிக்கு மருந்திடவோ...பசிக்கு சோறிடவோ இந்தப் பின்னூட்டத்தால் முடியாது என்று தெரிந்தும் எதாவது அதிசயம் நடக்காதா? என ஏங்கும் மதுரகனுக்கு என் ஆறுதல்களும், துணையும் !