PDA

View Full Version : சாகவில்லை ஆனால் செத்துவிட்டேன் நான்.



M.Jagadeesan
27-11-2012, 03:09 AM
சேர்த்து வைத்தேன்; ஆனால் சேர்த்து வைக்கவில்லை
செலவு செய்தேன்; ஆனால் செலவு செய்யவில்லை
சுற்றி வந்தேன்; ஆனால் சுற்றி வரவில்லை
வெற்றி பெற்றேன்; ஆனால் வெற்றி பெறவில்லை
அடக்கி வைத்தேன்; ஆனால் அடக்கி வைக்கவில்லை
ஆட்டி வைத்தேன்; ஆனால் ஆட்டி வைக்கவில்லை
கை பிடித்தேன்; ஆனால் கை பிடிக்கவில்லை
இடம் பிடித்தேன்; ஆனால் இடம் பிடிக்கவில்லை
கை கொடுத்தேன்; ஆனால் கை கொடுக்கவில்லை
பாடம் கற்பித்தேன்; ஆனால் பாடம் கற்கவில்லை
சாகவில்லை; ஆனால் செத்துவிட்டேன் நான்!


இக்கவிதை விடுகதையல்ல! அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பொருள் கொள்ளும் வகையில் எழுதப்பட்ட கவிதை இது. நான் கொண்ட பொருள் கீழ்வருமாறு:

சேர்த்து வைத்தேன்= செல்வம் நிறைய சேர்த்து வைத்தேன்.
சேர்த்து வைக்கவில்லை= நல்லறங்கள் செய்து அதனால் வருகின்ற புண்ணியத்தை ( நற்பேறு ) சேர்த்து வைக்கவில்லை.
செலவு செய்தேன்= என்னுடைய நலனுக்காக நான் நிறைய செலவு செய்தேன்.
செலவு செய்யவில்லை= மற்றவர் நலனுக்காக நான் செலவு செய்யவில்லை.
சுற்றி வந்தேன்= பொருளீட்டவேண்டி இந்த உலகையே சுற்றி வந்தேன்.
சுற்றி வரவில்லை= ஆலயங்களை நான் ஒருபோதும் சுற்றி வந்ததில்லை.
வெற்றி பெற்றேன்= பட்டம், பதவி ஆகியவை பெற்று நான் வெற்றி பெற்றேன்.
வெற்றி பெறவில்லை= ஆனால் நல்லவன் என்ற பட்டத்தைப் பெறுவதில் நான் வெற்றி பெறவில்லை.
அடக்கி வைத்தேன்= என்னிடம் வேலை செய்யும் பணியாட்களை அடக்கி வைத்தேன்.
அடக்கி வைக்கவில்லை= ஆனால் ஐம்புலன்களையும் தீய நெறியில் செல்லாதவாறு நான் அடக்கி வைக்கவில்லை.
ஆட்டி வைத்தேன்= மற்றவர்களை என் விருப்பப்படி ஆட்டிவைத்தேன்.
ஆட்டி வைக்கவில்லை= ஆனால் என் மனதை என்னால் ஆட்டிவைக்க முடியவில்லை.
கை பிடித்தேன்= ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன்.
கை பிடிக்கவில்லை= ஆனால் அவளைத் தீண்டாது கொடுமை செய்தேன்.
இடம் பிடித்தேன்= அவள் மனதில் நான் இடம் பிடித்தேன்.
இடம் பிடிக்கவில்லை= ஆனால் அவளால் என் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை.
கை கொடுத்தேன்= என் முன்னேற்றத்திற்காக பல பெரிய மனிதர்களோடு கை குலுக்கினேன்.
கை கொடுக்கவில்லை= ஆனால் உற்றார் , உறவினர்கள் துன்பத்தில் இருந்தபோது அவர்களுக்கு நான் கை கொடுக்கவில்லை.
பாடம் கற்பித்தேன்= என்னை எதிர்த்தவர்களை தண்டித்து அவர்களுக்குப் பாடம் கற்பித்தேன்.
பாடம் கற்கவில்லை= ஆனால் இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யவேண்டும் என்ற பாடத்தை நான் கற்கவில்லை.
சாகவில்லை= சாகாமல் இன்னமும் உயிரோடு இருக்கின்றேன்.
செத்துவிட்டேன் நான்= என் தீய குணங்களுக்காக என்னை எல்லோரும் வெறுக்கின்றனர்; நடைப் பிணமாக உலவிக்கொண்டு நான் இருக்கின்றேன்.

அனுராகவன்
27-11-2012, 04:52 AM
புதுசா இருக்கு...
படித்தேன்...பொருள் கொண்டேன்..

மஞ்சுபாஷிணி
27-11-2012, 07:26 AM
நான் இந்த கவிதையைப்படிக்கும்போதே கண்டிப்பாக இப்படி தான் பொருள் வைத்து எழுதி இருப்பீர்கள் என்று நினைத்தேன்.. அதே போல் அதன்கீழே நீங்கள் பொருள் எழுதியது படித்ததும் உணர்ந்தேன்.. மிக அருமையான தீர்க்கமான வரிகள் ஜகதீசன் ஐயா... நான், எனது, எனக்கு என்பது தான் துயரம் வரவைப்பவை....

நம் வார்த்தைகள் செயல்கள் எல்லாமே பிறருக்கு நலன் சேர்க்கும்போது தான் உன்னதமும் உயர்வும் அடைவது.. மிக மிக அற்புதமான வைர வரிகள் ஜகதீசன் ஐயா.. பகிர்வுக்கு அன்புநன்றிகள்.

கீதம்
27-11-2012, 10:51 AM
மிகவும் அருமையான கருத்தைக்கொண்ட கவிதை வரிகள். தாங்கள் குறிப்பிட்டப் பொருளுக்கு மாறாய் பொருள் கொள்ளும் நிலை வந்தால் மட்டுமே செத்தும் சாகாமலிருப்போம். சிந்திக்கவைத்த சீரிய கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா. சின்ன சின்ன விஷயங்களையும் அலசி அழகு கவிதையாய்க் கொடுத்துவிடும் தங்கள் திறமையைப் போற்றுகிறேன்.