PDA

View Full Version : வழிப் போக்கனின் வரிகள்ஜான்
26-11-2012, 12:28 AM
அவ்வப்பொழுது நம்மைப் பாதிக்கும் எண்ணங்கள் ,நிகழ்வுகள்,ஆகியவற்றை இங்கே பகிரலாமே

ஜான்
26-11-2012, 12:29 AM
எல்லா ஊரிலும் டவுன் ஹால் ரோடு மட்டும் இன்னும் தமிழ்ப் பெயருக்கு மாறவில்லை….தமிழ்ப் பெயர் அனேகமாக இதற்கு மட்டும் பொருந்த மாட்டேன் என்கிறது ! பழைமை பதிந்த,நினைவுகள் மிதக்கும் இந்தச் சாலையின் வடிவமும் அமைப்பும் எல்லா ஊரிலும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன!முன்பு எப்படி இருந்தனவோ,இப்போது டவுன்ஹால் ரோடுகளுக்கென்று அடையாளங்கள் உருவாகிவிட்டன....ரேமன்ட் கடை வாசலில் வட்டமாய் தொங்கி சுழலும் பத்துரூபாய் கைக்குட்டை மற்றும் டை விற்போர், பாட்டா ஷோ ரூம் வாசலில் செருப்புத் தைப்பவர்கள்,சோனி கடை வாசலில் ஐம்பது ரூபாய் கடிகாரம் ஐநூறு ரூபாய் டிவி விற்பவர்கள் என்று பொருளாதார இலக்கணங்களை மீறி கடைவிரித்திருப்பது எல்லா ஊரிலும் இந்த ரோட்டில்தான்..

அந்தப் பெரியவரைத் தவிர!

இரண்டு பெரிய கடைகளுக்கு நடுவில் மூன்றடிக்கு மட்டும் ஒரு மாடிப்படி செல்லுமே,அந்த இடத்தில்தான் உட்கார்ந்திருப்பார். ஐந்து வருடம் முன்பு அந்த மாடியில் அடிக்கடி வேலை இருக்கும் எனக்கு
...கோழி அடைக்கிற பழைய சிறிய பஞ்சாரக் கூடையை மல்லாத்திப் போட்டு முழுவதும் புல்லாங்குழல்களை நெட்டுவாக்கில் அடுக்கி வைத்திருப்பார்......அடிக்கடி எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று விரல்களால் தடவிப் பார்த்துக்கொள்வார் .... சாம்பல் பூத்து அடை த்த கண்களால் எதையோ பார்த்தவாறு ஆனால் எதையும் பார்க்க இயலாமல் அவர் எண்ணிக்கை சரிபார்த்துக் கொள்வது விநோதமாயிருக்கும்...

ஆனால் புல்லாங்குழலை யார் வாங்குவார்கள்?!அதை யார் திருடப் போகிறார்கள்!!!

அவர் விற்பனை எவ்வளவு ,ஒரு லட்சம் விற்றால் பத்துலட்ச ரூபாய் கிடைக்குமே...ஆளுக்கொன்று வாங்கினால் என்ன என்றெல்லாம் நான் கவலைப்படுவேன்...ஆனால் அவருக்கல்லவா அது போன்ற சிந்தனைகள் இருக்கவேண்டும்?

ஒருமுறை சிறுவனுடன் வந்த பெண் பிடிவாதம் தாங்காமல் வாங்கிக் கொடுத்தபொழுது கூட "ஐயா.குச்சி எவ்வளவு"என்றுதான் கேட்டாள் !! அந்த ஐயாவின் முகம் லேசாக சுருங்கத்தான் செய்தது!!!என்றும் அவர் கூடையில் எண்ணிக்கை குறைவதோ,புதுக் குச்சிகள் வருகையோ இல்லை ..ஆனாலும் அவர் அங்கேதான் இருக்கிறார் ....

ஒருநாள் மாலை படியேறி மாடி நுழைகையில் சட்டென்று எங்கிருந்தோ ஒரு இசை ...குழலிசைதான்....."கேட்டதும் கொடுப்பவனே ....கிருஷ்ணா ,கிருஷ்ணா..."என்று....அத்தனை இரைச்சலையும் வாகன ஒலிகளையும் மீறி … ஐயாதான்!

கீழே வந்து கவனிப்பதைத் தவிர்க்க முடியவில்லை...எழுபது வயதில் இத்தனை துல்லியமாக பிசிறின்றி மூச்சு வெளிப்படுமா என்ன !!ஆச்சரியம்தான்! சட்டென்று வெம்மை குறைத்துவிட்டது சூழல்..சிறிய கூட்டம் கூடத்தான் செய்தது...ஆனால் அவருக்குத்தான் அது தெரியாதே !அவர்பாட்டுக்கு இசைத்துக் கொண்டிருந்தார்........

எதிர்ப்புறமிருந்து நான்கைந்து ஐரோப்பியப்பெண்கள் வந்தார்கள் ...ஸ்காண்டிநேவிய முகங்கள்...
அவர்களில் அம்பதுரூபாய் நடைபாதைச் சட்டையும் சர்வோதய கருகமணியும் அணிந்த ஒரு இளம்பெண் ..சட்டென்று போய் அவர் அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்துகொண்டாள்!! கைவிரல்களால் அவள் கன்னத்தில் தாளமிட்டுக்கொண்டாள் ...

நல்ல மஞ்சள் வெயில் முடிந்து சோடியம் வெயில் ஆரம்பிக்கும் நேரம் ...லேசான காற்று...வாகனங்களும் அதிகம் இல்லை....
அடடா பாட்டு முடியப் போகிறதே!!

திடீரென்று அப்பெண் பெரியவரின் தோள்பட்டையில் தாளமிட ஆரம்பித்துவிட்டாள் !
ஒருகணம் ,ஒருகணம் இசை நின்றது...பின் தொடர்ந்தது...இப்போது கொஞ்சம் புன்னகை கலந்திருந்தது அதில்!!பாட்டும் மாறிவிட்டது!!!

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது......ஓசையும் தாள*முமாய் அமர்க்களமாய்ப் போய்க் கொண்டிருக்கிற**து க*ச்சேரி!!!

அவர்கள் லயிப்பு அவர்களுக்கு...!!!நமக்கு வேலை இருக்கிறதே ...

அப்புறம் என்ன நடந்திருக்கும்?தெரியவில்லை...பத்து ரூபாயை அவர் கூடையில் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் அவள்...டீ வாங்கிக் கொடுத்திருக்கலாம் அவர் அவளுக்கு...தெரியவில்லை....

ஆனால் அந்த நேரத்தில் அந்தக் கணத்தில் அந்தச் சூழலில் அவர்களிருவரும் அழகிய காதல் ஜோடியாகத் தெரிந்தார்கள்!!!!ஒருவன் இசைக்கிறான் ஒருவன் இசைகிறான் ....அவ்வளவே!!

காதல்,காதல் என்கிறார்களே அது இதுதானோ? தெரியவில்லை

நீண்ட நாட்களுக்குப் பின் அந்த மாடிப்படியில் ஏறிச்செல்ல நேரிட்டது!!அவர் இல்லை!!கூடையும் இல்லை குச்சிகளும் இல்லை!!!

ஆனால் படியேறுகையில் கேட்டதும் கொடுப்பவனே என்று குழலோசை கேட்பதுபோல் இருக்கிறது!!!

எல்லாம் பிரம்மைதான் !

jayanth
26-11-2012, 01:48 AM
விடியலிலே வருடிய குழல் இசை... இது உண்மைச் சம்பவமோ...???

ஜான்
26-11-2012, 09:56 AM
மிக்க நன்றி ஜயந்த்
கொஞ்சம் நிறைய*

கீதம்
29-11-2012, 10:10 PM
மனதைப் பாதித்த ஒரு சம்பவத்தை வாசிப்பவரின் மனத்தையும் பாதிக்கும் வகையில் அழகாக எழுத்தில் கொண்டுவந்துள்ளீர்கள். காட்சியை அப்படியே கண்முன் கொணர்கிறது இடங்கள், பொருட்கள் பற்றிய விவரிப்பு. மஞ்சள் வெயில் முடிந்து சோடியம் வெயில் ஆரம்பிக்கும் நேரத்தை ரசித்தேன். அந்த ஐரோப்பியப் பெண்ணின் செயல் மனம் தொடுகிறது. தன் கன்னத்தில் தாளம் போடுவது, தான் ரசிப்பதன் அடையாளம். அவருடைய தோளில் தாளமிடுவது தான் ரசிப்பதை அவருக்கு உணர்த்துவதன் அடையாளம். என்ன அழகு! என்ன தீர்க்கம்! அவர் கண்பார்வை அற்றவர் என்பதை அவள் சற்று நேரத்தில் உணர்ந்திருக்கவேண்டும். அதனால்தான் தான் ரசிப்பதை அவருக்கு உணர்த்தியிருக்கிறாள். ஒரு ரசிகை கிடைத்தாலும் போதுமே கலைஞனுக்கு, தனக்குத் தெரிந்த கலையின் முழு பரிமாணத்தையும் காட்டிவிட! குச்சி என்று கேட்டவளையும் குறை சொல்ல இயலாது. இசைஞானம் இல்லாவிடினும் அவளது தாய்ப்பாசம், பெரியவருக்கு சிறு வருமானத்தைத் தந்ததே...

எத்தனை வருடங்கள் ஆனாலும் இது போன்ற பெயர்களோடோ, இடங்களோடோ, திரைப்படங்களோடோ, பாடல்களோடோ தொடர்புடைய சில சம்பவங்கள் நம் மனத்தை விட்டு அகலாது. வழிப்போக்கனின் மனந்தொட்ட வரிகளுக்குப் பாராட்டுகள்.

அமரன்
30-11-2012, 09:50 PM
சொன்ன சம்பவம் நெகிழ்வைத் தருகிறது என்றால் அதை நீங்கள் சொன்ன விதம் தேர்ந்த ஒளிப்பதிவாளனின் நுட்பத்துடன் உள்ளது. இதை இப்படித்தான் சொல்ல வேண்டும்.. பாராட்டுகள் ஜான்.

என் அனுபவத்தில் ஐரோப்பியர்கள் ஒரு போதும் பிச்சைக்கு பச்சைக் கொடி காட்டுவதில்லை. ரயில்களில் பாட்டுப் பாடி யாசிப்போரின் இசைக்கு இசைவாரே அன்றி இச்சைக்கு அசையவே மாட்டார். நிச்சயம் அந்தப் பெண்கள் ஒரு குழலேனும் வாங்கி இருப்பார்கள்.

அந்தக் காட்சிப் பதிவு உங்கள் உள்ளத்தில் நரம்புகளாகப் படிந்து விட்டனபோலும். மருமுறை கடந்து செல்கையில் மீட்டப்பட்டிருகின்றன லாவகமான விரல்களினால்.

ஜான்
02-12-2012, 03:49 PM

ஆழ்ந்து வாசித்து அருமையான பின்னூட்டமிட்டமைக்கு நன்றி கீதம்

ஜான்
02-12-2012, 03:51 PM
சொன்ன சம்பவம் நெகிழ்வைத் தருகிறது என்றால் அதை நீங்கள் சொன்ன விதம் தேர்ந்த ஒளிப்பதிவாளனின் நுட்பத்துடன் உள்ளது. இதை இப்படித்தான் சொல்ல வேண்டும்.. பாராட்டுகள் ஜான்.

என் அனுபவத்தில் ஐரோப்பியர்கள் ஒரு போதும் பிச்சைக்கு பச்சைக் கொடி காட்டுவதில்லை. ரயில்களில் பாட்டுப் பாடி யாசிப்போரின் இசைக்கு இசைவாரே அன்றி இச்சைக்கு அசையவே மாட்டார். நிச்சயம் அந்தப் பெண்கள் ஒரு குழலேனும் வாங்கி இருப்பார்கள்.

அந்தக் காட்சிப் பதிவு உங்கள் உள்ளத்தில் நரம்புகளாகப் படிந்து விட்டனபோலும். மருமுறை கடந்து செல்கையில் மீட்டப்பட்டிருகின்றன லாவகமான விரல்களினால்.

நன்றி அமரன் ...உங்கள் வரிகள் தொடர்ந்து எழுதத் தூண்டும்

HEMA BALAJI
02-01-2013, 07:56 AM
கொஞ்சம் நிறைய, ஏறக் குறைய இருந்தாலும், நிகழ்வை சுவை பட தந்துள்ளீர்கள் ஜான் சகோ. படிக்க படிக்க படிக்கட்டுகளும் கூடையில் குச்சிகளும் வாசிப்பில் ராகத்தின் ரீங்காரமும் விஷுவலாகத் தெரிந்தன... சூப்பர்.

ஜான்
05-01-2013, 01:19 AM
வாசித்ததற்கு நன்றி சகோ !

ஜான்
01-03-2013, 10:24 AM
நன்றி ஷக்தி