PDA

View Full Version : காத்திருத்தல் தேசம்...



rambal
08-04-2003, 04:01 PM
எதுவாயிருந்தாலும்
நீண்ட வரிசையில்
நீண்ட நேரம்...
இப்படித்தான்
கழிந்தது என் ஆயூளில்
பத்து வருடம்..

பேருந்திற்காக,
மற்றும்
பேருந்தில் அவள்
வருவாள்
என்பதற்காகவும்
கழிந்தது என் ஆயூளில்
மற்றுமொரு பத்து வருடம்..

என் முகத்தில்
கரி பூசப்படும்
என்றே தெரிந்து
ஐந்து வருடங்களுக்கொருமுறை
என
கழிந்தது
சில வருடம்...

மரணமடைந்த பின்னும்
வெட்டியானுக்காக
காத்திருந்து
எரிந்ததில்
கழிந்தது
இரண்டு நாள்...

இது புத்தன் தேசமோ
காந்தி தேசமோ
அல்ல..
காத்திருத்தல் தேசம்...

poo
08-04-2003, 06:07 PM
நீண்ட நேரம்..
நீண்ட வரிசை..
நிறைய மக்கள்..
நிறைய பொறுமை..
சகோதரதத்தை..
சகிப்புத் தன்மையை முறையாய்
சொல்லித் தந்தது என் தேசமெனக்கு -
சில வியர்வை நாற்றத்திற்கும்
விடியாதாவென்ற முனகலுக்குமிடையே!!!...

-பாராட்டுகள் ராம்!!

இளசு
08-04-2003, 08:10 PM
ராம், சிட்டு..
இரு கவிகளின் எழுச்சி மிக்க வரிகள்...
நிஜம்... நிஜம்,...
பாராட்டுகள்..

rambal
09-04-2003, 04:21 PM
வாழ்த்திய அண்ணன் மற்றும் பூவிற்கு நன்றி

குமரன்
10-04-2003, 02:12 AM
நிஜம் சுடும்.
சுடும் கவிதையிது
தந்த ராமிற்கு நன்றி.

காத்திருத்தல் தேசமானாலும்
காந்தி தேசம்தான்
புத்தன் தேசம்தான்....

காத்திருத்தல் *ல்லாத
மக்கள் வாழும் தேசம்தான்
கிளம்பியுள்ளது
மத்திய தேசம் அழிக்க...

-குமரன்

Narathar
10-04-2003, 06:32 AM
நல்ல கவிதை பாரட்டுக்கள்!!!!


இது புத்தன் தேசமோ
காந்தி தேசமோ
அல்ல..
காத்திருத்தல் தேசம்...


புத்தரும் காத்திருந்தார்.......
தவமே கிடந்தார் போதிமரத்தடியில்!!!
காந்தியும் காத்திருந்தார்
அகிம்சை முறையில் சுதந்திரம் வரை!!
அந்த வழியில் நாங்களும் காத்திருப்போம்................

poo
10-04-2003, 01:32 PM
நச்..னு சொல்லிட்டார் நாரதர்.. (அப்பாட குசும்பில்லா ஒரு கமெண்ட்!!)

karikaalan
10-04-2003, 02:36 PM
ஒரு பொருள், குறிக்கோள் அடைய நாம் காத்திருக்கும் நேரம்தான், அதன் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது.

மற்றும், காதலிக்காகக் காத்திருத்தல் சுகமே!

===கரிகாலன்

madhuraikumaran
10-04-2003, 04:26 PM
காத்திருத்தல் சுகம்.
அது காதலில் !

தேசத்தின் உயர்வுக்கு
இன்னொரு காந்தி வரும்வரை
காத்திருத்தல் என்ன நியாயம்?

முன்னேற்றப் பாதையில்
பொறுமைக்கு இடமில்லை.

காத்திருத்தல் தவிர்ப்போம்.
கணிணி மயமாக்குவோம் !
உலகுக்கே கணிணி மொழி
ஊட்டும் உனக்கொன்றும்
இது முடியாத செயலல்ல !!!

Nanban
11-04-2003, 05:17 AM
காத்திருத்தல் சுகம் தான் -
முடிவில் நினைத்தது
கை கூடும் என்னும் பொழுதிலே.

புத்தர் காத்திருந்தார்
ஞானம் பெற்றார்
காந்தி காத்திருந்தார்
வேண்டிய விடுதலை
வாங்கித் தந்தார்.

நீங்களும் நானும்
காத்திருந்து எதை
வாங்கப் போகிறோம் ?

நிச்சயமற்ற காத்திருத்தல்
நரகத்தின் முன்மாதிரி வரைவு -
பணமற்ற மனிதர்களுக்கு!

காசிருந்தால்
காத்திருப்புகள்
தேவையில்லை -
காதலிலும்,
இறைவன் தரிசிப்பிலும்,
வேலை தேடலிலும்.

poo
11-04-2003, 12:32 PM
நண்பனே வழக்கம்போல...

அருமை பாராட்டுக்கள்!!!