PDA

View Full Version : மிருக மனுஷன் - கவிதை



PUTHUVAI PRABA
24-11-2012, 05:16 AM
மனிதர்கள்
பலவற்றை
பயன்படுத்துகிறார்கள்
மிருகங்கள்
ஒன்றை மட்டும்தான்.

பொதி சுமந்து நகர்கிற
கூட்டத்தில் ஒரு கழுதை
இன்னொன்றை திட்டியது
“அட சோம்பேறி மனுஷா!”

தெரு முனையில்
ஒரு நாய்க்கு
இன்னொன்று
ஆறுதல் கூறியது
"சரி விடு. . .
அது கெடக்குது
நன்றி கெட்ட மனுஷன்"

குறுக்கே நிற்கும்
சக விலங்கிடம்
எரிச்சல் கொண்டு
கூச்சலிட்டது
எருமையொன்று
"நகர்ந்து நில்லேன். .!
அப்படியே நிக்கிற
மனுஷன் மேல மழை பேஞ்ச மாதிரி"

மேடொன்றில் மேய்ந்து முடித்து
கீழிறங்கும்போது
கால் இடறி
மேல் வந்து மோதி விழுந்த
இளம் பன்றியை
கிழப்பன்றி கடிந்து கொண்டது
"பார்த்து வர்றதில்ல. . . . .
மனுஷன் மாதிரி வந்து விழுற. . . . .!"

ஆக. . .
மனிதர்கள்
பலவற்றை
பயன்படுத்துகிறார்கள்.
மிருகங்கள்
ஒன்றை மட்டும்தான்.

-புதுவைப்பிரபா-

M.Jagadeesan
24-11-2012, 05:44 AM
மனிதனே தான் ஒரு மிருகம் என்பதை ஒத்துக்கொள்கிறான். " எனக்குக் கோபம் வந்தா நான் மனுஷனா இருக்கமாட்டேன்! " என்று அவன் அடிக்கடி சொல்வதே சான்று.
வித்தியாசமான சிந்தனைகளால் மன்றத்தைக் கலக்கி வரும் புதுவை பிரபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

மஞ்சுபாஷிணி
24-11-2012, 05:46 AM
ஆஹா நச் நச்.....

ரசித்தேன்.....

மிருகங்களிடம் இருக்கும் நல்லவைகளை மனிதன் கற்கவேண்டும் பக்*ஷிகளிடம் இருக்கும் நல்லவைகளை மனிதன் கற்கவேண்டும் என்ற நிலை கொஞ்சம் மாறி வித்தியாசமாய் யோசித்ததன் பயன் அற்புதமான கவிதை இங்கு....

உண்மையே....

மனிதனுக்கு பெயர் உண்டு.... அதை வைத்து கூப்பிடாமல் கோபம் வந்தால் எருமை, பன்னி, மாடு, நாயே என்று திட்டுவதும், செல்லமாக கொஞ்ச கன்னுக்குட்டி என்று சொல்வதும், அட கிளி மாதிரி பேசுதே பெண் என்று உவமையா சொல்வதும்..... அதே மிருகங்களுக்கு இந்த அவஸ்தை இல்லை... மொத்தமாக நம்மை திட்ட அருமையா சோம்பேறி மனுஷா, நன்றி கெட்ட மனுஷா, மனுஷன் மேலே மழை பெய்தது போல, மனுஷன போல வந்து இடிக்கிறே... ஹே உனக்கு பாம்பு காதுப்பா...

மிருகங்களுக்கும் யோசிக்கும் திறன் இருக்கிறது நம்மைப்போல என்று நினைக்க வைக்கிறதுப்பா...

அட இந்த கவிதை படிச்சதும் கண்டிப்பா எனக்கு இந்த சந்தேகம் வந்தே விட்டது ப்ரபா :) நிஜமாவே ஒரு வேளை மிருகங்கள் நம் பெயரை நாம அதன் பெயரை உபயோகிப்பது போல உபயோகிக்குமோ என்று.. ஐயோ பயமா இருக்கேப்பா...

வித்தியாசமான சிந்தனை எப்போதும்....

அதனால் வித்தியாச வரிகள் கவிதைகளாய் இங்கும்.....

ரசிக்கவும் வாசிக்கவும் அற்புதமான கவிதை பிரபா....

அன்பு வாழ்த்துகள் பகிர்வுக்கு....

கீதம்
24-11-2012, 06:55 AM
விலங்குகள் விலங்குகளாகவே வாழ்கின்றன. மனிதர்கள் மட்டுமே சந்தர்ப்பத்திற்கேற்ப மனிதர்களாகவும் விலங்குகளாகவும் தங்கள் குணங்களை மாற்றிக்கொள்கிறனர்.

விலங்குகள் பேசிக்கொள்வதைக் கேட்க சிரிப்பு வந்தது. சிந்தனையும் வந்தது. மிகவும் அருமையானக் கவிதைக்குப் பாராட்டுகள் புதுவை பிரபா.

கிட்டத்தட்ட இதையொத்தக் கருத்தினைக் கொண்டு நான் எழுதிய மிருகத்தைப் போன்று (http://www.tamilmantram.com/vb/showthread.php/23164-மிருகத்தைப்-போன்று?highlight=)கவிதை நினைவுக்கு வந்தது. :)

A Thainis
24-11-2012, 07:09 PM
சிந்திக்க வைத்த கவிதை, சிதனையை அள்ளி தெளித்த கவிதை
விலங்குகள் பார்வையில் மனிதனின் இழிநிலை அருமை, இந்நிலை கலைய மனிதன் முன்வரவேண்டும்.

PUTHUVAI PRABA
24-11-2012, 11:57 PM
பாராட்டிய, வாழ்த்திய நல் உள்ளம் கொண்ட உறவுகளுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

jayanth
26-11-2012, 02:21 AM
ஓர் அறிவு அதிகம் இருப்பதால் நாம் நம்மை விலங்குகளைவிட மேம்பட்டவர்
என எண்ணியிருக்கின்றோம்(தவறாக..!!!)...