PDA

View Full Version : எது கவிதை?



M.Jagadeesan
21-11-2012, 10:22 AM
கவிதையெனும் பந்தலுக்கு நான்கு தூணுண்டு
செவிக்கினிய சொற்கள் முதலாம் தூணாகும்
சந்தமெனும் ஓசையினால் மெல்லவே உள்ளத்தை
உந்துகின்ற உணர்ச்சி இரண்டாம் தூணாகும்
பருப்பின்றி சாம்பார் சுவைக்காது என்பதுபோல்
பொருட்சுவையே கவிதைக்கு மூன்றாம் தூணாகும்
தோப்புக்கு வேலியே காப்பு என்பதுபோல்
யாப்பென்னும் கட்டுறுதி நான்காம் தூணாகும்
இந்நான்கு தூண்களிலே ஒன்று பழுதெனினும்
சிங்காரக் கவிப்பந்தல் நில்லாது சரிந்திடுமே!

மஞ்சுபாஷிணி
21-11-2012, 10:51 AM
மரபுக்கவிதைக்கு வலுவூட்டும் அழகிய சொற்கள் கவிதை வரிகளாக படைத்தது சிறப்பு ஜகதீசன் ஐயா....

இலக்கணமும் இலக்கியமும் வெண்பாவும் அசத்தும் கவிதைகளுக்கு எது முக்கியம் என்று சொன்ன வரிகள் உன்னதம்...

அன்புநன்றிகள் ஐயா பகிர்வுக்கு.

M.Jagadeesan
21-11-2012, 10:58 AM
மஞ்சுபாஷிணியின் பாராட்டுக்கு நன்றி!

தாமரை
21-11-2012, 12:00 PM
இந்தக் கேள்வி மன்றத்தில் முன்பொருமுறை யவனிகா வால்கேட்கப்பட்டது

http://www.tamilmantram.com/vb/showthread.php/24729-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

கவிதைப் போட்டி 10 இதைப் பற்றியே!!

http://www.tamilmantram.com/vb/showthread.php/12206-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-10-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

கவிதை ஒரு சொற்பந்தல் என்று சொல்லி இருக்கிறீர்கள்.

அதன் நான்கு கால்களையும் சொல்லி இருக்கிறீர்கள்...
சொல்நயம், ஒலிநயம், பொருள்நயம்... கூடவே கட்டு விதிகள்...

இந்தக் கால்கள் இல்லாதப் பந்தல்கள்... வாய்ப்பந்தல் இல்லையா?

கலையரசி
21-11-2012, 01:11 PM
கவிதைக்கு உணர்ச்சி முக்கியம் என்பார்கள். (Spontanous overflow of powerful feelings) கவிஞனின் உள்ளத்து உணர்ச்சியை, வாசிப்பவர், தாம் அனுபவித்தது போல் உணர வேண்டும்.

இந்த உணர்ச்சி, பொருட் சுவையில் அடங்குகிறதா?

A Thainis
21-11-2012, 07:45 PM
மரபு கவிதைக்கு இனிய இலக்கணம் பேசிடும் தேன்சுவை ததும்பிடும் ஓர் இன்பக் கவிதை.

தாமரை
21-11-2012, 11:28 PM
உணர்ச்சியானது சொல், பொருள் அணி ஆகிய மூன்றிலும் இயைந்தே வரும் கலையக்கா... சில சமயம் மூன்றையும் தாண்டி கட்டிலும் வரும்.

மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் பழைய பாடல்கள் சில பாடல்கள் சோக கீதமாகவும் சந்தோஷ கீதமாகவும் ஒலிப்பதைக் கேட்டிருப்பீர்கள்.

கம்ப இராமாயணம் ஆழ்ந்து வாசித்தால் இந்த வேறுபாடுகளை அறியலாம் என என் ஆசிரியர் நான் ஒன்பதாம் வகுப்பில் படித்தபோது சொல்லி இருக்கிறார். எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்.. அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்... கண்டேன் சீதையை ... மற்றும் சில யுத்தப்பாடல்களின் தாள ஓசை இப்படி அவர் சொன்ன பல விஷயங்கள் அப்பப்போ இன்னும் காதில் ஒலிக்கும்

M.Jagadeesan
22-11-2012, 12:32 AM
கவிதைக்கு உணர்ச்சி முக்கியம் என்பார்கள். (Spontanous overflow of powerful feelings) கவிஞனின் உள்ளத்து உணர்ச்சியை, வாசிப்பவர், தாம் அனுபவித்தது போல் உணர வேண்டும்.

இந்த உணர்ச்சி, பொருட் சுவையில் அடங்குகிறதா?

உணர்ச்சி என்பது பொருட்சுவையில் அடங்காது. திறமையான கவிஞர்களால் மட்டுமே தாம் கொண்ட உணர்ச்சியைக் கவிதைகள் மூலமாக படிப்போர்தம் உள்ளத்தில் ஏற்றமுடியும்.

" அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப திலையே!"

என்ற பாரதியின் வரிகளைப் படிக்கும்போது , பாரதி கொண்ட உணர்வை நாமும் பெறுகிறோம்.

கம்ப இராமாயணத்தில் ஒரு காட்சி. வனவாசத்தில் இருக்கும் இராமனைக் காண்பதற்காக பரதன் வருகிறான். அப்போது இராமன் , குகனுடைய காவலில் இருக்கின்றான். பரதனின் நோக்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட குகன், பரதன் மீது கடுஞ்சினம் கொள்கிறான். அப்போது குகன் கொண்ட சினத்தை நாமும் பெறுகின்ற வகையில் கீழ்க்கண்ட பாடல்கள் உள்ளன.

ஆழ நெடுங்கடல் ஆறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு வணங்கிடும் வில்லாளோ
தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ
ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ.

அஞ்சன வண்ணஎன் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனை யாலர செய்திய மன்னரும் வந்தாரே
வெஞ்சர மென்பன தீயுமிழ் கின்றன செல்லாவோ
உஞ்சிவர் போய்விடின் நாய்க்குகன் என்றெனை ஓதாரோ?

தாம் கொண்ட உணர்ச்சியைப் படிப்பவர்களும் பெறவைப்பது கவிஞனின் வெற்றியாகும். இது சாமான்யக் கவிகளால் ஆகாது.

பொருட்சுவை என்பது வேறு. இது ஊட்டத் தேவையில்லை. மாம்பழத்தை எப்படி சாப்பிட்டாலும் இனிக்கத்தானே செய்யும்?

" பொய்மையும் வாய்மையிடத்த ", " பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ", " அறிதோறும் அறியாமை கண்டற்றால் " போன்ற கருத்தாழம் மிக்க சொற்கள் கவிதையின் வெற்றிக்குக் காரணமாக அமைகின்றன.

குணமதி
22-11-2012, 03:03 AM
"உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்துரைப்பது கவிதை." - என்பார் கவிமணி.

துயரமான பாடல்களிலும் சுவையின்பம் இருக்க வேண்டும். ஆதுவே பாடல் - கவிதை.

இலக்கணம் கூறிய ஜகதீசன் ஐயாவுக்கு நன்றி.

M.Jagadeesan
22-11-2012, 10:38 AM
குணமதி அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

கலையரசி
22-11-2012, 04:06 PM
உணர்ச்சியானது சொல், பொருள் அணி ஆகிய மூன்றிலும் இயைந்தே வரும் கலையக்கா... சில சமயம் மூன்றையும் தாண்டி கட்டிலும் வரும்.

மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் பழைய பாடல்கள் சில பாடல்கள் சோக கீதமாகவும் சந்தோஷ கீதமாகவும் ஒலிப்பதைக் கேட்டிருப்பீர்கள்.

கம்ப இராமாயணம் ஆழ்ந்து வாசித்தால் இந்த வேறுபாடுகளை அறியலாம் என என் ஆசிரியர் நான் ஒன்பதாம் வகுப்பில் படித்தபோது சொல்லி இருக்கிறார். எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்.. அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்... கண்டேன் சீதையை ... மற்றும் சில யுத்தப்பாடல்களின் தாள ஓசை இப்படி அவர் சொன்ன பல விஷயங்கள் அப்பப்போ இன்னும் காதில் ஒலிக்கும்


உண்மை தான். உங்கள் பதிலிலிருந்து விளக்கம் அறிந்து கொண்டேன்.
பழைய பாடல்களில் சிலவற்றைக் கேட்டவுடன் சோகம் அப்படியே நெஞ்சைக் கவ்விக் கொள்ளும்.

கம்பராமாயணம் படிக்க வேண்டும் என்று ஆசை தான். நேரந்தான் கிடைக்கவில்லை. மன்றத்தில் கம்பராமாயணத் திரி ஏற்கெனவே இருந்தால் சொல்லுங்கள். சமயம் வாய்க்கும் போது அவசியம் படிப்பேன்.

கலையரசி
22-11-2012, 04:11 PM
என் கேள்விக்கு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கமான பதிலளித்தமைக்கு மிக்க நன்றி ஜெகதீசன் ஐயா!