PDA

View Full Version : சிறு கவிதைகள்



கோபாலன்
19-11-2012, 06:29 PM
அச்சிலேறா கவிதை
யாராலும் எழுதமுடியாத கவிதைவேண்டி
நெடுநேரம் யோசிக்கின்றேன் - பெண்ணே
உன்னை என்னாலும் எழுதமுடியவில்லை

பயணம்
எப்போதாவது என்னருகே அமர்வாயென
எப்போதும் ஓரிடம் விட்டே பயணிக்கிறது
உள்ள ஊர்தி

சாலை நெரிசல்
பச்சைவிளக்கு விழுந்தபின்னும்
உந்தன் செந்தூர ஆடைகண்டு
சிவப்புவிளக்கென கருதி
எந்தன் கருவிழி கடக்கமறுத்து விபத்துக்குள்ளாகிறது

குணமதி
20-11-2012, 01:30 AM
//யாராலும் எழுதமுடியாத கவிதைவேண்டி
நெடுநேரம் யோசிக்கின்றேன் - பெண்ணே
உன்னை என்னாலும் எழுதமுடியவில்லை//

உண்மை! அனபை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் அந்தச்சிக்கல்!


//எப்போதாவது என்னருகே அமர்வாயென
எப்போதும் ஓரிடம் விட்டே பயணிக்கிறது
உள்ள ஊர்தி//
ஏக்க வெளிப்பாடு - இனிய அன்புள்ளத்தின் காத்திருப்பு - நன்று!

பலமுறை படித்தவைதாம்!
என்றாலும் அலுப்புச் சலிப்பில்லை!
ஒருவகையில் இனிமை அளிப்பதே!

கீதம்
20-11-2012, 02:25 AM
எழுதவியலாக் கவிதைக்காய் எழுதியிருக்கும் வரிகள் அழகு.

அவளுக்கென்றே முன்பதிவு செய்யப்பட்ட ஒற்றை இருக்கையின் காத்திருப்போடு ஊரும் உள்ள ஊர்தி ரசிக்கவைக்கிறது.

அவளைக் கடக்கவிரும்பாது சிக்னலில் சிக்கிக்கொண்டதற்கு, அவளுடைய செந்தூர ஆடை மேல் பழியா? ;)

மூன்றுமே ரசிக்கவைத்தக் கவிதைகள். வெகுநன்று. பாராட்டுகள்.

மஞ்சுபாஷிணி
20-11-2012, 04:48 AM
அச்சிலேறா கவிதை
யாராலும் எழுதமுடியாத கவிதைவேண்டி
நெடுநேரம் யோசிக்கின்றேன் - பெண்ணே
உன்னை என்னாலும் எழுதமுடியவில்லை

பயணம்
எப்போதாவது என்னருகே அமர்வாயென
எப்போதும் ஓரிடம் விட்டே பயணிக்கிறது
உள்ள ஊர்தி

சாலை நெரிசல்
பச்சைவிளக்கு விழுந்தபின்னும்
உந்தன் செந்தூர ஆடைகண்டு
சிவப்புவிளக்கென கருதி
எந்தன் கருவிழி கடக்கமறுத்து விபத்துக்குள்ளாகிறது

மனதில் வரைந்த ஓவியத்தை எழுத்தில் வடித்துவிடலாம்.. ஆனால் மனதில் எழும் அன்பை எப்படி எழுத்தில் வரவைப்பது என்று திக்குமுக்காடி எழுதிட்டீங்களே கவிதை வரிகளை... அருமை....

வாழ்க்கை பயணத்தில் இணையவைக்க இப்போதிலிருந்தே முயற்சி அருமை....

அழகிய ரசனைக்கவிதை வரிகள் கருவிழி விபத்துக்குள்ளானது செந்தூர ஆடைக்கண்டு... அட்டகாசம்...

அன்பு வாழ்த்துகள் அழகிய கவிதை வரிகளுக்கு....

கோபாலன்
16-12-2012, 01:23 PM
பாராட்டிய குணமதி, கீதம் மற்றும் மஞ்சுபாஷிணி ஆகியோருக்கு நன்றிகள் பல .

கோபாலன்
16-12-2012, 01:27 PM
நினைவே நீ
நெருஞ்சி முள்ளோ

நெருங்கி தைக்கிறாய்
நெல்லளவுதான் இருக்கிறாய்

தடத்தை பதித்து
தடங்கலை விதைக்கிறாய்

தவிப்புகள் அளித்து
தணலாய் எரிக்கிறாய்

நீங்காத வடுக்களாய் மாறி
நெடுநேரம் வலிகொடுக்கும்

நினைவே நீ
நெருஞ்சி முள்ளோ?

ஜான்
16-12-2012, 03:18 PM
அச்சிலேறா கவிதை

பயணம்
எப்போதாவது என்னருகே அமர்வாயென
எப்போதும் ஓரிடம் விட்டே பயணிக்கிறது
உள்ள ஊர்தி




இது சொல்லும் கருத்துகள் அநேகம்