PDA

View Full Version : வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் பண்பலை நிகழ்ச்சி விமர்சனம்



Mano.G.
19-11-2012, 01:02 AM
வ.உ.சிதம்பரனார் நினைநாள் பண்பலை நிகழ்ச்சி , நேற்றைய தினம் நவம்பர் 18, தங்கை கீதத்தின் தொகுப்பில் பண்பலையில் ஒலிபரப்பாரன இந்நிகழ்ச்சி, மறுபடியும் நம்முள் சுதந்திர வேட்கையை கிளரியுள்ளது. வ.உ.சிதம்பனார் வாழ்க்கை வரலாறு , ஆங்கிலேயர்களால் அவரடைந்த துன்பங்கள் (தண்டனைகள்) , வ.உ.சியின் சொந்த கப்பல் வாங்கும் முயற்சி , வெற்றி . சுதந்திர உணர்ச்சியூட்டும் பாடல்கள்- இவையனைத்தையும் திறம்பட தொகுத்து வழக்கிய தங்கைக்கு வாழ்த்துக்கள்.மனோ.ஜி

கீதம்
19-11-2012, 02:01 AM
நிகழ்ச்சி பற்றிய தங்களுடைய கருத்துக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி அண்ணா.

ஆதி
20-11-2012, 08:19 PM
இந்த நிகழ்ச்சி, நிச்சயம் ஆவணம் படுத்தப்பட வேன்டிய முக்கியமான நிகழ்ச்சி

கீதம்
21-11-2012, 12:00 AM
ஊக்கத்துக்கு நன்றி ஆதி. நிகழ்ச்சி நன்றாக அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

கலையரசி
21-11-2012, 01:16 PM
நவம்பர் 18 சென்னைக்குச் சென்று விட்டதால் நிகழ்ச்சியைக் கேட்க முடியவில்லை கீதா! மனோ.ஜி. அவர்கள் சொல்வதிலிருந்து சிறப்பாக அமைந்திருந்தது எனத் தெரிய வருகிறது. செல்வா மனோ.ஜி அவர்களின் பேட்டியை எழுதியது போல் எழுத்து வடிவமாகக் கொடுத்தால் கேட்காதவர்களுக்குப் பயன்படும்.

ஆதி
21-11-2012, 01:21 PM
நவம்பர் 18 சென்னைக்குச் சென்று விட்டதால் நிகழ்ச்சியைக் கேட்க முடியவில்லை கீதா! மனோ.ஜி. அவர்கள் சொல்வதிலிருந்து சிறப்பாக அமைந்திருந்தது எனத் தெரிய வருகிறது. செல்வா மனோ.ஜி அவர்களின் பேட்டியை எழுதியது போல் எழுத்து வடிவமாகக் கொடுத்தால் கேட்காதவர்களுக்குப் பயன்படும்.

அக்கா, விரைவில் அந்த நிகழ்ச்சி மறு ஒலிபரப்பு செய்யபடும்

கீதம்
21-11-2012, 08:04 PM
நவம்பர் 18 சென்னைக்குச் சென்று விட்டதால் நிகழ்ச்சியைக் கேட்க முடியவில்லை கீதா! மனோ.ஜி. அவர்கள் சொல்வதிலிருந்து சிறப்பாக அமைந்திருந்தது எனத் தெரிய வருகிறது. செல்வா மனோ.ஜி அவர்களின் பேட்டியை எழுதியது போல் எழுத்து வடிவமாகக் கொடுத்தால் கேட்காதவர்களுக்குப் பயன்படும்.

வ.உ.சி. அவர்கள் பற்றியப் பெரும்பான்மையானத் தகவல்களை விக்கிப்பீடியாவிலிருந்துதான் எடுத்தேன். நிகழ்ச்சிக்கு உயிரூட்டியவை கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் வரும் பாரதியின் பாடல்களே.. அவற்றை எழுத்தில் வடிப்பதைவிடவும் காதால் கேட்கும்போது நிகழ்ச்சி ரசிக்கத்தக்கதாக உள்ளது. ஆதி சொல்வது போல் மறுஒலிபரப்பாகும்போது முடிந்தால் கேட்டு ரசிங்க அக்கா.

கலையரசி
22-11-2012, 04:01 PM
வ.உ.சி. அவர்கள் பற்றியப் பெரும்பான்மையானத் தகவல்களை விக்கிப்பீடியாவிலிருந்துதான் எடுத்தேன். நிகழ்ச்சிக்கு உயிரூட்டியவை கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் வரும் பாரதியின் பாடல்களே.. அவற்றை எழுத்தில் வடிப்பதைவிடவும் காதால் கேட்கும்போது நிகழ்ச்சி ரசிக்கத்தக்கதாக உள்ளது. ஆதி சொல்வது போல் மறுஒலிபரப்பாகும்போது முடிந்தால் கேட்டு ரசிங்க அக்கா.

பாதியிலிருந்து இன்று கேட்டேன் கீதா! மனோ அவர்கள் சொல்லியிருப்பது போல் தொகுப்பு மிகவும் நன்றாகயிருந்தது. ஆதி சொல்வது போல் இதை ஆவணப்படுத்த வேண்டும். மறு ஒலிபரப்பு செய்தமைக்கு மிக்க நன்றி.

கீதம்
23-11-2012, 11:32 PM
வ.உ.சி அவர்களின் எழுபத்தாறாவது நினைவுதினமான 18 நவம்பர் 2012 அன்று திரையோசையில் ஒலிபரப்பான நிகழ்ச்சியின் எழுத்துவடிவம். கலையரசி அக்காவின் வேண்டுகோளுக்கிணங்க, அனைவரும் படித்து ரசிக்க இங்கு பதிவிடுகிறேன்.

********************************************

கப்பலோட்டிய தமிழன் என்று நம்மால் பெருமையுடன் அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய எழுபத்தாறாவது நினைவு தினமான இன்று அன்னாரை நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூர்ந்து மகிழ்வோம். வ.உ.சி. அவர்கள் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகில் உள்ள வண்டானம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அவரது வாழ்க்கை என்பது, இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக தியாகங்கள், போராட்டங்கள், அனுபவித்த துயரங்கள் இவற்றால் நிறைந்தது. அவரிடம் ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் இருந்தன. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார். அவரது குணநலன்களை உலகமே போற்றுகிறது.

அவரை சிறப்பிக்கும் விதமாய் இன்றைய திரையோசையில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்திலிருந்து பாடல்களை ஒருபடப் பாடல்களாக கேட்கவிருக்கிறோம். இந்தப் பாடல்களின் சிறப்பு என்னதெரியுமா… இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் பாரதியின் பாடல்களே… அவற்றைக் கேட்டு மகிழ்வோமா..

பாருக்குள்ளே நல்ல நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு...

தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சில்
தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங்கண்டு
சாரத்திலே மிகு சாத்திரங்கண்டு
தருவதிலே உயர் நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு....

நன்மையிலே உடல் வன்மையிலே - செல்வப்
பன்மையிலே மறத் தன்மையிலே
நன்மையிலே உடல் வன்மையிலே - செல்வப்
பன்மையிலே மறத் தன்மையிலே
பொன் மயில் ஒத்திடும் மாதர் தம் கற்பின்
பொன் மயில் ஒத்திடும் மாதர் தம் கற்பின்
புகழினிலே உயர் நாடு எங்கள் பாரத நாடு
எங்கள் பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு....

வண்மையிலே உளத் திண்மையிலே - மனத்
தண்மையிலே மதி நுண்மையிலே
வண்மையிலே உளத் திண்மையிலே - மனத்
தண்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர்கள்
உண்மையிலே தவறாத புலவர்கள்
உணர்வினிலே உயர் நாடு

பாரத நாடு இந்த நாடு
பாருக்குள்ளே நல்ல நாடு
இந்த நாடு எங்கள் நாடு


வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். அதுமட்டுமல்ல, திறமையான எழுத்தாளர், ஆற்றல் மிக்க பேச்சாளரும் கூட. இவர் நிறைய தமிழ் செய்யுள்கள் இயற்றியுள்ளார், கட்டுரைகளும் நிறைய எழுதியிருக்கிறார். ஆங்கில நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த வ.உ.சி. அவர்கள் 1892- ஆம் ஆண்டு பாலகங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு அவருடைய சீடரானார். அவர் திலகரைப் பற்றி எழுதிய கட்டுரைத் தொடரானது இலங்கையில் வெளிவரும் வீரகேசரி இதழில் பாரத ஜோதி ஸ்ரீதிலக மகரிஷியின் வரலாறு என்று பெயரில் வெளியானதாம்.

சின்னக் குழந்தைகள் போல் விளையாடி
சிரித்துக் களித்திடுவான் - அவன்
சிரித்துக் களித்திடுவான் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சின்னக் குழந்தைகள் போல் விளையாடி
சிரித்துக் களித்திடுவான் அவன்
சிரித்துக் களித்திடுவான்

கோபத்திலே ஒரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடுவான்
கோபத்திலே ஒரு சொல்லிற் சிரித்துக்
குலுங்கிடச் செய்திடுவான் - மனத்
தாபத்திலே ஒன்று செய்து மகிழ்ச்சி
தளிர்த்திடச் செய்திடுவான் - மனத்
தாபத்திலே ஒன்று செய்து மகிழ்ச்சி
தளிர்த்திடச் செய்திடுவான் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

சின்னக் குழந்தைகள் போல் விளையாடி
சிரித்துக் களித்திடுவான் - அவன்
சிரித்துக் களித்திடுவான்

ஆபத்திலே வந்து பக்கத்திலே நின்று
அதனை விலக்கிடுவான்
ஆபத்திலே வந்து பக்கத்திலே நின்று
அதனை விலக்கிடுவான் - சுடர்
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்
தீமைகள் கொன்றிடுவான் - சுடர்
தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்
தீமைகள் கொன்றிடுவான் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

சின்னக் குழந்தைகள் போல் விளையாடி
சிரித்துக் களித்திடுவான் அவன்
சிரித்துக் களித்திடுவான்


வ.உ.சி அவர்கள் 1894-ஆம் ஆண்டு சட்டத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 1895ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார். அவர் உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக் கையாண்டாலும் குற்றவியல் வழக்குகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடுவது வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. வ.உ.சி. அவர்கள் பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார். அவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்புக்குரியவராக இருந்தார்.

குற்றவியல் வழக்குகள் என்பது காவல் துறையினரால் தொடரப்படும் வழக்குகள்.. தவறாக குற்றம் சாட்டப்பட்டவர்களை வ.உ.சி. விடுதலை செய்ததால் காவல் துறையினரின் கோபத்திற்கு ஆளாகிட்டார். அதனால் அவருடைய தந்தை இவரை தூத்துக்குடிக்குச் போய் பணியாற்றும்படி அனுப்பி வைத்தார். வ.உ.சி. தூத்துக்குடியிலும் புகழ் பெற்ற வழக்கறிஞராக திகழ்ந்தார்.


காற்றுவெளியிடைக் கண்ணம்மா- நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவூறித் ததும்பும் விழிகளும்

பத்து மாற்றுப் பொன்னொத்த நின் மேனியும்- இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவனாகப் புரியுமே - இந்த காற்று வெளியிடை…

நீ யெனதின்னுயிர் கண்ணாம்மா - எந்த
நெரமும் நின்றனை போற்றுவென் - துயர்
போயின , போயின துன்பங்கள் - நினை
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினிலே அமுதூறுதே
கண்ணம்மா என்ற பேர் சொல்லும் போதிலே
உயிர் தீயினிலே வளர் ஜோதியே - நின்றன்
சிந்தனையே எந்தன் சித்தமே- இந்த காற்று வெளியிடை…


வ.உ.சி.யும் பாரதியாரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்கள் வேறு. நட்புக்கு சொல்லவேண்டுமா... இருவரின் கருத்துகளும் ஒன்றாகவே இருந்தன. எப்போதும் நாட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்து சுப்பிரமணிய சிவா அவர்கள்… அவர் மதுரைக்கு அருகில் உள்ள வத்தலகுண்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிக்க புலமை வாய்ந்தவர். அவர் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே தாய் நாட்டின் சுதந்திரம் குறித்துப் பேசுவார். அவர் 1907-ஆண்டு தூத்துக்குடிக்கு வந்து சொற்பொழிவாற்ற, அவரது பேச்சாற்றலாலும் தாய் நாட்டுப் பற்றாலும் கவரப்பட்டு வ.உ.சி. அவருடைய நட்பைப் பெற்றார்.

ஓடி விளையாடு பாப்பா -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா…
கூடி விளையாடு பாப்பா -ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

பாலைப் பொழிந்துதரும், பாப்பா -அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான் -அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா

பொய்சொல்லக் கூடாது பாப்பா -என்றும்
புறஞ் சொல்லலாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா -ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு -பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு -என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு…
அச்சம் தவிர் ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி ஈகை திறன்.

பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு….
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
வருவாய் மயில் மீதினிலே
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும்
முருகா முருகா முருகா

சாதிகள் இல்லையடி பாப்பா -குலத்
தாழ்ச்சி உயர்ச்சிசொல்லல் பாவம்
நீதி உயர்ந்தமதி கல்வி -அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர் பாப்பா
ஓடிவிளையாடு பாப்பா


வ.உ.சி. தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராகவும் ஆளுமை மிக்க மனிதராகவும் விளங்கினார். அவர் "சுதேசி பிரச்சார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை", "வேளாண் சங்கம்" போன்றவற்றை ஏற்படுத்தினார். வணிகம் செய்யவந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளத்தைச் சுரண்டுவதைப் பார்த்து மனம் வேதனைப்பட்ட அவர், அவர்களுக்குப் போட்டியாக தாமும் ஒரு கப்பல் நிறுவனத்தை இந்திய மக்களின் வணிகத்துக்காக நடத்துவதுங்கிற முடிவெடுத்து 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். ஆனால் ஆங்கிலேய கப்பல் நிறுவனத்தின் அச்சுறுத்தல் காரணமாக இந்த நிறுவனத்துக்குக் கப்பல்களை வாடகைக்குத் தர மற்ற நிறுவனங்கள் மறுத்துவிட்டன. அப்போதும் மனந்தளராமல், சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்துவிட்டார். எவ்வளவு துணிச்சலான முடிவு..
அவர் வாங்கிய "எஸ்.எஸ். காலியோ" என்கிற கப்பலில் 42 முதல் வகுப்பு இருக்கைகளும், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் 1300 சாதாரண இருக்கைகளும் இருந்தன. மேலும் 4000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச் செல்லக்கூடிய வசதி இருந்தது. அடுத்ததாய் பிரான்சிலிருந்து எஸ்.எஸ். லாவோ என்கிற கப்பலும் வாங்கப்பட்டது. நீராவி எந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கப்பட்டன.


வெள்ளிப்பனிமலையின் மீதுலாவுவோம்.
பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் - மிடிப்
பயங் கொல்லுவார் துயர்ப் பகைவெல்லுவார்.


வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம், எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்.

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர் பல நாட்டினர்வந்தே,
நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே
நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே.
வெள்ளிப் பனிமலையின்……

ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்.
வெள்ளிப்பனிமலையின்……


இந்திய செய்தித் தாள்கள் எல்லாம் வ.உ.சி அவர்களின் துணிச்சலான இந்த நடவடிக்கை குறித்து கட்டுரைகள் வெளியிட்டுப் பாராட்டின. கப்பல் நிறுவனமும் கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பித்தது. மக்கள் எல்லாரும் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தார்கள். வியாபாரிகள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினார்கள். .ஒரு தமிழர் ஆங்கில அரசின் வணிகத்தைத் தடுப்பதுபோல் கப்பல் வாங்கி ஓட்ட ஆரம்பித்தது ஆங்கில அரசுக்கு வயிற்றில் புளியைக் கரைத்த மாதிரி இருக்க, போட்டியைச் சமாளிக்க கட்டணத்தைக் குறைத்தார்கள். அப்போதும் அவர்கள் நினைத்த்து போல் எதுவும் நடக்கவில்லை. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகவும் கூறினார்கள். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது உங்களால் எதுவும் செய்யமுடியாமல் போய்விடும் என்றெல்லாம் எடுத்துச் சொன்னார். உடனே வ.உ.சி.க்கு லஞ்சம் கொடுத்து கப்பல் நிறுவனத்தை முடக்க முயற்சி நடந்ததாம். சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் ரூ.1,00,000 கொடுப்பதாகக் கூறினர். அந்தக்காலத்தில் அது ஒரு பெரிய தொகைதான் என்றாலும் வ.உ.சி. அவர்களிடம் நடக்குமா.. அந்த முயற்சியும் தோல்விதான்…


நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலையென்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செப்பித் திரிவாரடி கிளியே செய்வதறியாரடி கிளியே

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி


சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. சுதந்திரப் போராட்ட உணர்ச்சி மக்களிடையே கொழுந்துவிட்டு எரிந்தது. வ.உ.சி. சொல்லும் எதையும் செய்ய மக்கள் தயாராக இருந்தார்கள். வ.உ.சி.காலத்திற்கு முன்பு படித்தவர்கள் மட்டுமே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைவரையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்த பெருமை வ.உ.சி.க்கே உரியது. அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டனர். அவர்கள் ஆங்கிலேயர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் வேலை பார்க்க மறுத்துவிட்டனர். ஆங்கிலேயர்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள். இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தவர்கள் அவரை தந்திரமாக திருநெல்வேலி வரவழைத்து கைது செய்தாங்களாம். வழக்கு நேர்மையாக நடக்காததால் வ.உ.சி. அதில் பங்கேற்க மறுத்துவிட்டார். அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா? 40 ஆண்டு தீவாந்திரத் தண்டனை! யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனை அது. வ.உ.சி.க்கு அப்பொழுது 36 வயது தானாம். ஆங்கில அரசை ஆதரிப்பவர்கள் கூட இந்தக் கொடிய தண்டனையை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் 10 ஆண்டு தீவாந்திரத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார் . அவரது நண்பர்கள் லண்டனில் உள்ள மன்னர் அவையில் முறையீடு செய்ததில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைந்தது.


என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்க்ள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைக்ள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?
தாயும் தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ?

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்


வ.உ.சி. அவர்கள் முதலில் கோயம்புத்தூர் சிறையிலும் பின்னர் கண்ணனூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். இப்போதெல்லாம் அரசியல் கைதிகள் என்றாலே தனி மரியாதையோடும் சகல வசதிகளோடும் நடத்தப்படுகிறார்கள்… ஆனால் அக்காலத்தில் அவர்களும் மற்ற ஆயுள் கைதிகளைப் போலவே நடத்தப்பட்டார்கள். வ.உ.சி. அவர்களோ நல்ல செல்வந்தர். ஆரோக்கியமான சுவையான உணவு உண்ணும் வழக்கம் உடையவர். ஆனால் சிறையில் கல்லும் மண்ணும் இருக்கும் கூழைக் குடிக்க வேண்டியிருந்தது. முரடான சிறை ஆடைகளை அணியவேண்டியிருந்தது. அதுமட்டுமில்லாமல் தலையை மொட்டையடித்து கை, கால்களில் விலங்கும் போட்டிருப்பார்கள். சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார்.

சணல் நூற்றல், கல் உடைத்தல் போன்றவற்றோடு மாடுகள் இழுக்கும் செக்கினை இழுக்கவைத்தார்கள். இந்த உடல்வேதனை போதாதென்று மனவேதனையும் உண்டாக்குகிற செய்தி ஒன்று அவருக்கு வந்தது.
அவரில்லாமல் மற்றவர்களால் சுதேசி கப்பல் நிறுவனத்தை நடத்தமுடியாமல்போகவே அந்த நிறுவனம் நசிந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் எஸ் எஸ் காலியோ கப்பல் ஆங்கிலேயருடைய கப்பல் நிறுவனத்துக்கே விற்கப்பட்ட செய்தி கேட்டு மனம் நொந்துபோனார். அந்தக் கப்பலை வாங்க அவர் என்னென்ன பாடுபட்டார்?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
கருகத் திருவுளமோ?
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?

எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?
மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு
கண்ணற்ற சேய் போல் கலங்குவதும் காண்கிலையோ?


1912 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டபின் வ.உ.சி அவர்கள் சென்னைக்குச் சென்றார். அவர் ஒரு மண்ணெண்ணெய்க் கடை ஆரம்பித்தார். ஆனாலும் ஒரு வணிகராக அவரால் வெற்றி பெற இயலவில்லை. அவர் அன்புள்ளமும் தாராள மனமும் கொண்டவர். அவரால் எப்படி வாணிகத்தில் வெற்றி பெற முடியும்? வ.உ.சி. லோக மான்ய பால கங்காதர திலகரின் சீடர். திலகர் செயல் வீரர். காந்திஜி மிதவாதி. வ.உ.சி.க்கு காந்திஜியின் வழிமுறைகளில் விருப்பமில்லை. வ.உ.சி. சிந்தித்தார். காந்திஜியின் வழிமுறைகளைப் பின்பற்றுவதா? மனசாட்சிப்படி நடப்பதா? வ.உ.சி. மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

வ.உ.சி. சிறை சென்றதால் வழக்கறிஞர் பணி செய்வதற்கான உரிமையை இழந்துவிட்டிருந்தார். குடும்பச் செலவுகளுக்காக திலகர் மாதம் ரூ.50 அனுப்பி வைத்தார். வ.உ.சி அவர்கள் கோயம்புத்தூரில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றார். அங்கே ஒரு வங்கி இயக்குனராகவும் பணியாற்றினார். இந்த வருமானம் அவருக்கு வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. வ.உ.சி. தான் சிறையில் இருந்தாலும் அரசியல் கைதியாக மட்டுமே இருந்தமையால் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருந்தார்.. திரு. ஈ.எச். வாலஸ் 1908-ஆம் ஆண்டு திருநெல்வேலியில் பணியாற்றியிருந்ததால் அவர் வ.உ.சி.யின் நேர்மையும் திறமையும் அறிந்திருந்தார். அதனால் அவர் அனுமதி அளித்தார். அவரது அச்செயலுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வ.உ.சி அவர்கள் தனது கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்" என்று பெயரிட்டாராம்.


உணவு செல்லவில்லை; - சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; - சகியே!
மலர் பிடிக்க வில்லை;
குண முறுதி யில்லை; - எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உளத்திலே - சுகமே
காணக் கிடைத்ததில்லை. ...

நாடி வைத்தியனும் இனிமேல்
நம்புதற்கில்லையென்றார்.
பாலத்து ஜோசியனும் கிரகம்
படுத்தும் என்றுவிட்டான்.
உணவு செல்லவில்லை….

இச்சை பிறந்ததடி எதிலும்
இன்பம் விளைந்ததடி
அச்சம் ஒழிந்ததடி சகியே
அழகு வந்ததடி
ஆஆஆஆஆஆஆ…..
எண்ணும்பொழுதிலெல்லாம்
அவன் கை இட்ட இடந்தனிலே
தண்ணென் றிருந்ததடி –
புதிதோர் சாந்தி பிறந்ததடி ...


வ.உ.சி அவர்கள் பின்னாளில் தமிழ் நூல்களை எழுதுவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்து வந்தார். வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான். அவை மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, சுயசரிதை என்பன. அவர் தமிழ் இலக்கியங்கள் குறித்து நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாக் கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போர் மூண்டால் இந்தியா சுதந்திரம் பெறுவது உறுதி என்று அவர் கூறியிருந்தார். .அதே போல் இந்தியா இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சுதந்திரம் பெற்றது. ஆனால் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்தான் அவர் உயிரோடு இல்லை. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் அவர் மறைந்தார்.

1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகள் என்ன தெரியுமா…
"சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்"

தன்னலம் துறந்து நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் உழைத்த ஒரு செம்மலின் வாழ்க்கையை இன்று உங்களிடம் பகிர்ந்துகொண்டதில் பெரிதும் மகிழ்வும் பெருமையும் கொள்கிறேன். இன்றைய தலைமுறையில் பலரும் மறந்துவிட்டத் தலைவர்களில் முக்கியமானவர் கப்பலோட்டிய இந்த தமிழன். அவரைப் பற்றியத் தகவல்களைத் திரட்ட உதவிய விக்கிப்பீடியாவுக்கும் மற்ற இணையதளங்களுக்கும் நன்றி. நிகழ்ச்சியை ரசித்த உங்கள் அனைவருக்கும் என் அன்பான நன்றி.
வணக்கம்.


வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.
வந்தே மாதரம் என்போம்….

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?
வந்தே மாதரம் என்போம்….

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
வந்தே மாதரம்… வந்தே மாதரம்… வந்தே மாதரம்!

ஜானகி
24-11-2012, 12:45 AM
நேற்றுதான் முழு ஒலிபரப்பும் கேட்டு மகிழ்ந்தேன்.

எப்போதும் போல, கீதம் அவர்களின் தொகுப்பு சிறப்பாக இருந்தது.

வளரட்டும் அவர்களின் தொண்டு !

கலையரசி
24-11-2012, 09:18 AM
"வ.உ.சி அவர்களின் எழுபத்தாறாவது நினைவுதினமான 18 நவம்பர் 2012 அன்று திரையோசையில் ஒலிபரப்பான நிகழ்ச்சியின் எழுத்துவடிவம். கலையரசி அக்காவின் வேண்டுகோளுக்கிணங்க, அனைவரும் படித்து ரசிக்க இங்கு பதிவிடுகிறேன்."


என் வேண்டுகோளை ஏற்றுப் பதிவிட்டமைக்கு நன்றி கீதம்! சிறு வயதில் பார்த்த கப்பலோட்டிய திரைப்படம் என்னை மிகவும் பாதித்தது.
வ.உ.சி.யின தியாகத்தைப் போற்றும் வகையில் பண்பலையில் அவரைப் பற்றிய தொகுப்பை வெளியிட்டது மிகவும் பாராட்டப்பட வேண்டிய செய்ல.
வ.உ.சி எழுதிய புத்தகங்களைப் புத்தக காட்சியொன்றில் ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் படிக்கத் துவங்கவில்லை.

2008 ஆம் ஆண்டில் ஒரு நாள் அவரது கொள்ளுப்பேரன்களான சங்கரன், ஆறுமுகம் ஆகியோரும் பேத்தி தனலெட்சுமியும் குடியிருக்க வீடு இல்லாமல் அடுத்த வேளைக்கு உணவின்றி நடுத்தெருவில் இருக்கிறார்கள் என்று தினமணியில் முன்பக்கச் செய்தி வெளியானது கண்டு அதிர்ச்சியடைந்தேன். இன்றைய அரசியல் தலைவர்கள் பத்துத் தலைமுறை குந்தித் தின்றாலும் மாளாத குன்றுகளைத் தம் வாரிசுகளுக்குச் சேர்த்து வைத்திருக்க, பெரும் செல்வந்தரான வ.உ.சி தம் சொத்துக்களை இந்நாட்டிற்காக கொடுத்து விட்டுத் தம் வழித்தோன்றல்களை நடுத்தெருவில் விட்டுச் சென்று விட்டாரே என்று மனம் பதைத்தது.
நல்லவேளையாக தினமணியின் இந்தச் செய்தி பலரையும் எட்டி அவர்களுக்கு அரசு உதவி ஏதோ கிடைத்திருப்பதாகக் கேள்வி.
ஒவ்வோர் ஆண்டும் அவரது நினைவு நாளில் நம் பண்பலையில் அவரைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.


"மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?"

சிதம்பரனாருக்காக எழுதபப்ட்டவை தான் இந்த வரிகள். (’சுதந்திரப்பயிர்’ கவிதையில் பாரதி)