PDA

View Full Version : அறிஞரைச் சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்..! மனோ.ஜி அண்ணா பேட்டி



செல்வா
15-11-2012, 05:53 AM
மன்றத்தில் பண்பலை ஆரம்பித்து சிறப்பாக நாம் நடத்திக் கொண்டிருந்தாலும் மன்றத்தின் அடிப்படையான எழுத்திற்குத்தான் எப்போதும் முன்னுரிமை என்பதை உறவுகள் மறந்து விடக்கூடாது. அதோடு பண்பலைக்குத் தயாரிக்கும் நிகழ்ச்சிகளையும் எழுத்துக்களாக்கி இங்கே பதிவது மன்றை இன்னும் வளப்படுத்தும் என்று எண்ணுகிறேன். அதை ஆரம்பிப்பது போல் நானே எனது முதல் நிகழ்வான மனோ.ஜி அண்ணாவின் பேட்டியை இங்கேப் பதிவு செய்கிறேன். தொடர்ந்து மற்றவர்களும் தங்கள் படைப்புகளை இங்கேப் பதியும் போது அந்நிகழ்ச்சி ஆவணப்படுத்தப்படுவதோடு மன்றிற்கு புதிய தரமானப் பதிவுகளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

தீபாவளி சிறப்புநிகழ்ச்சியில் ஒலிபரப்பான மனோ.ஜி அண்ணாவின் பேட்டியின் வரிவடிவம்.

வணக்கம் நண்பர்களே…!
நான் செல்வா பேசுகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.

இப்போது நான் பேட்டி காணப் போவது மன்றத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து இன்றுவரை மன்றத்துடன் இணைந்திருக்கும் ஒரு மூத்த மன்ற உறுப்பினர்.

மன்றிலும் மூத்தவர் !

வயதிலும் மூத்தவர் !

மன்றிலும் மக்கள் மனதிலும் முத்து அவர் !

காமராஜரும் காந்தியும் அவருக்கு மிகப் பிடித்தமானவர்கள்.
மன்றத்தின் விவாதங்கள் பகுதியில் இவரது திரிகளை நீங்கள் அதிகம் பார்க்கலாம்.
மனிதர்களிடத்தில் அருகி வரும் குணங்களான மனிதநேயம், தர்மம், அன்பு பாசம் போன்றவற்றின் ஆழத்தைப் புரிந்து கொள்ளும் தேடல்களைக் கிளப்பும் விவாதங்களாக அவை நீண்டிருப்பதைக் காணலாம்.

ஆம் நமது பாசமிகு அண்ணா மனோ.ஜி அவர்களைத்தான் நாம் இப்போது சந்திக்கப் போகிறேன். மலேசியாவில் வாழ்ந்தாலும் தமிழின் மீது தணியாத காதலும் அர்வமும் கொண்ட அண்ணலவர்.

செல்வா : வணக்கம் அண்ணா..!

மனோ.ஜி : வணக்கம் தம்பி..!

செ: உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

ம: உங்களனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!

செ: அண்ணா மன்றம் துவங்கி பத்தாவது அண்டை நாம கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் மன்றம் துவங்கிய காலகட்டத்திலேர்ந்து பத்து வருஷமாக மன்றத்துடன் இணைந்திருக்கீங்க.. இந்த பத்து வருஷத்தில் நீங்கள் என்னென்ன புதுமைகள், மாற்றங்கள் பாக்குறீங்க?

ம: தமிழ்மன்றம் என்ற ஒரு இணையதளம் 2003ல் உருவானது. 2003லிருந்து 2012 வரை என்ன மாற்றங்கள் என்று சொல்வதை விட என்ன வளர்ச்சிகள் என்று சொல்லலாம்.

தமிழில் எழுத்தார்வம் கொண்டோரின் படைப்புகளுக்கு விமர்சனங்கள் மூலம் பின்னுட்டமிட்டு ஊக்கப்படுத்தி நிறைய படைப்பாளிகளை உருவாக்கியது நமது தமிழ்மன்றம்.

ஆரம்ப காலத்தில் நிழற்படத் தொகுப்பு என அந்தந்த மாதத்தில் பதிக்கப்பட்ட சிறந்த படைப்புகளை கதை, கவிதை, நகைச்சுவை என மன்ற உறவுகளில் ஒருவர் பொறுப்பெடுத்துத் தொகுத்து எல்லாரும் வாசிக்கும் வண்ணம் பதிவேற்றம் செய்தது ஒரு சிறப்பு.
பிறகு நந்தவனம் என்னும் ஒரு மின்னிதழ் பண்டிகைக்குப் பண்டிகை நந்தவனக் குழுவினரால் மன்றத்தில் பதிவேற்றப்பட்டது. இந்த நந்தவனம் நிழற்படம் போல் சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து அழகிய ஓவியங்கள் படங்கள் கொண்டு தொகுத்து நம்ம மன்றத்தில் பதிவேற்றம் செய்தாங்க. தொழில்முறை பதிப்பகம் வியாபாரநோக்கத்தில் செய்யிற மாத வார இதழ்களைக் காட்டிலும் நம்ம நந்தவனம் மிக மிகச் சிறப்பா இருந்துச்சு. இதுவே நம்ம வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு.

செ: ஆங்காங்கே சின்னச் சின்ன அளவில் நடந்து கொண்டிருந்த மன்றச் சந்திப்புகளை ஒருங்கிணைப்பது போல ஒரு பெரிய சந்திப்பை 20-12-2008ல். நடத்திக்காட்டியவர் நீங்கள். சங்கீத மாதத்தில் ஒரு சந்தோஷ சந்திப்பாக மன்ற மலரும் நினைவுகள் பகுதியில் அது இடம்பிடித்திருக்கிறது. நிறைய மன்ற உறுப்பினர சந்திருச்சிருக்கீங்க. அதுல உங்க மனம் கவர்ந்த உங்கள் நினைவை விட்டு நீங்காத சம்பவம் ஏதாவது?

ம: நிறைய மன்ற உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தில் நிறைய மன்ற உறவுகளைச் சந்தித்திருக்கிறேன். இன்னும் என்னால மறக்க முடியாத சந்திப்பு என்று சொன்னால் அது முன்னாள் நிர்வாகி தம்பி அறிஞரைச் சந்தித்தது. தைவானிலிருந்து சென்னைக்கு திரும்பும் போது ஒரு நான்கு மணிநேரம் கோலலம்பூரில் தங்கிட்டு போனார். அந்த நான்கு மணி நேரத்தையும் எங்க சந்திப்புல நாங்க செலவிட்டோம். முகமறியா அவரை வானூர்தி நிலையத்தில் வரவேற்றது ஒரு சிறப்பு.கிடைத்த அந்த நாலுமணி நேரத்தையும் நாங்க மன்ற உறவுகளையும் மன்றத்தை எப்படி மேம்படுத்துறது என்பதிலயும் பேசி செலவழிச்சோம். அந்த நாலுமணி நேரம் போனதே தெரியல. அவரு பிரிவதற்கான நேரமும் வந்திருச்சு அவர வழியனுப்பி விட எனக்கு மனசு வரல. அவர பிரியும்போது ஏற்பட்ட அந்த உணர்வு எனது நீண்டநாளைய சொந்தங்களைப் பிரியிறமாதிரி ஒரு ஏக்கம் மனசுல இருந்துது. இதே உணர்வு அவருக்கும் இருந்தது என்று அவரு நாடு திரும்பியபின் எழுதிய மின்னஞ்சல்லருந்து தெரியவந்தது. இதுதான் என் வாழ்வில் மறக்கமுடியாத மன்ற உறவைச் சந்தித்த ஒரு சம்பவம்.

செ : நன்றி அண்ணா நீங்க சொன்னமாதிரி மன்ற உறவுகளைச் சந்திப்பது எப்போதுமே சுவையான அனுபவம் தான். பிரியும் போது பிரிகிறோமே அடுத்து எப்போ சந்திப்போமோ என்ற ஏக்கத்தைத் தருவது நம் மன்ற உறவுகளுடனான சந்திப்பு. அறிஞருக்கு மட்டுமல்ல உங்களைச் சந்திக்கும் யாருக்குமே அந்த உணர்வு வரும் இது எனது அனுபவ பகிர்வு. உங்களை மூன்று முறை சந்திக்கும் பாக்கியத்தை இறைவன் எனக்குத் தந்திருக்கிறான்.
அடுத்ததா நான் உங்களைச் சந்திக்கும் போதெல்லாம் உங்களுக்கு நினைவூட்டும் காரியம் … உங்க முப்பாட்டனார்களின் சுயசரிதத்தோட உங்க வாழ்க்கைச் சம்பவங்களையும் எழுதிட்டு வந்தீங்க. எங்களுக்காக எப்போ அதை தொடரப் போறீங்க?

ம: தம்பி பாரதி கேட்டுக்கிட்டதற்கிணங்க மலேசியாவுல என்னுடைய முன்னோர்கள் என் தகப்பனார் நான் இந்த மூன்று பரம்பரையும் (ஜெனரேசன்னு சொல்றோம் இல்லையா) வாழ்ந்த காலகட்டத்தை சுயசரிதையா எழுதச் சொல்லி ஒரு விண்ணப்பம் வைத்தார். அதுக்காக என் மூத்த உறவுகளைத் தேடி அவங்ககிட்டருந்து சேகரிச்ச தகவல்களைக் கொண்டு அந்த சுயசரிதையை எழுத ஆரம்பிச்சன். வேலை பளுவினாலயும் நேரம் கிடைக்காமையினாலயும் வேலை மாற்றத்தினாலயும் அது தொடரமுடியாமப் போச்சு. ஆனால் அதை நான் கண்டிப்பா எழுதி முடிப்பேன் உங்களுக்காகப் பதிவேற்றம் செய்வன் இது நான் உங்களுக்கு கொடுக்கிற உறுதிமொழி.

செ: கண்டிப்பாக உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் ஆவலில் நாங்கள் காத்துக்கிட்டிருக்கோம். அடுத்து நம்ம பண்பலைக்கு வருவோம் அண்ணா மன்ற பண்பலையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

ம: பண்பலைக் குழுவிற்கு முதல்ல என்னோட வாழ்த்துக்களைச் சொல்லணும். நம்ம உறவுகள் புதியசிந்தனையில் உதித்ததுதான் இந்தப் பண்பலை. இந்தப் பண்பலையின் தொடக்கம் நம்ம மன்றத்தில இன்னொரு மைல்கல். இதற்கு நமக்காக வழிவகுத்த தமிழ்மன்ற நிறுவனர் இராசகுமரனுக்கும் முன்னாள் நிர்வாகி இளவல் இளசுக்கும் தம்பி அறிஞர்க்கும் பண்பலைக்குழுவினர்க்கும் தற்போதைய மன்ற நிர்வாகக் குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.

செ: உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா… நீங்க அதிகமாக எழுதலேன்னாலும் பழைய மற்றும் திஸ்கி திரிகளை தேடிப்பார்த்தா நல்லா கவிதை எழுதுவீங்கன்னு கொஞ்ச பேருக்குத் தான் தெரியும். அதனால மன்ற உறுவுகளுக்கு தீபாவளி வாழ்த்தை நீங்க கவிதையா சொல்லுங்களேன்.

ம: தீபாவளி வந்திருச்சு, எல்லோரும் சுறுசுறுப்பா தீபாவளி கொண்டாட ஏற்பாடுகளைச் செஞ்சிட்டுருக்கீங்க உங்களுக்கு எனது வாழ்த்து.

இருள் நீக்க ஒளிவெள்ளம் வந்தது போல்

தீமைகள் நீக்க நன்மைகள் வந்தது போல்

வேற்றுமை நீக்கி வந்த ஒற்றுமை போல்

பகைநீக்கி வந்த உறவுகள் போல்


உள்ளமெல்லாம் இன்பம் பொங்க

சின்னம் சிறுசுகள் எல்லாம் குதுகலீக்க

ஊறவுகளின் வருகை பெருக

விருந்தோம்பல் பண்பில் சிறக்க

இனிப்புகள் உண்டு

இன்பம் கண்டு

சிக்கனமும் கொண்டு

பண்டிகையைக் கொண்டாடு

இனியதீபாவளி வாழ்த்துக்கள்..!

உங்கள் மலேசிய உறவு

அண்ணன் மனோ.ஜி.

செ: உங்களை இந்த இனிய நாளில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை மன்றம் சார்பில் நான் சொல்லிக் கொள்கிறேன்.

நன்றி அண்ணா..! நன்றி உறவுகளே..!

கீதம்
15-11-2012, 05:58 AM
அசத்தல் செல்வா... அன்றைய ஒலிபரப்பை அழகாய் பதிவாக்கி அனைவரும் அறியத் தந்திருக்கிறீர்கள். நிகழ்ச்சியை கேட்டிராதவர்களுக்கும், மறுபடியும் அறியவிரும்புவோருக்கும் நல்லதொரு வாய்ப்பை உருவாக்கியிருக்கிறீர்கள். நன்றியும் பாராட்டும் செல்வா.

aren
15-11-2012, 08:20 AM
வாவ்!!! அசத்தலான பதிவு.

கடந்த சனிக்கிழமை 10ஆம் தேதியன்று கோலாலம்பூருக்கு ஒரு வேலை விஷயமாக சென்றிருந்தபோது ஒரு 30 நிமிடம் நம் மனோஜியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. மனிதர் படு ஜோராக (தீபாவளி மூடில்) இருந்தார். பல விஷயங்களை பேச நினைத்தாலும் நேரமின்மையால் பேச முடியாமல் போனது. அடுத்தமுறை கோலாலம்பூர் செல்லும்போது நிச்சயம் நிறைய பேச முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.

அவரை பலமுறை நான் சந்திருந்தாலும் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அவருடைய சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது. அதன் ரகசியம் என்னவென்று தெரியவில்லை.

Mano.G.
16-11-2012, 12:11 AM
நன்றியும் வாழ்த்துக்களும் செல்வா,

நமது உரையாடளை அப்படியே தட்டச்சு செய்து பதிவேற்றியது பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிரது. ஏன்?

தம்பி மதியிடமிருந்து கேள்விகள் பெற்றவுடன்
அதற்கான பதில்களை தட்டச்சு செய்து அதை பலமுறை வாசித்து , திருத்தங்கள் செய்த பிறகே குரல் பதிவு செய்தேன். தம்பி செல்வாவின் இந்த பதிவின் நகலே நான் தட்டச்சு செய்தது.

செல்வ அந்த உரையாடலை மன்றத்தில் பதிவேற்றம் செய்வார் என தெரிந்திருந்தால்
எனது பதிலின் தட்டச்சு பிரதியை மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன், தட்டச்சு செய்யும் வேலை குறைந்திருக்கும்.

நன்றி நன்றி நன்றி


மனோ.ஜி

Mano.G.
16-11-2012, 12:30 AM
வாவ்!!! அசத்தலான பதிவு.

கடந்த சனிக்கிழமை 10ஆம் தேதியன்று கோலாலம்பூருக்கு ஒரு வேலை விஷயமாக சென்றிருந்தபோது ஒரு 30 நிமிடம் நம் மனோஜியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. மனிதர் படு ஜோராக (தீபாவளி மூடில்) இருந்தார். பல விஷயங்களை பேச நினைத்தாலும் நேரமின்மையால் பேச முடியாமல் போனது. அடுத்தமுறை கோலாலம்பூர் செல்லும்போது நிச்சயம் நிறைய பேச முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.

அவரை பலமுறை நான் சந்திருந்தாலும் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அவருடைய சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது. அதன் ரகசியம் என்னவென்று தெரியவில்லை.

உற்சாகம் என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றும் நோய்போல, எனக்கு இந்த உற்சாகமும் சுறுசுறுப்பும் நண்பர் ஆரேனிடமிருந்தும் மற்றொருவர் நம்ம தலை மணியவிடமிருந்தும் ஒட்டிகொண்டது. இவர்களோடு இருக்கும் பொழுது ஏற்படும் அந்த நேர்மறையாற்றல் / அதிர்வு (Positive energy/vibration) நம்மையும் தொற்றிகொள்ளும், அதனால் தான் நமது மூதாதையர்கள் / பெரியோர்கள் .............. சேரவேண்டும் என நமக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

செல்வா
16-11-2012, 01:56 AM
அசத்தல் செல்வா... அன்றைய ஒலிபரப்பை அழகாய் பதிவாக்கி அனைவரும் அறியத் தந்திருக்கிறீர்கள். நிகழ்ச்சியை கேட்டிராதவர்களுக்கும், மறுபடியும் அறியவிரும்புவோருக்கும் நல்லதொரு வாய்ப்பை உருவாக்கியிருக்கிறீர்கள். நன்றியும் பாராட்டும் செல்வா.

நன்றி அக்கா. அனேகமாக எல்லேரும் எழுதிவைத்துக் கொண்டுதான் பேசியிருப்பார்கள் என நினைக்கிறேன். எனவே கொஞ்சம் முயற்சி செய்தால் அனைத்து பேட்டிகளையும் நிகழ்ச்சிகளையும் நாம் மன்றத்தில் பதிவேற்றிவிட வேண்டும்.


வாவ்!!! அசத்தலான பதிவு.

கடந்த சனிக்கிழமை 10ஆம் தேதியன்று கோலாலம்பூருக்கு ஒரு வேலை விஷயமாக சென்றிருந்தபோது ஒரு 30 நிமிடம் நம் மனோஜியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. மனிதர் படு ஜோராக (தீபாவளி மூடில்) இருந்தார். பல விஷயங்களை பேச நினைத்தாலும் நேரமின்மையால் பேச முடியாமல் போனது. அடுத்தமுறை கோலாலம்பூர் செல்லும்போது நிச்சயம் நிறைய பேச முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.

அவரை பலமுறை நான் சந்திருந்தாலும் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அவருடைய சுறுசுறுப்பு என்னை வியக்க வைக்கிறது. அதன் ரகசியம் என்னவென்று தெரியவில்லை.

பாராட்டுக்களுக்கு நன்றி அண்ணா. நானும் இதை உணர்ந்திருக்கிறேன்.


நன்றியும் வாழ்த்துக்களும் செல்வா,

நமது உரையாடளை அப்படியே தட்டச்சு செய்து பதிவேற்றியது பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிரது. ஏன்?

தம்பி மதியிடமிருந்து கேள்விகள் பெற்றவுடன்
அதற்கான பதில்களை தட்டச்சு செய்து அதை பலமுறை வாசித்து , திருத்தங்கள் செய்த பிறகே குரல் பதிவு செய்தேன். தம்பி செல்வாவின் இந்த பதிவின் நகலே நான் தட்டச்சு செய்தது.

செல்வ அந்த உரையாடலை மன்றத்தில் பதிவேற்றம் செய்வார் என தெரிந்திருந்தால்
எனது பதிலின் தட்டச்சு பிரதியை மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன், தட்டச்சு செய்யும் வேலை குறைந்திருக்கும்.

நன்றி நன்றி நன்றி


மனோ.ஜி

ஒரு ஆரம்பமாக இருக்கட்டுமே என்ற ஆவலில் நானே தட்டச்சி பதிந்துவிட்டேன்.

நன்றி அண்ணா.

Mano.G.
03-03-2022, 01:53 AM
பழைய நினைவுகளில்
மீண்டும்

மனோ. ஜி

praveen
11-01-2024, 09:40 AM
நான் பலவருடங்களுக்கு முன் அலைபேசியில் அறிஞருடன் உரையாடியது, பின் அவருடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, திரும்ப அவருடன் உரையாடுவேன் என்று நினைக்கிறேன்.

பசுமையான நினைவுகள், என் பையன் பிறந்த பின் அலைபேசியில் தகவல் தெரிந்து வாழ்த்து கூறினார். மெய்மறந்து விட்டேன். காலம் எல்லோரையும் பிரித்து திரும்ப இனைக்க காத்திருக்கிறது.