PDA

View Full Version : விளங்கவில்லை விமலாவிற்கு!-- முரளி



முரளி
13-11-2012, 06:01 AM
பத்தாம் வகுப்பு பி பிரிவு.

தேர்வாகட்டும், வினாடி வினாவாகட்டும், கட்டுரை பேச்சு போட்டியாகட்டும், பரிசை தட்டி செல்லும் மாணவர் உள்ள வகுப்பு.
ஆனால் இந்த வகுப்பில் தான் சுட்டித்தனமும் , குறும்பும், வால் தனமும் கொஞ்சம் அதிகம். ஆசிரியர்களை கலாய்ப்பது என்பது அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. வாய்ப்பு கிடைத்தால் போதும், மாணவர்கள் வெளுத்துக் கட்டி விடுவார்கள்.

அன்று உயிரியல் பாடம். அந்த வகுப்பு ஆசிரியை அன்று வராததால், விமலாவுக்கு பத்தாம் வகுப்பு பி பிரிவுக்கு வகுப்பு எடுக்க தலைமை ஆசிரியர் ஆணை.
சக ஆசிரியர்கள் ஏற்கெனவே அவளுக்கு எச்சரிக்கை பண்ணியிருந்தனர். “ பார்த்துகோங்க டீச்சர், பசங்க கொஞ்சம் படுத்துவாங்க” இருப்பினும் அது பற்றி அவருக்கு அவ்வளவு பயமில்லை. “எவ்வளவோ பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுவோமே” என்ற தைரியம், அவருக்கு.

***
பத்தாம் வகுப்பு பி பிரிவு. பாடம் நடந்து கொண்டிருந்தது.ஆசிரியை விமலா அழகாக விளக்கிக் கொண்டிருந்தார். மாணவர்கள் தீவிரமான கவனத்தோடு கேட்டுக்கொண்டிருந்தனர். . அவருக்கு பாடம் நடத்த, அன்போடு சொல்லிக் கொடுக்க, பிடிக்கும். மரங்களை பற்றி பேச்சு திரும்பியது.

“இன்னைக்கு உலகத்திலேயே நீண்ட காலமாக உயிரோடு இருக்கும் மரம் எது? யாருக்கு தெரியும்? சொல்லுங்க பாக்கலாம்?” . கேள்வி பதில் மூலமாகத்தான் மாணவர்கள் கவனத்தை ஈர்க்க முடியும் என்பது விமலாவின் அசையாத நம்பிக்கை.

ரவி எழுந்தான். அவன்தான் வகுப்பிலேயே கெட்டிக்கார மாணவன். “ கலிபோர்னியாவில் உள்ள மெதுசெலாஹ் மரம் மிஸ். 4800 வருஷமா இருக்கு”

"ரொம்ப சரி. இதுதான் அந்த மரம்.. திரையில் காட்டினார் விமலா.
https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcSALlJ6ZaDo_yvRDGECa1UNpdGWtFkgus6GC9A9rhp-LB887u6FIA

“அப்பாடி!” மூக்கில் விரலை வைத்தார்கள், மாணவர்கள். அவரவர் மூக்கில் தான்.

“சரி, மெதுசெலாஹ் , அப்படின்னா அர்த்தம் என்ன தெரியுமா?”

“தெரியாது மிஸ் “ – கோரசாக மாணவர்கள்.

“மேதுசலாஹ் என்பவன் ரொம்ப காலம் வாழ்ந்த மனிதன். 969 வருடம்., ஹிப்ரு ஆகமத்தின் படி ”

“அப்படியா?” மாணவர்கள்.

“அப்படித்தான்.. அடுத்த கேள்வி. இந்தியாவிலே நீண்ட காலம் வாழும் மரம் எங்கே இருக்கு?யாருக்காவது தெரியுமா? ”- ஆசிரியை.

வித விதமான பதில்கள். ஒருவன் “கல்கத்தாலே இருக்கும் ஆல மரம்”. இன்னொருவன் “இல்லே அது 250 வருஷம் தான், ஆந்திராவில் இருக்கும் பில்லல மாரி ஆல மரம் 700 வருஷம்.”

கேள்வி பதில்லே வகுப்பு என்னமாய் போய்கிட்டிருக்கு.? இன்னும் கேள்வி கேப்போம். ஆசிரியை விமலாவுக்கு தான் தன் சொந்த செலவிலே தனக்கே சூனியம் வெச்சுகிட்டிருக்கோம் என்பது அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.

“குட்!. ரெண்டு பேர் சொன்னதும் சரி. பில்லல மாரி அப்படின்னா என்ன ?”

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcS3GgfkrytlCRJ-sWRBmuKMwpSezr_F-x6lQAVnjb-TcB4KpvOi

மோகன் ரெட்டி எழுந்து உடனே பதில் சொன்னான் “ பில்லல அப்படின்னா தெலுங்குலே பசங்க மிஸ். மாரின்னா ஆல மரம். பசங்க மாதிரி பக்கத்திலே பக்கத்திலே மரம் இருக்குனு அர்த்தம் மிஸ்”

“வெரி குட் . தமிழ்நாட்டிலே இது மாதிரி ஏதாவது ?”- டீச்சர் வினவினார்.

கோரசாக எல்லோரும் “அடையார் ஆல மரம் மிஸ்”.

“சரியா சொன்னீங்க, 450 வருஷமாக இருக்கு. “அப்புறம் நீர் மருது மரம் ஒன்று 500 வருடமாக இருக்காம். கன்னியாகுமரி மாவட்டத்திலே. 150 அடி உயரம். தொல்காப்பியர் மரம்னு பேர் வெச்சிருக்காங்க. ”. ஆசிரியை அடுக்கிக்கொண்டே போனார்.

“சரி, ஆல மரம்னா என்ன அர்த்தம். தெரியுமா?” – அடுத்த கணை விடுத்தார் ஆசிரியை.

மாணவர் விழித்தனர். மடக்கி விட்டோம் மாணவர்களை. மனதிற்குள் சிரித்துக் கொண்டார் விமலா. விதி வலியது என அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

“நானே சொல்றேன். ‘அகல’ என்கிற சொல்லிலிருந்துதான் ‘ஆல’ மரம் என மருவியது. வடக்கிலே, இந்த மரத்திற்கு கீழே, நிழலில், வணிகர்கள் விற்றதனால், “பான்யன் ட்ரீ”( Banyan Tree) என ஆச்சு. குஜராத்தில், வணிகர்களை பனியா என்றே அழைப்பர்.”

“ஸ். அப்பா. இப்பவே கண்ணை கட்டுதே. இப்படி சாவடிக்கராங்களே! ” மாணவர்களின் மன ஓட்டம். என்னடா பண்ணலாம்?

விமலா உடனே அடுத்த கேள்வியை ஆரம்பித்தார்.

”சரி! இந்த மாதிரி வார்த்தைகளின் அடி வரைக்கும் போய் துருவிப் பார்ப்பதற்கு என்ன பேர் சொல்லுங்க பார்ப்போம்?” - வினவினார் .

ரவி சொன்னான் “சொல்லிலக்கணம் மிஸ். எடிமொலோஜி ”

“வெரி குட்!. இப்படித்தான் ஒவ்வொன்றையும் ஆராயணும். ஏன், எப்படி, எதுக்குன்னு கேள்வி கேக்கணும். பகுத்தறிவு வளரும். விஞ்ஞானத்தின் அடிப்படையே அதுதான்”.

முதல் வரிசையிலிருந்த ரவி கையைத்தூக்கினான். இதுக்குத்தானே காத்துக் கிட்டிருந்தான். எப்படா லூஸ் பந்து வரும், விளாசலாம் என பார்த்துக் கொண்டிருந்தான்!

“மிஸ்.. ”.
முதல் குண்டு டீச்சர் மேலே விழ தயாராக இருந்தது.

" எஸ் ! ” – பலி ஆடு, எதுவும் தெரியாம உற்சாகமாக கேட்டது.

“மிஸ்! கோடி கோடியா மரங்கள் உலகத்திலே முளைக்குது, இருக்குது, அழிஞ்சு போகுது. ஆனால், இந்த சில மரங்கள் மட்டும் காலம் காலமா இருக்கே அது எப்படி? மற்றதெல்லாம் காணாமல் அழிஞ்சு போகுதே, காரணம் என்ன?.”

என்ன பதில் சொல்ல? சுதாரித்துக் கொண்டார். “ ரொம்ப நல்ல கேள்வி! இந்த கேள்விக்கு மாணவர்களே! யோசியுங்க. நீங்களே பதில் சொல்லுங்க பாக்கலாம்?”.

மாணவர்கள் விழித்தனர். என்னடா இது, இந்த டீச்சர் நம்ம கேள்வியை நமக்கே திருப்பறாங்க. ரொம்ப அடாவடியா இருக்கே!
அதற்குள் வகுப்பு முடிந்ததற்கான மணி அடித்தது. “அடுத்த வகுப்பில் பாக்கலாம். நன்றாக யோசனை பண்ணிட்டு வாங்க!.” – டீச்சர் நழுவினார் நைசாக.

வெளியில் வந்த விமலாவுக்கு ஒரே எண்ண ஓட்டம். என்னமா யோசிக்கிறாங்க பசங்க! இவங்களுக்கு மேலே நாம யோசிக்கணும் போலிருக்கே! என்ன பதில் இந்த கேள்விக்கு? முதலிலே, லைப்ரரிலே போய் படிக்கணும்.

பசங்க நடுவிலே சதியாலோசனை. “டேய் ரவி, என்னடா கேள்வியை நமக்கே பூமராங்க் மாதிரி திருப்பிட்டாங்க.” சடகோபன் கேட்டான்.
“ஆமாடா.. கில்லாடியாயிருக்காங்க. நாம்ப கொஞ்சம் மாத்தி யோசிக்கணும்.”

* * *

மதியம் இரண்டாம் வகுப்பு : மீண்டும் உயிரியல்:

வகுப்பு ஆரம்பித்தவுடன் ரவி எழுந்தான். “மிஸ், காலையில் கேட்டேனே..? ”.

அட விடமாட்டேங்கிறானே! விமலா சுதாரித்துக் கொண்டார்.

டீச்சர் கேட்டார் “ உன் கேள்வி என்ன ! கோடானுகோடி மரங்களிலே ஏன் ஒரு சில மரங்கள் மட்டும் ரொம்ப நாள் வாழ முடியுது? எப்படி ஒரு சில மரங்களால மட்டும் நிலைத்து நிக்க முடியுது? என்ன காரணம்?- இதுதானே! மாணவர்களே, நீங்க தயாரா? சொல்லுங்க ?”

“மிஸ்! நாங்க கேள்வி கேட்டா, நீங்க திருப்பி எங்களையே கேக்கறீங்களே? நியாயமா?” –சடகோபன்

“அதுவும் சரிதான், உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க. மிச்சத்தை நான் சொல்றேன்”- டீச்சர்.

சடகோபன் எழுந்தான். “அந்த மரத்து விதைதான் காரணம் மிஸ். அதற்கு ரொம்ப ஊட்டச்சத்து இருந்திருக்கும்”

“குட்! ஆனால், ஏன்! மற்ற விதைகளில் ஊட்டம் இருந்திருக்காதா? இதைப் போல் லட்சம் விதைகள் இருந்திருக்குமே? அப்போ ஏன் அத்தனை மரங்கள் நிலைத்து இல்லை? என்ன ஆச்சு? 300 வருஷம் வரை இருக்கிற மரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாமே!”- ஆசிரியை மடக்கினார்.

சடகோபன் விழித்தான்.

விமலா தொடர்ந்தார் “சரி அப்படியே இருக்கட்டும் . ஆனால் அது மட்டும் தான் காரணமா? வேறே யாராவது?”

“மிஸ்!. அந்த மரத்தோட பூமி நிறைய வளம் நிறைஞ்சிருந்திருக்கும், தண்ணி நிறைய கிடைச்சிருக்கும் ”- கோபி

“இருக்கலாம்!. இதுவும் சரி தான். ஆனால் அது மட்டும் தான் காரணமா?”

கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு, மணி சொன்னான் “ மிஸ், பக்கத்திலே மற்ற மரங்கள் இல்லாமலிருந்திருக்கும். அதனாலே, சூரிய ஒளி நிறைய கிடைச்சிருக்கும்”

“வெரி குட். ஆனால் அது மட்டும் தான் காரணமா?வேறே யாருக்காவது தெரியுமா ?”

“மிஸ்!” தயங்கியபடியே ரமேஷ் எழுந்தான். “அந்த மரம் செடியாக இருந்தபோது எலியோ, அணிலோ அதனது வேரை கடிச்சி குதறியிருக்காது! தப்பித்திருக்கும்”

“சூப்பர்!. லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட் ஆக சொன்னே . ஆனால் அது மட்டும் தான் காரணமா?”

பசங்க மத்தியிலே மயான அமைதி. வேறே என்ன காரணம் இருக்கும்? என்னடா இது கேள்வி கேட்டே கொல்றாங்களே ?

விமலா சொன்னார் “ நானே சொல்றேன்!. இது நாள் வரைக்கும் எந்த மனிதனும் அந்த மரத்தை வெட்டி சாய்க்கவில்லை! காட்டுத்தீயோ, யானையோ அந்த மரத்தை விட்டு வெச்சிருக்கு, சரியா?”

ரவிக்கு இப்போ சான்ஸ், டீச்சரை கலாய்க்க “மிஸ் ! இருக்கலாம்!. ஆனால் அது மட்டும் தான் காரணமா?”

வாய் விட்டு சிரித்தார் விமலா.”கரெக்ட். இன்னும் கூட நிறைய காரணங்கள் நமக்கு தெரியாம இருக்கலாம். எறும்பு புற்று, கரையான் போல. இந்த காரணிகள் ஒன்னு சேருவதை ,ஆங்கிலத்திலே டிப்பிங் பாயிண்ட் (Tipping Point )அப்படின்னு சொல்லுவாங்க” .

“அப்படின்னா?”- ரவி

“சொன்னேனே! இந்த காரணிகள் எல்லாம் கூட்டாக சேருவது. இந்த காரணிகள் எல்லாம் ஒண்ணா சேர்ந்ததினாலே மட்டுமே, இந்த மரங்கள் நிலைச்சு நின்னது, நிக்குது. இந்த காரணங்களில் ஒன்றோ அல்லது சிலவோ சேராததினாலே மற்ற மரங்கள் பட்டு போச்சு, இருந்த இடம் தெரியாம போச்சு...”

மாணவர்கள் அமைதியாயினர். “சரி! இப்போ பாடத்திற்கு போலாமா?” – தப்பித்தோம் என்று இருந்தது விமலா விற்கு.

“மிஸ்! இன்னும் ஒரு சந்தேகம்?” ரவி.

“என்னப்பா?” -இப்போ என்ன கேக்க போறானோ? அடை மழை விட்டும் செடி மழை விடவில்லை போலிருக்கே. பசங்க ஒரு மார்கமாக தான் இருக்காங்க. இன்னிக்கி என்னை ஒரு வழி பண்ணிடுவாங்களோ?

“அது ஏன் இந்த நிலைச்சு நிக்கற மரங்களுக்கு மட்டும் இந்த காரணங்கள் ஒண்ணு சேர்ந்தது? ஏன் மற்ற மரங்களுக்கு சேரலை? அந்த விதைகள் அல்லது அந்த மரங்கள் என்ன தப்பு பண்ணின? எங்கே மிஸ் தவறு? யார் காரணம்? ”

அம்மாடி! கொல்றானே! “ரொம்ப நல்ல கேள்வி! இதுக்கு பதிலை நாளை .....” விமலா

முடிப்பதற்குள் மற்ற மாணவர்கள் கோரசாக “முடியாது! இப்பவே பதில் சொல்லுங்க”. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் போல மேஜையை தட்டினார்கள்.
“சொல்றேன்! சொல்றேன்! உன் கேள்வி மரத்திற்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் பொருந்தும். சரியா? இன்னும் சொல்லப் போனால் வாழ்விற்கு மட்டுமல்ல, அழிவிற்கும் கூட இது பொருந்தும் ”

மாணவர்கள் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தனர். என்ன கேட்டாலும், இந்த டீச்சர் கேட் போட்டுடறாங்களே! என்ன பண்ணலாம் ?

விமலா ஒரு நிமிடம் யோசித்தார். “ வாழ்வைப் போல தான் சாவும். நாட்டிலே லட்சக்கணக்கான கார்கள் ரோட்லே போகுது, வருது. ஆனால், ஏன் ஒரு சில கார்கள் மட்டும் மேஜர் விபத்துக்குள்ளாகுது? அதே போல் ரயில் விபத்துக்களும்? தினமும் ஆயிரம் விமான சேவை இருந்தாலும், ஒரு சில விமானம் மட்டும் விபத்துக்குள்ளாகி பிரயாணிகள் இறக்கிறார்களே? ஏன்னு காரணம் என்று சொல்ல முடியுமா?.”

“நீங்களே சொல்லுங்க மிஸ்!” – மாணவர்கள்

“முன்னே நான் சொன்னது தான். ஓர் பெரிய விபத்தை உண்டு பண்ண நிறைய காரணங்கள் சேர்கின்றன. உதாரணத்துக்கு கார் அல்லது பஸ் விபத்தை எடுத்துக் கொள்ளலாம். தனியாக பார்த்தால் சின்ன சின்ன விஷயங்கள். வண்டியின் பிரேக், டயர் குறைபாடு, இரவு நேரம், பனி மூட்டம், சரியாக வேலை செய்யாத சிக்னல்கள், குண்டும் குழியுமான சாலை, ஓட்டுனரின் குறைகள், மது , அதி வேகம் இவைகளில் ஒன்றோ அல்லது பலவோ காரணிகளாக இருக்க கூடும். சின்ன சின்ன பல விஷயங்கள் ஒன்று கூடி பெரிய விபத்தை ஏற்படுத்துகிறன.”

ரவி கேட்டான் “அது சரி மிஸ் ! ரூட்டை மாத்தாதீங்க ! என் கேள்விக்கென்ன பதில்? ஏன் சில மரங்கள் காலத்தை தாண்டி வாழ்கின்றன? ஏன் சில காலத்திற்கு முன்பே மடிந்து விடுகின்றன?"

விமலாவுக்கு உடனே எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

ஒரு நிமிடம் யோசித்து “இதை விதின்னு சொல்லலாம்! இறைவன்னு சொல்லலாம். இயற்கை நியதி, அதிருஷ்டம் கூட காரணமாக இருக்கலாம். நேரம்னு சொல்லலாம், ஏன் வாய்ப்புன்னும் சொல்லலாம் ”. குழப்பமாக, வானிலை அறிக்கை போல, அப்போதைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார் விமலா.

வகுப்பை விட்டு வெளியே வரும்போது விமலாவுக்கு குழப்பமாக இருந்தது.

“எவ்வளவு பெரிய கேள்வியை இவ்வளவு ஈசியா கேட்டுட்டான் ரவி? இது மரத்திற்கு மட்டுமல்ல, விலங்கினத்திற்கும், மனித வர்க்கத்திற்கும் பொருந்துமே! மரத்திற்கு வயது, மனிதனுக்கு புகழ். இதுதானே வித்தியாசம். அப்போ , அந்த பையன் ரவியின் கேள்விக்கென்ன பதில்? விடை தெரியவில்லையே.

விளங்க வில்லை விமலாவுக்கு !

“கோடானு கோடி மக்களிலே, ஒரு காந்தி, புத்தர், நியூட்டன், வள்ளுவன், என்று ஒரு சிலரே தனித்து நிலைத்து நிற்கிறார்களே, அருவமாக, மக்கள் மனதில், இது எப்படி? இதற்கு காரணம் என்ன ? இவர்கள் பிறப்பா? வளர்ந்த விதமா? அல்லது அவர்களது படிப்பா? இல்லை அவரது தளராத முயற்சியா? ஊழ்வினையா? எல்லாமேவா? வேறு என்ன? விஞ்ஞானமாக காரணம் சொல்ல முடிந்தாலும், எங்கோ உதைக்கிறதே?“

விளங்க வில்லை விமலாவுக்கு!

“சாக்கடையில் புழுவாக பிறப்பதோ, காட்டில் சிங்கமாக பவனி வருவதோ, மனிதனாக வாழ்வதோ, மனிதருள் மாணிக்கமாக இருப்பதோ, இறந்த பின்னும் புகழோடு நிலைத்து நிற்பதோ, நம் கையில் முழுவதும் இல்லையா ? அரசனாக பிறப்பதோ, ஆண்டியாக பிறப்பதோ யார் கையில்? எப்படி இறக்கப்போகிறோம் என்பதும் நம் கையில் இல்லை. ஒரே குழப்பமாக இருக்கிறதே ?”

விளங்கவில்லை விமலாவிற்கு! .


“முற்பிறவி என்பது ஒன்று உண்டா? இருந்தால், முற்பிறவியில் அல்லது இப்பிறவியில் செய்த பாவம், புண்ணியம் ஒரு காரணம் என்பதும், கூலி அதற்கேற்ப கிடைக்கும் என்பதுவும் நிஜமோ? கொடுப்பவன் யார்? இறைவனா? ஒரு வேளை மதங்கள் சொல்வது சரியோ ? ”

விளங்கவில்லை விமலாவிற்கு !

அவர் விஞ்ஞான ஆசிரியை. அதனால் இதை ஒப்புக் கொள்ள மனம் இடம் தரவில்லை. அவர் மனதில் தமிழ் வழக்கு ஒன்றும் ஓடிற்று. “ விண்டவர் கண்டதில்லை . கண்டவர் விண்டதில்லை”. ஒரு வேளை, பாவம் புண்ணியம் என்று எதுவும் இல்லையோ? நமது கற்பனைதானோ? ஆனாலும், ஏதோ இடிக்கிறதே! முரண்பட்டு தெரிகிறதே !

விளங்கவில்லை விமலாவிற்கு!


..... முற்றும்

முரளி
13-11-2012, 06:06 AM
'விளங்க வில்லை விமலாவுக்கு ' போன்ற தத்துவ விசாரணைக்கு சிறு கதைகள் பகுதியில் இடமில்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும், அன்பர்களுக்கு பிடித்திருந்தால், கொஞ்சம் நகைச்சுவை கலந்து கட்டாயம் விமலாவின் கேள்வியை, இல்லை இல்லை, விமலாவின் வேள்வியைதொடர முயலுவேன், :icon_b::icon_b:

நாஞ்சில் த.க.ஜெய்
13-11-2012, 08:38 AM
சிந்தையில் உரைக்கும் வகையில் ஓர் சிறந்ததோர் கதை ..இன்றைய நடப்பில் தன் பெயர் நிலைக்க மனிதர்கள் ஒவ்வொருவரும் தேடி ஓடும் புகழ் எனும் கருவினை கொண்டு வடித்த இச்சிறுகதை அருமை ...இவ்வுலக வாழ்வினை துறந்த அன்றைய சித்தர்கள் முனிவர்கள் போன்று பற்றற்று சிந்தித்தால் பிடிபடும் இவ்வுண்மை..வாழ்த்துக்கள் ஐயா ..இக்கதைக்கு பரிசாக இ பணம் 200 அளிக்கிறேன் ...

முரளி
13-11-2012, 09:25 AM
நாஞ்சில் அவர்களே , நெஞ்சில் பதிந்தது உங்கள் பாராட்டு. தீபாவளி பரிசுக்கு மிக்க நன்றி. உங்கள் அன்பிற்கும் ஊக்கத்திற்கும் என் வந்தனம்.

Keelai Naadaan
13-11-2012, 10:03 AM
உயிரினங்களின் ஆழ்மனதில் அரித்துக் கொண்டிருக்கும் தேடல் விமலாவுக்குள்ளும் துவங்கி விட்டது.

சிந்தனையை தூண்டும் கதை. வாழ்த்துக்கள் முரளி

jayanth
13-11-2012, 10:46 AM
விறு விறுப்பாக இருக்கின்றது...

தொடர்ச்சிக்கு காத்திருக்கின்றேன்...

முரளி
15-11-2012, 04:25 AM
நன்றி கீழை நாடான்! ஒரு கேள்வி ? பாவம் புண்ணியம் உண்டா இல்லையா ? உங்களுக்கு நம்பிக்கை உண்டா ? நீங்கள் சொல்லுங்கள், புண்ணியமாக போகும் உங்களுக்கு! :lachen001:

முரளி
15-11-2012, 04:50 AM
ஜெயந்த் அவர்களே, முத்தாய்ப்பு வைத்து விட்டேன். விமலாவின் கேள்விக்கு பதில் சொல்வதென்பது கடினம், முடியாத காரியம். நிறைய சர்ச்சைகள் உண்டு இதில். அடி முடி தெரியாத புதிர்.

கீதையிலிருந்து "மன்னனும் நானே! மக்களும் நானே! மரம் செடி கொடிகளும் நானே! ...சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்.." என்று NTR, கிருஷ்ணனாக சொன்னதை பாடி காட்டலாம். உடனே " அவனா சொன்னான் ! இருக்காது ! அப்படி எதுவும் நடக்காது! நம்ப முடியவில்லை .. இல்லை ..இல்லை " என பதில் பாட்டு வரும்.

விமலாவின் கேள்வி காலம் காலமாக கேட்ட கேள்வி. பிரபஞ்சத்தில் நடக்கும் எந்த ஒரு செயலுக்கும் விஞ்ஞான பூர்வமாக 'எப்படி" என சொல்ல,அல்லது ஓரளவு கணிக்க முடியுமே தவிர, 'ஏன்' என்று யாராலும் பதில் சொல்லமுடியுமா என தெரியவில்லை. அதனால் தானோ என்னவோ, விஞ்ஞானமும் , தத்துவமும் சில இடங்களில் ஒன்று சேர்கின்றன. டேன் ப்ரௌன் எழதிய "ஏஞ்செல்ஸ் அண்ட் டேமன்ஸ்" மற்றும் "டா வின்சி கோட்" விமலாவின் கேள்விக்கு மறைமுகமாக விள்ள முயற்சிக்கும். இர்விங் வல்லஸ் எழுதிய "தி மிரகள்" அப்படியே.

Keelai Naadaan
16-11-2012, 02:50 PM
நன்றி கீழை நாடான்! ஒரு கேள்வி ? பாவம் புண்ணியம் உண்டா இல்லையா ? உங்களுக்கு நம்பிக்கை உண்டா ? நீங்கள் சொல்லுங்கள், புண்ணியமாக போகும் உங்களுக்கு! :lachen001:

சொல்லலாம். ஆனால் முதலில் எது புண்ணியம் எது பாவம் என எனக்கு சரியாக புரிய வேண்டுமே!!! :confused:

முரளி
17-11-2012, 04:19 AM
சொல்லலாம். ஆனால் முதலில் எது புண்ணியம் எது பாவம் என எனக்கு சரியாக புரிய வேண்டுமே!!! :confused:

கீழை நாடான் அவர்களே!. எனக்கு சுமாராக கேள்வி கேட்கத்தான் தெரியுமே தவிர பதில் சொல்லத் தெரியாது.ஆயினும், உங்கள் சந்தேகத்திற்கு எனக்கு தெரிந்த வரையில் சொல்கிறேன். தவறாயிருந்தால் மன்னிக்கவும். உங்களுக்கு தெரிந்தவற்றை கூறவும். கேட்க ஆவலாக இருக்கிறேன்.

இன்னொன்று, சிறுகதை பகுதியில் ஆன்மிகம் பற்றி சொல்வது அல்லது கேட்பது சரியா என தெரியவில்லை. அனுமதி அளித்தால் இங்கே தொடருவோம். அல்லது ஆன்மீகம் பக்கத்தில், அறிஞர்களை கேள்வி கேட்போம். அவர்கள் சொல்வதை கேட்போம்:

உங்கள் சந்தேகம் : “முதலில் எது புண்ணியம் எது பாவம் என எனக்கு சரியாக புரிய வேண்டுமே!!! ”

மறு பிறப்பு , கர்ம வினை பற்றி சீக்கிய மதம், சமண மதம், அவர்களது கிரந்தங்களிலே சொல்லியிருக்கிறது.

இந்து மதமும் புத்த மதமும் கர்ம வினையை பற்றி, ஆத்மா பற்றி சொல்கிறது.பாவம் , புண்ணியம் பற்றி பேசப் பட்டிருக்கிறது.

“புனரபி ஜனனம் புனரபி மரணம்” என காலடி சங்கரர் “பஜ கோவிந்தம்” பாடலில் சொல்கிறார். ஊழ் வினை என வள்ளுவர் கூறுவதும், கர்ம வினை பற்றித்தானோ?

பாவம் மற்றும் புண்ணியம் பற்றி தெளிவாக வேதாத்திரி மகரிஷி சொன்னது :

புண்ணியம் என்பது செய்யத் தகுந்த செயல் என்றும் பாவம் என்பது செய்யத்தகாத செயல் என்றும் பொருள்படும். செயலைக் கொண்டு பாவம் என்றோ புண்ணியம் என்றோ சொல்வதற்கில்லை. செயலின் விளைவைக் கொண்டு, செயலால் விளையும் இன்பத்தையோ, துன்பத்தையோ கொண்டு ஒரு செயல் புண்ணியம் என்றும் பாவம் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.

புண்ணியம் எது? எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுக்கோ துன்பம் தராது, விழிப்போடு, துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியத்தின் பாற்படும்.

பாவம் எது? ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கேனும், பிறருக்கேனும் அன்றைக்கோ, பிற்காலத்திலோ, உடலுணர்ச்சிக்கோ, பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவிப்ப தாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதாகும்."

பாவம் என்பது இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மதத்திலும் உண்டு என படிக்கிறோம். புண்ணியம் பற்றி பேசப்படவில்லை. இரண்டு மதங்களிலுமே மறு ஜன்மம் என்பது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட வில்லை. இருப்பினும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில், விஞ்ஞான பூர்வமாக ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது.

எல்லா மதங்களும் பாவ புண்ணியங்களை பற்றி சொல்லும் முன் சொல்லும் முதல் வார்த்தை “ அன்பு செலுத்து” .

கொசுறு: புண்ணியம் என்ற வார்த்தைக்கு நேரடி ஆங்கில வார்த்தை இல்லை போலிருக்கிறது. ஆனால், பாவம் எனும் வார்த்தைக்கு " சின்" என்ற நேர் சொல் உள்ளது.

(நன்றி கூகிள்)

மேலும் விவரங்களுக்கு : மாதிரிக்கு :

Reincarnation http://en.wikipedia.org/wiki/Reincarnation

A Comparison Sin in Islam & Christianity :http://christianityinview.com/xncomparison.html


ஒன்றும் புரியவில்லை. ஆசிரியை விமலாவின் நிலைதான் எனக்கும் ....


நன்றி.

Keelai Naadaan
17-11-2012, 03:54 PM
முரளி, உங்கள் அளவிற்கு நான் பாவ புண்ணியங்களைப்பற்றி, மதங்களைப்பற்றி நான் அறிந்தவனில்லை.

சுருக்கமாக பார்த்தால் மனிதர்கள் செய்யும் நல்லது கெட்டது அவர்களை தொடருமா என்பது உங்கள் கேள்வி.

மகாபாரதத்தில் தருமம் என்பது என்ன என்பது போன்ற ஒரு கேள்வி தருமனிடம் கேட்கப்படும். அவர் சொல்லுவார் "தருமத்தின் பாதை மிகவும் சூட்சுமம் நிறைந்தது"

நான் பார்த்த வரையில் மனிதர்கள் தாங்கள் நினைக்கும் நல்லது கெட்டது என்பது கூட மிகவும் சூட்சுமம் நிறைந்தது. நேரடியாக பார்த்து அதன் பலனை அறிய முடியவில்லை.

ஆதலால் இந்த விசயத்தில் நானும் தேடல் நிலையில் தான் இருக்கிறேன்.

இந்த மாதிரி விசயத்தை மையப்படுத்தி "தேடல்" என்ற கதையை மன்றத்தில் பதிவு செய்தேன்.
அதில் ஏதாவது உங்களுடைய கேள்விக்கு சாதகமான பதில் கிடைத்தால் மகிழ்ச்சி.

(அந்த தேடல் என்ற கதையை இங்கே இணைக்க தேடி பார்த்தேன், எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் சிறுகதைகள் பகுதியில் தான் அது இருக்கிறது. ஒரிரு மாதங்களுக்கு முன்னால் பார்த்தேன். நந்தவனம் ஆடி இதழிலும் இடம் பெற்றது.)

நன்றி.

ந.க
18-11-2012, 02:50 AM
உங்கள் கதையின் மையப் புள்ளி ஏன் சில மரங்கள் நிலைத்திருக்கின்றன என்பதுதான்.

விமலாவின் பதிலில் விவேகம் இல்லை என்பதைவிட கேள்வியின் மையப் புள்ளியை அசைக்காமல் விட்டு பாவம் புண்ணியம் என்று மெய்ஞானத்துக்குள் காலைவிட்டு குழம்பியதுதான், அறிவியலை அறிவியலால் தான் அடிக்கவேண்டும், நமது டார்வின் ஐயாவைக் கூப்பிடுவோமா?


'தக்கன பிழைக்கும்' இதை நான் தொட விரும்பவில்லை..பெரிய விடயம்.


கதை நல்லாத்தானே தொடங்கியது, ஏன் நீங்கள் முடிவில் கட்டுரை வடிவிற்கு வந்தீர்கள், மன்றத்தினருக்கும் கொஞ்ச வேலை கொடுக்கலாமென்றா?


அல்லது உங்களுக்கு தெளிவு வேண்டுமெனவா?


மொத்தத்தில் கதையின் கரு மிக நன்று, கையாண்ட விதமும் நன்று, முடிவில் நீங்கள் இழுத்துவிட்டீர்கள் என்றே தோன்றுகிறது.


மாணவர்களுக்கு ஒரு சபாஷ்- புத்திசாலித்தனமான உரையாடல்..
விமலாவிற்கு வீட்டு வேலையாக டார்வினின் இயற்கைத்தேர்வுக் கொள்கை பற்றிய மேலதிக வாசிப்பு...


நல்ல கதை தந்தமைக்கு மிக நன்றி.

முரளி
18-11-2012, 03:17 AM
கண்ணப்பு அவர்களே, மிக்க நன்றி. எனது குறைகளை மிக அழகாக எடுத்துரைத்தமைக்கு. தெளிவான பின்னூட்டம்.

கீதம்
18-11-2012, 03:18 AM
முரளி, உங்கள் அளவிற்கு நான் பாவ புண்ணியங்களைப்பற்றி, மதங்களைப்பற்றி நான் அறிந்தவனில்லை.

சுருக்கமாக பார்த்தால் மனிதர்கள் செய்யும் நல்லது கெட்டது அவர்களை தொடருமா என்பது உங்கள் கேள்வி.

மகாபாரதத்தில் தருமம் என்பது என்ன என்பது போன்ற ஒரு கேள்வி தருமனிடம் கேட்கப்படும். அவர் சொல்லுவார் "தருமத்தின் பாதை மிகவும் சூட்சுமம் நிறைந்தது"

நான் பார்த்த வரையில் மனிதர்கள் தாங்கள் நினைக்கும் நல்லது கெட்டது என்பது கூட மிகவும் சூட்சுமம் நிறைந்தது. நேரடியாக பார்த்து அதன் பலனை அறிய முடியவில்லை.

ஆதலால் இந்த விசயத்தில் நானும் தேடல் நிலையில் தான் இருக்கிறேன்.

இந்த மாதிரி விசயத்தை மையப்படுத்தி "தேடல்" என்ற கதையை மன்றத்தில் பதிவு செய்தேன்.
அதில் ஏதாவது உங்களுடைய கேள்விக்கு சாதகமான பதில் கிடைத்தால் மகிழ்ச்சி.

(அந்த தேடல் என்ற கதையை இங்கே இணைக்க தேடி பார்த்தேன், எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் சிறுகதைகள் பகுதியில் தான் அது இருக்கிறது. ஒரிரு மாதங்களுக்கு முன்னால் பார்த்தேன். நந்தவனம் ஆடி இதழிலும் இடம் பெற்றது.)

நன்றி.

நண்பரே, தங்களுடைய தேடல் சிறுகதையைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டேன். :) இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php/15419-தேடல்-(சிறுகதை)?highlight=) உள்ளது.

Keelai Naadaan
18-11-2012, 10:50 AM
நண்பரே, தங்களுடைய தேடல் சிறுகதையைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டேன். :) இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php/15419-தேடல்-(சிறுகதை)?highlight=) உள்ளது.

தேடல் கதையை தேடித் தந்த சகோதரி கீதம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் :)