PDA

View Full Version : பட்டாசு அழுகிறதுஐரேனிபுரம் பால்ராசய்யா
11-11-2012, 05:25 PM
உயிரின் மூச்சுக்குழாயே
திரிதான்
அதை கிள்ளும்போது
வலிதான்…!

எல்லா பட்டாசுகளுக்கும்
ஆசையா என்ன…
வெடித்து சிதறுவதற்கு….

உயரே சென்றாலும்
எரிந்து சாம்பலாகி
கீழேதான் விழுகின்றன
ராக்கெட்டுகள்..!

ஓலைப்பட்டாசுகளின்
உடல் சிதறும் கொடூரம்
கொடும் சத்தமாய்…

பூச்செட்டிகளை
நெருப்பு நாக்குகள்
தொடும்பொழுது
சிதறுவது கனல்களல்ல
கண்ணீர் துளிகள்…!

மத்தாப்புகளுக்கு தெரியுமா என்ன
உங்கள் கண்களை
பதம் பார்க்க கூடாதென்று…
அதன் வீச்சு
உங்கள் பார்வையை
பறித்துக்கொள்கிறதே…

ஊசிப்பட்டாசின்
உயிர் திருகி
கனல் தீண்டும்பொழுது
ஒப்பாரிகளோடு
உடல் சிதறல்கள்…!


சரம் சரமாய்
சரவெடிகள்
அடுக்கப்படும்பொழுது
பேரிரைச்சலோடு
திசைச்கொன்றாய் சிதறுவது
சிதிலமாகி விடத்தானே…

வலியின் சத்தம்
வானவெளியெங்கும்
விரவிக் கிடக்கிறது
மானிடர்க்கு
வேடிக்கையாய்…

நீங்கள்
வேடிக்கைப் பார்ப்பது
வெடிச்சத்தங்களை மட்டுமல்ல
சுற்றுச்சூழல் மாசுபடுவதையும்
சேர்த்துதான்…!


மரணமுறும் மணித்துளிகளும்
அபயக்குரல்களும்
கேட்டால்தான்
உங்கள் அகம் குளிருமா…?

பட்டாசு கொழுத்தி
பட்டையைக் கிழப்பும்
பயில்வான்களே
பசியில் துடிக்கும்
அனாதை இல்லத்து குழந்தைகளின்
அழுகையை நிறுத்தினால் போதும்
உங்கள் அகம் அழகாய் குளிரும்!

ந.க
11-11-2012, 05:38 PM
.....பூச்செட்டிகளை
நெருப்பு நாக்குகள்
தொடும்பொழுது............

வலிய வரி.......

பட்டாசுக்கள் அல்ல அவை பழுதாக்கும் பசாசுக்கள்........... நன்றி........

jayanth
12-11-2012, 11:43 AM
சரியாகச் சொன்னீர்கள். கரியாக்கும் காசை உண்ண வழியில்லாதவர்களுக்கு கொடுக்கலாம்...

nellai tamilan
13-11-2012, 04:17 AM
சிந்திக்க வைக்கக்கூடிய வரிகள்....

நாஞ்சில் த.க.ஜெய்
13-11-2012, 09:28 AM
சிந்தனை துண்டும் வரிகள் இச்சிந்தனை எண்ணத்தில் தோன்றுவதுடன் முடிந்து விடுகிறது நம் மனிதருக்கு சிலரை தவிர ...மற்றுமொரு வகையில் பார்க்கையில் வயிற்று பசியாற உழைக்கும் பட்டாசு ஆலைகளில் உழைக்கும் ஏழைகளின் நிலை கண்முன் தோன்றுகிறது ,,மாற்றுவழி ஒன்றிருந்தால் இம்மக்கள் நிலை மேம்படும்...

செல்வா
15-11-2012, 02:33 AM
முதல் வாசிப்பில் என்மனதை நெருடியது இது
கவிதையின் ஆரம்பம் பட்டாசின் பார்வையில் துவங்குகிறது
ஆனால் இறுதி வரிகள் சட்டென்று அறிவுரை சொல்லி முடிகிறது.
இரண்டிற்கும் தொடர்பு அறுபட்டிருப்பதாகத் தோன்றியது.

மீண்டுமொருமுறை வாசிக்கும் போது
பட்டாசு வெடிப்பதும்
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தையும் ஒப்புநோக்கத் தோன்றியது.
ஆனால் இரண்டின் தொடர்பு அழுத்தமாக்கப் படவில்லையோ எனத் தோன்றுகிறது.

ஒரு மாறுபட்ட கோணத்தில் ஆரம்பிக்கப் பட்ட கவிதை
இறுதிப் பத்தியில் இருக்கும் நேரடி அறிவுரையால்
அதன் கனம் இழப்பதாகத் தெரிகிறது.

அருமையான மாற்றுக் கோண கவிதை
சற்று மெருகேற்றினால் மேன்மை பெறும்

தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.

கீதம்
17-11-2012, 08:29 AM
பட்டாசுகளுக்கு உணர்வும் உயிரும் அளித்து அவற்றின் வலியுணர்த்திய கவிதை அருமை. பாராட்டுகள்.

பட்டாசுகள் வாழ்விக்கும் சில குடும்பங்களின் நிலையை நினைக்கையில் பட்டாசின் வலி பெரியதாய் தெரியவில்லை என்பது உண்மை.

nandagopal.d
20-11-2012, 06:19 PM
ஒரு வித வலிகளை கவிதை மூலம் சொன்னதற்கு பாராட்டுக்கள்
வரிகள் அருமை