PDA

View Full Version : பன்மாயக் கள்வன்.



M.Jagadeesan
06-11-2012, 03:27 PM
கைப்பிடித்த நாள் முதலாய்
கண்கலங்கி நிற்கின்றேன்.
மாலையிட்ட கணவனுக்கு
மங்கை மனம் தெரியவில்லை.
வருகின்ற வருமானம்
வாடகைக்கும் உணவுக்கும்
சரியாகப் போகின்ற
சராசரி குடும்பத்தில்
குடிப்பழக்கம் வந்திட்டால்
குடிமுழுகிப் போமென்று
எடுத்துரைத்துச் சொன்னால்
எரிந்து விழுகின்றான்.
கண்டபடி ஏசுகிறான்
கைநீட்டி அடிக்கின்றான்.
பொய்கள் பேசுகிறான்
புன்மை செய்கின்றான்.
சிறுவாட்டுப் பணத்தைத்
திருடிக் குடிக்கின்றான்.
தட்டிக் கேட்டாலோ
எட்டி உதைக்கின்றான்.

ஆனால்
மாலைப் பொழுதினிலே
மறுஜென்மம் எடுக்கின்றான்
இரவு நேரத்தில்
இனிக்கப் பேசுகிறான்.
தலைவலி என்றாலோ
தைலம் தேய்க்கின்றான்.
பாலைக் காய்ச்சியே
பருகத் தருகின்றான்.
செல்லமே! என்றழைத்து
மெல்லத் தொடுகின்றான்.
கரும்பே! என்றழைத்து
கட்டி அணைக்கின்றான்.
அந்த அணைப்பினிலே
ஆசை வந்ததடீ!
பெண்மை தோற்றதடீ!
ஆண்மை வென்றதடீ !

குறள்:
=====
பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. ( கற்பியல்-1258 )

பொருள்:
========
பல பொய்களையும் பேசவல்ல கள்வனது பணிவான இனிய சொற்கள் என்னுடைய பெண்மைக் கோட்டையை உடைக்கும் படையாகும்.

கீதம்
01-12-2012, 03:25 AM
பெண்ணின் பலவீனத்தை நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறான் அந்த பன்மாயக்கள்வன். காதலோ, காமமோ காரணமாய் மனைவிக்குப் பணிவிடை செய்யும் அந்தத் தருணங்களே தான் வாழ்வதற்குப் போதுமானது என்று நினைத்துவிட்டாள் போலும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றுதானே அவளுக்கும் சிறுவயதிலிருந்தே போதிக்கப்படுகிறது. குறளுக்கேற்ற அருமையானக் கவிதையை வழங்கி, குறள் விளக்கம் தந்தமைக்கு மிகவும் நன்றி ஐயா.

M.Jagadeesan
01-12-2012, 03:41 AM
மிகவும் அருமையான விமர்சனம் தந்த கீதம் அவர்களுக்கு என் நன்றி!

govindh
02-12-2012, 09:52 AM
குறள் விளக்கக் கவி...
மிக அருமை...!

கலைவேந்தன்
02-12-2012, 12:42 PM
பகற்பொழுதில் பலவாறு ஏசியும் அகம்நோக நடந்துகொண்டும் மனம் புண்படுத்தி நின்றாலும் இரவுப்பொழுதொன்று ஏகையில் அக்கணவன் இக்கணம் எல்லாமே உனதென்பான் வக்கனையாய்ப் பேசி அவன் தக்கபடி நடந்திடுவான். அக்கள்வன் செயல்தனிலே அகம் நெகிழ அணங்கவளோ தன் நினைவு ஒழிக்கின்றாள். அவன் மனம் ஏக நடக்கின்றாள். அவள்தான் பெண். பேதையவள் நன்மனம் அறிந்து நடப்பீரே..

அழகான கவிதை ஐயா.

M.Jagadeesan
02-12-2012, 03:21 PM
கோவிந்த், கலைவேந்தன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!