PDA

View Full Version : தழுவல் .



M.Jagadeesan
04-11-2012, 03:43 PM
காற்றே! நீ !
சற்றே ஓய்வு எடுத்துக்கொள்!

காதலர் இருவர் கட்டித் தழுவுகையில்
ஏதிலார் போல எட்டிநின்று நோக்குகிறாய்!

நயத்தகு நாகரிகம் அறியாயோ நீ?
வியப்பினும் வியப்பே உன்னுடைய செய்கை!

இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்னவேலை?
அரும்பிய காதலில் ஆழ்ந்திருக்கும் எம்மை

துரும்பென்று நினைத்து பிரிக்க என்னும்
குறும்புகள் செய்வது கூடாது எச்சரிக்கை!

கூற்றமும் பிரிக்க முடியா எம்மை
காற்றே உன்னால் பிரிக்க ஒல்லுமோ?

ஆற்றல் இருந்தால் செய்துபார் உனக்கு
என்னுடைய அறைகூவல் இதுவே ஏற்றுக்கொள்!

குறள் :
======

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைப்
போழப் படாஅ முயக்கு. ( 1108 )

பொருள்:
======
காற்றும் உள்ளே புகமுடியாதபடி இருவரது தழுவலும் இருக்குமானால் அது புணர்ச்சி விரும்பும் இருவருக்கும் அளவில்லாத இன்பத்தைக் கொடுக்கும்.

நாஞ்சில் த.க.ஜெய்
05-11-2012, 05:34 PM
மாறும் நேரங்களில் உதிக்கும் சிந்தனைகள் கொண்ட இன்றைய மனிதர்க்கு தேவையான சிந்தனை கூறும் குறளிநூடான கருத்து அருமை...

கீதம்
06-11-2012, 08:41 AM
காற்றிடம் விடப்பட்ட அறைகூவல் வாசிக்கும்போதே முறுவல் தந்தது. மிகவும் அழகான கவிதையுடன் அறியாத குறளொன்றை அறியச் செய்தமைக்கும், அதன் பொருளை உணர்ந்து ரசிக்கச் செய்தமைக்கும் மிகவும் நன்றி ஐயா.