PDA

View Full Version : நான்காம் கண் - உறவுகளின் விமர்சனங்களுக்காக...



PUTHUVAI PRABA
01-11-2012, 06:44 PM
நம் மன்றம் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்ற எனது கவிதை...
பரிசைவிட உயர்வான உறவுகளின் விமர்சனங்களுக்காக...


நான்காம் கண்


எரியூட்டப்பட தயாராய்
கிடத்தப்பட்டிருக்கும்
என்னைச்சுற்றிவர-
தண்ணீர் பானையை
என் தோளில் சுமத்தி
கத்தியால் கொத்தி
முதல் கண்ணை திறந்து
சுற்றிவரச் சொல்கிறான்
ஈமச்சடங்கு செய்பவன்

என் பிடியிலிருக்கும்
வாழ்க்கைப் பானையிலிருந்து
பீச்சி அடிக்கிறது
மண்ணாசை.

இரண்டாம் சுற்றின் தொடக்கத்தில்
இன்னொரு கண்ணை திறக்கிறான்.
கொட்டி தீர்கிறது
பொன்னாசை

கடைசி சுற்றிலும்
ஒரு கண் திறந்துவிடுகிறான்
வடிந்து அடங்குகிறது
பெண்ணாசை

பின்-
பானையை போட்டுடைக்கச்சொல்கிறான்
ஓங்கி தரையில் அடிக்கிறேன்
வெறும் காற்றடைத்திருந்த பானை
சிதறி தெறிக்கிறது

அதில் ஒரு சில்
என் மேல் பட்டதும்
கலைகிறது கனவு

மெல்ல திறக்கிறது
என் நான்காம் கண்

புதுவைப்பிரபா

ஜானகி
02-11-2012, 01:21 AM
வித்தியாசமான கனவு....சிந்தனை...நான்காம் கண் திறந்ததாலோ ?
பாராட்டுக்கள் !

M.Jagadeesan
02-11-2012, 04:59 AM
முதல்பரிசு பெறத் தகுதியான கவிதைதான்! வாழ்த்துக்கள் புதுவை பிரபா.

pk_muthukumaran
02-11-2012, 05:33 AM
அற்புதமான சிந்தனை... வாக்களிக்க படிக்கும் போதே மி்கவும் பிடித்துபோயிற்று...
இதற்கு பரிசு கிடைக்கவில்லையென்றாலும் இது சிறந்த கவிதை தான்...
பரிசு கிடைத்ததால் இது மிகச்சிறந்த கவிதையாயிற்று......வாழ்த்துக்கள் அண்ணா...

PUTHUVAI PRABA
03-11-2012, 10:26 PM
பாராட்டுக்களை பரிசாய் அளித்திருக்கும் மன்றத்தின் உறவுகள் ஜானகி, ஜெகதீசன் நண்பர் முத்துக்குமரன் ஆகியோருக்கு நன்றி! நன்றி!! நன்றி !!!

ந.க
04-11-2012, 08:09 AM
நாலாம் கண் தத்துவக் கண். இந்த வரிகளின் கட்டுக்குள், கட்டைகள் அடுக்குகளில் கடைசிக் காட்சியின் கனவு விரிகிறது. நன்றி.

நாஞ்சில் த.க.ஜெய்
05-11-2012, 05:31 PM
முடிவுற்ற வாழ்க்கையின் இறுதியில் விழித்தெழும் நான்காவது கண் ...வாழ்த்துக்கள் புதுவை பிரபா அவர்களே...

கீதம்
06-11-2012, 08:48 AM
கவிதையின் துவக்க வரிகளே ஒருவித விநோதம் காட்டி நிற்கின்றன. கிடத்தப்பட்டிருப்பவனும் நானே... தண்ணீர்ப்பானையைத் தோள்களில் சுமப்பவனும் நானே... நான் என்னும் என்னை எரியூட்ட நானே சடங்குகள் செய்கிறேன்.. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போக வெற்றுப்பானையைப் போட்டுடைத்தபின் திறக்கிறது நான்காம் கண். மிகவும் அழகான சிந்தனை... வியப்போடு பாராட்டுகிறேன். முதல் பரிசு பெற்றமைக்கு சிறப்புப் பாராட்டுகள் புதுவை பிரபா.

PUTHUVAI PRABA
06-11-2012, 10:24 AM
முடிவற்ற வாழ்க்கையின் இறுதியில் விழித்தெழும் நான்காவது கண் ...வாழ்த்துக்கள் ஹெமாபாலாஜி அவர்களே...
--நாஞ்சில் த.க.ஜெய்--
அன்பு -நாஞ்சில் த.க.ஜெய் அவர்களே...
எதற்கு என்னை குழப்புறீங்க?
ஆமாம் சார்... இந்த கவிதைக்கு" ஹெமாபாலாஜி அவர்களே..."ன்னு எதுக்கு வாழ்த்தறீங்க???
:confused:

PUTHUVAI PRABA
06-11-2012, 10:32 AM
கவிதையின் துவக்க வரிகளே ஒருவித விநோதம் காட்டி நிற்கின்றன. கிடத்தப்பட்டிருப்பவனும் நானே... தண்ணீர்ப்பானையைத் தோள்களில் சுமப்பவனும் நானே... நான் என்னும் என்னை எரியூட்ட நானே சடங்குகள் செய்கிறேன்.. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போக வெற்றுப்பானையைப் போட்டுடைத்தபின் திறக்கிறது நான்காம் கண். மிகவும் அழகான சிந்தனை... வியப்போடு பாராட்டுகிறேன். முதல் பரிசு பெற்றமைக்கு சிறப்புப் பாராட்டுகள் புதுவை பிரபா.
கீதம்

உங்களது பாராட்டு வரிகள் உண்மையிலேயே எனக்கு ஒருவித உற்சாகத்தை தருகின்றது. மகிழ்கிறேன்.தங்களது அன்பான பாராட்டுகளுக்கு நன்றி!நன்றி!நன்றி!

நாஞ்சில் த.க.ஜெய்
06-11-2012, 02:35 PM
அன்பு -நாஞ்சில் த.க.ஜெய் அவர்களே...
எதற்கு என்னை குழப்புறீங்க?
ஆமாம் சார்... இந்த கவிதைக்கு" ஹெமாபாலாஜி அவர்களே..."ன்னு எதுக்கு வாழ்த்தறீங்க???
:confused:

மாற்றி விட்டேன் பெயரினை .இந்த குழப்பதிற்கு மன்னிக்க புதுவை பிரபா ...மின் தடை ஏற்பட்ட நேரத்தில் என்னால் பெயர் மாற்றத்தை கவனிக்க முடியவில்லை ..

கோபாலன்
06-11-2012, 05:01 PM
மிக நல்ல கவிதை. இதைக்காண கண்கோடி வேண்டும். :)

PUTHUVAI PRABA
07-11-2012, 10:11 AM
மாற்றி விட்டேன் பெயரினை .இந்த குழப்பதிற்கு மன்னிக்க புதுவை பிரபா ...மின் தடை ஏற்பட்ட நேரத்தில் என்னால் பெயர் மாற்றத்தை கவனிக்க முடியவில்லை ..
ஐயையோ... இதற்குப்போய் எதற்கு மன்னிப்பெல்லாம்....
பரவாயில்ல ஜெய் சார்...

PUTHUVAI PRABA
07-11-2012, 10:12 AM
மிக நல்ல கவிதை. இதைக்காண கண்கோடி வேண்டும்.

கோபாலன் அவர்களுக்கு நன்றி

sarcharan
08-11-2012, 03:54 AM
அருமையான கவிதை.

PUTHUVAI PRABA
10-11-2012, 05:32 PM
அருமையான கவிதை.
sarcharan


நன்றி நன்றி

மஞ்சுபாஷிணி
11-11-2012, 01:18 PM
மிக அற்புதமான சிந்தனைத்தோற்ற வரிகள்.....

முதல் பரிசு பெற ஏற்ற அட்டகாச வரிகள்....

நான் அதுவாய் கிடக்க.... நான் என்ற ஆன்மா உடலாய் பானையை சுமந்து நிற்க....

வாழ்க்கையில் ஒரு துளி அதிகமானாலும் விஷமாக்கக்கூடிய மண் ஆசை, பொன் ஆசை பானையில் இருந்து ஒவ்வொரு துளியாய் வெளியேற....

ஆசைகளை துறந்த துறவியாய், தூய்மையாய் உலகைவிட்டு உடலை விட்டு வெளியேறும் அந்த ஒரு நொடி எத்தனை அற்புதம்...

இதை அறியாத நாமோ இன்னமும் நிலைக்காதவை மேல் ஆசை வைத்து அதை விட்டுச்செல்லும் கடைசி நொடிகளை உணர்த்த....

பானையின் ஒவ்வொரு கண்ணாய் வெளியேற்றும் வெட்டியான் வாழ்க்கையின் எல்லா சுற்றிலும் நம்மை சுழற்றி இறுதியில் கொண்டு வந்து சேர்க்கும் இடம் இது தான் என்றும்.. சேர்த்து வைக்கும் பொன்னும், அபகரித்து வைக்கும் மண்ணும், ஒன்றுக்கும் உதவாத (மீன் செத்தா கருவாடு மனிதன் செத்தா வெறும் கூடு) உடலின் மீது பற்று வைத்து அதற்காக எல்லாவற்றையும் இழந்து பைத்தியமாய் திரியும் ஏனையோருக்கும் மிக அற்புத படிப்பினை பகிர்வாய் வெட்டியான் மூலமாய் முதல் கண்ணில் மண்ணாசையும் இரண்டாவது கண்ணில் பொன் ஆசையும் மூன்றாவது கண்ணில் பெண் ஆசையும் வடிந்து சிந்தனை உயிர்ப்பெற்றது நான்காம் கண் திறப்பதால் என்ற மிக அழகிய வரிகள் பகிர்வு கவிதைக்கும் , முதல் பரிசு பெற்றமைக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் பிரபா...

PUTHUVAI PRABA
12-11-2012, 10:28 AM
நான் அதுவாய் கிடக்க.... நான் என்ற ஆன்மா உடலாய் பானையை சுமந்து நிற்க....

வாழ்க்கையில் ஒரு துளி அதிகமானாலும் விஷமாக்கக்கூடிய மண் ஆசை, பொன் ஆசை பானையில் இருந்து ஒவ்வொரு துளியாய் வெளியேற....

ஆசைகளை துறந்த துறவியாய், தூய்மையாய் உலகைவிட்டு உடலை விட்டு வெளியேறும் அந்த ஒரு நொடி எத்தனை அற்புதம்...

இதை அறியாத நாமோ இன்னமும் நிலைக்காதவை மேல் ஆசை வைத்து அதை விட்டுச்செல்லும் கடைசி நொடிகளை உணர்த்த....

பானையின் ஒவ்வொரு கண்ணாய் வெளியேற்றும் வெட்டியான் வாழ்க்கையின் எல்லா சுற்றிலும் நம்மை சுழற்றி இறுதியில் கொண்டு வந்து சேர்க்கும் இடம் இது தான் என்றும்.. சேர்த்து வைக்கும் பொன்னும், அபகரித்து வைக்கும் மண்ணும், ஒன்றுக்கும் உதவாத (மீன் செத்தா கருவாடு மனிதன் செத்தா வெறும் கூடு) உடலின் மீது பற்று வைத்து அதற்காக எல்லாவற்றையும் இழந்து பைத்தியமாய் திரியும் ஏனையோருக்கும் மிக அற்புத படிப்பினை பகிர்வாய் வெட்டியான் மூலமாய் முதல் கண்ணில் மண்ணாசையும் இரண்டாவது கண்ணில் பொன் ஆசையும் மூன்றாவது கண்ணில் பெண் ஆசையும் வடிந்து சிந்தனை உயிர்ப்பெற்றது நான்காம் கண் திறப்பதால்

கவிதையைப்பற்றி மிக ஆழமான அற்புதமான விமர்சன வரிகளை பதிந்திருக்கிற மன்ற உறவு மஞ்சுபாஷிணி அவர்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும்

Keelai Naadaan
13-11-2012, 01:43 PM
மனதில் பதிந்த கவிதை. வாழ்த்துக்கள்

இந்த கவிதையை பார்க்கும் போதெல்லாம் மனதில் பதிவு இட தோன்றும். ஆனால் ஏதோ தடுக்கும்.

வெறுமனே மூன்றாசை மட்டும் தானா என்பது தான் மனதில் எழும் கேள்வி.

பதவி ஆசை, புகழாசை-உறவுகளின் மேல் பற்று, அதிகார ஆசை என இன்னும் நிறைய இருக்கிறதே.

ஒருவேளை அத்தனை ஆசைக்கும் பானையில் ஓட்டை போட்டால் தோளில் இருக்கும் போதே பானை உடைந்து விடும் என்று மூன்றோடு நிறுத்திக்கொண்டார்களோ நம் முன்னோர்கள்

மஞ்சுபாஷிணி
13-11-2012, 06:55 PM
அன்பு நன்றிகள் புதுவைப்ரபா....

கீழைநாடான் வரிகளை ரசித்தேன்.. உண்மையேப்பா...

ராஜா
14-11-2012, 10:17 AM
மிக எளிய ஆனால் வலிய கவிதை..

நான்காவதாகத் திறந்தது ஞானக்கண்ணாக இருக்கக்கூடும்.. அத்திறப்பின் மூலம் சுவர்க்கம் மண்ணிலேயே வாய்க்கப்பெறும்..

வெறும் வார்த்தைச் சாலங்களின் அலங்கார அணிவகுப்பு விழிகளைத்தான் விரிய வைக்கும்.., ஆத்மார்த்தமாகச் சொல்லப்படும் ஒரு நல்ல செய்தி, மனங்களை விரித்து விசாலமாக்கும்..

இக்கவிதையைத் தேர்வுசெய்த மன்றப்பெருமக்களுக்கு பாராட்டுகள்.. புதுவை ப்ரபாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

PUTHUVAI PRABA
15-11-2012, 11:03 PM
மனதில் பதிந்த கவிதை. வாழ்த்துக்கள்

இந்த கவிதையை பார்க்கும் போதெல்லாம் மனதில் பதிவு இட தோன்றும்.

கீழை நாடான்


மிக எளிய ஆனால் வலிய கவிதை..
இக்கவிதையைத் தேர்வுசெய்த மன்றப்பெருமக்களுக்கு பாராட்டுகள்.. புதுவை ப்ரபாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..
ராஜா

மதிப்பிற்குரிய கீழை நாடான் மற்றும் ராஜா அவர்களின்
அன்பான வாழ்த்துகளுக்கும் பாராட்டுதல்களுக்கும்
நன்றி நன்றி