PDA

View Full Version : யாழ்பாணத்து மாடும் சாரதியும்



ந.க
30-10-2012, 11:37 PM
யாழ்பாணத்து மாடும் சாரதியும்


வெள்ளை மாடு கடைக்கு நேர் நடுவே முன் காத்து நின்றது.

சத்திரச் சந்தியைத் தாண்டி வந்த அந்த பார ஊர்தி சடுதியாய் 'கிரீச்' சத்தத்தோடு, அந்த அரைவாசி வீதியை மறித்து நின்ற மாட்டுக்காய் நின்றது.
ஊர்தியைப் பற்றி எதுவும் சலனமில்லால் அது நின்றது- சினம் கொண்ட சாரதி மீண்டும் மீண்டுமாய் சத்தமெழுப்பினான் ..


மாடு அசைய மறுத்தது.. எதிர்ப் பக்கத்தில் இன்னொரு பார ஊர்தியிலுருந்து கொழும்புச் சரக்குகளை வேகமாய் முதுகிலேத்தி இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்த மாடு அசையவே இல்லை ..வாழைக்குலைகள் நிரம்பின இன்னொரு வாகனமும் வந்து அந்தப பக்கமாய் நெருக்கிக் கொண்டு நின்றது..

சிலர் ஓடினர் .. மூட்டை தூக்கிக் கொண்டுருந்தவர்கள் ...கடைக் காரர்கள் .

வைரவர் கோயிலுக்கு முன்னாள் ஒரு கூட்டம் சடுதியாக் கூடியது..

பொலிடோல் குடித்து அங்கே ஒருவன் தற்கொலை செய்து கொண்டான்.

இன்னமும் மாடு அசையவில்லை..

தெற்கால் பொன்னம்மா மில் வரை. கிழக்கால் (f)பாய் கடை வரை...எதிராய் கொட்டடி மோர் கடை வரை இந்தத தடையால் வாகனங்கள் நின்றன..

சாரதி வாகனத்தின் இயந்திரத்தை நிறுத்திவிட்டு மாட்டைப் பயமுறுத்தி கலைக்க ஒரு கம்பியோடு இறங்கினான்.

கலவரத்தில் இறங்கிய கடை முதலாளி இப்போதுதான் மாட்டைக் கண்டார்...அடிக்க வந்த சாரதியை தடுத்து ..மாட்டுக்கு வழக்கம் போல் வாழைப் பழத்தை வாய்க்குள் வைத்து அதன் முகத்திலுருந்து முதுகுவரை தடவிக்கொடுத்தார்..



மெல்ல அசைந்தது மாடு.



முதலாளி வைரவர் கோயிலை நோக்கி ஓடினார் ..



கொழும்புச் சாரதி பார ஊர்தியின் சாவியை திருகினான் அது உறுமிக்கொண்டு புகையைக் கக்கிக் கொண்டு இரும்புக் கம்பிகளோடு ஸ்டான்லி வீதியை நோக்கியது.



வெள்ளை மாடு..அது வீதியைக் கடந்து மெல்ல மெல்ல பெரியகடை சுண்ணாம்புக் கட்டிடத்தின் நுழை வாயிலில் நின்றது.



'அவன் கடன் தொல்லை தாங்கேலாமல் பொலிடோல் குடிச்சுப் போட்டான்..முட்டாள்.. பாவம் பிள்ளையள்' சக வியாபாரிகள் பேசிக் கொண்டு போனார்கள்.



சத்திரத்து வைரவர் கோயிலுக்கு முன்னால் நின்று, அந்த தற்கொலை செய்து கொண்ட , பொலிடோல் குடிததவனை சுற்றி நின்ற கூட்டத்தை பார்த்தது வெள்ளை மாடு, அதன் கண்ணில் கலங்கிக் கண்ணீர் வடிந்த ஈரம் தெரிந்தது..

மதி
31-10-2012, 01:52 AM
நல்ல நடையில் அசத்தலான கதை சொல்லும் திறமை. பலவிஷயங்களை மனதுள் கீறிச்சென்றது. மாட்டின் சொந்தக்காரன் செத்துக்கிடக்கிறான், மாட்டைப்பற்றித் தெரியாமல் கம்பெடுத்து அடிக்கநினைக்கும் சாரதி, மாட்டின் குணம் அறிந்த சாரதி, இறுதியில் மாட்டின் கண்களில் ஈரம்.

பல படிமங்களாகத் தோன்றுகிறது. நன்று நட்ராஜ்

நாஞ்சில் த.க.ஜெய்
31-10-2012, 03:20 AM
எழுத்து நடை சிறப்பு..அதே நேரம் இறந்தவனுக்கும் மாட்டிற்க்குமான தொடர்பு தெளிவாக விளக்க பட்டிருப்பின் இன்னும் சிறப்பு...வாழ்த்துக்கள் கண்ணப்பு அவர்களே..

arun
31-10-2012, 04:14 PM
புரிவதற்கு சற்று சிரமமாக தான் இருந்தது ! மற்றபடி கதையின் நேர்த்தி நன்றாக இருந்தது பாராட்டுக்கள்

கீதம்
01-11-2012, 01:58 AM
இரந்துண்டு வாழ்வதினும் இறப்பு மேலென்று அவன் போய்ச் சேர்ந்துவிட்டான், மானஸ்தன். தன்னால் அப்படி இயலவில்லையே என்று எண்ணிக் கலங்குகிறதோ மாடு? சம்பவங்களைத் தனித்தனியாய் காட்டி வாசகர்களையே முடிச்சிட்டு ஒரு முடிவுக்கு வரத்தூண்டும் எழுத்துநடைக்குப் பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

சிவா.ஜி
01-11-2012, 07:39 AM
மாட்டின் சொந்தக்காரந்தான் இறந்தவன் என்பதில் சற்றே தெளிவில்லை. இருப்பினும் கதை நடை அதை மறக்க வைத்துவிடுகிறது. மனித மனக்களின் ஆழ் படிமங்களை அழகாய் விளக்கும் கதை. மிக நன்று கண்ணப்பு. வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
01-11-2012, 08:18 PM
பல படிமானங்களை உள்ளடக்கி ஏதோ ஒன்றை வாசகனின் ஊகத்திற்க்கோ அல்லது விருப்பத்திற்க்கோ தேர்ந்தெடுக்கவிட்ட கதையின் கட்டமைப்பு முற்றிலும் மாறுபட்டதாகவும் ஈர்ப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கிறது..!!:)

வாழ்த்துக்கள் கண்ணப்பு.. தொடர்ந்து எழுதுங்கள்..!!:icon_b:

Priya Kaneshalingam
03-11-2012, 06:26 PM
தகவல்களுக்கு நன்றி .வாழ்த்துக்கள் கண்ணப்பு

ந.க
04-11-2012, 12:24 AM
மதி,நாஞ்சில் த.க.ஜெய்,arun,கீதம்,சிவா.ஜி ,சுகந்தப்ரீதன்,Priya Kaneshalingam எல்லோருக்கும் சிரத்தையோடு வாசித்து கருத்துரையும் ஊக்கமமும் தந்தமைக்கு மிக்க நன்றி. -சிறு- சிறு கதையில் தகவல்கள் இருப்பதாய் அறிந்து மிக மகிழ்கின்றேன், தகவல்களை வழங்கி இன்னொரு அனுபவத்தை (சூழல், வட்டாரம், கலாசாரம்)கொடுக்கும் வலிமை இருப்பதும் சிறு கதைகளுக்கு வேண்டும்.

பரவலாக இங்கே கதையில் தெளிவற்ற போக்கு இருப்பதை எல்லோர் விமர்சனத்திலுந்தும் அறிகின்றேன். வருகின்ற கதைகளில் அதை நிவர்த்தி செய்ய முயற்சிக்கின்றேன்.

பாத்திரங்கள் நாலு:

கடை முதலாளி- பசுவுக்கு வாழைப்பழம் கொடுப்பவன்
பசு - பழத்திற்காய் காத்திருக்கின்றது.

சாரதி- பொறுமையற்றவன், தூர தேசத்தவன், இந்தப் பசுவிற்கும் கடை வியாபாரிகளுக்கும் உள்ள தொடர்பு அறியாதவன்.
இறந்து கிடக்கும் மனிதன்- எந்த உறவும் பசுவுக்கும் இவனுக்கும் இல்லை, சில வேளை இவனும் பசுவுக்கு தீனி-பழம் போட்டிருக்கலாம்.

இயலுமானவரை கதையைச் சுருக்கிச் சொல்ல நினைத்தேன், எங்கள் யாழ்பாணத்தில் பசுவின் பூரண சுதந்திரம்- பல் உயிர்க்கும் பகுத்துண்ணல் அன்று பேணப் பட்டுள்ளது.
பழத்திற்காய் காத்திருக்கும் பசுவின் கருணை நெஞ்சு - வியாபாரிகளோடுள்ள உறவு சொல்ல நினைத்தேன்- ஆனால் சொல்லியவிதம் சற்று சுருக்கமானது. அடுத்த கதைகளில் திருத்திக்கொள்கின்றேன்.

மிக்க நன்றி.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
04-11-2012, 02:15 PM
கதை அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

Keelai Naadaan
08-11-2012, 01:40 PM
நல்ல வர்ணனைகள்.
அந்த இடத்தில் நிற்பது போல உணர வைத்தது.
இன்னும் கூட கதையை வளர்த்திருக்கலாம் என தோன்றியது. வாழ்த்துக்கள்.

விலங்கினங்களுக்கு ஐந்தறிவு என்பார்கள். நன்றியுணர்வும் பாசமும் இந்த ஐந்தறிவில் அடக்கமா என தெரியவில்லை.

ந.க
08-11-2012, 02:45 PM
நன்றி கீழை நாடான் அவர்களே- ஊக்கமூட்டிய வரிகளுக்கு, பழத்திற்காய் காத்து நிற்கும் பசுவை பார்த்திருக்கிறேன்-ஐந்தறிவுக்கும் அப்பாலுள்ள இந்த உணர்வை அறிவுக்குள் அடக்காமல் இருப்பதே நல்லது, பழகும் வகையில் பழகிப் பார்த்தால் மிருகம் கூட தெய்வமே.

முரளி
15-11-2012, 04:08 AM
மிருகங்களுக்கு, மாடுகளுக்கு எண்ணங்கள் உண்டு. அதை அவை வெளிபடுத்தவும் செய்யும் என்பது விஞ்ஞான பூர்வமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதை அழகாக கதை மூலமாக சொல்லியிருக்கிறீர்கள். நல்ல நடை.