PDA

View Full Version : மெய்ப் பொழுதே



ந.க
30-10-2012, 04:26 PM
மெய்ப் பொழுதே!

இரவின் மடியில்
இயற்கையின் பிடியில்
மேகம் அழும்
மழையாய பனியாய் கண்ணீராய்....

உறக்கம் பிடிக்கும்
கண்கள் கனக்கும்
வேகம் எழும்
நட்சத்திரம் பூக்கும் நேரம்
அஸ்திரமாய் தனிமை தாக்கும்...

கறுப்பு வான் அழுதால்
வெறுப்பு மேலாகிறது
எரிமலை மேல் பெய்யும் மழையா அது?

பொன்னிலவு ஓளி பெய்தால்
வேகும் நெஞ்சில் காதல் போராடுகிறது..

கனிந்து தாக்கும் அதன் பெயரென்ன?
உச்சி வெயில் போல்
உறங்கும் இரவு கொதிப்பதேன்?

சூடும் குளிருமாய் உலகம் சுழலட்டும்
சுற்றும் பூமிக்கு எரிமலை மூடி பனி எழுந்து ஏமாற்றட்டும்.

.இந்த மாற்றம் இந்த மனிதனுக்கேன்?
மனிதனுக்கேன்?

இரவின் மடியில்
இயற்கையின் விதியில்மேகம் அழும்
மழையாய பனியாய் கண்ணீராய்....

உறக்கம் பிடிக்கும் கண்கள் கனக்கும் வேகம் எழும்
ஆதியின் தாயின் மடியில் அழுதேனாம்!?

பாதியில் எல்லாம் இரவின் பிடியில் அழுகிறேன், அழுகிறேனே, அழுவேனோ?

பயிர்கள் கூட
சின்னக் கொழுந்துகளைத்
தன் தலையில்பின்னிக்கொண்டு
இரவில் காற்றில் காதல் கவிதை எழுத விழித்திருக்கிறது.

மூலிகை வாசம் மூச்சைத் தொட்டு
உயிரை உயிர்ப்பிக்க
இரவே நீ மாற்றுடையோடு வந்து
பொய் ‘ மை’ பூசிக்
குளிரைக் கொதிப்பாய்
சோதியைக் குருட்டாய்க் கற்பிக்கிறாய்.

பொய்யாப் பேசும் இரவே
பொய்ப்பொழுதே வெறும் நிழலே..

ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் அங்கெல்லாம்

என் போர்வைக்குள் மட்டும் ஏன் இந்தக் கறுப்பு மை?

ஒளியைக் கரைத்து, இருளாய்.. நிழலாய்….
பொய்ப்பொழுதே!

நிலம் படரும் புல்லும்
ஆகாயக் கொடிகளாய் மேகம் முழுவதும்,,

காடு முழுக்க ஒதுங்கிப் பிரிந்து
ஒட்டாமல் செடியும் பெரு மரமும்…
சோகம் சொல்லும்
எங்கும் உறவு போல் பிரிவு,

இரவே
நிழல் கொண்ட அந்தக் காட்டில்
நீ தான் பகலிலும்ஆட்சி செய்கிறாய்!?

பிரிவை நீ தான் பிரியாமல்
இறுக்கி எமை அழுத்துகிறாய்.
ஓய்வென்று ஓடிவரும் போது..

ஓடு..ஓடு என்று ஓயாது சத்தம் போடுகிறாய்.
இரவின் அமைதி என்று
‘ இந்த இரைச்சலுக்கு’ யார் மாயப்பெயர் சூட்டியது?

வெறும் சூன்யத்தின் பெயர் தான் அமைதியா?
நிறைவின் பூரணத்தின் சுதந்திர இன்பம்தான் அமைதியா?

இரவே மாயப்பொருளே
ஒளியைச் சுற்றிய மாயவட்டமே..

ஒளியும் பொருளும் ஓடி விளையாடும்
இல்லா வடிவம் அங்கே இருளாய் இழைக்கப்படும்,

இரவே நீ மாயைக்கு உதாரணமா?
மாய் மாலங்களெல்லாம் இங்கே மேடையேறும்…

ஒளி எங்கே?
அங்கே நீ திரியின் நடுவே தெரியும் அந்தக் கறுப்பு மையமும்

இரவு நீ தானே
மண்ணில் விழுந்து மறைந்து
இரவில் எழும்பும் விதை முனைப்பும்,

நிழலில் இரவின் கறுக்கலில்
மண்ணின் மறைவில்
விதைக்குள் வேகம்முளைக்கும் உயிரின் ஆனிவேர்
ஓ….

உற்பத்திக்கு இரவு வேண்டுமா?
அதுதான் ஒளி ஒளிந்த மாயமா?

ஒளியே என்னுள் ஒளிந்து கொள்
அந்த உயிர்ப்பு இரவைக் கொடு...

சூன்யமாய்த் தெரியும்
உயிர்ச் சூத்திரத்தின் கருவே இந்த நிழல்தான் இரவு…
முளைகொள்ள முனைப்போடுஎன்னைக் காண
அந்த நிழல் கொடு,

மெய்ப் பொழுதே இரவே வா…