PDA

View Full Version : எத்தனை பொங்கல்கள்?ந.க
30-10-2012, 04:57 PM
எத்தனை பொங்கல்கள்?

இங்கெல்லாம்..?
வெண்ணிலா விளக்கும் வெள்ளைச் சோறும்
வெய்யில் வாழ்வும் வயற்சேறும்,

இந்த இழிதுயர
வேதனை வடிக்கும் பொங்கலுக்குப் பெயர் வாழ்க்கை..

போகும் பாதையெல்லாம் பொய்யர்கள் மெய்யில்லை,
விடியும் கதிரொடு எழுந்து
வெறு மேனி வயல் நடக்கும்,
வாழ்க்கையாடா அது?

வெண்ணிலா விளக்கும் வெள்ளைச் சோறும்
வெய்யில் வாழ்வும் வயற்சேறும்,

வாழ்வே சிறையாய்க் குடும்பமோ தண்டனைக்கோடுகளாய்,
வாழ்வுப் பொங்கலே பொய்யாகிவிடுகின்ற வேளையில்
பொங்கலையெழுதும் பேனாவுக்குள்,
தீ வாழ்வைப் பொய்யரக்கப் புரட்சி மையில்லை,
விடியும் கதிர் தெரியாத உலகில்
விளக்கு வெளிச்சம் இருளைத் தின்னாது.

வெறும்
மேனிகள் சால்வைத் தலைப்பில் வேர்த்தாடி ஓடும்,
இரத்தமும் வியர்வையும் கண்ணீரும் கலந்து
விந்தும் சூலும் விளைவிக்கப் பெரும் பூமிப் பானையிலே
தாறு மாறான தத்துவங்களோடு
விகாரப்பட்ட வாழ்வின் விதிகளோடு
இப்படி அலங்கோலமாய்
இந்தப் பூகோளக் கூண்டுக்குள்ளே
உயிர்ப் பொங்கலை வடித்தது யார்?
................ இது உணர்வற்ற உயிர்ப்பொங்கல்

எங்கும்
வெறும் மனிதனின் ஏக்கப் பெரு மூச்சுக்கள்
வயலை எரிக்கும் உச்சி வெயில்
கண்ணீரைப் பொங்கும் கடன்காரக் கண்கள்..
வெயிலுக்குள் உழவர் கூட்டம்
பொங்கலுக்குள்
பயறுகளாயச்; சர்க்கரையாயப்; பாலாய்ச் சமிபட்டுப்போகும்,
உழைத்துக் களைத்து உணவின்றி
வளமோ தெருவோடு,வளமின்றி
அந்தப்பானைச்சோற்றின்
சுவையில் இருப்பதும் சுமைதானே... ................ இது கண்ணீர்ப் பொங்கல்...

சாமான்யர்கள் வாழ்வினிலே
பொங்கலுக்குத் தலைகொடுத்த
குலை தள்ளா இளம் வாழைகள் எத்தனை?
இந்தச்
சரித்திரம் சரிக்கட்டிய பொங்கலுக்குப் பெயர் என்ன?
சாமான்யர்கள் வாழ்வினிலே
கொலை கண்ட
விலையற்ற மனிதப் பெரும் உணர்வின் சாகரத்தில்
பொங்கலுக்குத் தலைகொடுத்த
குலை தள்ளா இளம் வாழைகள் எத்தனை?
இங்கே செந்நீரைப் பொங்கும் மாவீரர் தேகம் ..
..............இது குருதிப் பொங்கல்

..ஓஓஓஓ
அந்த ஓரவஞ்சப் படைப்பாளியை நான் பரிகசிக்கின்றேன்..
போதும் இந்தப் பாகுபாட்டுப் படையல்..
இதனால்
போர் முகம் கண்டு
பார் ஒரு உண்மை காண..
போரெழுதும் பூமியெல்லாம,;

இது
ஊழியென்றால்
சங்கரனுக்குப் பிணப் படையல்..
இனி அவனுக்குப் படையல்தான்..

எந்தப் பிரமன் இந்தப
சனசமுத்திரத்தப்
பொங்கலைப் படைத்தான்?
உணர்வு பொங்கும்
விந்தும் சூலும் கூடும் .............. இவை பாற் பொங்கல்கள்


இன்றென்ன புதிதாய்...

கடமையைக்
கணக்குப் போடும் பின்கதவுக்காரருக்கு
லஞ்சம்
இதுவே இங்கே
ஊழியத்தில் பெரும் பணப் படையல்.. ............... இது பணப் பொங்கல்
போதும்

போதும் இந்தப் பொங்கல்கள்
போன காலத்தில் உழவுத்தொழில் ..

ஆங்கே ஒரு சூரியன் அன்று அதற்கு மட்டும் தான் நன்றி…
இன்றோ இங்கு இருப்பது எத்தனை தொழில்கள் எத்தனை சூரியர்கள்…?

எல்லோர்க்கும் படைத்தபின் படைத்தவன் உண்பது
கண்ணீர்ப் பொங்கலையா..

மண்டலமெல்லாம். ...அண்டாக்கள்..பொங்கி வழியும்
3 ம் மண்டலத்தில் மட்டும்?
கேட்கின்றோம் ஆன்டான்டாய் இதே கேள்வியைத் தான்…

பொங்கற் பெருநாளுக்குச் சூரியக்கதிர்கள் பேரெழுதும்
ஆனால்,
போரெழுதும் பானைகள் மட்டுமே
இனிமேல்
வாசல்கள் கோலம் கண்டு வரவேற்கும்.
மங்கலமாய் நன்விளக்குகள்
நாற் திசையும் போற்றி வரும் தோரணங்கள் நின்றாடும்
தோப்புக்களில் தேன்குயில்கள் வந்திசைக்கும்,
மப்புக்கும் மாரிக்கும் கண்கொடுக்கும் கதிரவனின் கதிர்க்கரங்கள்,

பார்
பார் இங்கே
பார் முழக்க வேர் விட்ட நற்தமிழர் பொங்கற் சுவை தேடி,
தேர் தேர் எனத் தினம் தோறும் தெருவெல்லாம் கொண்டாட்டம்,

நிறைமாந்தர் இந் நிலைகண்டு
சந்திகளில் கூடுவார்
சந்நிதிகளில் ஆடுவார்,
வயல் மேட்டில் கதிராடும்,
வீட்டில் சதிராடும்,
விதியாடி வினை விளையாடி,
முதிராகும் நெல் மணிகள்,

வேற்று நிலத்திலும் வேரோடி விண்ணெட்டும்
இன்னும் முதிராத கண்மணிகள்,

சரித்திரங்கள் பொங்கும் கண்ணீரை
இன்னமும் கதிர்க்கண்கள் காணவில்லை,

தினமோடு போராடும் கூலிக்குக் கூழோ?
கூத்தாடிக்கு வேசம் போனால் மோசமே,
மேடை கலைகின்றது,
போட்டவனோ களைக்கின்றான்,
தியாகமாய்க் கருகிப்போகும்..மண்ணுக்குன் சாம்பல் உரமாய்ப் போம்.

விறகொடித்தோம்,
விலாவில் அடித்தோம்,
வினை முடித்தோம்,
தமிழர் தினையறுக்கும் கூட்டம் மட்டுமா?

வுயல் மேட்டில் வந்து போகும் கால்கள்
பகைவெட்டிப் பயிர் செய்யும்,
தமிழ்மேட்டில் இனிச் சங்கத் தழிழ் பயிராகும்,

தங்கத் தமிழர் வாழ்வெங்கும் தரமாகும்,
வள்ளுவர் கனிகொடுத்து ,
எழுந்து நிற்கும் வாழைகள் கனிகொடுத்து சாயும்,
கொழுந்து விடும் திரிகள் ஒளிதந்து கருகும்,

.................... இது முத்தமிழ்ப்பொங்கல்...

பயறைக்கொட்டிப் படியளக்கும் பரமா, உன்னைத் தான் பாமரா...
வெற்றுக் கோப்பையில் நீ பறைதட்டிப் போனால் தகுமா?

பொங்கலுக்குக் கதிர்த்தோரணங்கள் பொய்யில்லை,
போட்டகோலமெல்லாம் செந்தமிழின் எழில்,

தினமே தினங்கள்
பெரும் பொங்கற் தினங்கள் தேடி வரும்,
பொங்கல்கள் தினமாய்
கண்ணீர்; பொங்கும் வாழ்வு போகும்,

திசையறியும் கூட்டம் வரும்,
திசைகாட்டத் தேவர்கள் தேடி வருவார்கள்,

குலங்கள் கோடுகள் தான்டி வா! தாண்டி வா!
கொடுமைகள் சுட்டெரிக்க ஓடி வா!
கொடுமை வெட்டி நிலை தாண்டி,
பொங்கற் பெரிய சிரிப்பெடுத்து வா!

கொடுமை வெட்டி நிலைதாண்டி.
பொங்கற் பெரிய சிரிப்பெடுத்து வா!
பொங்கட்டும் உள்ளம் பெருமிதத்தில்.
வருமே வாழ்வும் வளமும ............. இது சமத்துவப் பொங்கல்...

கண்ணப்பு

கீதம்
18-11-2012, 04:56 AM
எத்தனைப் பொங்கல்கள்! கவி பொங்கிய அத்தனைப் பொங்கலிலும் தித்திப்பது முத்தமிழ்ப்பொங்கலும், சமத்துவப்பொங்கலும்...

பொங்கட்டும் நம் வாழ்வில் என்றென்றும் இப்பொங்கல்கள்... பாராட்டுகள்.

மஞ்சுபாஷிணி
18-11-2012, 05:50 AM
கண்ணீர்ப்பொங்கலில் ஏழ்மையின் துயரம் வரைந்து...
உணர்வற்ற உயிர்ப்பொங்கலில் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை விவரித்து....
குருதிப்பொங்கலில் மாவீரர்களின் தீரத்தை பறைச்சாற்றி....
பாற்பொங்கலில் சங்கரனுக்கு படைத்த பிணக்குவியல்களைப்பற்றி..
பணப்பொங்கலில் உள்ளோரிடமே பணம் சென்று சேர்வதின் வரிகளமைத்து...
இவை எல்லாம் போனவரை போகட்டும்.. இனி முத்தமிழ் பொங்கலைச்சமைப்போம்
என்று உறுதி எடுத்து...
சமத்துவப்பொங்கலின் பெருமைதனை எடுத்துரைக்கும் வீரியம் மிக்க அற்புத கவிதை வரிகளுக்கு என் அன்பு வாழ்த்துகள் கண்ணப்பு. ரசிக்கவைத்த மிக அருமையான கவிதை....

ந.க
18-11-2012, 08:18 AM
ragavi (http://www.tamilmantram.com/vb/member.php?u=20660), மஞ்சுபாஷிணி (http://www.tamilmantram.com/vb/member.php?u=6725),கீதம் (http://www.tamilmantram.com/vb/member.php/5419-கீதம்) கவிப் பொருளின் அங்கீகாரத்திற்கு மிக்க மகிழ்ச்சி, ஒரு பின்னோக்கிய பார்வை- இதனை நான் நினைக்கின்றேன் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பொங்கல் கவியாக பதிந்தது, ஒரு கவியரங்கக் கவிதை. உங்களின் மேலான் கருத்துக்கு மிக்க நன்றி.