PDA

View Full Version : சண்டிக் குதிரை.



M.Jagadeesan
30-10-2012, 03:53 AM
ஐந்து குதிரைகள் பூட்டிய வண்டி
சாரதி ஒருவன் ஓட்டி வந்தான்
ஐந்தில் ஒன்று தறிகெட் டோட
ஆட்டம் கண்டது வண்டியின் இயக்கம்
பாரதிர மண்ணில் வண்டியை ஓட்டிய
சாரதி அந்த சண்டிக் குதிரையை
சாட்டையில் அடித்து அடக்க எண்ண
பாட்டையை விட்டு விலகிய குதிரை
பள்ளத்தில் அந்த வண்டியைத் தள்ள
எல்லாம் நொடியில் முடிந்து போயின.
ஒற்றைக் குதிரையின் சண்டித் தனத்தால்
மற்றைய நான்கும் சாரதி தன்னொடு
மடிந்து போதல் நியாயம் தானா?
சண்டி செய்த குதிரை எதுவோ?
வண்டியை ஓட்டிய சாரதி யாரோ?

sarcharan
30-10-2012, 06:27 AM
ஒற்றுமையுணர்வை உணர்த்தும் ஒரு நல்ல கவிதை. பாராட்டுக்கள் ஐயா!

M.Jagadeesan
30-10-2012, 06:33 AM
சர்சரண் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

ந.க
30-10-2012, 07:16 AM
ஐம் பொறி வண்டி அதை
ஒரு பொறி அடிக்க அடக்க
இழுபட அதுவும் படு குழியில் இடற

சாரதி தத்துவம்
கீதையில் ஆன்மா

இங்கே என்னவோ.......
சிந்திக்கத் தூண்டும் சின்னக் கவி. நன்றி .......

கீதம்
30-10-2012, 08:07 AM
விடுகதை போலொரு கவிதை விதைத்துள்ளீர்கள். ஐவிரலென்று நினைத்தேன். அதுவாயிருக்காது என்று ஒதுக்கினேன். ஐம்புலனோ என்று அடுத்து நினைத்தேன். அட அதுவுமிருக்காது என்று நினைத்தேன். தொடர்ந்து கண்ணப்பு அவர்களின் பின்னூட்டம் கண்டு வியந்தேன்.

தங்களுடைய விளக்கம் காணும்வரைக் காத்திருக்கிறேன் யோசித்தபடியே... கவிதையின் மறைபொருள் அறியாவிடினும் கவிதை உறைபொருள் அறிந்து வியக்கிறேன். பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
30-10-2012, 09:59 AM
வண்டி= மனிதன்
ஐந்து குதிரைகள்= கண், காது, மூக்கு, வாய், உடம்பு.
சாரதி=மனம்.
காமப்பேய் பிடித்த உடம்பு என்னும் குதிரை தறிகெட்டு ஓடியது; சண்டித்தனம் செய்தது. மனம் என்னும் சாரதி அதை அடக்க முயன்று தோற்றுப் போனான். முடிவில் உடம்பு சென்ற வழியே , மற்ற புலன்களும் சென்று அழிந்தது. வண்டியும் அழிந்தது. சாரதியும் இறந்தான்.

ந.க
30-10-2012, 10:07 AM
கண், காது, மூக்கு, வாய், உடம்பு.- இவற்றை சைவ தத்துவம் சொல்லும் ஐம்பொறி என்று.
மனம் பொறியை ஓட்ட,
உடல்(மெய்) தடுமாற,
பாவப் பள்ளத்தில் விழ-
ஒற்றைக் குதிரை-
உங்கள் வார்த்தையில் சன்டித்தனம் செய்யும் அக் குதிரை எது?

ஆன்மாவின் பங்கு என்ன இங்கே?
ஆத்மாவின் ஆதியாம் பரம் பொருளின் பொறுப்பென்ன?

மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்? நன்றி

M.Jagadeesan
30-10-2012, 10:39 AM
கண், காது, மூக்கு, வாய், உடம்பு.- இவற்றை சைவ தத்துவம் சொல்லும் ஐம்பொறி என்று.
மனம் பொறியை ஓட்ட,
உடல்(மெய்) தடுமாற,
பாவப் பள்ளத்தில் விழ-
ஒற்றைக் குதிரை-
உங்கள் வார்த்தையில் சன்டித்தனம் செய்யும் அக் குதிரை எது?

ஆன்மாவின் பங்கு என்ன இங்கே?
ஆத்மாவின் ஆதியாம் பரம் பொருளின் பொறுப்பென்ன?

மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்? நன்றி

சண்டித்தனம் செய்த குதிரை உடம்புதான். இது என்னுடைய கற்பனை. ஐம்புலன்களில் எது சண்டித்தனம் செய்தாலும் அழிவு மனிதனுக்குத் தான்.

மனம்என்னும் தோணிபற்றி மதிஎன்னும் கோலைஊன்றி
சினமென்னும் சரக்கைஏற்றி செறிகடல் ஓடும்போது
மதன்என்னும் பாறைதாக்க மரியும்போது அறியவொண்ணா
உனையுன்னும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடையகோவே!

என்ற அப்பர் பெருமானின் பாடலை நினைவில் கொண்டே இக்கவிதையை எழுதினேன். ஆன்மாவின் பங்கு என்னவென்று கேட்டுள்ளீர்கள்.இப்பிறவியில் அவன்செய்த நன்மை ,தீமைகளைப் பொறுத்தே , அடுத்த பிறவியில் ஆன்மாவின் பிறப்பு அமையும். நமக்கு வருகின்ற நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாம்தான் பொறுப்பு. இதில் பரம்பொருளுக்கு என்ன வேலை? " தீதும் நன்றும் பிறர்தர வாரா!" என்பதுதானே சான்றோர் வாக்கு!

ந.க
30-10-2012, 10:50 AM
மனம்என்னும் தோணிபற்றி மதிஎன்னும் கோலைஊன்றி
சினமென்னும் சரக்கைஏற்றி செறிகடல் ஓடும்போது
மதன்என்னும் பாறைதாக்க மரியும்போது அறியவொண்ணா
உனையுன்னும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடையகோவே!

இப்பதிகத்தை மனதில் மீண்டும் ஒற்றிக்கொள்ள வைத்தமைக்கு நன்றி.........

HEMA BALAJI
31-10-2012, 07:20 AM
கவியும் அதைத் தொடர்ந்த விளக்கங்களும் அற்புதம்.. படைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்...

arun
31-10-2012, 04:35 PM
கவிதையும் விளக்கமும் நன்று ! என்ன ஒரு ஒப்பீடு .. மனம் தெளிவு பெற்றது பாராட்டுக்கள்

M.Jagadeesan
01-11-2012, 12:09 AM
கண்ணப்பு, H.B , அருண் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!