PDA

View Full Version : ஒரு கைதியின் பயணம் ( தொடர்ச்சி )



சொ.ஞானசம்பந்தன்
29-10-2012, 06:05 AM
கைதியிடம் , " இரு " எனச் சொல்லிவிட்டு தருய் அறைக்குப் போனார் .வாயிலைக் கடந்தபோது எண்ணம் மாறி ரிவால்வரை எடுத்துத் தம் பையில் திணித்தார் ; பின்பு திரும்பிப் பாராமல் அறைக்குள் நுழைந்தார் .

சோபாவில் நெடு நேரம் படுத்துக்கொண்டு வானம் கொஞ்சஞ் கொஞ்சமாய் மூடுவதையும் அமைதி நிலவுவதையும் கவனித்தார்

அவர் எழுந்தபோது வகுப்பறையிலிருந்து எந்த ஒலியும் வரவில்லை. அராபியர் ஓடியிருப்பார் , எந்த முடிவும் செய்யத் தேவை இன்றி மீண்டும் தனிமையும் தாமுமாய் இருக்கப் போகிறோம் என்ற அந்த ஒரே எண்ணம் விளைவித்த மகிழ்ச்சி அவருக்கெ வியப்பளித்தது . ஆனால் கைதி அங்கே இருந்தார் .. " வா " என்றார் தருய் . அராபியர் பின்தொடர்ந்தார் .அறையில் ஒரு நாற்காலியை ஆசிரியர் அவருக்குக் காட்டினார் . அராபியர் அமர்ந்தார் .

- பசிக்கிறதா ?

- ஆமாம் .

தருய் கேக் செய்து ஆம்லெட்டும் தயாரித்தார் . பையில் இருந்த ரிவால்வரில் கை இடித்தது . வகுப்பறை போய் மேசையின் இழுப்பறையில் வைத்துவிட்டு வந்தார் .

இரவு கவிந்தது . விளக்கு ஏறிவிட்டுப் பரிமாறினார் .

- சாப்பிடு .

- நீ ?

- உனக்குப் பின்பு சாப்பிடுவேன் .

உண்டதற்கு அப்புறம் கேட்டார் :

- நீயா நீதிபதி ?

- இல்லை ; நாளைவரை உன்னைக் காக்கிறேன் . ஏன் அவனைக் கொன்றாய் ?

- அவன் ஓடினான் ; நானும் பின்னால் ஓடினேன் . இப்போது என்னை என்ன செய்யப்போகிறார்கள் ?

- பயப்படுகிறாயா ? கழிவிரக்கம் கொள்கிறாயா ?

அராபியர் ஆசிரியரை நோக்கினார் ; அவருக்குப் புரியவில்லை என்பது வெளிப்படையாய்த் தெரிந்தது .

தருய் ஒரு மடக்குக் கட்டிலை விரித்து , " படுத்துக்கொள் . இது உன் கட்டில் " என்றார் .

- பட்டாளத்தார் நாளை வருவாரா ?

- தெரியாது .

- எங்களுடன் நீ வருகிறாயா ?

- தெரியாது ; ஏன் ?

- எங்களுடன் வா .

நள்ளிரவு ஆகியும் தருய் தூங்கவில்லை. முன்னமே கட்டிலில் படுத்துவிட்டார் . தயக்கமாய் இருந்தது : தாக்குதலுக்கு ஆளாகலாம் என உணர்ந்தார் . பின்பு தோள்களைக் குலுக்கிக்கொண்டார் . விளக்கை அணைத்தபோது இருள் உடனடியாய் இறுகினாற்போல் தோன்றிற்று .

கொஞ்ச நேரத்துக்குப் பின் அராபியர் லேசாய் அசைந்தபோது ஆசிரியர் விழித்துத்தான் இருந்தார் . கைதியின் இரண்டாம் அசைவு கண்டு எச்சரிக்கை கொண்டார் . அவர் மெதுவாய் எழுந்து சிறிதுஞ் சந்தடி செய்யாமல் கதவை நோக்கி நடந்து தாழ்ப்பாளை ஓசையின்றி நீக்கித் திறந்து வெளியேறினார் .

"நழுவுகிறான் , சங்கடம் தீர்ந்தது " என்று தருய் நினைத்தார் . சிறிது நேரத்தில் அராபியர் உள்ளே வந்து கவனமாய்க் கதவைச் சாத்திவிட்டு ஓசையின்றிப் படுத்துக்கொண்டார் . அப்போது தருய் மறுபக்கம் திரும்பி உறங்கினார் .

பின்பும் ஒரு தடவை ஆழ்ந்த தூக்கத்தினிடையே பள்ளியைச் சுற்றித் திருட்டுத்தனமான காலடி ஒலிகள் கேட்டதாய்த் தோன்றிற்று . " கனவு , கனவு " எனச் சொல்லிக்கொண்டே தூங்கினார் .

விழித்தபோது வானம் தெளிந்திருந்தது . இருவரும் ரொட்டி தின்று காப்பி பருகினர் .

ஆசிரியர் வெளியில் போனார் . நீல வானில் சூரியன் ஏறியிருந்தான் . அராபியரின் முட்டாள்தனமான குற்றம் அவருக்கு வெறுப்பூட்டியது ; ஆனால் அவரை ஒப்படைப்பது தம் கெளரவத்துக்குப் பாதகம். அராபியரைத் தம்மிடம் அனுப்பிய தம்மவரையும் கொல்லத் துணிந்த ஆனால் தப்பியோட அறியா இந்த ஆளையும் ஒரே சமயத்தில் சபித்தார் . பள்ளியுள் நுழைந்தார் . அறைக்குள் சென்று ரஸ்க் ரொட்டி , பேரீச்சை , சீனி ஆகியவற்றை ஒரு பார்சலாக்கினார் . இருவரும் வெளியேறும் முன்பு , ஆசிரியர் வகுப்பறையில் மேசைக்கெதிரில் ஒரு நொடி தயங்கி நின்றுவிட்டு வாயிலைத் தாண்டிக் கதவைப் பூட்டினார் .

" இந்தப் பக்கமாய் " என்று சொல்லிக் கிழக்கு நோக்கி நடந்தார் , கைதி பின்தொடர . ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சிறிது இளைப்பாறி மேலும் ஒரு மணி நேரம் நடந்தனர் . தருய் பார்சலை அராபியரிடம் அளித்தார் : " எடுத்துக்கொள் ; பேரீச்சை , ரொட்டி இருக்கிறது; இரண்டு நாளுக்குத் தாக்குப் பிடிக்கலாம் . இதோ ஆயிரம் பிரானும் " அராபியர் பெற்றுக்கொண்டார் .

கிழக்குத் திக்கைக் காட்டி ஆசிரியர் கூறினார் : " இதுதான் தைங்கித்துக்குப் போகிற பாதை . இரண்டு மணி நேரம் நடக்கவேண்டியிருக்கும். அங்கே அரசும் காவல்துறையும் உனக்காகக் காத்திருப்பார்கள் ."

அவரைத் தெற்கு நோக்கித் திருப்பி , " அதோ அது பீடபூமியைக் கடக்கும் அடிச்சுவடு . ஒரு நாள் நடந்தபின் நாடோடிகளைக் காண்பாய் ; அவர்கள் உன்னை வரவேற்று அவர்களின் சட்டப்படி உனக்குப் புகலிடம் அளிப்பார்கள் " என்றார் .

அராபியர் தருய் பக்கம் திரும்பினார் முகத்தில் ஒருவித பீதி படர்ந்தது . " நான் சொல்வதைக் கேள் " என்றார் .

தருய் தலையை ஆட்டி , " வேண்டாம் , ஒன்றுஞ் சொல்லாதே . இப்போது உன்னைவிட்டு நான் போகிறேன் " எனக் கூறிவிட்டுப் பள்ளியை நோக்கி இரண்டு பெரிய அடி வைத்து அசையாமல் நின்றிருந்த அராபியரைத் தயக்கத்துடன் பார்த்துவிட்டுப் புறப்பட்டார் . நீண்ட தொலைவுக்குப் பின்தான் திரும்பிப் பார்த்தார் .குன்றின்மீது யாருமில்லை ; தருய் தயங்கினார் ; திரும்பி வந்தார் . சிறைக்குப் போகுஞ் சாலையில் மெதுவாய் நடந்துகொண்டிருந்த அராபியரைக் கனத்த இதயத்துடன் கண்டார் .

பிற்பாடு பள்ளிச் சன்னலின் எதிரே நின்றபடி வானின் உச்சியிலிருந்து பீடபூமியின் முழுப் பரப்பிலும் வீழ்ந்துகொண்டிருந்த வெளிச்சத்தை மேலோட்டமாய்ப் பார்த்தார் . அவருக்குப் பின்புறம் கரும்பலகையில் , பிரஞ்சு ஆறுகளின் வளைவுகளுக்கு இடையே , திறமை குறைந்த கையொன்றால் எழுதப்பெற்றிருந்தது ஒரு சுண்ணக்கட்டி வாசகம் :

" எங்கள் சகோதரனை நீ ஒப்படைத்துவிட்டாய் ; விலை கொடுப்பாய் "

அதைச் சற்று முன்தான் தருய் வாசித்திருந்தார் .

-------------------================---------------------------



.

கீதம்
30-10-2012, 08:35 AM
இந்தப் பகுதி மனத்தை மிகவும் கனக்கச் செய்தது. கைகள் பிணைக்கப்படாத ஒரு கொலைக்கைதியுடன் தனியே ஒரு இரவைக் கழிப்பதென்பதை நினைத்தாலே திடுக்கிடுகிறது. அந்த இரவில் உறக்கம் வராத நிலையில் ஆசிரியரின் எண்ணமெல்லாம் கைதி தப்பினால் பரவாயில்லை என்பதாக இருப்பதன் காரணம் புரிகிறது. கொல்லத் தெரிந்த, ஆனால் தப்பியோட அறியாத என்ற ஆசிரியரின் வார்த்தைகளின் மூலம் கைதியின் நேர்மை மறைமுகமாய் உணர்த்தப்பட்டாலும், சிறைக்குப் போகும் சாலையில் நடந்துகொண்டிருந்த அராபியரைக் காட்சிப்படுத்தும் வரிகளில் மனம் கனக்கிறது. அவரைத் தப்புவிக்க ஆசிரியர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் அவரது தவிப்பும் மிகக் குறைந்த சொற்கள் மூலமே அருமையாய் வெளிப்படுகின்றன.

" எங்கள் சகோதரனை நீ ஒப்படைத்துவிட்டாய் ; விலை கொடுப்பாய் " இந்த வரிகளுக்கு மட்டும் பொருள் விளங்கவில்லை.

சிரத்தையுடன் மொழிபெயர்த்து வெளியிட்ட தங்கள் உழைப்புக்குப் பாராட்டு.

பாரதி
30-10-2012, 10:38 AM
இப்பகுதியில் தருயின் மனவோட்டம் நன்றாகப் புலப்படுகிறது.
ஆனால் அராபியரின் பார்வையில் என்னவாக இருக்கும் என்று புரிந்துகொள்ள இயலவில்லை.
தொடருங்கள் ஐயா. நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
31-10-2012, 05:35 AM
திறமையான விமர்சனத்துக்குப் பாராட்டு . இதற்குத் தனித் திறமை தேவை . ஆசிரியரின் மாந்த நேயம் வெளிப்படுகிறது . அராபியரை அவர் கொலைகாரனாய்ப் பார்க்காமல் ஓர் அப்பாவியாயும் ஒரு மனிதனாயும் பார்க்கிறார். தன்னிடம் அன்பாய் நடந்துகொண்ட ஆசிரியருக்கு அரசால் தண்டனை கிடைக்கக்கூடாது என்பதற்காக சிறை செல்ல முடிவு செய்த அராபியரின் நல்லெண்ணம் வியக்கவைக்கிறது .
தம் இனத்தானை ஆசிரியர் சிறையில் ஒப்படைப்பது உறுதி என நம்பிய விடுதலைப் போராட்டக்காரர்கள் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள் என்பதைக் கரும்பலகை வாசகம் காட்டுகிறது .
என்னைப் பாராட்டியதற்கு நன்றி .

சொ.ஞானசம்பந்தன்
31-10-2012, 05:39 AM
இப்பகுதியில் தருயின் மனவோட்டம் நன்றாகப் புலப்படுகிறது.
ஆனால் அராபியரின் பார்வையில் என்னவாக இருக்கும் என்று புரிந்துகொள்ள இயலவில்லை.
தொடருங்கள் ஐயா. நன்றி.

தன்னை அன்பாய் உபசரித்த ஆசிரியர்மீது அராபியர் பாசம் கொள்கிறார் . அவருக்குச் சங்கடம் தன்னால் ஏற்படக்கூடாது என்பதற்காகச் சிறை செல்கிறார் .

பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

Sami Gopu
18-05-2015, 05:37 AM
ஆசிரியர் கொலைகாரனை பள்ளி ஆசிரியர் மணிதநேயத்துடன் நடத்துகிறார்.கைதியும் மணதநேயத்தை ஆசிருயருடம் பிரதிபலிக்கிறார்.கொலை என்பது ஒரு கணநேரத்தின் பைத்தியகாரதணத்தின் விளைவுதானே.அவனும் மணிதன்தானே.