PDA

View Full Version : உயிர்முளை



ந.க
25-10-2012, 06:23 AM
உயிர்முளை
ஆக்கம் நடராஜா கண்ணப்பு

சிசு.....
மடக்கிய
கும்பிட்ட கை
உறங்கியபடி உயிர்முளை
கருவில் விழித்த குழந்தை
உயிர்முளை..

கூர்ப்பில் நான்.........

கேள்விக் குறி போல்
கூனிக் கொண்டே
தசைப் பெட்டியில்
தண்ணீர் பலத்தில்
உறைபோல் உலகில்
கரையும் காலுமாய்
மடங்கியபடி
முடிக்கிடந்து உள்ளே விழித்து...

முளையம் முளைக்கும்
அணுவில் உயிர்முளை கொள்ள
சவ்வு கவ்வி
உணர்முளை பரப்பி
செவிட்டு வாழ்வில்
செதில் மூடி
நீந்திக் கடல் குளித்து
ஓட்டில் ஊர்ந்து
புற்றில் அடங்கி
செட்டை அடித்து
குனிந்து இரை பொறுக்கி
ஓட்டுக் கூட்டில்
ஊர்ந்து ஒளிந்து
முளைக்கல்
முலைகள் முளைக்க
நாலுகாலில்

பிரசவம்
தலை கீழாய்
தரைப் பாயில்
தாயோ குருதி கக்கிக் கொண்டு,
கருப்பைச் சுவரில் கொழுவிய
தசையும் நார்களும்
பிய்த்துப் போட்ட பிண்டத் துகளாய்..
நாயும் நரியும் தூக்கிச் செல்லும்
அந்தப் பட்ட வெளியில் பிறந்தேன்,
ஆலமர விழுது ஒன்றில் ஏனை
காற்றில் அடிபட்ட துரும்பாய்
கொழுத்தும் கோடையில் தோளில்
போட்ட துண்டாய் கிடந்து நெளிந்தேன்.

இரண்டாம் பருவம்

சந்தைக் கூச்சலில்
வாயைக் கட்டிய நாயாய்
வலுவிழந்த எட்டி நின்றேன்
தெரு கால்களுக்கு விலக முடியாமல்
பள்ளிக்கூட
மூலை ஒன்றில்
மர பலகை இடுக்குகளில்
கழுத்துப் பட்டியோடு பிணைக்கப்பட்டேன்..

கொடுக்குப் பட்ட இரையாய்
துவரம் பிரம்பில்
தழும்பேறி ........
இரவும் பகலும் இரை நிரப்பி
கண்டதை கடித்துக் களிம்பேறிய பல்லோடு .....

பனை ஓலை
பாய் பதித்த
முத்திரைத் தோல்
பிஞ்சுத் தோலைப்
பாம்புத்தோலாய்
பயப் போர்வையோடு பள்ளி சென்றேன்...

புத்தகக் கட்டு தோளில் அடித்த முத்திரை
அடிமைத் தொழிலில்
அத்திவாரம்..
கணக்கு வாத்தியின்
நகம் கடித்த காதுச் சோணையில்
குருநாதரின் போதனையும்
ஓம் என்ற மந்திரமும் ......
பிரம்மக் குட்டுக்களும்
பயத்தைப் படைக்கும்
சிறைப்ப்ள்ளியில்
கைதிக்காலம் கற்கும்காலம்
தப்புக் கணக்கை வைப்புச் செய்தே ..

சண்டித்தனம் செய்யும்
குண்டனைச் சமாளிக்க
நட்புச்
சங்கீதம்
இதயச் சுரப்பியில் ஊற
பொட்டலமாய்
சட்டைப்பையில் இனிப்புச் சரை..

மெல்லிய முகங்கள்
சொல்லும் புன்னகை
பள்ளிகளில் பாடமாகும்
கல்லும் முள்ளும்
விதைத்த
வீதிகள் கடந்த
புழுதிப் பாதங்களில்
கெந்திப் பிடிக்கும்
இடைவேளை இராகங்கள்
சின்ன பாட்டில் இசைக்க
பசித்த மனம் படிக்கும்
சுகங்கள் கேட்க நிறைய
சிரித்துச் சிரித்துச்
சத்தம் செய்து
கரையும் காலத்தைச்
சுத்தம் செய்தேன்..

மூன்றாம் பருவம்

சரசுவதி கைகள்
கன்னம் அனணத்து முகத்தை ஏந்த
தாமரை தூக்கியது
தளிர் கொழுந்து வருடியது
அன்பு போதிக்க
சின்னவர்கள் உலகம் சிரித்தது

தேவதை பாதம் பள்ளி மணலில்
வளவும் பாதை வளைவும்
சுண்ணாம்புச் சுவர் பாசியும்
தமிழைத் தந்தன
நெஞ்சம் நெகிழ நெட்டுருச் செய்த
மலைக் குறத்தி பாடல்
மந்தியும் தேனும்
கோதிக் கிடக்கும் பலாவும்..

கெந்திய மனத்தைக்
கொம்பைக் கடந்து தாவும்
குரங்காய் பாய்ந்து பாய்ந்து
உண்ணத்
தமிழைத் தந்தாள் ..

மழலை பேசிய மூச்சில்
இலக்கியப் பேராறு
இரண்டாம் வகுப்பில்
மர வாங்கு புதையும்
மணல் மேடையில்
அந்தக் குச்சுக் கல்விக்கூடம்
கோடை மறந்து கொடும் பசிதுறந்து..

குதித்தன குழந்தைகள்
ஒல்லிக் கால்கள்
அன்பு ஓடை நோக்கி ஓடின
சளி சிந்தும் மூக்கில்
கொசு விரட்டி
தமிழ் கொலு ஏற்றிய
அந்தப் புனித தாய்
புகட்டிய தமிழ்
பூட்டிய நட்புச் சங்கிலி
புரிந்தன நண்பர்களின் மொழிகள்
அன்பு வேதமானதனால்
அக்னி ஆகின வெறும் பூச்சிகளும்....
பூசிக்கும் தமிழ் தந்த தாயே
விரண்ட எம்மை
துயர் விரட்டி விண் எட்ட வைத்தாய்,
பாலகர் பருவத்தின் பள்ளி வந்த சரசுவதியே
எல்லா நாளும் எமக்கு விஜயதசமி....
தாயே எம் கை விரல் பிடித்து
அகரம் வளைத்தாய்
உலகம் வளையம்
அது உன் வலயம்..

சுத்தமானவளே
கண்ணில் கருணை ஈரம் எடுத்தவளே
உன்னில் கற்றேன் உலகை உற்றேன்.....
தொடரும்....... ...............

ஆதி
25-10-2012, 07:58 AM
நல்ல ஆரம்பம் கண்ணப்பு அவர்களே, தொடருங்கள் தொடர்ந்து வருகிறோம், விரிவாக பின்னூட்டம் இதே பதிவை எடிடிட் செய்து திருத்தி விடுகிறேன்

ந.க
25-10-2012, 08:05 AM
நன்றியோடு -
காத்திருக்கும் தமிழில் கண்ணப்பி
சேர்ந்திருக்கும் எம் உறவில்
பழம் தரும்
பலம் கொள்
அன்புக் கொடிகள் முளைக்கட்டும்..

நாஞ்சில் த.க.ஜெய்
25-10-2012, 08:25 AM
அழகான ஆரம்பம் உள்ளுக்குள் விழித்திருக்கும் மனதின் கூர்ப்பில் இந்த உயிமுனையின் தமிழெனும் உணர்வுகளின் துடிப்பு ..தொடரங்கள் கண்ணப்பு...

ந.க
25-10-2012, 08:41 AM
நன்றி, ஆதி, த.க. ஜெய் அவர்களே.......

அனுராகவன்
25-10-2012, 08:53 AM
நல்ல கவி..
தொடருங்கள்..

கீதம்
25-10-2012, 09:32 AM
அழகான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட கவிதையின் உணர்வோட்டத்தை ரசித்து மகிழ்கிறேன்.

வித்திலிருந்து எழுந்த விருட்சமது, முளைவிட்டக் காலத்தைப் பின்னோக்கிப் பார்த்து முகமலர, அகமலர எழுதுகிறது ஒரு தொடர்கவிதை.

கொளுத்தும் வெயிலில் விழுதிலாடிய ஏணையும், மரப்பலகை இடுக்குகளில் கழுத்துப்பட்டியோடு பிணைக்கப்பட்ட காலமும் மனம் வருத்துகின்றன.

முளைவிட்ட உயிரதன் வளர்ச்சி மூன்றாம் பருவத்தில் தளிர்விட்டுத் துளிர்த்த அழகு மனம் வசீகரிக்கிறது.

சளிதுடைத்து கொசுவிரட்டிய அந்த புனிதத்தாய்க்கு வந்தனம். குற்றாலக்குறவஞ்சியை நினைவுறுத்திய காலத்துக்கும் வந்தனம்.

இனிய துவக்கம். தொடரட்டும் உயிர்முளையின் கவி விருட்சம். பாராட்டுகள்.

ந.க
25-10-2012, 10:08 AM
உற்சாகம் ஊட்டிய உன்னத வரிகளின் உத்தம நெஞ்சங்களுக்கு- அச்சசலா, கீதம் அவர்களுக்கு நன்றி........

jayanth
25-10-2012, 11:37 AM
என் கண்ணப்பு... உங்கள் கவிதை என் மனதில் அப்பிக் கொண்டதப்பு...!!!


பாராட்டுக்கள் நண்பரே...!!

HEMA BALAJI
25-10-2012, 12:06 PM
ஆரம்பமே வித்தியாசமான அதிர்வுகளுடன்.... வாழ்த்துக்கள் சகோ.

ந.க
25-10-2012, 06:41 PM
ஜெயந்த், ஹேமா அவர்களின் உற்சாக வரிகளுக்கு நன்றி.......

கோபாலன்
25-10-2012, 07:30 PM
கவிதை நன்றாக இருந்தது. மென்மேலும் தொடருங்கள்.:)

ஜானகி
26-10-2012, 04:31 AM
உயிரோட்டமான மன ஓட்டம்.....வாழ்த்துக்கள் !

முளைத்த முளை செழித்து வளர்ந்து ஓங்கட்டும் !

கவி மலர்களால் மன்றம் மணக்கட்டும் !

ந.க
26-10-2012, 06:20 AM
உளமார்ந்த பாராட்டுக்காய் மகிழ்ச்சி ஜானகி அவர்களே.

சுகந்தப்ரீதன்
26-10-2012, 07:41 PM
கலக்கல் கண்ணப்பு...!!:icon_b:

அருவியை போன்ற எழுத்துநடை... எம்மை சுழல்போல் கவியின் சூழலுக்குள் இழுத்துச் செல்கிறது..!!

ரசித்தேன்.. ருசித்தேன்.. தொடருங்கள் கண்ணா..!!:)

ந.க
26-10-2012, 08:14 PM
சுகந்தப்ரீதன் அவர்களே
சுழலை -
கவிச் சூழலை
நயமிக்க சொல்லடுக்கில் தந்த வரவேற்பைக் கண்டேன்.
மிக்க மகிழ்ச்சி, தொடர்வோம் ........
நன்றியோடு

ந.க
28-10-2012, 09:05 AM
பருவம் 4


தமிழரங்கம்
விளை விளையாட்டில் விளைதல்...

சூலத்தோடும்
வாளோடும்
தெய்வங்கள்
புளியின்
வேம்பின் அடி வேரை ஆக்கிரமிக்க
அப்பனும் ஆச்சியும்
பேயை ஆட்டி
சூன்யத்தை செய்து
எங்கள் பாதங்களை
பயப்பாம்பில் ஊரவைத்தார்கள்
நாவலில் முனியை ஆடவிட்டு
வேதமாம் வேப்பை
வேர் வேற்றுமையோடு
எம்மில் ஊன்றி பேயாய் பேதம் செய்த பெரியோரே ..
அந்தப் பள்ளி
எங்கள் வாங்குகளைச் சுத்தம் செய்த
சூத்தைப் பல்லன்
விரல் சூப்பி
செந்தாமரைக் கண்ணனுமல்லவா
குடிசையிலுருந்து கோயில் கோபுரத்தைச் சுமந்து வந்தார்கள்..
அந்தப் பள்ளி
இரவில் கொடுமைச் சங்கிலிப் பிணைப்பை
அறுத்து
பகலில் ஐந்தாம் வகுப்பு
அஞ்சாமையை நட்பில் நட்டது..
கனவில் காணும் சிரிப்பு முகங்கள்
உங்கள் பேயை ஓட்டிய
பேரானந்தப் பெருவெளிச்சங்கள்..

அரங்க மேடையில்
விலங்கை அறுத்து
சிலம்பை காலில் பூட்டிய பாலர்
தமிழ்க் கூத்தை நாவில் அரங்கேற்ற
குறள் குரல் கொடுத்தது
நாங்கள் பாணர்கள் ஆனோம்..
பகுத்துண்டோம்
வேற்றுமை உருபைக் கூட இலக்கணத்தில் இணைக்க மறுத்தோம்.
ஒன்றாய் கொழுந்தாய்
நட்பில் சூறாவளியாச்
சுற்றிஎழுந்து ஒன்றாய் அரங்கேறினோம்....
அந்த வீட்டின்
கூட்டுப் புழு கூடுடைத்தது
அது
பயங்காட்டியகூண்டு
நிழலைப் பேய் என்றார்
எம் இரவுக் குளிரைத் தென்றலை
எம்மைத் தொட
எம்மை எம் நிழலைப் பேயாக்கி
சிறை வைத்து பயத்தில் சிக்காடவைத்து
ஆம்
அது சின்ன மனதைச் சித்திரவதை செய்த
பயங்காட்டிய பழமைக் கூண்டு அது..
அந்தக் கூட்டுப் புழுவொன்று
கனவிலும் நட்பு முகங்களை கண்டு பறக்க செட்டை கட்டியது
குரும்பைகளில்
ஈர்க்குகள் கொழுவி கட்டிய தேரில்
மண் பிள்ளையாரை இழுக்க,


வெறுத்த
வேற்றுமைச் சாமிகள் நாமல்ல என்று
பரிசுத்த பரம் பொருள் நாமென்று
வெளியேறின
எல்லாக் கோயில்களும் வெறும் மனிதர்
கூடுமிடம்
இது கும்பிடுஇடம்மன்று என்று
வெளியேறின ..
அடுத்த மனிதனை அசிங்கமாக்கி உள்ளே வெளியே என பக்தர் கூட்டத்தை பிரித்துப்
பகிடி பண்ண ,
அர்ச்சனை செய்யும் பூஜை பலிகளை
வெறுத்தோடி
வெளியேறின
வெறியேறிய மனிதன் சிற்பங்களில் நாமில்லை
நாமிருப்பதேல்லாம்
நட்புநாடும் இளம் தளிர் செல்வங்களின் மனமே என்று...
வெளியேறின
புராணங்களை ஒப்புவிக்கும்
புழுகர்களின் தீட்டுக்குப் பயந்து புழுதி படிய
எம்மோடு எல்லாச் சாமியும்
இழுபட்டன
இழுத்தன,
எம்மோடு பிரதிட்டை செய்தன..
சித்திரத் தேர்களும்
பல்லக்கும் சுமக்கும்
சாமிகள்
கல் நிலையிலுருந்து
கைதொடு நிலைக்கு எம் தெருத் தேடி வந்தன
எங்கள் வக்கனைகளை வந்தனமாய் ஏற்றன......
படைத்த சாமியைப் படைத்த பருவம் அது
மூலஸ்தான மூர்த்தியை களிமன்னாக்கி
எம்மை தொட வைத்த காலம் அது
சாமி சாமி என்று ஏதோ சுமந்தார் அவர்கள்

'பிள்ளைகளைப் போல் மாறுங்கள்'
அந்தச் சாமியோ எம்மைச் சுமந்தது..
கோடிச் சூரியனை ஒத்தவர் சுமக்க சிரித்தோம்
உள்ளே சாமி
வெளியே சாமி
காற்றைப்போல்
ஆகாயம் போல்

தீட்டும் துடக்கும்
சொல்லி பழுதில்லா மனிதனை
சா கடைஎன்று
கட்டிய சாமியை
அன்பில் நெகிழ்த்து
நாம் கட்டவிழ்த்து விட்டோம்
கண் கொண்டனர் சாமிகள்...

பருவம் ஐந்து ...

தமிழரங்கம்
வினையாட்டு...


ஈர விறகு இரங்காத அடுப்பு
வெந்தது பாதி வேகாத பாதி
அப்பத்தை அரிசியை
வேகமாய்ப் போட்டு
பூவரசம் கம்பு
வில்லும் அம்பும்
விடுமுறையில் வேட்டை ஆடும்,

கோபத்தை
ஏக்கத்தை
முகத்தில் கீறும் பாவங்கள்
பாலகப் பருவத்தில்
பகிடிகள் இடையே புனையப்
பழகிக் கொண்டோம்,
குரங்கைப் போல் நெளித்து
யானை போல் தும்பிக்கை சுழித்து
ஒழுங்கை
மேடையெங்கும் அரங்கம் பயின்றோம்..

உணர்வில் சோதியன்
உயிரின் முளையாய்...
படைப்புப் பொருட்கள்
படைப்புச் சக்தியென்று
படைக்க வந்தான் கூத்தன்
கொண்டான் குடியாய் ,

அரங்கப் பொருளின் கருவானோம்
மீள் படைப்பின் கருவனோம்..
தொடரும்.........