PDA

View Full Version : கோலம்...?



செல்வா
25-10-2012, 03:23 AM
வளைத்தும் நெளித்தும்
வரையப்பட வேண்டிய கோடுகளுக்கு
ஆதாரமாய் இடப்பட்ட பல புள்ளிகளுக்கிடையே
அகப்பட்ட இரு புள்ளிகள் அவை

தற்செயலோ அல்லது திட்டமிட்ட விதியின் சதியோ
அருகருகே மாட்டிக் கொண்ட இரு புள்ளிகளும் தயங்கி பின்
தம் தம் நிழல்களைப் பகிரத் துவங்கின

புள்ளிகளின் நிழல்கள் தமக்குள் அமைத்துக்கொண்ட
வளையத்திற்குள்ளே நின்று கொண்டு
சிரித்தும் இரசித்தும்
பட்டும் படாமலும்
விளையாடத் துவங்கின.

இழுத்து வரையப்பட்ட இருவேறு கோடுகள்
இரண்டு புள்ளிகளையும் ஆக்கிரமித்துக் கொள்ள

விளையாடிக் கொண்டிருந்த நிழல்கள்
கோடுகளுக்குள் அடைக்கப்பட்ட
புள்ளிகளின் ஆழத்தில் புதைந்து போயின

புள்ளிகளையும் அவற்றின் நிழல்களையும்
இழுத்தபடியே கோடுகள் குறுக்கும் நெடுக்கும்
நீண்டு கிடந்தன

கோடுகளை மட்டும்
பார்த்த கூட்டத்தின்
கண்களுக்கு கோலங்கள் அழகாகவேத் தெரிந்தது

மறைக்கப்பட்ட புள்ளிகளும்
முழுங்கப்பட்ட நிழல்களும்
மௌனசாட்சிகளாய் …!

ஜானகி
25-10-2012, 05:49 AM
நம் ஒவ்வொருவர் உள்ளும் மறைந்து கிடக்கும் ஆத்மாவும் பரமாத்மாவும் தான் அந்தப் புள்ளிகளோ ?
மாறுபட்ட சிந்தனை !

தாமரை
25-10-2012, 06:16 AM
தம்பிக்கு இவ்வளவு ஞானம் வந்தாச்சா?


புள்ளிகளாகவே கிடக்கும் வரை மதிப்பில்லை. கோடுகளால் இணைக்கப்பட்ட பின் தான்.. "மதி"ப்பு...

HEMA BALAJI
25-10-2012, 12:09 PM
ஆ!!!!.....பாலைவனத்தில் இருந்துகொண்டு நீங்கள் எழுதிய கோலம் அமர்க்களம். வாழ்த்துக்கள்.

ந.க
28-10-2012, 10:19 AM
புள்ளி,
நிழல்,

கோடு-

தொடக்கப் புள்ளி
முற்றுப் புள்ளி

அமாவசை நிழல்

கோடு புள்ளிகளின் சேர்க்கை
நிழலுக்கு நிச்சயமாய் இடமில்லை

புள்ளிகள் கோடாய் விரிவதால்
நிழலான புள்ளிகள் நிச்சயமாகின்றன
நிரந்தரமாகின்ற உருவமாகின்றன .

இங்கே
அருவ,
உருவ,
அரு-உருவதத் தத்துவம்
பார்க்க
முடிச்சுப் போட முடிகின்றது..

நிழல் மறைக்கப்பட்ட தரையாய் இருக்கக் கூடுமோ?
விளக்கத்திற்கு விண்ணபித்து. நன்றி.

நாகரா
28-10-2012, 01:15 PM
ஆன்மப் புள்ளிகளின் உள்ளே
ஒளிந்த இறையுண்மை
ஒளிக் கோடுகளாய்ப் பகிரங்கமாக
மருண்மயக்க நிழல் கரைய
உருவாகும் நவக்கோலம்
அருண்மய ஞாலம்

உம் கவிக் கோலம் அருமை, வாழ்த்துக்கள் செல்வா.

கீதம்
29-10-2012, 10:05 PM
கவிதை புரிந்தும் கருத்து புரியாமல் தெளிவற்றிருந்தேன். பின்னூட்டங்கள் அந்த கவலை போக்கின. அழகான கவிதை. அழகான கோலம். பாராட்டுகள் செல்வா.

நாஞ்சில் த.க.ஜெய்
30-10-2012, 02:24 AM
புள்ளிகளினூடே வார்த்தைகளில் புதியதோர் கோலம்..இன்றைய மனிததின் உணர்வுகளையும் இவ்விரு புள்ளிகளில் உணர முடிகிறது திறமையற்ற மனிதர்கள் புள்ளிகளாக மறைந்துவிட வளைவுகளும் கோடுகளுமான வடிவினை கொடுக்கும் மனிதர் மரியாதை குறியவராக...மற்றொரு கோணத்தில் பார்த்தால் புள்ளி கோலஙகளில் இடப்படும் புள்ளிகளில் நிழல் எப்படி தோன்றும் அப்படியே இருந்தாலும் கோடுகளும் வளைவுகளும் இல்லையென்றால் புள்ளிகள் அலங்கோலம் தான்..அழகான கற்பனை கவிதை பாராட்டுக்கள் செல்வா அவர்களே...