PDA

View Full Version : இன்று நான் அழுகின்றேன்...கலைவேந்தன்
22-10-2012, 02:43 PM
http://2.bp.blogspot.com/-XVrMoh1-Adg/UIWLaC1nOwI/AAAAAAAAAY4/XlLbIc_whaM/s400/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..jpg

இன்று நான் அழுகின்றேன்...


அன்று எனது முலைகள்
வலிக்க வலிக்கத்தானே
உனது பசியைப் போக்கினேன்..?

உனது வாசம் என்னைத்திளைக்க
அந்த வாசத்தில் என்னைத் தொலைக்க
எனது நேசம் உன்னை வளைக்க
என்னைத் தொலைத்துத் தானே
உன்னை நான் வளர்த்தேன்..?

கணவன் இழந்தவளுக்கு
காமுகர்கள் இடும் பட்டம்..?
காசுகேட்கா வேசியவள்..

அவர்களின் காமக்கணைகள்
அத்தனையும் முறித்தேன்..

உனது சோகமுகங்கள்
கண்டால் மட்டும் வெறித்தேன்..

என்னை அடகுவைத்து உன்னை மீட்டேன்..
என்னை விறகாக்கி உன் குளிர் போக்கினேன்..

அன்று நீ ஆய் போனாய்..
அருவெருப்பின்றிக் கழுவினேன்..

இன்று எனக்கு இல்லாய்ப் போனாய்
இதயமே வற்றிப்போனேன்..

எங்கிருந்தாலும் மகனே நீ..
என்னாளும் நன்கு வாழ்வாய்..
என் வயிறு எரியவில்லை..
உன் குலம் தழைத்து ஓங்கும்..

உன் வாரிசு உனக்கு நாளை
என் நிலைதந்தால் மகனே
நீபடும் வேதனை உணர்ந்தேன்..
இன்று நான் அதற்காய் அழுகின்றேன்..!

HEMA BALAJI
22-10-2012, 04:09 PM
ஏன்ணா இப்படி அழ வைக்கிறீங்க. படத்தையும் வரியையும் பார்த்து மனசு கலங்கிருச்சு.

இனியவள்
22-10-2012, 04:52 PM
கவியில் கருத்தரித்த
கரு என்னை
கண் கலங்க
வைத்தது கலைவேந்தன் அவர்களே..!

அன்னை அன்பிற்கு
விலைமதிப்பென்பதே
கிடையாது - அதனை
குப்பையென மிதித்து
அதன்மீது நடப்பவர்கள்
பிற்காலத்தில் குப்பையாகி
போவார்கள்...!

கும்பகோணத்துப்பிள்ளை
22-10-2012, 07:44 PM
என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
எனக்கு வார்தைகள் ஸதம்பித்துபோயின!
என் கண்ணீர்பூக்களை
இந்த கவிதைக்கு காணிக்கையாக்குகிறேன்!

M.Jagadeesan
23-10-2012, 04:50 AM
ஆய் எடுத்த தியாகத்தின் திருஉருவம்
பாய் இன்றிப் படுத்த நிலைகண்டு
வாய் விட்டு அழுகிறேன் கலைவேந்தே!
தாய் ஒன்றே கடவுளுக்குச் சமமாகும்!

கலைவேந்தன்
23-10-2012, 03:31 PM
எனது மனதுக்கு மிகவும் பிடித்த இந்த கவிதையையும் என்னை மிகவும் அசைத்துவிட்ட அந்த படத்தையும் பாராட்டி வாழ்த்தி சோகமடைந்து பின்னூட்டமிட்ட ஹேமாபாலாஜி இனியவள் கும்பகோணத்துப் பிள்ளை மற்றும் ஜகதீசன் ஐயா அனைவருக்கும் எட்டிப்பார்த்து பார்வையிட்டு மனதுக்குள் வாழ்த்தி மகிழ்ந்த ஆளுங்க அருணுக்கும் சர்சரணுக்கும் மற்றும் இரு மறைநிகர் மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கீதம்
24-10-2012, 05:08 AM
சேயின் மனம் காட்டும் காட்சியும் தாயின் மனம் காட்டும் கவிதையும் கலங்கடிக்கின்றன.
இதயத்தைப் பிடுங்கி எடுத்துச் செல்லும்போதும் மகன் இடறக்கண்டு பொறுக்காத தாயுள்ளம், நாளை தன்னைப்போல் தன்பிள்ளை தெருவுக்கு வந்துவிடக்கூடாதே என்று கலங்குவதில் வியப்பென்ன? வறண்டு கிடக்கும் வாழ்க்கையிலும் நெஞ்சுக்குள்தான் எத்தனை ஈரம் இன்னும் உலராமல்!

செல்வா
25-10-2012, 03:17 AM
வலியில் வந்த
வலியைத் தந்த கவிதை

கோபாலன்
27-10-2012, 05:51 PM
கடைசி வரை தன்னலம் பாராது, பிள்ளைகளுக்காகவே வாழும் தாயின் உள்ளம். தாய்க்கு ஈடு இணை எதுமே இல்லை. கவிதை மிக அருமை. :)

ந.க
28-10-2012, 09:33 AM
தாய்மையின் தூய்மை வலியிலும் வாழ்த்தும் நெஞ்சு...நெஞ்சை நெகிழத் தொட்டன வரிகள்....நன்றி.........

கலைவேந்தன்
31-10-2012, 04:04 AM
கவிதையை வாசித்து பாராட்டிய நண்பர்கள் கீதம் செல்வா கோபாலன் கண்ணப்பு ஆகியோருக்கும் பார்வையிட்டுச் சென்ற சிலருக்கும் என் நன்றிகள்.

அனுராகவன்
31-10-2012, 05:15 AM
அழுகையே அடக்க முடியல..

கலைவேந்தன்
26-01-2013, 06:25 AM
மிக்க நன்றி அச்சலா. நலம் தானே..?