PDA

View Full Version : யுத்தம்...HEMA BALAJI
18-10-2012, 07:31 AM
http://1.bp.blogspot.com/-cohy82Z6D5M/UH7YsstfJEI/AAAAAAAAA9A/l9z_LNEMfo8/s400/Sl.jpg

அறை எங்கும் சிதறிக் கிடந்தன
நாம் ஒருவரை ஒருவர்
பேச்சுக்களால் குதறிக் கொட்டிய
வார்த்தைகள்..

அவற்றின் ஒவ்வொறு அங்கமும் கீறப்பட்டு
ரத்தம் உறைந்தும் உறையாமலும்
விடைத்துக் கொண்டிருந்தன...

இனி வெட்டுவதற்கோ சிந்துவதற்கோ
வார்த்தைகள் இல்லாது
தீர்ந்திருந்த போழ்தில்...

உதட்டில் ஒரு சிகரெட்டைப்
பொருத்திக் கொண்டு
தலையை உதறி வெளியில் சென்றாய் நீ...

துடைப்பமும் முறமும் கொண்டு
அள்ள ஆரம்பித்திருந்தேன் நான்...

நிசப்தமான நம் அறை
அடுத்த யுத்தத்தைப்
பேசிக் கொண்டிருந்தது
நான்கு சுவர்களுடன் மௌனமாக...

கீதம்
18-10-2012, 08:44 AM
மிகவும் பரிதவிப்பை உண்டாக்கும் கணங்களின் அழுத்தத்தை அப்படியே பதிவு செய்திருக்கும் வரிகள். இரண்டாவது பத்தியை வாசிக்கும்போதே நிலைமையின் கோரம், உடலை சிலிர்க்க வைக்கிறது. இத்தனைக்குப் பின்னும் கூட்டியள்ளிக் கொட்ட துடைப்பமும் முறமும் தேடும் கைகள்! சற்றே ஆச்சர்யம் அளித்தாலும் யதார்த்தம் உணர்த்துகிறது. மனம் தொட்ட கவிதை. பாராட்டுகள் ஹேமா.

இதே போன்றதொரு ஒத்த அலைவரிசையில் நானும் முன்பு ஒன்று எழுதிய ஞாபகம். மன்றத்தில் எங்கோ இருக்கலாம்.

veruppuvijay
18-10-2012, 11:37 AM
முதல் பத்தியிலேயே இது ஒரு தேர்ந்த கவிதை என்று
சிறந்த படிமத்தின் மூலம் கவிதைக்கான நாவாய் திறந்துவிடுகிறது. கவிதை மொழித்தளம் கையாளுமிடத்தில் சிறப்பான வெளிப்பாடு. செயலைப் பற்றி பேசுவதை விடவும் செயலால் விளைந்த விளைவுகளைப் பற்றி பேசுவதைவிடவும் செயப்படு பொருளைப் பற்றி பேசுதல் கவிதைக்கான வடிவத்தை மிகவும் திருத்தி அமைக்கிறது (என்று தோணுகிறது) வள்ளுவர் “நாவின் வடு” என்று சொல்வதற்கும் காரணமிருக்கிறது. அவை ஒவ்வொன்றும் கீறி வடுக்களோடே இருந்து கொண்டிருப்பதால். கழிவிரக்கம், ஒரு நுனியிலும் மறு நுனியில் நிசப்தமுமாய் கவிதை கொடிபின்னியிருக்கிறது. வார்த்தைகள் இல்லாது / தீர்ந்திருந்த போழ்தில் / உதட்டில் ஒரு சிகரெட்டைப் / பொருத்தி, இவை நிகழ்களத்தின் முடிவு எனினும் வக்கிரத்தின் துவக்கமாக கருதுகிறேன். வார்த்தைகளை சிகரெட்டால் எரித்துவிட்டுச் சென்றான் எனும் படிமம் இருந்திருந்தால் வக்கிரத்தின் நீட்சியாக இருந்திருக்கும். துடைப்பமும் முறமும் ஒரு நல்ல குறியீடு. ஒன்று வழிப்பதற்கு இன்னொன்று சேர்ப்பதற்கு. வார்த்தைகளை ஒன்று நினைவுறுத்தி அசைபோடலாம், இரண்டாவது சேர்த்து வைத்து மீண்டும் கொட்டலாம். பாலின வேறுபாட்டையும் இக்குறியீடுகள் காண்பித்துவிடுகின்றன. முதலில் ஆரம்பிப்பது செயப்படு பொருள் என்றால் முடிவாக நிகழ்தளம். அது பேச ஆரம்பிக்கிறது மெளனமாக எனும் முரண்குறி பல தளங்களுக்கும் விரிகிறது. முதலில் அறை இதில் பங்குதாரரா என்று கேட்கத் துவ்ங்குகிறேன். இரண்டாவது இருவரில் அறைக்கு என்ன ஒத்துழைப்பு என்று.

சிறப்பான கவிதை, மேலும் சிறப்பான வடிவமும் கூட.
தொடர்ந்து எழுதுங்கள்.

HEMA BALAJI
19-10-2012, 07:54 AM
விரிவான பின்னூட்டத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கீதம் மற்றும் விஜய். பின்னூட்டத்தில் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி விஜய்.

நாஞ்சில் த.க.ஜெய்
19-10-2012, 12:22 PM
துவங்கும் கொலைகள யுத்ததின் முன்னறிவிப்பு இந்த யுத்தம்...மாறுபட்ட கோணத்தில் மீண்டும் வாசிக்க தூண்டும் கவிதை வரிகள்..

ஆதி
19-10-2012, 12:51 PM
வார்த்தைகள் காயப்படுவதில்லை, அவை எந்த வேகத்திலும், எவ்வளவும் குரூரமாகவும் எறிப்பட்டிருந்தாலும், அவை இலக்கிய அதே வேகத்திலும், அவ்வளவு குரூரத்திலும் தக்கிவிட்டு நுண் சேதமுமின்றி அப்படியே இருக்கிறது

கிழிந்து, சதை பிளந்தும், வலியோடு ரத்தமும் சொட்ட சொட்ட ரண்த்தோடும் இருப்பது உறவும் மனமும் தான்

இவ்வளவுக்கு பின்னும் சினம் தீராமல், வார்த்தைகளால் புகைந்தது போதாது என்று சிகரெட்டால் புகைய போகிறான்

அவள் கூட்ட ஆரம்பித்தாள் என்று வாசிக்கையில் நான் புரிந்து கொண்டது இது பழக்கப்பட்டு போன ஒன்று என்பதையே, கூரிய கண்ணாடி சில்லுகளாய் மோதி கிழித்து மனதின் ரத்தத்தோடும் சதையோடும் சிதறிய வார்த்தைகளை அவள் கூட்ட ஆரம்பிக்கிறாள்

அப்போதைக்கு நிலவி இருக்கும் நிப்சத்தின் அடிப்பரப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது, இன்னும் அணையாத கோபத்தின் நெருப்பு குழம்புகள், இன்னும் கொதிப்போடு அடுத்தொரு தீராவகம் எறி தருணத்துக்கு ஆயத்தமானபடி

வாழ்த்துக்கள் ஹேமா

HEMA BALAJI
19-10-2012, 02:21 PM
கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஜெய் மற்றும் ஆதி...

A Thainis
21-10-2012, 11:17 AM
வார்த்தைகள் தொடுக்கும் யுத்தம் எவ்வளவு கொடுமை என்பதை இந்த கவிதை சொற்கள் தொடுத்து விவரித்து உள்ளது அருமை. தீயினால் சுட்டபுண் ஆறும் ஆனால் வார்த்தை வன்சொல் ஆறாமல் வடுவாக மாறிவிடுகிறது என்ற வள்ளுவனின் வாக்கு எதனை உண்மை நிறைந்தது. இன்று நாம் குப்பைகளை கொட்டுவதுபோல் வன்சொர்க்களை மாற்றவர் உள்ளங்களில் கொட்டி காயபடுத்திகிறோம். வன் சொல் நீக்கி மென் சொல்லில் இனிய உலகம் படைப்போம், வாழ்த்துக்கள் ஹேமா.

HEMA BALAJI
21-10-2012, 06:16 PM
நன்றி தைனிஸ்..

ந.க
30-10-2012, 11:34 AM
ஒவ்வொரு சொல்லிலும் உருவகம் உண்டாக்கிப் பார்க்கின்றேன்,
'விடைத்துக்' கொண்டு எனும் சொல் மட்டும் விலகுகிறது....

செயலின் புகைத்தல் பகை - அதன் பொறி நெருப்பு.....நன்று ..நன்றி........

HEMA BALAJI
31-10-2012, 08:45 AM
ஒவ்வொரு சொல்லிலும் உருவகம் உண்டாக்கிப் பார்க்கின்றேன்,
'விடைத்துக்' கொண்டு எனும் சொல் மட்டும் விலகுகிறது....

செயலின் புகைத்தல் பகை - அதன் பொறி நெருப்பு.....நன்று ..நன்றி........

நன்றி...