PDA

View Full Version : மெளனம்..!



இனியவள்
15-10-2012, 06:25 PM
தீண்டும் காற்றினில்
சிலிர்த்திடும் மேனிபோல்
செல்லரித்திடும் வார்த்தைகளில்
உறங்குகிறது காயமெனும்
ஆயுதம்...!

வலிதாங்கிடும் நெஞ்சத்திலே
மெளனித்திடும் அன்பினில்
சமாதியாகின்றன உறவுகள்..!

எத்தனை எத்தனையாயிரம்
கல்லறைகள் கட்டிக்கொள்கின்றன
இந்த நிசப்தங்கள்..!

மெளனமே நீ கலைந்தாலும்
காணாமல் போகாது நீ
உண்டாக்கிச் சென்ற காயங்களில்
வ(லி)டுக்கள்...!

கோபாலன்
15-10-2012, 07:03 PM
நம் மௌனிக்கும் சில வேலைகள் மரணத்தை தாண்டியும் வலிக்கும் போல. கவிதை மிகவும் நன்றாக இருந்தது.:)

கீதம்
16-10-2012, 06:02 AM
மௌனமாயுதம் தாக்கிய காயத்தின் வடுக்களை வரி வரியாய் காட்டுகிறது கவிதை.

நெருப்பு நெருங்கி வந்து தகிக்கவேண்டாம். அனல்போதும் சிறு புழுவுக்கு.

மனத்தின் துடிப்பை உரைக்கும் அருமையானதொரு கவிதைக்குப் பாராட்டுகள் இனியவள்.

நாஞ்சில் த.க.ஜெய்
16-10-2012, 10:54 AM
செல்லரித்திடும் வார்த்தைகளில்
உறங்குகிறது காயமெனும்
ஆயுதம்...!
காயம் ஆயுதம் ஆகுவது இதில் எங்கனம்...

வலிதாங்கிடும் நெஞ்சத்திலே
மெளனித்திடும் அன்பினில்
சமாதியாகின்றன உறவுகள்..!
மௌனத்தின் வலிகளை கூறிடும் எனை கவர்ந்த வரிகள்..

kulakkottan
16-10-2012, 02:48 PM
நாஞ்சில் த.க.ஜெய் அவர்களே

செல்லரித்திடும் வார்த்தைகளில்
உறங்குகிறது காயமெனும்
ஆயுதம்...!
மனதை செல்லரிக்க கூடிய வார்த்தைகளுக்குள்
காயம் என்ற ஆயுதம்
மௌனமாய் உறங்குவதாய்
பொருள் கொள்ளலாம் என நினைக்கிறன்

இனியவள் அவர்களே
நல்ல கவி என்று சொல்ல மாட்டேன்
உணர்வுகளின் உச்சரிப்பின் உச்சஸ்தாயி என்றே புகழ்வேன்

நாஞ்சில் த.க.ஜெய்
16-10-2012, 03:06 PM
தங்கள் மேலான விளக்கத்துக்கு நன்றி குளகோட்டன் அவர்களே..இதில் என்னுள் எழுந்த விளக்கத்தினை பகிர்ந்துள்ளீர்கள் ..எனக்குள் தோன்றும் சந்தேகம் என்னவெனில் வேதனை மற்றும் வலிகளின் வெளிப்பாடு தான் காயம் இந்த காயம் எப்படி ஆயுதம் ஆகும் என்பதுதான் கேள்வி..ஒருவேளை மற்றவர்களை காயபடுத்தும் வார்த்தைகளை கொண்ட ஆயுதம் மௌனமாக உறங்குகிறது எனும் பொருள்பட உரைத்துள்ளார் போலும் இனியவள் அவர்கள் என நினைக்கிறேன்..

கும்பகோணத்துப்பிள்ளை
16-10-2012, 08:24 PM
வலிதாங்கிடும் நெஞ்சத்திலே
மெளனித்திடும் அன்பினில்
சமாதியாகின்றன உறவுகள்..!


இனியவள் அவர்களே!

வலிதாங்கும் நெஞ்சம் என்றும் அன்பை மௌனிக்க விடாது அங்கனமெனில் உறவுகளும் சமாதியாவதில்லை!
இதற்க்கு உங்கள் இந்த மௌனத்தின் உணர்வு வெளிப்பாடுகளே சாட்சி!

இனியவள்
17-10-2012, 03:32 PM
நன்றி கோபாலன்..

சிலசமயம் மெளனம் சிறந்தது
பல சமயம் அதுவே வாழ்க்கையினை
சிதைக்கவும் கூடியது..

இது அவர்களின் மன நிலையினைப் பொறுத்து மாறுபடக்கூடியது

இனியவள்
17-10-2012, 03:33 PM
நன்றி கீதம்..

ஆமாம் தாங்கள் கூறுவது மிகவும் சரியே..!

இனியவள்
17-10-2012, 03:36 PM
மனம் ஊனமுற்றால் வாழ்க்கையென்பது கனவாகி காணாமல் போய்விடும்.. அதனால் தான் காயத்தை ஆயுதமாக்கினேன்..

மெளனத்தினால் ஏற்படும் காயம் ஒருவகையில் வாழ்க்கையை சிதைக்கும் ஆயுதம் என்பது அவ் வரிகளின் பொருள்..!

இனியவள்
17-10-2012, 03:37 PM
நன்றி குலக்கோட்டன் தங்களின் கருத்துக்கு..! நானும் இதைக் கவி என்று கூறமாட்டேன்.. சிலபல உணர்வுகளின் கோர்வை அவ்வளவே..!