PDA

View Full Version : மூட்டுநோய்.அமீனுதீன்
14-10-2012, 06:32 PM
இன்று உலக மூட்டுநோய் தினம் அனுஷ்டிக்கப் படுகிறது. நாடெங்கும் வயதானவர்கள் மட்டும் இன்றி, இளம் வயதினரும் மூட்டு
தேய்மானம் போன்ற மூட்டு நோய்களால அவதிப் பட்டு வருகின்றனர். எனவே மூட்டு நோயிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்பதால் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

பெரும்பாலும் இளைய தலைமுறையினர் இன்று உட்கார்ந்தபடியே வேலை பார்க்கின்றனர். மேலும் குளிரூட்டப்பட்ட அறைகளில் வேலை பார்ப்பதால், வெயிலின் வெளிச்சத்தில் கிடைக்கும் விட்டமின் டி கிடைக்காமல் போய்விடுகிறது. வெயிலின் வெளிச்சத்தில் கிடைக்கும் விட்டமின் டி எலும்பு, மூட்டுக்களுக்கு மிகவும் நல்லது. இது நமது இளைய தலைமுறையினருக்கு பெரிய பற்றாக்குறையாகி விட்டது. உட்கார்ந்த படியே வேலை பார்ப்பதாலும், சூரிய வெளிச்சம் கிடைக்காததினாலும் மூட்டுக்கள் மட்டுமல்ல, கைவிரல்களில் உள்ள சிறிய ஜாயின்ட்கள் கூட வலிக்க ஆரம்பிக்கும்.

இளைய தலைமுறையினர் விழிப்போடு இருக்க வேண்டும் என்று எலும்பு நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்தின் பாரம்பரிய மூலிகை களிலும் மூட்டு வலி நிவாரண மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளதாக சித்த மருத்துவ அமைப்புக்கள் கூறுகின்றன. உணவு முறையில் இஞ்சி சுக்கு மஞ்சள் சீரகம் போன்ற மூலிகைத் தன்மை உணவுப் பொருட்களை அன்றாடம் நமது உணவில் சேர்த்துக் கொள்ள தவறக் கூடாது என்றும் சித்த மருத்துவ அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

தினமும் ஒரு நெல்லிக்கனி தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் பிற்காலத்தில் மூட்டு நோயில் இருந்து தப்பிக்கலாம் என்றும் சித்த மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதோ, 'நம் தோழி' சஞ்சிகையில், மூட்டுவலி குறித்து அவதானம் பற்றி கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியின் ரொமடாலஜி துறை தலைவர் டாக்டர் ராஜேஸ்வரி அளித்த செவ்வி இது.

1. மூட்டுவலி எதனால் ஏற்படுகிறது?

பொதுவாக மூட்டு என்பதே முழங்காலில் உள்ள மூட்டு மட்டும்தான் என்று பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், ஒரு எலும்பும் இன்னொரு எலும்பும் கூடுகிற பகுதிகள் எல்லாமே மூட்டுதான். அப்படி நம்முடைய உடலில் விரல்கள், கால்கள், கழுத்து, முதுகுத் தண்டு என நிறைய இடங்களில் மூட்டுகள் இருக்கின்றன. எல்லா மூட்டுகளிலும் ஒருவித ஜவ்வு இருக்கும். இதற்கு கார்டிலேஜ் என்று பெயர். இந்த ஜவ்வு தான் மூட்டு தேய்ந்து போகாமல் பாதுகாக்கிறது. இந்த ஜவ்வு தேயும்போதுதான் எலும்பு மூட்டுகள் உராய்ந்து வலியை ஏற்படுத்துகின்றன. இந்த நோய்க்கு ஆங்கிலத்தில் ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் (ளிstமீஷீணீக்ஷீtலீக்ஷீவீtவீs) என்று பெயர். இதை கவனிக்காமல் அப்படியே விட்டால் மூட்டு தேய்ந்து, மூட்டு மாற்று அறுவைசிகிச்சை வரை போகலாம்.

2. மூட்டு தேய்வின் அறிகுறிகள் என்ன?

மூட்டு வலிதான் முதல் அறிகுறியே கெண்டைக்கால் மற்றும் தொடையிலும் வலி இருக்கும். படிக்கட்டில் ஏறும்போதும், தரையில் உட்கார்ந்து எழுந்தால்கூட வலி உண்டாகும். கொஞ்ச தூரம் நடந்தால்கூட மூட்டு வலி ஏற்பட்டால், அது மூட்டு தேய்மானத்தின் அறிகுறி என்று உறுதிபடுத்திக்கொள்ளலாம். தொடர்ந்து ஓய்வு எடுக்கும்போதுகூட வலி ஏற்படலாம். இப்படி ஓய்வு எடுக்கும்போதும் வலி ஏற்பட்டால், அவர் ஆரம்பத்திலேயே உணராதவராக இருப்பார். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த வலிதான் கடைசி எச்சரிக்கை! அப்போது, அலட்சியப்படுத்தாமல், மருத்துவ சிகிச்சை செய்தே ஆகவேண்டும்.

3. எதனால், அலட்சியப்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறீர்கள்?

எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு எளிதில் எலும்பு முறிவு ஏற்படலாம். மேசை மீது சாதாரணமாக தட்டினால்கூட எலும்பு முறியும். கட்டிலிலிருந்து விழுந்து எலும்பு முறியும். குளியல் அறையில் வழுக்கினால்கூட எலும்பு முறிவு ஏற்படும்.

4. எலும்பு தேய்வதாலேயே இப்படி ஏற்படுமா...

அதுமட்டும் காரணம் இல்லை. கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு இப்படி அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகள். அவர்கள் சரியான உணவு எடுத்துக்கொண்டால்கூட கால்சியம் குறைபாடு இருந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மருத்துவரின் பரிந்துரையோடு மட்டுமே சரியான மாத்திரையை உட்கொள்ள வேண்டும். விளம்பரங்களில் வருகிற மாத்திரைகளையெல்லாம் வாங்கி உட்கொள்ளும்போது தேவைக்கு அதிகமாகவோ, குறைவாக உட்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால், மருத்துவரின் உதவியோடு மருந்து எடுத்துக்கொள்வதே உத்தமம்.

5. யாரையெல்லாம் மூட்டுவலி அதிகம் தாக்கும்?

அதிகமாக பெண்களைத் தாக்கும். அதிலும் வயதான பெண்களுக்கு மட்டும்தான் மூட்டு வலி வரும் என்பது இல்லை. இளம் பெண்களுக்கும் வரலாம்.

6. எதனால் பெண்களை அதிகமாகத் தாக்குகிறது..?

கால்சியம் குறைபாடு ஆண்களைவிட பெண்களுக்குத்தான் அதிகம் ஏற்படுகிறது.

7. அப்படியா...

அதுமட்டும் இல்லை. எங்காவது விழுந்து அடிபட்டு, நீண்டநாட்கள் அசையாமல் படுக்கையில் இருப்பவர்களுக்கும் மூட்டுகளில் வலி ஏற்படும். பெண்கள் பேறு காலத்துக்குப் பின்னர் உடலை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். இதனால் அவர்களது உடல் எடை கூடும். அதனால், முழங்கால் மூட்டுகளில் விடாமல் வலி இருக்கும். படுக்கையிலிருந்து எழுந்திருக்கும் போதும், வலி மெல்ல மெல்ல இடுப்புக்கும் பரவும். சில நேரங்களில் தசைப்பிடிப்பும் ஏற்படும்.

8. அப்படியென்றால் ஆண்களை மூட்டுவலி தாக்காதா?

அப்படியில்லை. நான்கு பேர் மூட்டுவலியால் பாதிக்கப்பட்டால், அதில் ஒருவர் மட்டுமே ஆணாக இருப்பார். அதிலும் தண்டெலும்பு வாதம் (கிஸீளீஹ்றீஷீsவீஸீரீ ஷிஜீஷீஸீபீஹ்றீவீtவீs) என்கிற முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படுகிற வலி ஆண்களுக்கு அதிகமாக இருக்கும்.

9. எந்த வயதில் இந்த தண்டெலும்பு வாதம் வரும்?

இதற்கு வயது வரம்பே இல்லை. ஆனால், 30 முதல் 40 வயது உடையவர்களுக்கு அதிகமாக வரும். 30 வயத்துக்குள் உடலில் உள்ள எல்லா எலும்புகளும் வளர்ச்சியடைந்துவிடும். 40 வயத்துக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தேயத்தொடங்கும்.

10. யாருக்கெல்லாம் முதுகுவலி ஏற்படும்?

உடல் கட்டுக்கோப்பாக இல்லாமல் ஒபிஸிட்டியாக இருப்பவர்கள், அதிகமாக பளு தூக்குகிறவர்கள், தண்டெலும்பு வாதம் போன்ற பாரம்பரை நோய் உடையவர்களுக்கும் முதுகுவலி அதிகம் தாக்க வாய்ப்பு இருக்கிறது.

11. அப்போ பரம்பரை பரம்பரையாகவும் மூட்டுவலி வரும் இல்லையா..?

ஒவ்வொருவருக்கும் உடலில் குறிப்பிட்ட அளவு நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் இருக்கும். இந்த செல்களில் பாதிப்பு ஏற்படும்போது முழங்கால் மற்றும் கால்களின் இணைப்புகளில் வீக்கமும் அழற்சியும் உண்டாகும். இதுவே ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் (ஸிலீமீuனீணீtஷீவீபீ கிக்ஷீtலீக்ஷீவீtவீs). இதுதான் குடும்பத்தில் முன்னோர்கள் யாருக்கும் இருந்தால், பரம்பரையில் மற்றவர்களுக்கு வரலாம்.

12. இதனால் என்ன பாதிப்பு வரும்?

இந்த பாதிப்பு காரணமாக கை விரல்களில் பிரச்னை உண்டாகும். குறிப்பாக, காலை நேரங்களில் கை விரல்கள் மற்றும் முழங்கால் மூட்டுகளில் இறுக்கிப் பிடித்த மாதிரி உணர்வு இருக்கும், வீக்கம் உண்டாகும், வலி ஏற்படும். குளிர்காலங்கள், மழை பெய்யும் காலங்களில் வலி அதிகரிக்கும். கை விரல்களை நீட்டவோ, மடக்கவோ முடியாது. உடலில் உள்ள மற்ற இணைப்புத் திசுக்கள் பாதிக்கப்படும். நுரையீரல், இதயம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படவும் செய்யலாம்.

13. இதற்கு மருந்து உண்டா..?

அதுதான் இல்லை. ஆனால், கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

14. எப்படி?

உடற்பயிற்சிகள் செய்வது, நீச்சல் பயிற்சிகள் செய்வதால் இதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். பிஸியோதெரபி மூலம் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண முடியும்.

15. முழங்கால் மூட்டுவலியால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

முழங்கால் மூட்டில் வலி ஏற்பட்டால் இயல்பாக நடக்கமுடியாது. உட்கார்ந்து எழுவதில் சிரமம் ஏற்படும். நாள்பட்ட மூட்டுவலியாக இருந்தால் வேறு பல உபாதைகளும் உண்டாகலாம்.

16.இதைத் தவிர்ப்பது எப்படி?

வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றம் வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் ஞி3 சத்து அதிகம் உடலுக்கு கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சூரிய ஒளியில் வைட்டமின் ஞி3 சத்து நிறைந்து இருக்கிறது.

17. மூட்டுவலியால் வேறென்ன பாதிப்புகள், நோய்கள் ஏற்படும்?

சர்க்கரை வியாதி, தைராய்டு குறைபாடு, ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள், ஹீமோஃபீலியா, புற்றுநோய் போன்ற தாக்குதல்கள் ஏற்படலாம். இந்த நோய்களுக்கெல்லாம் மூட்டுவலி ஒரு அறிகுறிதான்!

18. மூட்டுவலி வராமல் தவிர்க்க பயிற்சிகள் இருக்கிறதா...?

சிறுவயதிலிருந்தே பேஸ்கெட் பால், வாலிபால், நீச்சல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதால் வயதான காலத்தில் மூட்டு வலி ஏற்படுவதைத் தடுக்க முடியும். அதேபோல யோகா பயிற்சி செய்வதாலும் மூட்டுவலி ஏற்படுவதை தடுக்கலாம்.

19.மூட்டுவலி வந்தவிட்டபிறகு என்ன பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்..?

பிஸியோதெரபி மூலம் மூட்டுவலியை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். மூட்டுத் தேய்ந்து இருந்தாலோ, மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்கிற நிலை வரைக்கும் போயிருந்தாலோ மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வதுதான் நல்லது.

20. உணவு முறைகள் என்ன?

சமச்சீர் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறையந்த பால், தயிர் பொருட்களை அதிகம் உட்கொள்ளலாம். கொழுப்புச் சத்து நிறைந்த உணவை அறவே தவிர்ப்பது நல்லது. நார்ச்சத்து உணவுகள் ரொம்பவே நல்லது.

- ஊர்வசி மணாளன் - இப்பதிவின் மூலம் : நம் தோழி (http://namthozhi.com/inner.php?&id=313)
நன்றி: http://www.4tamilmedia.com (http://www.4tamilmedia.com/life-care/medical/8931-2012-10-13-15-53-27?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+4tamilmedia-feeds+%284tamilmedia+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29)

jayanth
15-10-2012, 03:34 AM
பயனுள்ள தகவல் பகிர்விற்கு நன்றி அமீன்...