PDA

View Full Version : இரவல் வாழ்க்கை...HEMA BALAJI
13-10-2012, 01:06 PM
http://3.bp.blogspot.com/-nuEs3zwkeVE/TfeBAtAju5I/AAAAAAAAALc/glQcymmJuq4/s320/solo%2Blady.jpgஎன் இயல்பை மறந்த இரவல் வாழ்க்கை"

படித்தது போதும் கால் கட்டு போடுவோம்
தாத்தாவின் ஆலோசனை அரங்கத்தில்...

கவர்ண்மெண்ட் மாப்பிள்ளை விட
சாஃப்ட்வேர் இஞ்சினியர் தான் உசிதம்
அப்பாவின் ஆதிக்கத்தில்.....

உள்ளூர் வேண்டாம் வெளிநாடு பார்ப்போம்
அண்ணணின் அலட்டலில்...

அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வேண்டாம்
ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பு போதுமே..
வங்கி கணக்கில் சில லட்சங்கள் போதும்
மாமனாரின் எளிமையில்?!.....

மடிசார் வேண்டாம் சோளி போட்டுக்கோ
நாத்தனாரின் பெருந்தன்மையில்....

டயட்டை கடைபிடி இல்லையேல்
பெருத்து விடுவாய் _ கையில் எடுத்த
பாதுஷாவை நாசுக்காய் பிடுங்கிய
மாமியாரின் கரிசனத்தில்...

முதலிரவில் மாத்திரை தந்து
இப்போது வேண்டாமே குழந்தைப் பேறு
சிட்டிஸன்ஷிப் கிடைக்கட்டும்
பிறகு பார்க்கலாம்
புதுக் கணவனின் புத்திசாலித் தனத்தில்...

இதில் எங்கே தொடங்கியது?.

"என் இயல்பை மறந்த இரவல் வாழ்க்கை"

nellai tamilan
13-10-2012, 02:43 PM
இரவல் வாழ்க்கை...
புதிதாய் பூத்த வாழ்க்கையின் சிக்கல்களை அழகான கிருக்கல்களினல் எளிமையாக எழுதியிருக்கிறீர்கள்.

பெண்.....
இங்கு பிடுங்கி
அங்கு நடும் நாற்று போல...
பழகிய உறவுகளை உதரிவிட்டு
புதிதாய் உறவுகளை வளர்க்கும் யுத்தி தெரிய வேண்டிய கட்டாயம் பெண்ணுக்கு ஏனோ...?

வாழ்த்துக்கள். அழகான கவிதைக்கு

jayanth
14-10-2012, 03:49 AM
எங்கே தொடங்கியது...இது முடிந்து போன இரவல் வாழ்கையாக அல்லவா மாறிப் போனது...

யதார்த்தமான உண்மைகள்...

HEMA BALAJI
14-10-2012, 02:41 PM
நன்றி நெல்லை தமிழன் மற்றும் திரு. ஜெயந்த்.

jayanth
15-10-2012, 03:38 AM
நன்றி நெல்லை தமிழன் மற்றும் திரு. ஜெயந்த்.

திரு எல்லாம் வேண்டாமே...ஜெயந்த் என்றே அழையுங்கள் ஹேமா...

HEMA BALAJI
15-10-2012, 06:40 AM
திரு எல்லாம் வேண்டாமே...ஜெயந்த் என்றே அழையுங்கள் ஹேமா...

உங்களுக்கு சரியென்றால் எனக்கு அழைப்பதில் ஏதும் பிரச்சினை இல்லை ஜெயந்த். வயது, சீனியாரிட்டி அவரவரின் விவரங்கள் தெரியாமல், சம்மதம் இல்லாமல் பெயர் சொல்லி அழைக்க சங்கடமாக இருந்தது அதனால் தான். நன்றி.

A Thainis
15-10-2012, 07:09 AM
பெண்ணின் பெரும்பாடுகளை தொகுத்திடும் கவிவரிகள், அவள் உள்ளம் அறிவார் யாரோ.

கீதம்
16-10-2012, 06:08 AM
இரவல் பொருளாவது என்றேனும் திரும்பி வரும் வாய்ப்புண்டு. ஆனால் வாழ்க்கை.... தொலைந்தது தொலைந்ததுதான்.

பாசத்துக்காய் பல வாழ்க்கைகள் இப்படிதான் பணயம் வைக்கப்பட்டுவிடுகின்றன.

மனம் தொட்ட கவிதை. பாராட்டுகள் ஹேமா..

M.Jagadeesan
16-10-2012, 10:29 AM
கல்வி கரையில; கற்பவர் நாள் சில
கால்கட்டு , கைகட்டு எல்லாமே
கல்வி முடிந்த பின்தான் என்று
தாத்தாவிடம் அடித்துச் சொல்லுங்கள்!

கவர்மென்ட் மாப்பிள்ளை என்றாலும்
சாப்ட்வேர் மாப்பிள்ளை என்றாலும்
சொந்தக் காலில் நிற்பவன் என்றால்
பந்தக் காலில் சந்திப்பேன் என்று
அப்பாவிடம் அடித்துச் சொல்லுங்கள்.


சொர்க்கமே என்றாலுமே அது
நம்ம ஊரு போலாகுமா? -எனவே
அயல்நாட்டு மாப்பிள்ளை வேண்டாம் என்று
அண்ணனிடம் அடித்துச் சொல்லுங்கள்.

என்னிடம் லட்சங்கள் இல்லை
ஆனால் லட்சியங்கள் உண்டு -என்று
மாமனாரிடம் அடித்துச் சொல்லுங்கள்.

மடிசாரும் நான் வேண்டேன்
சோளியும் நான் வேண்டேன்
காதல் ஒருவனைக் கைப்பிடித்த பின்னர்
காஞ்சிப் பட்டுடித்திக் கஸ்தூரித் திலகமிட்டுத்
தேவதைபோல் நான் இருப்பேன் என்று
நாத்தனாரிடம் அடித்துச் சொல்லுங்கள்.

உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
என்னும் அவ்வை மொழியை அறிவேன் என்று
மாமியாரிடம் அடித்துச் சொல்லுங்கள்.

ஒன்றே பெறுதல் நன்று அதுவும்
இன்றே பெறுதல் நன்று என்று-முதலிரவில்
கணவனிடம் அடித்துச் சொல்லுங்கள்.

இனி

உங்களுடையது இரவல் வாழ்க்கை அல்ல
மங்களம் தங்கும் சொந்த வாழ்க்கை!

நாஞ்சில் த.க.ஜெய்
16-10-2012, 10:37 AM
சில நேரங்களில் தொலைக்கபடும் இழப்புகள் மூலம் ஒரு இணக்கமான சூழல் நிகழுமானால் அந்த இரவல் வாழ்வும் சொர்க்கமே...

HEMA BALAJI
17-10-2012, 03:25 PM
பின்னூட்ட்டத்திற்கு நன்றி தைனிஸ், கீதம் மற்றும் ஜெய் அவர்களே. உங்கள் பின்னூட்டக் கவிதையும் நன்றாக இருக்கிறது ஜகதீசன் சார். மிகச் சரியே. நன்றி.