PDA

View Full Version : மௌனங்களை மௌனங்களாகவே....



HEMA BALAJI
12-10-2012, 03:11 PM
http://2.bp.blogspot.com/-WVSYHH8e1ig/T1t--dW3IwI/AAAAAAAAAjM/tBAPYg673t8/s1600/imagesCA69GS1B.jpg


சில மௌனங்களை மௌனங்களாகவே
இருக்கவிடுவதில் இருக்கும் சுதந்திரம்
வார்த்தை வடிவம் கொடுக்கையில்
சிறைப்பட்டு விடுகின்றது...

அந்தியில் நீண்டு வளரும்
நம் நிழல்களுக்கு மத்தியில்
முன்பு உருகிய பாறை
இப்போது உருக முடியாத ஐஸ் கட்டியாக
மாறிவிட்டதை வார்த்தைச் சிதைவு பெற்ற
மௌனம் உறைக்கிறது...

நம் நாவுக்கடியில் கசந்து கொண்டிருக்கும்
நிசப்தத்தின் கசிவுகளில் வழுக்கி
ஓடிக் கொண்டிருக்கிறது
நாம் சேர்ந்திருந்த மணித்துளிகள்...

முடிவு செய்யப்பட்ட நிகழ்வுகளில்
ஒருபோதும் ஏற்படுவதேயில்லை
காத்திருத்தலின் சாத்தியங்கள்...

தன் பசிக்கு வார்த்தைகள் அகப்படாததால்
தன்னைத் தானே புசிக்கத் தொடங்குகிறது
நம் இருவருக்கும் இடையேயான
மௌனம்...

கீதம்
13-10-2012, 11:17 AM
மிகவும் அழகாக எழுதப்பட்டிருக்கிறது கவிதை. மௌனத்தை மௌனமாகவே இருக்கவிடக் கோரிடும் கோரிக்கைகள். சேர்ந்திருந்த மணித்துளிகளையும் கசப்பின் அனுபவமாய் மாற்றிவிடும் மௌனத்தின் வார்த்தை மொழிபெயர்ப்பு என்னும் வரிகள் உண்மை. ஒவ்வொரு பத்தியையும் தனித் தனிக்கவிதையாய்க் கொண்டு சிலாகிக்கும் வண்ணம் அற்புதமாய் எழுதியிருக்கிறீர்கள். முடிவு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒருபோதும் ஏற்படுவதேயில்லை காத்திருப்பின் சாத்தியங்கள்... இந்த வரிகளை வாசித்து அசந்துபோனேன். பாராட்டுகள் ஹேமா.

மௌனத்தின் விகாரம் வெளிப்படும் ஆதியின் கவிதையொன்று நினைவுக்கு வந்துபோகிறது.

HEMA BALAJI
13-10-2012, 12:56 PM
ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதம்.

கோபாலன்
14-10-2012, 09:14 AM
உங்களின் மௌன மொழி நன்றாகவே புரிந்தது. கவிதை நன்றாக இருந்தது. :)

HEMA BALAJI
14-10-2012, 02:38 PM
நன்றி கோபாலன்..

kulakkottan
15-10-2012, 01:04 PM
நன்றாய் இருக்கிறது

முன்பு உருகிய பாறை
இப்போது உருக முடியாத ஐஸ் கட்டியாக
மாறிவிட்டதை வார்த்தைச் சிதைவு பெற்ற
மௌனம் உறைக்கிறது...

இந்த பந்தியின் அர்ந்தங்கள் புரிதலில் சிக்கலாய் உள்ளது

HEMA BALAJI
17-10-2012, 03:31 PM
ரொம்பப் பெரிய உள்ளர்த்தம் எல்லாம் இல்லீங்க KK. இனைந்திருந்த போது பாறை கூட உருகும் படி இருந்த நட்பு/காதல் பிரிதலுக்குப் பின் நேரும் சந்திப்பில் உருகக் கூடிய ஐஸ் கட்டியைக் கூட உருக முடியாதளவு கனமான சூழ்நிலை உருவாகிவிட்டிருந்ததைக் கூற முயன்றேன் அவ்வளவுதான். பின்னூட்டியதற்கு நன்றி.