PDA

View Full Version : என்ன மச்சான்?



ரௌத்திரன்
11-10-2012, 07:07 AM
அள்ளி முடியுற கொண்டையில-உசுரக்
கிள்ளி முடிஞ்சி போறவளே!

எட்டி நீயும் நிக்கயிலே-உசுரும்
எட்டிக் காயா கசக்குதடி
தொட்டு உன்னக் கொஞ்சத்தான்-என்
தேக மெல்லாம் பசிக்குதடி!

தொண்டையில மாட்டிக் கிட்ட
மீன்முள்ளப் போலத்தான்
மண்டையில உன் நெனப்பு
ராப்பகலா நிக்குதடி!

சிறுக்கி மவளேநீ
செய்வெனதான் வச்சுட்டியோ?
கிறுக்குப் புடிக்காத
கொறயாக நிக்குறனே!

பாதகத்தி கொலுசுச் சத்தம்
கேக்காம வாழுறதுக்கு
பறைச்சத்தம் சங்குச் சத்தம்
தேவல போலிருக்கே!

ஒடம்பு செத்துப் போனா-அத
மண்ணுக்குள்ள பொதைச்சிறலாம்!
மனசு செத்துப் போனா-அடி
எங்கபோயி பொதைக்கிறது?

ஆகாச நெலவுபோல
அங்கெங்கோ இருப்பவளே!-என்
கையணைக்கும் வெளக்காக-நீ
கிட்டவரும் காலமெப்போ?

பக்கத்தில் நான்நெருங்கி-உன்
பால்முகத்தக் கையேந்த
வெக்கத்தில்நீ தலைகுனிய-நான்
வேடிக்கை பாப்பதெப்போ?

ஓயாம ஆடும் வாய-நான்
வாயால தண்டிக்கச்
சாயாம என்மார்பில்-நீ
சாய்கிற காலமெப்போ?

"நல்லா தூங்கணும்"னு
நாளொன்னு தப்பாம
புள்ளைக்குச் சொல்வதுபோல்
சொல்லுறியே, அடிச்சிறுக்கி

உன்,

சேல முந்தியில-தல
சாய்க்கும் காலம்வரை-பச்ச
ஓலையில் கெடத்திவச்ச
பொணம்நான்னு புரியலியோ?

"வயிறு காயப் போடாத"னு
வக்கணையா சொல்றவளே!-எனக்கு
உயிரிருக்கும் சேதியே-நீ
பேசாட்டி மறக்குதடி!

வெள்ளிநெலா பாத்தபடி-நடு
சாமத்தில் படுத்தாக்கா
கொள்ளிக் கட்டையப் போல-அது
தலைமாட்டில் தெரியுதடி!

அடியே உன்னப் பிரிஞ்சேன்னா-இனி
உசுரும் எனக்கு கனக்காதோ?-உன்
மடியில் நானும் செத்தேன்னா-என்
மரணம் கூட மணக்காதோ?


---------ரௌத்திரன்

செல்வா
11-10-2012, 05:08 PM
அப்படியே கள்ளிக் காட்டுக்குள்ள போயி ஒரு கிழவிகிட்ட பாட்டு கேட்டமாதிரி
கிராமிய மணம் கமழும் பாடல்.

இவற்றை மெட்டுகட்டி பாடலாக்கலாமே?

மன்றப் பண்பலைக்கும் உதவுமே.

ரௌத்திரன்
12-10-2012, 05:49 AM
நன்றி திரு.செல்வா அவர்களே!-------ரெளத்திரன்

A Thainis
12-10-2012, 12:55 PM
கிராமிய மணம் பரவ உலாவரும் இனிய தமிழ் பாடல், வாழ்த்துக்கள் ரௌத்திரன்.