PDA

View Full Version : ஒரு விலைமகளின் இறுதி ஊர்வலம்!ரௌத்திரன்
11-10-2012, 08:04 AM
(எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த
ஒரு விலைமகளின் மரணத்திற்காக
எழுதிய கவிதை. நான் நேரில் கண்ட
வாழ்வின் நிஜப்பாத்திரம் இவள்)கண்ணென்று முகத்திரண்டு
கள்குடங்கள் தாங்கி
பெண்ணென்று பூமியிலே
பிறந்தவள் வந்தாள்காண்!

கண்கொண் டொருமுறை
கட்டழகைக் கண்டிட்டால்
மின்கொண்ட இடையேபோல்
மெலிந்தெவரும் போவர்காண்!

சோலை மலருக்குள்
சுகம்தீர்ந்து போனதென
சேலை மலரவளைச்
சுற்றிவரும் இளங்காற்று!

மோக இதழ்கூடி
மெல்ல உச்சரித்தால்
சாகாத படிக்கெந்த
மொழியும் மோட்சம்பெறும்!

எட்டுவைக்கும் அன்னமவள்
எழிற்பாதச் சத்தங்கள்
தொட்டுவைக்க ஏலாமல்
தோற்றுவிடும் ஏழுஸ்வரம்!

முத்துவடக் கழுத்தழகில்
முனிவர்தம் நெஞ்சும்தான்
சத்தமிடும் நத்திவிடும்
சருகாகிச் செத்துவிடும்!

ஏகாந்த வெண்ணிலவும்
ஏந்திழை முகங்காணில்
மேகத்தில் கயிறுதிரித்து
முடித்துக்கொளும் தன்கதையை!

வாழைப்பூங் குருத்தெனவே
வளங்காட்டும் முலைதடத்தைக்
காளையர்கண் கடக்கேலாது
களைத்தங்கே தங்கிவிடும்!

தண்டை முழக்குமிசை
தனைக்குயில் கேட்டுவிடில்
தொண்டைக் கோளாறென
திசைபார்த்துப் பறந்துவிடும்!

இத்தனை அழகுந்தான்
இருந்து பயனென்ன?
பத்தினியாய் வாழப்
பாவிக்கு விதியில்லை!

பதின்மூன்று வயதுக்குள்
பெற்றார் மரணிக்க
கதியொன் றில்லாமற்
காரிகை நின்றாள்காண்!

திராவகக் குளத்தினில்
தள்ளாடும் தாமரைபோல்
சுறாவின் வாய்ப்பட்ட
சிறுவலை போல்;தினம்

வராதா நமக்குமொரு
வளமான வாழ்வென்றே
இராபல விழித்திருந்து
இமைகொட்டி ரணம்செய்தாள்!

காசிக்கும் போயிருப்பாள்
காளையாய்ப் பிறந்திருந்தால்!
வேசியின் வாழ்வன்றி
வேற்றுவழி கண்டிலள்காண்!

எப்படியோ கொடுவிதியால்
ஏய்த்திடப் பெற்றாள்காண்!
செப்பழகுச் சிலைமேனி
சந்தையிடை வைத்தாள்காண்!

மொட்டுவிழிப் பார்வைக்காய்
மூச்சுவாங்கி நின்றார்க்குப்
பட்டுடலை விருந்தாகப்
பாவிமகள் வைத்தாள்காண்!

ஊருக்குப் பொதுவாக
ஓடும்நதி யானாள்காண்!
சீர்கெட்ட நாய்களுந்தான்
சுகங்கண்டு வந்தார்காண்!

இடைவெளி இல்லாமல்
இரவெலாம் அவளுடலில்
தடம்பதிக்கும் முத்தங்கள்
தண்ணிலவுங் காணுங்காண்!

எண்ணியெண்ணி விடியுமட்டும்
வைத்திட்ட புள்ளிகளே
விண்மீன்கள் எனச்சொல்லி
விடைகொண் டேகுங்காண்!

தாமதங் காணாமல்
தளிர்மேனி தனைத்தாக்கிக்
காமனவன் வில்லுந்தான்
களைப்புற்றுப் போகுங்காண்!

மோக விதைவிதைத்து
முப்போதும் நீர்பாய்ச்சி
ரோகப் பயிரங்கு
ரகசியமாய் வளர்ந்ததுகாண்!

தரங்கெட்டக் கைகளிலே
தவழ்ந்திருந்த காரணத்தால்
சுரங்கெட்டுப் போனதொரு
சுகவீணை யானாள்காண்!

முப்போதுங் குதித்திட்ட
தவளைகளின் தடங்களெலாம்
தப்பாமல் குளம்வற்றிப்
போனபின் தெரிவதுபோல்

ஓயாமல் அவள்தேகம்
உரைத்துவந்த காமத்தை
நோய்வந்து இப்போது
நினைவூட்டி நின்றதுகாண்!

தகாத உறவுக்குத்
தாழ்திறந்து வைத்ததனால்
புகாத நோயங்கு
புறையோடி விட்டதுகாண்!

இனிமேலும் இளைத்தற்கு
இயலாது எனும்படிக்கு
கனிமேனி மிகவற்றிக்
களையிழந்து நின்றதுகாண்!

தேன்தேன் எனச்சொல்லி
தேடிவந்த வண்டினங்கள்
வீண்வீண் எனச்சொல்லி
விலகிப் பறந்தனகாண்!

தொட்டணைக்க முப்போதும்
தாவிவந்த கைகளெலாம்
விட்டவளை இப்போது
வெகுதூரம் போயினகாண்!

திரிகருகித் திண்டாடும்
தீபத்தின் ஏக்கங்கள்
புரிகிறது என்பதுபோல்
பெருமரணம் அணைத்ததுகாண்!

தேன்குடித்த வண்டெலாம்
தேம்பியழக் கண்டவர்யார்?
பூவுதிர்ந்து போனதெனப்
புலம்பியழப் பார்த்தவர்யார்?

மங்காத எழிற்காட்டி
மனத்தை இழுத்தமுலை
சங்காக மாறிநாற்
சந்தியில் முழங்கிடவே!

தாளங்கள் இட்டுநெஞ்சைத்
தகர்க்கும் கொலுசிரண்டும்
ஓலங்கள் இட்டுபறை
ஓசையிற் கலந்திடவே!

தளதள வென்றிருந்த
தேகத்தின் மென்மையினை
மளமளவென் றெரியுந்தீ
மூலையில் முனகிடவே!

தொழுவதற் குரியகோவில்
திருச்சிலையாய் வாழயெண்ணி
அழுவதற்கும் நாதியிலா
அவிசாரி யானமகள்

போகின்றாள்; ஊர்கூடிப்
பிணத்தினைத் தான்தூக்கப்
போகின்றாள்; பாவியவள்
பாடையில் போகின்றாளே!


----------ரௌத்திரன்

கீதம்
11-10-2012, 08:43 AM
விலைமகளின் வாழ்க்கையை விலையில்லா எழுத்துக்கள் மூலம் மனத்துள் வலி புகுத்திவிட்டீர்கள். மிக நீண்ட கவியானாலும் வாசிக்க எளிமையாய், எளிதில் மனம் புகும் வண்ணம் இயல்பான வரிகளோடு, நெகிழ்த்தும் உணர்வுகளைக் கொண்டு அருமையாய் உள்ளது.

திராவகக் குளத்தில் தள்ளாடும் தாமரையெனும் உவமை, விண்மீன்களின் எண்ணிக்கைக்கு தண்ணிலவு தரும் விளக்கம், குளம் வற்றிப்போனப்பின் தெரியும் தவளைகள் குதித்த தடங்கள் என்று பல இடங்களில் பரவலாய்க் காணப்பட்ட கவிநயம் கண்டு வியந்தேன்.

பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள்.

ரௌத்திரன்
11-10-2012, 12:23 PM
அன்பு அக்காவுக்கு நன்றி---------------ரெளத்திரன்

செல்வா
11-10-2012, 06:04 PM
கவிநயம் வார்த்தைத் தெரிவுகள்
வர்ணனைகள் அருமை
எளிய கவிதை கனம் ஏற்றிச் செல்கிறது.
உங்கள் விரல்களுக்கு வார்த்தைகள் வளைந்து கொடுக்கும் அழகே தனிதான்.
உங்கள் கவிதைகளை சற்றுப் பொறாமையுடனே எப்போதும் இரசிப்பவன் நான் .

இந்தக் கவிதைக்கு வாழ்த்துச் சொல்ல ஏலவில்லை.

தொடருங்கள்.

சிவா.ஜி
11-10-2012, 08:24 PM
வசீகரிக்கும் வரிகள். விலைமகளை...இறப்புக்குப் பின்னராகிலும் கலைமகளாஉ ஆக்கிக் காட்டியக் கவிதை.

வாழ்த்துக்கள் ரௌத்திரன்.

பத்தினியும்,
பத்தினியாய் தன்னை பறை சாட்டிக்கொண்டவளும்
பத்திரமாய் நடமாட
சத்திரமாய் தன்னை ஈந்தவள்
சுத்தமாய்....செத்துப்போனாள்.....!!!

ரௌத்திரன்
12-10-2012, 06:52 AM
கவிநயம் வார்த்தைத் தெரிவுகள்
வர்ணனைகள் அருமை
எளிய கவிதை கனம் ஏற்றிச் செல்கிறது.
உங்கள் விரல்களுக்கு வார்த்தைகள் வளைந்து கொடுக்கும் அழகே தனிதான்.
உங்கள் கவிதைகளை சற்றுப் பொறாமையுடனே எப்போதும் இரசிப்பவன் நான் .

இந்தக் கவிதைக்கு வாழ்த்துச் சொல்ல ஏலவில்லை.

தொடருங்கள்.

நன்றி திரு.செல்வா அவர்களே!-------ரெளத்திரன்

ரௌத்திரன்
12-10-2012, 06:53 AM
வசீகரிக்கும் வரிகள். விலைமகளை...இறப்புக்குப் பின்னராகிலும் கலைமகளாஉ ஆக்கிக் காட்டியக் கவிதை.

வாழ்த்துக்கள் ரௌத்திரன்.

பத்தினியும்,
பத்தினியாய் தன்னை பறை சாட்டிக்கொண்டவளும்
பத்திரமாய் நடமாட
சத்திரமாய் தன்னை ஈந்தவள்
சுத்தமாய்....செத்துப்போனாள்.....!!!


நன்றி நண்பரே!-----------ரெளத்திரன்

HEMA BALAJI
13-10-2012, 02:03 PM
நீண்ட கவிதை படிக்கப் படிக்க இறுதி ஊர்வலத்தை கண்முன்னே நிறுத்தி மனம் நீண்ட நேரம் கனக்கவைத்த கவிதை...

கோபாலன்
19-11-2012, 07:34 PM
நன்றாக வார்க்கப்பட்ட கவிதை. மிகவும் அருமை :)

ந.க
20-11-2012, 03:24 AM
கள்குடங்கள் தாங்கி [/COLOR]

முப்போதுங் குதித்திட்ட
தவளைகளின் தடங்களெலாம்
தப்பாமல் குளம்வற்றிப்
போனபின் தெரிவதுபோல்

ஓயாமல் அவள்தேகம்
உரைத்துவந்த காமத்தை
நோய்வந்து இப்போது
நினைவூட்டி நின்றதுகாண்!


ஊர்கூடிப்
பிணத்தினைத் தான்தூக்கப்
போகின்றாள்; பாவியவள்
பாடையில் போகின்றாளே!


----------ரௌத்திரன்

கள் குடங்கள் - போதைக் கண்
தவளைத் தடங்கள் - வீணாய் நடந்து முடிந்த கூத்தொன்றின் மிச்சம்

அழகியல் குறியீட்டின் சொல் விளையாட்டு, ரசிக்க முடிகின்றது.


சுரங்கெட்டுப் போனதொரு
சுகவீணை யானாள்காண்!

சிதைக்கப்பட்ட சிற்பமொன்றின்-
பிஞ்சு மனிதமொன்றின் புதிய குரல்
விகாரப்பட்ட ஒலியெழுப்பும் வேறுபாட்டை
வேதனையோடு பார்க்க முடிகிறது.

இவ்விதமாய் நாசமாக்கப்பட்ட நாதியற்றரோருக்கான பிரார்த்தனையாய் உங்கள் எண்ணப் பதிவை பார்க்கின்றேன்.
இரக்கக் கண் கொண்டு இறைவன் இருப்பதால் உண்மையாய் அழமுடிகிறது.

'ஓடும்நதி யானாள்காண்! '

இவ்வரியில் கவி நயம் இருப்பின், நதிக்கு தவறிய வழியில் இன்பமளிக்கும் நிலையில் உள்ள பெண்ணை ஒப்பிடுவதில் எனக்கு ஒருமைப் பாடு இல்லை.

'சீர்கெட்ட நாய்களுந்தான்-'

இவ்வரியில் கோபம் இருப்பதில் நியாயம் இருக்கின்றது! பாராட்டுக்கள்.

முடிவில் ஊர் கூடித் தூக்குமா அவளை அல்லது ஊர் வெளியே வீசுமா என்பதை முடிவு வரிகளில் தர்க்கித்திருந்தால் சிறப்பாய் நிறைவாய் இருந்திருக்கும்.

நிர்கதியான பெண்ணைப் பராமரிக்க சமூகநலம் பேணாத அரசும் , அக்கறையற்ற ஊரும் வசைபாடப்பட்ட பெண்ணை உருவாக்கிய காரணிகள்.

உங்களில் பாவம் இல்லாதவன் கல் எறிவானாக புரட்சியாய் ஒரு சாந்த சொரூபியான இயேசு அவர்கள் சொன்ன வார்த்தை.

nandagopal.d
20-11-2012, 03:58 PM
அருமையான கவிதை நண்பரே வாழ்த்துக்கள்