PDA

View Full Version : கூண்டுக் கிளி



ரௌத்திரன்
10-10-2012, 07:15 AM
தூது செல்லத்
தோழி இன்றி
வாடும் உந்தன் தலைவியே! -நான்
எது சொல்ல?
என்ன சொல்ல?
யாவும் அறிவாய் தலைவனே!

கோவி லாக
இருந்த வீடு
காவல் நிலையம் ஆனதே! -அதில்
தாவி வந்த
சொந்த மெல்லாம்
கம்பி யாகிப் போனதே!

கனவில் உன்னைச்
சேர்வ தற்கும்
காவல் போடும் சுற்றமே! -நாம்
மனித ராகப்
பிறந்த தன்றி
செய்த தென்ன குற்றமே?

முகத்தை உந்தன்
முகத்தைப் பார்க்க
முடிய வில்லை கொஞ்சமே! -விரல்
நகத்தைப் போல
உயிரைக் கடித்துத்
துப்பத் தூண்டும் நெஞ்சமே!

எந்தக் குரலைக்
கேட்ட போதும்
காது ரெண்டும் கூசுமே! -அட
உந்தன் மடியில்
செத்து விட்டால்
சாவும் சுகந்தம் வீசுமே!

ஆவல் கொண்ட
நெஞ்சம் என்றும்
காவல் கண்டு நடுங்குமோ? -மழை
தூவும் நீல
வானம் என்றும்
வட்டத் திற்குள் அடங்குமோ?

தூக்கம் எந்தன்
கண்ணை விட்டுத்
தூரம் சென்று விட்டதே! -உன்
ஏக்கம் எந்தன்
உயிருக் குள்ளே
எருக்கம் பாலாய்ச் சொட்டுதே!

உள்ளே வாங்கும்
மூச்சுக் காற்றும்
உந்தன் பேரைச் சொல்லுதே! -அது
உள்ளே எரியும்
விரகத் தீக்கு
விசிறி யாகிக் கொல்லுதே!

தாயின் மடியும்
தணலாய் மாறிச்
சுட்டெ ரிக்கும் வேளையே! -உன்
தூய மார்பில்
சாய்ந்து விட்டால்
நெருஞ்சிக் காடும் சோலையே!

வேலி நூறு
போட்ட போதும்
வேந்தன் நிழலே இலக்காகும்! -நீ
தாலி கொண்டு
வரும்தி சைதான்
பாவை எனக்குக் கிழக்காகும்!



-------------ரௌத்திரன்

செல்வா
10-10-2012, 10:13 AM
திரையிசைப் பாடலுக்கு சிறு திருத்தங்களுடன் எடுத்துக் கொள்ளலாம் போல அழகாக இருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள் ரௌத்திரன்.

A Thainis
10-10-2012, 01:39 PM
திருமணத்தின் மாண்பு இக்கவிதையில் கொடிகட்டி பறக்கிறது

நாஞ்சில் த.க.ஜெய்
10-10-2012, 02:49 PM
பண்டைய கால மாண்பின் மணம் ...அழகான வரிகளில் தலைவியின் துயரம் வடிக்கும் பாக்கள்...சிறு குறிப்பு கவிதைகளை படிக்க அவகாசம் நேர்ந்தால் தங்கள் கவிதைகள் அனைத்தும் படிக்க இயலும் மிதமாக பதிக்கலாமே...

ரௌத்திரன்
11-10-2012, 06:57 AM
திரையிசைப் பாடலுக்கு சிறு திருத்தங்களுடன் எடுத்துக் கொள்ளலாம் போல அழகாக இருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள் ரௌத்திரன்.



மிக்க நன்றி நண்பரே-------ரெளத்திரன்

ரௌத்திரன்
11-10-2012, 06:58 AM
திருமணத்தின் மாண்பு இக்கவிதையில் கொடிகட்டி பறக்கிறது

மிக்க நன்றி நண்பரே-------ரெளத்திரன்

ரௌத்திரன்
11-10-2012, 06:59 AM
பண்டைய கால மாண்பின் மணம் ...அழகான வரிகளில் தலைவியின் துயரம் வடிக்கும் பாக்கள்...சிறு குறிப்பு கவிதைகளை படிக்க அவகாசம் நேர்ந்தால் தங்கள் கவிதைகள் அனைத்தும் படிக்க இயலும் மிதமாக பதிக்கலாமே...



மிக்க நன்றி நண்பரே-------ரெளத்திரன்