PDA

View Full Version : என்ன பெத்த மகராசி......ரௌத்திரன்
09-10-2012, 06:40 AM
பொறந்து ஒருமணி
====நேரம் ஆகுமுன்னே
இறந்து போகத்தான்
====விதிநெருங்கி வந்தமகன்!


மருத்துவச்சி எடுக்கையில
====கைநழுவி விழுந்ததில
மண்டையில அடிபட்டு
====மரணம்வரை போனமகன்!

"இதயத் துடிப்பெல்லாம்
====இறங்கிப் போயிருச்சி
இதுயினி பிழைக்காது"
====டாக்டர்கை விட்டமகன்!

முப்பது ரூபாய
====முழுசா நீட்டிவிட்டு
இப்பவே பொதச்சிருன்னு
====பெத்தவனும் சொன்னமகன்!

ஆண்பிள்ளை ஆச்சே!நு
====அழுத உன்தாயி
புலம்பிய புலம்பலால்
====பூமிக்கு மீண்டமகன்!

அழகுத் தமிழுக்கு
====ஆணி வேறான
பழநிவேல் முருகனருள்
====பட்டதனால் பொழச்சமகன்!

கரண்டுல வச்சிருந்து
====ரெண்டுநாள் போராடி
எமனோட பாசக் கயிறு
====அறுத்தெறிஞ்சி வந்தமகன்!

"என்னோட பிள்ளைக்கு
====என்னாச்சி சொல்லுங்க"
பெத்தவளே! நீபுலம்ப
====பக்கம்வந்து சிரிச்சமகன்!

ஒன்னுரெண்டு முறையில்ல
====வருஷத்துக் கொருதடவ
கண்ணாமூச்சி ஆடியாடி
====சாவுக்கும் சலிச்சமகன்!

அஞ்சாறு வயசுல
====கைகால் விளங்காம
திருநீறால் உடல்கழுவி
====திடமாக எழுந்தமகன்!

தேனா தமிழெடுத்து
====கவிஎழுதப் பொறந்தமகன்!
ஆனாலும் உன்ன
====அழவைக்க வந்தமகன்!

கொல்லப் பொறந்தவன
====கண்ணுக்குள் தினம்வச்சி
செல்லப் பிள்ளையின்னு
====செல்வாக்கா வளர்த்தவளே!

ஈயொன்னு என்மேல
====மொச்சாலும் நெஞ்சோட
ஈட்டிவந்து பாஞ்சதுபோல்
====துடியாகத் துடிச்சவளே!

விதிய வெறகாக்கி
====அடுப்பெரிச்சி வந்தவளே!
என்ன பெத்த மகராசி
====என்ன சொல்லி நானெழுத?

ஏட்டுல உன்னபத்தி
====எழுதாம போனாக்கா
தீட்டில்ல பட்டுவிடும்
====தங்கமகன் எழுத்தெல்லாம்?

உன்வயித்தில் பொறக்கத்தான்
====நான்செஞ்ச புண்ணியமென்ன?
என்னவயித்தில் சொமக்கத்தான்
=====நீசெஞ்ச பாவமென்ன?

மகனா நீயென்ன
====வயித்தில் சொமந்ததுக்கு
மலடியா இருந்திருந்தா
====மனச்சொமையும் உனக்கேது?

சுடுகாடு மட்டுமுன்ன
====தோளில் சுமக்கவா
பிள்ளைஒன்னு வேணுமின்னு
====பாவியென்ன பெத்தெடுத்த?

லட்சியம் பெருசுன்னு
====பெத்தவளே உன்னையும்
லட்சியம் செய்யாம
====ஒதுக்கிவிட்டு வந்தாலும்,

கனவில்நான் அழுதாலே
====கதறிஎழும் தாயுன்ன
நனவுல அழவிட்டு
====நெடுந்தூரம் வந்தாலும்,

மாரூட்டி வளர்த்தவுன்ன
====மனசொடிய விட்டாலும்
சோறூட்டி வளத்தவுன்ன
====சோதிச்சி நின்னாலும்,

பாசம் இல்லாத
====பாலைவனம் நானின்னு
பேசாத ஒருசொந்தம்
====பெத்தவளே நீதானே?

தூக்கி எறிஞ்சிநான்
====தூரம் போனபின்னும்
தூக்கிவச்சிப் பேசுகிற
====தூயவளும் நீதானே?

"கல்லாகிப் போகவில்ல
====கருவில்நான் சொமந்தமகன்
செல்லாத காசில்ல
====சாதிக்கப் பொறந்தமகன்"

இந்த வார்த்தைகள
====இனியவளே நீசொல்லும்
அந்த நேரமெல்லாம்
====அடிநெஞ்சு கதறுதம்மா!

தொண்டையில கட்டிவந்து
====ஆப்பரேஷன் செஞ்சிவந்து
தண்ணீரும் எறங்காம
====தாய்நீ தவிக்கையில,

"தலைச்சமகன் பாக்காம
====தலைகுனிஞ்சி போறான்டா
அடுத்தமகன் நேரமில்ல
====பாப்போம்னு சொல்றாண்டா"

பேச முடியாம
====எனக்குநீ சொல்லியழ
அடக்க முடியாம
====அழுதபடி நானும்வர,

"என்னதான் இருந்தாலும்
====எனக்கு ஒண்ணுன்னா
ஓடிவரும் ஒத்தமகன்
====இவன்போல எந்தமகன்?"

கண்ணீர் விட்டபடி
====பெருமையா சொன்னவளே!
மண்ணில்நான் புதஞ்சாலும்
====உன்னைநான் மறப்பேனா?

முகம்வாடி நான்நின்னா
====மனம்வாடி நீநிப்ப
மனம்வாடி நீநின்னா
====முகம்வாடி நான்நிப்பேன்!

ஊருக்குப் புரியாம
====போனாலும் என்மனசு
உனக்குப் புரிஞ்சிருக்கே
====உத்தமியே அதுபோதும்!

முத்தமிழ்க் கவியாக-நான்
====முடிசூட ஆசவைக்க
மூக்குத்தி அடகுவச்சி
====போய்வான்னு சொன்னவளே!

நாளைக்கு சாதிச்சி
====நானுயர்ந்து நின்னாலும்
வேளைக்கு ஊட்டிவிட
====உன்னவிட்டா யார்வருவா?

தங்கக் கரண்டியில
====தினம்நான் தின்னாலும்
வாய்க்கரிசி போலல்லோ
====வாயுணரும் வயிறுணரும்?

மேடையெல்லாம் மாலைபோட்டு
====மேதையின்னு புகழ்ந்தாலும்-அதுஎன்
பாடையிலே பூச்சரம்தான்
====பெத்தவநீ இல்லேன்னா!
------------ரௌத்திரன்

அன்புரசிகன்
09-10-2012, 06:55 AM
கொஞ்சம் சென்சிடிவ் ஆன கவிதையோ.. படிச்சு முடிக்க ஏதோ செய்யுது...

இது மதுரை சாயலோ????
புண்ணியமென்ன மட்டும் மாற்றப்படவேண்டும் என நினைக்கிறேன்.

ஆதவா
09-10-2012, 07:12 AM
:icon_b::icon_b:

ரௌத்திரன்
09-10-2012, 10:34 AM
நன்றி------------ரெளத்திரன்

ரௌத்திரன்
09-10-2012, 10:37 AM
கொஞ்சம் சென்சிடிவ் ஆன கவிதையோ.. படிச்சு முடிக்க ஏதோ செய்யுது...

இது மதுரை சாயலோ????
புண்ணியமென்ன மட்டும் மாற்றப்படவேண்டும் என நினைக்கிறேன்.
ஏன் மதுரையில மட்டும்தான்
இப்படி எழுதுவாய்ங்களோ?

வேலூரு வாசிக்கு
வண்டமிழ் வாராதோ?

"புன்னியம்"
உங்க "புண்ணிய"த்துல கண்டிப்பா மாத்திடலாம். மாத்த வேண்டியதுதான். நன்றி--------ரெளத்திரன்

அன்புரசிகன்
09-10-2012, 11:46 AM
ஏன் மதுரையில மட்டும்தான்
இப்படி எழுதுவாய்ங்களோ?

வேலூரு வாசிக்கு
வண்டமிழ் வாராதோ?


அட... சண்டைக்கு வந்திடாதீங்கோ... நமக்கு சென்னையைத்தவிர மிச்சம் எல்லாத்தையும் கூகிளில் தான் பார்த்திருக்கிறேன். (நாம பக்கத்து நாடுங்கோ...)

ஆமா வேலூர் ஆட்க்களின் பேச்சு எப்படியிருக்கும்.

நமக்கு தெரிந்தது மதுரை கோயம்புத்தூர் சென்னை போன்ற பேச்சுக்கள் தான்... :D

ரௌத்திரன்
09-10-2012, 12:00 PM
சிங்கார சென்னை பாஷ எப்பிடி இருக்குமோ அப்பிடித்தான் இருக்கும். ஆனா, நான் கொஞ்சம் வித்தியாசமானவன்.

வேலூர் காரனுங்களே பலபேர் என்ன வேலூர்னு நம்ப மாட்றானுங்க.

பெங்களூர்ல இருக்கும் போது ஒருத்தன் கேட்டான்.

"நீங்க கோயமுத்தூரா?"
"இல்ல"
"மதுரையா?"
"இல்ல"
"பொய் சொல்லாதீங்க நீங்க ஈரோடுதானே?"
"ஐயோ நான் வேலூருயா!"
"அடப்பாவி நம்ம வேலூரா நீ? தமிழ் நல்லா பேசறியே!"

இப்படித்தானுங்க இருக்கு என் பொழப்பு.

ஔவையார் பிறந்த தொண்டை நாட்டில் பிறந்த ஒருவன் அழகுத்தமிழ் பேசினால் ஆச்சர்யப்படுகிறார்கள். என்ன செய்ய? எல்லாம் என் தலையெழுத்து அல்ல தமிழின் தலையெழுத்து-----------ரௌத்திரன்

jayanth
09-10-2012, 12:30 PM
அட... சண்டைக்கு வந்திடாதீங்கோ... நமக்கு சென்னையைத்தவிர மிச்சம் எல்லாத்தையும் கூகிளில் தான் பார்த்திருக்கிறேன். (நாம பக்கத்து நாடுங்கோ...)

ஆமா வேலூர் ஆட்க்களின் பேச்சு எப்படியிருக்கும்.

நமக்கு தெரிந்தது மதுரை கோயம்புத்தூர் சென்னை போன்ற பேச்சுக்கள் தான்... :D

அன்பு...உங்களூரில் யாழ்ப்பாணத் தமிழுக்கும் மட்டக்களப்புத் தமிழுக்கும் எவ்வளவு விதியாசமோ அதுபோல் இங்கும் உண்டு. தமிழே இல்லா சென்னைச் செந்தமிழ், கொஞ்சம் மரியாதைக் குறைவான வட தென் ஆற்காட்டுத் தமிழ், கொஞ்சும் கோவைத்தமிழ், இழுத்த மதுரைதமிழ்,மரியாதையான திருநெல்வேலி தமிழ் மற்றும் மலயாள வாசமுடன் நாகர்கோவில் கன்னியாகுமரித் தமிழ் என்று பலவகையுண்டு...

jayanth
09-10-2012, 12:35 PM
என்ன பெத்த மகராசி......

நீ அவளுக்கு மகனல்ல...
அவள்தான் உனக்குத் தாய்...
தாய்ப் பாசத்தை மிஞ்சிய பாசம் வேறுண்டோ...???

கீதம்
13-10-2012, 12:28 PM
உள்ளத்தை முழுவதுமாய் உருக்கிவிட்டக் கவிதை. எல்லாத் தாய்களுக்கும் பிள்ளைகளிடத்தில் பாரபட்சம் உண்டாம். விலங்கின, பறவையினத் தாய்கள், தங்கள் பிள்ளைகளில் எந்தப் பிள்ளை வலிமையுடன் இருக்கிறதோ அதற்குதான் அதிகமாய் ஊட்டுமாம். (இனம் தழைக்கவேண்டுமே.. அவள்!)

மனிதத்தாய் மட்டும் வித்தியாசமானவள். எந்தக் குழந்தை நோஞ்சானோ, அதைத்தான் அதிகமாய் கவனிப்பாள். (இது எப்படித்தான் பிழைக்கப்போவுதோ... இவள்!)

தாயின் பாசத்தை எத்தனை வரிகளில் வடித்தாலும் நிறைவடையாது மனம். இங்கும் அப்படியே...

தாய்மை பாடும் அழகானக் கவிதைக்குப் பாராட்டுகள் ரௌத்திரன்.