PDA

View Full Version : என் செய்வீர் என்னை?



ரௌத்திரன்
08-10-2012, 12:10 PM
என் பிரியத்துக்குரிய
எதிரிகளே!

பேசுங்கள்!
பேசிக்கொண்டே இருங்கள்!

உயிர்விடுவரை
உங்களால் முடிந்தது
அதுமட்டும்தான் என்பது
அனைவரும் அறிந்ததே!

பேசுங்கள்!

சப்தங்களால் மட்டுமே
தன் இருப்பை
நிரூபிக்க முடிந்த
சருகுகள் நீங்கள்

வாயை மூடியபடி
வாசத்தை மட்டுமே அனுப்பி
வாகை சூடும்
வண்ணமலர் நான்....

என்னை உங்களால்
என்ன செய்துவிட முடியும்
என்று நினைக்கிறீர்கள்?


உங்கள் எழுத்து
கடற்கரை நண்டுகள்
கால் நகங்களால் எழுதிய
கிறுக்கல்கள்.

என் எழுத்தோ
கால தேவனின்
கையெழுத்து.....

என்னை உங்களால்
என்ன செய்துவிட முடியும்
என்று நினைக்கிறீர்கள்?



என் கர்வம்
கற்பு நெறி தவறாத
குலமகளின் முந்தானை

விலகவும் விலகாது
விலக்கவும் முடியாது.

அது
உண்மைக் கவிஞனுக்கே
உரித்தான ஒன்று.

வேசியிடம் ஒட்டாத
வெட்கத்தைப் போல
அது
உமக்குச் சாத்தியமில்லை!


என் கர்வத்தின் உயரம்
என் தமிழின் விஸ்வரூபம்
என்று கொள்க.

அதே நேரம்
எனக்கு எவனும்
பணிவைப் பற்றியும்
பாடமெடுக்க வேண்டியதில்லை.

எப்படி
கர்வம் எனக்கு
கிரீடமாய் இருக்கிறதோ

அப்படியே
பணிவு எனக்குப்
பாதமாய் இருக்கிறது.

ஆம்,
புத்தனுக்கு எவனும்
புலனடக்கத்தைப்
போதிக்க வேண்டிய அவசியமில்லை!

என் மதிப்புக்குரிய
எதிரிகளே!

இவன்
மௌனமாய் இருக்கிறானென்று
மமதையில் ஆடாதீர்கள்!

வில்லின் நாண்
பின்வாங்குவது
பயத்தினால் அல்ல.

அம்பின் வேகத்தை
அதிகப் படுத்தவே......

சமுத்திரத்திற்கு கரை
சம்பிரதாயத்திற்குத் தான்
பொங்கி எழுந்துவிட்டால்
புழுதியும் மிஞ்சாது.....

என் மரியாதைக்குரிய
எதிரிகளே!

மீண்டும் சொல்கிறேன்

உங்களால்
என்
மகுடத்தையல்ல
மயிரைக் கூட
அசைத்துவிட முடியாது...

இவன்
தமிழின் தலை!

எவன் முன்பும்
எதற்கும்
குனிந்து நிற்க மாட்டான்.

இவன்
கன்னித் தமிழின்
கால்கள்!

காலங்கள் தாண்டி நடைபோடுவான்
எவனும் தடுத்துவிட முடியாது.



------------ரௌத்திரன்

சுகந்தப்ரீதன்
08-10-2012, 05:54 PM
கர்வத்திற்கும் தலைகணத்திற்கும் மயிரிழையில்தான் மாற்றமே நிகழ்கிறது.. அந்த உண்மையை உணர்ந்து ஒரு கொள்கை கவிஞனின் கர்வத்தை மிக அழகாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்... காலம் இவனை கரைக்காமல் இவனிடம் கரைந்து போக எமது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.!!:icon_b:

தங்களின் நூல்வெளியீடு வெற்றிகரமாக முடிந்ததா நண்பரே.. தங்களின் மீள்வரவை கண்டு மிக்க மகிழ்ச்சி..!!:)

ரௌத்திரன்
09-10-2012, 05:11 AM
"பௌர்ணமி அலைகள்" ஆனந்த ஆரவாரத்தோடு வெளியானது தோழரே!

உங்கள் அன்பு கனிந்த பாராட்டுக்கும் விசாரிப்புக்கும் எனது நன்றிகள்------ரௌத்திரன்