PDA

View Full Version : வெறுப்பு விஜய் கவிதைகள்veruppuvijay
03-10-2012, 09:46 AM
புள்ளியாகத் தெரிந்து
வளர்ந்து பின்னோக்கி நகர்ந்தன
மரங்கள்
கடிகாரத்தின் நகர்த்துதலில்
இடைநின்று கொண்டிருக்கிறேன் நான்

veruppuvijay
03-10-2012, 10:06 AM
ஒரு புகை ஊதி முடித்தபிறகு
அருகேயிருப்பவரின் நாசியில்
வாசம் கமழ்ந்து உள்ளிழுக்கிறது
ஊர்நாயின் ஈரல்துளையில்
ஸ்வாசங்களின் தழுவல்களாய்
படிந்துகொள்ளுகிறது
நிகோடின் கலந்த மொட்லியை
உருவாக்கி ஊதுகிறாள் சிறுமி
காயாத கங்கினைச் சுவைக்கிறது
முத்தமிடாத இளம் உதடு
தட்கல் முறையில் பெர்த் கன்ஃபர்ம்
செய்கிறது புற்று

மேலும்
ஒரு புகை ஊதி முடித்தபிறகு
அங்கே அமைதி நிலவுகிறது.

veruppuvijay
03-10-2012, 10:26 AM
அந்த கோபம்
தன்னைக் கடிந்து கொள்ளுகிறது
நாணிச் சிவந்து
வெட்குகிறது
தனது உடலத்தின் நிறத்தினை
மாற்றியமைக்க முயலுகிறது
ஒரு பெண்ணைப் போலவே
இருக்கவேண்டுமென நினைக்கிறது
சிதறியோடும் சிரிப்பைப் போல
தனது உடைமையை மாற்றிக் கொள்ளுகிறது
ஒருமுறையேனும் கவிழ்ந்திசைய
முயற்சி பண்ணுகிறது.
தூய்மையான லக்கினத்தை
அடைய முற்படுகிறது.
ஒரு மழைநாளில்
கரைந்து போய்
தனது இருப்பைக் காட்டி
உதட்டைக் கடித்துக் கொள்கிறது
மேற்சொன்ன
அந்த கோபம்

veruppuvijay
03-10-2012, 10:56 AM
ஒரு நீண்ட PVC குழாயின் முனையில்
கண் வைத்துக் காண்கிறாள்
Syntex தொட்டிக்குப் பின்
நெடிது வளர்ந்து நிற்கும்
இளமரம்
பின்னே ஒரு புது மின்சார கம்பமும்
கழன்றுவிழக் காத்திருக்கும் கலசகோபுரமும்
தெரிவதாகச் சொல்லுகிறாள்
மேலும் என்றேன்
”இரண்டு புகையூதி அண்ணாக்கள்
புத்தகப்பை பெண்
Share autoக்களின் காத்திருப்பு
இவையாவும்” - அவள்
மேலும் மேலும் என்றேன்
சாலை முழுக்க
புகை கக்கிகள் படுத்துருள
சவத்தின் மேலே மிதித்துச் செல்லும்
கால்கள் தெரிகின்றன என்று
புதிதாய் ஏதோ சொன்னாள்
குழாயின் விட்டத்தில்
சுருங்கிக் கிடக்கிறது அவளின் உலகம்.

veruppuvijay
03-10-2012, 11:13 AM
சிவந்த பங்களாவில் கதவுகளைத் திறந்து
ஓடிவருகிறார் கமலஹாசன்
பா...ப்பப்..பாபாப் பபப் பா..........
ஸ்ரீதேவியின் முத்திய மூக்கு
காலிழந்த கொக்கின் வாயில் மீன்
துடிக்கத் துடிக்க ஸ்பரிஷம் இழந்து
இறுதிச் சொட்டு குளத்து நீர்
வடிய தொண்டையின் வழுவழுப்பில்
எக்கி எக்கி
கொக்கின் இரைக்கான போராட்டத்தில்
தந்தன.. தந்தன... தான தந்தன... தன்னானா...
சிப்பியிருக்குது முத்துமிருக்குது
திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
குரல் கம்மி பாடல் முடியவிருக்கும் தருவாயில்
எப்படியோ தப்பி குளத்திலறங்கி
வாய்திறந்து நீர்குடிக்கும்
ஐபேட் கிழவனின் தூண்டிலில்
எதுவும் சிக்காமல் போகிறது
ஒரு Photographer
காத்துக் கொண்டிருக்கிறார்.

நாஞ்சில் த.க.ஜெய்
03-10-2012, 11:16 AM
கவிதைகள் ஒவ்வொன்றும் அருமைஅதிலும் புற்றுநோய் மற்றும் கோபம் கூறும் வரிகள் ..ஒரு வேண்டுகோள் தமிழில் கவிதை படைக்கும் போது ஆங்கில கலப்பு வேண்டாமே..

veruppuvijay
03-10-2012, 11:29 AM
கவிதைகள் ஒவ்வொன்றும் அருமைஅதிலும் புற்றுநோய் மற்றும் கோபம் கூறும் வரிகள் ..ஒரு வேண்டுகோள் தமிழில் கவிதை படைக்கும் போது ஆங்கில கலப்பு வேண்டாமே..

மிக்க நன்றி நாஞ்சில்.த.க.ஜெய்

PVC, Syntex போன்றவற்றிகு தமிழ்படுத்துவதைவிடவும் ஆங்கிலமே சாலச்சிறந்தது என கருதுகிறேன்.

மேலும் உங்கள் கருத்தின்படி கூடுமானவரையில்ம் ஆங்கிலம் தவிர்க்க முயலுவேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
03-10-2012, 11:33 AM
புரிதலுக்கு நன்றி விஜய் அவர்களே..

veruppuvijay
03-10-2012, 01:52 PM
முருங்கை மர உச்சிக்கூடு
தலைதொங்கி இறந்து கிடக்கிறது
கருங்குஞ்சு
பறக்குமெனக் காத்திருக்கிறது
காகம்.


வீட்டு மரத்தில்....

நாஞ்சில் த.க.ஜெய்
03-10-2012, 02:09 PM
இந்த தாய் காகத்தின் இறக்கை கொய்யபட்டு விட்டதா என்ன?

veruppuvijay
03-10-2012, 02:24 PM
எனக்கு உங்கள் கேள்வி விளங்கவில்லை திரு.ஜெய். அவர்களே. கொஞ்சம் விளக்கமாகக் கேட்கமுடியுமா?

நாஞ்சில் த.க.ஜெய்
03-10-2012, 02:53 PM
எனக்கும் புரியவில்லை ..காகத்தின் கூட்டில் இருக்கும் இறந்த குஞ்சினை கண்ணீர் உகுக்காமல் வீட்டுமரத்தில்(இது என்ன வீட்டு மரம்) இருந்து என்ன செய்கிரது என்பதுதான் என் கேள்வி..அதைதான் அவ்வாறு கூறி உள்ளேன்..

veruppuvijay
03-10-2012, 03:19 PM
எனது வீட்டு முருங்கை மரத்தில் காக்கைக் கூட்டில் காக்கைக் குஞ்சொன்று இறந்து கிடந்தது. அதைவைத்து எழுதியிருக்கிறேன் இக்கவிதை. உங்களை கொஞ்சம் குழப்பிவிட்டேனோவென தோன்றுகிறது.

சுகந்தப்ரீதன்
03-10-2012, 07:21 PM
விஜய் உங்கள் கவிதைகள் அனைத்தும் எளிமையான தோற்றத்தில் ஆழ்ந்தசெறிவுடனும் பொலிவுடன் விளங்குகின்றன..!! தொடர்ந்து எழுத எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும்..!!:icon_b:

ஆமாம்... விஜய் படத்தால ரொம்ப பாதிக்கபட்டிருப்பீங்க போலிருக்கே... இல்லை பெயர் வித்தியாசமா இருக்கேன்னு சொன்னேன்..!!:)
ஒரு சின்ன வேண்டுகோள்.. அறிமுகதிரியில் தங்களை அறிமுகபடுத்திக்கொண்டு தொடரலாமே..?!

veruppuvijay
04-10-2012, 11:50 AM
நண்பரே உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள்.
தமிழகத்தில் விஜய்படங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களே?
அறிமுகத்திரியில் எப்படி அறிமுகப்படுத்துவது?

உங்கள் அன்புக்கு நன்றி.

veruppuvijay
04-10-2012, 12:06 PM
சிதறிக்கிடக்கிறது நிலவுகள்
நக்கிக் குடிக்கிறது தவளை
வானம் வலுக்கிறது.

சுகந்தப்ரீதன்
04-10-2012, 02:57 PM
அறிமுகத்திரியில் எப்படி அறிமுகப்படுத்துவது?
நண்பரே... இங்கே (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/38-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95) சென்று பார்த்துவிட்டு தங்கள் அறிமுகத்தை தாருங்கள்..!!:)

veruppuvijay
04-10-2012, 03:02 PM
நன்றி நண்பரே

veruppuvijay
04-10-2012, 03:17 PM
ஒரு காதல் கவிதை எழுதவேண்டி
மதமதவென வளர்ந்து பெருத்த ராட்ஷஷியின்
கண்ணுருண்டையுள் முத்தமிடுகிறேன்
ஆழியின் பெருஞ்சுழியென உன்
உந்திச்சுழி உள்ளதென காதுமடல்களில் ஓதிப்பார்க்கிறேன்
அடர்ந்து கருத்த வனமுலையாள் நீ
தொலைந்துவிடுவேனென சிலிர்த்துக் காட்டுகிறேன்
நீண்டு படுத்துயலும் மலைமுகடு உன்
சுயரூபத்தில் தெரிகுதடி என்றே ஆடிக்காண்பிக்கிறேன்
பூதனையின் மேல் குழந்தை ஊர்தல்போல
மேற்சென்று மெல்ல அவளிடம் இழக்கிறேன்
மேலும்
ஒரு காதல் கவிதை எழுதவேண்டி
அவள் கழுத்தை நெறிக்கிறேன்.

veruppuvijay
05-10-2012, 08:47 AM
குளம்பியினுள் சக்கரைக் கனத்தை
கரையக்கொடுத்த பொழுதிலிருந்து
இக்கவிதை துவங்குகிறது.
spoonனின் சுழற்சியில்
சொற்களெல்லாம் உதிர்ந்து
கோப்பைக்குள் விழுந்துவிட்டன.
அல்லது தற்கொலை செய்துகொண்டன
கருத்த குளம்பி நீரினுள்ளில்
சொற்கள் ஏது சக்கரைக்கனம் ஏது
பருகக் காத்திருக்கிறது கோப்பை
முடியுதிர்ந்துவிட்ட மரங்களைப் போலவே
வஸந்தம் பார்த்து நின்றுகொண்டிருக்கிறது நான்
கசப்பை உணர்ந்துவிட்ட தருணத்தில்
உதடுகள் சுழிக்கின்றன
முடித்துவிட்டு எழுந்து நிற்கிறேன்
இக்கவிதை முடியும் தருவாயில்
எனக்கு கைகளில் நீரள்ளிக்கொடுத்தார்
சுகுமாரன்

veruppuvijay
05-10-2012, 09:17 AM
வலிந்து எழுதப்படும் ஒரு கவிதையில்
சில சொற்கள் மட்டுமே தோன்றுகின்றன
சில படிமங்கள் தொடர்ந்து வருகின்றன
எத்தனை யோசித்தாலும்
உன் பெருவெளியை அடையமுடிவதில்லை
ஒரு கிணற்றுக்குள் அமர்ந்து கொண்டு
கவிதை எழுதுதல் போலும்
தவளையின் வாயில் தலைவிட்டு
கத்துகிறேன்.
தீரத்தீரத் தீராத சொற்கமண்டலம்
மாயமாக இருக்கிறது
அருகே நீயிருக்கிறாய்
கண்களில் கனன்று எரியும் தணலை
உன் எச்சிலில் துடைத்தெறிந்துவிட்டு
வாழ்வின் தீராத சுவையொன்றை
வலிந்து காட்டுகிறாய்
சுற்றியெழுப்பப்பட்ட பெருந்திரையினில்
தோன்றி விழுகின்றன
எண்ணற்ற கவிதைகள்

veruppuvijay
05-10-2012, 01:57 PM
தொடங்கிய இடத்தினில் சேர்தல்
முடிந்த இடத்தினில் துவங்கல்
பிரபஞ்ச முயக்கம்

veruppuvijay
08-10-2012, 04:47 PM
உதிர்ந்து விழும் சொற்கள்
நாணிச்சிவக்கிறது முகம்
அந்திமழை

சுகந்தப்ரீதன்
08-10-2012, 06:09 PM
தொடங்கிய இடத்தினில் சேர்தல்
முடிந்த இடத்தினில் துவங்கல்
பிரபஞ்ச முயக்கம்அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்
பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்..!!:icon_b:


உதிர்ந்து விழும் சொற்கள்
நாணிச்சிவக்கிறது முகம்
அந்திமழைஅந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது..!!:)

கவிதையெல்லாமே கலக்கலா இருக்கு விஜய்..!!

அமரன்
08-10-2012, 09:48 PM
உதிர்ந்து விழும் சொற்கள்
நாணிச்சிவக்கிறது முகம்
அந்திமழை

அய்..
விஜய் ஜொள்ளு வடிக்கிறார்..

veruppuvijay
09-10-2012, 05:33 AM
பாராட்டளித்த சுகந்தப்ரீதன் அவர்களுக்கும் அமரன் அவர்களுக்கும் நன்றி

veruppuvijay
09-10-2012, 01:54 PM
பொத்தலாக நனைந்து போயிருக்கிறது வீடு
மற்றும் நீ
தூங்கி வழிந்த திரைச்சீலையினை
முகம் தழுவ, நீர்ம ஆட்டத்தின்
முதல் காயை நகர்த்துகிறாய்
உன்மேல் உதிர்ந்து விழுந்த மழையை
உதடு குவித்து உறிஞ்சுகிறேன்
மழைகாணா ருசி
முயக்க வயிற்றின் பசியோசை

அவிழ்ந்தவிழ்ந்து விழுகின்றன துளிகள்
உடைகளைப் போல
புள்ளிவைத்தழிக்கும் ஆட்டத்தினை
துவங்குகிறாய்
முதல் வெற்றி உனக்கு
வீழ்தலே வெற்றி மழைக்கு!

தெறிக்கும் நீர்மத்தின் இளஞ்சூடு
மழையாக நீ
கையள்ளி பருகத் தருகிறாய்
குழைந்து வருகிறது மண்வாசனை
மேலும்
சகதி புரளும் மெத்தை
பதிவு செய்கிறது நம்மை

தீராது ஊறும் காதலில்
உன்னில் லயித்து
கொட்டுகிறது வெளியே

மழையாக நான்
நனைந்து போ

veruppuvijay
09-10-2012, 02:24 PM
மீனுக்காக காத்திருக்கிறது தக்கை
எனும் வரியுடன் துவங்கும் இக்கவிதை
முடிக்கவியலாத துக்கத்துடன்
தொக்கி நிற்கிறது
வறண்டு வெடித்த பாளங்களாய்
கற்பனையிருக்கென விலகிக் கொண்டான் கவிஞன்
தானே வளராமல் தோல்வி ஒப்புக்கொண்டு
தற்கொலை செய்து கொள்ள முயல்கிறது கவிதை
ஊரும் கோடையில் விழுந்து சாக
ஏரியில் நீரில்லையென
வரத்தற்ற நீர்ப்பாதையில்
சொல்நீட்டி - உறு
மீனுக்காக காத்திருக்கிறது தக்கை
எனும் வரியுடன் துவங்கும் இக்கவிதை

jayanth
09-10-2012, 02:36 PM
விருப்பமுடன் படித்தேன் கவிதைகளை...

veruppuvijay
09-10-2012, 03:27 PM
விருப்பமுடன் படித்தேன் கவிதைகளை...

மிக நன்றிங்க jayanth

veruppuvijay
09-10-2012, 03:28 PM
நாயின் சிறகுகள் மென்மையானவை
எனும் வரிகள் தவறெனச் சொல்லும்போது
நீ இழந்திருக்கிறாய்
அதன் மென்மையை
பரிதவிக்கும் சிறகுகளை
அந்த நாயை
மிக முக்கியமாய்
அந்த வரிகளை எழுதிய
என்னை

கீதம்
12-10-2012, 08:29 AM
மீனுக்காக காத்திருக்கிறது தக்கை
எனும் வரியுடன் துவங்கும் இக்கவிதை
முடிக்கவியலாத துக்கத்துடன்
தொக்கி நிற்கிறது
வறண்டு வெடித்த பாளங்களாய்
கற்பனையிருக்கென விலகிக் கொண்டான் கவிஞன்
தானே வளராமல் தோல்வி ஒப்புக்கொண்டு
தற்கொலை செய்து கொள்ள முயல்கிறது கவிதை
ஊரும் கோடையில் விழுந்து சாக
ஏரியில் நீரில்லையென
வரத்தற்ற நீர்ப்பாதையில்
சொல்நீட்டி - உறு
மீனுக்காக காத்திருக்கிறது தக்கை
எனும் வரியுடன் துவங்கும் இக்கவிதை

இந்தக் கவிதையை மிக மிக ரசித்தேன். எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை. எனினும் ஒரு அழகிய அனுபவத்தைத் தருகிறது.

எனக்குள்ளும் உறுகவிதைக்காய் காத்திருக்கும் தக்கைமனம், எப்போதுதான் வார்த்தைக்குளத்துக்குள் உள்ளிழுக்கப்படுமோ என்னும் கேள்வி எழுகிறது.

பாராட்டுகள் விஜய். தொடர்ந்து எழுதுங்கள்.

கீதம்
12-10-2012, 08:33 AM
நாயின் சிறகுகள் மென்மையானவை
எனும் வரிகள் தவறெனச் சொல்லும்போது
நீ இழந்திருக்கிறாய்
அதன் மென்மையை
பரிதவிக்கும் சிறகுகளை
அந்த நாயை
மிக முக்கியமாய்
அந்த வரிகளை எழுதிய
என்னைமனம் ஈர்த்த மற்றொரு கவிதை. என்னை நேசித்தல் என்பது என் சொல், செயல் எண்ணம், எழுத்து, கருத்து, கவிதை யாவற்றையும் யாதொரு ஐயமும் மறுப்பும் இன்றி எனைப் போலவே நேசித்தல் என்னும் எதிர்பார்ப்பில் பின்னப்பட்டதாய் நான் எண்ணும் இக்கவிதையும் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள்.

Sasi Dharan
12-10-2012, 01:58 PM
கவிதைகள் அனைத்தும்
வரிகளில் வீரியத்தோடு
இருக்கின்றன நண்பரின் பெயரைப்போல...
மிகத்தேர்ந்த வரிகள் அதிசயிக்க வைக்கின்றன...
பாராட்டுக்கள் கவிஞரே....

veruppuvijay
15-10-2012, 03:46 PM
இந்தக் கவிதையை மிக மிக ரசித்தேன். எப்படி விமர்சிப்பது என்று தெரியவில்லை. எனினும் ஒரு அழகிய அனுபவத்தைத் தருகிறது.

எனக்குள்ளும் உறுகவிதைக்காய் காத்திருக்கும் தக்கைமனம், எப்போதுதான் வார்த்தைக்குளத்துக்குள் உள்ளிழுக்கப்படுமோ என்னும் கேள்வி எழுகிறது.

பாராட்டுகள் விஜய். தொடர்ந்து எழுதுங்கள்.


மனம் ஈர்த்த மற்றொரு கவிதை. என்னை நேசித்தல் என்பது என் சொல், செயல் எண்ணம், எழுத்து, கருத்து, கவிதை யாவற்றையும் யாதொரு ஐயமும் மறுப்பும் இன்றி எனைப் போலவே நேசித்தல் என்னும் எதிர்பார்ப்பில் பின்னப்பட்டதாய் நான் எண்ணும் இக்கவிதையும் ரசிக்கவைக்கிறது. பாராட்டுகள்.

மிகவும் மகிழ்ச்சியானது மனம் உங்களது ஊக்கத்தினால். நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்.கவிதைகள் அனைத்தும்
வரிகளில் வீரியத்தோடு
இருக்கின்றன நண்பரின் பெயரைப்போல...
மிகத்தேர்ந்த வரிகள் அதிசயிக்க வைக்கின்றன...
பாராட்டுக்கள் கவிஞரே....

மிக்க நன்றின் சசிதரன். உங்களது ஊக்கமே எனது அடுத்த ஆக்கத்தின் பசிக்கு உணவு.

veruppuvijay
15-10-2012, 04:08 PM
முதிர்ந்து விழுகிறது இலைகள்
காகிதத் தரையில் சருகுத் தொட்டி
பூமியை வாசிக்கும் சிறுமி

veruppuvijay
17-10-2012, 06:44 PM
இந்த சொல்
கனத்து இருக்கிறது
முதுகில் சுமந்து செல்வதற்கில்லா
எடையுடன் இருக்கிறது
உலகின் முதல்நாள் வெளிச்சம் போல
பிரகாசமாக இருக்கிறது
ஹீலியப்பந்து போல
வெடிப்பதற்கு அழுத்தத்தோடு இருக்கிறது
சொற்களில்
மதர்த்து திரியும் திரிபுகள்
துப்பாக்கிகளாய் முன்னீட்டி நிற்கிறது.
கருத்த சிற்றறையில் அடைபட்டு
வெளிவரத்துடிக்கும் சிற்றுயிராய்
துடித்து நிற்கிறது
மேலும் சொல்வதென்றால்
இந்த சொல்
ஒரு சொல்லாகவே இருக்கிறது

veruppuvijay
17-10-2012, 08:05 PM
பெருங்கடலிலிருந்து கொண்டுவந்த நீரை
இந்த பாட்டிலில் அடைத்திருக்கிறேன்
எந்நேரமும் பொங்கி அலையும்
கடலின் ஆக்ரோஷம்
சிறிதேனும் இதனுள் இருக்குமோவென
பாட்டிலை விட்டு வெளியேறத் துடிக்காத
பெருங்கடல் நீரை
என்னோடே எங்கும் கொண்டு செல்கிறேன்
இப்போது கடல் என்னை பின் தொடர்கிறது.

veruppuvijay
17-10-2012, 09:12 PM
சங்கினுள் அடைபட்டு புரளும் அலை
எதைச் சொல்லுகிறது?
நூற்றாண்டுகளாய் கடலெழுதிய
கவிதைகளை பத்திரப்படுத்துகின்றனவோ
சங்குகள்?

---------------

காலங்காலமாய் இரகசியங்கள் படியும் அறை
கடலின் தீர்க்க முடியாத துவேசத்தின்
ஒரு பங்கு.

-------------

ஒரு சங்குக்கு இன்னொரு சங்கின்
இரகசியங்கள் தெரியும்
அலைபுரளும் சங்கதி தெரியவேணுமா
நீ மாறவேண்டும்
ஒரு சங்காய்..

-----------------

முற்றிலும் நீர் வடிந்த
இடம்புரிச் சங்கு
இரைக்கும் சப்தம்
கடலிடமிருந்த
சங்கிடமிருந்தா

-----------------

இடதோ
வலதோ
திரும்பிக் கிடக்கிறது தலை
வெட்கிச் சுருண்டு
சொருகியிருக்கிறது உடல்
பாலினம் காண
அதன் உறுப்புகள்
மறைந்திருக்கிறது
கடவுளரைப் போல

---------------

சங்கோசை
கேட்பதற்கு இனிமையானது
இப்போது அது
சாவுக்கு மட்டுமே ஊதப்படுகிறது.

---------------------

veruppuvijay
17-10-2012, 09:25 PM
வேட்டை..


இரைக்காக மானைத் துரத்தும்
இளஞ்சிறுத்தையை
வீட்டிற்குள் அழைத்து வந்தேன்
பார்த்த கணத்திலேயே அம்மா
மூர்ச்சையானாள்.
இதை எதற்கு அழைத்து வந்தாயென
அப்பா பயந்தோடினார்
தமக்கையர்களோ செய்வதறியாது
அதிர்ந்து நின்றனர்
சிறு சலனமுமின்றி இங்கே
அதை கூட்டி வந்திருக்கிறேன் பாருங்கள்
எத்தனை மிருதுவானது அதன் ரோமங்கள்
எத்தனை வலிமையானது பற்கள்

இக்கவிதைக்கு மூன்று முடிவுகளுண்டு

1. சிறுத்தை தெரியாவிடில்
அப்படி ஒன்றிருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்

2. சிறுத்தைகள் எதுவும் செய்வதில்லை
நீங்கள் மான்களன்றியிருந்தால்

3. வேட்டையாடும் இளஞ்சிறுத்தை எனும் படிமம்
மிக அழகானது.

veruppuvijay
17-10-2012, 09:31 PM
ஒரு நீலப்படம் பார்ப்பதற்கு முன்னர்
உடலெங்கும் குறுகுறுக்கும் உணர்வோடு
திரையினை அணுகுகிறேன்
ருதுவாகி இருக்கிறேனா என்பதை
சுயசோதனை செய்து கொள்கிறேன்
ரகசியமாய் பதுங்கியிருக்கும்
ஒரு மிருகத்தைக் கட்டவிழ்க்கிறேன்
திரையினுள் நுழைந்து அவனாக
அல்லது
அவளாக ஆகத்துடிக்கிறேன்
முடிவுறாது மேயும் விலங்கினை
பட்டிக்குள் அடைக்கப்பார்க்கிறேன்
முடிவினில்
நீலப்படங்கள் எனக்கு எந்தவொரு சுவையும்
கொடுப்பதில்லை யாதலால்
என்னை நானே தின்னத் துவங்குகிறேன்
வேகமாக
இன்னும் வேகமாக

veruppuvijay
17-10-2012, 09:33 PM
செதில் செதிலாய் சித்ரவதை செய்யப்பட்ட
கானக மரத்தின் மையத்தில்
புகுத்தப்பட்ட கரிக்கோல் துண்டில்
ஒளிந்துகிடக்கும் ஓவியங்கள்
ஒன்றொன்றாய் வெளியேறுகின்றன.
காட்டு மரங்கள்
ஒவ்வொன்றாய் வீழுகின்றன,

HEMA BALAJI
25-10-2012, 01:21 PM
ஒவ்வொரு படைப்பும் நேர்த்தியாக, வரிகள் ஒவ்வொன்றும் அதனுள் இன்னும் அடர்த்தி கூட்டிச் சேர்ந்து கவிதையாகியிருக்கிறது. என் அறிவுக்கு விமர்சனம் எழுதத் தெரியவில்லை. அப்பாற்பட்டு நிற்கிறது. வாழ்த்துக்களை மட்டும் பதிகிறேன். மேலும் தொடருங்கள். ரசித்துவிட்டாவது போகிறேன்.

ந.க
17-11-2012, 09:16 AM
கரியான காட்டின் சோகம் மட்டுமே..

கரியான காட்டின் சோகம்
என்னை திரும்பிப்பார்க்க வைத்தன -
இப்போதுதான் என்னை உரசிக்கொண்டு போன
கரிக்காற்றின் வெப்பத்தில்
நான் அடிபட்டுப் போனேன்.
ஆயினும்
சாம்பலாகாமல் என்னை மூடும்
எரிதழல்களை நான் விலைபேசிக்கொள்கின்றேன்
என்னை விற்க நான் ஒரு சந்தை தேடிக்கொள்கின்றேன்
மனிதம் உரிக்கப்பட்ட
இந்த காட்டில் விபசாரம்தான் விலை போகிறது
வெட்கத்தை விட்ட வேடிக்கை கூட்டம்
அன்பை அடைமானம் வைத்த மானமிழந்த
நிர்வானங்களில் தாகம் தீர்க்கின்றன.
கானலைக் கடலாய்க் கற்பிக்கும்

ஆயினும்
உண்மை வைரம் போன்றது என்பதால்
உறங்கிக்கிடக்கும் உயிர் முளையும் உச்சத்தைத் தொடும்
உள்ளங்காலில் மிதிபட உண்மை ஒன்றும் நீலம் அல்ல ........

உங்களின் கரித் துண்டு
கருத்துன்டங்கள் ..
காட்டின் தோல் உரிக்கப்பட்ட
ஜீவனின் மிச்சம்
அது எங்களின் எச்சரிக்கை
சிவப்புவிளக்கின் உண்மைத்தோற்றம்..
கரியாய் இருப்பினும்- அது சிவப்பே.

nandagopal.d
20-11-2012, 06:17 PM
நன்றாக இருக்கு நண்பரே

veruppuvijay
08-02-2013, 03:25 PM
கனச்சதுரமாய் விழுந்து
கிடக்கிறாள் பெண்
போராடும் பாகங்கள் கட்டப்பட்ட நிலையில்
முதுகுப்புறத்தினோரமாய்
கத்தியிலாலான பேனாவொன்றில்
கவிதை கிழிக்கப்படுகிறது
நரம்பும் சதையும் சக்கை சக்கையாய்
அறுத்தெடுத்து இரத்த வாசனை
முகர்தலில் ஒரு வெறித்தனம்
சுயபிரக்ஞையிழந்த அல்லது
தெளிவாக
கட்டமைக்கப்பட்ட செயல்தளம்
யுகயுகமாய் எழுதிய பின்னும் தீராத மை
போலவே அவள் சாகவுமில்லை
பெண்ணை வதைப்பது மிகவும் பிடித்தமாயிருக்கிறது
ஒரு ஆணுக்கு
அவளுக்கோ மயிற்பீலியின் சுரண்டல்
(என எழுதச் சொன்னார்கள்)
மொழிக்குப் புதிதான குறியீட்டில் கூக்குரலிட்டு
வன்புணர்ந்து தள்ளிய அவளின் இறவாபிணத்தை
துண்டாக்கப்பட்ட மொழியில் எழுதிக்கொண்டிருக்கிறேன்
ஒரு கவிதை
மென்மையாக அல்லது
மிக மிகக் கொடுமையாக.

ஜான்
08-02-2013, 04:50 PM
உயர் தரமான வார்த்தைகள்!!

கவிதை விளக்க வந்தது கடினமான கரு ..

veruppuvijay
25-11-2013, 05:22 PM
முன்குறிப்பு

இது
திருமணமாகாத
திருமணத்திற்கே வழியில்லாத
எந்த கெட்டப்பழக்கங்களுமில்லாத
நன்கு சம்பாதித்து உயரிய எண்ணங்களோடு
இருக்கும் ஒருவனின் கவிதை
சமுதாயத்தில் ஒரு முதிர்ந்த பிரம்மச்சாரிக்கு
ஏற்படும் சங்கடங்களையும்
அசெளகரியங்களையும்
காழ்ப்புணர்ச்சிகளையும்
(அப்படி ஏதுமில்லை என்றாலும் கற்பனையாகவேனும்)
இக்கவிதையில் நாம் காணப்போகிறோம்.
கவிதை படித்த ஒவ்வொருவரின் மனதிலும்
பிரம்மச்சரியம் கொடுமையானது என்பதை
உணர்த்தும் விதமாக வார்த்தைகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்
கவிதையை பெண்கள் மட்டுமே படிக்கவேண்டும் என்பது
கவிஞரின் எண்ணம் - (ஆண்கள் தவிர்த்துவிடலாம்)
இதன் எதிர்வினைகள் மிகவும் அழுத்தமாக இருக்கும்
யாரையும் குறிப்பிட்டு சொன்னதாக இருக்காது,
இதற்கு முன்பு இம்மாதிரியொன்றை
எங்கும் நீங்கள் படித்திருக்க முடியாது
நீங்கள் பெற்றோராகவோ
சமூகத்தில் பொறுப்புள்ள மனிதராகவோ இருக்கும்பட்சத்தில்
கனத்த இதயத்துடன் கவிதையைப் படிக்கவும்.

பின்குறிப்பு :

மிக முக்கியமான விஷயம்
இக்கவிதை ஆரம்பிக்கபடாமலேயே
முடிந்துவிடலாம்.

கீதம்
25-11-2013, 11:19 PM
கனச்சதுரமாய் விழுந்து
கிடக்கிறாள் பெண்
போராடும் பாகங்கள் கட்டப்பட்ட நிலையில்
முதுகுப்புறத்தினோரமாய்
கத்தியிலாலான பேனாவொன்றில்
கவிதை கிழிக்கப்படுகிறது

காகிதம் - சதுரம்....

கனச்சதுரம் - நோட்டுப்புத்தகம்?

கனச்சதுரத்தை பெண்ணென்று உருவகப்படுத்தியபின் கத்தியை பேனாவென்று குறிப்பிடவும் வேண்டுமோ?

கத்தியால் கிழிக்கப்படுகிறது ஒரு கவிதை - இது போதுமே.
பெண்ணை வதைப்பது மிகவும் பிடித்தமாயிருக்கிறது
ஒரு ஆணுக்கு
அவளுக்கோ மயிற்பீலியின் சுரண்டல்
(என எழுதச் சொன்னார்கள்)

அடைப்புக்குறிக்குள் இருப்பது நச்.


மொழிக்குப் புதிதான குறியீட்டில் கூக்குரலிட்டு
வன்புணர்ந்து தள்ளிய அவளின் இறவாபிணத்தை
துண்டாக்கப்பட்ட மொழியில் எழுதிக்கொண்டிருக்கிறேன்
ஒரு கவிதை
மென்மையாக அல்லது
மிக மிகக் கொடுமையாக.


இறவாபிணம் - புதிய சொல்லாடல்

மென்மையாகவோ வன்மையாகவோ... வாசிக்கக் கிடைத்துவிடுகிறது ஒரு அற்புதமான கவிதை.

அபாரம். பாராட்டுகள்.

கீதம்
25-11-2013, 11:29 PM
முன்குறிப்பு

இது
திருமணமாகாத
திருமணத்திற்கே வழியில்லாத
எந்த கெட்டப்பழக்கங்களுமில்லாத
நன்கு சம்பாதித்து உயரிய எண்ணங்களோடு
இருக்கும் ஒருவனின் கவிதை
சமுதாயத்தில் ஒரு முதிர்ந்த பிரம்மச்சாரிக்கு
ஏற்படும் சங்கடங்களையும்
அசெளகரியங்களையும்
காழ்ப்புணர்ச்சிகளையும்
(அப்படி ஏதுமில்லை என்றாலும் கற்பனையாகவேனும்)
இக்கவிதையில் நாம் காணப்போகிறோம்.
கவிதை படித்த ஒவ்வொருவரின் மனதிலும்
பிரம்மச்சரியம் கொடுமையானது என்பதை
உணர்த்தும் விதமாக வார்த்தைகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்
கவிதையை பெண்கள் மட்டுமே படிக்கவேண்டும் என்பது
கவிஞரின் எண்ணம் - (ஆண்கள் தவிர்த்துவிடலாம்)
இதன் எதிர்வினைகள் மிகவும் அழுத்தமாக இருக்கும்
யாரையும் குறிப்பிட்டு சொன்னதாக இருக்காது,
இதற்கு முன்பு இம்மாதிரியொன்றை
எங்கும் நீங்கள் படித்திருக்க முடியாது
நீங்கள் பெற்றோராகவோ
சமூகத்தில் பொறுப்புள்ள மனிதராகவோ இருக்கும்பட்சத்தில்
கனத்த இதயத்துடன் கவிதையைப் படிக்கவும்.

பின்குறிப்பு :

மிக முக்கியமான விஷயம்
இக்கவிதை ஆரம்பிக்கபடாமலேயே
முடிந்துவிடலாம்.

பின்குறிப்பை முன்குறிப்புக்கு முன்னால் வாசிப்பவர்கள் முன்குறிப்பை அலட்சியம் செய்துகடக்கும் சாத்தியம் உண்டு.

ஆழ்ந்து வாசித்தால் புலப்படும் வாய்ப்பு உண்டு முன்குறிப்புக்கும் பின்குறிப்புக்கும் இடையில் அரூபமாய் அடங்கிக்கிடக்கும் ஆதங்கக்கவிதையொன்று.

பாராட்டுகள் வெறுப்பு விஜய்.

veruppuvijay
28-04-2015, 11:31 AM
மென்மையாகவோ வன்மையாகவோ... வாசிக்கக் கிடைத்துவிடுகிறது ஒரு அற்புதமான கவிதை.

அபாரம். பாராட்டுகள்.

மிக்க நன்றி கீதம் அவர்களுக்கு.