PDA

View Full Version : தீராத பிரார்த்தனை ஒன்று...



HEMA BALAJI
29-09-2012, 01:47 PM
http://3.bp.blogspot.com/-niGagxB1F44/UGGBWM51HvI/AAAAAAAAA7M/1pih0ir1zCo/s1600/milky+way.jpg

தீராத பிரார்த்தனை தாங்கிய
காகிதத்துண்டு ஒன்று எட்டியபோது
கடவுள் மொழி புரியாதவராய்
இருந்தார்...

தீராத பிரார்த்தனையின்
குரல் ஒன்று கதறிய போது
கடவுள் காதுகளற்றவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனையின்
கண்ணீர்த் துளி ஒன்று
சொட்டிய போது கடவுள்
கண்களற்றவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனையின்
வலி ஒன்று அறைந்த போது
கடவுள் உணர்வுகளற்றாவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனை ஒன்று
தன் உருச்சிதைந்து
அழுகலின் நாற்றத்துடன் பரவியபோது
கடவுள் உணர்ச்சியற்றவராய் இருந்தார்

இப்படித் தீராத பிரார்த்தனைகள்
சுமந்து பால்வெளியில்
அலைந்து கொண்டிருக்கும்
காகிதத் துண்டுகள் எத்தனையோ?..

அவை என்றேனும் ஒருநாள்
பொழியக் கூடும் அமில மழையாக
கடவுளின் துகள்களையும் கரைத்துக் கொண்டு...

A Thainis
29-09-2012, 04:37 PM
உங்கள் அசாத்திய நம்பிக்கையால் அனைத்தும் வெற்றிபெறும், இக்கவிதயைபோல.

கீதம்
30-09-2012, 01:11 AM
தீராத பிரச்சனையாயிருந்த கடவுளின் துகள்கள் கூட இருப்பதாய்க் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட உலகில் தீராத பிரார்த்தனைகளைத் தீர்த்துவிடக்கூடிய கடவுளைக் கண்டுபிடிப்பது மட்டும் கைவசப்படவில்லையே....

தீர்க்கப்பட்ட பிரார்த்தனைகளோடு தானும் மறக்கப்பட்டுவிடுவோமென்பது கடவுளுக்குத் தெரிந்துவிட்டதோ? அதனால்தான் தீராத பிரார்த்தனைகளோடு சுற்றித்திரியும் காகிதங்களைக் கண்டுகொள்ள மறுக்கிறார் போலும்.

மனம் தொட்ட கவிதை. தம்மால் தீர்க்கவியலாத பிரச்சனைகளைக் கண்டு ஓடும் கடவுளின் கையாலாகாமையைக் கண்முன் உரித்துவைத்தக் கவிதைக்குப் பாராட்டுகள் ஹேமா.

சுகந்தப்ரீதன்
01-10-2012, 03:04 PM
கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை..!!:icon_rollout:

HEMA BALAJI
02-10-2012, 09:05 AM
பின்னூட்டியதற்கு நன்றி தைனிஸ், கீதம் மற்றும் சுகந்தப்ரீதன்.

இனியவள்
02-10-2012, 10:53 AM
தீராத பிரார்த்தணைகள் பல*
அதை தீர்த்து வைக்க*
பிரார்த்திகும் நிலையில்
நாங்கள் - அதை
தீர்க்க முடியா நிலையில்
அவன்...

அருமையான கவி
அதனுள் எனக்குள்
உதிர்த்தது ஒரு கரு
அதனால் உண்டானது
"இனிய போராட்டம்"

அழகிய கவிதைக்கு
என் அழகான வாழ்த்துக்கள்
ஹேமா பாலாஜீ