PDA

View Full Version : பனைமரத்திடலும், பேய்களும்

கீதம்
27-09-2012, 01:41 PM
பள்ளிக்கூடு விடுத்துப் பறக்கும்
பால்யநாட்களின் பகற்பொழுதுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள் யாவும்
பயத்தால் பின்னிக்கொள்ளும்
பனைமரத்திடல் பார்த்தமாத்திரத்தில்!

உச்சிப்பனையில் உட்கார்ந்திருக்கும் பேய்களுக்கு
உச்சிப்பொழுதே உகந்ததென்றும்
அச்சமயம் ஆங்கு நடமாடுவோரை,
கொடுங்கரங்களால் பாய்ந்து பற்றி,
கோரைப்பல்லால் கவ்விக்கொல்லுமென்றும்
பலியானவரில் ஒருவர்
தன் பக்கத்து வீட்டு மாமாவென்றும்
விழிவிரிய பாக்கியலட்சுமி சொன்னதெல்லாம்
வழித்துணையாய் வந்து பாடாய்ப்படுத்தும்.

சடசடவென்று சத்தமிட்டபடி,
படபடக்கும் ஓலைகளைப் பற்றித்தொங்கியபடி
வா வாவென்று பேய்கள் யாவும்
வரவேற்பதுபோல் தோன்ற....

தோளில் தொத்திக்கொண்டு
உடல் அழுத்தும் பயத்தை
எந்தக் கடவுள் பெயரால் விரட்டுவது
என்று புரியாமல் நொடிப்பொழுது குழம்பி,

அம்மா அறிமுகப்படுத்திய அம்மனைக் கொஞ்சமும்,
பள்ளியில் பரிட்சயமான
பரலோகத்திலிருக்கும் பரமபிதாவைக் கொஞ்சமும்
எதற்கும் இருக்கட்டுமென்று அல்லாவையும் கொஞ்சம்
அவசரமாய்த் துணைக்கழைத்தபடி
கண் இறுக்கி, காது பொத்தி,
கணவேகத்தில் கடக்கமுயலும்போதெல்லாம்
காற்றுக்கு வந்துவிடும் உற்சாகம்!

புழுதிகிளப்பியபடி, குப்பைகளால் கும்மியடிக்க,
வெக்கை தணிக்கும் வேகம் கொண்டதுபோல்
பனைமரம் யாவும் பக்கமிருக்கும் பழுத்த ஓலைகளால்
பலத்த சத்தத்துடன் விசிறிக்கொள்ள,

விழுந்தடித்துக்கொண்டு ஓடும் வேகத்தில்
கருவேலமோ, நெருஞ்சியோ
பாதம் கிழிக்கும் சுரணையுமற்று
வீடு வந்து சேர்ந்து,
விட்டிருந்த மூச்சைத் திரும்பப் பெற்றதொரு காலம்.

வாழ்க்கைப்பட்டு வேற்றூர் புகுந்து,
வாழ்க்கைப்பள்ளியில் வருடம் சில கழிந்து,
அச்சங்களின் ஆணிவேர்
அசைக்கப்பட்டுவிட்டிருந்தத் தருணமொன்றில்...
பரவசம் எதிர்நோக்க,
பனைமரத்திடல் கடந்தபோது பகீரென்றது!

மரங்களற்ற திடல் மயான அமைதி கொண்டிருக்க,
தகரப் பலகையொன்று தனித்து நின்றிருந்தது,
அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின்
அவசர வருகை சுட்டி!

மருகிய மனத்திடையே எழுகிறது ஓர் ஐயம்.
பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?

A Thainis
27-09-2012, 02:03 PM
:icon_b::icon_b::icon_b:கீதம் நீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்பதற்கு இந்த கவிதை ஒரு மேலான உதாரணம். கவிதையின் வரிகள் அமைப்பு பிரமாதம், இக்கவிதையில் நான் கண்டேன் ஒரு பிரமிப்பு, பரபரப்பு, படபடப்பு, திகைப்பு, விறுவிறுப்பு,ஆர்பரிப்பு. உங்களுக்கு என் மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள், இதுபோன்ற அரிய படைப்பை தொடர்ந்து தாருங்கள்.

ஆதவா
27-09-2012, 03:00 PM
வேற வழியில்லை... நாம்தான் பேயை உருவாக்கவேண்டும்!! நம் வீட்டருகே. (வீட்டிலேயே இருந்தால் தேவையில்லை :D)

ஜானகி
27-09-2012, 03:33 PM
அடுக்குமாடி கட்டிடத்தில் குடிபுகுந்த அந்தப் பேய்கள் மனிதர்களைப் பார்த்து அலறுமோ....? பொறுத்திருந்து பார்க்கலாம் !

அமரன்
27-09-2012, 08:51 PM
மொட்டை வெயிலில் உச்சிப்பனையில்
பெட்டை பெடிகளை பயங்காட்டிய பேய்கள்
அகத்துக்கு இடம் மாற்றப்பட்டன
பற்பல பெயர்கள் சூட்டப்பட்டு..

அதனால் தான்,
பனைமரங்கள் காணாமல் போய் விட்டன.
சீமெந்துக் காடுகள் பெருகிவிட்டன..

வளம் பற்றிச் சொல்லும் கவி
வளம் குன்றா மணி.

ராஜண்ணா
27-09-2012, 09:11 PM
//பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ? //

அட்டகாசமான கேள்வி.

குருவிகளும் காடைகளும் மயில்களும் கீச்சான்களும் இருவாசிகளும் பறந்து திரிந்த அகண்ட தமிழ் நிலத்தில், இன்று காக்கைகளும் பேரிரைச்சல் எழுப்பும் புறாக்கூட்டங்களுமே காணக் கிடைக்கின்றன. பேய்களைக் கூட பார்க்க முடியும். பறவைகளை காண முடிவதில்லை.

மரக்கொலை உயிர்க்கொலை. இனியாவது மாற வேண்டும் நம் எண்ணமும் செயல்களும். :)

M.Jagadeesan
28-09-2012, 01:01 AM
கவிதைக்கு கருவும், வடிவமும் மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் நீங்கள் எடுத்துக்கொண்ட கருவும் நன்று; அந்தக் கருவை வார்த்தைகளால் வடித்த விதமும் நன்று. பாராட்டுக்கள்.
இதுபோன்று பேய் நடமாடும் இடங்களைக் கடக்கும்போது துணையுடன் செல்வது நன்று; அந்தத் துணை மனைவியாக இருந்தால் எந்தப் பேயும் அருகில் அண்டாது.

கீதம்
28-09-2012, 01:36 AM
:icon_b::icon_b::icon_b:கீதம் நீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்பதற்கு இந்த கவிதை ஒரு மேலான உதாரணம். கவிதையின் வரிகள் அமைப்பு பிரமாதம், இக்கவிதையில் நான் கண்டேன் ஒரு பிரமிப்பு, பரபரப்பு, படபடப்பு, திகைப்பு, விறுவிறுப்பு,ஆர்பரிப்பு. உங்களுக்கு என் மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள், இதுபோன்ற அரிய படைப்பை தொடர்ந்து தாருங்கள்.

ஊக்கமளிக்கும் பாராட்டுக்கு மிகுந்த நன்றி தைனிஸ்.

கீதம்
28-09-2012, 01:37 AM
வேற வழியில்லை... நாம்தான் பேயை உருவாக்கவேண்டும்!! நம் வீட்டருகே. (வீட்டிலேயே இருந்தால் தேவையில்லை :D)

ஜகதீசன் ஐயா சொல்லியிருப்பதைப் பாருங்கள். விரைவில் உங்கள் வீட்டிலும் ஒரு பேய் குடிபுக என் வாழ்த்துக்கள். :)

கீதம்
28-09-2012, 01:38 AM
அடுக்குமாடி கட்டிடத்தில் குடிபுகுந்த அந்தப் பேய்கள் மனிதர்களைப் பார்த்து அலறுமோ....? பொறுத்திருந்து பார்க்கலாம் !

ரசனையானப் பின்னூட்டத்துக்கு நன்றி ஜானகி அம்மா.

கீதம்
28-09-2012, 01:40 AM
மொட்டை வெயிலில் உச்சிப்பனையில்
பெட்டை பெடிகளை பயங்காட்டிய பேய்கள்
அகத்துக்கு இடம் மாற்றப்பட்டன
பற்பல பெயர்கள் சூட்டப்பட்டு..

அதனால் தான்,
பனைமரங்கள் காணாமல் போய் விட்டன.
சீமெந்துக் காடுகள் பெருகிவிட்டன..

வளம் பற்றிச் சொல்லும் கவி
வளம் குன்றா மணி.

அமரப் பின்னூட்டம் கண்டு அகத்தில் மின்னோட்டம். நன்றி அமரன்.

கீதம்
28-09-2012, 01:41 AM
//பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ? //

அட்டகாசமான கேள்வி.

குருவிகளும் காடைகளும் மயில்களும் கீச்சான்களும் இருவாசிகளும் பறந்து திரிந்த அகண்ட தமிழ் நிலத்தில், இன்று காக்கைகளும் பேரிரைச்சல் எழுப்பும் புறாக்கூட்டங்களுமே காணக் கிடைக்கின்றன. பேய்களைக் கூட பார்க்க முடியும். பறவைகளை காண முடிவதில்லை.

மரக்கொலை உயிர்க்கொலை. இனியாவது மாற வேண்டும் நம் எண்ணமும் செயல்களும். :)

இயற்கைப் பிரியரான தங்கள் கருத்தாழமிக்கப் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன். மனமார்ந்த நன்றி ராஜண்ணா.

கீதம்
28-09-2012, 01:42 AM
கவிதைக்கு கருவும், வடிவமும் மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் நீங்கள் எடுத்துக்கொண்ட கருவும் நன்று; அந்தக் கருவை வார்த்தைகளால் வடித்த விதமும் நன்று. பாராட்டுக்கள்.
இதுபோன்று பேய் நடமாடும் இடங்களைக் கடக்கும்போது துணையுடன் செல்வது நன்று; அந்தத் துணை மனைவியாக இருந்தால் எந்தப் பேயும் அருகில் அண்டாது.

தங்கள் சுவைமிக்கப் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கும் பின்னூட்டமிட்டு அளித்த ஊக்கத்துக்கும் மனம் நிறைந்த நன்றி ஐயா.

கலைவேந்தன்
28-09-2012, 03:10 AM
மனிதனால் கட்டிவிடப்பட்டு மனிதனையே மாய்க்கும் பேய்கள் இன்று மலைக்கவக்கும் மாடிக்கட்டடங்களின் பகட்டான ஒளிதனில் எங்கேதான் ஒழிந்தனவோ..? :)

சிறுவயதில் பேய்க்கதைகளைக் கேட்டு தனிவழிநடக்கும்போது நடுங்காக மானிடர் உண்டோ என்பது ஐயமே. எல்லோர்வாழ்க்கையிலுமே நடந்து அரங்கேறி இருக்கும் இந்த அச்சவிளையாட்டிற்கு கீதமும் ஆளான கதை கவிதையாய் வாசிக்கும்போது அந்த பயம் தெளிந்தபின்னரும் கவிதை எழுதும்போது அந்த பயத்தை மீட்டுணர்ந்து எழுதிய கவித்திறத்தை வியப்பதா..? அந்த மனநிலையிலும் தற்போது அடுக்குமாடிக்கட்டடம் வரப்போகும் அறிவிப்பைக் கண்டு பேயென்றாலும் இரங்கும் பெண்மனத்தைக் காட்டியுள்ளார்.

அழகான கவிதைக்கு எனது அன்பான பாராட்டுகள் கீதம்..!

jayanth
28-09-2012, 03:24 AM
பகலென்றும் இரவென்றும் பாராமல் பயந்த காலமொன்றுண்டு...

பலவகைப் பயங்களின் பட்டியல்...
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/548321.gif (javascript:emoticonp('::)'))

மதி
28-09-2012, 05:24 AM
பலமாடிகட்டிடங்களால் புண்ணியம்
பேயொழிந்தன இப்பூமியில்

உங்க கவிதைய படிச்சிட்டு இருக்கும் போது வம்சம் படத்தில் வரும் காட்சி ஏனோ ஞாபகத்திற்கு வந்தது.

சுகந்தப்ரீதன்
28-09-2012, 11:20 AM
அன்றைய குழந்தைகளின் பால்ய நினைவுகள்.. இன்றைய குழந்தைகளுக்கு பகல் கனவுகள்..!!:)

இன்றைக்கு இணையத்தில் கண்டது...
கிராமத்தில் இருக்கும் பத்து ஏக்கர் நிலத்தை விற்றதில் வந்த படிப்பை வைத்து,
நகரத்தில் பத்துக்கு பத்து அளவில் வீடு வாங்கி குடியேறுவதில் முடிகிறது பலரின் வாழ்க்கை..!!

A Thainis
28-09-2012, 11:46 AM
அன்றைய குழந்தைகளின் பால்ய நினைவுகள்.. இன்றைய குழந்தைகளுக்கு பகல் கனவுகள்..!!:)

இன்றைக்கு இணையத்தில் கண்டது...
கிராமத்தில் இருக்கும் பத்து ஏக்கர் நிலத்தை விற்றதில் வந்த படிப்பை வைத்து,
நகரத்தில் பத்துக்கு பத்து அளவில் வீடு வாங்கி குடியேறுவதில் முடிகிறது பலரின் வாழ்க்கை..!!

இன்றைய குழந்தைகள் பெரும் அனுபவங்களை மிக தெளிவாக பதிவு செய்துள்ளார் சுகந்தப்ரீதன். இன்றைய வாழ்வு பூட்டிய அறைக்குள் இணையதளமுன் முடிவது வேதனை, இந்த சூழ்நிலைகளை நாம்தான் மாற்றியமைக்க வேண்டும். நாம் பெற்ற இன்பத்தை வரும் தலைமுறை என்றும் பெறவேண்டும்.:icon_b:

HEMA BALAJI
29-09-2012, 01:44 PM
கவிதைதான் அழகு என்றால் அதற்கு பின்னூட்டியவரின் பதில் பின்னூட்டத்திலும் கலக்கறீங்க கீதம்... ரசனையானவர் என்பதை அழுத்திச் சொல்கிறது உங்கள் வரிகள் அனைத்தும். வாழ்த்துக்கள் கீதம்..

ந.க
26-10-2012, 08:30 AM
எங்கள் மண்ணின் சொத்துக்கள் அந்த மரங்களும் வளமான மண்ணும் தான்....குத்தும் நெருஞ்சி கூட மூலிகைதான், எல்லாமிழந்து மூலியாய்ப் போச்சே, அருமையான சிந்தனை- அதில் பேயின் பங்கு பெரும் பங்கு..நன்றி.