PDA

View Full Version : மின்னஞ்சல் கதைகள் - 16 : முடா அல்லது சில அடிகள் முன்னால்....



பாரதி
20-09-2012, 05:50 PM
மின்னஞ்சல் கதைகள் - 16 : முடா அல்லது சில அடிகள் முன்னால்...


ஒரு சமயம் தாஜ் ஹோட்டல் குழுமம் திரு. மசாய் இமய் என்ற ஜப்பானியரை தங்கள் ஊழியர்களுக்கு வேலைத்தளத்தைக் குறித்த வகுப்பிற்காக வரவழைத்தது. ஹோட்டல் தொழில் நன்றாக நடந்து கொண்டிருக்கிறதே, இத்தொழிலுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத அந்த ஜப்பானியர் நமக்கு குறிப்பாக எதைக் கற்றுத்தந்து விடப்போகிறார் என்று ஊழியர்களுக்கு புரியவில்லை.

ஆனாலும் கூட திட்டமிட்டபடி, குறிப்பிட்ட நாளில் காலை 09:00 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக இருந்த அறையில் குழுமினர். மசாய் அங்கே கூடி இருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் பார்வைக்கு மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பவராகத் தோற்றமளிக்கவில்லை. அவர் பேசிய ஆங்கிலமும் சரியாக இல்லை. அவரது பேச்சானது, முதலில் ஜப்பானிய மொழியில் சொற்றொடரை அமைத்து, பின் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பேசுவதைப் போல இருந்தது.

“காலை வணக்கம். நாம் வேலையைத் தொடங்குவோம். வேலைத்தளத்தைக் குறித்த பட்டறை இது என்று எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த இடத்தைப் பார்த்தால் வேலை நடக்கும் இடமாக எனக்குத் தெரியவில்லை. ஆகவே வேலை எங்கு நடக்கிறதோ அங்கு செல்வோம். முதல் தளத்தின் முதல் அறையில் இருந்து நாம் தொடங்குவோம்” எனக் கூறிவிட்டு வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து அனுபவம் மிக்க மேலாளர்கள், பங்கேற்பாளர்கள், நிகழ்ச்சியை படமெடுக்கக்கூடிய குழுவினர் என அனைவரும் அவரைப் பின் தொடர்ந்தனர். முதல் தளத்தின் முதல் அறையில் ஹோட்டலின் சலவையகம் செயல்பட்டு வந்தது. அந்த அறைக்குள் நுழைந்த மசாய் சாளரத்தின் அருகே நின்று வெளியே பார்த்தார். “இங்கிருந்து பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறதே..!” என
வியந்தார்.

அங்கே வேலைபார்ப்பவர்களுக்கு அது ஏற்கனவே தெரியும். இதைச்சொல்லவா அவரை ஜப்பானில் இருந்து வரவழைத்தார்கள் என
எண்ணினார்கள். “இவ்வளவு அழகான காட்சியை காண வாய்ப்பிருக்கும் இந்த அறை சலவை அறையாக வீணடிக்கப்பட்டிருக்கிறது. சலவையகத்தை தரை அல்லது கீழ்த்தளத்திற்கு மாற்ற வேண்டும். இந்த அறையை விருந்தினர் அறையாக மாற்ற வேண்டும்” என்றார் மசாய்.

ஆஹா... இப்படி ஒரு எண்ணம் நம் யாருக்கும் எப்போதுமே தோன்றியதில்லையே என்று அனைவரும் எண்ணினர்.

மேலாளர், “சரி. அப்படியே செய்து விடலாம்” என்றார்.

“அப்படியானால் அதைச் செய்வோம்” என்றார் மசாய்.

“ஆம் ஐயா. நான் அதைக்குறித்து குறிப்பெழுதிக் கொள்கிறேன். பட்டறை குறித்த அறிக்கையில் அதை நாம் குறிப்பிடலாம்” என்றார் மேலாளர்.

“மன்னிக்கவும். இதைப்பற்றி குறிப்பெழுதுவதற்கு என்ன இருக்கிறது? நாம் அதை செயல்படுத்துவோம்... இப்போதே” என்றார் மசாய்.

“இப்போதேவா...?!” என்று வினவினார் மேலாளர்.

“ஆமாம். கீழ்த்தளத்தில் எந்த அறையை சலவை செய்யும் அறையாக மாற்றுவது என்பதை தீர்மானித்து இங்கிருக்கும் பொருட்கள், சாதனங்கள் எல்லாவற்றையும் உடனே அங்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி மாற்ற இரண்டு...மூன்று மணி நேரம் பிடிக்குமா..?” என்று வினவினார் மசாய்.

“ஆமாம்” என்றார் மேலாளர்.

“அப்படி என்றால் மதிய உணவிற்கு முன்னதாக இங்கே மீண்டும் வருவோம். அப்போது இங்கிருக்கும் எல்லாப்பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அறையில் மேசை, நாற்காலி, தரை விரிப்பு உட்பட எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருக்க வேண்டும். இன்றிலிருந்தே இந்த அறையை விருந்தினர்களுக்கு வாடகை விடுவதின் மூலம் சில ஆயிரம் ரூபாய்களை சம்பாதிக்க முடியும்” என்றார் மசாய்.

“அப்படியே ஐயா...” என்று உரைப்பதைத் தவிர மேலாளருக்கு வேறு வழி இருக்கவில்லை.

அடுத்ததாக அவர்கள் சென்றது சமையற்கூடத்திற்கு. அவருடனே கும்பலும் சென்றது. நுழைவாசலின் அருகே இரண்டு பெரிய தொட்டிகளில் கழுவப்பட வேண்டிய தட்டுகள் இருந்தன. மசாய் அவருடைய மேலங்கியை கழற்றி விட்டு, உடனே தட்டுகளை கழுவ ஆரம்பித்தார்!

அதை கண்டதும் என்ன செய்வது என்று விளங்காத மேலாளர் “ஐயா... என்ன இது! என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஏன்..? தெரியவில்லையா..? நான் தட்டுகளைக் கழுவுகிறேன்” என மசாய் பதிலளித்தார்.

“ஆனால்.... இதைச்செய்ய ஆட்கள் இருக்கிறார்களே?” என்றார் மேலாளர்.

தட்டுகளைக்கழுவிக் கொண்டே, “இந்த தொட்டிகள் தட்டுகளை கழுவுவதற்காக வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே தட்டுகளை வைப்பதற்கு தனியாக அலமாரி இருக்கிறது. அங்கேதான் தட்டுகள் வைக்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன்” என்றார் மசாய்.

அனைவரும் இதைச் சொல்வதற்கு ஒரு ஆலோசகர் தேவையா என்று எண்ணினார்கள்.

அந்த வேலையை முடித்த பிறகு “எத்தனை தட்டுகளை இங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று மசாய் கேட்டார்.

“நிறைய வைத்திருக்கிறோம். எப்போதுமே தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாதல்லவா..?” என்ற பதில் அவருக்கு கிடைத்தது.

“ஜப்பானிய மொழியில் ஒரு சொல் இருக்கிறது - ‘முடா’. முடா என்றால் தாமதம், முடா என்றால் தேவையற்ற செலவு செய்வது என்று பொருள். இன்று நாம் கற்றுக்கொள்ளும் பாடம் - அந்த இரண்டையும் எப்படித் தவிர்ப்பது என்பதாகும். நீங்கள் நிறைய தட்டுகளை வைத்திருக்கிறீர்கள் என்றால் அவற்றைக் கழுவுவதற்கு நேரம் அதிகமாகும்; தாமதம் ஏற்படும். அதை தவிர்க்க முதல்படி -அதிகப்படியான தட்டுகளை எல்லாம் அகற்ற வேண்டும்” என்றார் மசாய்.

“சரி. அப்படி செய்யலாம் என அறிக்கையில் குறிப்பிடுவோம்” என்றார் மேலாளர்.

“இல்லை. அறிக்கை எழுதுவதற்காக நேரத்தை வீணடிப்பதும் ‘முடா’தான். தேவைக்கு அதிகமான தட்டுகளை எல்லாம் உடனடியாக ஒரு பெட்டியில் அடுக்கி, தாஜ் நிறுவனத்தின் பிற கிளைகளில் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு அனுப்பி விடலாம்” என்றார்.

“இப்படியாக இங்குள்ளவற்றில் எங்கெல்லாம் ‘முடா’ ஒளிந்திருக்கிறது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்” என்றும் கூறினார் மசாய்.

அதன் பின் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு நாளிலும் அவர் எப்படி ‘முடா’வை கண்டு பிடிக்கிறார் என்பதிலும், அதை எப்படி தவிர்ப்பது என்பதை தெரிந்து கொள்வதிலும் அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.

கடைசி நாளில் ஒரு கதையைக் கூறினார்: “வேட்டையாடுவதில் ஆர்வம் மிக்க ஒரு ஜப்பானியரும் ஒரு அமெரிக்கரும் ஒரு காட்டில் சந்தித்துக்கொண்டார்கள். அவர்கள் இருவரும் இணைந்து அடர்ந்த காட்டிற்குள் சென்று வேட்டையாடினார்கள். ஒரு கட்டத்தில் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளில் ரவை தீர்ந்து விட்டதை அறிந்தார்கள். அந்நேரத்தில் திடீரென்று ஒரு சிங்கத்தின் கர்ஜனை அவர்களுக்கு கேட்டது. உடனே இருவரும் ஓட ஆரம்பித்தார்கள். இடையில் ஜப்பானியர் ஒரு கணம் நின்று, தன் தோள்பையில் இருந்து ஓடும் போது அணிவதற்கான காலணிகளை எடுத்து வேகமாக அணிந்தார். அமெரிக்கர் அவரிடம் சென்று ‘இப்போது என்ன செய்கிறாய்? முதலில் நம்முடைய வாகனத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம்” என்றார். அதற்கு அந்த ஜப்பானியர் “இல்லை நண்பா.. உனக்கு முன்னதாக நான் ஓடுகிறேன் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம்.” என்று கதையை முடித்தார் மசாய்.

ஆர்வத்துடன் அக்கதையைக் கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் சடாரென அப்போதுதான் விளங்கியது - தனது இரையைப் பிடித்து விட்டால் சிங்கம் நின்று விடும் என்பது!

“நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், இன்றைய உலகில் போட்டிகளும் சவால்களும் மிக அதிகம். மற்றவர்களைக் காட்டிலும் சில அடிகளாவது முன்னே இருப்பதை உறுதி செய்வது அவசியமாகிறது. உற்பத்திச் செலவுகளை குறைத்து, எப்போதும் சிறந்த தரத்தில் தருவதே குறிக்கொள் என்பதை நினைவில் கொண்டால் பல உலக நாடுகளைக் காட்டிலும் பல காத தூரம் முன்னதாக இருப்பீர்கள்” என்று முடித்தார் மசாய்!



நன்றி : ஆங்கில மூலத்தை மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு.

நிகழ்வு : உண்மையாக நடந்தது என அஞ்சலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

jayanth
21-09-2012, 04:25 AM
படித்தவுடன் நானும் என்னுள் இருக்கும் "முடா"க்களை பட்டியலிட,மன்னிக்கவும் செயல்பட ஆரம்பித்துவிட்டேன்...

பகிர்விற்கு நன்றி...

கீதம்
21-09-2012, 04:40 AM
உழைப்புக்குப் பெயர் பெற்ற ஜப்பானியர்களின் பிரதிநிதியாய்த் தெரிகிறார் திரு.மசாய் இமய். மற்றவர்களை விட ஒரு படி முன்னே இருப்பதற்கானக் காரணத்தை மிகத் தெளிவாகவே சொல்லிவிட்டார். செய்யவேண்டிய பல வேலைகளையும் அப்புறம் அப்புறம் என்று ஒத்திப்போட்டு பிறகு அதை மறந்தே விடுகிறோம். அவ்வாறின்றி உடனுக்குடன் செய்துவிடுவதே முன்னேற்றத்துக்கான வழி என்னும் அருமையான செய்தியைக் கொண்ட இப்பதிவைத் தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி பாரதி அவர்களே.

சுகந்தப்ரீதன்
21-09-2012, 06:40 AM
நல்லதொரு படிப்பினையை பகரும் பதிவு..!!

பகிர்வுக்கு நன்றியண்ணா..!!:)

பாரதி
21-09-2012, 02:35 PM
கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி ஜெயந்த், கீதா, சுகந்தப்ரீதன்.
எனக்கும் கூட, இன்றைக்கே இன்னுமொரு மொழியாக்கம் செய்யத்தூண்டியது இக்கதையே!

நாஞ்சில் த.க.ஜெய்
21-09-2012, 02:38 PM
நம்மிடம் உள்ள தவறுகளை நயமாய் உரைத்து செய் அதுவும் இன்றே செய் நன்றே செய் எனும் பொன்மொழிக்கெற்ப திரு.மசாய் இமய் அவர்களின் செயற்பாடு நம்முள்ளும் தோன்றினால் நன்று...பகிர்தலுக்கு நன்றி..

கலைவேந்தன்
21-09-2012, 04:34 PM
சிந்திக்கவும் செயலாற்றவும் வைத்த கதை.