PDA

View Full Version : எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!i



M.Jagadeesan
11-09-2012, 05:20 AM
கொடுமையிலும் கொடுமை எதுவென்று கேட்டால்
வாழ்ந்து கெடுவதே வாழ்க்கையில் கொடுமையாம்.

தப்புக்கு மேலே தப்புகள் செய்து
குப்புற விழுந்து கூழுக்கு அல்லாடும்
கப்பிய வறுமை வந்த பொழுதினில்
எப்படி இருந்தநான் இப்படி ஆயிட்டேன்! என்று
எண்ணிப் புலம்புவதில் ஏதும் பயனில்லை!

குடலை எரிக்கும் மதுவைக் குடித்து
உடலின் வனப்பை இழந்த பின்னர்
எப்படி இருந்தநான் இப்படி ஆயிட்டேன் என்று
எண்ணிப் புலம்புவதில் ஏதும் பயனில்லை

மைவிழி மாதர் மையலில் சிக்கிக்
கைப்பொருள் இழந்து தெருவுக்கு வந்தபின்
எப்படி இருந்தநான் இப்படி ஆயிட்டேன் என்று
எண்ணிப் புலம்புவதில் ஏதும் பயனில்லை.

வரவுக்கு மேலே செலவுகள் செய்து
உறவுகள் எல்லாம் கைவிட்ட பின்னர்
எப்படி இருந்தநான் இப்படி ஆயிட்டேன் என்று
எண்ணிப் புலம்புவதில் ஏதும் பயனில்லை.

செப்படி வித்தையல்ல வாழ்க்கை என்பது
கண்ணிமைக்கும் நேரத்தில் காருடன் வீடும்
வண்ண உடைகளும் வகையுடன் வருவதற்கு!
எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல
இப்படித்தான் வாழணும் என்பதே வாழ்க்கையாம்!
தப்படி தப்படியாய் முன்னேறும் வாழ்க்கையில்
தடுமாற்றம் இருந்தாலும் சறுக்கல் இருக்காது.

எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டான் என்று
ஊரார் உன்னை இகழ்வதைக் காட்டிலும்
அப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டான் என்று
ஊரார் உன்னைப் புகழ்வதே பெருமை!

மதி
11-09-2012, 05:24 AM
ஒரு வாக்கியத்தை வைத்து ஒரு கதையையே சொல்லிட்டீங்க. நீங்கள் கூறிய கருத்து அனைத்தும் உண்மை. கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் ஏன்?

கீதம்
11-09-2012, 12:17 PM
அலட்சியம், அகம்பாவம், ஆடம்பரம் போன்ற தகாத குணங்களாலும், மது, சூது, மாது, புகழ் போன்ற போதைகளாலும் தங்கள் வாழ்வை அழித்துவிட்டு அப்போதும் தங்கள் தவறை உணராமல் யார் யார் மேலோ பழிபோட்டுப் புலம்பித் தவித்து, நிகழ்கால நிம்மதியையும் இழக்கும் எத்தனையோ மனிதர்களைப் பார்க்கிறோம். அப்படிப்பட்டவர்களுக்கு சரியான பாடம் இந்தக் கவி வரிகள். நல்லதொரு சிந்தனை தூண்டும் அருமையானக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
11-09-2012, 03:18 PM
மதி, கீதம் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

aren
12-09-2012, 05:02 AM
உண்மைதான், ஆனால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்கிறார்கள்.

அனைவரும் சாதிக்கப்பிறந்தவர்களே ஆனால் அனைவராலும் சாதிக்க முடிவதில்லை. என்ன செய்வது.

ஒரு சிறிய கவிதையில் ஒரு வாழ்க்கைப் பாடத்தையே சொல்லிவிட்டீர்கள். சபாஷ் போட வைக்கும் கவிதை. இன்னும் எழுதுங்கள். தொய்ந்திருக்கும் ஒரு சிலரும் நிமிர முடியும் உங்கள் கவிதையைப் படித்தவுடன்.

ஜானகி
12-09-2012, 05:57 AM
எப்படியிருந்த நீ இப்படியானதற்கு, நீ எடுத்துவைத்த தப்படிகள்தான் காரணம் என்று சாட்டையடி கொடுத்த உங்கள் அலாதியான சாடல் அருமை...

M.Jagadeesan
12-09-2012, 07:31 AM
Aren, ஜானகி ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

A Thainis
12-09-2012, 09:36 AM
தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை ஜெகதீசன் அவர்கள் இந்த கவிதையில் காண்பித்து இருக்கிறார், பணம் படைத்தவர்கள் பல நேரங்களில் குறிப்பாக

இளையோர் தனி மனித ஒழுக்கத்தை காற்றில் பறக்க விட்டு பிறகு வேதனை படுவது கொடுமை. நவீன உலகம் ஒழுக்கத்தை மறப்பதால், மகிழ்ச்சி அரிதாகி கொண்டே வருகிறது.

M.Jagadeesan
13-09-2012, 01:25 AM
ஆ. தைனிஸ் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

கலைவேந்தன்
13-09-2012, 04:12 AM
வாழ்க்கையின் வெற்றிகளுக்கான வழிகளைக் கூறி வேண்டத்தகாதனவற்றை ஒதுக்கச்சொல்லி மிக அருமையான கவிதை வடித்த ஐயாவுக்கு பாராட்டுகள்..

(விரிவாக அலச உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. )

நாஞ்சில் த.க.ஜெய்
13-09-2012, 12:48 PM
இன்றைய வாழ்க்கைக்கு அவசியமான கருத்துகள் பல கூறிடும் கவிதைக்கு வாழ்த்துகள்...

M.Jagadeesan
13-09-2012, 03:28 PM
கலைவேந்தன், ஜெய் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி.