PDA

View Full Version : சொப்பனசுந்தரிமதி
11-09-2012, 06:03 AM
வீட்டுக்குள் நுழைந்த போது குப்பென்று வியர்த்தது. மூன்று வாரமாய் பூட்டிக்கிடக்கிறது. எப்படி தான் நான்காம் மாடியில் இருக்கும் பூட்டிக்கிடக்கும் வீட்டுக்குள் குப்பை சேருகிறதோ? அவசர அவசரமாக ஜன்னல்களையும் கதவையும் திறந்து மூச்சுவிட்டேன். வெளியில் வைத்திருந்த பெட்டியை தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் வைத்தேன்.

உடம்பெல்லாம் அசதியாயிருந்தது. விமானத்தில் நன்றாக தூங்கினால் தூக்கம் கண்ணை கட்டியது. சுற்றிப் பார்த்தேன். வைத்தது வைத்த மாதிரியே இருந்தது. அம்மாவும் அப்பாவும் இரண்டு நாள் கழித்து தான் வருவார்கள். 'இப்போது சுத்தம் பண்ணலாமா? அப்புறம் பண்ணிக்கலாமா?'. சோம்பல் தான் வென்றது. படுக்கையறைக்குள் சென்று ஏசியை ஆன் செய்து படுத்தேன். அப்பாடா. என்ன ஒரு தூக்கம்.

மாலை எழுந்து வீட்டை ஏதாச்சும் இருக்குமா என்று பார்க்க சமையலறைக்குள் சென்றேன். அதிர்ந்தேன். ஏக களேபாரமாய் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் குச்சிகள் இறைந்து கிடந்தது. 'யார் வந்திருப்பார்கள்'. கிச்சுகிச்சென்று சத்தம் கேட்க மேலே பார்த்தேன். சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் இருக்கும் இடத்தில் வசதியாய் ஒரு புறா கூடு கட்டியிருந்தது. 'என்னடா சமைக்கற இடத்துக்கு பக்கத்தில புறா கூடு கட்டிருக்கே.' விசனப்பட்டேன்.

நாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நிறைய புறாக்கள் இருக்கும். மூன்று வாரம் ஆட்கள் இல்லையென்று தெரிந்து கூடு கட்டியிருக்கிறது. சமையலறை மேடையில் ஏறி பார்த்தேன். இரண்டு முட்டைகள் இருந்தன. 'முட்டையிடும் காலம் போலும். அதான் இங்க
கூடு கட்டியிருக்கு.' அம்மாவிற்கு தொலைப்பேசினேன்.

"அம்மா.."

"என்னப்பா. தூங்கி எந்திருச்சிட்டியா?"

"ஹ்ம். ஆச்சி. கிச்சன்ல புறா எக்ஸாஸ்ட் பேன் பக்கத்துல கூடு கட்டியிருக்கு."

"அடடா.. ஆளில்லேனு கூடு கட்டிருக்கா. என்ன ஒரே குப்பையா இருக்கோ?"

"ஆமா. கிச்சன்ல்லாம் குச்சியா இருக்கு."

"சரி. ரெண்டு நாளைக்கு வெளில சாப்டுக்கோ. நான் வந்து சுத்தம் பண்ணிக்கறேன்."

அன்று முதல் புறாக்கூடை பார்ப்பதே வேலையானது. 'இருக்கா போயிடுச்சா?. 'ஆமா.. புறா முட்டையிட்டு குஞ்சு பொறிச்சதும் எத்தினி நாள்ல பறக்க ஆரம்பிக்கும்?'. மனம் கவலையில் ஆழ்ந்தது. புறாவைப் பற்றி எதுவுமே தெரியாது. கூகிளில் தேடினேன். புறா குஞ்சு பொறிச்சு பறக்க ஆரம்பிக்க மூன்று வாரகாலமாகுமாம். 'சரி. எப்படியும் புறா இங்க தான் ஒரு மாதம் இருக்குமோ?'

இரண்டு நாளில் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். அம்மா எல்லாவற்றையும் சுத்தம் செய்து சமைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தெரியாத்தனமாக கூட ஃபேனை போட்டுவிடக்கூடாது என்று அதன் ஸ்விட்ச்சை மறைத்து ஒட்டினேன். இப்படியாக நாட்கள் நகர ஆரம்பித்தது. தினமும் கிச்சுகிச்சுவென்று புறாவின் கீச்சு சத்தத்தில் தான் அம்மாவின் சமையலே.

ஒருநாள் வீடு திரும்பும் போது அம்மா சந்தோசமாக சொன்னார்கள்.

"டேய்.. முட்டை குஞ்சு பொறிச்சிருக்கு. சின்ன குஞ்சு. ஒரு முட்ட வீணா போச்சு" கண்களில் சந்தோசம் தெரிந்தது. அதே சமயம் வருத்தமும் இருந்தது. சிரித்து வைத்தேன். அதிகமாக குப்பைகள் சமையலறைக்குள் விழ அப்பா தான் கேட்டார்.

"பேசாம கூட்டை தூக்கிட்டு போய் எங்கியாச்சும் மாடியில வச்சுடலாமா?"

அம்மா மௌனமாய் இருந்தார்.

"வேணாம்ப்பா. பறக்க ஆரம்பிச்சவுடனே போயிடபோகுது. எதுக்கு ஒரு கூட்ட அநியாயமா கலச்சிக்கிட்டு. நம்ம கூடுக்கு பாவம் சேர வேணாமே"

அப்பா பார்த்த பார்வைக்கு அர்த்தம் இன்றுவரை புரியவில்லை. அம்மா நிம்மதியாய் சமைக்க சென்றார். குஞ்சு சத்தம் போட ஆரம்பித்தவுடன் தான் கவனித்தேன்.

"சொப்பனசுந்தரி... சொப்னா.."

அம்மாவின் குரல் தான். சமையலறையிலிருந்து. யாருக்கிட்டேயாவது போன்ல பேசுறாங்களோ? சமையலறைக்குள் சென்றேன். போன் இல்லை. கூட்டைப்பார்த்து தான் பேசிக்கிட்டு இருந்தார்கள். சொப்பனசுந்தரின்னு ஒவ்வொருமுறை கூப்பிடும் போதும் பதிலுக்கு அங்கிருந்து கீச்சுக்குரல் கேட்கும். ஆச்சர்யமாய் அம்மாவைப் பார்த்தேன். என்னைப்பார்த்து புன்னகைத்தார்.

அடிக்கடி அம்மாவின் சொப்பனசுந்தரிங்கற குரலும் புறாக்குஞ்சின் பதிலும் வீட்டில் கேட்க ஆரம்பித்தது. வேறு சில பிரச்சனைகளால் கவலை கொண்டிருந்த அம்மாவின் முகத்திலும் கொஞ்சம் தெளிவு வந்தது. சொப்பனசுந்தரி அம்மாவிற்கு ஒரு தோழியானாள். ஒரு மாதமாயிற்று. இரண்டு மாதமாயிற்று. ஊருக்கு போய் இரண்டு நாள் கழித்து திரும்புகையில் அம்மா தான் பார்த்தார்.

"ஏய். சொப்பனசுந்தரி பறந்து போச்சு. இப்போ வேற ஒரு புறா முட்டை போட்டிருக்கு." அம்மாவின் குரலில் வருத்தம்.

'பின்ன சொல்லாம கொள்ளாம சொப்பன சுந்தரி போனா வருத்தம் இருக்காதா என்ன?'

"சரி. விடும்மா. இன்னும் கொஞ்ச நாளில் இதுவும் குஞ்சு பொறிச்சிட போகுது." சமையறையில் குப்பைகள் மட்டும் குறையவே இல்லை. ஆனாலும் கவலைப்படாமல் அம்மா சுத்தம் செய்வார்கள். அந்த வாரம் ஒரு திருமணத்திற்கு அப்பாவும் அம்மாவும் சென்றுவிட நான் அலுவலகத்திற்கு சென்றேன். மாலையில் திரும்பினால் சமையலறையில் ஒரே களேபாரமாயிருந்தது.

கூடெல்லாம் கலைந்து முட்டை கீழே விழுந்து கிடந்தது. புறாக்களுக்குள் ஏதேனும் சண்டை வந்திருக்க வேண்டும்.

மொத்த கூடும் சின்னாபின்னாமாயிருந்தது. மறுபடியும் அம்மாவிற்கு தொலைபேசினேன். கேட்டதும் குரலில் பதட்டம்.

"என்ன முட்டையெல்லாம் உடஞ்சிடுச்சா.. சரி. நீ எதுவும் பண்ணாத. நான் வந்து பாத்துக்கறேன்."

மறுநாள் காலையில் வந்தார்கள். அலுவலகம் போய்விட்டு திரும்பினால் சமையறையே மொத்தமாய் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. எக்ஸாஸ்ட் ஃபேன் இருக்கும் இடத்தில் ஒரு பேப்பர் போட்டு மறைக்கப்பட்டிருந்தது. அம்மாவை பார்த்தேன்.

"பழக்கத்துல திரும்ப திரும்ப வரும்டா. பேப்பர் போட்டு மறைச்சி அடச்சிட்டா இனிமே வராதில்ல.. அதான்"

சொல்லியவர் முகத்தில் அதே அமைதி இருந்தது.

M.Jagadeesan
11-09-2012, 06:32 AM
ஜீவகாருண்யத்தைப் பேசும் சிறுகதை அருமை! ஆனாலும் புறாக்கள் வீட்டின் உள்ளே கூடு கட்டுமா? குருவிதானே கட்டும்! புறாவுக்குக் கூடு கட்டத் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது.

மதி
11-09-2012, 06:57 AM
கட்டுச்சே ஐயா. :)

இது உண்மைசம்பவத்தை கலந்த கதை. பின்னூட்டத்திற்கு நன்றி.

sarcharan
11-09-2012, 08:36 AM
கதை/ உண்மை நிகழ்வு அருமை.

சொன்னா நம்பமாட்டீங்க, எங்க வீட்டு சமயலறையிலும் இதே தான். இரண்டு புராகாலும் வீட்டுக்கு உள்ளே பறந்து, துவைச்சு காயப்போட்ட துணிகளை அசிங்கம் பண்ணி, இதற்கு பயந்து நான் எப்போதும் ஜன்னலை சாத்தித்தான் வைப்பேன்.

மதி
11-09-2012, 08:49 AM
நன்றி சரண் :)

aren
11-09-2012, 10:48 AM
கதை அருமையாக இருக்கிறது மதி. இன்னும் நிறைய எழுதுங்கள்.

இப்படி மூடிவிட்டால் முட்டை இட புறாக்கள் வேறு எங்கே போகும் என்று கொஞ்சம் யோசிக்கவில்லையா?

மதி
11-09-2012, 10:51 AM
நன்றி ஆரென். இல்லாவிட்டால் வீடு குப்பைகூளமாகிவிடுமே :)

கீதம்
11-09-2012, 01:08 PM
புறாக்கூட்டினூடே அம்மாவின் மனத்தையும் அறிந்துகொள்ள முடிகிறது. வீட்டிலோ, தோட்டத்திலோ பறவைகளோ, அணிலோ கூடு கட்டிவிட்டால் அவை கூட்டை விட்டு வெளியேறும்வரை அம்மாக்களுக்கு பெரும் பதைப்பு இருக்கும். சீராட வந்த மகளைப் போல் அவர்களது கண்ணும் கருத்தும் எப்போதும் அவற்றை சுற்றியே இருக்கும்.

இந்தக் கதையைப் படித்தவுடன், பறவைகளுடன் அல்லாது, மரங்களுடனும் பேசும் என் அம்மாவை நினைத்துக்கொண்டேன். இதே கரு வெகுநாளாய் என் மனத்துக்குள் சுழன்றடித்துக்கொண்டிருந்தது. வடிவம் கைவரவில்லை. நீங்கள் முந்திக்கொண்டீர்கள். பாராட்டுகள் மதி. கதைக்குள் மறைமுகமாய் மனித உணர்வுகளைச் சித்தரித்த விதம் அருமை.

மதி
11-09-2012, 01:26 PM
நன்றிக்கா..! :)

நான் ஏற்கனவே சொன்னமாதிரி விட்டகுறை தொட்டகுறையெல்லாம் முடிச்சிட்டு வர்றேன்

ஜானகி
11-09-2012, 04:27 PM
புறாவிற்கு சொப்பனசுந்தரி என்று பெயரிட்டு உறவுகொண்டாடிய தாயைக் காண ஆவலாக உள்ளேன் !
புறா குடித்தனம் பண்ணிய வேளை நல்லவேளையாக இருக்கட்டும்...நிஜமான சுந்தரி குடிபுகட்டும் !

மதி
11-09-2012, 05:18 PM
பின்னூட்டத்திற்கு நன்றிம்மா. சீக்கிரமே ஏற்பாடு பண்றேன். :)

jayanth
12-09-2012, 04:09 AM
ஜீவகாருண்யத்தைப் பேசும் சிறுகதை அருமை! ஆனாலும் புறாக்கள் வீட்டின் உள்ளே கூடு கட்டுமா? குருவிதானே கட்டும்! புறாவுக்குக் கூடு கட்டத் தெரியுமா என்பது எனக்குத் தெரியாது.


புறாவுக்குக் கூடு கட்டத் தெரியும் ஐயா. என் அலுவலகத்திலேயெ நான்கைந்து இடங்களில் கூடு கட்டியிருக்கின்றது...!!!

jayanth
12-09-2012, 04:17 AM
கத நல்லாருந்திச்சு மதி...

மதி
12-09-2012, 04:30 AM
நன்றி ஜெயந்த்

aren
12-09-2012, 05:58 AM
புறா குடித்தனம் பண்ணிய வேளை நல்லவேளையாக இருக்கட்டும்...நிஜமான சுந்தரி குடிபுகட்டும் !

கூடிய விரைவில் எல்லாம் கைகூடி வரும் என்றே நினைக்கிறேன். வரவேண்டும் என்பதே அனைவருடைய விருப்பமும்.

chettai
13-09-2012, 05:40 AM
உயிரோட்டமுள்ள கதை. பாராட்டுக்கள் மதி.

மதி
13-09-2012, 05:42 AM
நன்றி சேட்டை. 'அது தானே உங்க பேரு?':confused:

chettai
13-09-2012, 05:48 AM
நன்றி சேட்டை. 'அது தானே உங்க பேரு?':confused:


நான் வைத்துக்கொண்ட புனைப்பெயர் :)

கலைவேந்தன்
13-09-2012, 12:19 PM
புறா கூடு கட்டுவது அதிசயமே இல்லை. எங்க வீட்டு பால்கனியில் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட காலம் சென்றதும் எங்கோ சென்றுவிடுகின்றன. ஜன்னல் ஏசியின் தட்டையான பகுதி மேல் அவை நர்த்தனம் ஆடி க்கூக்குக்கு என்று ஒலி எழுப்பும் அழகு இருக்கிறதே .. பார்த்துக்கொண்டே இருக்கலாம். என்னைப்பார்த்தால் பயப்படவும் செய்யாது. நான் ஏசியின் மேல் புறத்தை சுத்தம் செய்யும்வரை அங்கும் இங்கும் அசைந்து இடம் கொடுத்துவிட்டு சுத்தம் செய்து முடித்ததும் மீண்டும் நர்த்தனம்தான் சங்கீதம் தான்.

உண்மையில் இதுபற்றி எழுத நானும் நினைத்திருந்து மறந்தே போன விடயம். மதியின் கதையால் நினைவு வந்தது. பாராட்டுகள் மதி.

நாஞ்சில் த.க.ஜெய்
13-09-2012, 01:51 PM
புறாக்கூடு கூறுகிறது அம்மாவின் மனதினை ...அருமை மதி அவர்களே..

மதி
13-09-2012, 02:47 PM
நன்றி கலைவேந்தன் மற்றும் ஜெய்

jayanth
14-09-2012, 11:17 AM
புறா கூடு கட்டுவது அதிசயமே இல்லை. எங்க வீட்டு பால்கனியில் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் குறிப்பிட்ட காலம் சென்றதும் எங்கோ சென்றுவிடுகின்றன. ஜன்னல் ஏசியின் தட்டையான பகுதி மேல் அவை நர்த்தனம் ஆடி க்கூக்குக்கு என்று ஒலி எழுப்பும் அழகு இருக்கிறதே .. பார்த்துக்கொண்டே இருக்கலாம். என்னைப்பார்த்தால் பயப்படவும் செய்யாது. நான் ஏசியின் மேல் புறத்தை சுத்தம் செய்யும்வரை அங்கும் இங்கும் அசைந்து இடம் கொடுத்துவிட்டு சுத்தம் செய்து முடித்ததும் மீண்டும் நர்த்தனம்தான் சங்கீதம் தான்.

உண்மையில் இதுபற்றி எழுத நானும் நினைத்திருந்து மறந்தே போன விடயம். மதியின் கதையால் நினைவு வந்தது. பாராட்டுகள் மதி.

அதானே அண்ணாத்த...... உங்களுக்கு "அம்னீஷியா" இருப்பது தெரிந்த விஷயம் தானே...
.
.
.
.
.
பி.கு...ஹைக்கூ கவிதை பார்க்கவும்...!!!