PDA

View Full Version : பகவத்கீதை அநுபவம்



ஜானகி
09-09-2012, 05:54 AM
சமீபத்தில் நான் படித்த ' திருக்கண்ணனமுது ' என்ற புத்தகம்திரு. எஸ். ரகுவீரன் அவர்களது பகவத் கீதை அநுபவமாக உள்ளது.
பகவத் கீதை என்றாலே ஏதோ புரியாத புதிர் என்று நினைத்திருந்த எனக்கு இவரது புத்தகம், மிகவும் எளிய முறையில் கீதையில் புதைந்து கிடக்கும் வாழ்வியல் உண்மைகளை எடுத்துரைத்தது.
நான் படித்து அநுபவித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன்....நீங்கள் விரும்பினால்..
.
எண்ணங்களுக்கு எட்டாதவன் இறைவன். ஆனந்தமானவன், அறிவொளியானவன், அவனது விளையாட்டினை அறிவது கடினம்.அன்பால், அரவணைப்பால், கண்ணன் நமக்குத் தந்த ஞானப்பால் தான் கீதை.

விஷாதயோகம்...... 1.கலக்க இருள்

இருபுறமும் சேனைகள் அணிவகுத்துத் தயாராய் இருக்கும் போர்க்களம்...அதில் தேரோட்டியாக கண்ணன் அமர்ந்திருக்க, கம்பீரமான தேரில் அர்ச்சுனன்...சண்டை தொடங்கவேண்டிய நேரத்தில் அர்ச்சுனன், கலக்கமடைகிறான் !

பெரிய வீரன், தீரன், உள்ளத்திண்மையன், போர்த்திண்மை கொண்டவன்....கலங்குகிறான்...மனம் தளர்ந்து, உடல் சோர்ந்து, காண்டீபம் விழ, கண்ணன் காலடியில் வீழ்கிறான் ! உலகமே அவன் காலடியில் இருக்க, அவன் ஏன் கலங்குகிறான் ?...இப்படித்தான் தொடங்குகிறது 'பகவத் கீதை '

இருகைகளாலும் வில்லாற்றல் காட்டவல்ல வல்லவன், வெள்ளை மனத்தவன், அநுமனைத் தேர்க்கொடியில் அணியாகக் கொண்டவன்...அர்ச்சுனன், போர்க்களத்தில் இருபுறமும் அணிவகுத்து நின்றவர்களை வீரர்களாகப் பார்க்காமல், உறவினர்களாகப் பார்க்கிறான்....
கற்பனைக் குதிரைகள் பூட்டிய தேரில் ஏறிக் கொண்டான்...கண்ணனை மறந்தான்..போரில் உற்றார், உறவினர்களைக் கொன்றபின் ஏற்படும் துயரத்தை மிகைப் படுத்திக் கொள்கிறான்..பெருந்துன்பம் கொண்டு, மாவீரன் பெருங்கோழையாகி கண்ணன் காலடியில் வீழ்ந்து புலம்புகிறான்.

' என் இனிய உறவுகளை அழித்தபின் வரும் இன்பத்தைவிட துறவே இனியது..எதிரிகள் வென்றாலும் கவலையில்லை..' என மோகவலையில் ஆழ்ந்து தன்னையே இழந்தான் விசயன் !
அர்ச்சுனனுக்கு கலக்கம் உண்டாகக் காரணம் என்ன ? தளர்ச்சி, சோர்வு, அறியாமை, சோகம்...இவைகளால் அவனது அறிவு தெளிவில்லாமல் போகிறது !

அவனது துயரம் அவனது தன்முனைப்பை அழித்துவிட்டது.யோகம் பெறுவதற்குரிய பக்குவத்தை அளித்துவிட்டது. குழந்தை போலானான்.

அப்போது, தாயைப் போல கீதையெனும் ஞானப் பாலூட்ட வருகிறான் கண்ணன்.
ஞானப்பால்...கீதை
ஞானாசிரியன்...கண்ணன்
ஞானகுரு...வியாசன்.
ஞானக்கண்ணால் காண்கிறான் சஞ்சயன்...அஞ்ஞானம் தொலைகிறது.நமக்கும் தான்..

நன்றி : ரகுவீரபட்டாச்சாரியர்

ஆதி
09-09-2012, 06:07 AM
அருமையான விடயம், தொடருங்கள் அம்மா பிந்தொடர காத்திருக்கிறோம்

அனுராகவன்
09-09-2012, 07:47 AM
எனக்கு பிடித்த பகிர்வு..

ஜானகி
10-09-2012, 02:15 AM
கீதையின் இரண்டாவது அத்தியாயம் ஸாங்கிய யோகம்....... 2. ஞான ஒளி

மிகவும் கலங்கி, வேறு வழியின்றித் தவிக்கும் அர்ச்சுனனுக்கு கீதாசார்யன் வழங்கும் அற்புதமான அறிவுரை.

' ஓ ! அர்ஜுனா, உன் துயரம் நியாயம் அற்றது.போர்க்களத்தில் வெற்றி, தோல்வி சகஜம்.மரணம் என்பது ஒரு நியதி...உடல் தான் மரணமடையும், ஆன்மா அழியாதது.'..என்கிறான் கண்ணன்.

இல்வாழ்க்கையில், வினைப் பயன்களுக்கு ஏற்ப மக்கள் வாழ்ந்து மடிகிறார்கள்.இளமை, மூப்பு போல, இறப்பும் நிச்சயமானது.

மரணம் என்பது உடலை விடுதலே...ஆன்மா என்றும் இருப்பது! மரணத்திற்குப்பின் ஆன்மா புதிய உடலைப் பெறுகிறது.

உடலும் ஆன்மாவும் இணைந்திருக்கும்போது, அதற்கென ஒரு தர்மம், கடமை இருக்கிறது.

உடலே ஆன்மா எனவும் உடலே உண்மை எனவும் எண்ணுவதே நம் வீழ்ச்சிக்குக் காரணம்.

இயல்பாக அமையும் செயற்பாடே...சுதர்மமே.. இன்பமானது.

மோகமெனும் ஆசைத்திரைக்குள் இயல்பான அற உணர்வு மறந்துள்ளது. மோகத்தைக் கொன்றுவிடவேண்டும்.

நிலையற்ற உடலுக்காகவும், நிலையான ஆன்மாவிற்காகவும் கவலைப்பட்டு அழக்கூடாது...பணி செய்வதுதான்..செயல் ஒன்றுதான் நமக்கு முன் உள்ள கடமை.

அந்த செயல்கூட, எதையும் எதிர்பாரததாக, பயன் கருதாததாக இருக்கவேண்டும்.

சூரியன் ஒளிர்கிறான், சந்திரன் குளிர்விக்கிறான், செடிகள் பூக்கின்றன, மரங்கள் கனி கொடுக்கின்றன...அவ்வாறே என் கடன் பணி செய்து கிடப்பதே...

இதில் கிடப்பது என்பது முக்கியம்! பலன் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கடமையைத் தொடரவேண்டும்.

முயற்சியும், ஞானமும் கூடினால் இன்பம்தான் !

உடல் ஆன்மாவிற்காக என எண்ணும் வரை வாழ்வு சிறக்கும், உடலுக்காகவே வாழும்போது இழிநிலையே மிஞ்சும்.

இக்கரையிலிருந்து அக்கரை செல்ல உதவும் படகு போல, ஆன்ம யாத்திரைக்கூடல் உதவுகிறது என உணர்ந்தால், மரண பயம் அகலும்.

நிச்சயமற்ற பலனுக்காக, நித்தியமான கடமையைத் தவிர்க்காதே என்பது கன்ணன் உபதேசம்.

நன்றி : ரகுவீரபட்டாச்சாரியர்

கீதம்
10-09-2012, 03:31 AM
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

கீதை என்றாலே மேலே குறிப்பிட்டுள்ள கீதாசாரம்தான் நினைவுக்கு வரும். அதைத் தவிர கீதை பற்றி வேறேதும் தெரியாது. கீதை பற்றிய தெளிவான சிந்தனையைப் பகிர முன்வந்துள்ள தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகளும் நன்றியும். இனிதே தொடருங்கள். அறிந்துகொள்கிறோம்.

மதி
10-09-2012, 03:38 AM
நிச்சயமற்ற பலனுக்காக, நித்தியமான கடமையைத் தவிர்க்காதே என்பது கன்ணன் உபதேசம்

சத்தியமான உண்மை. கீதை பற்றி அறிய தருவதற்கு நன்றிம்மா. தொடருங்கள்.

கலைவேந்தன்
10-09-2012, 05:58 AM
பகவத் கீதையைப்பற்றி அறிந்துகொள்ள மேலும் ஒரு வாய்ப்பு. நன்றி ஜானகி அவர்களே.

ஆதி
10-09-2012, 06:58 AM
ஸாங்கிய யோகம் -

கண்ணன் கீதையை எடுத்தவுடன் உபதேசித்துவிடவில்லை

அர்ஜுனனுக்கு உபதேசிக்கும் முன் தன் மாமனாகிய கம்ஸனை கண்ணன் கொல்கிறான், அதாவது ஒரு உபதேசத்தை செய்யும் முன் இறைவனாகவே இருந்தாலும், அவன் முதலில் தன்னை அந்த உபதேசத்தை உரைக்கும் நிலைக்கு தகுதிப்படுத்திக் கொள்கிறான்

பகவத் கீதையில் இன்னொரு அழகான விடயம் என்ன வென்றால், கண்ணன் ஒவ்வொரு உபதேசத்தயும் சொல்லி முடித்தப் பின், நான் சொல்லவது சரியா என்று நீயே ஆராய்ந்து அதற்குபின் முடிவெடு என்பான்

நான் சொல்வதை நீ செய் என்று அவன் கட்டளையிடவே இல்லை

நாம் முதலில் அந்த மேன்மையை அவனிடம் இருந்து கற்க வேண்டும், அது மிகக்கடினமான ஒன்று

இந்த கருத்தை நினைக்கும் போதெல்லாம், இறைவன் ஆங்காரமற்றவனாகவே இருக்கிறான் என்பது மனதில் நிற்கும்

பகிர்வுக்கு நன்றிங்க அம்மா

ஜானகி
11-09-2012, 01:49 AM
3. செயல் ஒளி

ஞானத்தைக் கர்மத்தினால்தான் அடையமுடியும்.கர்மம் யோகமாவதுதான் சிறப்பு.

இயக்கமே வாழ்வு.செடி கொடிகள், கடலலைகள்,காற்று,சூரியன்,சந்திரன், விண்மீன்கள்...என எல்லாமே ஓயாமல் இயங்குகின்றன.

இரத்தஓட்டம், இதயத்துடிப்பு, சீரணம்...என எல்லாம் தடையில்லாது நடைபெறவேண்டும்.

மழைக்காலம், குளிர்காலம், கோடைக்காலம்...எனக் காலச் சுழற்சி தொடரவேண்டும்.

மனித மனமும் இடைவிடாது இயங்கிக்கொண்டே இருக்கிறது.கர்மமே உலக இரகசியம்.

மனிதனே ! நீ தொழில் செய்...பற்றற்றுத் தொழில் செய் !

ஒரு பெண், வீட்டிலே தன் குடும்பத்திற்காகச் சமைக்கிறாள்...அது வேலை.

ஒரு பெண் ஒரு உணவு விடுதியில் வருமானத்திற்காக சமைக்கிறாள்....அது தொழில்.

ஒரு பெண் சத்திரத்தில், அன்னதானத்திற்காக சமைக்கிறாள்..வருமானம் எதிர்பார்க்காமல்...அதுசேவை.

மூன்றாவது பெண்ணின் செயல் கர்மயோகமாகிறது.

அவ்வாறு சமுதாயத்திலும் ஒரு மனிதன், பலனை நினைக்காமல் செயலைச் செய்தால் அவன் கர்மயோகியாவான்.

கூலியாள் பாரம் சுமக்கிறான்...இயாசுவும் சிலுவை சுமந்தார்!

ஏழை தாக்கப்படுகிறான்...நபிகள் கல்லடி பட்டார்...ஆனால் இவைகளின் பிண்ணனி என்ன? ஆராய்ந்து தெளியவேண்டும்.

தொழில் தெய்வீகமாகவேண்டும்..ஜனகர் காட்டிய கர்மயோகம் அதுதான்.

அழுகை இசையாவது திரைப்படங்களிலே...சிலை தெய்வமாவது கோவில்களிலே...கர்மம் யோகமாகவேண்டும் அன்றாட வாழ்விலே.

கர்மயோகிக்கு எல்லா செயல்களுமே இறை அநுபவமாகும்..பக்தியுடன் பயன் எதிர்பாராத கடமையாகும்.

எல்லா செயல்களுக்கும் அடிப்படைவெறுப்பினாலோ, அச்சத்தினாலோ ஒருவன் தன் தொழிலை விட்டுவிடக்கூடாது. செய்யும் தொழிலால் கிடைக்கப்போகும் பலனைப் பற்றிய சிந்தனையுடனேயே தொழில் செய்யக்கூடாது.

மனதைப் பக்குவப்படுத்துவதே வாழ்வின் பயன்.புலனடக்கம், தூய மனம், தேர்ந்த நல்லறிவு...இவைகளால் கர்மயோகம் கைகூடும்.

சத்வகுண ஆசை...தீயை மூடிய புகை...சிறிது விவேகம் வந்தால் புகை விலகும்

ரஜோகுணாஅசை...கண்ணாடி மேலுள்ள அழுக்கு...சிறிது முயற்சி செய்யவேண்டும்.

தமோகுண ஆசை...சிசுவை மூடியிருக்கும் கருப்பை....காலமும், ஆயத்தமும் தேவை...சிசுவை வெளிக்கொணர.

வாழ்க்கை வேள்வியாகவேண்டும், செயல்கள் அனைத்தும் மேன்மையாகவேண்டும்.

காரியம் வெறும் செயல்...கர்மம் அதனுடன் ஒட்டப்படும் பசை.

நைப்பு, மனோபாவம், கனிவு ஆகியவை செயலை...கர்மத்தை யோகமாக்கும்.

தாயின் செயல்கள் கர்மயோகமாகும்.

ஞானத் தேரை இழுக்க, கர்மயோகம் எனும் கயிறு தேவை !

சுகந்தப்ரீதன்
11-09-2012, 05:32 PM
நல்லதொரு பகிர்வு... தொடருங்கள் அம்மா..!!:icon_b:

பாரதியின் நினைவுதினமான இன்று கர்மயோகத்தை பற்றிய தங்கள் பதிவு எமக்கு அவரது இந்த வரிகளை நினைவூட்டுகின்றன..!!

ஊருக்குழைத்திடல் யோகம், நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும் உளம் பொங்கல் இலாத அமைதி மெய்ஞானம்
பக்கத்திருப்பவர் துன்பம் தன்னைப் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி
ஒக்கத் திருந்தி உலகோர் நலம் ஊற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி.

ஜானகி
12-09-2012, 01:45 AM
4. செயலும் செயலின்மையும்

இவ்வத்தியாயம் ஞானத் திறவுகோல்.

கண்ணன் அர்ச்சுனனுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கிறான்.நல்லவர்களைக் காக்க, கொடியவர்களை அழிக்க, அறநெறியைக் காக்க, தான் காலங்கள் தோறும் அவதரிப்பதாகக் கூறுகிறான்.

கர்மம் என்பது சுதர்மம் ஆகும், அதாவது ஒருவன் ஏற்றுக்கொண்ட இயல்பான தொழில் ஆகும்.

விகர்மம் என்பது அத்தொழிலுக்கிணந்த மன உணர்வு.

கர்மமும் விகர்மமும் இணையும்போது அகர்மமாகிறது...செயலில் செயலின்மையும், செயலின்மையில் செயலும் அமையவேண்டும்.

கீதா ரதத்தைக் கவனியுங்கள்.....கண்ணன் ஒருகையில் குதிரைகளின் கடிவாளம், மறுகையால் அர்ச்சுனனுக்கு உபதேசம்.

செயல் செய்வதாகக் காட்டப்படும் கண்ணன் செயலற்று அமைதியாக இருக்கிறான்....செயலிழந்து, வில்லிழந்து காணப்படும் அர்ச்சுனன் குழப்பமைந்து புயல்வீசும் மனதுடன் இருக்கிறான்...

இதுதான் கீதை தத்துவம்...செயலிலே செயலின்மை, செயலின்மையில் செயல்!

கர்மம் எனும் இயல்பான செயல் மன இணக்கத்துடன் இணைந்து விகர்மமாகியபின் அகர்மமாகும்...அதுவே ஞானநிலை. கர்மத்தின் பயன் ஞானமாதல்.

பலகாலமாக ஒரு செயலைச் செய்யும்போது அது பழக்கமாகிவிடுகிறது, செயல் திறன் வருகிறது. செயல்திறன் அதிகமாக, மன உணர்வு மிக வேண்டும்.

உடலும் உள்ளமும் ஒருங்கே செயலாற்றவேண்டும். உடலுக்குத் தவம், உள்ளத்திற்கு ஜபம்...இரண்டும் இணையும்போது செயல்பளு லேசாகும்...செயலின்மை தோன்றும்.

விளக்கு ஒளிர, திரியுடன் தீயும் வேண்டும்..பலன் கருதாமை எனும் சுடர்பெற, கர்மம், விகர்மம் இணந்து அகர்மம் ஆகவேண்டும்.

பல்பிடுங்கப்பட்ட பாம்புடன் பாம்பாட்டி பயமின்றிப் பழகுவதுபோல, செயலின்மையில் செயலையும், செயலில் செயலின்மையும் காணப் பழகிக் கொண்டால், வாழ்க்கை இனிக்கும்.

எனவே, செயலைச் செய்யவேண்டும்..செயலின் விளைவினை மறக்கவேண்டும்.
செயல் இயல்பானதாக வேண்டும், செயலிலேயே லயிக்கவேண்டும்.

புறச் செயல் அக உணர்வோடு இணையும்போது, செயலின்மை தோன்றும்.
செயலுக்காகச் செயல் எனும் நிலை கைகூடும்போது வாழ்க்கை ஞான வேள்வியாகும்.

சகாதேவன் கண்ணனிடம், " கண்ணா, நீ தூது போனால் என்ன, போகாவிட்டால் என்ன, திரௌபதி கூந்தல் முடித்தாலென்ன, அவிழ்த்தாலென்ன, உன் கருத்து எதுவோ அதுவே என் கருத்து " என்று கூறுவான்.

இதுவே நம் நிலையாக அமையவேண்டும். பயனற்றுப் பணி செய்வதிலும், பற்றற்றுப் பணி செய்யும்போது அது ஞான வாழ்வாகும்.

வாழ்க்கையில் செயல் என்பதைவிட, செயலே வாழ்க்கையாக வேண்டும்.

நன்றி : ரகுவீரபட்டாச்சாரியர்

ஜானகி
12-09-2012, 04:31 AM
எதிர்பாராதவிதமாக, நேற்று நண்பகலில், கொலுபொம்மை வாங்க என்று திருவல்லிக்கேணி செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது.
பகல் மணி 12.40...கோவிலில் அநேகமாக நடைசாத்திவிடுவார்கள்...என் புண்ணியம்...ஒருநொடி இடைவெளியில் பார்த்தசாரதியின் தரிசனம் கிடைத்தது ! மெய்சிலிர்த்துப்போனேன் !
பகவத்கீதை பற்றி எழுத முயல்வதற்குக் கிடைத்த பரிசு...என்னுடன் சேர்ந்து அநுபவிப்பவர்களையும் நினைத்துக்கொண்டேன்.
பாரதியின் நினைவுநாளான நேற்று அவரது நினைவு இல்லாம் வழிசெல்லும் பாக்கியமும் கிடைத்தது...உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஜானகி
12-09-2012, 05:45 AM
5.செயலுக்காகவே செயல்

செயலைச் செய்யாமலே இருப்பது...துறவுநிலை
செயலைச் செய்துகொண்டேசெயல் செய்யாததுபோல் உணர்வது....கர்மயோகம்.
இந்த இரு நிலைகளில் எது உயர்ந்தது...? விடையளிக்கிறது இந்த அத்தியாயம்.

செய்யும் தொழிலில் பிடிப்பற்று, வாழ்க்கையில் வெறுப்புற்றுத் துறவியானாலும் அதற்குரிய செயல் செய்யவேண்டும்...மனதை அடக்குவதும் ஒர் செயலாகிவிடும் !
பயிற்சியினால் புறத் தேவைகளைக் குறைத்துக்கொண்டாலும், மனம் அலைவதைத் தடுக்கமுடியாது! துறவுநிலை எளிதன்று.

கர்மயோகியாகும்போது, செயல் செய்துகொண்டே செய்யாததுபோல உணர்வது எளிது.ஞானிகள் செயலிலாமல் இருந்துகொண்டே செயல்பட வைப்பார்கள்.

பற்று இல்லாமலே ஒட்டிக்கொள்வதும் இயலும்....தாமரை இலைத் தண்ணீர் போல...

கடவுள் இல்லை என்ற இரணியன், நரசிம்மனின் மடியிலே...கடவுள் இருக்கிறான் என்ற பிரகலாதன், கடவுளின் காலடியில்!

வேண்டுதல், வேண்டாமை இலாத இறைவன், நமது புண்ணிய பாவங்களால் பாதிக்கப்படுவதில்லை...நாம்தான் பாதிக்கப்படுவோம்.

கண்ணதாசன் கூறுவான் "நான் ஆஸ்திகனானேன்...அவன் அகப்படவில்லை. நான் நாத்திகனானேன்...அவன் பயப்படவில்லை "

துறவும் கர்மயோகமும் ஒரே தன்மை என்றாலும், கர்மயோகமே சிறந்தது.

எல்லாப் புலன்களுக்கும் வேலை கொடுக்கவேண்டும்..அப்போது மனம் சமைக்கப்படும்.

புலன்களை அடக்கிவைத்தால், மனம் சுற்றத் துவங்கும். சோம்பியிருக்கும் மனம் சாத்தானின் பாசறை.

பயிற்சியினால் கர்மயோகத்தை அடையலாம். கயிற்றை பம்பரத்தில் சுற்றி லாகவமாக எறிந்தபின், கயிற்றின் உதவியின்றியே பம்பரம் சுழலும்.

அதுபோல, செயலைச் செய்துகொண்டே, அதன் பயனைத் துறந்து, செயலுக்காகவே செயல் என்ற நிலை பெறலாம்.

பறப்பது பறவையின் இயற்கை... அலைவது அலைகளின் இயற்கை...வீசுவது காற்றின் இயற்கை !

நம் கடன் பணி செய்து கிடப்பதே !

நன்றி : ரகுவீரபட்டாச்சாரியர்

ஜானகி
13-09-2012, 02:33 AM
6.மன ஒருமைப்பாடு

நமது எல்லாக் காரியங்களிலும் தூய்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வழிகாட்டுவதே.கீதை.

இறைவன் மனிதனை ஒரு கட்டுப்பாட்டிற்குள்தான் படைத்திருக்கிறான்....ஆனால், மனிதன் அந்தக் கட்டுப்பாட்டிற்குள்ளேயும் தானே ஒரு கட்டுப்பாட்டை உண்டாக்கிக்கொள்கிறான் !

" நான் ஒன்றும் அறியாதவன், சாமானியன், குடும்பச் சேற்றில் உழல்பவன்..." என்றெல்லாம் சொல்லி, நம்மை நாமே இழந்துவிடுகின்றோம்.

விட்டு விடுதலையாகி நிற்பாய்! "உள்ளத்தனையது உயர்வு".... எழுமின்! விழிமின் !

பெரிய வானம் உனது...பறக்கும் வரை பற ! உன் மனவாற்றலைப் புரிந்துகொள் ! பயன்படுத்தி, மகிழ்ச்சியைப் பெருக்கு ! உன்னாலும் முடியும் !

அடுப்பு சீராக எரிந்தால், சமையல் எளிதாகும்...மனம் பக்குவமானால், புலன்கள் பக்குவப்பட்டால், வாழ்க்கை சுவர்க்கமே ! உறுதியான எண்ணமே வெற்றியின் அஸ்திவாரம்.

முயற்சி திருவினையாக்கும். ஒருமுனைப்பாங்கு, கட்டுப்பாடு, சமநோக்கு, பயிற்சி, உறுதி, ஆர்வம் ஆகியன மிகவும் இன்றியமையாத விஷயங்கள்.

உடல் தளரலாம்...உள்ளம் தளரக்கூடாது. மூப்பு வரலாம்...முதுமை வரக்கூடாது.மூப்பு உடல் சார்ந்தது, முதுமை உள்ளம் சார்ந்தது.

காய் பழுக்கலாம், அழுகலாம்...ஆனால் உள்ளே விதை கெட்டிப்பட்டுக்கொண்டே வரும் ! ஆன்மா விதையைப் போன்றது.

செய்யும் தொழிலிலேயே மனம் ஒன்றி ஈடுபடும்போது ஒருமுனைப்பாங்கு ஏற்படும், தியானம் கைவரும்.

நம் புலன்களை செயலிழக்கவைக்க முடியாது...கட்டுப்படுத்தவேண்டும். அளவுக்கு மீறி எதனையும் செய்யக்கூடாது.

சமநோக்கு தேவை. எப்பொருளையும் பிறர் பார்வை கொண்டு காணவேண்டும். எருது நோய் காக்கைக்குத் தெரியுமா....தெரியவேண்டும் !

பயிற்சி, வைராக்கியம், ஒருமுகப்பாடு முதலியன பெற்று உயர்வோமாக !

நன்றி : ரகுவீரபட்டாச்சாரியார்


7. ஞானமும் விஞ்ஞானமும்

ஆன்ம ஞானம், பௌதிக ஞானம் இரண்டும் முரண்பாடுகள் அல்ல... ஞானம் பெற விஞ்ஞானம் தேவை.

விஞ்ஞானம் புலனறிவு சார்ந்தது. இவ்வுலகம், மண், நீர், தீ, காற்று, வானம், மனம், புத்தி, அகங்காரம் என எட்டு பகுதிகளாகப் பிரிவடைந்துள்ளது.

ஓசை ஆகாயத்திற்குரியது; காற்று தொடு உணர்வுடையது; தீ ஒளி வடிவானது; நீர் சுவைக்குரியது; மண் மணத்துக்குரியது.

காது, தேகம், கண், வாய், மூக்கு,என்ற பொறிவாயில்கள் மூலம் இவற்றை அறிகிறோம்.

உணரும் தன்மை மனத்திற்கு உண்டு,
நல்லது, கெட்டது என்பதனை புத்தி பாகுபடுத்துகிறது.
தன்னையே கர்த்தாவென்று கருதுவது அகங்காரம்.அகங்காரமே செயல்களுக்குக் காரணம்.

இறைவன் இந்த எல்லாப் பொருள்களிலும் உறைகின்றான்.
நீரின் சுவையும், சூரிய சந்திரனின் ஒளியும், வேதத்தின் ஓங்காரமும், வானின் ஓசையும், அறிவின் அறிவும், முக்குணங்களும் அவனே.

எல்லாப் பொருள்களிலும், அதற்கு மேலாகவும் அவனே உள்ளான்...இந்த மெய்ப்பொருள் காண்பதே அறிவு.

இத்தகைய இறை உணர்வை உணர்ந்து, போற்றமுடியாமல் நம்மைத் தடுப்பது மோகமும், மாயையும்.

மாயையைக் கடப்பது அரிது. ஆராத, மாறாத, சோராத, தீராத அன்பினாலும், பக்தியாலும் மட்டுமே மாயையை வெல்லமுடியும்.

இறைவனின் பக்தர்களில் பலவகையுண்டு....பயன் வேண்டுபவன், துன்புற்றவன், அறிவு வேட்கை கொண்டவன், பொருள்வேட்கை உடையவன், ஞான நிலையுற்றவன் போன்றோர்.

இவர்களில், ஞானியே இறைவனுக்கு மிகவும் உகந்தவன்.மற்றவர்களையும் பழிக்கலாகாது...படிப்படியாக அவர்களும் உயர்வார்கள்..அதனை நியமிப்பதும் அவனே.

பாவனை தேவை. சிலர் பிரேமை மிகுந்து இறைவனை நினத்து உருகுவார்கள், சிலர் அறிவுத்தீயில் தன்னை இழப்பார்கள், சிலர் மெய்ப்பொருள் காணும் வேகத்தில் உலக நன்மைக்காகத் தன்னையே அர்ப்பணிப்பார்கள்.....

ஞானிகளுக்கு உலகம் இன்ப மயம்..எங்கும், எதிலும், தீயவர்களிடத்தும்கூட, இறைமையைக் காண்பார்கள்.

அத்தகைய ஞானி, இறுதியில், அவனது உள்ளம், உரை, செயல் எல்லாவற்றிலும் நிறைந்து ஆனந்தக் கடலையே அடைந்து மகிழ்வான்.

நன்றி ; ரகுவீரபட்டாச்சாரியார்.

ஜானகி
14-09-2012, 01:56 AM
8. எண்ணச் சங்கிலி

இறைவன் ஒருவனே. எல்லா ஆத்மாக்களையும் தன்னுள் அடக்கியும், தான் அவற்றுள் அடங்கியும் இருப்பது, பிரம்மம் எனப்படும் இறைத்தன்மையே.

இயற்கையின் நடைமுறை அனைத்தும் செயலே..அதுவே அனைத்துக்கும் ஆணிவேர்.

எண்ணமே வாழ்வு. நீண்ட வாழ்க்கைக் கடலிலே ஓராயிரம் நினைவலைகள். அவைகளில் பல அநுபவங்களாகிவிடுகின்றன.

மரணம் என்பது ஒரு நிர்ணயிக்கப்பட்ட முடிவு என்ற உண்மையை உணர்ந்தவன், எப்போதும் இறை உணர்வைப் பெற்றிருப்பான். உண்மையில் மரணம் முடிவல்ல...ஒரு மாற்றம் தான்.

மரணத்தை எதிர்கொளப் பழகிக்கொள்ளவேண்டும்.இல்வாழ்க்கையெனும் அரங்கில் நாம், தினமும் இறைவனை எண்ணிக் கதறி, அருள் நினைந்து, உணர்ந்து, நெகிழ்ந்து, அன்பில் நனைந்து வருவோமாயின்...நாள் என் செயும் ? வினைதான் என் செயும் ?

வீணே சத்தில்லாததை அசைபோட்டு, சகதியில் உழலாதே ! சாவை வெற்றிகொல் !

எப்படி ? இறைவனை வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து வந்தால், மனம் சுத்தமாகும், பண்படும்.

இறையுணர்வு சிறிதும் இடைவெளியின்றி, தொடர்ந்து இருக்கவேண்டும்.இறைவனை நம்பி வாழ்க்கைக் கடலில் நீந்துவோம்.

இப்படி, இறை உணர்வே வாழ்வு என்ற நிலை கைகூடினால், அகிலமே ஆனந்தமாக விளங்கும்...எல்லாம் இன்ப மயம்தான் !

நன்றி : ரகுவீரபட்டாச்சாரியார்

9. சமர்ப்பணம்


தன் தேவை என்னவென்றுகூட அறியாத பச்சிளங்குழந்தையின் அழுகை ஒலி அதன் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடிகிறது. ஒலியின் வலிமை அத்தகையது !

ஒலி, ஆக்கவல்லது, காக்கவல்லது, அழிக்கவும் வல்லது. வேதங்கள், புராணங்கள்,மந்திரங்கள், சடங்குகள் மூலம் பெறும் பயனை,இறைவனின் நாமங்கள் மூலம் பெறலாம்.

இவ்வுலகம் இறைவனது படைப்பு, நமது உள்ளும் புறமும் அவனே இருக்கிறான், கொடுப்பதும் பெறுவதும் அவனே....இந்த உணர்வு நம்மை உயர்த்தும். நமது மண்ணுலகத்தை விண்ணுலகாக்கும்.

நாம் செய்யும் செயல் அனைத்தையும் இறைவனுக்கே என்று அர்ப்பணித்துவிடவேண்டும்.பயனைத் துறத்தல் கர்மயோகம்; இறையுடன் ஒன்றுதல் பக்தியோகம்; இவ்விரண்டையும் இணைப்பது இராஜயோகம்.

கடவுள் நம்மைக் கண்காணிக்கிறார். இந்த உணர்வில் நாம் செய்யும் அனைத்தும் கடவுளுக்கே !

எங்கும் இறைமைக் காட்சிதான்....காக்கைச் சிறகினிலே, பார்க்கும் மரங்களிலே, கேட்கும் ஒலிகளிலே...நீக்கமற இருப்பவன் அவனே !

கண்கள் காணும் காட்சியெல்லாம் இறைமையாகவேண்டும்; காதுகள் அவன் பெருமை கேட்கவேண்டும்; வாய் அவன் புகழ் பேச, பாடவேண்டும்....இவ்வாறு ஐம்புலன்களும் அவனை எண்ணிச் செயல் பட்டால், பிறப்பு, இறப்பு எனும் ஓயாத விளையாட்டு முடிந்துவிடும்.

இருந்த இடத்திலேயே, இருக்கும் நிலையிலேயே இறை உணர்வு பெற முடியும் என்பது கீதையின் போதனை.

நன்றி : ரகுவீரபட்டாச்சாரியார்.

ஜானகி
14-09-2012, 10:58 AM
10- இறைமையுணர்வு

இறைவன் யார் ? எங்கிருக்கிறான் ?

இறைவன் எங்கும் பரந்து, விரிந்து இருக்கிறான். இறைவன் தனியாக இல்லை; கலந்து, மறைந்து, அதே நேரத்தில், தாமரை இலைத் தண்ணீர் போலக் கலவாது இருக்கிறான்.

காற்று என்பது நம்முள்ளும் வெளியிலும் இருக்கிறது;
நெருப்பு பூமியிலும் உள்ளது, விளக்கிலும் உள்ளது, அடுப்பிலும் உள்ளது:
பூமி எங்கும் பரந்து உள்ளது;
ஆகாயமும் அவ்வாறே பரவியுள்ளது;
இப்படியே இவ்வைம்பூதங்களின் தலைவனான இறைவனும் எல்லாப் பொருள்களிலும் உறைகின்றான்.

கண்ணன் தனது பரந்துபட்ட இருப்பினை அர்ச்சுனனுக்குக் கூறுகின்றார்.

ஒவ்வோர் உயிர்க்குள்ளும் இருக்கும் ஆத்மா ,உயிர்களின் உணர்வு, ஒளிக்குக் கண்ணான சூரியன், அறிவான வேதம், தேவர்களின் தலைவன் இந்திரன்,நீர்நிலைகளில் பெரிய கடல்கள், மலைகளில் இமயம், எழுத்துக்களில் ஓம் எனும் பிரணவம்,வேள்விகளில் சிறந்த ஜபம், மரங்களில் அரசு, கந்தர்வர்களில் சித்ரகுப்தன், சித்தர்களில் கபிலர், குதிரைகளில் உச்சைசிரவஸ், யானைகளில் ஐராவதம், ஆயுதங்களில் வச்சிரம், பசுக்களில் காமதேனு, பாம்புகளில் வாசுகி, நாகங்களில் அனந்தன், அசுரர்களில் பிரகலாதன், விலங்குகளில் சிங்கம், பறவைகளில் கருடன்,, தூய்மையில் காற்று, படைவீரரில் ராமன், ஆறுகளில் கங்கை, எழுத்துக்களில் அகரம், அழிப்பனவற்றுள் மரணம், மாதங்களில் மார்கழி, பருவங்களில் இளவேனில், என பலவாறாகக் கன்ணன் தன்னை அறிமுகப்படுத்துகிறான்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...ஆண்டவன் எனும் புத்தகத்தின் அத்தனை பக்கங்களும் அற்புதமே ! அவற்றின் உட்பொருளை உணர்ந்துகொள்ளவேண்டும்.

பாம்பும் இறவன்; பகலவனும் அவனே !
மரணமும் அவனே, ஜனனமும் அவனே!
நல்ல குளிரும், இதமான வெப்பமும் அவனே!
பரமனின் பரவலை முழுதும் கணக்கிடல் இயலாது.

அவனில்லாத இடமோ, பொருளோ இல்லை;
இல்லை எனும் சொல்லின் பொருளும் அவனே!
இறைமை எதிர்மறைகளிலும் உண்டு...வஞ்சகரின் சூதிலும், அறிவிலிகளின் மடமையிலும் அவனிருக்கின்றான் !

எங்கும் நிறைபவனை, எதிலும் உறைபவனை, என்றும் நினைப்பவர்கள் என்றும் நினைக்கப்படுவார்கள்.

" நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்

வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்

பல்வகையும் பரந்த பெருமான் .......நம்மாழ்வார்

நன்றி : ரகுவீரபட்டாச்சாரியார்.


11. பேருருவே ! பெரியவனே !


இறைமையின் விரிந்த காட்சியை விளக்குமாறு, அர்ச்சுனனுக்குத் தனது விசுவரூப தரிசனத்தைக் காட்டுகிறான் கண்ணன் ! அவனுக்கு 'ஞானக்கண்' அருளித் தனது பேரானந்தப் பேருருவைக் காட்டியருளினான் பரமன்.கண் படைத்த பயன் பெற்றான் பார்த்தன்.

முடிகள் ஆயிரத்தாய், தாள்கள் ஆயிரத்தாய், கண்கள் ஆயிரத்தாய், அடி முடி காணமுடியாத ஓர் பேருருவம் கண்டான்.

கணக்கிலாத தோளினனாய், கைகளுடையவனாய், கதிராயிரம்கோடி கலந்த ஒளியுடன், உலகம் முழுதும் உள்ளடக்கி, வரம்பிலா ஆற்றலுடன் நின்ற தீச்சுடர் ஒளி கண்டு திகைத்தான் !

சூறைகாற்று வீசுகிறது; சூழ்ந்திடும் மேகம் ஆழ்கடலைக் கவ்வ எண்ணிக் கீழிறங்குகிறது; ஆழ்கடலோஅலைக்கரம் நீட்டி ஆகாயத்தையே விழுங்கப் பார்க்கிறது; கண்ணைப் பறிக்கிறது மின்னல்; ககனத்தை அதிரவைக்கின்றன இடிகள்....

ஊற்றமோ, ஊழித்தீயோ, ஆலகாலமோ என்று அஞ்சினான்; நா வறண்டது; கண்கள் சுழன்றன; பயம் சூழ்ந்தது அர்ச்சுனனுக்கு....

கோலமயிற்பீலியுடன், கொஞ்சும் குழலோடும், குறுகுறு நகையுடனும், கருணை விழிகளுடன்,கையில் சாட்டையுடன், கமல முகத்தில் கருணையுடன் தோன்றும் பார்த்தசாரதியையே இந்தப் பார்த்தன் பார்த்திட விழைகிறான்...

பக்தனின் மனநிலை உணர்ந்து, கண்ணன் அருள் பாலித்தான்....கருணையே வடிவான பார்த்தசாரதியானான் !

மீண்டும் அர்ச்சுனன் மனதில் ஆதங்கம், கூனிக் குறுகி நின்றான், இறைவனது பெருமையுணராது போனதற்கு வருந்தினான்.

இறைவன் கையில் தான் ஒரு கருவி என உணர்ந்தான்,

நன்றி : ரகுவீரபட்டாச்சாரியார்

ஜானகி
15-09-2012, 01:15 AM
12. அகமும் புறமும்

இப்பகுதியில் கண்ணன், அர்ச்சுனனுக்கு, பற்றுடைய வாழ்வு, பற்றில்லாத வாழ்வு என்ற இரு தன்மைகள் பற்றி விளக்குகின்றான்.

சகுணபக்தி, நிர்குணபக்தி என்பனதான் அவை.
சகுணம் எளிமையானது; நிர்குணம் கடுமையானது.

இறையுணர்வை மன அளவில் கொண்டு முன்னேறுவது கடினம்; ஆனால், இறைவனைக் காண்பனவற்றில் எல்லாமே அநுபவிப்பது எளிது. மனதில் உணர்வு நிலைப்பட்டால்தான் இது இயலும்.

இலக்குமணன், இராமனுடன் இருந்துகொண்டே தன் சுகத்தை மறந்தான்.
பரதன், இராமனைப் பிரிந்த நிலையிலும் இராமனை நேசித்தான்.

இணந்தும் பிரிவது, பிரிந்தும் இணைவது...உணர்ந்து மகிழவேண்டியவை

சகுணமும், நிர்குணமும் உதவிக்கொண்டு வளரவேண்டும்

உலகத்தை எவன் வெறுக்கவில்லையோ, உலகம் எவனை வெறுக்கவில்லையோ, அவனே இறைவனுக்கு இனியவன்.

பகை, நட்பு, மானம், அவமானம், குளிர், வெட்பம், இன்பம், துன்பம்...இவை எல்லாவற்றையுமே சமமாகப் பாவிக்கவேண்டும்.

நன்றி : ரகுவீரபட்டாச்சாரியார்


13. உடலும் ஆன்மாவும்

இப்பகுதியில், ஆன்ம விவேகம் போதிக்கப்படுகிறது.

பகவத்கீதையின் உயிர்ப்பு பலனைத் துறத்தல்.

உடல் என்பது புறம், ஆன்மா என்பது அகம்.
உடல் என்பது கருவி, ஆன்மாதான் ஆதாரம்.
இரண்டும் இணைந்தது உயிர்வாழ்வு.

ஆன்மலாபம் பெற, செயல்களின் பலனைத் துறக்கவேண்டும்.

செயலின் ஒரு பக்கம்...அதன் பயன்; மறுபக்கம்....மனத்தூய்மை.

பயன் கருதிச் செய்யும் செயல், அதன் இலக்கான பலன் கிடைத்தபின் முடிந்துவிடுவதால், ஆன்ம அநுபவமாக அது ஆவதில்லை....அதனால் மீண்டும் மீண்டும் செயலின் சுழற்சியில் மாட்டிக்கொள்ளும்...பிறவிப்பிணி அறுவதில்லை.

ஆன்மா பக்குவமாகி, நல்வினை தீவினை அற்று, முக்தி பெற, அநுபவச் சூடு தேவை.
அதற்கு இந்த உடல் தேவைப்படுகிறது.

உடலின் பற்றே உலகப் பற்று. உடலுக்காக வாழ்வது தவறு.

பரமாத்மாதான் நாம் அடையவேண்டிய இலக்கு; நமது ஆன்மாவின் வாகனம் தான் உடல். ஜீவத்மாவும் பரமாத்மாவும் இணைவதுதான் வாழ்வின் முடிவு.

பகவத்கீதை துறவினை வற்புறுத்தவில்லை.சாதாரண வாழ்விலும், மனத்தூய்மைய்டன் செயலாற்றினால், ஆன்ம ஒளி பெறலாம்...இறைவனை அடையலாம்.

பற்றற்றுத் தொழில் செய்ய முதல் தடை நம் உடல் பற்றே.உடல் பற்று விலகினால் மரணபயம் போகும்.

ஒரு பெரிய சக்தி, நம் எல்லோருக்குள்ளேயும் உயிராக இருக்கிறான், நம்மைத் திருத்திப் பணிகொள்வான், சோர்விடத்துது துணை அவனே என்ற உணர்வே நமது பாதுகாப்பு.

நாமெல்லாம் பிரம்மத்தின் குழந்தைகள்...நமக்குள்ளே, நமது ஆன்மாவில் இறைவன் இருக்கின்றான்; நாம் எல்லோருமே புனிதமானவர்கள்; ஆளப்பிறந்தவர்கள்; இறைவன் ஒருவனுக்கே நாம் சேவகர்கள்.

இறை உணர்வும், ஆன்ம உணர்வும் ஒன்றுக்கொன்று சார்புடையன.
நம் உடல் பற்றியே கவலைப்படும்வரை, நமது ஆன்மா, வெறும் பார்வையாளராகவே இருக்கும்
பற்றற்று செயல் புரியும்போது, ஆன்மா நமது ஆதரவாளன் ஆகிறது.
இறைவன அருள் வேண்டி இறஞ்சும்போது, ஆன்மா, நம்மைத் தூக்கிப் பிடித்து முன்னேறவைக்கிறது.
இறைவனிடம் சரண் புகும்போது, ஆன்மா நுகர்வோன் ஆகிறது.
இப்போது பூரண இன்பம் கிட்டும்.

எல்லாமே அவன் செயல் எனும்போது, பணிவு, சகிப்பு, அன்பு, அமைதி என எல்லா நற்குணங்களும் வந்துவிடும்.

பிறவிப் பயனும் அதுவே,

நன்றி: ரகுவீரபட்டாச்சாரியார்.

மதி
15-09-2012, 01:53 AM
அம்மா.. இதுவரை கீதையின் பக்கமே எட்டிப்பார்த்திராத எனக்கு நிறைய விஷயங்கள் தெரிந்தது. சில ஆங்கில புத்தகங்களில் கீதையைப் பற்றி சொல்லும் போதெல்லாம் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். இவர்கள் அதை படித்திருக்கிறார்களா என்று.

மனமும் உடலும் "தன்" நிலைப்பாட்டை விட்டு வெளியே வரும் போது தான் ஆன்மீக அனுபவம் கிடைக்கிறது. நல்லதொரு புத்தகத்தின் சாராம்சத்தை எங்களுக்குத் தருவதற்கு நன்றிம்மா.

ஜானகி
15-09-2012, 05:36 AM
அம்மா.. இதுவரை கீதையின் பக்கமே எட்டிப்பார்த்திராத எனக்கு நிறைய விஷயங்கள் தெரிந்தது. சில ஆங்கில புத்தகங்களில் கீதையைப் பற்றி சொல்லும் போதெல்லாம் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். இவர்கள் அதை படித்திருக்கிறார்களா என்று.

மனமும் உடலும் "தன்" நிலைப்பாட்டை விட்டு வெளியே வரும் போது தான் ஆன்மீக அனுபவம் கிடைக்கிறது. நல்லதொரு புத்தகத்தின் சாராம்சத்தை எங்களுக்குத் தருவதற்கு நன்றிம்மா.

தொடர்ந்து வருவதற்கு நன்றி.
காலம் கடந்து நான் அறிந்துகொண்ட அற்புதங்கள், இளைஞர்களாகிய உங்களுக்குப் போய்ச்சேருவதில் மகிழ்ச்சியே.
கீதை புரிவதற்கே ஒரு பக்குவம் தேவைப்படுகிறது !
நடைமுறையில் கையாளுவதற்கு எத்தனை ஜன்மங்கள் தேவையோ...?
எல்லாம் அவன் செயல் !

கும்பகோணத்துப்பிள்ளை
15-09-2012, 05:42 AM
என் நன்றி பல!

தெய்வம் மனிதனுக்கு சொன்னது - பகவத் கீதை
மனிதன் தெய்வத்துக்கு சொன்னது - திருவாசகம்
மனிதன் மனிதனுக்கு சொன்னது - திருக்குறள்
- இது என் தந்தை எனக்கு சொன்னது

இதுவரை பாரதி போல் யாரும் முன்னுரை எழுதியது இல்லை, தங்களுடைய தொகுப்புரை படிப்பவர்கள் இதையும் படித்தால் மேலும் பயனுரலாம்

http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0014.pdf

என்னென்றும் நட்புடன்!

கீதம்
15-09-2012, 09:30 AM
மனத்தை அமைதிப்படுத்தும் பல அற்புதமானக் கருத்துக்கள். பகிர்ந்துகொள்வதற்கு மிகவும் நன்றி ஜானகி அம்மா.

ஜானகி
16-09-2012, 01:27 AM
14. முக்குணங்கள்


புலன்களே நமக்குப் பகையும் நட்பும் ஆகும்.
புலன்களை இறையனுபவம் பெறமுடியாமல் தடுப்பவை சத்துவம், ராஜசம், தாமசம் எனும் முக்குணங்களே.

சோம்பல், தூக்கம், மறதி இவை தாமச குணங்கள். இவை வாழ்வின் முன்னேற்றத்திற்க்குப் பெரும் தடைக் கற்கள்.
தமோ குணத்தைத் தகர்க்க ஒரே வழி உடலுழைப்பே.

ரஜோகுணம் என்பது ஆவல், அவசரம் கொண்டது.
சக்திக்கு மீறியதைச் செய்வது இதன் தன்மை.
எப்போதும் அலைவதும், திடமான சிந்தனை இல்லாததும் காணப்படும்.
இக்குணம் நம்மை மயக்கும்... உடனுக்குடன் பலனை, புகழை எதிர்பார்க்கும்.
ஒன்றைவிட்டு ஒன்று பற்றிக்கொண்டே இருக்கும். சுதர்மத்திற்கு இது எதிரி.
நமக்கு இயல்பாகக் கிடைப்பதே போதும் என்பதே சுதர்மம்.

சத்துவகுணம் ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.
ஆனாலும், ஆண்டாள் கூறுவதுபோல, முனைப்பற்ற சத்துவமாக இருக்கவேண்டும்.
சத்துவம் இயல்பாகும்போது, அதுவாகவே நாம் ஆகிவிடுவோம்
அது சத்சங்கம் ஆகும்போது இனிமையாகும்.

அன்பு உயிரின் இயல்பாகும்; அன்பு ஆசையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த அன்பு விசுவரூபம் எடுக்கவேண்டும்; உலகளாவியதாக வேண்டும்.
சத்துவகுணமே நாமாகவேண்டும்.

எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும், ரஜோ, தமோ குணங்கள் இடையூறு விளைவிக்கும்.
ஆன்ம ஞானம் பெற்றால்தான் பயமின்றி வாழலாம்.

உள்ளம், உரை, செயல் மூன்றையும் உள்ளிக் கெடுத்து, இறையுள் ஒடுங்க வேண்டும்.

ஒருமைப்பாட்டுடன் பயன் கருதா பணி, தொடர்ந்த பக்தி, சேவை மூலம் மாயையைக் கடக்கலாம்.

நன்றி : ரகுவீரபட்டாச்சாரியார்.


15. பரிபூரணன்.

பிரும்மம் என்றால் முதலில் புரியாது, வேதம் என்பது சத்தம் போலத் தோன்றும்.
அறிவுஜீவிகள் சத்தத்தின் பொருளை அறிய முற்பட்டதன் விளைவு... தெளிவு, பயன்...ஆனந்தம்.
ஒரு பொருளைப் பற்றிய அறிவு, அதன்மீது காட்டப்படும் பரிவு, அதனால் நடைபெறும் இயக்கம் என்ற மூன்று நிலைகளில் நம் வாழ்வு அடங்கும்.
இதையே..ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம் என்கிறோம்.
இவை ஒவ்வொன்றும் தனிமங்கள் அல்ல.

அழியும் உலகம்; அழியாத இரு ஆத்மாக்கள்; ஜீவாத்மா, பரமாத்மா.
வாழ்க்கையாகிய மரத்தில் இரு கிளிகள்; ஒன்று அநுபவிப்பது; மற்றது அநுபவிக்கப்படுவது......வேதம் கூறும் அழகான உவமை இது !

மனிதனும் ஒரு மரம் போலத்தான்;
உயிரான வேர் தலைப் பகுதி; பின்னர் கிளைகள்; இலைகள்; ஆகாயத்திலிருந்து காற்று, காற்றிலிருந்து தீ, தீயிலிருந்து நீர், நீரிலிருந்து பூமி, பூமியிலிருந்து மூலிகைகள், உணவு;
உணவினால் தாமச, இராஜச, சத்துவ குண மனிதர்கள்...இந்த இயற்கைச் சங்கிலிதான் எத்தனை இனிமையானது !
இதற்கு முடிவுமில்லை; முதலுமில்லை.

இறைவன் மட்டும் தான் அழிவற்றவன்; உலகம் நிலையற்றது; அழிவு ஒன்றுதான் அழிவற்றது. அழிவில்தான் ஆனந்தமே .மாறி மாறி வரும் வசந்தகாலம், மழைக்காலம், குளிர்காலம், கோடைக்காலம்...என்ற இந்தக் காலச் சக்கரம் மனிதனின் தோழன்....

இந்த மாற்றங்கள் மனிதனை சுறுசுறுப்பாக்கி இயக்குகின்றன....காலை அவனை விழிக்கவைக்கிறது; பகல் அவனை உழைக்கவைக்கிறது; மாலை அவனை மகிழ்விக்கிறது; இரவு அவனைத் தாலாட்டுகிறது...
இவ்வனைத்தையும் இயக்குபவன் இறைவன் !

இராஜச, தாமச குணங்கள் களைகள்..அகற்றப்பட வேண்டும்; சத்வகுணத்தை வெற்றிகொள்ளவேண்டும். அது உரம் போன்றது.

ஒரு செயல் வெற்றிபெற, அறிவு, அன்பு, உழைப்பு தேவை
பக்தி, காரியத்தை எளிதாக்குகிறது.

தாய்நாட்டு உணர்வு...கல்லுடைப்பதையும் செக்கிழுப்பதையும் இன்பமாக்கியது!
இறை உணர்வு சுண்ணாம்பு காளவாயின் சூட்டை...மாசில் வீணையாகவும், வீசு தென்றலாகவும் மாற்றியது !

நீரிலே ஓடம் எளிதாக மிதந்து செல்வதுபோல, பக்தியால், பாவனையால், செயல்கள் இனிமையாகின்றன, அலுப்பைப் போக்குகின்றன...தாயிடம் காணும் பரிவும் பக்திதான் !

சேவையே வாழ்கையாகும்போது தான் ஆன்ம ஒளி கிடைக்கும்.நாம் சேவகர்கள்; இறைவன் நம் சேவையைப் பெறுபவன்.

ஞானம் பெறுவதும் அகங்காரமற்ற சேவை செய்வதும் ஒன்றெ
.
அனைத்து உயிர்களிலும் ஆன்மா ஒன்றே எல்லா சேவையும் இறைப் பணியே !

நன்றி : ரகுவீரபட்டாச்சாரியார்

ஜானகி
17-09-2012, 01:26 AM
16. அறமும் மறமும்


'வாழ்க்கை' எனும் வார்த்தையின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் 'வாகை' எனும் வெற்றியைக் குறிக்கின்றன. அதனைப் பெற முதல் இரு எழுத்துக்கள் 'வாழ்' என்கின்றன.

மனித இயற்கை, எதிர்மறையான இரு கூறுகளுடையது.
மனதில் எப்போதும் மோதல்கள்...நன்மைக்கும் தீமைக்கும்; ஒளிக்கும் இருளுக்கும்: உண்மைக்கும் பொய்மைக்கும்: பணிவுக்கும் ஆணவத்திற்கும்; தூய்மைக்கும் ஊழலுக்கும்....என வாழ்க்கையே போர்க்களம் தான்...

ஒவ்வொருவர் மனமும் குருக்ஷேத்திரம் தான் ! பாண்டவர்கள் எனும் நல்லியல்புகளும், கௌரவர்கள் எனும் தீய இயல்புகளும் எதிர்ப்படுகின்றன.

சத்தியம், அகிம்சை எனும் சக்கரங்களாகவும், அன்பு குதிரைகளாகவும், புலனடக்கம் கடிவாளமாகவும் கொண்ட அறிவு எனும் தேர் தான் வாழ்க்கைப் பாதையைக் கடக்கச் சரியான சாதனம்.

அச்சமே அழிவுக்கு ஆணிவேர்;
ஆண்மையே வெற்றிக்கு வழி;
அகிம்சையும் சத்தியமும் இதன் துணைகள்.

அன்பின் பல்வேறு அவதாரங்களே...இறைநம்பிக்கை, அஞ்சாமை, உள்ளத்தூய்மை, உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, தவம், நேர்மை...இவையெல்லாம்.

பொய்மையின் அடித்தளம்..இறுமாப்பு, ஆடம்பரம், கர்வம், கோபம், கடுமை, அஞ்ஞானம்...இவையெல்லாம்.

பொய்மையின் ஆன்மா...அறியாமை
பொய்மையின் உடல்...அகங்காரம்.

தீய குணங்களின் சக்தி அதிகமாதலால், தீமையை எதிர்க்கும் அஞ்சாமைக்கு எனும் தளபதிக்கு, பணிவு எனும் துணை தேவை.

அகிம்சை என்பது அன்பின் இறுதிப் பரிணாமம்.

ஆசையை, காமத்தை மடைமாற்றம் செய்யவேண்டும்.

நேய உணர்வு, ஆன்ம நேயம் பெருகவேண்டும்.

மனிதம் புனிதமாக்கப்பட வேண்டும்.

நன்றி : ரகுவீரபட்டாச்சாரியார்.



17. ஒளி, கிளர்ச்சி, இருள்


மனிதர்களும் மாமனிதர்களாக, கீதை ஒரு செயல் திட்டத்தைத் தருகிறது.

வாழ்க்கை சிறக்க, நல்ல செயல் திட்டங்களால் முறைப் படுத்திக்கொள்ள வேண்டும்.
உயிரைவிட ஒழுக்கம் மேம்பட்டது.
ஒழுக்கம் நிலைத்துவிட்டால், மனதில் அறமும் அன்பும் நிறைந்து சுகம் கிடைக்கும்.

ஒரு மனிதனுக்கு, தன் உடல், உலகம், சமூகம் என்ற மூன்றும் உதவுகின்றன.
அதனால் இவைகள் தேய்மானமடைகின்றன.
இதற்குப் பரிகாரமாக மனிதன், வேள்வி, தானம், தவம் ஆகியன செய்யவேண்டும்.

உலகத்திற்காக நாம் செய்வது வேள்வி...இதில் ஈடு செய்தல், அழுக்கை அகற்றல், நிர்மானப்பணி இவை அடங்கும்.
இவ்வேள்வியினை நாம் கடமை உணர்வுடனும், பொது நலத்துடனும் செய்யவேண்டும்.

சமூகத்திற்காக நாம் செய்வது தானம்
நம்மை உருவாக்கியவர்களுக்கு, நமக்கு உதவியவர்களுக்கு நாம் தீர்க்கும் கடனே இது.
இதை மனம், மொழி மெய்யால் செய்யவேண்டும்.

இவ்விரண்டிற்கும் அடிப்படை நமது உடல்.
நல்ல உடல், நல்ல மனம் இவை பெற தவம் செய்யவேண்டும்.
நாம்செய்யவேண்டியதைச் செய்வதே தவம்.

வேள்வி, தானம், தவம் மூன்றும் யக்ஞத்தில் அடங்கும்.
உடல், சமூகம், உலகம், மூன்றும் புறம் என்பதில் அடங்கும்.
இறைவனுக்கு அர்ப்பணமாக இந்த யக்ஞத்தை செய்தால், உடலும், சமூகமும், உலகமும் சமநிலை பெறும்.
இவ்வாறு செய்யும்போது உடலுக்கு சிறிது உணவும் தேவைப்படும்.உணவும் வேள்வியின் ஒரு பகுதியே.

நம் செயல்கள் எல்லாம் நம் மனதின் செயல்பாடுகளே.
மனிதன் செயல்களைச் செய்யும்போது, அவனிடம் முக்குணங்களும் தோன்றும்.
அகங்காரம், அசட்டை இவைகளைத் தவிர்த்து, சாத்வீகமாகச் செய்யவேண்டும்.
அப்போதுதான் மனத் தூய்மை ஏற்படும்.

தனித்துவம், சமூகம் என்ற வேறுபாட்டை மறந்து, இறைமை உணர்வுடன், யக்ஞத்தினை அர்ப்பணிப்பு உணர்வுடன், தூய உணவு, பழக்க முறைகளுடன் செய்தால்.....மண்ணிலேயே விண்ணை, பேரின்பத்தைப் பெறமுடியும்.

நான் உடலுக்குள்ளே;
உடல் உலகுக்குள்ளே;
உலகம் இறைமைக்குள்ளே;
இறைமைக்குள்ளே நான்;
எனக்குள்ளே இறைமை;
இந்த எண்ணம் தான் என்ன இனிமை.....

நன்றி : ரகுவீரபட்டாச்சாரியார்


18. அவன் அருளே !


உலகில் மனிதன் வாழ்வாங்கு வாழ வழிமுறைகளைக் கூறுகிறது.

இராஜச, தாமச கர்மங்களை அறவே துறக்கவேண்டும்.
சாத்விகச் செயல்களின் பயனில் ஆசையின்றிச் செய்தல் வேண்டும்.

உலகம் சுற்றுகிறது என்றாலும் அந்த உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.
அதுபோல, செயல் விளைவுகளின் பற்றின்றிச் செயலைச் செய்யும்போது, கொஞ்சம் கொஞ்சமாகச் செயலே மறந்துவிடும்.....ஆனால் கர்மம் மட்டும் தொடரும்.
இது பழக்கத்தின் தாக்கம்.

நமக்கு இயற்கையாக அமைந்துள்ள செயல்களைக் கடினமானாலும் செய்க;
பேராசை காரணமாக எச் செயலையும் செய்யற்க.

இறுதியில் கண்ணன் கூறுகிறான் " எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு என்னையே சரணடை. கவலையை விடு; நான் உன்னைப் பாவங்களிலிருந்தும் விடுவித்து மோட்சமளிப்பேன்."

தர்மத்தை நாம் போற்றிக் காத்தால், தர்மம் நம்மைக் காக்கும்.
அவ்வாறேதான் கர்மமும் நம்மைக் காக்கும்.
கர்மத்தின் முதிர்ச்சியே மோட்சம் தான்.

ஆத்மா பரமாத்மாவின் அநுபவத்தை ஏற்றுக் கொள்வது...உணர்வு நிலை;
செய்யும் செயல்களால் பாதிப்பு இல்லை...செயல் நிலை;
புண்ணியமும், பாவமும், உயர்வும் தாழ்வும், வேண்டுதலும் வேண்டாமையும் கொள்ளாத நிலை....ஞான நிலை.
இந்த மூன்று நிலைகளிலும் ஞானிகள் செயல் படுகின்றார்கள்.

அகங்காரம் அழிய வேண்டும்;
அஞ்சாமை பெற வேண்டும்;
ஆன்மாவையும் உடலையும் பிரித்து உணர வேண்டும்;இறைவனின் ஈறில்லா சக்தி வெள்ளத்தில் துரும்பென உணர வேண்டும்;
பின்னர், செயல்நிலை, உணர்வுநிலை, ஞானநிலை பெற்று ஒளிர்வோம்.

இதையே' உயிரெல்லாம் உறைவதோர் உடம்பாதல்' எனக் கம்பன் சொன்னான்.

இறையருள் மனிதனை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது...
நாம் ஓரடி அவனை நோக்கி நடந்தால், அவன் ஏழடி நம்மை நோக்கி வருகிறான்.

ஒழிவில்லாது அவனை நினைந்துருகினால், அவனும் உன்னில் கலந்து உன் இன்ப துன்பங்களை ஏற்று, ஒளிமயமான இன்ப வழ்யைக் காட்டி, ஈடேற்றுவான் !

துதி கோவிந்தனை, துதி கோவிந்தனை

கோவிந்தனைத் துதி மடமனமே!

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !

எல்லாம் கண்ணனுக்கே அர்ப்பணம் !



நன்றி : ரகுவீரபட்டாச்சாரியார்.

ஆதி
17-09-2012, 06:43 AM
முக்குணம் பற்றி மீண்டும் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்கு நனறிங்கம்மா

குறிப்பாய் முக்குணம் பற்றி சொல்வதற்கு காரணம், என்னை நானே ஒரு முறை சுயபரிசீலனைக்கு உட்படுத்துக் கொள்ள வாய்ப்பாய் அமைந்தமையால் தான் ரொம்ப நன்றிங்கம்மா

நாஞ்சில் த.க.ஜெய்
17-09-2012, 09:03 AM
பகவத்கீதை கூறும் பக்தியோகம் கர்மயோகம் ராஜயோகம் பற்றிய கருத்துக்கள் இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று ..பகிர்தலுக்கு நன்றி ஜானகி அவர்களே....