PDA

View Full Version : அவளை சுற்றி



kulakkottan
05-09-2012, 02:55 AM
உன் காலை சுற்றி ஒரு ஜீவன்
போகுமிடமெல்லாம் உன் பின்னே
உந்தன் முகத்தில் தேடி தேடி
பொழுது முழுக்க பார்த்து கிடக்குது

ஊரடங்கிய இந்த வேளை - கட்டாந்தரை
முற்றத்து நிலவு பார்வையில்
முடிக்காத பாடங்கள் படிக்க -நீ வருவாய் என
பசியோடும் கரி படிந்த கையோடும்

காய்ந்து போன ரொட்டி துண்டு -ஒரு
கடி கடித்து கனிவோடு கொடுக்கிறாய்
அவசரம் என்பதால் அதற்கு பசியால்
உனக்கு படிப்பாசையால் பசியை அணைத்து

யாருமில்லை கூடவிருக்க -காலடி
நாயை தவிர என அதையும் பார்க்கிறாய்
நானும் பார்க்க தான் முடியுது உன்னை -எந்தன்
வயிறும் பையும் காலியாய் இருப்பதால் .

கீதம்
05-09-2012, 10:16 AM
அவளைப் பீடித்திருக்கிறது படிப்பாசை, அவனைப் பீடித்திருக்கிறது காதல். இருவரையும் பீடித்திருக்கிறது வறுமை. நான் புரிந்துகொண்டது சரிதானா தெரியவில்லை. ஆனால் வறுமையிலும் காய்ந்த ரொட்டியைப் பங்கு போடும் பரிவு நெகிழ்த்துகிறது. பாராட்டுகள் குளக்கோட்டன்.

கவிதைக்குள் மெல்லியதாய் சில நெருடல்கள்...

பசியோடும் கரி படிந்த கையோடும்

இரண்டாம் பத்தி இந்த வரிகளோடு முற்றுப்பெறாமல் தொக்கி நிற்பதாய் ஒரு தோற்றம்.

அவசரம் என்பதான் அதற்கு பசியால்
உனக்கு படிப்பாசையால் பசியை அணைத்து

இந்த வரிகளில் தெளிவின்மை புலப்படுகிறது. வரிகளை சீராக்கினால் கவிதையின் ஆழம் தங்கு தடையின்றிப் புலனாகும்.

kulakkottan
05-09-2012, 11:24 AM
வறுமையில் கரி பாத்திரம் கழுவி விட்டு ,ஒற்றை ரொட்ட்டியை சாப்பிட்டு விட்டு நடு இரவில் படிக்கும் சிறுமியை ,அருகில் உள்ள ஒரு பெரியவர் (அவரும் வறுமையில்) பார்த்து உதவ இயலாமையில் ஏங்குகிறார் !இதுவே என் கரு!

இந்த கவியை எழுதி முடிக்கையில் எனக்கும் திருப்தி இல்லை,ஒருவாரமாய் இந்த கவிதை என்னிடம் காய்ந்து விட்டது!வேறு வழி இன்றி பதிந்து விட்டேன் !
வரிகளை சுட்டி காட்டியமைக்கு நன்றி கீதம் !

kulakkottan
05-09-2012, 11:28 AM
காய்ந்து போன ரொட்டி துண்டு -ஒரு
கடி கடித்து கனிவோடு கொடுக்கிறாய்
அவசரம் என்பதால் அதற்கு பசியால்
உனக்கு படிப்பாசையால் பசியை அணைத்து
என்ற பந்தியை


காய்ந்து போன ரொட்டி துண்டு -ஒரு
கடி கடித்து கனிவோடு கொடுக்கிறாய்
அதற்கு பசியால்-உனக்கு படிப்பாசையால்
பசி அணைந்து அவசரம் வந்ததால்

என மாற்றினால் எப்பிடி இருக்கும் ,பொருந்துகிறதோ!

நாஞ்சில் த.க.ஜெய்
05-09-2012, 04:21 PM
உந்தன் முகத்தில் தேடி தேடி
பொழுது முழுக்க பார்த்து கிடக்குது
இந்த வரிகள் கவிதையில் பொருத்தமின்றி உள்ளதாக தோன்றுகிறது ..காரணம் இந்த வாயில்லா ஜீவன் பசிதீர்க்க கையிலிருந்து ஏதேனும் கிடைக்குமா என்று பார்த்து பின்னர் முகத்தினை நோக்கும் ..எதனை தேடுகிறது என்பதில் தெளிவு உள்ளதாக தெரியவில்லை...


நீ வருவாய் என
பசியோடும் கரி படிந்த கையோடும்
யார் என்பதினை புரிந்து கொளவதில் இடர் தோன்றுகிறது..


யாருமில்லை கூடவிருக்க -காலடி
நாயை தவிர என அதையும் பார்க்கிறாய்
நானும் பார்க்க தான் முடியுது உன்னை -எந்தன்
வயிறும் பையும் காலியாய் இருப்பதால் .

நீங்கள் கூறும் கருத்திற்கு இந்த வரிகள் பொருந்திவருகிறது..


காய்ந்து போன ரொட்டி துண்டு -ஒரு
கடி கடித்து கனிவோடு கொடுக்கிறாய்
அதற்கு பசியால்-உனக்கு படிப்பாசையால்
பசி அணைந்து அவசரம் வந்ததால்
கவிதை முடியாமல் தொக்கி நிற்பது போன்றே உள்ளது இதில் அவசரம் வந்ததால் எனும் வார்த்தையினை நீக்கி முயற்சித்தால் முழுமையாகும் என்று நினைக்கிறேன் ...வாழ்த்துகள் குளகோட்டன் அவர்களே ..

A Thainis
05-09-2012, 06:04 PM
கீதம் மற்றும் நாஞ்சில் ஜெய் இருவரும், குலகோட்டனின் கவிதையை சிறப்புற தொடுக்கும் ஆலோசனைகள் அழகு, இவ்வாறு வழிக்காட்டும் போதுதான் இதயமும் இலக்கியமும் செழிப்புறும்.

கீதம்
05-09-2012, 11:37 PM
வறுமையில் கரி பாத்திரம் கழுவி விட்டு ,ஒற்றை ரொட்ட்டியை சாப்பிட்டு விட்டு நடு இரவில் படிக்கும் சிறுமியை ,அருகில் உள்ள ஒரு பெரியவர் (அவரும் வறுமையில்) பார்த்து உதவ இயலாமையில் ஏங்குகிறார் !இதுவே என் கரு!

இந்த கவியை எழுதி முடிக்கையில் எனக்கும் திருப்தி இல்லை,ஒருவாரமாய் இந்த கவிதை என்னிடம் காய்ந்து விட்டது!வேறு வழி இன்றி பதிந்து விட்டேன் !
வரிகளை சுட்டி காட்டியமைக்கு நன்றி கீதம் !

மனவருத்தமின்றி விமர்சனங்களை நேர்மறையாய் வரவேற்று, புரிதலுடன் கருத்திட்டதற்கு மிகவும் நன்றி குளக்கோட்டன்.

இந்தக் கவிதையின் கருவை வேறுவிதமாய்ப் புரிந்துகொண்டதற்கு வருந்துகிறேன். உங்களுடைய மனதில் உள்ள காட்சியைப் புரிந்துகொள்ள முடிகிறது. அது உணர்வு மீறிய வார்த்தைகளாய் உருவமெடுப்பதில் உங்களுக்குண்டான சிரமமும் புரிகிறது. கவிதையில் நீ நான் என்று பொதுவாகக் குறிப்பிடாமல் சின்னஞ்சிறுமி என்பதையும், வயோதிகர் என்பதையும் எங்காவது ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தால் உங்கள் எண்ண அலைவரிசையோடு எங்களுடையதும் இடரின்றி ஒத்துப்போயிருக்கும். இப்போதும் குறையில்லை. இதிலும் ஒரு சாதகம் உண்டு.

இதை யார் யாரைப் பார்த்து வேண்டுமானாலும் எண்ணுவதாகக் கொள்ளமுடிவது சிறப்பு. வறுமையில் வாடும் கணவன் - மனைவி, காதலன் - காதலி, தாய் - மகள், தந்தை - மகள், அண்ணன் - தங்கை அல்லது அறிமுகமற்ற இரு நபர்கள் இப்படி எந்த இடத்திலும் பொருத்தி கவிதை சொல்லும் காட்சியை உணரமுடியும்.

உணர்வுபூர்வமான கவிக்கருவைக் கொண்டு கவிதை படைத்த விதம் அருமை. பாராட்டுகள்.

kulakkottan
06-09-2012, 02:57 AM
கீதம்,நாஞ்சில் ஜெய் அவர்களின் ஆலோசனைகளுக்கு நன்றி ,இந்த இளையவர் கவியுக்குள் இத்தனை ஈடுபாட்டுடன் உள்வாங்கியமைக்கும் நன்றி !

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை!
நூற்று கணக்கான இலக்கியம் படைத்து பெரும் அனுபவங்களை ஒற்றை ஆலோசனைகளில் இலகுவாய் பெற முடிகிறது!

ஆதவா
14-09-2012, 09:17 AM
வறுமையின் ஒரு துளி இக்கவிதையில் தெரிகிறது. கவிதை என்ன சொல்லவருகிறதோ அதனை உணரமுடிந்தாலேயே கவிதை முழுமையடைந்துவிடுகிறது இல்லையா? சிற்சில முழுமையடையாத வார்த்தைகள் இருப்பினும் கவிதை தனது இயல்புநிலையை அடைந்தே இருக்கிறது.

உந்தன் முகத்தில் தேடித் தேடி..

நாயின் பார்வையில் நாசூக்காக வறுமையின் முகத்தைக் காணவைத்திருக்கிறது பாராட்டுக்கள். அடுத்த வரிகள் ”பொழுது முழுக்க” என்பது இது வெறும் பசியல்ல என்பதைக் காட்டுகிறது. கவிதையில் வார்த்தை கட்டமைப்புகள் மிக முக்கியமானவை. ஒன்றோடொன்று மிகத்தெளிவாக உட்பிணைப்பு நிகழ தொடர்புடன் இருக்கவேண்டும். அதனை செம்மையாகவே செய்கிறது இவ்வரிகள்.

”பாடங்கள் படிக்க நீ வருவாய்”

ஆணா, பெண்ணா என்ற இனவேற்றுமை இல்லாமலிருப்பது இன்னுமொரு சிறப்பு என்றே சொல்லுவேன். பாடங்கள் படிக்க எனும்பொழுது இளமையில் வறுமை என்று தெரிகிறது. ஒரு குறியீட்டுடன் கவிதை செல்வது கவிதையின் அடுத்த நிலைக்கான குறியீடு. ”கரி படிந்த கை” வறுமைக்குச் சான்றாய் இன்னுமொரு வரி. பத்துக்கு அடுத்து பதினொன்று. அடுத்தடுத்த வரிகள் முழுமை பெறாதவை என்பதால் சட்டென ஒருமுடிவுக்கு வரமுடியவில்லை. ரொட்டி கொடுப்பது இன்னொருவருக்கா, வாயில்லாத ஜீவனுக்கா என்ற குழப்பத்தை கடைசி பத்தி கொஞ்சம் தீர்த்து வைக்கிறது.

முடிவில் கவிதை, சிறு நிகழ்வை மையப்படுத்துகிறது. மூன்று பூமிவாசிகளின் வயிறு உரக்க சப்தமிடுகிறது என்பது அது. இங்கே காட்சிகளில் முகங்களின் உணர்வுகளே மிக முக்கியம். வயிறும் பையும் காலியாக இருப்பதால் பார்க்க மட்டுமே செய்ய முடிகிறது. வெறும் பார்வைக்குள் உணர்வுகள் நிறைய இருக்கலாம். கவிதை சொல்லாமல் விட்டது அவற்றைத்தான். இருப்பினும் ஓரிரண்டு வரிகள் நிறைவாகவே இருக்கின்றன.

pooபின் ஒன்றுமில்லை (http://www.tamilmantram.com/vb/showthread.php/5951-ஒன்றுமில்லை!!)எனும் இக்கவிதையை வாசித்துப் பாருங்கள். நீங்கள் கையாண்டிருக்கும் களத்தை இவர் வேறுவிதமாக கையாண்டிருப்பார்.

கவிதையை இப்படி எழுது என்று சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லை. மாறாக இப்படி மாற்றி எழுதலாம் என்று ஆலோசனை சொல்லலாமே என்று நினைக்கிறேன்.

முடிக்காத பாடங்கள் படிக்க - நீ வருவாய்.. என என்பதைத் தூக்கிலிடலாம்.

அடுத்த பத்தி இப்படி இருக்கலாம்.

காய்ந்து போன ரொட்டி துண்டு -ஒரு
கடி கடித்து கனிவோடு கொடுக்கிறாய்
பசிக்காக அதற்கும்
படிப்பாசையில் எனக்கும்


அன்புடன்
ஆதவா.

kulakkottan
16-09-2012, 02:54 PM
அடுத்த பத்தி இப்படி இருக்கலாம்.

காய்ந்து போன ரொட்டி துண்டு -ஒரு
கடி கடித்து கனிவோடு கொடுக்கிறாய்
பசிக்காக அதற்கும்
படிப்பாசையில் எனக்கும்


அன்புடன்
ஆதவா.
நல்லதொரு வழி காட்டலுக்கு நன்றி ஆதவன் அவர்களே!
என் கவியின் குறை தீர்க்க வழியின்றி வலியுடன் இருக்கையில்
உங்கள் வழிகாட்டல் அந்த வலியை போக்கிவிட்டது !
ஒவ்வொரு சொற்தொடரை ஆராய்ந்து இருக்கிறீர்கள் என்னும் போது பெருமையாய் இருக்குது உங்கள் எண்ணம் !
வேலை பளு காரணமாய் உடன் பின்னூட்டம் இட முடியவில்லை!

அமரன்
16-09-2012, 06:04 PM
குளக்கோட்டன்..

தொடர்ந்து வரும் உங்களுடைய ஒவ்வொரு படைப்பும் பலராலும் கவனிக்கப்பட்டு, விமர்சனக்கள் முன்வைக்கப்படும் என்பது உறுதி. மக்களின் விமர்சனமும், அதனை நீங்கள் ஏற்றுக்கொண்ட விதமும் அதற்கான கட்டியங்கள்.

கவிதை...

சொற்கள் விரதமிருக்கின்றன.
சில இடங்களில்
ஒற்றைக்காலில் தவங்கிடங்கின்றன..

கவிதையில் இது முக்கியம்.
ஆனாலும்
கருவை கலவையாக்காமல் இருத்தல் அவசியம்..

அதை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.