PDA

View Full Version : இனியவன் என் இணையவன்கீதம்
04-09-2012, 12:59 PM
என் இதயத்தில் உலாவரும்
என் இணையவனுக்காய் உலாவருகிறது
இணையத்திலோர் இன்கவியொன்று!

என்னோடு ஊடுபவனும் அவனே!
ஊடி, காதல் உறவாடுபவனும் அவனே!
உணர்வினில் ஊடுருவி என்
உயிரணைபவனும் அவனே!
உறவினூடே எனை உயர்த்தி
உளம் நிறைபவனும் அவனே!

மனையிலமர்த்தியது போதாதென்று
பொன்னரியணையிலும் அமர்த்திட
பொல்லாத ஆசைகொண்டு இழைக்கிறான்
தன் உழைப்பினாலொரு சிம்மாசனம்!
களைப்பின்றி எழுதிக்கொண்டேயிருக்கிறான்
நாளெல்லாம் தன் நேசத்தின் நீள்சாசனம்!

குடும்பவிளக்கின் அழகு
கூடத்து இருப்பென்றிருந்தேன்.
குன்றத்து ஒளிர்தலே
பெண்குலத்திற்கு அழகென்றே
மன்றத்திலேற்றிவைத்தான்;
தன் மனதிலும் ஏத்திவைத்தான்!

பொருள்வயிற்பிரியும் செயலும்
ஆடவர்க்கியல்பென்றறிந்தும்
இயல்பறுத்தென்னை யாண்டும்
இணைத்தழைத்துச் செல்கிறான்,
இயலும் எம்மால் எள்ளற்பொறுத்தல்
இயலாது பிரிவின் இன்னற்பொறுத்தலென்றே
இனிதாய் விடைபகர்கிறான்.

நாலும் என்னை அறியச் செய்கிறான்,
நானே என்னை அறியச் செய்கிறான்,
நானாய் என்னை இயங்கச் செய்கிறான்,
நாளும் என்னை உவக்கச் செய்கிறான்.

எந்நாளும் தன்னலம் மறக்கிறான்,
என்னலத்தைத் தன்னலம் என்கிறான்,
என்னுறவு தன்னுறவு எனும் பேதமற்று
எவ்வுறவும் நம்முறவு என்று பரிகிறான்.

அகிலத்தைச் சுழற்றிவிடுகிறான்,
அழகாய் என் விரல்நுனியில் பொருத்தி!
சகலமும் நீயேயென்று சரணடைகிறேன்,
அவனை என் நெஞ்சத்தில் இருத்தி!

தொழில்நுட்ப உலகைப்
பரிச்சயமாக்குகிறான் எனக்கு!
தொல்லையில்லா உலகைப்
பரிசாக்குகிறேன் அவனுக்கு!
வாழ்க்கைப் பாதையின்
முட்கள் அகற்றியபடி
முன்னால் நடக்கிறான் அவன்,
செருக்கோடும் காதற்பெருக்கோடும்
செம்மாந்து பின்தொடர்கிறேன் நான்!

என் எழுத்தை வியந்துபோற்றும் வாசகன்!
என் கருத்தை நயந்துவியக்கும் நாயகன்!
என்னால் முடியுமாவென்றே
உன்னி முடிப்பதற்குள்…
உன்னால் முடியுமென்றழுந்தச்சொல்லி
உணர்வாலும் செயலாலும் உந்துபவன்!

அண்ணனும் தம்பியுமாய்…
ஆருயிர் தோழனும் தந்தையுமாய்…
ஆசைக் கணவனும் காதலனுமாய்…
அவனிருப்பே எனக்கு ஆயிரம் படைக்கலம்!
அவன் தயவால்தானே இன்றெனக்கு
அவனியும் அஞ்சறைப்பெட்டியுள் அடைக்கலம்!

அச்சிலேற்றவியலாக் கவிதைகள்
ஆயிரமாயிரம் அவனுக்காய் புனைந்திருந்தும்
எச்சமாயொன்று எழுந்ததேன் இக்கவியரங்கம்?

இருபதாண்டு நிறைவில் இனிக்கும்
என்மனநிறைவின் பரிசாய் இருக்கட்டுமே
என் மனவாழம் தோண்டிய இக்கவிச்சுரங்கம்!

(பி.கு. கவியரங்கத்துக்காய் எழுதிய இக்கவிதையை எங்கள் இருபதாம் திருமணநாளில் என் அன்புக்கணவருக்கான கவிப்பரிசாய் சமர்ப்பிக்கிறேன். கவியரங்கத்துக்கு வேறுகவிதை வரும் :))

மதி
04-09-2012, 01:06 PM
அக்கா.. முதல் வாழ்த்தை பிடிங்க. இன்றா இல்லை நாளையா??
மாமாக்கு என் வாழ்த்தை சொல்லிடுங்கோ!:)

M.Jagadeesan
04-09-2012, 01:26 PM
அன்புக் கணவரை வியந்து போற்றும் அழகான கவிதை!
இல்லறத்தின் இருபதாம் ஆண்டில் எழுந்த இனிய கவிதை.

வாழ்த்துக்கள் கீதம்!

கலைவேந்தன்
04-09-2012, 01:56 PM
அழகான மெல்லிய மலரொன்றை ஸ்பரிசித்தது போலொரு கவிதை. அழகிய இல்லம் அலங்கரிக்கப்படுவது இல்லாளின் இன்முகத்தால்தான். இன்முகம் காட்டி நன்முகம் நாணி புன்முகம் புரிந்து அன்பகம் செழிக்கவல்லாள் சிறந்ததொரு மனையாள். அத்தகு மனையாட்டியைப் பெற்ற அந்த அண்ணலுக்கும் எல்லாமாய் நின்று அரவணைத்துக் காத்து இப்பூவுலகின் புரிதலைக் கூறி புன்னகை விளக்கேந்தி புரிதலுடன் வாழும் அந்த அண்ணலைப் பெற்ற இந்த அம்மைக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

இன்று போல் என்றும் மனநிறைவுடனும் மனவளமுடனும் உளவலியுடனும் நீடூழி வாழ்ந்திட இறைவனை வேண்டி வாழ்த்தி நின்றேன்.

( அத்தானைத்தான் இத்தனை ன் போட்டு எழுதினீங்களாக்கும். எவ்வளவு போற்றினாலும் தகும் அந்த அத்தானுக்கு என் நல்வாழ்த்துகள். )

ஜானகி
04-09-2012, 03:10 PM
வாழ்த்துக்கள் பலப்பல.... கொடுத்துவைத்த தம்பதிகள்...கண்ணேறு படாமலிருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் !
ஆனந்தமாய், அமைதியான வாழ்க்கைப் படகில், உல்லாசமாய் பயணம் தொடர ஆசிகளும் வாழ்த்துக்களும்....

A Thainis
04-09-2012, 06:28 PM
அன்பால் பிணைந்த அனுபவத்தால் மட்டும் இனிய தலைவனுக்கு பாச தலைவி பாட இயலும் இவ்வித தேனன்பு கலந்த தெவிட்டாத பண்.
கீதம் நீங்கள் உங்கள் கணவருக்கு இயற்றிய இக்கவிதை இன்று மண முடிக்கும் அனைவருக்கும் ஒரு இனிய பாடம்.
இருபதாம் ஆண்டு இல்லற வாழ்வை தொடர்ந்திடும் உங்கள் இருவருக்கும் என் இதயம் கனிந்த மகிழ்ச்சி நிறை நல் வாழ்த்துக்கள்.
உடல் உள்ள உறவு சுகத்தோடு இன்றும் போல் என்றுமே வாழ்ந்திடுக.

அமரன்
04-09-2012, 08:09 PM
நல்வாழ்த்துகள் அக்கா..

கீதம்
05-09-2012, 12:06 AM
அக்கா.. முதல் வாழ்த்தை பிடிங்க. இன்றா இல்லை நாளையா??
மாமாக்கு என் வாழ்த்தை சொல்லிடுங்கோ!:)

வாழ்த்துக்கு மிகவும் நன்றி மதி. இன்றும் இல்லை, நாளையும் இல்லை, நேற்றும் இல்லை, அதற்கு முந்தைய நாள். (திங்கள் :) )

கீதம்
05-09-2012, 12:07 AM
அன்புக் கணவரை வியந்து போற்றும் அழகான கவிதை!
இல்லறத்தின் இருபதாம் ஆண்டில் எழுந்த இனிய கவிதை.

வாழ்த்துக்கள் கீதம்!

தங்கள் அன்பான வாழ்த்துக்கு மிகவும் நன்றி ஐயா.

கீதம்
05-09-2012, 12:10 AM
அழகான மெல்லிய மலரொன்றை ஸ்பரிசித்தது போலொரு கவிதை. அழகிய இல்லம் அலங்கரிக்கப்படுவது இல்லாளின் இன்முகத்தால்தான். இன்முகம் காட்டி நன்முகம் நாணி புன்முகம் புரிந்து அன்பகம் செழிக்கவல்லாள் சிறந்ததொரு மனையாள். அத்தகு மனையாட்டியைப் பெற்ற அந்த அண்ணலுக்கும் எல்லாமாய் நின்று அரவணைத்துக் காத்து இப்பூவுலகின் புரிதலைக் கூறி புன்னகை விளக்கேந்தி புரிதலுடன் வாழும் அந்த அண்ணலைப் பெற்ற இந்த அம்மைக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

இன்று போல் என்றும் மனநிறைவுடனும் மனவளமுடனும் உளவலியுடனும் நீடூழி வாழ்ந்திட இறைவனை வேண்டி வாழ்த்தி நின்றேன்.

உங்களுடைய வாழ்த்தைக் கண்டு மனம் நெகிழ்ந்துபோனேன். மிக மிக மகிழ்வோடு நன்றி கலைவேந்தன்.

( அத்தானைத்தான் இத்தனை ன் போட்டு எழுதினீங்களாக்கும். எவ்வளவு போற்றினாலும் தகும் அந்த அத்தானுக்கு என் நல்வாழ்த்துகள். )

ஆண்டவனையே அவன் இவன் என்னும்போது (அன்பால்) ஆள்பவனை சொன்னால் என்ன என்ற நினைப்புதான். :)

கீதம்
05-09-2012, 12:12 AM
வாழ்த்துக்கள் பலப்பல.... கொடுத்துவைத்த தம்பதிகள்...கண்ணேறு படாமலிருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் !
ஆனந்தமாய், அமைதியான வாழ்க்கைப் படகில், உல்லாசமாய் பயணம் தொடர ஆசிகளும் வாழ்த்துக்களும்....

ஆசிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி ஜானகி அம்மா.

கீதம்
05-09-2012, 12:13 AM
அன்பால் பிணைந்த அனுபவத்தால் மட்டும் இனிய தலைவனுக்கு பாச தலைவி பாட இயலும் இவ்வித தேனன்பு கலந்த தெவிட்டாத பண்.
கீதம் நீங்கள் உங்கள் கணவருக்கு இயற்றிய இக்கவிதை இன்று மண முடிக்கும் அனைவருக்கும் ஒரு இனிய பாடம்.
இருபதாம் ஆண்டு இல்லற வாழ்வை தொடர்ந்திடும் உங்கள் இருவருக்கும் என் இதயம் கனிந்த மகிழ்ச்சி நிறை நல் வாழ்த்துக்கள்.
உடல் உள்ள உறவு சுகத்தோடு இன்றும் போல் என்றுமே வாழ்ந்திடுக.

வாழ்த்துக்கும் பரிவுநிறைப் பாராட்டுக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தைனிஸ்.

கீதம்
05-09-2012, 12:14 AM
நல்வாழ்த்துகள் அக்கா..

மிக்க நன்றி அமரன்.

jayanth
05-09-2012, 03:43 AM
எனதருமைத் தங்கைக்கும் மைத்துனருக்கும்(!!!) என்(ங்கள்) நெஞ்சம நிறைந்த மண நாள் வாழ்த்துக்கள்...

நாஞ்சில் த.க.ஜெய்
05-09-2012, 06:47 AM
அக்கா முதலில் என் இதயம் கனிந்த 20 ம் ஆண்டு திருமணநாள் நல்வாழ்த்துகள்..தன மன கிலேசத்தை வெளிக்காட்டும் எண்ண கவிதை அருமை ...

கீதம்
06-09-2012, 10:36 PM
எனதருமைத் தங்கைக்கும் மைத்துனருக்கும்(!!!) என்(ங்கள்) நெஞ்சம நிறைந்த மண நாள் வாழ்த்துக்கள்...

தங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கு மகிழ்வான நன்றி ஜெயந்த் அண்ணா.

கீதம்
06-09-2012, 10:37 PM
அக்கா முதலில் என் இதயம் கனிந்த 20 ம் ஆண்டு திருமணநாள் நல்வாழ்த்துகள்..தன மன கிலேசத்தை வெளிக்காட்டும் எண்ண கவிதை அருமை ...

மணநாள் வாழ்த்துக்கும் கவிதைப் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி ஜெய்.

சுகந்தப்ரீதன்
17-09-2012, 06:54 PM
அத்தானுக்கு அக்கா படைத்த முத்தான கவிதை முழுச்சத்தோடுதான் இருக்கிறது..:)

இருவருக்கும் எமது இனிய வாழ்த்துக்கள்... என்றென்றும் வாழ்க வளமுடன்..!!:icon_b:

Sasi Dharan
20-09-2012, 12:03 PM
உங்களை வாழ்த்தும் அளவுக்கு நாங்கள் பெரியவர்கள் அல்லர்...
இருந்தாலும் அக்காவுக்கு என் சார்பாகவும் வாழ்த்துக்கள்!!!