PDA

View Full Version : காதல் தோல்வி.



M.Jagadeesan
02-09-2012, 01:26 AM
நம்பியவனைக் கைகழுவி நட்டாற்றில் விட்டாள்
நம்பிஅவனோ நாளெல்லாம் அவள் நினைவாக

பந்தம் அவளே எனநினைத்தான் அவளோ
பந்தமாய் நின்றெரித்து காதல் மறந்தாள்.

கண்டுஅவளைக், காரணம் கேட்கச் சென்றான்.
கண்டவனைக் காண இயலாது என்றாள்.

" தாமரைக் கண்ணாளே! பாரென்று " கேட்டான்.
"தாம்அரைக் கண்ணாலும் பாரேன் " என்றாள்.

முழுமதி முகத்தாளே! முத்தமிட வாஎன்றான்.
முழுமதி கெடுமுன்னே ஓடிவிடு என்றாள்.

"அறிவில் ஆதவனாய் இருக்கின்றேன் " என்றான்
"அறிவில் லாதவனே! அகன்றுவிடு " என்றாள்.

"கணவனாய் என்னை ஏற்றுக்கொள் !" என்றான்.
" கண்அவனாய் இருக்க நீஎதற்கு ?" என்றாள்.

"மாதுளங் கனியாளே! மாறியதேன்? " என்றான்
மாதுஉளம் மாறியதால் மாறியதாய்ச் சொன்னாள்.

காவலரை மாற்றிய காரணத்தைக் கேட்டான்.
காஅலரில் கட்டழகனைக் கண்டதால் என்றாள்.

"மாதரை நம்புவது மடமையே! " என்றான்.
"மாதரையில் வேறுமாது கிடைக்கலையோ?" என்றாள்.

"மாதே!வா! மறுபடியும் காதலிக்க " என்றான்.
"மா தேவா! இவனை மன்னிப்பீர்! " என்றாள்.

நாஞ்சில் த.க.ஜெய்
03-09-2012, 06:38 AM
சொற்றாடல் மிளிர்கிறது வரிகளில் ...திரும்ப திரும்ப வாசிக்க தூண்டும் வரிகள் ...பாராட்ட வார்த்தைகளில்லை ...அருமை ஐயா..:aktion033::aktion033::aktion033:

M.Jagadeesan
03-09-2012, 07:31 AM
நாஞ்சில் த.க.ஜெய் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

ஜானகி
03-09-2012, 08:08 AM
பதம் பிரித்து பதம் பார்த்த பதவிசைப் பாராட்டுகிறோம் !

M.Jagadeesan
03-09-2012, 08:57 AM
ஜானகி அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

கீதம்
03-09-2012, 09:43 AM
சிலேடைக் கவியும் பொருளும் அசத்துகிறது. உள்ளிருக்கும் காதலனின் பரிதவிப்போ கவலை கொள்ள வைக்கிறது.

கண்டவனைக் கண்டு மாறும் மாதுளத்தின் பால் ஆசையை விட்டொழிப்பதே அழகு. கவி நன்று. பாராட்டுகள் ஐயா.

மதி
03-09-2012, 09:49 AM
பிரித்து மேய்ந்துள்ளீர் நல்கவிதையில். ஆதவனும் மதியும் வருகிறார்களே?

தீபா
03-09-2012, 10:18 AM
சொற்களை பிரித்து எழுத நல்ல புலமை வேண்டும், வொகாப்லரி உங்களிடம் ஸ்ட்ராங்காக உள்ளது. அழ்கு அழகு

- தீபா.

M.Jagadeesan
03-09-2012, 11:12 AM
கீதம், மதி, தீபா ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

A Thainis
03-09-2012, 12:10 PM
காதல் என்னமோ தோல்விதான் ஆனால் உங்கள் கவிதை வெற்றி முகம், கவி அமைப்பு சிறப்பு.

sarcharan
03-09-2012, 02:42 PM
நல்ல கவிதை ஐயா... ரசித்தேன்

M.Jagadeesan
03-09-2012, 04:07 PM
A.Thainis, Sarcharan ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!