PDA

View Full Version : புரியாத கவிதையை போல நீயும்



ஆதி
25-08-2012, 07:58 AM
புரியாத கவிதையை போல
ஆழ்ந்து மீண்டும் மீண்டும்
உன்னை வாசிக்கிறேன்

சொற்களின் இண்டுகளில்
மிக கமுக்கமாய் உலவும் அர்த்தத்தை போல
புலப்படாமல் இருக்கின்றன
என் மீது நீ வைத்திருக்கும் அபிப்ராயங்கள்

உன் அபிப்ராயங்களை
ஊகிக்க முயலும் என் எண்ணங்கள்
அக்கவிதையிலுள்ள இருண்மையான வார்த்தைகளை போல
வரிசையாகவும், தனித்தனியாகவும்
குழுகுழுவாகவும், கூட்டுத்தொடராகவும்
ஊர்ந்திருக்கின்றன

கவிதை நெடுக திரியும்
நிச்சலனம் உன் முகரூபம் கொண்டிருக்கிறது

உன் விழிகளின் பார்வையும்
உதடுகளின் புன்னகையும்
புதிர் விலகா குறியீடுகளை போல
அரூப காட்டில் தள்ளி
மீள இலயலா தவிப்பில் என்னை தொலைக்கின்றன..

வாக்கியமும் வார்த்தையும்
குறியீடும் படிமமும்
முன்னும் பின்னும்
கீழும் மேலும்
இடம் பெயராமல் இருப்பதை போன்று
மனதுக்குள் எம்மாற்றமுமில்லாமல் இருக்கிறாய் நீ

புரியாமலும்.....

கலைவேந்தன்
26-08-2012, 03:06 AM
கவிதையைப்புரிந்து கொள்ள முயற்சிப்பதே தவறு என்பது என் பணிவான கருத்து. கவிதைகள் உணர்வதற்கும் அனுபவிப்பதற்கும் உரியன. காதலியும் அப்படித்தான்.

காதலியையும் கவிதையையும் புரிந்துகொள்ள முயற்சித்துத் தோற்றுப்போன ஒரு நுகர்வோனைப்பற்றிய பச்சாதாபம் மிளிர்வது கவிதை நெடுக உணர முடிகிறது.

புரிந்துகொண்டு தீர்வுகாண முயலும் புதிர்கள் அல்ல பெண்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே எடுத்துக்கொள்வதுதான் மிகச்சரியான ஒன்று. ( குறைந்த பட்சம் என் அனுபவம் அதைத்தான் கூறுகிறது. ) புரிய முயற்சித்துவிட்டால் அவர்கள் எட்டிப்போய்விடுகிறார்கள்.

இங்கே பாலினம் குறிக்கப்பட வில்லை யானாலும் ஆணாக என் மனம் காதலியைத்தான் தேர்வு செய்கிறது. இது அபத்தமாகக் கூட இருக்கலாம்.

இக்கவிதை ஒரு பெண் தன் காதலனைப்பற்றியும் குறிக்கலாம். அல்லது நட்பு ஒன்றைக்கூட குறிக்கலாம். எதுவானாலும் அதை அப்படியே ஏற்பது நல்லது.

அழகிய்அ ரோஜா மலரை அப்படியே எடுத்துக்கொள்வதில் இருக்கும் ஆனந்தம் அதை இதழ் இதழாய்ப் பிரித்து மேய்வதில் இல்லை. ஷேக்ஸ்பியர் நன்கு சொன்னாரே.

அழகிய கவிதை ஆதன். பாராட்டுகள்.

அமரன்
26-08-2012, 05:16 PM
காதல் கவிதை போல இது தெரியவில்லை..

யார் எழுதிய கவிதையைப் புரிய முனைகிறீர்கள் ஆதன்?

நீங்கள் எழுதிய கவிதை உங்களுக்கே புரிய முடியாத நிலை இல்லாதவரை பாதகமில்லை..

"இந்த சேலையில விழுந்துதானே உங்கள் வாழ்க்கையைத் தொலைத்தீங்க" - சொன்னது என் மனைவி..

ஆம்.. என் வாழ்க்கையையும் தொலைத்தேன்.. என்னையும் தொலைத்தேன்.. தொலைத்த இடத்தில் தேடியபோது என்னையும் மீட்டேன்.. என்னில் இன்னும் பலரையும் மீட்டேன்.. தொலைத்த வாழ்க்கையைப் புது உருவில் மீட்டேன்.. உன்னையும், உன்னில் பலரையும் பெற்றேன்.. இப்படி இன்னும் இன்னும் "நிறைய"ப் பெற்றேன். - இது நான்..

புரியாத கவிதையும் தருவது இப்படிப்பலதான்.. அத்தனையும் பலாதான்..

ஆதி
27-08-2012, 04:15 AM
புத்தனை நினைத்துத்தான் எழுதினேன், இதில் மற்ற கோணங்களும் இருந்ததால் புத்தன் திரியில் பதியாமல் தனி கவிதையாக பதிந்துவிட்டேன்

veruppuvijay
09-10-2012, 02:54 PM
"இந்த சேலையில விழுந்துதானே உங்கள் வாழ்க்கையைத் தொலைத்தீங்க" - சொன்னது என் மனைவி..

ஆம்.. என் வாழ்க்கையையும் தொலைத்தேன்.. என்னையும் தொலைத்தேன்.. தொலைத்த இடத்தில் தேடியபோது என்னையும் மீட்டேன்.. என்னில் இன்னும் பலரையும் மீட்டேன்.. தொலைத்த வாழ்க்கையைப் புது உருவில் மீட்டேன்.. உன்னையும், உன்னில் பலரையும் பெற்றேன்.. இப்படி இன்னும் இன்னும் "நிறைய"ப் பெற்றேன். - இது நான்..

புரியாத கவிதையும் தருவது இப்படிப்பலதான்.. அத்தனையும் பலாதான்..


மிகவும் அருமை அமரன் அவர்களே. மிக அழகான பதில் கொடுத்திருக்கிறீர்கள்.

கொடுத்து எடுக்க சுரக்கும் பாத்திரம் பந்தம். நன்கு புரிந்துகொண்டுள்ளீர்


கவிதை குறித்து.

எதிரினம் எப்பொழுதும் புரிதலுக்கு அப்பாற்பட்டது, புரிந்து கொள்ளுதல் வலியது. மேலும் அவை நிச்சலனத்தினூடான சலனம் கொண்டது. உன்னிய செவி மனதில் ஒட்டியிருந்தால் தெரிந்துகொள்வது. நீர் கொடுத்து வைத்த மனையாளைப் பெற்றிருப்பீர்!

அஸுவாரஸ்யமாய் நுழைகையில் ஸ்வரங்களினூடாக (கட்டை) இரைதேடும் கட்டெறும்பினைப் போல கவிதையில் ஊர்ந்து செல்லுகிறேன். நன்றி

வணக்கம்.

A Thainis
09-10-2012, 06:56 PM
புரியாத கவிதை புதிர் வைத்தது போலே இருந்தது ஆனால் அது புத்தனை நினைத்து வரைந்தது என அறிந்து மகிழ்ந்தேன்.

கலை அவர்களே கவிதை உணர்வுகளை உலகுக்கு பரிமாறும் உன்னத கலை ஆகவே அது புரிய தேவையில்லை என்பது சரியா? அது முறையா?, புரியாத ஏதும் புவியில் நிலைப்பது இல்லை, கவிக் கொண்டு அதன் இனிய வரிக்கொண்டு பரிமாறும் கருத்துக்கள் என்றும் நிலைக்கும் உலகினை வாழ வைக்கும், கவிதை காதல் மட்டும் அல்ல, காதல் அதில் ஒரு துளி, புரியட்டும் கவிதைகள் புலரட்டும் புதிய பூமி அன்பில்.

ந.க
26-10-2012, 08:16 AM
அன்பின் இலக்கணம்
அடி நாதமாய்
தொல்காப்பியம்
தமிழுக்குத் தொலையாத இலக்கணம்
இலக்கணம் இலேசாகப் புரிவதில்லை
அதுதான் அதன் இலட்சனம்,
இங்கே
இழைந்த இலட்சணமும் அதுதான்..நன்றி..

'நிச்சலனம் உன் முகரூபம்...'
புத்தனுக்குப் பொருத்தம்...

'அரூப காட்டில் தள்ளி
மீள இயலா தவிப்பில் என்னை தொலைக்கின்றன..'
இதில் புத்தனைக் காணவில்லை
மீளச் சொன்னது புத்தன்
அரூபக் காட்டில் தொலைவேது..?
இது என் வாதம்..

வாதத்திற்கு கவிதை வித்திட்டால்
அதன் கவிப் பொருள் அறிவுக்கு வித்தாகும்
இது என் அபிபிராயம்.
நன்று,
உழைப்புத் தெரிகிறது உங்கள் கவிதையில் ....... நன்றி...

HEMA BALAJI
27-10-2012, 05:00 PM
புத்தனை நினைத்துத்தான் எழுதினேன், இதில் மற்ற கோணங்களும் இருந்ததால் புத்தன் திரியில் பதியாமல் தனி கவிதையாக பதிந்துவிட்டேன்

நினைத்தேன் இதுக்கு பின்னால காதல் தவிர வேற இருக்கனுமே, ஆதி வரிகள் முதல் அந்தம் வரை புத்தனும் நி(ம)றைந்திருப்பானோன்னு தோனுச்சு. இரு கோனத்தில் படித்தாலும் கவிதை நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துகள் ஆதி..

நாஞ்சில் த.க.ஜெய்
27-10-2012, 05:13 PM
இருகோணங்களின் செல்லும் கவிதையின் பார்வை காதல் மற்றும் ஆன்மீகம் இதில் கூறியதில் புத்தனை நினைத்து எனும் வார்த்தை இந்த கவிதையினை ரசித்து ஒரு தேடலை உணர்த்துகிறது மற்றொரு கோண்ம் காதலில் புரிந்து கொள்ள முயற்ச்சிப்பதை காட்ட்டிலும் அப்படியே ஏற்று கொள்வது நன்று என் கூறுகிறது இரு கோணத்திலும் தொக்கி நிற்கிறது கவிதையின் சுவை,,அருமை ஆதி.

நாகரா
28-10-2012, 06:55 AM
புரியாத கவிதையை போல
ஆழ்ந்து மீண்டும் மீண்டும்
உன்னை வாசிக்கிறேன்

சொற்களின் இண்டுகளில்
மிக கமுக்கமாய் உலவும் அர்த்தத்தை போல
புலப்படாமல் இருக்கின்றன
என் மீது நீ வைத்திருக்கும் அபிப்ராயங்கள்

உன் அபிப்ராயங்களை
ஊகிக்க முயலும் என் எண்ணங்கள்
அக்கவிதையிலுள்ள இருண்மையான வார்த்தைகளை போல
வரிசையாகவும், தனித்தனியாகவும்
குழுகுழுவாகவும், கூட்டுத்தொடராகவும்
ஊர்ந்திருக்கின்றன

கவிதை நெடுக திரியும்
நிச்சலனம் உன் முகரூபம் கொண்டிருக்கிறது

உன் விழிகளின் பார்வையும்
உதடுகளின் புன்னகையும்
புதிர் விலகா குறியீடுகளை போல
அரூப காட்டில் தள்ளி
மீள இலயலா தவிப்பில் என்னை தொலைக்கின்றன..

வாக்கியமும் வார்த்தையும்
குறியீடும் படிமமும்
முன்னும் பின்னும்
கீழும் மேலும்
இடம் பெயராமல் இருப்பதை போன்று
மனதுக்குள் எம்மாற்றமுமில்லாமல் இருக்கிறாய் நீ

புரியாமலும்.....
தயை புரியாதிருந்தேன்
புரியாதிருந்தாய்

உன்னைப் போல்
தயை புரியப் புரிய
புரிகின்றாய்

தருமபுரி இருதயம்
கருமபுரி மெய்யுள்
அவிழ அவிழ
உன் பூரணத்துவம் என்னில்
கவிழக் கவிழப்
புரிதலின் பூரிப்பில்
விரிகிறேன்

அன்புயிர்ப் பாயசம் நீ
என்புமெய்ப் பாத்திரம் என்னில்
நிரம்பி வழிகிறாய்

புரிகிறேன் பூரண அனுமதி
புரிகிறாய் பூரண சுத்தி

பரிசுத்தப் பரிபூரணம் நீ
என்னைப்
பரிபூரணப் பரிசுத்தஞ் செய்யச் செய்ய
பரிபாஷைப் படிமச் சுழி முனைகள் உடைய
இரகசிய முடிச்சுகள் அவிழப்
பகிரங்கமாய்ப் புரிகிறாய்
ஆதி புரி வெட்ட வெளியில்
சோதி பரி பட்டப் பகலாய்

நாசிக்குளே மணக்க
வாசிக்கிறேன் உன்னை

பாயசம் உன்னில் ஊறி ஊறி
பாத்திரம் நானுங் கற்பூர மாக

வேறற மணக்கிறோம்

சிந்தனையைத் தூண்டிய உம் அற்புதக் கவிதைக்கு வாழ்த்துக்களும் நன்றியும் பாராட்டும் ஆதி