PDA

View Full Version : நினைவலைகள் – மீன்பிடி திருவிழா



செல்வா
24-08-2012, 04:52 PM
“எழவு அந்த பரிச்சைக்க கதைய உடுடே… அது தான் முடிஞ்சி போச்சே…”

“அதானே…! போல அங்க..! பரிச்ச முடிஞ்சி பத்து நாளானாலும் இவனுக்க படிப்பு மயிரு தீராது. நீ என்னதான் கணக்கு போட்டாலும் மார்க்கு கூடவோ கொறயவோ போவா? நீ எழுதுன எளவுக்கு தான் மார்க்கு” மகேந்திரனுக்க இடைச்சொருகலுக்கு ஒத்தூதினான் ஜோஸ்.

நான், மகேந்த், ஜோஸ், ஜேம்ஸ் நாலுபேரும் அந்த வருடத்திய முழுப்பரிச்சையின் கடைசிநாள் மாலை ஆத்தங்கரையில் அமர்ந்திருக்கும் போது நடந்த நானாவிதமான உரையாடல்களுக்கு மத்தியில் வந்ததுதான் மேற்கண்ட வாசகங்கள்.

ஆறு என்று நாங்கள் அழைத்தாலும் இலக்கணப்படி அதை ஆறு எனச் சொல்லலாகாது. பாசனத்திற்காக வெட்டப்பட்ட கால்வாய். குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியாகும் கால்வாய்களில் நீண்ட கால்வாய் அது. கால்வாய் என்றாலும் எங்களுக்கு ஆறுதான். பள்ளி விடுமுறை தினங்களில் எங்கள் குழாம் கூடுவது இதன் கரையில்தான். கரைகள் கற்களால் கட்டப்பட்டு சில இடங்களில் காரை பூசப்பட்டிருக்கும்.

பெரும்பாலும் மார்ச்,ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தண்ணீர் வராது. பள்ளி விடுமுறை மாதங்களில் எங்களது விளையாட்டு மைதானம் அது தான். சீட்டு எறிதல், சிங்காம்புள் (கிட்டிப்புள்) அடித்தல், கழச்சி (கோலி), ஓணப்பந்து மற்றும் இந்தக் கதைநடந்த காலத்தில் பரவவாரம்பித்திருந்த கிரிக்கெட். கிரிக்கெட் விளையாட்டில் ஆத்துக்குள்ளிருந்து மேலே கரைக்கு பந்தை அடிப்பவன் பெரிய ஆள். மாலை நேரங்களில் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பாறைகளில் அமர்ந்து அரட்டையடிப்பது தான் மெயின் வேலை.

தண்ணீர் குறையும் நாட்களில் கரைந்திருக்கும் வெள்ளை, மஞ்சள் சிவப்பு எனக் கிடைக்கும் களிமண்களைத் தோண்டி எடுத்து அவற்றை வைத்து விதவிதமான உருவங்கள் செய்து விளையாடுவது வழக்கம். பானை சட்டிகள், ரேடியோ, டிவி, என்று விதம் விதமாக உருவங்கள் செய்து அவரவர் கலைத்திறனுக்கேற்ப கலக்கிக் கொண்டிருப்போம். இரவிபாலன் தான் இதில் மிகக் கெட்டிக்காரன். அவன் செய்யும் உருவங்கள் எல்லாம் மிகத் தத்ரூபமாக இருக்கும்.

பாருங்கள் மீன்பிடி திருவிழாவைப் பற்றிப் பேசவாரம்பித்து விட்டு எங்கெங்கோ வந்துவிட்டேன். மூன்று முதல் ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக தண்ணீர் பாய்ந்த பின்பு மார்ச் மாத இறுதியில் பெரும்பாலும் அணையை அடைத்து விடுவார்கள். தோளளவு ஓடிய நீர் இடுப்பளவாகி, முழங்காலளவாகி, கணுக்காலளவாகி பின் பாதம் நனைத்து வெறும் ஈரமாகக் குறைந்து விடும். சில சிறிதும் பெரிதுமான பள்ளங்களில் மட்டும் தண்ணீர் தேங்கியிருக்கும். ஆறு முழுவதும் சுதந்திரமாக அலைந்து கொண்டிருந்த மீன்கள் அனைத்தும் இந்தக் குண்டுகளில் சேகரமாகியிருக்கும். அவற்றில் முழங்காலளவைத்தாண்டி கணுக்காலளவு நீர் குறையும் போது கலக்கி மீன்பிடிக்க ஊரின் மொத்த சிறுவர் படையும் திரண்டு வரும்.

முதலில் தண்ணீருக்குள் இறங்கி தண்ணீரைக் கலக்கு கலக்கு என்று கலக்குவோம். கிட்டத்தட்ட வெண்ணைக்காகத் தயிரைக் கடைவது போல. சேறு மண் எல்லாமாகச் சேர்ந்து மீன்கள் நீருக்குள் தேவையான காற்று கிடைக்காமல் மேலே வரவாரம்பிக்கும். அந்த மீன்களை அவரவர் திறமைக்கேற்ப துவர்த்து(துவாலை), வலை, இவற்றால் மீனைப்பிடிக்க வேண்டியது தான். சிலர் வெட்டுக்கத்தியால் வெட்டியோ அல்லது கம்பால் அடித்தும் கூட மீன் பிடிப்பர். இன்னும் சில திறமை மற்றும் தைரியசாலிகள் ஆரல், உளுவை, தேளி மற்றும் விலாங்கு போன்ற மீன்களை வெறும் கைகளால் சேறு மற்றும் பொந்துகளைத் தடவியேப் பிடித்துவிடுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான மீன்கள் அதிகமாக இருக்கும். ஒரு வருடம் கெண்டை என்றால் அடுத்தவருடம் வெறும் தேளி மற்றும் தேளிக் குஞ்சுகளாக இருக்கும் மறுவருடம் பார்த்தால் ஒரே நன்னீர் எறால் மயமாக இருக்கும்.

இத்தகைய குண்டு ஒன்றின் கரையில் சாலையைத் தாண்டி ஆறுவரை கிளை பரப்பி நிற்கும் பலாமரத்தின் நிழலில் நான் நாங்கள் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தோம். குண்டிற்குள் தண்ணீர் கணுக்காலுக்கும் மேலே முழங்கால் மூட்டிற்கும் கீழே தண்ணீர் இருந்தது.

“மக்கா நாளக்கி முட்டத்துக்கு போமா?” திடீரென்று மவுனம் கலைத்து கேட்டான் ஜேம்ஸ்.

மறுமொழி சொல்ல வாயெடுக்கும்முன் “லேய் அங்க பாரு” என்று உரத்து ஆற்றை நோக்கிக் கைகாட்டினான் ஜோஸ்.

இரண்டு பெரிய கெண்டை மீன்கள் ஆற்றுக்குள் விளையாடிக் கொண்டிருந்தன.

“லேய் பெரிய கெண்ட ல ..!” ஆச்சரியம் காட்டினான் ஜேம்ஸ் குரலில்.

“நாளக்கி பொரிச்சிரலாமா?” ஜோஸின் பார்வை மீன்களை அளவெடுப்பதிலேயே குறியாயிருந்தது.

“தண்ணி கெடக்க கெடய பாரு, வலையிருந்தாலாவது புடிச்சிருலாம்” இது மகேந்த்

“வட்டி போட்டு இறச்சிருலாம்” – ஜோஸ்
வட்டி என்பது கமலம் போன்ற முக்கோண வடிவிலான உபகரணம். அதன் மூன்று முனைகளில் நான்கு கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். இருவர் எதிர் எதிரே நின்று கொண்டு கயிறுகளைப் பிடித்து தண்ணீர் இறைக்க வசதியாக இருக்கும்.)

“நெட்டாங்கோட்டுல மதுகிட்டயிருக்கு வாங்கலாம்”

“கஷ்டம்பில மக்கா..” இழுத்தான் ஜேம்ஸ்

“நாளக்கி விட்டா அவ்வளவு தான்… பொறவு கெடச்சாது வலபோட்டு புடிச்சிருவானுவ” தீர்க்கமாய் சொன்னான் ஜோஸ்.

“சரி மக்கா நாளக்கி புடிச்சிரலாம்” அரைமனதாகவே சொன்ன படி கலைந்தோம்.

மறுநாள் காலை நான் எழுந்து சாப்பிட்டு வீட்டை விட்டு வெளியேறும் போது காலை 8 மணி ஆகிவிட்டிருந்தது. வெளியே ஆற்றில் பார்த்தால் காலையிலிருந்தே அணைகட்டி நீரிறைக்கும் வேலை ஆரம்பித்திருந்தது. மாற்றி மாற்றி நீரிறைத்துக் கொண்டிருந்தனர் ஜேம்ஸிம் ஜோஸிம். தண்ணீர் ஏற்கெனவே இருந்ததை விட சற்றே குறைந்திருந்தது.

ஆள் மாற்றி மாற்றி இறைத்துக் கொண்டே இருந்தோம். காலையில் மீன்கடைக்குச் செல்பவர்கள் எல்லோரும் அதிசயமாகப் பார்த்தபடியே சென்று கொண்டிருந்தனர். மீன் பிடிப்பதற்காக இப்படி வட்டி போட்டு இறைப்பதை இப்போது தான் பார்க்கிறார்கள்.

“எலேய் என்ன ஒருவாரத்துக்கு எறச்சாலும் கொறயாது போலருக்கு தண்ணி… கண்ணவிஞ்சா போச்சு ஒங்களுக்கு…” என்று திட்டிக் கொண்டு போனவர்கள் அதிகம்.

மணி பத்து ஆனது… களைத்துப் போனோம். தண்ணீரோ குறைவது போலேத் தெரியவில்லை…

மணி ஒன்றானது … தண்ணீர் கணுக்காலுக்கும் சற்று மேலே இருந்தது…

இனி இப்படியே விட்டால் யாராவது மீன் பிடித்து விடுவார்களே என்று சாப்பிடக் கூடப் போகாமல் இறைத்துக் கொண்டிருந்தோம்.

மணி இரண்டரையைத் தொடும் போது சற்றேறக் குறைய கலக்கும் அளவிற்கு தண்ணீர் வந்து விட்டது.

அப்போது பார்த்து ஓட்டப்பந்தயத்தில் ஒலி கொடுத்ததும் தாவி ஓடும் வீரர்கள் போல் வந்திறங்கியது ஒரு கும்பல். இறங்கி எங்களுக்கு நிகராக தண்ணீரைக் கலக்கவாரம்பித்தனர்.

கொஞ்சநேரம் தர்க்கித்துப் பார்த்தோம் ஒண்ணும் செய்ய முடியாது பொதுக் கால்வாய்… யாரையும் இறங்கி மீன் பிடிக்காதே என்று சொல்ல முடியாது. காலையிலிருந்தே எங்களைக் கவனித்தவர்களில் ஒரு பெண்மணி மட்டும்

“லெப்போ காலைலருந்தே அந்தப் பிள்ளைய தண்ணி எறச்சானுவ.. அவனுவ முதல்ல பிடிச்சட்டு” என்று உதவிக்கு வந்தார்.

சரி என்று ரெண்டு கெண்டை மீன் பிடிக்கும் வரை நாங்க மீன் பிடிப்பதாக ஒப்பந்தம் செய்து மீன்களைத் துரத்தவாரம்பித்தோம்.

வர வர பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது.

ஆற்றின் ரெண்டு பக்கமும் வேடிக்கை பார்க்க கூட்டம் கூடிக்கொண்டே யிருந்தது. ரெண்டு கெண்டை மீன்களும் எங்களுக்கு வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தன.

ஒரு வழியாக ஒரு மீனை ஜேம்ஸ் பிடித்து விட்டான்.

பிடித்து கரையிலிருந்த பக்கட்டில் போட்டு துவர்த்தால் மூடி வைத்திருந்தோம்.

சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த அந்தப் பெண்மணி
“லெப்போ மீனு நெறய கெடச்சிருக்கா” என்ற படியே எங்கள் அனுமதிக்குக் காத்திராமல் பக்கெட்டைத் திறந்தவர் “லேய் நல்ல கெண்டடேய்.. நான் எடுத்துக்கட்டா?” எங்கள் பதிலுக்குக் காத்திராமலேயே எடுத்துச் சென்றுவிட்டார்.

எதுவும் பதில் பேசக் கூட எங்களுக்கு அவகாசம் இல்லை…

சரி ஒண்ணு போனாப் போகுது அடுத்த மீன புடிக்கலாம் என்று முழுக்கவனத்தையும் அடுத்த மீனில் வைத்தோம்.

ஒரு முக்கில் மீனைத் துரத்தி ஒதுக்கி கைகளால் தண்ணீரோடு சேர்த்து வாரியெடுத்து கரையில் எறிந்தான் ஜோஸ்.

“பரவால்ல அதவிட இது பெருசு” என்று துடித்த மீனைப் பார்த்து கூறியபடி.. சந்தோச பெருமிதத்துடன் கரையில் ஏறிய நேரம்.

கூட்டத்தில் நின்றிருந்த மகேந்தின் உறவுக்காரப் பெண்மணி ஒருவர் முன்னே வந்து

“லேய் பெரியமீனாக் கெடச்சிருக்கே … இத நான் எடுத்துக்கிறேன்… நீங்க இன்னும் நெறயப் புடிச்சிக்கங்க” என்று கூறியபடி எடுத்துச் சென்றுவிட்டார்.

மீனக் கையில புடிச்சிப் பாக்கக் கூட அவகாசமில்லாத நாங்கல்லாம் நிஜமாவே வெறுத்துப் போனோம்.

காலையிலிருந்து பட்ட பாடெல்லாம் வீணாப்போச்சு..

ஜோஸ் தான் ரொம்ப நொந்து போயிட்டான். அப்புறமா அவன் மீன்பிடிக்க இறங்கவே இல்ல.

ஒரு வழியா மனச தேத்திட்டு குளத்தில போய் சேறு நீங்க குளிச்சுட்டு வீடு போய் சேரும் போது மணி 5.

“அம்மா பசிக்குதுனு” வெளியருந்தே கத்திகிட்டு நான் வீட்டுக்குள் நுழைந்தேன்.

அம்மா என்னை எதிர்பார்த்துக் காத்துகிட்டுருந்தாங்க

கையில நீண்ட பச்ச புளிய மிலாறு என்னப் பாத்து வா வா னு கூப்டுட்டுருந்துச்சு …!

மதி
24-08-2012, 05:13 PM
ரொம்ப நாள் கழிச்சி உங்ககிட்டேந்து பதிவு. முழுசா படிக்கல. படிச்சிட்டு பதில் போடுறன்.

கீதம்
25-08-2012, 08:31 AM
ஆரம்பமே அசத்தல் வரிகள்! பரிட்சை முடிந்தபின்னும் அதைப் பற்றிப் பேச எந்தப் பிள்ளைதான் விரும்பும்? அதுவும் முழுப்பரிட்சை என்றால் சொல்லவே வேண்டாம்.

எழுத்துநடை ரசனை. வட்டார வழக்குப் பேச்சு எனக்குப் புதியது. பல சொற்கள் இதுவரை கேள்விப்படாதவை. சிங்காம்புள், கழச்சி, வட்டி இவற்றுக்கெல்லாம் நீங்கள் அர்த்தம் சொல்லவில்லை என்றால் துளியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது ஓணப்பந்துக்கும் நீங்கள்தான் அர்த்தம் சொல்லவேண்டும்.

சேற்றில் மீன்பிடிப்பது ஒரு கலைதான் போலும். இத்தனைக் கஷ்டப்பட்டு பிள்ளைகள் பிடித்ததை எவ்வளவு சுலபமாகக் கொண்டுபோய்விட்டார்கள் அந்தப் பெண்மணிகள். தெனாலிராமன் வீட்டில் திருடர்கள் கிணற்றிலிருந்து நகைப்பெட்டியை மீட்க விடிய விடிய இறைத்து ஊற்றியதுதான் நினைவுக்கு வந்தது. காலையில் இருந்து போராடி மீனைப் பிடித்து, அதையும் பறிகொடுத்து, பசியுடன் வீட்டுக்குள் நுழைந்தால் பச்சை புளியமிலாறு வரவேற்கிறது என்றால்.... :traurig001:

எத்தனை வயது என்று சொல்லியிருந்தால் காட்சியைக் கற்பனை செய்யும்போது வசதியாக இருக்கும். அடிவாங்கும் காட்சியை அல்ல...மீன்பிடிக்க அல்லோல கல்லோலப் பட்டக் காட்சியை. :D

பால்யத்தின் நினைவுகள் பல சுவாரசியமானவை... பிற்காலத்தில் நினைக்கும்போது... :icon_rollout:

நெடுநாளைக்குப் பின்னராடும் நினைவலையை ரசித்தேன். பாராட்டுகள் செல்வா.

செல்வா
25-08-2012, 09:44 AM
ஓணப்பந்துக்கும் நீங்கள்தான் அர்த்தம் சொல்லவேண்டும்.

நினைவலைகள் வரிசையில் அடுத்தது ஓணப்பந்து என்று தான் நினைக்கிறேன்.



சேற்றில் மீன்பிடிப்பது ஒரு கலைதான் போலும். இத்தனைக் கஷ்டப்பட்டு பிள்ளைகள் பிடித்ததை எவ்வளவு சுலபமாகக் கொண்டுபோய்விட்டார்கள் அந்தப் பெண்மணிகள்.
எத்தனை வயது என்று சொல்லியிருந்தால் காட்சியைக் கற்பனை செய்யும்போது வசதியாக இருக்கும். அடிவாங்கும் காட்சியை அல்ல...மீன்பிடிக்க அல்லோல கல்லோலப் பட்டக் காட்சியை. :D

பால்யத்தின் நினைவுகள் பல சுவாரசியமானவை... பிற்காலத்தில் நினைக்கும்போது... :icon_rollout:

நெடுநாளைக்குப் பின்னராடும் நினைவலையை ரசித்தேன். பாராட்டுகள் செல்வா.

இப்படி நாங்கள் கடினப்பட்டு கொண்டுவரும் பல பொருட்கள் எங்களுக்குப் பயன்படாமல் போவது.. அடிக்கடி நடக்கும் ஒன்று தான். அதோடு அதைப் பெரிய விடயமாக நாங்கள் கருதுவதுமில்லை. அப்போதைக்கு இருக்கும் வருத்தம் உடனே கரைந்துவிடும்.

உண்மையில் இன்னும் விரிவாக எழுத எண்ணிய பகுதிதான். சேற்றில் மீன்பிடிக்கும் பகுதி. மிக சுவாரசியமானது.

மீனுக்காக கையிட்டு தவளை, மாக்கான் ஏன் பாம்பு பிடித்தவர்களும் இருக்கிறார்கள்.
வளுக்கி விழுதல்.
உடல் முழுதும் சேறு பூசியபடி மீனைத்துரத்துவதும் மீன் தப்பிக்க நீந்துவதும்.
பெரிய மீன் கிடைத்தவனைப் பார்த்து பொறாமைப்படுவது..
அதுவே பெரியமீன் நமக்குக் கிடைத்தால் பெருமை கொள்வது..
ஒரே மீனுக்கு ஒரு கும்பலே அடித்துப் பிடித்து விழ மீனோ வெகு லாகவகமாகத் தப்பித்துச் செல்வது...

மீன் பிடிக்கிறமோ இல்லியோ... அது ஒரு இனிய அனுபவம் அக்கா.

பாராட்டுகளுக்கு நன்றிகள்.

ஆதவா
25-08-2012, 01:24 PM
அடா... அடா... அடா....

கலக்கீட்டீங்க.. (ஆத்தை இல்ல... இத்தை.)
வட்டார வழக்கு படிக்கும் பொழுது சட்டென ஒரு இலக்கிய எழுத்தாளர் கண்முன்னே வந்து செல்கிறார். வெகு அற்புதம்.
இதுக்கு மேல எழுதி ரசனையை கெடுத்துக்க விரும்பலை.
கீதாக்கா சொல்வதை அப்படியே நான் சொன்னதாக எடுத்துக்கொள்ளுங்கள்..

அன்புடன்
ஆதவா.

அமரன்
26-08-2012, 04:50 PM
கலகிட்டேடா பங்காளி..

அப்பவும் நீ இப்படித்தானோ? உருவத்தைக் கேட்டேன்..

உன் இரசனை எழுத்துகளில் தெரியுதடா.

மதி
27-08-2012, 05:11 AM
கைக்கு கெடச்சது வாய்க்கு கெடக்கலங்கறது இது தானுங்க. பட்ட கஷ்டமெல்லாம் வீணா போச்சோ. ஆனாலும் மீன் திங்கற ஆசைய கெளப்பி விட்டுட்டீங்க.
அழகான உங்க வரியில உங்க அனுபவம் ஜொலிக்குது.

அடிக்கடி எழுதுங்கண்ணே..

செல்வா
27-08-2012, 08:46 AM
கீதாக்கா சொல்வதை அப்படியே நான் சொன்னதாக எடுத்துக்கொள்ளுங்கள்..

அன்புடன்
ஆதவா.

யரைச் சொல்றீங்க நு புரியிது.

பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி பாஸ்

செல்வா
27-08-2012, 08:47 AM
அப்பவும் நீ இப்படித்தானோ? உருவத்தைக் கேட்டேன்..


அப்போ நான்
இப்போதைய ஆதவா மாதிரி இருந்தேன்

நன்றிடா பங்காளி.

செல்வா
27-08-2012, 08:48 AM
கைக்கு கெடச்சது வாய்க்கு கெடக்கலங்கறது இது தானுங்க. பட்ட கஷ்டமெல்லாம் வீணா போச்சோ. ஆனாலும் மீன் திங்கற ஆசைய கெளப்பி விட்டுட்டீங்க.
அழகான உங்க வரியில உங்க அனுபவம் ஜொலிக்குது.

அடிக்கடி எழுதுங்கண்ணே..

நன்றிங்கண்ணா....

அடிக்கடி எழுத முயற்சி செய்றேன்.

ஆதி
27-08-2012, 12:12 PM
அப்படியே உன்கூட உட்கார்ந்து மீன்பிடிச்ச உணர்வு, பட் நமக்கு மட்டுமே இப்படியெல்லாம் நடக்குது, கஸ்டப்பட்டு பிடிச்ச ரெண்டும், நஸ்டபடு போச்சே :( :(

அடிக்கடி எழுதடா, நினைவலைகள் மட்டுமில்லை கதைகளையும் கூடத்தான்

கலைவேந்தன்
28-08-2012, 03:20 AM
சுவாரசியம் தொய்வடையாமல் எழுதுவது என்பது அருங்கலை. அதில் நீங்கள் மிகவும் தேர்ச்சிபெற்றிருக்கிறீர்கள். வட்டார வழக்கு நாஞ்சில் நாடனை நினைவூட்டிச்சென்றது. மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் செல்வா..!

செல்வா
28-08-2012, 08:58 AM
அப்படியே உன்கூட உட்கார்ந்து மீன்பிடிச்ச உணர்வு, பட் நமக்கு மட்டுமே இப்படியெல்லாம் நடக்குது, கஸ்டப்பட்டு பிடிச்ச ரெண்டும், நஸ்டபடு போச்சே :( :(

அடிக்கடி எழுதடா, நினைவலைகள் மட்டுமில்லை கதைகளையும் கூடத்தான்

பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிடா நண்பா.

முயற்சிக்கிறேன் தொடர்ந்து எழுத.

செல்வா
28-08-2012, 09:00 AM
மிகவும் அருமையாக உள்ளது. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் செல்வா..!

சிறந்த எழுத்தாளரான உங்கள் பாராட்டுகள் என்னை கர்வம் கொள்ள வைக்கின்றன.
பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா.

த.ஜார்ஜ்
28-08-2012, 09:36 AM
மீன் போனாலென்ன. எப்பேர்பட்ட வீர விளையாட்டை விளையாடி களித்திருக்கிறீர்கள். இப்பொ நினைத்தாலும் மீன் பிடிக்க முடியுமா.. நீரிழந்த ஆறுகளில்...

Keelai Naadaan
28-08-2012, 03:59 PM
இளவயது நினைவுகளை மிகவும் அருமையாக, வட்டார தமிழுடன் ரசித்து படிக்கும்படியாக கண்முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
கீதம் அவர்கள் சொன்னது போல் வயதையும் சொல்லியிருந்தால் கற்பனைக்கு எளிதாயிருந்திருக்கும்.
பாராட்டுக்கள் செல்வா.:icon_b:

செல்வா
29-08-2012, 06:41 AM
உண்மைதான் அண்ணா... இப்பல்லாம் மீன் பிடிக்கணும்னா முதல்ல தண்ணியிருக்கும் ஆற்றைத் தேடிப் பிடிக்கணும்.
பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி அண்ணா.


மீன் போனாலென்ன. எப்பேர்பட்ட வீர விளையாட்டை விளையாடி களித்திருக்கிறீர்கள். இப்பொ நினைத்தாலும் மீன் பிடிக்க முடியுமா.. நீரிழந்த ஆறுகளில்...

செல்வா
29-08-2012, 06:44 AM
பின்னூட்ட ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே...


இளவயது நினைவுகளை மிகவும் அருமையாக, வட்டார தமிழுடன் ரசித்து படிக்கும்படியாக கண்முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
கீதம் அவர்கள் சொன்னது போல் வயதையும் சொல்லியிருந்தால் கற்பனைக்கு எளிதாயிருந்திருக்கும்.
பாராட்டுக்கள் செல்வா.:icon_b:

ஆதவா
29-08-2012, 03:55 PM
கீதம் அவர்கள் சொன்னது போல் வயதையும் சொல்லியிருந்தால் கற்பனைக்கு எளிதாயிருந்திருக்கும்.


16 வயதாம் !

நாஞ்சில் த.க.ஜெய்
30-08-2012, 06:56 AM
அதே பேச்சிபாறை அணையிலிருந்து வரும் ஆற்று வெள்ளத்தில் குளித்து கும்மாளமிட்டு தண்ணீர் குறைய மீன்பிடித்தது சிறுவயது .இந்த சிறுவயது நினைவலைகளை கண்முன் கொண்டுவந்தது இந்த நினைவலைகள்-மீன்பிடிதிருவிழா ..அழகான நம் கிராமத்து எழுத்து நடை அருமை செல்வா அவர்களே...

“லெப்போ காலைலருந்தே அந்தப் பிள்ளைய தண்ணி எறச்சானுவ.. அவனுவ முதல்ல பிடிச்சட்டு” என்று உதவிக்கு வந்தார்.
தூண்டில ரொம்ப நேரமாத்தான் போட்டுட்டு காத்திட்டு இருந்திருக்காங்க,,

சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த அந்தப் பெண்மணி
“லெப்போ மீனு நெறய கெடச்சிருக்கா” என்ற படியே எங்கள் அனுமதிக்குக் காத்திராமல் பக்கெட்டைத் திறந்தவர் “லேய் நல்ல கெண்டடேய்.. நான் எடுத்துக்கட்டா?” எங்கள் பதிலுக்குக் காத்திராமலேயே எடுத்துச் சென்றுவிட்டார்.
காத்திட்டு இருந்ததுக்கு பலன் கிடைச்சிடுச்சு ..சிக்கிடுச்சி மீனு ..

கையில நீண்ட பச்ச புளிய மிலாறு என்னப் பாத்து வா வா னு கூப்டுட்டுருந்துச்சு …!
நாம வாழ்க்கையில பாக்காததா...:traurig001:

சுகந்தப்ரீதன்
05-09-2012, 02:35 PM
சுருக்கி எழுதுற சாக்குல கதாநாயகியை கண்ணுல காட்டாம மறைச்சிட்டீங்களே செல்வா..?!:fragend005:

(இந்த மாதிரி சோறுதண்ணி குடிக்காம நீங்க தண்ணி இறைச்சதுக்கு காரணம் மீனுன்னு சொன்னா ஊர்ல இருக்குறவங்க நம்பலாம்... நாங்க நம்ப மாட்டோம்... ஏன்னா இந்தமாதிரி சூழலின் பின்புலத்தில் ஒரு பேரழகு சக்தி இயங்குங்கிறது நாங்க அனுபவத்தில் கண்ட உண்மைங்கோ..:))

தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எழுத்தில் பகிருங்கள் தலைவா..:icon_b: