PDA

View Full Version : ஒவ்வொரு செங்கலிலும்...



சுஜா
17-08-2012, 12:37 PM
http://today.duke.edu/sites/default/files/news_images/therien468.jpg

தூரத்தில் ஹாஸ்ட்டலில் இன்னும் லைட் எரிந்து கொண்டிருந்தது. B.E., ஃபர்ஸ்ட் இயர் பசங்க இன்னும் தூங்காமல் கெமிஸ்ட்ரியோடு கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகாமல் முட்டிக்கொண்டிருந்தனர். செகண்ட் இயர், தேர்ட் இயர் ஃப்ளோரிலெல்லாம் கொஞ்சம் டூயூப் லைட் வெளிச்சத்துடன் கலர்கலராய் லேப்டாப் வெளிச்சம் மங்கலாய், சாத்தப்பட்ட கண்ணாடி வழியாக கசிந்துகொண்டிருந்தது. இதை பார்த்துக்கொண்டே வசந்த், பிரதாப், நான் மூவரும் நடந்து கொண்டிருந்தோம். எங்களுக்கு பின் வந்த குமார் நாணல் புதர் அருகில் நின்றுகொண்டு பொது இடங்களில் செய்யக்கூடாததை செய்துகொண்டிருந்தான். இதில் ‘நடந்தாய் வாழி காவேரி’ பாட்டு வேறு..

“டேய் குமாரு, போதுண்டா.. யூரின் போறியா, யூரின் டெஸ்ட்டுக்கா? வேமா வாடா” பிரதாப் கத்தினான். “போன பிறவில போகாததுக்கும் சேத்து போறான் டா”

பிரதாப் கூப்பிட்ட அவசரத்தில், தான் மட்டும் தனியாக இருக்கிறோம் என்ற நினைப்பு, நேற்றுப் பார்த்த ஹாரர் மூவியை நினைவுபடுத்த பதற்றத்தில் தன் பேண்ட்டை சிறிது ஈரமாக்கி, இணைப்பை துண்டித்துவிட்டு நடக்கத்துவங்கினான். இல்லை, ஓடிவந்தான்.

“நெட் லேப்ல குளுர் ஜாஸ்த்தில?” இளித்துகொண்டே கேட்டான், குமார்.

“ஆம, இல்லாட்டினாலும் இவரு அணைய அடச்சுருவாரு பாரு!” வசந்த்.

“டே சொட்ட மண்ட, ஓவரா போறடா!”

எனக்கு சிரிப்பு வந்தது. ‘சொட்ட மண்ட’ என்கிற ஒரு வார்த்தை போதும் வசந்த் அடங்கி விடுவான். அப்பாவின் மரபுபண்புகள் அவனுக்குள் எண்டர் ஆகிக்கொண்டிருதது அவனுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தது. இந்த வருட காலர்ஷிப்பில் எப்பேற்பட்டாவது எர்மொமேட்டின் வாங்கிவிடவேண்டும் என்று ‘முடி’வெடுத்திருந்தான். இதுக்கு முக்கியமாக இன்னொரு காரணமும் இருந்தது. ஃப்ர்ஸ்ட் இயர் சேர்ந்து ஒரு மாதத்தில் இப்பொழுதுதான் பெரிதினும் பெரிய பிகர்களெல்லாம் கடலை பயிரிட தொடங்கியிருக்கிறார்கள். இந்த புள்ளிமான்களுக்கிடையில் மயிர் நீத்த கவரிமானாக இருப்பதில் அவனுக்கு விருப்பமில்லை. எவனுக்குதான் விருப்பமிருக்கும்.

“நீ ‘ஓவரா போறியேன்னுதான்’ ஓட்டுறோம்” பிரதாப் சீன்டினான்.

“டேய், அங்க பாருங்கடா.. எல்லாரும் கெமிஸ்ட்ரி டெஸ்டுக்கு படிச்சுக்கிட்டு இருக்கிறாங்கே. நீங்க என்னடான்னா நெட்லேப் போயிட்டு ஓட்டிக்கிட்டு வர்றீங்கெ. ஆவுடைய நெனச்சா பயமா இருக்குடா” நான் பயந்துகொண்டே கேட்டேன்.

கெமிஸ்ட்ரி புரொஃபஷர் ஆவுடையப்பனை நினைத்தாலே பயமமாக இருந்தது. அவர் அடிப்பதெல்லாம் கிடையாது. ஒருத்தன் கொஞ்சம் மக்காக இருந்தால் போதும். அம்மோனியம் நைட்ரேட் குறியீடு சொல்லு, இந்த அமிலத்தோட எந்த அமிலத்த கலந்தா அழுகின முட்டை நாத்தம் வரும், சிகப்பு லிட்மஸ் பேப்பரை எதனால் நீல லிட்மஸ் பேப்பர் ஆக்கமுடியும், நியூஸ் பேப்பராக ஆக்கமுடியும் போன்ற அக்கப்போரான பழைய பாடாவதியான முக்கியதுவமில்லாத கேள்விகளுக்கு முக்கியதுவம் கொடுத்து நம்மை முழிபிதுங்க முழிக்க வைப்பது அவருடைய ஸ்டைல். ஈஸியான கேள்வியாக இருக்கவேண்டும். அதேநேரத்தில் டக்கென்று பதில் சொல்ல முடியாத கேள்வியாகவும் இருக்கவேண்டும். இப்படியாக கேள்வி கேட்பதில் ஒரு மனோதத்துவ முறையை புகுத்திய தன்னை ஒரு சைக்யார்ட்டிஸ்ட்டாக அவர் நினைத்திருக்களாம். ஆனால், சீனியர் சுப்பு தன் அறையில் எங்களிடம் அவரை சைக்கோ என்றான். “ஏன்ணே அப்டி சொல்ற?”

“டேய் தம்பிகளா, நா ஃபர்ஸ்ட் இயர்ல கொஞ்சம் டல் ஸ்டூடண்ட்தான்.”

“அப்பிடியான்ணே!!!” இப்பமட்டும் படிச்சு பொளந்துட்டியாக்கும்? மனதிற்குள் சிரித்துக்கொண்டோம்.

“ஆமண்டா. அவன் எப்பப்பாத்தாலும் ரெண்டுமூணு பஞ்ச் டைலாக் விட்டுகிட்டுயிருப்பானே, கேட்டிருக்கீங்களா?..”

“ஆமண்ணே! ஆமண்ணே! ஆமண்ணே!.. ‘இந்த காலேஜ்ல ஒவ்வொரு செங்கலும் ஏம் பேரச்சொல்லும்’ இந்த டைலாக்கை அடிக்கடி சொல்வார்ணே. பார்ட் டைம்மா செங்கச் சூளைல கூலிவேல பாக்காரோ?” குமார் எடுத்து கொடுத்தான்.

“தன்னாலதான் இந்த காலேஜ் வளந்துச்சு, வயசுக்கு வந்துச்சு, ப்ரக்னன்ட் ஆச்சு இப்படி எதையாவது புளுகிகிட்டே இருப்பாண்டா. இதேமாரிதான் அன்னைக்கும் ஒரு பஞ்ச் டைலாக் சொன்னான். பெரிய வீட்டு பையங்கள கொஞ்சம் மிரட்டி வைக்க, ‘டில்லிக்கு ராசானாலும்….’னு சொல்லி மிச்ச பாதிய எங்கள சொல்ல வக்கிறதுக்காக கொஞ்சம் இடைவெளிவிட்டு எங்க ரிப்ளைக்காக வெயிட் பண்ணுனான். நான் என்ன சொன்னேன் தெரியுமா?”

“ ‘தீகாருக்கு கனிமொழி’-னீங்களாக்கும்?”

“இல்லடா, ‘பள்ளிக்கு புரொஃபஷர்’-ன்னேன்”

“அப்புறம்?”

“கடுப்பான அவன், ‘டெல் மீ, எதையும் எதையும் கலந்தா அழுகிய முட்டை நாற்றம் வரும்?’னு கேட்டான்?”

“ ‘அவிச்ச முட்டைய நம்ம புல்லட் பத்ரிட்ட கொடுங்க. அவன் அவுட்புட்டா அழுகின முட்டை நாத்தம் தருவான். வித் டி.டி.எஸ் எபெக்ட்டோட’-சொன்னேன். பெரிசு கடுப்பாகி 7-ம் நம்பர் வாய்பாட சொல்லச் சொல்லிடான். மூவேழா இருபத்தொன்னுக்கு மேல வரல. பொண்ணுங்கள்ளாம் சிரிக்கிறாளுக எனக்கு அவமானமா போச்சு. கடைசில, ஆயிரந்தடவை இம்போசீசன் கொடுத்து கைய ஒடச்சிட்டான்” என்று சொல்லி ஒரு கெட்டவார்த்தையை உதிர்த்து தொடர்ந்தான் சுப்பு.

“ஆனா, கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட் அவருக்கு கோவில் மாதிரி. ரெம்ப பக்தியா இருபார்டா ” இந்த இடத்தில் மட்டும்தான் சுப்பு அவருக்கு மரியாதை கொடுத்தான்.

இதையெல்லாம் நினைத்துகொண்டே ஹாஸ்டலை அடைந்துவிட்டோம். தூங்கிகொண்டிருந்த செக்யூரிடியை எழுப்பி, நெட்சிலிப்பை அவன் கையில் திணித்து, தண்ணீர் குடித்துவிட்டு, அவரவர் அறைக்கு தூங்கச் செல்வதற்கு முன் வசந்த் சொன்னான், “எனக்கென்னமோ, ஆவுடை நாளைக்கு டெஸ்ட் வைக்காதுன்னு நெனைக்கிறேன். குட் நைட்”

“ குட் நைட் டா, சொட்ட” என்று சொல்லிவிட்டு ஓடிக்கதவை சாத்திகொண்டான், குமார்.


காலை. வகுப்பில் உசித சிந்தாமணிகள், கடமை கர்ணன்கள் டெஸ்ட்டிற்க்கு காத்திருக்க, அவர்களை காப்பியடிக்க ஈயடிச்சான்கள் சீட் முன்பதிவு செய்ய முண்டியடித்துக்கொண்டிருந்தனர்.

‘குணா.. நீ லெப்ட்ல உக்காந்துக்க. அப்பப்ப தூக்கிக்காட்டு போதும். ‘

‘மாப்ள மொக்க, போனவாட்டி மாதிரி மண்டபூன மகேஸ்வரிக்கு சீட்ட கொடுத்து என்ன தவிக்க விட்டைன்னு வையி… ஒன்ன ஒண்ணும் பண்ண மாட்டேன். மகேஸ்வரி மடியில உக்காந்துக்கிருவேன், பாத்துக்க! ’

‘அடிச்சுட்டு தூக்கி போடுறேன், புடிச்சுக்க. ‘

‘பொண்ணுங்கள்லாம் ஜெராக்ஸ் மிசின முழுங்கிட்டு இருப்பாளுக. அங்க போய் ஒட்டிக்க, அப்துல்லு ‘

கோவிலில் உண்டகட்டி கொடுக்க ஆரம்பித்ததும் பிய்த்துகொண்டு வரும் பக்தன் போல் மணியடித்ததும் கிளாசுக்குள் எண்ட்ரி கொடுக்கும் ஆவுடையப்பன் பெல்லடித்து பத்து நிமிடமாகியும் வரவில்லை. ஆவுடை இன்னொரு பஞ்ச்-ஐ அடிக்கடி சொல்வதுண்டு. பெல்லடிச்சு நான்வர அஞ்சு நிமிசம் லேட் ஆச்சுன்னா டயர் பன்ஞ்சராகியிக்கணும். அஞ்சு நிமிசத்துக்கு மேல லேட் ஆச்சுன்னா என் உயிர் பஞ்சராகியிருக்கணும். எவனோ ஒருவன் புரளியை கிளப்பிவிட இந்த விசயம் விமலாவின் மூளைக்குத்தான் முதலில் எட்டியது. ஓவென அழத்தொடங்கினாள். பின்பு அவளை ஒட்டி கவிதா, வித்யா, சுஹாசினி.. ஒட்டுமொத்தமாக அழத்தொடங்க, மொத்தத்தில் எக்ஸாம் ஹால் எழவு வீடானது. சில ஆண்களும் அழுதனர். அது ஆனந்தக் கண்ணீர் மட்டும்தான்.

லேட்டா எழுந்து, லேட்டா குளிச்சு, லேட்டா சாப்புட்டு, தினமும் வார்டனிடம் அப்பாலஜி எழுதிக்கொடுத்துவிட்டு, ஃப்ர்ஸ்ட் பீரியர்ட் முடிவதற்க்கும், செகண்ட் பீரியர்ட் ஆரம்பிப்பதற்குமான இடைவெளியில் வந்து இரண்டு வகுப்பு புரபஸர்களிடமும் திட்டுவாங்கும் லேட் லோகநாதன் சொல்லித்தான் மேட்டரே தெரியும்..

நேற்று இரவு நெட்லேப்புக்கு போயிட்டு வந்த சீனியர் பசங்கள்ல ஒருத்தன், கெமிஸ்ட்ரி டிபார்மெண்ட் நேம் ப்ளேட்டை, ஜென்ட்ஸ் டாய்லெட்டில்லும், ஜென்ட்ஸ் டாய்லெட் நேம் ப்ளேட்டை கெமிஸ்ட்ரி டிபார்மெண்ட்டிலும் ஸ்வாப் பண்ணி, மாற்றி சொருகிவைத்துவிட்டு போய்விட்டான். டிபார்ட்மெண்டை கோவிலாக நினைத்த ஒரு மனிதனுக்கு இப்படி ஒரு அசிங்கத்தை ஏற்படுத்திய சீனியர் வேறுயாருமில்லை, சுப்ரமணிய பாரதி என்கிற சுப்புதான். ஒரு வாரம் சஸ்பென்ட் பண்ணப்பட்டான் சுப்பு.

அன்று அந்த கிளாசிற்கு தாமதமாகவே வந்த ஆவுடை டெஸ்ட்டும் வைக்கவில்லை, கிளாசும் எடுக்கவில்லை. எதையாவது எடுத்து படிங்க என்று சொல்லி கீழே குனிந்துகொண்டார். நாங்கள் இன்னைக்கு சப்மிட் செய்ய வேண்டிய பிஸிக்ஸ் அசைன்மன்டை தைரியமாக டேபிளில் வைத்து எழுதத்தொடங்கினோம்.

அன்று இரவு எனக்கு ஒரு கனவு. அதில் கெமிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட் அளவுள்ள ஒரு கட்டணக்கழிப்பறையை குத்தகைக்கு எடுத்து குத்தவைத்து டேபிளில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களை அடுக்கி ஒண்ணுக்கா, ரெண்டுக்கா கேட்டு, ஒண்ணுக்குன்னா ஒரு ரூபாய், ரெண்டுக்குன்னா ரெண்டு ரூபாய் என விளக்கம் கொடுத்துகொண்டிருந்தார், ஆவுடையப்பன் Msc., M.Ed., M.Phill.,

செமஸ்டர்கள் உருண்டோடின. ஃபைனல் இயர். இதற்கு இடைப்பட்ட காலங்களில் பிரதாப் நான்கைந்து காதல் பண்ணிக்கொண்டிருந்தான். இதில் நான்கு ஃபெயில். அதில் இரண்டிற்கு ரீவேல்யூசன் கூட போட்டான். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை.

வசந்த் எர்மொமேட்டின், நுயுஷென், இந்துலேக்கா.. எல்லாவற்றையும் பயன்படுத்தினான், பலன் இல்லை. ஆனால், அவன் நினைத்தது போல் பெண்கள் அவனை தவிர்த்து விடுவார்கள் என்பது பொய்யாகிப்போனது. நன்றாகவே அவனிடம் பழகினர். அவனிடம் நகைச்சுவையுணர்வு அதிகமாக இருந்ததும் ஒரு காரணம் .

குமார் இப்போதெல்லாம் நன்றாக படிக்கிறான். கேம்பஸ்ஸில் செலக்ட் ஆயிருவான் என்ற நம்பிக்கை எங்களிடம் இருந்தது. கொஞ்சம் பொறாமையும்கூட.

எனக்கு கொஞ்சம் அரியர் இருந்தது. ஃபைனல் செமஸ்ட்டருக்குள் கிளியர் பண்ணிவிடலாம் என்கிற நம்பிக்கை. நம்பிக்கை.. அதான எல்லாம்.

நாங்க இன்னும் நெருக்கமாகவே இருந்தோம். நாங்க ஒரு கேங்க். எங்களை எவனும் எதுவும் கேட்க முடியாது. கேட்டா அடிதான். அடி என்பது எங்களுக்கும்தான். எதிர் கேங்க் பலமானது என்றால் அப்படித்தான் நடக்கும்.

ஆவுடையை இப்போதெல்லாம் எவனும் மதிப்பதில்லை. கிளாஸ் வராண்டாக்களில் நடந்து வரும்போது அவரை பார்த்தால், எங்கையோ பார்த்த முகம் என்று எங்களுக்குள் ஓட்டி சிரித்துக்கொள்வோம். அவர் செல்வாக்கு எப்பவும் ஃப்ர்ஸ்ட் இயர் பால்டப்பாக்களிடம்தான் பலித்துக்கொண்டிருந்தது.

காலேஜ் முடித்து சென்னையில் ஒன்றாக சேர்ந்து வீடெடுத்து இன்டர்வியூவிற்கு சென்று வந்து கொண்டிருந்தோம். முதலில் குமாருக்குதான் வேலை கிடைத்தது. அடுத்து பிரதாப். ஆனால் இருவரின் சம்பள விகிதத்தில் பெரிய வேறுபாடு இருந்தது. இதுதான் அவர்களிடம் மிகப்பெரிய புகைச்சலை உண்டு பண்ணியது. இருவருக்கும் ஈகோ. நானும் வசந்தும் எவ்வளவு சொல்லியும் இருவரும் கேட்கவில்லை. குமார் வேறொரு வீட்டிற்கு சென்ற இரண்டாவது மாதத்தில் பிரதாப் கம்பெனி கெஸ்ட் ஹவுஸிற்கு சென்றுவிட்டான். பகிர்ந்து கொண்ட வாடகை இப்பொழுது எங்கள் தலையில் மொத்தமாக வந்து விழுந்தது. வசந்த் ரேடியோ ஜாக்கி ஆகும் ஆசையில் விதவிதமாய் கத்திக்கொண்டிருந்தான். பக்கத்து வீட்டிலிருந்து புகார் வந்து கொண்டிருந்தது. எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. சொந்த ஊருக்கே திரும்பி வந்து விட்டேன். அப்பப்ப அரியர் வந்து எழுதிக்கொண்டிருந்தேன். படித்து முடித்து மூன்று ஆண்டுகளாக அரியர் கிளியர் பண்ண முடியவில்லை.

அன்று அரியர் எக்ஸாமுக்கு ஃபீஸ் கட்ட வந்தபோதுதான் பார்த்தேன். காலேஜ் தலைகீழாக மாறியிருந்தது. பழைய ஸ்டாப்ஸ் யாருமில்லை. இந்த வருஷம் ஃபைனல் இயர் முடித்த, ஒழுங்காக சேலை கூட கட்டத்தெரியாத பெண்களை லெக்சரராக போட்டிருந்தார்கள். கிரானைட் பதித்திருந்தனர். கல்லூரியிலிருந்து ஹாஸ்டலுக்கு செல்லும் சாலை தார்ரோடாகி இருந்தது. இன்னும் நிறைய மாற்றங்கள். கேசியர் அறை டிக்கெட் கவுண்டர் போல் மாற்றியிருந்தனர்.( பார்றா! ) ஃபீஸ் கட்டி முடித்து டாய்லெட் போனேன். அதே ஜென்ட்ஸ் டாய்லெட்தான். அன்னைக்கு சுப்புவை தேவையில்லாமல் சஸ்பெண்ட் பண்ணி விட்டார்கள். நேம் ப்ளேட்டை மாற்றியது நெட்லேப் போய்விட்டு எங்களுக்கு பின் வந்த குமார்தான். இதை ரெம்ப நாள் கழித்துதான் குமார் எங்களிடம் சொன்னான். எவ்வளவு கெஞ்சியும் பழைய உதாரணங்கள் சுப்புக்கு எதிராக இருக்க பழிகடாவாக ஆக்கப்பட்டுவிட்டான், பாவம்.

டாய்லெட்டில் இருந்து திரும்பிக்கொன்டிருந்தேன். வருகிற வழியில் கெமிஸ்ட்ரி டிபார்மெண்ட்டில் ஆவுடையப்பன் குரல் கேட்டுக்கொன்டிருந்தது.

“….இந்த டிபார்ட்மெண்ட்க்கு, காலேஜுக்கு நான் எவ்வளவு உழச்சிருக்கேன் தெரியுமா?.. இந்த காலேஜ்ல உள்ள ஒவ்வொரு செங்கலும் எம் பேரச்சொல்லும்….”

யார் யாரோ, எது எதுவோ எப்படி எப்படியோ மாறியாச்சு. ஆவுடை மட்டும் அப்படியேதான் இருக்கார் இன்னும். தலைவா யூ ஆர் க்ரேட்.

கலைவேந்தன்
17-08-2012, 01:46 PM
அழகான நடை. நகைச்சுவை பொங்கும் ஸ்டைல். அருமையா இருந்திச்சு. அங்கங்க சில எழுத்துப்பிழைகளை மட்டும் தவிர்த்தால் போதும்.

பாராட்டுகள் சுஜா..!

சுஜா
17-08-2012, 01:49 PM
நன்றி கலைவேந்தன் அண்ணா....

கீதம்
18-08-2012, 01:11 AM
மாணவ, ஆசிரிய மனங்களை அழகாய்ப் படம்பிடித்த கதை. கல்லூரிக் கட்டடத்தின் செங்கல்லும் தன் பெயர் சொல்லும் என்னும் நம்பிக்கை கொண்ட ஆசிரியருக்கு, நாளை தன் மாணவர்களும் தன் பெயர் சொல்லும்படி உருவாகவேண்டும் என்னும் அவா இருப்பதில் வியப்பென்ன?

நல்ல எழுத்தோட்டம். கல்லூரிக் காளைகளின் மனநிலையைப் பிரதிபலிப்பதில் வெற்றி கண்டிருக்கிறீர்கள். பாராட்டுகள் சுஜா. தொடர்ந்து எழுதுங்கள்.

சுஜா
18-08-2012, 01:33 PM
பின்னூட்டாம் இட்டு உற்சாகப் படுத்திய கீதம் அண்ணாவிற்கு என் நன்றிகள்.

அனுராகவன்
18-08-2012, 01:56 PM
பாராட்டுகள் சுஜா..!

seguwera
18-08-2012, 03:34 PM
மீண்டும் ஒரு முறை கல்லூரிக்கு சென்று வந்த ஒரு உணர்வு.அருமை

சுஜா
19-08-2012, 07:12 AM
என் அன்பு நன்றிகள், அச்சலா, சே குவேரா அவர்களுக்கு..

சுஜா
19-08-2012, 07:17 AM
சிறுகதையை செப்பனிட்ட பாரதி அண்ணாவிற்கு என் அன்பு நன்றிகள்..

jayanth
19-08-2012, 07:25 AM
பின்னூட்டாம் இட்டு உற்சாகப் படுத்திய கீதம் அண்ணாவிற்கு என் நன்றிகள்.


கீதம் அண்ணா இல்லீங்க சுஜா...அக்கா...!!!
கதை நல்லா இருக்கு...!!!

சுஜா
19-08-2012, 07:59 AM
கீதம் அண்ணா இல்லீங்க சுஜா...அக்கா...!!!
கதை நல்லா இருக்கு...!!!

எனக்கு அப்பொழுதே சிறிது சந்தேகம் இருந்தது..

நன்றி ஜெயந்தா அண்ணா...

கீதம்
20-08-2012, 10:31 AM
பின்னூட்டாம் இட்டு உற்சாகப் படுத்திய கீதம் அண்ணாவிற்கு என் நன்றிகள்.


என் ப்ரோஃபைல் பார்த்தால் தெரிந்திருக்குமே...

நானும் உங்க பெயரை வைத்து உங்களை தங்கை என்றுதான் முதலில் நினைத்தேன். அப்புறம் உங்க ப்ரோஃபைல் பார்த்து தெளிந்தேன். :)


கீதம் அண்ணா இல்லீங்க சுஜா...அக்கா...!!!
கதை நல்லா இருக்கு...!!!

நன்றி ஜெயந்த் அண்ணா.