PDA

View Full Version : சிறந்த கவிஞர் என்பவர் யார் ?ஆதவா
16-08-2012, 08:11 AM
சிறந்த கவிஞர் என்பவர் யார் ? அவரை எப்படி அடையாளங் கண்டுபிடிப்பது ? எந்தக் கவிஞரின் கவிதைகளைத் தவறவிடாமல் படிக்க வேண்டும் ? எல்லாருமே கவிதைகள் எழுதுகிறார்கள். எல்லாருமே ஏதோ ஒரு பிரபல மேடையில் மின்னுகிறார்கள். அவர்களை எப்படித் தரங்காண்பது ? இத்தகைய கேள்விகள் முதல்நிலை வாசக மனத்திற்குள் சுழன்றடித்தபடியே இருக்கும். சிறந்த கவிஞனை அடையாளங்காண கீழ்க்காணும் அவனின் கவிதை இயல்புகள் உதவக்கூடும்.

1. மிக நீளமான வாக்கியத்தை - பதினைந்து இருபது வார்த்தைகள் உள்ள வாக்கியத்தை - மிக அநாயசமாக எழுதிச் செல்கிறானா என்று பாருங்கள். அப்படியானால் அவன் மொழியில் தேர்ந்த பயிற்சியுற்றிருக்கிறான் என்று அர்த்தம்.

2. மிகச் சிறிய வாக்கியங்களை நேர்த்தியோடும் கத்திக் கூர்மையோடும் (Sharp and Perfect) கச்சிதமான பொருள் உணர்த்தும்படி அமைக்க வல்லவனா என்று நோக்குங்கள். மொழியைச் சுண்டக்காய்ச்சி வடிக்கத் தெரிந்தவன் என்று ஆகும்.

3. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் நீங்கள் அபூர்வமாகக் கேள்விப்படுகிற ஏதேனும் ஒரு சொல்லை இட்டுச் செல்கிறானா என்று பாருங்கள். அந்தச் சொல் உங்களுக்குத் தெரியாததில்லை என்றாலும் அந்தக் கவிதையில் புதிதாகப் பயன்படுத்தக் காண்கிறீர்கள். அப்படியானால், அவன் மேலதிக மொழிப்புலமை பெற்றிருக்கிறான் என்று பொருள்.

4. ஒரே பாடுபொருளில் எழுதிக்கொண்டிராமல் வாழ்வின் அத்தனை இயல்புகளையும் கொட்டிக் கவிழ்க்கிறானா என்று தேடுங்கள். அவன் தோரணங்கட்டும் சம்பவங்களின் வண்ண வகைப்பாடுகள் வியப்பூட்டுகிறதா என்பதைக் கவனியுங்கள். அப்படியானால், அவன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைக் கூர்ந்து கவனிக்கிறான் எனலாம்.

5. தான் எழுதும் கவிதையை ஒரே மாதிரி வார்த்துக் கொண்டிராமல் வெவ்வேறு தொனியில், மொழியில், சோதனை ரீதியிலேனும் மாறுபட்டு எழுதிப்பார்க்கும் விருப்பம் - கவிதையில் தென்படுகிறதா என்று தேடுங்கள். அவனிடம் புதிய திறப்புகளுக்கான சாவிகள் நிறையவே இருக்கும்.

6. இயற்கை, பெண்மை, வரலாறு குறித்து அவனது பார்வை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள். அப்படியிருந்தால், அவன் உலகத் தரமான வாக்கியங்களை அமைக்கும் திசையில் நடைபோடுவான்.

7. ஆன்மீகம், கடவுள், விதி, அரசியல் போன்றவற்றின் மீது முன் தீர்மானமற்ற மனநிலையில் அவன் இருக்கவேண்டும். அதுவே கவிதையியலில் சிகரத்தை அடைவதற்கு உரிய பாதையாகும். கடவுள் சிந்தனையால் கவிதைக்குச் சிறகு முளைக்கும் என்பார் கண்ணதாசன். இதை மதரீதியான பார்வையில் நான் சொல்லவில்லை. கவிதைக்கு இவை யாவும் வலிமையான கச்சாப் பொருள்கள்.

8. வாசகனைத் தன் கவிதையைவிடவும் உயர்வாக மதிக்கிறானா என்று துப்பறியுங்கள். அவ்வாறில்லாதவன் எனில், ஏற்கனவே அகம்பாவத்தோடு இருப்பவனுக்கு நாம் அவனைப் பின் தொடர்வதன் மூலம் அவன் ஆணவம் பெருகவே உதவியதாவோம்.

9. மழை பொழிவது மாதிரி எழுதுவதில் வல்லவனா என்று பாருங்கள். அப்படியானால், கவிஞன் நல்ல பார்மில் இருக்கிறான். முக்கி முனகி ஒரு கவிதை எழுதிக்கொண்டிருப்பவனைத் தொடர்ந்தால் திக்கித் திணறிவிடுவீர்கள்.

10. உலகம், எதிர்காலம் குறித்தெல்லாம் அவன் நேர்மறையான கருத்துகளோடு இருப்பவனா என்று ஆராயலாம். அப்படி இருந்தால் அவன் வாசகரை உள் புகுந்து இயக்கி பொன்னுலகிற்கே அழைத்துச் சென்றுவிடுவான்

நன்றி :
- கவிஞர் மகுடேசுவரன்

கலைவேந்தன்
16-08-2012, 08:17 AM
கவிஞர் மகுடேசுவரன் தான் சிறந்த கவிஞர். வேறு எவரும் இல்லை. ( இந்த செய்தியை யாராவது கவிஞர் மகுடேசுவரனுக்கு சேர்த்துடுங்கப்பா.. )

ஆதி
16-08-2012, 08:54 AM
//ஆன்மீகம், கடவுள், விதி, அரசியல் போன்றவற்றின் மீது முன் தீர்மானமற்ற மனநிலையில் அவன் இருக்கவேண்டும். அதுவே கவிதையியலில் சிகரத்தை அடைவதற்கு உரிய பாதையாகும். கடவுள் சிந்தனையால் கவிதைக்குச் சிறகு முளைக்கும் என்பார் கண்ணதாசன். இதை மதரீதியான பார்வையில் நான் சொல்லவில்லை. கவிதைக்கு இவை யாவும் வலிமையான கச்சாப் பொருள்கள்.

//


இது கிட்ட தட்ட ஒரு ஜென் நிலை, இந்த பக்குவம் எல்லோருக்குமே வேண்டும், எந்த ஒன்றையும் அந்த தருணம் அமையும் வரை அறிந்து கொண்டுவிட முடியாது, நாம் காத்திருந்தே ஆக வேண்டும்

கவிஞர் மகுடேசுவரனின் குறிப்புக்கள், ஒரு சின்ன வழிகாட்டியே இது முற்றும் சரியாக இருக்கும் என்பதை அவரே கூட ஏற்கமாட்டார், அந்த அளவைகள் ஆளுக்கு ஆள் மாறுபடும்

பலரிடமும் இது போன்ற அளவைகள் இருக்கும், அவை நம் மனநிலை, வாசிப்பு நிலை, சூழல், நாட்டம், விருப்பு, வெறுப்பு, தெரிநிலை, அனுபவம் போன்ற யாவிற்கும் ஏற்ப வேறு படும்


//1. மிக நீளமான வாக்கியத்தை - பதினைந்து இருபது வார்த்தைகள் உள்ள வாக்கியத்தை - மிக அநாயசமாக எழுதிச் செல்கிறானா என்று பாருங்கள். அப்படியானால் அவன் மொழியில் தேர்ந்த பயிற்சியுற்றிருக்கிறான் என்று அர்த்தம்.

2. மிகச் சிறிய வாக்கியங்களை நேர்த்தியோடும் கத்திக் கூர்மையோடும் (Sharp and Perfect) கச்சிதமான பொருள் உணர்த்தும்படி அமைக்க வல்லவனா என்று நோக்குங்கள். மொழியைச் சுண்டக்காய்ச்சி வடிக்கத் தெரிந்தவன் என்று ஆகும்.

//


இந்த இரண்டில்தான் கவிஞன் மற்ற இலக்கியவாதிகளிடம் இருந்து வேறுபடுகிறான், ஒரு தேர்ந்த கவிஞனுக்கு தேவையான அம்சங்கள் இவை
இதனை தொடர்ந்து பயிற்சி செய்வதில் அடைய முடியும்

வார்த்தையை கூராக்குதல் மிக தேவை, அது தைப்பதோடு நின்றுவிட கூடாது, தைத்த இடத்தில் புண்ணாக்கி புரையோட செய்ய வேண்டும், அந்த புண் நல்ல புண்ணாகவே இருக்கும்

ஆதவா
16-08-2012, 08:57 AM
கவிஞர் மகுடேசுவரன் தான் சிறந்த கவிஞர். வேறு எவரும் இல்லை. ( இந்த செய்தியை யாராவது கவிஞர் மகுடேசுவரனுக்கு சேர்த்துடுங்கப்பா.. )

என்னாச்சுங்க, அவர் மேல உங்களுக்கு இப்படியொரு காண்டு?

கலைவேந்தன்
16-08-2012, 03:14 PM
காண்டெல்லாம் ஒன்னும் இல்லை ஆதவா... ஒரு கவிஞன் இயற்கையான பிறவி. அவன் உருவாகிறான். உருவாக்கப்படுவதில்லை. கருவில் இருக்கும் போது மந்திரிக்கப்பட்டு கவிஞனாக வெளிப்போந்துவதில்லை. அப்படி இருக்க கவிஞனுக்கு இலக்கணம் விதிப்பது என்பதே மிகப்பெரிய குற்றம்.

மேற்கண்ட இலக்கணப்படி எல்லாம் வடிகட்டினால் கவிராயர்கள் தான் மிஞ்சுவார்கள். இந்த கவிஞர் தலைக்கனம் பிடித்தவர் என்பது அவரது இந்த் இலக்கணத்திலேயே தெளிவாகிறது. தன்னை முன்னிருத்தி இத்தகு இலக்கணம் வரையறுத்திருப்பதாகத்தெரிகிறது.

மேலும் இணையத்திலும் இலக்கிய உலகிலும் தன்னை பெருங்கவி கவியருவி கவிஞர் மாகவி ஆசுகவி பூசுகவி என்றெல்லாம் தன் பெயருக்கு முன் அடைமொழி இடுபவர்கள் எல்லோரும் கவிஞர்கள் என ஏற்கப்படுவதில்லை.

கவிஞன் என்பவன் காட்டாறு போல. வகைப்படுத்தி உருப்படுத்தி அவனை அகப்படுத்தி காட்டுவது என்பதெல்லாம் சுத்த ஹம்பக்.

மொத்தத்தில் மேற்கண்ட சோகால்ட் கவியின் இந்த கவி இலக்கணத்தை அடியோடு வெறுக்கிறேன். மறுக்கிறேன்.

கலைவேந்தன்
16-08-2012, 03:17 PM
மேலும் .. தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியரும் தொல்காப்பியரும் நன்னூலாசிரியர் பவணந்தி முனிவரும் பின்னால் வந்த எந்த இலக்கணவாதிகளும் கவிஞர் என்பவருக்கு இலக்கணம் வகுத்ததில்லை. இந்த சுண்டைக்காய்ப்புலவர் இலக்கணம் வகுத்திருப்பது முதல் செயலாகும். முற்றிலும் அருவெருக்கவைக்கும் பிழையாகும்.

M.Jagadeesan
16-08-2012, 03:29 PM
சிலப்பதிகாரத்தின் பெருமைகளை, ஆயிரம் பக்கங்களில் எழுதிய கட்டுரைகள் நம் நெஞ்சில் நிற்காது; ஆனால் ," நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் " என்ற பாரதியின் வரிகளே நம் நெஞ்சில் நிற்கும். இதுதான் ஒரு எழுத்தாளனுக்கும், கவிஞனுக்கும் உள்ள வேறுபாடு.

ஆதவா
16-08-2012, 04:04 PM
கலைவேந்தன் ஐயா,

கவிஞர் மகுடேசுவரனை நான் நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன், அன்பானவர், தவிர அவர் ஒரு நல்ல கவிஞர். அமரர் சுஜாதாவிற்கு மிகப்பிடித்த கவிஞர் என்பதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு கவிஞர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று அவர் எங்கேயும் சொல்லவில்லை, இப்படி இருக்கும் ஒருவர்தான் சிறந்த கவிஞர் என்று சொல்லப்படுகிறார் என்று சொல்கிறார். அவர் புழங்கியிருக்கும் வார்த்தைகளின் கூர்மையும், கவனமும் நம்மிடமில்லை என்பதுதான் உண்மை. மேலும் அவரது பத்து புள்ளிகளிலும் உடன்பாடில்லாத கருத்து என்று எனக்கு எதுவுமில்லை ; தங்களுக்கு இருக்கலாமோ என்னவோ, ஆனால் அவை அனைத்தும் ஒரு சிறந்த கவிஞனுக்கான தகுதி என்பதை மறுக்க முடியாதல்லவா?

தாங்கள் உங்களது கருத்துக்களை மறுபரிசீலனை செய்வீர்களென எதிர்பார்க்கிறேன்.

கலைவேந்தன்
16-08-2012, 04:20 PM
மன்னிக்கவும் ஆதவா.. அக்கவிஞர் எத்தகு புலவராகவும் இருக்கட்டும். ஆயினும் கவிஞர்களுக்கு இலக்கணம் வகுக்கும் அதாவது சிறந்த கவிஞர் யாரென்று சொல்லும் அவரது கூற்றுக்களை நான் முற்றிலும் மறுக்கிறேன்.

எவ்வித தனித்திறமைகளும் மேற்கண்ட பத்துக் கட்டளைகளும் இல்லாமல் தன் அழும்குழந்தைக்கு ஒரு தாயின் இயல்பான தாலாட்டைக் கேட்கும்போது அவரை விட சிறந்த கவிஞர் எவரும் இல்லை என நினைப்பவன் நான்.

மேற்கண்ட கவிஞர் சிறந்த கவிஞராக இருந்து போகட்டும். நான் மறுக்கவும் இல்லை. ஆயினும் சிறந்த கவிஞர் யார் என்பதை வரையறுக்கும் அளவுக்கு அவருக்கு எந்த வித அதிகாரமும் எவராலும் வழங்கப்படவில்லை.

நம்மில் விவாதம் எதற்கு..? அவரது கருத்தை நீங்கள் ஏற்கிறீர்கள். எனக்கு துமியும் உடன்பாடில்லை. அவ்வளவே..

நன்றி ஆதவா..!

கோபாலன்
16-08-2012, 07:59 PM
சிறந்த கவிஞருக்கான தகுதிகளாக திரு மகுடேஸ்வரன் அவர்கள் தன்னுடய கருத்துகளை தெரிவித்திருக்கிறார். அதுபோல ஒவ்வொருவருக்கும் சிறந்த கவிஞர் என்பதில் வெவ்வேறு கருத்திருக்கும். என்னைப்பொருத்தவரை அதுபோல எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே கவிஞர் தூய மனம் தான். அதன் சிறந்த கவிதை மெளனம் தான்.

A Thainis
16-08-2012, 09:44 PM
உள்ளத்தில் ததும்பிடும், மோதி விளையாடும், அனலாய் கொப்பளிக்கும் பன்முக உணர்வுகளை அதன் வடிவம் மாறாமல்
அன்பாய், பொறுப்பாய், சிறப்பாய் எளிய மொழியில் வடித்தெடுபதே கவி பாடும் கவிஞனின் கடமையாகும். கவிஞன் சிறப்பை பற்றி கவலை படாமல் கருத்தின் தாக்கத்தை பற்றியே எண்ணம்கொள்கிறான்.
சிறப்பு கவி என்பது வாசகர்களின் வாசிப்பை பொருத்து அதற்கு வலிமை கூடுகிறது. நல்ல கவி என கவிஞன் சிரமேற்கொண்டு வடிப்பதும்கூட சில நேரங்களில் மின்னி மறையும் மின்னலுக்கு சமமாகிவிடுகிறது. கவி பாடும் அனைவருக்கும் "சிறப்பு" பெற்றிட ஆசை, செந்தமிழும் நாபழக்கம், சித்திரமும் கைபழக்கும்.

nandagopal.d
19-11-2012, 05:39 PM
அருமையான வழிகாட்டல் நன்றிகள்