PDA

View Full Version : அப்புசாமியும் அழகிப் போட்டியும்...



கலைவேந்தன்
15-08-2012, 05:50 AM
1. நடுக்கதையில் அப்புசாமி..!

துபாயிலிருந்து வந்த சித்தப்பா பெண் ஒரு பெரிய பொட்டலம் நிறைய பிஸ்தா வாங்கி வந்துவிட்டாள்.

வறுத்த பிஸ்தா மேல் ஓட்டுடன் அழகாக வாயைப் பிளந்து கொண்டு சற்றே அங்குமிங்கும் சில பல உப்புக் கரிப்புடன் பிரமாதமாக இருந்தது.

பிஸ்தாவில் அதன் உள்ளிருக்கும் பருப்பைவிட அதனுடைய ஓடு மிக அழகு. சின்னச் சின்னக் கிளிஞ்சல் மாதிரி அதைச் சேகரித்து வைக்கக்கூடத் தோன்றும்.
வேர்க்கடலைத் தோலை உரித்து குப்பையில் கடாசுவதுபோல பிஸ்தா ஓடுகளை நாங்கள் நினைத்தாலும் குப்பையில் போட முடியாது. காரணம், வீணா மாமா இரண்டொரு தினத்தில் வருவதாக இருந்தார்.

பிரிஜ்ஜிலிருந்து எடுத்து எப்படியும் அவருக்கு ஒரு ஆறேழு பிஸ்தாவை அழகாகத் தட்டில் வைத்துத் தராமல் இருக்க முடியாது.

அதைப் பார்த்ததும் அவர் கேட்கிற முதல் கேள்வி, ‘மேல் ஓடுகளையெல்லாம் பத்திரமாக வைத்திருக்கீங்களா’ என்பதாகத்தானிருக்கும்.
பத்திரமாகத் தூக்கிப் போட்டுட்டோம் என்றால் எங்களோடு பேசமாட்டார். புறப்பட்டுப் போனாலும் போய்விடுவார்.

பிஸ்தா மேல் ஓடுகளை வைத்து அழகான முத்து மாலை கட்டி விடுவார். அவர் தோளிலே தொங்கும் ஜோல்னாப் பையில் குழந்தைகளுக்கு பிஸ்கெட் கிஸ்கெட் இருக்காது. சிறு சிறு அட்டைகள், ஜிகினாக் காகிதம், ·பெவி ஸ்டிக், ·பெவிகால், கோந்து தினுசு, அனபாண்ட், சிறிய பெரிய கத்தி, கத்திரிக் கோல், கிளிப், எமரி பேப்பர். இப்படி ஒரு தினுசான கூட்டணிதான் இருக்கும்.

”எதையும் வீணடிக்கக்கூடாதுடா பயல்களா?” என்பார். எப்போது பார்த்தாலும் ‘வீணாக்கக்கூடாதுடா’ என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்த அவரது பெயரே வீணா மாமா ஆகிவிட்டது. சின்ன வயசில், எங்களுக்கு பள்ளிப் பரீட்சை முடிந்ததும் கோணி ஊசியும் கார்டு போர்டு அட்டையும், வண்ண வண்ணப் பேப்பரும் மைதா மாவுப் பசையுமாய் டாணென்று ஆஜராகிவிடுவார்.

எங்கள் அடுத்த வருடப் புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் அட்டை போட்டுத் தருவது ஒரு ஆனந்தம் என்றால், கடந்த வருஷத்து நோட்டுப் புத்தகங்களில் எழுதப்படாத வெற்றுத்தாள்களை ஒன்று விடாமல் கிழித்து ரூல் போட்டது தனி, கணக்கு மார்ஜின் போட்டது தனி, வெற்றுப் பேப்பர் தனி என்று ரகவாரியாக பிரித்து கோணி ஊசியால் தைத்து ஓரங்களையெல்லாம் ஸ்கேல் வைத்து பிளேடால் துல்லியமாகக் கிழித்து கார்டு போர்டு அட்டையை அளவாக வெட்டி காலிகோ போட்டு ஒட்டி சகலவித உபசாரங்கள் செய்து புத்தம்புது நோட்டாக உருவாக்கி அந்த நோட்டு யாருக்கு என்பதை எழுதி லேபில் ஒட்டி விநியோகித்துவிட்டுத்தான் ஊருக்குப் புறப்படுவார்.

ஒருதரம் வீடு துடைக்கும் ‘மாப்’ பழசாகி விட்டதென்று கிணற்று மேடையில் போட்டிருந்தோம்.

வீணா மாமா வந்தார். ”வீணாப் போறதே அது” என்று பதறினார். எடுத்தார் கையில். பிரித்தார் தன் பையை. ஒருநாள் பூரா செலவிட்டார். மாப்பின் கந்தல் கிழிசலை அழகிய வாசல் தோரணமாக செய்துவிட்டார். பார்த்தவர்களெல்லாம் ”ரொம்ப அற்புதமாக இருக்கிறதே. எங்கே வாங்கினது?” என்று கேட்டார்கள்.
மாமாவுக்கு மகா மகழ்ச்சி. நாங்கள் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து ‘கைவண்ணச் செம்மல்’ என்ற பட்டத்தைத் தமாஷாக எங்கள் கையால் எழுதிக் கொடுத்தோம்.

அடுத்த தடவை அவர் வந்தபோது நாங்கள் எழுதிக்கொடுத்த பாராட்டுக் காகிதம் மகா மகா அந்தஸ்துடன் ஒரு பெரிய அரசாங்க விருது அட்டையில் ஜொலித்துக் கொண்டிருந்தது. மாமாவும் நாங்களும் சிரித்துக்கொண்டு இருக்கிற மாதிரி ஒரு புகைப்படமும் எப்படியோ ஒட்டு வேலை செய்து உருவாக்கி அதில் பதித்திருந்தார்.

இந்தத் தடவை மாமாவுக்கு நாங்கள் கொஞ்சம் பிஸ்தா பருப்பு ஓடுகளும், பேரிச்சப் பழ கொட்டைகளும், பலாக்கொட்டை, இருபது பழைய க்ரீட்டிங் கார்டு, இரண்டு பழைய காலண்டர், பழைய டேப் காசெட்டுகள், ஓடாத பாக்கெட் டிரான்ஸ்சிஸ்டர் ஆகியவற்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தோம்.

அவருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. அவர் வந்தது தீபாவளி சமயம். எங்களுக்கும் மகிழ்ச்சி. தீபாவளிக்கும் அவர் இருந்தால் எங்களை குஷிப்படுத்த என்னென்னவோ புதுப்புது ஐடியாவெல்லாம் செய்வார் என்று ஆசையாக இருந்தோம்.

ஆனால் என்ன ஒரு துரதிருஷ்டம். நாங்கள் சேகரித்து வைத்திருந்த பொருள்களையெல்லாம் எங்கள் தாயார் ஒட்டுமொத்தமாக வாரி குப்பைத் தொட்டியில் போட்டு அதையும் குப்பைக்காரர்கள் எடுத்துக்கொண்டுப் போயாச்சு.

சேலத்தில் நடந்த எங்கள் நண்பனின் வீட்டுக் கல்யாணத்துக்கு இரண்டு நாள் போய்விட்டு வருவதற்குள் இங்கே எங்கள் பொக்கிஷம் காலியாகிவிட்டது.
சோதனையாக தீபாவளிக்கு முதல் நாள் மாமா வந்துவிட்டார். ”என்னடா பசங்களா” என்று எங்களது தகரப் பெட்டிகளையும் அலமாரியையும் பார்த்தார்.

”அரிய பொக்கிஷமெல்லாம் குப்பையோடு போய்விட்டது” என்று ஒரு பாட்டம் முகாரி வைத்து அவரை சமாதானப்படுத்தினோம். ஆனாலும் அவருக்கு எங்கள்மீது கோபம். ஒரே உர்ரென்று இருந்தார்.

தீபாவளி தினம் தான் பாட்டுக்கு குளித்ததும் வெளியே வாக்கிங் கிளம்பிவிட்டார். நாங்களோ சிறுவர்கள். (நாங்கள் நாங்கள் என்று சொல்வது என்னையும் என் சகோதரனையும் எங்கள் அக்கா பையன் ஒருவனையும்தான்). அவரை சமாதான செய்ய வழி தெரியாமலும் தைரியமில்லாமலும் மெளனமாக அவரைப் பின் தொடர்ந்தோம்.

”எங்கே மாமா பட்டாசுக் கடைக்கா?” என்று அக்கா பையன் வத்தி வைத்தான்.

அவர் வெடுக்கென்று ”இந்த வருஷம் உங்களுக்க பத்து ரூபாய் பட்டாசுகூட நான் வாங்கித் தர முடியாது. பிஸ்தா ஓடு அவ்வளவு சுலபமா கிடைக்கக்கூடியதா? வீணடிச்சிடீங்களேடா?”

தெருவில் மெளன ஊர்வலமாக எங்கள் கோஷ்டி சென்று கொண்டிருந்தது.

”யோவ்! யோவ்! ஆட்டம் பாம். ஆட்டம் பாம்! போங்க அப்பால்லே.” என்று ஒரு குரல் எங்களை சகல திசைகளிலும் ஓட வைத்தது.

என் மாமா ஒரு ஆசாமிமீது படேரென்று மோதிக்கொண்டார். ”அய்யோ” என்று மாமா கத்த, மோதப்பட்டவர், ”நீ ஒரு அய்யோ என்றால் நான் இரண்டு அய்யோ. தெரிந்துகொள்” என்று கத்தினார்.

இதற்குள் நாங்களெல்லாம் மாமாவிடம் போய் ”என்ன ஆச்சு மாமா? யார் மேலே டேஷ் அடிச்சீங்க?” என்று கேட்டவாறே அவரை இடித்த பேர்வழியைப் பார்தோம். எங்களுக்குத் திக்கென்று ஒரு ஆச்சர்யம். ”மாமா. மாமா. உங்கள் வலி கிடக்கிட்டும். உங்களை இடிச்ச ஆளை நல்லாப் பார்த்தீங்களா. சீக்கிரம் பாருங்களேன். அப்புசாமித் தாத்தா மாதிரி இல்லை?

மாமாவும் அசந்துவிட்டார். அந்த தீபாவளி அரை குறை இருட்டில் மாமாமீது மோதிய பெரியவர் பார்க்க அப்புசாமி தாத்தா மாதிரியே இருந்தார்.
எங்கள் மாமா ஆச்சர்யம் தாங்காமல் ”சார். தப்பா நினைச்சுகாதீங்க. நீங்க அப்புசாமி தாத்தாதானே?” என்று கேட்டுவிட்டார்.

பதில் காரமாக வந்தது. ”யோவ். நல்ல நாள் அதுவுமா மூஞ்சு மொகரையைப் பேர்க்கிறாப்பிலே வந்து டேஷ் அடிக்கிறே. யாரானும் பொம்மானாட்டி ஆனாலும் தொலைகிறதுன்னு விட்டுடுவேன். நீ ஒரு ஆம்பிளை கெடா மாடு. என் கையிலிருந்த பட்டாசெல்லாம் சிதறிப் போச்சே. மரியாதையாப் பொறுக்கி கொடுங்க. நான் அப்புசாமிதான். அதுக்கு என்ன பண்ணப் போறே.”

மாமா ஆச்சரியப்பட்டவாறு ”நீங்க அப்புசாமி தாத்தாவேயா? இல்லை அவர் மாதிரி?” என்றார்.

அவர் கீழே விழுந்த பட்டாசுகளைப் பொறுக்கிக்கொண்டே ”வந்து பொறுக்குங்குடா முண்டங்களா. நான் அப்புசாமியா அவரைக்காய் சாமியா என்பது அப்புறம்”. என்று கோபித்தார்.

மாமா கெட்டிக்காரர் ”ஸாரி ஸார். எங்களை மன்னிச்சுக்கோங்க. தீபாவளி அன்னிக்கு உங்க மேலே மோதிண்டது, அதிருஷ்ட தேவதை மேலேயே மோதிண்ட மாதிரி. நீங்க அப்புசாமி தாத்தாவுக்குப் பிரதரா? அவர் மாதிரி இருக்கீங்களே. உடன் பிறப்பா?”

”உடன் பிறப்புமில்லே. கடன் பிறப்புமில்லே. கஷ்டப்பட்டு நான் பொறுக்கின பட்டாசையெல்லாம் தட்டி விட்டுட்டு பேட்டியா பேட்டி. எந்த டி.வி. ஜெயாவா, விஜய்யிலா, பொதிகையிலா எதுக்காகப் பேட்டி?”

மாமா சிரித்தார். ”எனக்குப் தெரிஞ்சுப் போச்சு. நீங்க பேசறதப் பார்த்தா அந்த அப்புசாமி தாத்தாவேதான் நீங்க. பாட்டிக்கிட்டே ஓயாம டோஸ் வாங்குவீங்களே. அதே தாத்தாதான். ஆம் ஐ கரெக்ட்.”

”ஆமாண்டா. நான் அப்புசாமியேதான். ஒரிஜினல் பட்டணம் பொடி மாதிரி. ஒரிஜினல் அப்புசாமியேதான். என் பொண்டாட்டி சீதேக் கிழவி எடக்கு பண்ணிட்டா. பட்டாசுக்குன்னு துட்டு ஒரு பைசா தரமாட்டேனுட்டா. ஆனால் நான் அசந்த கட்டை இல்லை. ‘வீடு வீடா பொறுக்கியாவது உன் எதிரிலே வெடிச்சுக் காட்டறேண்டி’ன்னு சபதம் போட்டுட்டு வந்தேன். ஒரு பை நிறைய சேர்த்துட்டேன். தாழி திரண்டு வர்ரப்போ வெண்ணெயை உடைச்சிட்டியே. பட்டாசெல்லாம் எங்கெங்கே சிதறி விழுந்துருக்கோ. மூக்குக் கண்ணாடியும் எங்கேயோ விழுந்துட்டது. நான் பட்டாசு தேடுவேனா, கண்ணாடி தேடுவேனா.”

மாமா உடனே எங்களைப் பார்த்து ”இடியட்ஸ்” என்று கோபித்து, ”தாத்தா தேடறார் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களா? நீங்களும் தேடுங்கடா? நானும் தேடறேன்” என்று கத்தினார்.

ஒரு வழியாக உரிய மன்னிப்புகளை வழங்கியபின் அப்புசாமி தனது தேடுதலை முடித்துக்கொண்டு எழுந்தார்.

அவர் கையிலிருந்த பிளாஸ்டிக் பையில் (டிரான்ஸ்பரண்ட் பை) அவர் இதுவரை திரட்டிய விதவிதமான பட்டாசுகள் அழகழகான வண்ணங்களில் காட்சி தந்தன.

அத்தனையும் வெடிக்காத மக்குப் பட்டாசுகள்.

எங்க மாமா ஆச்சரியத்துடன் கேட்டார். ”எதுக்கு தாத்தா இத்தனை பட்டாசு? பார்த்தால் எல்லாம் அவிசப் பட்டாசு மாதிரியே இருக்கே. எரியாத பட்டாசுன்னு சொல்றேன்.”

அப்புசாமி ஒரு பெருமூச்சு விட்டார். சில பட்டாசுக் காகிதங்கள் அவரது பெருமூச்சு தாளாமல் பறந்து அடங்கின. ”என்ன செய்யறது வாய்ச்சவள் சரியில்லையே. எந்த பொம்பளையாவது தீபாவளி அதுவுமா புருஷனை வீட்டை விட்டுத் துரத்துவாளா? நான் அவ மேலே வேணும்னே பட்டாசு கொளுத்திப் போடவுமில்லே, அவளுக்கோ புடவைக்கோ செய்கூலி சேதாரம் எதுவும் ஆகவும் இல்லை.

ஆனால் அவ கொழுப்பு, திமிரு ‘பத்து ரூபாகூட பட்டாசு அலவன்ஸ் தரமுடியாது. வீட்டைவிட்டு தொலைங்கோன்னு’ கேட்டைச் சாத்திட்டா. நான் சபதம் போட்டுவிட்டு வந்துவிட்டேன். ‘நாலு தெரு பொறுக்கியாவது நம்ம வீட்டு வாசலிலே பட்டாசு வெடிக்கிறேன்’னு.

தாத்தா சொன்னதைக் கவனியாமல் எங்க மாமா அவர் கையிலிருந்த பட்டாசுப் பையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்புசாமி தாத்தாவுக்கு மாமாவின் பார்வை அவ்வளவு செளகரியமாகப் படவில்லை. ‘கொள்ளிக் கண்ணன் போலிருக்கு. முட்டக் கண்ணைப் போட்டுக்கொண்டு பார்க்கிறான் பார்’ என்று நினைத்துக்கொண்டவர் போல பட்டாசுப் பையை தன் பின்புறமாக மறைத்துக்கொண்டார். மாமா கேட்டார். ”ஏன் தாத்தா அந்த பட்டாசெல்லாம் வெடிக்குமா? எல்லாம் வெடிக்காத பட்டாசு மாதிரி இருக்கே.”

அப்புசாமி கோபத்தோடு ”வாயை வைக்காதேய்யா. இத்தனை பட்டாசுகளிலும் கெட்ட பெண்டாட்டிகளுக்கு நடுவே நல்ல பெண்டாட்டி யாராவது இருப்பது போல ஒண்ணு ரெண்டு நல்ல பட்டாசும் இருக்கும். நான் என்ன பண்ணப்போறேன்னால் இத்தனை பட்டாசையும் ஒடைச்சு உள்ளிருக்கும் மருந்தையெல்லாம் கொட்டி பெரீய புஸ்வாணமா எங்க வீட்டு கியவியோட காருக்கு அடியில் வச்சு கொளுத்திடப்போறேன். அதுதான் அவளுக்கு நான் கொடுக்கப் போற தீபாவளிப் பரிசு. என்னை என்னமோ நினைச்சுக் கொண்டிருக்கா. நான் ஒரு பயங்கரவாதின்னு அவளுக்குத் தெரியாது.”

”ஆமாம் பாவம்” என்றார் மாமா அனுதாபத்தோடு. ”நீங்களும் எத்தனை தடவைதான் உங்கள் பயங்கரவாதத்தைப் பாட்டி மேலே காட்டுவீங்க. அவுங்களுக்கும் அலுக்கவில்லை. உங்களுக்கும் அலுக்கவில்லை.”

அப்புசாமிக்கு மாமாவின் நைஸ் பேச்சுப் பிடிக்கவில்லை. ”எங்க குடும்ப விஷயத்திலே அநாவசியாக வழியோடு போற நீங்க தலையிடறது எனக்குப் பிடிக்கலை. என் பட்டாசை இருட்டில் தட்டி விட்டுட்டுப் பேச்சு என்ன வேண்டியிருக்கு?” என்று கோபித்துக் கொண்டார்.

மாமா மன்னிப்புக் கோருவதுபோல ”சார். சார். நீங்க பெரியவர். தீபாவளி அதுவுமா என்னை ஆசிர்வாதம் பண்ணனும். அப்புறம் ஒரு விஷயம் நீங்க தப்பா நினைச்சுக்கக்கூடாது. நீங்க வைத்துக்கொண்டிருக்கிற பட்டாசுப் பையை ஒரு விலை போட்டுக் கொடுத்துடுங்க. நான் தர்ற பணத்திலே நீங்க தெளஸண்ட் வாலாவை வாங்கி பாட்டி எதிர்ல படபடான்னு வெடிக்கலாம். இதுதான் உங்க மேலே நான் மோதினதுக்கு நான் செய்யற பிராயசித்தம்.”

அப்புசாமி ”என்னடா?” என்று முதல் டாவைப் போட்டார். ”கிண்டலடிக்கிறியா? நானு உன் மாதிரி எத்தனை எத்தன்களைக் கண்டவன். என் பட்டாசையெல்லாம் கொள்ளையடித்துப் போகத் திட்டம் போடறியா?”

மாமா சட்டென்று ஒரு காரியம் செய்தார். அவர் புத்திசாலிதானே. தன் மணி பர்ஸை எடுத்து அதிலிருந்து ஒரு கற்றை ரூபாய் நோட்டை எடுத்து அப்புசாமி முன் காட்டினார்.

அப்புசாமி கற்றையாக அவ்வளவு நோட்டுகளைப் பார்த்து எத்தனையோ மாமாங்கம் ஆகிவிட்டது. ஆகவே ”சரி. சரி. உங்க நல்ல எண்ணத்துக்கு நான் குறுக்கே நிக்கலை. இப்பவே சொல்லிட்டேன் இதுல ஒண்ணுகூட வெடிக்காது. வேணுமானா பட்டாசை ஒடிச்சி மருந்தை புஸ்வாணமா கொளுத்தலாம். நான் உன்னை ஏதோ ஏமாத்திட்டேன்னு நினைச்சுக்காதே. பார்த்தா நல்லவனா இருக்கீர்” என்று கூறியவர் ரூபாயை வெடுக்கென்று வாங்கிக்கொண்டு படக்கென்று பட்டாசுப் பையை ஒப்படைத்து விட்டு இருளில் மறைந்தார்.

கீதம்
15-08-2012, 06:13 AM
வீணா மாமாவின் திட்டம்தான் என்ன? அப்புசாமித் தாத்தாவின் பட்டாசுப் பையை அவர் நோட்டமிட்டதிலேயே தெரிகிறது, ஏதோ திட்டம் வைத்திருக்கிறார் என்று. பிஸ்தா ஓட்டை வைத்துக்கொண்டு வீணா மாமா ஏதாவது கைவினை(?) வேலை செய்தால் அவரிடமிருந்து நானும் கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். இப்போது அது வீணாப் போயிட்டுதே...

பாக்கியம் ராமசாமி அவர்களின் கதைகளைப் பகிர முன்வந்திருக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி கலைவேந்தன். தொடரட்டும் வயிறு வலிக்க வைக்கும் அவரது படைப்புகள்.

ஜானகி
15-08-2012, 06:16 AM
காணாமல் போன அப்புசாமித் தாத்தாவை மீட்டுக்கொடுத்ததற்கு நன்றிகள் பல...கலாட்டா தொடரட்டும்...பட்டாசு சத்தத்துடன்.....

கலைவேந்தன்
15-08-2012, 06:19 AM
2. அப்புசாமியின் பொன்னாடை..

அப்புசாமி வேளா வேளைக்கு ஒழுங்காக சாப்பிட்டாலும் வயிற்றில் ஒரு கபகப உணர்வு கொஞ்ச நாளாக இருந்து வந்தது.

டிசம்பர் ஸீஸனில் அவர் விட்ட பெருமூச்சைக் கொண்டு எட்டு கிராமங்களுக்குக் காற்றாடி ஆலைகள் எண்ணூர் அனல் மின்சார நிலையத்துக்குக் கணிசமான அனல் உதவியிருக்கலாம்.

விழாக்களில் பொன்னாடைகள் பலருக்கும் போர்த்தப்பட்ட வாறிருந்ததை அவர் சகித்துக் கொண்டார்.

ஆனால் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக் கடைசியில் மனுஷனைக் கடித்த கதையாக, அவரது மனைவி சீதாப் பாட்டிக்கும் நாலைந்து பொன்னாடை கிடைத்ததைத்தான் அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

கட்டபொம்மன் கேட்ட மாதிரி சீதாப்பாட்டியை அவர் கேட்க ஆசைப்பட்டார். ‘நீ என்ன பாட்டுப்பாடினாயா? மிருதங்கம் வாசித்தாயா? வயலின் இழுத்தாயா? கடம் அடித்தாயா? கஞ்சிரா தட்டினாயா? தம்புரா மீட்டினாயா? அல்லது பாட்டுப் பாடிய பச்சைக் கிளிகளை மெச்சி உன் கிழட்டுக் கைகளைத்தான் தட்டினாயா? நீ ஒரு பன்னாடை, உனக்கேன் பொன்னாடை?’

சபாக் காரியதரிசிகளை சீதாக்கிழவி எப்படியோ காக்கா பிடித்துத் தனக்கும் நாலு பொன்னாடைகளைச் சம்பாதித்துக் கொண்டு விட்டாள் என்பது அவரது கணிப்பு. ‘ராகாஸ் அ·ப் வேதிக் ஏஜ்’ என்று ஒரு சபாவில், யாரும் கூடாத ஒரு மத்தியான்னப் பொழுதில் யாருக்கும் புரியாத ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைப் பாட்டி படித்தாள். அதற்கொரு பொன்னாடையா!

ஒரு சபாவின் விழாவுக்குத் தலைமை வகித்தாள். அதற்கொரு பொன்னாடை. ஒரு புதிய சங்கத்தைத் துவக்கி வைக்கக் குத்து விளக்கின் ஐந்து திரிகளில் ஒன்றைத் தான் ஏற்றினாள். அதற்கொரு பொன்னாடை.

அப்புசாமி பொருமினா¡ர்:

‘அடியே கிழவி! சும்மா ஒரு ஒளஒளாக் கட்டைக்காவது மேடையில் ‘என் வெற்றிக்குக் காரணம் என் புருஷன்தான்’ என்று சொன்னாயா? வீட்டுக்கு வந்த பிறகாவது. ‘பார்த்தீர்களா என் பொன்னாடையை’ என்று என்னிடம் காட்டினாயா? என்னவோ பரம ரகசியமாக மடித்துப் பீரோவில் வைத்துப் பூட்டிக் கொண்டு விட்டாய்.

புருஷன்னா உனக்குக் கிள்ளுக் கீரை? கீரைகூட ஒரு கட்டு அஞ்சு ரூபாய். அதிலும் பல இடைச் செருகல்கள்! எல்லாத்துக்கும் மதிப்பு ஏறிவிட்டது. ஆனால் எனக்குத்தான் எனக்குத்தான்..?’ புழுங்கினார்.

துக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கண்களை நாலா திசையிலும் ஏவினார். முக்கியமாக சீதாப்பாட்டியின் வெல்வெட் தலையணைக்குக் கீழே.
அவரது எதிர்பார்ப்பு வீணாகவில்லை. பீரோ சாவி அங்கேதான் இருந்தது.

பாட்டி பாத்ரூமில் இருந்தாள். வெள்ளிக்கிழமையாதலால் எண்ணெய் ஸ்நானமோ, ஷாம்பூ ஸ்நானமோ செய்வாள். கூந்தல் சுண்டைக்காய் முடிச்சாக இருந்தாலும் குளிக்க முக்கால் மணி நேரமாவது ஆகும்.

எடுத்தார் சாவியை. திறந்தார் பீரோவை. அள்ளினார் பொன்னாடைகளை. அணிந்து கொண்டார். ஆண்டாள் மாதிரி நிலைக் கண்ணாடி முன் நின்று தன் அழகைப் பார்த்துக் கொண்டார்.

பொன்னாடை தனக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக எண்ணி மகிழ்ந்தார்.

லொடக்!

பாத்ரூமிலிருந்து பாட்டி! தூணிலிருந்து நரசிம்மி!

அப்புசாமியின் பொன்னாடை, நொடியில் பறிக்கப்பட்டு தனி நபர் விசாரணைக் கமிஷன் அரை வினாடியில் அமைத்து மறு நொடியில் கண்டு பிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றாவது நொடியில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.

”யூ வில் நாட் கெட் ஸிங்கிள் பைசா ஹியர் ஆ·ப்டர். ஆல் யுவர் அலவன்ஸஸ் ஆர் கட்! கட்! கட்! உமக்கு அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த சகல மானியங்களும் நிறுத்தப்படுகின்றன!”

சீதாப்பாட்டியின் ‘பிடி சாபம்’ அப்புசாமிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவள் மேலும் கூறிய சிலவார்த்தைகள் அப்புசாமியை ஆழமாகப் புண்படுத்திவிட்டன.

”யோக்கியதை இல்லாததற்கு ஆசைப்படக் கூடாது. அன்டர் ஸ்டாண்ட்?”

அடிபட்ட புலியானார் அப்புசாமி: ”அடியே! நினைத்ததை முடிப்பவன்… நான், நான்,நான்!” என்று உணர்ச்சி வசப்பட்டு ஒரு மங்கப்பா சபதம் போட்டார்.

”இன்னாமே சொல்றே? யோக்கியதை எனக்கில்லையா? இந்த மாசம் முடியறதுக்குள்ளே எனக்குப் பொன்னாடை போர்த்தறாங்கடி போர்த்தறாங்க. அப்படிப் போத்தினா அதே மேடையிலே நீ என் காலிலே விழுந்து கும்பிடறயாடி பன்னாடை! இன்னாத்துக்கு இந்த பிஸ்தா பொன்னாடை பீஸெல்லாம்னு நான் கம்னு கெடந்தா, என்னைச் சீண்டறியா சீண்டு! மாசக் கடோசிக்குள்ளே மேடை மேலே எனக்குப்பொன்னாடை போத்தறாங்க. நான் கிங்குடி!”

பிள்ளையார்பட்டி விநாயகர் படம் அச்சிடப்பட்ட நாள்காட்டியின் மெல்லிய இதழ்கள் தினத்துக்கு ஒன்றாக உதிர்ந்து கொண்ருந்தன.

பொன்னாடை (அ) எங்கே கிடைக்கும் என்பதையும், (ஆ) எவ்வளவுக்குக் கிடைக்கும் என்பதையும் அப்புசாமி கண்டு பிடித்து விட்டார். விடை: (அ) நல்லி குப்புசாமி செட்டியார் கடை (ஆ) நானூறு அல்லது ஐந்நூறு ரூபாய்.

ஹ¤ம்.. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா? பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் மழை வருமா?பொன்னாடையை யார் வாங்கி எந்த மேடையில் வைத்து எப்போது அவருக்குப் போர்த்தப்போகிறார்கள்? காப்பிப் பொடிக்காரரா? வெட்கிரைண்டர் விற்பவரா? படத் தயாரிப்பாளர், திடீர் சிங்கப்பூர் தொழிலதிபர்? யார்? யார்? யார்?

பிள்ளையார்பட்டி விநாயகர் மேலும் சில தாள்களை நழுவ விட்டார்.

அப்புசாமி அவசரமாகத் தனது இளம் நண்பன் ரசகுண்டுவைக் கலந்தாலோசிக்க விரைந்தார்.

‘இசை அருவி சபா’ என்ற புதிய சங்கீத சபாவில் காண்ட்டீன் காண்ட்ராக்ட் எடுத்திருந்தான் ரசகுண்டு. தொழிலில் அவ்வளவு பிரகாசமில்லை. வோல்டேஜ் டிராப் ஆன பல்ப் போல டல்லடித்தது வியாபாரம். தம்பியாயிருந்தாலும், தாத்தாவாக இருந்தாலும் சித்தப்பாவாக இருந்தாலும், ‘வாங்க அண்ணா, வாங்க’ என்று வாய் குளிரக் கூப்பிடுவான். அண்ணா நாமத்தால் பிழைத்துக் கொண்டிருந்தான்.

அப்புசாமி தண்ணீர் அதிகமாகி விட்ட உப்புமா மாதிரி தளரத் தளர நடந்து வருவதைப் பார்த்ததுமே, அவனுக்குத் திக்கென்றது. ‘என்ன உதவி கேட்க வருகிறாரோ?’ என்று பயத்துடன் நெளிந்து குழைந்து,

‘வாங்கோ அண்ணா, வாங்கோ வாங்கோ’ என்று வரவேற்றான்.

”டேய்! நான் தாத்தாடா? அண்ணா பண்ணிட்டியே” என்றவர், ”நீ காண்ட்டீன் காண்ட்ராக்ட் எடுத்ததையே சொல்லலையே” என்றார்.

”இப்பத்தான் தாத்தா ஆரம்பிச்சிருக்கேன் சபாக்காரார்களோட நெளிவு சுளிவு தெரியலே. நமக்கு ஏதாவது ஒரு பட்டம் கிட்டம் இருந்தால் தேவலை, ‘எழில் சுவை ஏந்தல்’ அப்படி இப்படின்னு. பாருங்க வியாபாரம் டல் அடிக்குது. காரியதரிசிகளும் காமா சோமான்னு கச்சேரி ஏற்பாடு செய்யறாங்க.”

அப்புசாமிக்கு பக்கென்றது.

சீலை இல்லேன்னு சித்தாத்தாள் வீட்டுக்குப் போனாளாம். அவள் ஈச்சம் பாயைக் கட்டிகிட்டு எதிரே வந்தாளாம், கதையாயிருக்குதே என்று எண்ணிக் கொண்டார்.
தான் வந்த விஷயத்தை உடனே கூறாமல், ”அடே ரசம்! உனக்கு ஒரு தொழில் ரகசியம் சொல்றேன். காண்ட்டீன்களிலே பலகாரத்தை விட, போர்டுலே பலகாரப் பெயர்களை எழுதி வைக்கிறது ரொம்ப முக்கியம்டா.. என்னவோ ரயில்வே ஸ்டேஷன்லே ரயில் புறப்படுகிற நேரம் மாதிரி இப்படி டல்லா எழுதி வெச்சிருக்கியே… எவண்டா இதைப் படிப்பான். மொதல்லே கலர் கலரா சாக்பீஸ் வேணும்.. நான் எழுதறேன் பார்…” என்று அவன் பிஸினஸில் தனக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார்- இரண்டொரு மக்பூல் பூரிகளை அநாயாசமாக உள்ளே தள்ளிக் கொண்டு.

”இன்னிக்கு என்னடா, தயிர் காரா பூந்தியா? கொடு சாக்பீஸை.”என்று சாக்கட்டியை வாங்கி போர்டில் எழுதினார்.

‘தயிர் காரா பூந்தியா? அது என் உயிர் காராபூந்தி’ என்கிறார் ரஜினி. நீங்களும் சாப்பிட்டுப் பார்க்கலாமே’ என்று வண்ண வண்ண எழுத்துக்களில் எழுதி வைத்தார்.

”தாத்தோவ்!” என்றான் ரச குண்டு ”ரஜினி அப்படிச் சொல்லலையே. வம்பு வரப் போறது தாத்தா மறுப்பு, கிறுப்பு விடப் போகிறார்.”

”போடா பைத்தியக்காரா” என்று சிரித்தார் அப்புசாமி. ”ரஜினி ரொம்ப பிஸி. உன் காரா பூந்தி விஷயத்தையெல்லாம் மறுக்க அவருக்கு டைம் கிடையாது.. புரியுதா?”

”எப்படித் தாத்தா இவ்வளவு புத்திசாலியானீங்க..?” தாத்தாவைப் பழைய வாஞ்சையோடு கட்டி அணைத்துக் கொண்டான் ரசம்.

அன்றைய தினம் காண்ட்டீனில் தயிர் காரா பூந்தி பிய்த்துக் கொண்டு போயிற்று. கச்சேரி செய்ய வந்த திருவெம்பூர் பஞ்சாபகேச பாகவதர் கூட முழு நேரமும் காண்ட்டீனி லேயே தங்கிவிட்டரே தவிர கச்சேரி மேடைக்கே போகவில்லை. இதை அறிந்து பெரும்பாலோர் சந்தோஷப் பட்டார்கள்!

அப்புசாமி பலகையில் இஷ்டத்துக்கு எழுதித் தள்ளினார்.

கவர்ச்சிப் புயல் நமீதா செய்த குலோப் ஜாமூன்!
கிளுகிளு ரவா தோசை! என்ன கிளு கிளு?
ஆறாம் நம்பர் மேஜையில் காண்க!

பிரபல இசை விமரிசகர் ஒருத்தர். ஒரு மாலை ஏட்டில், சபா நிகழ்ச்சிகள் பற்றி இவ்வாறு குறித்திருந்தார் கச்சேரியினும் இனிது காண்ட்டீன். அதனினும் இனிது அறிவிப்புப் பலகை. அந்தக் கை எழுதியதைப் படித்தால் எல்லாருக்கும் வந்துவிடும் மசக் கை!’

எதிர்பார்த்ததைவிட பலகார அறிவிப்புகள் பரபரப்பு ஏற்படுத்தியதன் காரணமாக ரசகுண்டுவின் இசை அருவி காண்ட்டீன் நன்றாக சூடு பிடித்துக் கொண்டு விட்டது.

”தாத்தாவ், உங்க பத்து விரலுக்கும் மோதிரம்தான் செய்து போடணும், உங்களாலே சபாவுக்கு நல்ல பேரு!” என்றான் ரசகுண்டு.

”டேய் ரசம்! என் விரலுக்கு மோதிரம் வேண்டாண்டா.. எனக் கொரு பொன்னாடை - கொஞ்சம் ஹை கிளாசா பார்த்து வாங்கி போர்த்திட்டீங்கன்னாப் போதும். மேடை ரொம்ப முக்கியம். அதை விட முக்கியம், எங்க வீட்டுக் கியவியை அந்த விழாவுக்குக் கூப்பிடணும்.”

சீதாப்பாட்டிக்கு ராத்திரித் தூக்கம் போச்சு.

அரசியல் பிரமுகர் சுப்ரமணிய சாமியின் தலைமையில் அப்புசாமிக்கு ‘இசை அருவி’ சபாவில் இன்னும் இரு தினங்களில் பொன்னாடை போர்த்தப்பட்டு விருது வழங்கப் படும் என்று அழைப்பிதழ் அறிவித்தது.

விருது கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. வடமொழிச் சொற்களில் விருது இருந்தால்தான் விசேஷம் என்று எண்ணி ரசகுண்டு தன் வீட்டருகே இருந்த ஒரு புரோகிதரிடம் கலந்தாலோசித்து ’நாஷ்டா ஆலோசக நவமணி’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்திருந்தான்.

”ஹெல் வித் யூ” என்று சீதாப் பாட்டி தலையில் அடித்துக் கொண்டாள். ”நாஷ்டா, கீஷ்டான்னெல்லாம் உங்களுக்குப் பட்டம் தேவை தானா? கேவலமாத் தெரியலை? நீங்கள் பொன்னாடையே போர்த்துக்க வேணாம். ஐ ஷல் டூ ஹண்ட்ரட் நமஸ்கார்ஸ் டு யூ.. யு ஹாவ் வன் என்று ஒப்புக் கொள்கிறேன்” என்றாள்.

ஆனால் அப்புசாமி சம்மதிக்கவில்லை. ”சபதம்னா சபதம்தாண்டி! மேடையிலே நான் பொன்னாடை போர்த்துண்டு ஜிலுஜிலுன்னு மின்னப் போறேன். நீ என் காலிலே விழுந்து எல்லார் எதிரிலும் நமஸ்காரம் பண்றே!”

பஸ்ஸர் கிரீச்சிட்டது. சீதாப்பாட்டி எரிச்சலுடன் எழுந்து கதவைத் திறந்தாள் பகல் தூக்கத்தைப் பாழடிக்க வந்த பாதகன் யார்?யாரோ ஒரு ஸேல்ஸ் வாலிபன் கழுத்திலே டை. முகத்திலே செயற்கையான ஆர்வம்.

”ஸாரி மேடம்! ஐந்தே வினாடிகளிலே எந்த ஹெளஸ்ஹோல்ட் பொருள்களையும் ஒட்டிவிடும். அப்புறம் பிய்த்தெடுக்கவே முடியாது ‘இன்ஸ்டன்ட் ·பிக்ஸ்’ ஒரு டியூப் பன்னிரண்டே ரூபாய். கூட ஒரு ஸ்பூன் தர்றோம்.”

”கெட் லாஸ்ட்! என்று சீதாப்பாட்டி கதவை அடித்து சாத்தி விட்டு படுக்கைகுத் திரும்பினாள்.

அப்புசாமியை ரசகுண்டு வெள்ளை வெளேர் ஜிப்பாவும் வேட்டியுமாக அலங்கரித்தான்.

”தாத்தாவ், சுப்ரமணியசாமிக்குத் தமிழ் நல்லாப் பேச வராது. சமயத்துலே மரியாதை குறைஞ்சு ‘அவன் இவன்’ என்று கூடப் பேசுவார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்க இப்போதைக்கு இவர்தான் நம்ம விழாவுக்குக் கிடைச்சார்.. சமாளிப்போம்,” என்றான்.

”சீதேக் கிழவியையும் முன் வரிசையிலேயே உட்கார்த்தி வை…தலைவர் சாமி எனக்குப் பொன்னாடை போர்த்தறதை அவள் வயிறு எரிய எரியக் கண் எரிய எரியப் பார்க்கணும்..” என்றார்.

இசை அருவி சபா அரங்கம் சிறியதாக இருந்ததால் அலங்காரம் செய்ய சதியாயிருந்தது.

அப்புசாமி ஹாலுக்கு கம்பீரமாக வந்தார். சீதாப்பாட்டி மிக மரியாதையுடனும் வணக்கத்துடனும் எழுந்து நாற்காலி ஒன்றை அவருக்கு நகர்த்திப் போட்டாள்.

‘கெயவிக்குப் பயம் புடிச்சிகிட்டுது.. எப்படி கும்பிடு போடறாள். எவ்வளவு மரியாதை.’

முன் வரிசையில் அப்புசாமியும், அவரருகே சீதாப்பாட்டியும் அமர்ந்திருந்தனர்.

அப்புசாமி பெரிய மாநாட்டுத் தலைவர் மாதிரி சீதாப் பாட்டியின் தலைக்கு அருகே தன் தலையைச்
சாய்த்து அவள் காதருகே பேசினார்.

”இன்னாடி கெய்வி! இன்னாவோ வாடை வரலை? உன் குடல் வெந்து கும்பி கருகுதோ?”

சீதாப்பாட்டி மெலிதாகச் சிரித்தாள்.

”அப்ஸல்யூட்லி ஐ ஹாவ் நோ இல் ·பீலிங்ஸ் டுவார்ட்ஸ் யூ.. உங்கள் வெற்றி. என் வெற்றி நீங்க மேடை ஏறப் போகிற நிகழ்ச்சியைப் பார்க்க நான் ஈகர்லி அவெய்ட்டிங்..”
மைக்கில் சபாக் காரியதரிசி அப்புசாமியை அழைத்தார். ”மதிப்புக்குரிய விழா நாயகர் ஸ்ரீ அப்புசாமி அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்.”

பலத்த கரவொலி.

சீதாப்பாட்டியைப் புழுப் போல அப்புசாமி பார்த்தவாறு நாற்காலியிலிருந்து எழுந்தார். எழுந்தார் என்று சொல்ல முடியாது. எழுந்திருக்க முயன்றார் என்பதே சரி. ஆனால் எழுந்திருக்க முடியவில்லை.

”அட இஸ்கி, இன்னடா சேர் இது!” என்று முணுமுணுத்தவாறு சற்றுக் கூடுதலான பலத்தைப் பிரயோகித்து எழப் பார்த்தார். ஊஹ¤ம். ஒரு கால் அங்குலம் கூட எழ முடியவில்லை.

தம் கட்டி எழப் பார்த்தார் பிரயோசனமில்லை.

மேடையிலிருந்து காரியதரிசி மூன்றாம் முறையாக அழைத்தார் ”அப்புசாமி அவர்கள் உடனே மேடைக்கு அழைக்கப்படுகிறார்.

”பெரியவருக்கு சிரமம் வேண்டாம். அவன்கிட்டே நானே போறேன்” என்று தலைவர் சாமி பொன்னாடையுடன் கீழே இறங்கி அப்புசாமியிடம் வந்தார்.

அப்புசாமியால் அப்போதும் எழ முடியவில்லை. அவரது நாற்காலியில் சீதாப்பாட்டி சாமர்த்தியமாகத் தடவி வைத்திருந்த இன்ஸ்டண்ட் ·பிக்ஸ் அப்புசாமியை எழுந்திருக்க அனுமதிக்கவே இல்லை.

ரசகுண்டு பல்லைக் கடித்தான். ”எந்திருச்சி நில்லுங்க தாத்தா..” அப்புசாமியால் முடியவில்லை.

தலைவர் சாமி அப்புசாமி மீது பொன்னாடையைப் போர்த்துவிட்டு விமானத்தைப் பிடிக்க விரைந்தார்.

நாற்காலியை அறுத்து எடுத்தும் வெகு நாட்கள்வரை அப்புசாமியின் பின்புறத்தில் நாற்காலியின் அடிப் பகுதி ஒட்டிக் கொண்டேயிருந்தது. இன்ஸ்டண்ட் ·பிக்ஸ் பயங்கரப் பசைதான் போலிருக்கிறது.

பாட்டி மேற்படி கம்பெனிக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் எழுதினாள்.

”அடியே கிழவி! என் காலில் நீ விழுந்துதாண்டி ஆகணும். நான் பொன்னாடை போர்த்துக் கொண்டேனா இல்லையா? வாக்கு மாறாதேடி. அப்புறம் அடுத்த ஜென்மத்துலே ஏதாவது அரசியல் கட்சிக்குத் தலைவியாப் பொறப்பே!” என்று கூவினார் அப்புசாமி.

”மை டியர் சார். ஐ ஷல் எவர்கீப் அப் மை வோர்ட்ஸ். நீங்க மேடைக்கு வந்து பொன்னாடை போர்த்துக் கொள்ளவில்லையே. கீழேதானே போர்த்துக்கிட்டீங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.”

அப்புசாமிக்குக் கபகபவென்று எரிந்தது-வயிறும் வயிறு சார்ந்த பின் பகுதியும்!

ஜானகி
15-08-2012, 06:27 AM
ரொம்ப பசையுள்ள சம்பவம்தான்....! பாவம் தாத்தா....அந்தப் பசைக் கம்பனிக்குவிளம்பரப் பாட்டு எழுதிக்கொடுத்து மனதைத் தேற்றிக்கொள்ளச் சொல்லவும்...!

கலைவேந்தன்
16-08-2012, 01:04 AM
வாசித்துப் பாராட்டிய கீதம் ஜானகி ஆகியோருக்கு நன்றி. தொடர்கிறேன்.

கலைவேந்தன்
16-08-2012, 01:13 AM
3. தேடுங்க… தேடுங்க… தேடிக்கிட்டே இருங்க!

அடிக்கடி காணாமல் போகும் (ஆனால், அடிக்கடி கிடைத்துவிடும்) பொருள்களில் மூக்குக் கண்ணாடிக்குத்தான் முதலிடம்.

பெரும்பாலான நடுத்தர வயதுக் கணவன்மார்கள், தொலைந்துபோன தங்கள் மூக்குக் கண்ணாடிகளைத் தாங்களே தேடிக்கொள்ள வக்கத்து, வெட்கமில்லாமல் பெண்டாட்டிமார்களின் உதவியை நாடுவார்கள்.

அப்போது, மனைவியின் மூடு நன்றாக இருந்தால்–தான் ஆச்சு! ‘இங்கேதானே வழக்கமாக வைப்பீங்க..?’ என்று அனுதாபத்தோடு, நமது தேடும் முயற்சிக்கு உதவுவார்கள். அல்லது, உதவுவது போல நடிக்கவாவது செய்வார்கள்.

ஆனால் பெரும்பாலான சமயங்களில், முக்கியமாக பெண்கள் டி.வி. சீரியலில் மூழ்கியிருக்கும்போது தேடும் படலத்துக்கு உதவுவது அபூர்வம். மூக்குக் கண்ணாடியோடு சேர்ந்து கணவனே காணாமல் போயிருந்தாலும் கவலைப்படாத நேரம் அது.

விஷயம் தெரியாத சில கணவன்மார்கள், மனைவி-யா-கப்பட்டவள் கணவனின் அழைப்பு கேட்டதுமே, வாசுகி அம்மை கிணற்றில் குடத்தோடு கயிற்றை அந்தரத்தில் அப்படியே விட்டுவிட்டு விரைந்து வந்தது போல் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ரொம்பத் தப்பு.

நீங்கள் அசிரத்தையாக ஒரு பொருளைத் தொலைத்து-விட்டு, அதை மனைவியைத் தேடச் சொல்லிக் கோபிப்பது ஆணாதிக்க ரகத்தில் சேர்ந்தது. தொலைய வீட்டில் ஆயிரம் இடம் இருக்க, சோபாவில் உட்கார்ந்திருக்கும் மனைவியின் கீழேதான் தன் கண்ணாடி சிக்கிக்கொண்டு இருக்கும் என்பது போலச் சில கணவன்மார்களுக்குத் தீராச் சந்தேகம் வந்து, ‘‘கொஞ்சம் எழுந்துக்கிறியா?’’ என்று தொந்தரவு செய்வார்கள். ‘‘சீ! உருப்படியா ஒண்ணு பார்க்கவிடறது இல்லே’’ என்று வெறுப்புடன் எழுந்து, விருட்டென்று தரையில் உட்கார்ந்துகொள்வாள் மனைவி.

இந்தச் சின்ன விஷயமே, 18 நாள் நடந்த பாரதப் போராகவும் மாறச் சாத்தியக் கூறுகள் உண்டு.

‘‘உங்க கண்ணடி மேலேதான் நான் தினமும் உட்காரு-வேனாக்கும்? எனக்கு அவ்வளவெல்லாம் மூளை கெட்டுப் போயிடலே!’’

‘‘எழுந்திருன்னா எழுந்திரேன். டி.வி&யிலே அவங்-கெல்லாம் எங்கேயும் ஓடிப் போயிடமாட்டாங்க. ஹ¨ம்… உடம்பை அசைக்கிறதுக்கு அவ்வளவு சோம்பேறித்தனம்!’’

‘‘சே! நல்ல ஸீன் போயிண்டிருக்கு. அதுக்குள்ளே ஆயிரம் பிடுங்கல்! இம்சை பண்ணாம கொஞ்சம் இருங்க. இது முடிஞ்சதும் வந்து தேடித் தர்றேன்!’’

‘‘நான் செத்தாக்கூட நீ டி.வி. சீரியலை முடிச்சுட்டுத்-தானே அழவே வருவே! அப்படி என்ன டி.வி. மோகமோ! இப்பவே அதை ஒடைச்சு நொறுக்கிடறேன் பார்!’’

‘‘தாராளமா நொறுக்குங்களேன். எனக்கென்ன வந்தது? உங்க பணத்துக்குதான் கேடு! நான் எதிர் வீட்டிலே போய்ப் பார்த்துக்கிறேன்.’’

‘‘போவடீ போவே, நான் இளிச்சவாயனா இருந்தா!’’

‘‘இதப் பாருங்க, கன்னாபின்னான்னு பேசினீங்கன்னா, அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.’’

‘‘இப்ப மட்டும் அப்படி இருக்கிறதா மனசுக்குள்ளே நினைப்பா? எழுந்திருடீன்னா… வார்த்தைக்கு வார்த்தை எதிராடிண்டு..!’’

அவள் வாய்மூடிய மௌனம், கணவனின் முறைப்பில் சூடு ஏற்றுகிறது. எட்டி ஒரு உதை & டீபாயை! அதன் மேலிருந்த பூ ஜாடி… அது இது எல்லாம் கீழே விழுந்து சிதறல். அப்போதும் மனைவியின் அசையாத நிலை.

கணவன் சட்டென்று போய், பட்டென்று டி.வி&யை அணைக்கிறான்.

அவள் விருட்டென்று எழுந்து, ‘‘சீ! மனுஷங்க இருக்கிற குடும்பமா இது..!’’ என்று விக்கலும் விசும்பலுமாகப் படுக்கை அறைக்குள் போய்க் கதவைச் சாத்திக்கொண்டு படுத்து-விடுகிறாள்.

கணவனின் கண்ணாடி தேடும் விடா-முயற்சி தொடர்கிறது… தொடர்-கிறது… தொடர்ந்து கொண்டேஏஏஏ இருக்-கிறது.

தேடுவது என்பது உயிரினங்கள் அனைத்துக்குமே இயற்கையாக உள்ள இயல்பு. மாடுகள்கூட நடந்து-கொண்டே இரை தேடும். பின்னால் பால்காரன் சாவகாசமாகக் குவளையும் கையுமாக வருவான். அவனது மாடு அவனை வழிநடத்திச் சென்றவாறு, சாலையின் பிளாட்பாரத்தில் ஏதாவது கிடைக்குமா என்று தேடியவாறு போகும். செயின் போட்டுப் பிடித்துக் கொள்ளாமல் இருந்தால், சகல ஜாதி நாய்களும் குப்பைத் தொட்டியில் எதையாவது தேடாமல் கடக்காது.

கிரெடிட் கார்டு தொலைந்தால் சங்கடம். கிரெடிட் கார்டைப் பத்திரமாகப் பர்ஸில் வைத்துக்கொள்வது வழக்கம். அந்தப் பர்ஸே காணாமல் போனால்? ‘தெய்வமே கலங்கி நின்னா…’ கேஸ்தான்!

வீட்டுச் சாவி தொலைந்தாலும் தேடித்தான் ஆக வேண்டும். பெண்ணுக்கு வரன் தேடுவதும் சிரமமானதே! இன்றைக்கு நெட்டில் பார்த்துப் பையனையோ, பெண்ணையோ தேடுகிறார்கள். விஞ்ஞானம் தந்த சௌகரியம் இது. ஆனால், நெட்டில் வீட்டுச் சாவியைத் தேட முடியாது.

யு.எஸ்ஸிலுள்ள பையனின் நடவடிக்கைகளை உள்ளங்கை நெல்லிக்கனி செல்போனில் பார்க்க-லாம். அவன் சுய சென்சார்வைத்துக்-கொண்டு நாகரிகமாகவே செல் போட்டோவுக்குப் போஸ் தருவான்… சாமி கும்பிடுவது போல, படிப்பது போல..! பின்னே, பாட்டில் அடிப்-பதை-யெல்லாமா காட்டு-வான்?

‘தேடாமலிருக்கச் சில யோசனை-கள்’ என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்-தேன். அல்லது, மொத்தப் புத்தகமுமே அந்த சப்ஜெக்டைப் பற்றித்தானோ? சரி, இப்போது அந்தப் புத்தகத்தை எங்கே போய்த் தேடுவது?

தேடுவது என்பது மனிதனின் ஆரோக்கியத்-துக்கு மிக அவசியம் என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்-கள். தேடுவது இதயத்தின் சோம்ப-லைத் தவிர்க்கிறதாம்.

‘மிஸ்ஸிங் பீட்’ என்று சொல்லக்கூடிய துடிப்புக் குறைவான இதயத்துடன் ஒருத்தர் டாக்டரிடம் சென்றார். லப்டப் என்று அடித்துக்கொண்டு இருக்கும் இதயம், நடுநடுவே ஒரு விநாடி நேரம் மௌனமாகிவிடும். சோம்பேறி வேலைக்காரன் நடுநடுவே ஓய்வெடுத்துக்கொள்வது போல, அந்த இதயம் அவ்வப்போது சற்றே கண் அசந்துவிடுமாம். உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், அத்தகைய இதயக்காரர்கள் டாக்டரிடம் போகவே செய்வார்கள்.

அவர்களுக்கு எங்கள் குடும்ப டாக்டர் சொன்ன ஒரு அபாரமான யோசனை… ‘‘உங்கள் மூக்குக் கண்ணாடியையோ டைரியையோ தொலைத்துவிட்டுத் தேடுங்கள். இதயம் சரியாகிவிடும்!’’

ஒரு பொருள் தொலைந்துபோனது தெரிந்தால், ‘ஐயோ… அதைக் காணோமே!’ என்றும், அதைத் தேடும்-போது, ‘ஐயோ… அது கிடைக்கணுமே!’ என்றும் இதயத்தில் ஒரு படபடப்பு ஏற்படுவது உண்டல்லவா? அந்தப் படபடப்பு, தூங்குகிற இதயத்தைத் தட்டி எழுப்பி, சுறுசுறுப்பாக இயங்கச் செய்யுமாம்.

ஆகவே, பூரண இதய ஆரோக்கியம் பெறவேண்டுமென்றால், அடையாள அட்டை, ரேஷன் கார்டு, கிரெடிட் கார்டு, வீட்டுச் சாவி, பால் கூப்பன், மூக்குக் கண்ணாடி இவை போன்ற தினப் படிக்கு முக்கியமான பொருள்-களை அடிக்கடி தொலைத்துவிட வேண்டும். அப்புறம், பதற்றத்துடன் தேட வேண்டும். யோகா, ஆழ்நிலைத் தியானம், உடற்பயிற்சி எதிலும் கிடைக்காத உடல் ஆரோக்கியம் இத்தகைய தேடலில் கிடைக்கும்.

‘‘எங்கேடா போய்த் தொலைஞ்சே மொட்டைக் கடன்காரா?’’ என்று கல்யாண வீட்டில், தங்கள் வால்பையனைத் தேடுகிற தாய்மார்களின் இதயம் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறதாம் – மொட்டைக் கடன்காரனைத் தொலைக்காதவர்-களைவிட!

கலைவேந்தன்
16-08-2012, 01:25 AM
4.அலங்காநல்லூர் அப்புசாமி

http://www.sirukathaigal.com/wp-content/uploads/2012/01/ALANGANALLUR.gif

“கொம்பைச் சீவறானா? எதுக்குடா, ரசம்?” பதறினார் அப்புசாமி.

ரசகுண்டு சுவாரசியமாகத் தட்டியில் எழுதிக்கொண்டே சந்தேகம் கேட்டான்.

“ஏன் தாத்தா, ‘வீர’வுக்கு ‘ற’ வா? ‘ர’ வா?”

இலக்கணப் பிழை பற்றிக் கவலைப்படும் நிலையில் அப்போது அப்புசாமி இல்லை. இலக்கணம் பிழைக்கிறதோ இல்லையோ, தாம் உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்.

“கொம்பை ஏண்டா சீவறான்? அதைச் சொல் முதலில்.”

ரசகுண்டு கையிலிருந்த பெயிண்ட்டிங் பிரஷ்ஷைத் தூக்கி எறிந்துவிட்டுக் கோபத்துடன் அவரருகே வந்தான். “வேலை செய்ய விடமாட்டீங்களே. உயிரோடிருக்கிற மாட்டுக் கொம்பை ஒருத்தன் எதற்குச் சீவுவான்? சீப்பு செய்யறதுக்காகவா சீவுவான்? மாட்டைப் பிடிக்கிற உங்கள் குடலைக் குத்தி உருவறதுக்குத்தான் சீவறான்.”

அப்புசாமிக்கு அப்போதே உருவு மயக்கமாகி விட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, “ஏண்டா ரசம். போட்டியிலிருந்து வாபஸ் வாங்க ஏதாவது வழியில்லையாடா? கொஞ்சம் யோசனை பண்ணுடா.” என்று கெஞ்சினார்.

“வாபஸா?” அதிர்ச்சியடைந்தான் ரசகுண்டு. “விடிந்தால் வீரப் போட்டி. இனிமேல் ‘செய் அல்லது செத்து மடி’தான் தாத்தா. நீங்க மாட்டைப் பிடித்துத்தான் ஆகணும். நான் தட்டியெல்லாம் எழுதியாச்சு. நீங்க தான் கரிமாட்டுக் கருவாயன்!”

அப்புசாமி அவசரமாகவும் ரோஷமாகவும் வாயைத் துடைத்துக் கொண்டார். “நான் ஏண்டா கரிமேட்டுக் கருவாயன்?”

“கரிமேட்டு இல்லே தாத்தா. கரிமாட்டுக் கருவாயன். கறுப்பான மாட்டைப் பிடிக்கப் போறீங்களில்லையா? அதுக்காக வீரப் பட்டம்!”
தான் எழுதிய விளம்பரத் தட்டியை அப்புசாமியின் முன் காட்டினான்.

சென்னையில் ஓர் அலங்காநல்லூர்! வீர விளையாட்டு! கரிமாட்டுக் கருவாயன். வீரர் அப்புசாமி விடும் சவால்! நமது பேட்டையின் திமிர் பிடித்த காளையின் கொட்டத்தை அடக்கப் போகிறார்! இன்றே கண்டுகளியுங்கள்!

அப்புசாமிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. “ஆமாண்டா, ரசம். இன்றே கண்டு களிக்கட்டும்! நாளைக்குன்னா செத்துப் போயிடுவேனில்லையா?”
தெருவில் பயங்கரமானதொரு செருமல் சத்தம் கேட்டது.

அப்புசாமி கலவரத்துடன், “என்னடா ரசம் சத்தம்?” என்றார். “போபால் காஸா?”

“போபால் காஸ¤மில்லை, நேப்பால் காஸ¤மில்லை. பொட்டுவோட பொலி காளைதான் செருமுது!” என்று வாசலுக்கு ஓடி, எட்டிப் பார்த்துவிட்டு வந்தான்.
“பொட்டுவோட பொலி காளையேதான். காலைக் காலை மண்ணில் அடிக்சுக்கிட்டுச் செருமுது! நீங்களும் ஒரு எதிர்ச் செருமல் கொடுங்க, தாத்தா! அப்பத்தான் அதுக்கு ஒரு பயம் இருக்கும்.”

அப்புசாமியின் கலவரக் கண்கள் மேலும் சிலோன் ஆயின.

ரசகுண்டு அவரருகே வந்து, அவரது ஜிப்பாவுக்குள் கை விட்டு, அவர் மார்பைச் சந்தனம் தடவுவது போல நீவி விட்டான்.

“என்ன தாத்தா, டீசல் ஜெனரேட்டராட்டமா மார்பு டங்கணக்கான் டங்கணக்கான்னு அடிச்சுக்குது. நாளைக்குப் பொலி காளையோடு மோதி, எப்படித்தான் அதை மண்டியிட வைக்கப் போறீங்களோ? பாட்டி வேறு உங்களைப் பெரிசா நம்பிக்கிட்டிருக்காள். இந்தத் தெருவைப் பிடித்த பீடையை நீங்கள் விரட்டி அடித்துவிடப் போறீர்களாம்.”

பெருமூச்சு விட்டார் அப்புசாமி. “அவள் நினைப்பாள்டா; நல்லா நினைப்பாள். நான் அல்லவா நாளைக்குச் சாகணும்!”

சீதாப்பாட்டியின் தெருவில் பால்காரப் பொட்டு என்னும் புள்ளி இருந்து வந்தான். எல்லாக் கட்சிக் கொடிகளும் அவனுடைய மாட்டுக் கொட்டகையில் ஸீஸனுக்குத் தகுந்தபடி பறக்கும். காலைச் சாய்த்துச் சாய்த்து நடப்பான். அரசியலிலும் நல்ல சாய்கால் உள்ளவன். ஆகவே, அவன் வம்புக்கு யாரும் போவதில்லை. பால் வியாபாரத்தைத் தவிர, பொலிகாளை விவகாரம் வைத்துக் கொண்டிருந்தான்.

பட்டப் பகலில் அந்தப் பொலி காளை செய்யும் கற்பழிப்பும் – அனுமதி பெற்ற கற்பழிப்பு – உடந்தையாக வில்லன்கள் கும்பல் போல் ஏழெட்டுச் சங்கிலி முருகன்கள், அந்தக் கற்பழிப்புக்குப் பலியாகும் பசு ஓடி விடாமல் ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொள்ள, பசு பலாத்காரத்துக்கு உள்ளாகும். சில பசுக்கள்சில வேளைகளில் நாலு கால் பிராணியா, எட்டுக்கால் பிராணியா என்று குழப்புகிற அளவு கீழே தரையோடு தரையாகச் சட்னி மாதிரி பொலி காளையால் அழுத்தப்பட்ட பதிப்பாகி, எலும்பு முரிந்து குற்றுயிரும் குலையுயிருமாய் – புத்தூர் போய்க் காலைக் கட்டிக்கொண்டு வருவதும் உண்டு.
இந்த அசிங்கங்கள் தெருவில் வேண்டாமென்று சீதாப் பாட்டி பல தரம் பால்காரப் பொட்டுவைக் கூப்பிட்டு எச்சரித்துப் பார்த்தாள்.
அவன் அவளை மதிக்கிறவனாக இல்லை. நீலக் காட்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

அப்புறந்தான் அலங்காநல்லுர் விவகாரத்தில் அப்புசாமி மாட்டிக் கொண்டார். அப்புசாமியின் போதாத காலந்தான், அவர் அலங்காநல்லூர் போய்ச் சல்லிக்கட்டு பார்க்க ஆசைப்பட்டது.

“எவனெவனோ வெள்ளைக்காரன் எல்லாம் வந்து வேடிக்கை பார்க்கிறான். வீர விளையாட்டு வீர விளையாட்டுன்னு…”

அலங்காநல்லூர் போகணுமா அலங்காநல்லூர்! நம்ம தெருவிலே நடக்கிறதே ஒரு நாஸ்ட்டி மெனஸ்! அப்ஸீனிடி டு த கோர். அந்தப் பால்காரப் பொட்டுவை
ஓர் அதட்டல் போட்டு அவனுடைய ஸ்டட் புல்லை வேறு எங்காவது கொண்டு போகச் சொல்லத் தில் இல்லாதவருக்கு, அலங்காநல்லூர் என்&icc; கேடு?” என்றாள் சீதா பாட்டி சுடச்சுட.

அப்புசாமி அதே சுடச்சுட, “பொட்டு என்ன பொட்டு அவனைப் பொளந்து வெச்சுடுவேன். காளை இன்னாம்மே காளை? இந்தப் பொலி காளையென்ன, இதனுடைய பாட்டன், முப்பாட்டன் காளையையெல்லாம் கீழே போட்டுப் பட்டுனு ஒரே மிறி மிறிச்சுக் காட்டறேன் பார்க்கறியா?” என்று கிரிகிரி காட்டினார்.
அவரது போதாத காலம், தெருப்பக்கம் அந்தச் சமயம் பார்த்துப் பால்காரப் பொட்டு போய்க் கொண்டிருந்தான். அவன் காதில் “பொலிகாளை, பொட்டு” என்று விழுந்தவுடன் ஓசைப்படாமல் உள்ளே வந்து, அப்புசாமியும், சீதாப்பாட்டியும் பேசியது முழுவதையும் எந்த வித நவீன “பக்கிங்” கருவிகளும் இல்லாமல், நேர் காது மூலமாகவே கேட்டுக் கொண்டுவிட்டான்.

“நீ ஆம்புளைன்னா, நம்ம பொலிகாளை மேலே கையை வைச்சிப் பார்ரா!” என்று ஏக வசனத்தில் பேச, அப்புசாமி மனைவியின் முன்னிலையில் தம் மானம் போவதா என்று ஓர் அவசர புத்தியில், “பந்தயமடா! மைதானத்திலேயே வேணுமின்னா ஏற்பாடு செய்! உன் பொலி காளையைப் பிடிச்சுக் காட்டறேன்” என்று கூவினார்.

இதற்குள் தெருவில் அக்கம் பக்கத்தினர் வேறு கூடி, அப்புசாமியின் தைரியத்தைப் பாராட்டி, ஊக்கம் கொடுத்து அவரைப் பலிகடாவாக்கி விட்டார்கள்.

போட்டி தினம். சூரியன் வழக்கம் போலச் சரியாகக் கிழக்கே உதித்துவிட்டுத் தப்பான பிளாட்பாரத்துக்கு வந்துவிட்ட இரயில் மாதிரி திருதிருவென்று விழித்தது.
நாம் ஒரு கால், லேட்டாக உதித்துத் தொலைத்து விட்டோமா? மாமூலாக நான் உதிக்கும் போது அப்புசாமி, கட்டிலில் துப்பட்டிக்குள் அல்லவா இருப்பார்?
இன்றைக்குக் குளித்து ஈரம் சொட்டச் சொட்டக் கண்ணை மூடி ஏதோ சாமி கும்புட்டுக் கொண்டிருக்கிறாரே! வாய் என்னவோ முணுமுணுக்கிறதே!

சீதாப்பாட்டி நெற்றிக் குங்குமத்தை அழுத்தமாக வைத்துக்கொண்டு வெளியே வந்தாள். முணுமுணுத்துக் கொண்டிருந்த அப்புசாமியின் அருகில் ஓசைப்படாமல் வந்தாள். “ஸ்பெஷலாக ஏதோ மந்த்ராஸ் சாண்ட் செய்கிறார் போலிருக்கிறது” என்று அவர் அருகே மதிப்புடன் நெருங்கினாள்.

அப்புசாமியின் உதடுகள் “ஆறிலும் சாவு, நூறிலும் சாவு…, ஆறிலும் சாவு, நூறிலும் சாவு….” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தன.

ரசகுண்டு, “பெப்பர பெப்பர பெப்!” என்று பெரிய ஊதலை ஊதிக்கொண்டு வந்து சேர்ந்தான். “தாத்தா! இப்பவே சொல்லிட்டேன். அப்பப்போ கைக்கு மண்ணு தடவிக்கணும். பார்த்தீங்களா, இந்தச் சின்னச் சிமிழைக் கையிலே வெச்சுக்கங்க. இதிலேதான் நீங்க ஜெயிக்கிற இரகசியமே இருக்கு!”

அப்புசாமி ஆவலுடன் கண்ணைத் திறந்தார். “ஏண்டா ரசம்! ஏதாவது வசிய மையா? பொலிகாளை தானாக வந்து என் முன்னாலே மண்டியிட்டுடுமா?”

“தாத்தா! இந்தச் சிமிழ்லே இருக்கிறது மந்திரக் களிம்பு இல்லை. ரோஜனம் தெரியுமா, ரோஜனம். அந்தப் பொடி. கைக்குத் தடவிக்கிட்டா நல்லா கிரிப் இருக்கும். குரங்குப்பிடி மாதிரி கப்புனு கொம்பைப் பிடிக்கிறீங்க. மளுக்! ஒரே திருப்பு. லெப்டுலேயோ, ரைட்டுலேயோ, லாரிக்காரன் ஸ்டியரிங்கை ஒடிக்கிற மாதிரி ஒரே ஒடி! மளுக்! மாடு காலி!”

அப்புசாமி ரோஜித்தவாறே ரோஜனத்தை வாங்கிக் கொண்டார். “அடியே சீதே! நான் மாட்டைப் பிடிச்சுத்தான் ஆகணுமா? நீ கற்புள்ள பொம்மனாட்டி தானே? ஏதாவது அவ்வையார் மாதிரி ஒரு பாட்டுப் பாடி மழை, புயல், குளிர் வரவழைக்க முடியுமா, பாருடி! கிரிக்கெட் மாட்சும் போதெல்லாம் அந்தக் காலத்திலே நம்ம ஊர்ப் பத்தினிகள் மழை வரவழைச்சு எத்தனையோ ஆட்டத்தை டிரா பண்ணியிருக்காங்க!”

சீதாப் பாட்டி சிரித்தாள். “உங்கள் வீரத்தைக் காட்ட சந்தர்ப்பம் கிடைச்சதுன்னு யூ ஷ¤ட் பி ஹாப்பி. ரசம், எத்தனை மணிக்குப்பா மைதானத்துக்கு மாடு வருது? நிறையப் பேர் மாட்டுக்கு மாலை போடுவாங்களில்லையா? என் சார்பாக ஒரு மாலை தர்றேன், போட்டுடுப்பா.”

அப்புசாமி அலறினார். “சீதேய்! அடியே கியவி! நீ போடற மாலை மாட்டுக்கு இல்லேடி! என் மரணத்துக்கு!”

“ஆல் ரைட்! எனக்கு இன்னிக்கு வேலை இருந்தாலும் கட்டாயம் மைதானத்துக்கு வந்துடறேன். ஸீ யூ.”

“சீதே… என்னை நீ ஸீ பண்ண முடியாதுடி. என் குடலைத்தான் நீள நீளமாய் மைதானம் பூரா வடாம் பிழிந்தது போல் பார்க்கலாம்.”

மைதானம், கும்பல், குதூகலம் – அப்புசாமி நீங்கலாக.

ரசகுண்டு தேர்ந்தெடுத்த சில இசைத் தட்டுகளைப் போட்டுக் கொண்டிருந்தான்.

கண்டசாலா பாடிக்கொண்டிருந்தார்.
“துணிந்தபின் மனமே
துயரம் கொள்ளாதே…”

அப்புசாமிக்கு அத்தனை படபடப்பிலும் ஆறுதலாக இருந்தது. ‘கண்டசாலா நல்ல மனுஷன்! கொல்லாதே, கொல்லாதேன்னு அனுதாபமா பாடறார். ஆனால், அது அந்தப் பொலி காளைக்குப் புரியுமா? கொல்லாது விடுமா?’

திடீரென்று அவர் மூக்குக்கிட்டே ஓர் உஷ்ண வீச்சு!

பொட்டுவின் பொலிகாளை! அவருக்குச் சரியாக ஆறடி தூரத்தில்.
கழுத்து நிறைய மாலைகளைப் போட்டுக் கொண்டு, காலால் மைதானத்து மண்ணைக் குழி பறித்தவாறு, அவரைப் பார்த்து ஆயிரம் மில்லி அடித்துவிட்டு வந்ததைப் போலச் சிவப்பாக முறைத்தது.

பால்காரப் பொட்டு தன் கையிலிருந்த கயிற்றை எந்த நிமிஷத்திலும் விட்டு விடலாம். தாரை, தப்பட்டை, மைக், கை விசில், குலவை, டப்பாங்குத்து!

பால்காரப் பொட்டு அப்புசாமியைப் பார்த்து ‘உய்ய்’ என்று ஒருவிசில் அடித்தான். “யோவ்! வஸ்தாத்! வுடட்டுமாய்யா கயிற்றை!”

வாய் வார்த்தை வாயிலிருக்கும் போதே காளையின் கயிற்றை விட்டுவிட்டான்.

அப்புசாமி பழங்கால சந்திரபாவுவாக மாறி ஜகா வாங்குவதற்குள், காளை வேகமாக வந்து அவரை ஒரு மோதல்…

“ஆ! சீதே!” என்று அவர் அலறினதுதான் தெரியும். அதற்குள் இரண்டு மூன்று போலீஸ் ஜீப்புகள் மைதானத்துக்கு வேகமாக வந்தன.

அடுத்த நிமிடமே அவை பொலிகாளையைச் சுற்றி வளைத்துக் கொண்டு, காளை எங்கேயும் ஓட முடியாமல் செய்துவிட்டன. ஜீப்பிலிருந்து இறங்கிய சிறிய போலீஸ் பட்டாளம், காளையின் கயிற்றைப் பிடித்து, அதை அருகிலிருந்த மரத்தில் கொண்டு கட்டியது. சில நிமிஷங்களில் பால்காரப் பொட்டு கை கட்டிக்கொண்டு வினயமாக வந்து நின்றான்.

“தப்பு அவர் மேலதாங்க. அவர் தானுங்க சவால் விட்டார். டீ சாப்பிடறீங்களா? போர்ன்விடாவா?” என்றான் போலீஸ் அதிகாரியிடம் – சத்யராஜ் பாணியில்.
போலீஸ் அதிகாரி சொன்னார். “நாங்கள் இப்போது வந்தது, நீங்க ஏன் இங்கே ஜல்லிக்கட்டு நடத்தினீங்க என்பதை விசாரிக்கிறதுக்கு அல்ல. அதற்குத்தான் நீங்க ஏற்கனவே பர்மிஷன் வாங்கியிருக்கீங்களே. வைரக் கம்மல் திருட்டு விஷயமா விசாரிக்க வந்திருக்கிறோம். உன் பொலிகாளை கழுத்திலேயிருக்கிற மாலைகளையெல்லாம் நீயே கழற்று! நீ நிரபராதின்னா உன்னை விட்டுடிறோம். இல்லேன்னா… உன்னையும் உன் பொலி காளையையும் அரெஸ்ட் பண்ணறதைத் தவிர வேறு வழியில்லை.”

“சார், மில்லி கில்லி அடிச்சீட்டு வந்தீங்களா…?”

உதட்டில் ஒரு தட்டுத் தட்டினார். “இது சினிமா போலீஸ் அல்ல, அசல் போலீஸ். கழற்றுப்பா முதலிலே மாலைங்களை.”

பால்காரப் பொட்டு, ஆயுளில் முதல் தடவையாகச் சற்றே பயத்துடன், தன் காலையின் கழுத்தில் பலரும் போட்ட மாலைகளைக் கழற்றினான். ஒரு குறிப்பிட்ட

மாலையில் சிறிய துணி முடிச்சு!

இன்ஸ்பெக்டர் அதை எடுத்துப் பிரித்தார். ஒரு ஜோடி வைரத் தோடுகள் பளபளத்தன.

“சார்! சார்! எனக்கு ஒண்ணும் தெரியாது, சார்!”

அப்புசாமி கால் கை கட்டுடன் படுத்திருந்தார். “சீதே! உன்னை நான் புரிஞ்சுக்காத முட்டாள்! பொலி காளை மாட்டுக்கு நீயும் மாலை போடப் போறேன்னதும் எனக்கு உன் மேலே எவ்வளவு ஆத்திரம் வந்தது தெரியுமா?” என்றார்.

“உங்கள் ஆத்திரம் நியாயமான ஆத்திரந்தான். நான் மாலைக்குள் என் வைரத் தோட்டை வைத்து, அதை மாட்டுக் கழுத்திலே போட்டுப் பால்காரப் பொட்டுவை மாட்ட வைப்பேன் என்பதை, புவர் மேன், நீங்கள் எப்படி ஊகித்திருப்பீர்கள்? ஆனாலும், நான் கொஞ்சம் ஓவராகவே ரிஸ்க் எடுத்துக் கொண்டுவிட்டேன். சப்போஸ், போலீஸ் மட்டும் காளையை ரவுண்டப் பண்ண இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வந்திருந்தால் என் நெற்றிப் பொட்டு கதி என்னாயிருக்கும்?”

அப்புசாமி அலுத்துக் கொண்டார். “உன் நெற்றிப் பொட்டுதான் உனக்குப் பெரிசு! என் குடல் என்னாயிருக்கும்னு கவலைப்படறியா?”

கலைவேந்தன்
16-08-2012, 01:35 AM
5.விடாப்பிடி

http://www.appusami.com/HTML/HTMLV5/IMAGES/APPUS14.gif

“எனக்கு ஏதாவது லெட்டர்ஸ் உண்டா?” என்று அப்புசாமியைச் சீதாப்பாட்டி விசாரித்தாள்.

அவர் ஒரு இன்லண்ட் லெட்டரைத் தப்பாகக் கிழித்துவிட்டு, எதை, எந்தப் பகுதியோடு இணைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருந்தார்.

“எப்போதும் உங்களுக்கு ‘ஹேஸ்ட்’ தான். இப்படி தாறுமாறாகவா கிழிப்பது?” என்று அதை வாங்கிச் சரிசெய்து படித்தவள் அடுத்த கணம், “ஆ! கெட்டது குடி!” என்று கூவியவாறு சோபாவில் இடிந்துபோய் உட்காந்துவிட்டாள்.

மலை குலைந்தாலும், நிலைகுலையாத தன் மனையாட்டியைக் கலகலத்துப் போய் உட்கார வைத்த அந்தக் கடிதத்தை மனத்துக்குள் பாராட்டியவராக
அப்புசாமி, “என்ன கடிதம்? யாரிடமிருந்து? என்றார்.

“ஜேங்க்ளூர் பெய்ராம்! ஜேங்க்ளூர் பெய்ராம்…’ இந்த் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் சீதாப்பாட்டியால் பேச முடியவில்லை. அவள் கைகள் நாதசுரம் இல்லாத நாதசுர உறை போலத் தொளதொளத்துத் தொய்ந்துவிட்டது. மங்கோலியரைத் தோற்கடிக்கும் அவள் மஞ்சள் நிறமும் வெளிறியது.

மிகவும் துணிகரமான ஒரு பேய், தன் மனைவியைப் பின்பக்கமாக வந்து ஓர் அறை விட்டதோ என்று அப்புசாமி ஐயுற்றார்.

“சீதே…சீதே…” என்று பதறியவராக ஓடிப்போய்ச் சிறிது நீர் கொண்டுவந்து முகத்தில் தெளித்தார்.

‘ஜேங்க்ளூர் பெய்ராம்!’ என்பது என்ன? அந்த வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு மனைவி மயக்கமடைவானேன்?

சீதாப்பாட்டிக்குத் தன் நினைவு திரும்பியதும் அவருக்கு விடை கிடைத்தது.

‘ஜேங்க்ளூர் பெய்ராம்!’ என்று சீதாப்பாட்டி சொன்னது தவறு. திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் வாய் குழறிச் சொல்லிவிட்டாள்.
பெங்களூர் ஜெயராம் என்பதே சரியான வார்த்தை.

தன் நினைவு வரப்பெற்ற சீதாப்பாட்டி விளக்கினாள். “நம்ம ஹெளஸ் ஓனர் இருக்கிறாரே பெங்களூர் ஜெயராம், அவர் இந்த வீட்டை விற்கப் போகிறாராம் யாருக்கோ! நாம் காலி செய்யவேண்டுமாம். உடல்நிலை ரொம்ப ஸீரியஸாக இருக்கிறதாம்.!

அதைக்கேட்ட அப்புசாமி முற்றிய அபன்டிஸைடிஸ் கேஸ் மாதிரி அலறித் துடிக்கத் தொடங்கினார்.

அடுத்த இரண்டு மூன்று நாள் அந்த வீட்டில் ஒரே ஷெனாய் வாத்திய ஒலிதான்-அதாவது சோக கீதம்தான்.

உற்சாகத்துக்கு ரேடியோவை அப்புசாமி போட்டால்கூடச் சீதாப்பாட்டி பாய்ந்துவந்து அணைப்பாள்.

புறக்கடையிலிருந்த கறிவேப்பிலை மரத்தை அவள் பாசத்துடன் தடவியவாறு சகுந்தலைபோல் பெருமூச்செறிந்தாள். அவள் கையால் நட்டுப் பெரிய மரமாக வளர்ந்தது அது.

பாட்டிகள் முன்னேற்றக் கழகத்துக்காக அமைத்த பாட்டிமிண்டன் கோர்ட் சீதாப்பாட்டியை,’ என்னிடம் யார் இனிமேல் விளையாடுவார்கள்?’ என்று கேட்டது. சீதாப்பாட்டி தான் வழக்கமாகக் காற்றாட மாடியில் உட்காரும் பிரம்பு நாற்காலியில் போய் உட்காந்தாள். அவள் கண்கள் கலங்கின. அப்புசாமிக்கெனத் தனியாக மாடியில் சொந்த செலவில் அமைத்த ‘அமைதிக் குடில்’கூடத் தன் மோனத்தைக் களைந்து சீதாப்பாட்டியை வினவியது: ‘எங்களை விட்டுவிட்டுப் போகப் போகிறாயா?’ என்று. சீதாப்பாட்டியின் கண்கள் கலங்கின.

அவள் கண்ணீரை அப்புசாமி பார்த்துவிட்டார். மனைவியின் தோளை ஆதுரமாகப் பற்றி, “அழுகிறாயா சீதே! எதற்கும் கலங்காத நீயும் கலங்கி விட்டாயா?” என்றார்.

சீதாப்பாட்டி கண்களைத் துடைத்துக் கொண்டாள். பெருமூச்சு விட்டபடி, “இல்யூஷன்! மியர் இல்யூஷன். இந்த வீடு என்றைக்கிருந்தாலும் நமக்கு வாடகை வீடுதான். இதை நமது ஓன் ஹெளஸ் மாதிரி நினைத்துக்கொண்டு நாம் இவ்வளவு நாள் இருந்துவிட்டோம். மாயை என்பது இதுதான் போலும்,” என்று எழுந்தாள்.

அப்புசாமி, “இந்த வீடு மாதிரி நமக்கு வேறு வீடு எங்கே கிடைக்கும்? இதை எல்லோரும் நம்முடைய சொந்த பங்களா என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாற்பது ரூபாய் வாடகை சொன்னால் ஒருத்தரும் நம்பக்கூட மாட்டார்கள். முப்பது வருடம் இதில் குப்பை கொட்டிவிட்டு, இப்போது எப்படி நாம் வேறு வீடு தேடுவது? வீட்டுச் சொந்தாக்காரப் பாவிக்கு இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது விற்கிற காலம் வர வேண்டுமா?” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

வீட்டுச் சொந்தக்காரர் கறுப்பா, சிவப்பா, சதுரமா, வட்டமா என்றுகூட அப்புசாமித் தம்பதிகளுக்கு இந்த முப்பது வருட காலத்தில் தெரியாது. அவர் பெங்களூரில் இருக்கிறார் என்பது மட்டும் தெரியும். மாதா மாதம் சீதாப்பாட்டி முதல் தேதி மணியார்டரில் வாடகைப் பணத்தை அவருடைய ஏஜண்டுக்கு அனுப்பி விடுவாள். அவர் உடனே ரசீது அனுப்பிவிடுவார்.

வெகு நேரம் இடிந்து போய் இருந்த அப்புசாமி, ‘பியூஸாக போகும் பல்ப்’ எரிவதைப் போலச் சட்டென்று ஒரு யோசனை வெளியிட்டு சீதாப்பாட்டியைப் பிரமிக்க வைத்தார்.

வீட்டுக்காரர் வேறு யாருக்கும் விற்கு முன் ஏன் நாமே அதை அவரிடம் விலைக்கு வாங்கிக் கொள்ளக்கூடாது?’ என்பதே அந்த யோசனை.

பெங்களூர் எக்ஸ்பிரஸ் மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் துரிதமாகச் சென்று கொண்டிருந்தது.

ஓடிக் கொண்டிருந்த ரயிலில் அப்புசாமி, கேட்கக் கூடாத கேள்வி ஒன்றைச் சீதாப்பாட்டியிடம் கேட்டு வைத்தார். “வீட்டுக்காரர் விலாசம் தெரியுமோ? நாம் வாடகை அனுப்பி வந்ததெல்லாம் அவரது ஏஜண்ட் விலாசத்துக்கல்லவா?” என்றார்.

சீதாப்பாட்டி, “சரி, அந்த ஏஜண்டைக் கேட்டால் போயிற்று. மாதா மாதம் எம்.ஓ. செய்து ஏஜண்ட் அட்ரஸ்தான் நமக்கு பை ஹார்ட் ஆயிற்றே? நீங்கள் வொர்ரி பண்ணிக் கொள்ளாதீர்கள். பேசாமல் என் பின்னோடு வாருங்கள்.” என்றாள்.

“பஹ¥த் அச்சா! எனக்கும் நல்லதாகப்போயிற்று. ‘சீதை இருக்கிற இடம் அயோத்தி!’ என்று நான் பாட்டுக்கு உன் பின்னாடியே வருகிறேன்.”

பெங்களூரில் வந்து இறங்கியதும் வீட்டுக்காரரின் ஏஜண்ட் முகவரியை வெகு சுலபத்தில் கண்டு பிடித்துவிட்டனர். இவர்கள் போன நேரம் ஏஜண்ட் அரை மிதப்பில் இருந்தார், அந்த அரை மிதப்பிலேயே இவர்களை வரவேற்று உபசரித்து மரியாதையெல்லாம் சரியாகச் செய்துவிட்டார். ஆனால் சீதாப்பாட்டி, “ஹெளஸ் ஓனர் அட்ரஸ் வேண்டும்? அவர் எங்கே தங்கியிருக்கிறார். அவரைப் பெர்ஸனலாகப் பார்க்க வேண்டுமே?” என்று கேட்ட போதுதான், ஏதோவொரு முகவரி உளறித் தொலைத்து விட்டார்.

ஏஜண்ட் கூறிய இல்லத்தைக் கண்டு பிடிப்பதில் அப்புசாமி தம்பதிகளுக்குச் சிரமம் ஏற்படவில்லை. வீட்டைக் கண்டு பிடித்த பின்புதான் எல்லாச் சிரமங்களும் ஏற்பட்டன.

மதுரை திருமலை நாயக்கர் மஹாலின் இளைய சகோதரனைப்போலப் பிரம்மாண்டமாக இருந்தது அந்தப் பங்களா. ஆனால், பங்களாவுக்குள் திருமலை நாயக்கரோ அல்லது வேறு ஆட்கள் யாருமோ இருப்பதாகத் தெரியவில்லை.

சீதாப்பாட்டி, “”பாலஸ் மாதிரி அல்லவா இருக்கிறது. எவ்வளவு பெரிய ஹால்,” என்று வியந்தவள், “குரல் கொடுங்கள்,” என்றாள்.

அப்புசாமி தன் கையிலிருந்த ஹாண்ட் பாக்கைக் கொடுத்தாரே தவிரக் குரல் கொடுக்கவில்லை. அவருக்கு அந்தப் பெரிய பங்களா இனம் தெரியாத பயத்தைக் கொடுத்தது.

“யாரோ திணறித் திணறி மூச்சு விடுகிற மாதிரி இல்லை?” என்று சீதாப்பாட்டி கேட்டாள்.

அப்புசாமி. “அது வேறு யாருமில்லை. நான்தான்…” என்றார் பின்னாலிருந்து.

“நீங்களில்லை. உங்களைத் தவிர இன்னும் வேறு யாரோ. நன்றாக உற்றுக் கேளுங்கள். ஏன் இப்படிக் கை காலெல்லாம் நடுங்குகிறது?” என்று கண்டித்தாள்.

மாடிப் பக்கமிருந்த அறை ஒன்றிலிருந்துதான் அந்த சத்தம் வந்து கொண்டிருந்தது.

சீதாப்பாட்டி அமைதியாக மாடிப்படி ஏறினாள். அப்புசாமியும், பயம் பின் தொடரத் தானும் பின் தெட்ர்ந்தார்.

அறையில் கண்ட காட்சி, சீதாப்பாட்டியை நெகிழ்வித்தது.

ஆஜானுபாகுவான ஒருவர் நோயாளியாகக் கண்மூடித்தனமாகப் படுத்துக் கிடந்தார். அவர் இருந்த நிலையை எந்தப் பச்சைக் குழந்தை பார்த்தாலும் அவர் இறந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லிவிடும்.

சீதாப்பாட்டி அப்புசாமியிடம், “தெரிகிறதா யார் என்று? கடிதத்தில் வந்த விஷயம் உண்மைதான். நமது ஹெளஸ் ஓனர்தான். கண்டிஷன் ரொம்ப ‘க்ரேவ்’ ஆக இருக்கும் போலிருக்கிறதே? இப்படி அனாதைக் கணக்காக கிடக்கிறாரே? நாம் என்ன செய்யலாம்?” என்றாள்.

“பேசாமல் திரும்பி விடலாம், “என்ற அப்புசாமி “இதெல்லாம் வம்பு சமாச்சாரம். ஆசாமியோ பணக்காரன் மண்டையைப் போடுகிற போது பக்கத்தில் நாம் இருந்தால் ஆபத்து. யாராவது வந்து நீங்கள் இரண்டு பேர்தான் அவருக்கு ஏதோ செய்து விட்டீர்கள் என்றால் என்ன செய்து?” என்றார்.

சீதாப்பாட்டி கோபித்துக் கொண்டாள். “சிச்சுவேஷனைக் கொஞ்சம் ஹ்யூமன் ஆங்கிளில் பாருங்கள். முதலில் போன் இருந்தால் ஏதாவது ஒரு டாக்டருக்குப் போன் செய்யுங்கள்.”

அப்புசாமி, அந்தப் பங்களாவில் டெலிபோன் இருக்குமிடம் தேடிப் போனவர், இரண்டே வினாடிகளில், “சீதா! சீதா!” என்று ஓட்டமும், நடையுமாய் வந்து அவள் கைகளைப் பற்றிப் பரபரவென்று இழுத்துக் கொண்டு போய் ஹாலில் இருத்தி, ஒரு பிரம்மாண்டமான புகைப்படத்தின்முன் நிறுத்தினார்.
அந்தப் படம் சாட்சாத் இறந்து கொண்டிருந்தவருடையது. ஹால் பெரியதா, அந்தப் படம் பெரியதா என்பதைக் கூறுவது அவ்வளவு எளிதல்ல. அந்தப் படத்துக்கு அடியில் கொட்டை எழுத்தில் ‘திவான் ரூபலிங்கம் பார் அட்லா’ என்று எழுதி இருந்தது.

சீதாப்பாட்டி மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டே, “நம்ம ஹெளஸ் ஓனர் பெயர் ஜெயராம் அல்லவோ? எ பிட் கன்·ப்யூஸிங்…ஒரு கால் இருவரும் ட்வின்ஸாக இருப்பார்களோ?” என்றாள்.

அப்புசாமி, “ட்வைனுமில்லை, கயிறுமில்லை. இந்த ஆள் யாரோ, நம்ம வீட்டுக்காரன் யாரோ!” என்றார்.

“இவர் யாராயிருந்தாலும் சரி, டாக்டரைக் கூட்டி வந்து வைத்தியம் பார்ப்பது நமது ட்யூடி!” என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டாள்.

நாலைந்து நாட்கள் சென்றன. அப்புசாமி தலையில் அடித்துக் கொண்டார், தமது பத்தினி ஏதோ ஒரு முன்பின் தெரியாத கிழவருக்கு சிசுரூஷை செய்வதைப் பார்த்து, ‘இதற்கா உன் கழுத்தில் கட்டித் தங்கத்தில் கெட்டித் தாலி கட்டினேன்?’ என்று பொருமிக் கொண்டார். “உன் சொந்த வீட்டுக்காரருக்குக்கூட இப்படிப் பணிவிடை செய்ய மாட்டாய் போலிருக்கிறதே?” என்றார் வாய்விட்டு.

“நேரோ மைன்டட்! நான்ஸென்ஸாகப் பேசாதீர்கள்! நிராதரவாக இருந்த கிழவருக்கு ‘காட் சென்ட்’ மாதிரி நாம் வந்து சேர்ந்தோம். அவர் உடம்பு இப்போது தான் தேறியிருக்கிறது. பேச்சும் வருகிறது. அவரைப் பற்றிய விவரம் தெரிந்து கொள்வோம். அவசரப்படாதீர்கள்,” என்று சமாதானம் செய்தாள்.

அதே நேரம் வாக்கிங் ஸ்டிக் ஊன்றி அவர்களை நோக்கியவாறு மெதுவே நடந்து வந்தார் உடல் தேறிய கிழவர்.

“டோன்ட் எக்ஸர்ட்! உங்களை யார் படுக்கையிலிருந்து எழுந்திருக்கச் சொன்னது? அடடா! இதற்குள் நடக்கிறீர்களே!” என்று சீதாப்பாட்டி விரைந்து சென்றாள் அவர் உதவிக்கு.

“அயம் ஆல்ரைட், ஆல்ரைட்!” என்று அவர் சமாதானம் சொன்னவாறு சோபாவில் சாய்ந்தது அப்புசாமிக்குப் பொறாமையாயிருந்தது.

சீதாப்பாட்டியை நோக்கிக் கும்பிட்ட கிழவர், “என்னைப் பற்றி விவரம் தெரிந்து கொள்ளாமலேயே எனக்கு இவ்வளவு தூரம் உதவின உங்கள் இரண்டு பேருக்கும் எப்படி நன்றி செலுத்துவதென்றே தெரியவில்லை. ஐ ஆம் எக்ஸ் திவான் அ·ப் பெய்ஜல்பூர். போன மாதம்தான் இங்கே செட்டில் ஆனேன். என் ஒரே
சன் போன வாரம் நான் எவ்வளவு தடுத்தும் கேளாமல் லண்டன் புறப்பட்டுப்போனான், மேல் படிப்புக்காக. அவனை வழி அனுப்பிக் கொடுத்துவிட்டு வந்தவன்தான், தடாலென்று விழுந்தேன். அப்புறம் பிரக்ஞையே இல்லை. அவனைப் பிரிந்த ஏக்கம்தான்…வேறென்ன?” என்றார்.

அப்புசாமி சீதாப்பாட்டியிடம் கிசுகிசு குரலில் கூறினார். “விழலுக்கு நீர் இறைத்த கதையாயிற்று. அப்போதே சொன்னேன், இந்த ஆள் வேறு யாரோ என்று. கேட்டாயா?”

‘உங்கள் கணவர் என்ன சொல்கிறார்?” என்று சீதாப்பாட்டியைத் திவான் கேட்டார்.

சீதாப்பாட்டி சமாளித்துக் கொண்டு “இது ரொம்ப விசாலமான பில்டிங்காயிருக்கிறதே, எப்படிப் பாவம் தனியாக இருக்கிறார் என்று கேட்கிறார்,” என்றாள்.

திவான் பெருமூச்சுடன், “எனக்கு இந்தப் பெங்களூர் போரடித்துவிட்டது என்று சென்னைப் பக்கம் ஷிப்ட் செய்ய யோசனை பண்ணிருக்கிறேன். சென்னையில்

ஒரு சின்ன பங்களா வாங்கியிருக்கிறேன். ஜெயராம் என்பவரை பார்த்துக்கொள்ள சொல்லியிருக்கிறேன். எனக்கு மிகவும் வேண்டியவர்.

அப்புசாமி வாயிலிருந்து “அட பழி! நீதானா அந்தப் பாவி!” என்ற வார்த்தை வெளிவந்து விட்டது. “சீதே, பாம்புக்கு பால் வார்த்த கதையாயிற்றே!” என்றார்.

சீதாப்பாட்டி, “டஸின்ட்மேட்டர்,” என்று கணவனை அடக்கிவிட்டு, துக்கத்தை அடக்கிக் கொண்ட சிரிப்புடன், “”இன்டீட்! வெரி ஸ்டிரேஞ்ச் மீட்டிங்! நாங்கள் சென்னையில் தர்ட்டி இயர்சாக எந்தப் பங்களாவில் குடியிருக்கிறோமோ அதைத்தான் நீங்கள் இப்போது வாங்கியிருக்கிறீர்கள். எங்கள் ஹெளஸ் ஓனரைச் சந்தித்து, ‘வீட்டை விலைக்கு விற்கக் கூடாது. அப்படியே விற்பதானாலும் எங்களுக்கே விற்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளவே புறப்பட்டு வந்தோம்’ வந்த இடத்தில் ராங் அட்ரஸால் உங்களை மீட்செய்யும்படி ஆயிற்று. ஒ. கே.! நாங்கள் போய் வருகிறோம்,” என்று எழுந்தாள்.

திவான் சிரித்தார். “ஒரு சின்ன சந்தேகம்…” என்றார். “என்னை நீங்கள் நோயாளியாக நினைத்தீர்களே தவிர, மனிதனாக நினைக்கவில்லை போலிருக்கிறது. எனக்கு உயிர்க் கொடுத்த உங்களுக்கு நான் அந்த மெட்ராஸ் ஹெளஸை இப்போதே கொடுக்கிறேன்!” என்றார்.

அப்புசாமி கனவோ என்று கண்களைப் பிசைந்து கொண்டார்.

சீதாப்பாட்டி அமைதியாக, “·ப்ரீயாக வாங்கிக் கொள்வது என் ஹஸ்பெண்டின் ப்ரஸ்டிஜுக்கு அழகல்ல. வீடு உங்களுடையதாகவே இருக்கட்டும். வாடகைக்கே நாங்கள் இருக்கிறோம். அப்படி நீங்கள் வேறு யாருக்காவது விற்பதாக இருந்தால் எங்களுக்கு முதல் ப்ரிபரென்ஸ் கொடுங்கள். அந்த ஆப்ளிகேஷனைச் செய்தால் போதும்,” என்று அப்புசாமியுடன் விடை பெற்றாள்.

தம்பதிகளை வாசல்வரை வழியனுப்பிக் கொடுத்தார். திவான்.

அப்புசாமி சீதாப்பாட்டியைப் பார்த்து, “சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் ஜெயித்துக் கொண்டு வந்து விட்டவள் மாதிரி நடை போடுகிறாயே?” என்றார் பொறாமையாக.

jayanth
16-08-2012, 07:34 PM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/35578.gif...படித்தேன். பரவசம் அடைந்தேன். மறுபடியும் படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி கலை...

கீதம்
16-08-2012, 10:51 PM
2. அப்புசாமியின் பொன்னாடை..



கட்டபொம்மன் கேட்ட மாதிரி சீதாப்பாட்டியை அவர் கேட்க ஆசைப்பட்டார். ‘நீ என்ன பாட்டுப்பாடினாயா? மிருதங்கம் வாசித்தாயா? வயலின் இழுத்தாயா? கடம் அடித்தாயா? கஞ்சிரா தட்டினாயா? தம்புரா மீட்டினாயா? அல்லது பாட்டுப் பாடிய பச்சைக் கிளிகளை மெச்சி உன் கிழட்டுக் கைகளைத்தான் தட்டினாயா? நீ ஒரு பன்னாடை, உனக்கேன் பொன்னாடை?’


படிக்கவுமே பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது. கட்டபொம்மனாய் அப்புசாமியின் அவதாரம் அருமை.




”இப்பத்தான் தாத்தா ஆரம்பிச்சிருக்கேன் சபாக்காரார்களோட நெளிவு சுளிவு தெரியலே. நமக்கு ஏதாவது ஒரு பட்டம் கிட்டம் இருந்தால் தேவலை, ‘எழில் சுவை ஏந்தல்’ அப்படி இப்படின்னு. பாருங்க வியாபாரம் டல் அடிக்குது. காரியதரிசிகளும் காமா சோமான்னு கச்சேரி ஏற்பாடு செய்யறாங்க.”


அறுசுவை அரசு மாதிரி எழில் சுவை ஏந்தல்!




‘தயிர் காரா பூந்தியா? அது என் உயிர் காராபூந்தி’ என்கிறார் ரஜினி. நீங்களும் சாப்பிட்டுப் பார்க்கலாமே’ என்று வண்ண வண்ண எழுத்துக்களில் எழுதி வைத்தார்.


கவர்ச்சிப் புயல் நமீதா செய்த குலோப் ஜாமூன்!
கிளுகிளு ரவா தோசை! என்ன கிளு கிளு?
ஆறாம் நம்பர் மேஜையில் காண்க!



விஷமம் தாளவில்லை. இதுதான் வியாபார தந்திரம்!


அப்புசாமி ஹாலுக்கு கம்பீரமாக வந்தார். சீதாப்பாட்டி மிக மரியாதையுடனும் வணக்கத்துடனும் எழுந்து நாற்காலி ஒன்றை அவருக்கு நகர்த்திப் போட்டாள்.


அப்பவே ஏதோ ஒரு சந்தேகம் தோன்றியது. பாட்டி சாதித்துவிட்டாளே...

சுவையான கதைப்பகிர்வுக்கு மிகவும் நன்றி கலைவேந்தன்.

கீதம்
16-08-2012, 11:06 PM
3. தேடுங்க… தேடுங்க… தேடிக்கிட்டே இருங்க!

ஒரு பொருள் தொலைந்துபோனது தெரிந்தால், ‘ஐயோ… அதைக் காணோமே!’ என்றும், அதைத் தேடும்-போது, ‘ஐயோ… அது கிடைக்கணுமே!’ என்றும் இதயத்தில் ஒரு படபடப்பு ஏற்படுவது உண்டல்லவா? அந்தப் படபடப்பு, தூங்குகிற இதயத்தைத் தட்டி எழுப்பி, சுறுசுறுப்பாக இயங்கச் செய்யுமாம்.

ஆகவே, பூரண இதய ஆரோக்கியம் பெறவேண்டுமென்றால், அடையாள அட்டை, ரேஷன் கார்டு, கிரெடிட் கார்டு, வீட்டுச் சாவி, பால் கூப்பன், மூக்குக் கண்ணாடி இவை போன்ற தினப் படிக்கு முக்கியமான பொருள்-களை அடிக்கடி தொலைத்துவிட வேண்டும். அப்புறம், பதற்றத்துடன் தேட வேண்டும். யோகா, ஆழ்நிலைத் தியானம், உடற்பயிற்சி எதிலும் கிடைக்காத உடல் ஆரோக்கியம் இத்தகைய தேடலில் கிடைக்கும்.



தேடுதலால் உண்டாகும் பயனைச் சொல்லி அத்தேடுதல் முயற்சியில் எழும் பிரச்சனைகளையும் சொல்லி நகைக்கவைத்ததோடு திகைக்கவும் வைத்துவிட்டார் ஆசிரியர்.




4.அலங்காநல்லூர் அப்புசாமி


அப்புசாமி கால் கை கட்டுடன் படுத்திருந்தார். “சீதே! உன்னை நான் புரிஞ்சுக்காத முட்டாள்! பொலி காளை மாட்டுக்கு நீயும் மாலை போடப் போறேன்னதும் எனக்கு உன் மேலே எவ்வளவு ஆத்திரம் வந்தது தெரியுமா?” என்றார்.

“உங்கள் ஆத்திரம் நியாயமான ஆத்திரந்தான். நான் மாலைக்குள் என் வைரத் தோட்டை வைத்து, அதை மாட்டுக் கழுத்திலே போட்டுப் பால்காரப் பொட்டுவை மாட்ட வைப்பேன் என்பதை, புவர் மேன், நீங்கள் எப்படி ஊகித்திருப்பீர்கள்? ஆனாலும், நான் கொஞ்சம் ஓவராகவே ரிஸ்க் எடுத்துக் கொண்டுவிட்டேன். சப்போஸ், போலீஸ் மட்டும் காளையை ரவுண்டப் பண்ண இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வந்திருந்தால் என் நெற்றிப் பொட்டு கதி என்னாயிருக்கும்?”



என்னதான் கணவனை விரட்டு விரட்டு என்று தான் விரட்டினாலும் ஒரு காளை விரட்டுவதைக் கண்டு ரசிக்க இயலுமா? சீதாப்பாட்டியின் சமயோசிதம் பிரமாதம்.




5.விடாப்பிடி

சீதாப்பாட்டி கோபித்துக் கொண்டாள். “சிச்சுவேஷனைக் கொஞ்சம் ஹ்யூமன் ஆங்கிளில் பாருங்கள். முதலில் போன் இருந்தால் ஏதாவது ஒரு டாக்டருக்குப் போன் செய்யுங்கள்.”


“இவர் யாராயிருந்தாலும் சரி, டாக்டரைக் கூட்டி வந்து வைத்தியம் பார்ப்பது நமது ட்யூடி!” என்று ஆணித்தரமாகச் சொல்லிவிட்டாள்.



முரட்டு மனுஷிக்குள்ளும் மறைந்திருக்கிறதே ஈரம். அதனால் கிடைத்ததே மீண்டும் அவர்கள் வாழ்வாதாரம். ரசிக்கவைக்கும் கதைப்பகிர்வுகளுக்கு மிகவும் நன்றி கலைவேந்தன்.

கலைவேந்தன்
17-08-2012, 01:56 PM
http://r26.imgfast.net/users/2613/15/39/48/smiles/35578.gif...படித்தேன். பரவசம் அடைந்தேன். மறுபடியும் படிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி கலை...

வாசித்துப் பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி ஜெயந்த்..!

கலைவேந்தன்
17-08-2012, 01:57 PM
இதுவரை வந்த ஐந்து கதைகளையும் வாசித்து அருமையான பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கும் கீதமுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..!


அடுத்து தொடர்கிறேன்..

கலைவேந்தன்
17-08-2012, 01:59 PM
அடுத்த கதை கொஞ்சம் பெரியதாகையால் சில பாகங்களாகப் பிரித்துத் தர எண்ணியுள்ளேன்..

கலைவேந்தன்
17-08-2012, 02:07 PM
6. பாபா தாசன் அப்புசாமி

சீதாப்பாட்டி வெளியூர் ரோட்டரி கிளப் ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுவிட்டுச் சில பல பொன்னாடைகளுடனும், பிரம்மாண்டமான பரிசுப் பார்சலுடனும் வந்து இறங்கினாள்.

ரோட்டரி கிளப்பின் சுயநலமற்ற மனிதகுல மேம்பாட்டுச் சேவைகளைப் பாராட்டி, சீதாப்பாட்டி இருபது நிமிஷம்தான் பேசினாலும் எல்லாருடைய பாராட்டையும் பெற்று விட்டாள். பாராட்டுகளையும் என்பதைவிட பரிசுகளையும் என்பதே பொருத்தம்.

நிறையப் பேர் பாட்டிக்கு வெகுமதிகளைக் குவித்தனர். அதில் கையில் ஒரு பிரம்மாண்டமான கி·ப்ட் பார்சல்.

“எல்லாத்தையும், ப்ளீஸ் ஜாக்கிரதையாக இறக்கி வையுங்க” என்றாள்.

பெரிய கி·ப்ட் பார்சல் அநியாயத்துக்குக் கனத்தது. ”பார்த்து.. பார்த்து… பி கேர்·புல்… க்ளேஸ்… க்ளேஸ்… கண்ணாடி…” என்று ஜாக்கிரதைக் குரல் தந்தாள்.

கால் டாக்ஸி டிரைவர் ஓர் உதவிகரம் நீட்ட ஒரு வழியாக அந்தப் பரிசுப் பொருளை உள்ளே கொண்டு சென்றார் அப்புசாமி.

“இவ்வளவு கனம் கனக்குது. ஏதாவது மினிப் பொணமா?’ என்றார்.

“கிரேக்தனமாப் பேசாதீங்க…. இதை ஊகிக்கிற ஐ க்யூவெல்லாம் உங்களுக்கு கிடையாது. ஸோ, உங்களுக்கு புதிர் போட்டு என் டைமை வேஸ்ட் பண்ணப் போறதில்லை… ‘டாப்’னு போட்டிருக்கிற பக்கத்தை மேலே வெச்சுக் கொண்டு நிதானமாப் பிரியுங்கோ… வொன்ட்டர் ·புல் ப்ரசெண்ட்… ஐ லைக் திஸ் வெரி மச்!”

“என்னது! செட்டியார் பொம்மை! கெட்டிக் கண்ணாடியிலே பண்ணியிருக்கு! இவ்வளவுதானே? இதற்கா இந்த அடி அடிச்சிகிட்டே! கொலுகிலு வைக்கறவங்களுக்குப் பிரயோஜனப்படும். உனக்குத்தான் அந்த இழவுப் பழக்கமெல்லாம் இல்லையே…”

“மூவ் ஐ ஸே…” என்று சீதாப்பாட்டி கணவரை முழங்கையால் இடித்துத் தள்ளாத குறையாக ஒதுக்கிக்கொண்டு அந்தப் பொம்மையைப் பெட்டியிலிருந்து ஜாக்கிரதையாக வெளியில் எடுத்தாள்.

“மை காட்! என்ன வெயிட்! வொன்டர் ·புல் பீஸ்! லா·பிங் புத்தா! அண்டர்ஸ்டாண்ட்?”

அப்புசாமி லா·பிங் அப்புசாமியானார் ”இந்த குண்டு செட்டியார் பொம்மையா புத்தர்? எவ்வளவு பெரிய தொப்பை! உண்ணா விரதமிருக்கிற நம்ம ஊர் அரசியல்வாதி மாதிரியல்ல இருக்காரு இந்த புத்தர்?”

“நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணினாலும் உங்களுக்குப் புரியாது. நம்ம ஊரிலே அதிர்ஷ்ட லட்சுமின்னு சொல்றதில்லையா?”

“லாட்டிரியைச் சொல்றியா?”

“லாட்டிரியையில்லை சார். லக்.” ·பார்ச்சூன்! ஜப்பானிலே அதிருஷ்டத்துக்கு ஏழு கடவுள் இருக்காம். அதுலே ஒண்ணுதான் இந்த ஹாடாயி – ஐ மீன் லா·பிங் புத்தா… இதனுடைய தத்துவம் என்னன்னா… இது ஒரு ஸிம்பல். இன் எவரி ஹ்யூமன் ஹார்ட் தேர் இஸ் த பொடென்ஷியல் டு பி என்லைட்டன்ட். மகிழ்ச்சி ஓரொரு மனுஷனுக்குள்ளும் இருக்குங்கறதுக்கு அடையாளம்தான் இந்த ஹாடாயி பொம்மை. ஹாட்டாயின்னா அவங்க மொழியிலே துணிப்பைன்னு அர்த்தம். பை நிறையக் காசு பணம் அதில் வெச்சிருக்காராம் நமக்கு. ஜப்பான் மேக்! ஆனால் ஸாலிட் கண்ணாடி. டேபிள் வெயிட் இல்லே அந்த மாதிரி கெட்டிக் கண்ணாடி… பொம்மையோட தொப்பையைத் தடவினா பணம், காசு, லக், எல்லாம் கிடைக்கும்னு ஜப்பான், சைனாக்காரர்களுக்கு ஒரு ஸ்டிராங்க் பிலீ·ப்.”

சீதாப்பாட்டி சொல்லி முடிக்குமுன் உடனடியாக அப்புசாமி சிரிப்புப் புத்த சிலையின் தொப்பையை அவசர அவசரமாகத் தடவினார். சீதாப்பாட்டி அவர் கையைத் தட்டிவிட்டாள் கோபமாக.

“மை காட்! உங்க நேஸ்ட்டி கையை வெச்சிக்கிட்டு உடனே தடவ ஆரம்பிச்சுட்டீங்களா?”

“ஏண்டி அலறுகிறே? என்னவோ உன் தொப்பையை நான் தடவிட்ட மாதிரி! நீ என்ன ஜோதிகாவா?” என்று பதிலடி கொடுத்துவிட்டு ”யோவ் குண்டு புத்தர்! உன் தொந்தியை நல்லாத் தடவிக் குடுத்திருக்கிறேன். சாயாந்தரத்துக்குள்ளே எதுனா அதிருஷ்டம் கிடைக்கலன்னா… உன் தொப்பையிலே ஒரு குத்துவுட்டு உன்னை மல்லாக்கச் சாய்ச்சிடுவேன் கபர்தார்… சரி… சரி… ஊருக்குப் போய் வந்ததும் தரேன்னியே.. எடு அந்த நூறு ரூபாயை…. மன்றத்துலே நான் குடுத்தாகணும் இன்னைக்கி…”

சீதாப்பாட்டி அவர் வேண்டுகோளைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

அப்புசாமிக்குக் கோபமாக வந்தது. அவ்வளவு அலட்சியமாக இருப்பதற்கு அது என்ன நதி நீர்ப் பிரசினையா, நெசவாளர் பட்டினிப் பிரசினையா. அன்றாட கொலை கொள்ளைப் பிரசினையா… செய்தித் தாளில் இடம் பெறும் குப்பை கூளக் குவியல், மோசடி நிதி நிறுவனங்களின் தொடர் ஓட்டப் பிரசினையா?

அவரது ஏரியாவின் ரசிகர் மன்றக் காரியதரிசியைச் சந்தித்துப் பேச பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும்.

“தாத்தா! இன்னும் ரெண்டு மாசத்துக்கு என்கிட்டே வராதீங்க” என்று அவரைக் கழற்றிவிடப் பார்த்தான். ”அதுவுமில்லாமல், கூட்டத்திலே நீங்க கூழாயிடுவீங்க தாத்தா… நாங்கள்ளாம் இளம் பசங்க.. உங்களுக்கு என்ன அவசரம் இப்போ” என்றான்.

”அடே அல்பம்! நீ சும்மாத் தரவேண்டாண்டா! நானும் நூறு ரூபா தர்ரேண்டா… உங்க ரசிக மன்றத்துக்குன்னு நூறு டிக்கெட் தந்திருக்காங்களாமே, என்கிட்டே டபாய்க்காதே..”

“தாத்தா! முதல் ரெண்டு நாள் எங்களுக்கு. எங்க கும்மாளத்துலே உங்க மாதிரி வயசான கட்டைங்களெல்லாம் வந்து கலந்துகிட்டா எங்களுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்… நாங்க ஜாலியா விசில் கிசில் அடிச்சிகிட்டு கூவுவோம்… ஆடுவோம்… பாடுவோம்… கத்துவோம்… கலர் கலரா ஜிகினா காகிதம் எறிவோம்.”

“ஏன்… நான் மட்டும் பண்ணமாட்டேனா. என்கூட விசில் போட்டிக்கு வர்ரியாடா… ஒண்டிக்கு ஒண்டி?” என்று சவால்விட்டு உதட்டுக்குள் ஆள்காட்டி விரலை மட்டும் உட்செலுத்தி ஐந்து நிமிஷ நேரத்துக்குப் பயங்கரமாக விசில் அடித்து மன்றத் தலைவனை அசத்திவிட்டார்.

“சரி.. தாத்தா! யாருக்கு இல்லைன்னாலும் உங்களுக்கு ஒண்ணு எடுத்துப் பூட்டி வெச்சுடறேன். ஆனால் துட்டை பன்னெண்டாம் தேதி என்னாண்டை குடுத்துடணும்…”

“கெயவி ஊருக்குத் தொலைஞ்சிட்டா… பன்னெண்டுக்குத்தான் வராள். உடனே வாங்கி குடுத்துடறேன். நீ பேச்சு மாறிடாதே…”

அப்புசாமி விரல்களை பாபா முத்திரையில் டகாரென்று வைத்து கொண்டே, ”ஏ கியவி! நான் கேக்கறேன்… உன் காதுலே விழலியா? ஊருலேருந்து வந்ததும் தரேன்னியேம்மே…”

“ப்ளீஸ். கொஞ்சம் பொறுங்க… ஐ ம் ஸோ டயர்ட்… பர்ஸ்ட் திங் ஐ ஷ¤ட் ஹாவ் மை பாத். இந்த லா·பிங் புத்தா இருக்கே… இது வீட்டிலே இருந்தால் அதிருஷ்டம்னு ஒரு நம்பிக்கை…”

“உனக்கு எந்தப் புத்தரும் இல்லாமலே அதிருஷ்டம்! மாலை, மரியாதை, ஏஸி ரயில் பிரயாணம் எல்லாம் கிடைக்கும்”.

“பொறாமைப் படாதீங்க… லா·பிங் புத்தா வந்த வேளை உங்களுக்கும் ஏதாவது அதிருஷ்டம் அடிக்கலாம்.”

“ஹஹஹ!” அப்புசாமி சிரித்தார். அதிருஷ்டம் அடிக்கலைனா அதிருஷ்டத்தை நான் அடிச்சிடுவேன். உன் ரூமிலே கொண்டு போய் வெச்சுக்கோ. ஹாலிலே வெச்சதாலே ஹாலே கண்ணராவியாயிருக்கு! நான் ரெண்டு காத்தாடி கதவு நிலைகிட்டே தொங்கவிட்டதை அன்னைக்கிக் கசக்கிப் போட்டவளில்லே நீ? உன் புத்தரை ஒரு எக்கு எக்கித் தள்ள எத்தினி நேரம் எனக்காகும்?”

லா·பிங் புத்தா சிலையை வெறித்துப் பார்த்த அவருடைய கண்களில் மின்னிய கோபத்தில் அராஜகம் தெரிந்ததைப் பாட்டி கவனித்தாள். கை வசம் பொடா சட்டமிருந்தால் அவரைக் கைது செய்து உடனடியாக உள்ளே தள்ளியிருப்பாள்.

“கான்ட் யூ கீப் காம் ·பார் த நெக்ஸ்ட் தர்ட்டி மினிட்ஸ்.. நான் போய்க் குளிச்சிட்டு டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடறேன்… பை த வே ·பைல் ஹண்ட்ரட் ருபீ நோட்டாக இருக்கிறது. நீங்க சேஞ்ச் வாங்கிட்டு வரணும்…”

“நோட்டைக் குடும்மே மின்னே…”

“உங்களை நம்பி எப்படிக் குடுக்கறதுன்னு கொஞ்சம் யோசிக்கிறேன். யு ஆர் நாட் ட்ரஸ்ட் வொர்த்தி. நம்பர் ஒன் சீட் நீங்க.. ஏமாத்துக்காரர்னு சொல்றேன்.

அவனவன் சீட் பண்டை நம்பி இன்னமும் சீட்டு கட்டிகிட்டிருக்கானாம். நீ என்னைப் பெரிசா சொல்றே? நோட்டை குடுமே.. நாயர் கடையில தோ மாத்தித் தரேன்..”

“ஹ¥ம்!”பாட்டி தோளில் மாட்டிக் கொண்டிருந்த பையிலிருந்து பர்ஸை எடுத்து புத்தம்புது ஐந்நூறு ரூபா நோட்டு ஒன்றை எடுத்துத் தந்தாள்.

“யம்மாடி! அடுக்கி வைச்சிருக்கியேடி அத்தனை?”

“வர்ரப்போ ஏ.டி.எம்மிலே ட்ரா பண்ணிக் கொண்டு வந்தேன்.”

“கார்டைச் சொருகினா சலவை நோட்டு சரக் சரக்னு வந்து விழுமே அந்த மிஷின்லேருந்துதானே! எனக்குக் கூட அது மாதிரி ஒரு கார்டு குடுடி.. நீ தர்ர மாசாந்தர பேட்டாவை இனிமேல் அந்தப் பெட்டிக்குள்ளே போட்டுடு. நானும் ஒரு கார்டைப் போட்டு புது நோட்டா வாங்கிக்கறேன்….”

“அதுக்கெல்லாம் மினிமம் டெபாசிட்டே ஐயாயிரம் இருக்கணும் – என் பாங்க்கிலே.”

“உன் பாங்க்கு? உங்க பாட்டன்தான் முதல் போட்டார். உங்க அப்பா பாங்க்கை நடத்தினார். அவருக்குப்புறம் அது உனக்கு வந்திருக்கு… என் பேங்க்காம்… என் பேங்க்.”

“எனக்கு டைமாச்சு. உங்க பொறாமைக்கெல்லாம் பதில் சொல்ல எனக்குப் பொறுமை இல்லை. சீக்கிரம் நோட்டை சேஞ்ச் பண்ணி ஒரு ஹண்ட்ரட் எடுத்துக் கொண்டு, மீதி கொண்டு வாங்க! லா·பிங் புத்தா வந்த வேளை உங்களோடு சண்டை போடத் தயாராயில்லை.”

அப்புசாமி நாயர் கடைக்குப் போகிற வழியில் நோட்டின் மழமழப்பைத் தடவி, நீவிப் பார்த்தார். அதிலிருந்த மகாத்மாஜிக்கு ஒரு செல்ல முத்தம் கொடுத்தார்.

என்ன ஆச்சர்யம். நோட்டுக்கு அடியில் இன்னொரு மகாத்மா தோன்றினார்.

ஒற்றை ஐந்நூறு என்று பாட்டி கொடுத்த புது நோட்டோடு இன்னொரு ஐநூறு ரூபா நோட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது.

“ஐஸலகும்மா!” அப்புசாமி மகிழ்ந்தார்..


தொடரும்...

கலைவேந்தன்
17-08-2012, 02:14 PM
தொடர்ச்சி..

‘குண்டு புத்தர் வந்த வேளை அதிருஷ்ட வேளைதான் போலிருக்குது. அவரோட தொப்பையைத் தடவினதுக்குக் கைமேல் பலன்!’

நல்ல பிள்ளை மாதிரி நானூறு ரூபாயை மனைவியிடம் கொடுத்து விட்டுப் புறப்பட்ட அப்புசாமியின் அடுத்த ஸ்டாப்பிங் ரசகுண்டுவின் வீடு.

அவர் போன நேரம் ரசகுண்டுவின் வீட்டிலும் போர்! போர்! போர்!

ரசகுண்டுவின் மனைவி ராமதாஸின் ஆதரவாளியோ என்னவோ. மணல் போட்டு வாணலியில் வேர்க்கடலை வறுப்பது போலப் புரட்டிப் புரட்டி ரசகுண்டை வறுத்துக் கொண்டிருந்தாள்.

தம்பதிகளின் சண்டைக்கு நடுவே தலையிடக் கூடாது என்பது அப்புசாமியின் கொள்கை. ஏனென்றால் அவருக்கும் மனைவி சீதாவுக்கம் நடைபெற்று வந்த இத்தனை வருட யுத்தங்களில், இந்த நூறு கோடி பேர் உள்ள பாரத நாட்டிலிருந்து எந்த ஒரு மனுசனாவது நடுவுலே வந்தது உண்டா? குறைஞ்ச பட்சம் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்ட ஒற்றை மனுஷ விசாரணைக் கமிஷனாவது ஒப்புக்கு மூக்கை நீட்டி நாலு கேள்வி அவளைக் கேட்டுவிட்டு அலவன்ஸோ பேட்டாவோ வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு மேலிடத்துக்க ஒரு ரிப்போர்ட் சமர்ப்பித்திருக்கிறதா?

ஆகவே பொறுமையாக வாசல்படிக்கு வெளியே நின்று எல்லை மீறல் அக்கிரமங்களை சில மேல் நாடுகள் கவனிப்பது போல் யுத்தத்தின் போக்கைக் கவனித்தவாறிருந்தார்.

“ஏண்டா, உனக்கு அத்தனை கொழுப்பாயிட்டுதா? உனக்கு மாயா ஜால்லே போய்ப் பாபா பார்க்கணுமா? இருநூறு ரூபாய்க்குத்தான் டிக்கெட் கிடைச்சுதா? எத்தனை தைரியம்டா.”

அப்புசாமிக்குப் புரியவில்லை. ‘அடா,புடா’ என்று கத்தி அதட்டும் குரல் ரசகுண்டுவின் பாட்டியுடையதாக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அப்புறம் சற்று எட்டிப் பார்த்தவருக்குத் திகீர் என்றாகிவிட்டது.

ருக்மிணிதான் கணவனை அப்படி ஏக வசனத்தில், போடா வசனத்தில் ஏசிக் கொண்டிருந்தாள்.

‘சே! இதென்ன இந்தக் காலச் சிறு பொண்ணுங்க புருஷனை அடா, புடா என்று பேசுகிறாங்க என்று நினைத்தவர் தன் வீடு இருந்த திசை நோக்கி தரையில் தடாலென்று சத்தத்தோடு விழுந்து நீளமாகக் கும்பிட்டார்.

யாரோ விழுந்த மாதிரி இருக்கிறதே என்று, ருக்மிணி, திட்டுக்களுக்குச் சிறிது இடைவேளை கொடுத்துவிட்டு வாசற்படி அருகே விரைந்தாள்.

அப்புசாமி தாத்தா!

ஆயிரத்தொரு இரவு அரபுக் கதையில் வரும் சுவரில் சாத்திய தையல்காரப் பிணம் மாதிரி என்ன இது திடீரென்று தாத்தா இங்கு வந்து விழுந்து செத்துட்டார்….

“ஐயோ! இங்கே வாங்களேன்!” என்று ரசகுண்டுவை அவசரத்தில் மரியாதை தப்புவது தெரியாமல் ‘வாங்களேன்’ என்று கூப்பிட்டு விட்டாள்.

ரசகுண்டு விரைந்தான். குப்புறப்படுத்திருந்தவரை நிமிர்த்தி, அவருக்கு மூச்சு இருக்கிறது தெரிந்த பின்தான் தம்பதிகளுக்கு ஆறுதலாயிற்று.

“பயந்துட்டியாடா ரசம்!” அப்புசாமி சிரித்தார். ”எங்க வீடு இருக்கிற பக்கமாகக் கும்பிடு போட்டுக் கொண்டிருந்தேன் – அங்கேயிருக்கிற சீதேக் கிழவிக்கு!”

“ஏன் தாத்தா?” பதறினான். ”பாட்டிக்குப் பெருங் கும்பிடாப் போட்டுட்டு வந்துட்டீங்களா ஒரே அடியா…”

“இல்லேடா… உன் பெண்சாதி உன்னைத் திட்டறதை இந்தக் காதாலே கேட்டேன். ‘வாடா போடா! அடா புடா’ என்று இந்த மாதிரி அநியாயத்துக்கு மரியாதை குறைவாகத் திட்டறாளே… சீதேக் கிழவி ஒரு நாளில் என்னை அடா போட்டுத் திட்டியதில்லே. அவள் பெருமை இப்பத்தாண்டா தெரியுது. சீக்கிரம் நிதி வசூலித்து அவளுக்கு ஒரு கோவில் கட்டணும். உன்னால் முடிஞ்சதைக் குடு…” என்றார்.

“தாத்தா! என்னை ரொம்ப மன்னிச்சிடுங்க…” என்றாள் ருக்மிணி.

மனைவியின் புகழை விட்டுத் தர தயாரில்லாத இந்தக் காலக் கணவர்களில் ரசகுண்டுவும் ஒருத்தனாதலால், ”தாத்தா! நீங்க இப்படியா ஓசைப்படாம வந்து நிற்கிறது. பட்ஜெட் ஸெஷன் நடக்கிறதுன்னா எந்த வீட்டிலும் கொஞ்சம் சூடாகத்தான் விவாதம் நடக்கும். ருக்மிணி என்னை மரியாதை குறைவாப் பேசிட்டதா நீங்க தப்பா நினைச்சிட்டீங்க… அது வந்து…” தடுமாறினான்.

“அடே ரசம்!” அப்புசாமி சிரித்தார். ”தண்ணியடிச்சு தண்ணி விலகாதுடா. கோழி மிதிச்சு குஞ்சுக்குக் காயம் ஏற்படாது. பொண்டாட்டி திட்டி புருஷனுக்கு அவமானம் வந்துடாது. எனக்கு நீ சொல்லித் தர வேண்டாம். என்ன விஷயமாத் தகராறு? சொல்லலாம்னா சொல்லு. எங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்னு எகிறினியானா நான் ஒண்டியா பாபாவுக்குப் போய்க்கிறேன்.”

பாபா!

அந்தப் பெயர் காதிலே விழுந்ததும் சே! காட்சியே அடியோடு மாறிவிட்டது.

‘டிப்பு! டிப்பு! டிப்பு! டிப்புகுமாரே!’ என்று ரசகுண்டு ஆட ஆரம்பித்து விட்டான். ”தாத்தா! தாத்தா! டிக்கெட் வாங்கிட்டீங்களா! பாட்டி துட்டு கொடுத்துட்டாளா? எனக்கும் சேர்த்துத்தானே?”

“அடேய் ரசம்! உனக்கு மட்டுமில்லேடா! உன் பெண்டாட்டிக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கற அளவுக்குத் துட்டு குடுத்தார்டா அந்தப் பணத் தொப்பை!”

‘பணத் தொப்பை! துட்டு குடுத்துட்டார்!’ ரசகுண்டுவுக்குப் புரியவில்லை.

தாத்தா அசட்டுத்தனமாக எந்தக் கந்து வட்டிக்காரன்கிட்டாயவது கடன் வாங்கிட்டாரா?

“தாத்தா! என்ன காரியம் பண்ணிட்டீங்க தாத்தா! அவசரப்பட்டு மீட்டர் வட்டிக்காரன்கிட்டே சிக்கிக்கிட்டீங்களே! உடனே அதை அவன்கிட்டே குடுத்துட்டு வந்துடுங்க. ‘கந்து வட்டியானாலும் பரவாயில்லை. எங்கேயாவது பணம் வாங்கிட்டுவாங்க. நாம பாபா பார்க்கணும்’னு நான் உங்ககிட்டே சொல்லலையே தாத்தா! நம்ம பாபாவே இதை ஆதரிக்கமாட்டாரே!”

ருக்மிணி ஆத்திரத்தோடு, ”தாத்தா! இவன் சொன்னாலும் சொல்லியிருப்பான். பெருங்காய டப்பாவிலே நான் செலவுக்கு வெச்சிருந்த என் சொந்தப் பணம் இருநூறு ரூபாயை, நான் பாத்ரூம்லே குளிச்சிகிட்டிருந்தப்போ சுருட்டிட்டான் தாத்தா… கேட்டா இல்லே, இது என் பணம்னான். முகந்து பார்த்தா பெருங்காய வாசனை அடிக்குது. அப்புறம் விசாரிக்கிறபடி பையனை விசாரிச்சா ஒப்புக் கொள்றான்… அதான் சண்டை பிடிச்சிகிட்டிருந்தேன். நீங்களே சொல்லுங்க நியாயத்தை. பொறுப்புள்ள ஒரு புருஷன் செய்வானா இந்து வேலை!”

அப்புசாமி பேச்சை மாற்றுவதற்காக. ”முதலிலே ஒரு டம்ளர் ஜூஸ் அல்லது மோர் அல்லது ஐஸ் தண்ணி அல்லது வெறும் தண்ணி கொண்டா… என் நெஞ்சை என்னவோ பண்ணுது…” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

ரசகுண்டு பதறி, ”தாத்தா! தாத்தா! இந்தச் சிறுசுகளை மன்னிச்சிடுங்க. எங்க சண்டை உங்களுக்கு மார் அடைக்கிற அளவு அதிர்ச்சி தந்துட்டுதா? நீங்களும் பாட்டியும் வெற்றிகரமான ஆயிரமாவது சண்டையெல்லாம் போட்டிருக்கீங்களே…” என்றான்.

“அதானே? தாத்தாவும் பாட்டியும் போடாத சண்டையையா நாம போட்டுட்டோம்… நல்லாச் சொன்னீங்க ஒரு வார்த்தை!” என்றாள் ருக்மிணி. ”கோபம் வந்தால் நாலு வார்த்தை பொம்மனாட்டிகளுக்கு வாயிலே வந்துடும்தான். பாட்டி உங்களை இங்கிலீஷ்லே உசத்தியாத் திட்டறாள். அது மாதிரி என்னாலே இவனை திட்ட முடியலை…”

“கரெக்டாச் சொன்னேடி கன்னுக்குட்டி!” என்று மனைவியின் கன்னத்தை செல்லத் தட்டுத் தட்டினான்.

“ஐயோ! தாத்தா இருக்கார்! உங்களுக்கு வெவஸ்தையே இல்லை!” ருக்மிணி வெட்கப்பட்டாள்.

ரசகுண்டு, ”சரி.. சரி.. சரி… தாத்தா போடாத சண்டையும் நான் போடப் போறதில்லை. தாத்தா கொஞ்சாத சொஞ்சலும் நான் கொஞ்சப் போறது இல்லை… அப்படி ஒண்ணும் சென்ஸார் செய்யப்படறமாதிரி நானும் நடந்துக்கலை…” என்று விரிவாக ஒரு தன்னிலை விளக்கம் தந்தான்.

தம்பதிகளுக்குள் சாந்தி நிலவியதும் அப்புசாமி தான் வந்த விஷயத்தை ரசகுண்டுவிடம் தெரிவித்தார். அவருக்கு அனாமத்தாக ஒரு ஐந்நூறு ரூபாய் கிடைத்ததை வெலாவாரியாக விவரித்தார்.

“என் வீட்டுக் கிழவி சொன்னது கரீட்டுமா ரசம்! அந்த சிரிப்புப் புத்தர் பொம்மையின் தொந்தியைத் தடவினாப் பணம் வரும்னு ஜப்பான் சீனாவுலே இருக்கறவங்களக்கு நம்பிக்கைன்னு சொன்னாள். நான் தடவினேண்டா! அஞ்சாவது நிமிஷமே அடிச்சேண்டா பிரைஸ் ஐந்நூறு ரூபாய்! நாம மூணு பேருக்கு மட்டுமில்லேடா… பீமாக் கண்ணனுக்கும் கூடச் சேர்த்து நாலு டிக்கெட் வாங்கிட்டேன். பாபா! பாபா! பாபா! பாபா! டிப்பு! டிப்பு! டிப்பு! டிப்புகுமாரே! வாங்கிட்டேண்டா…. சக்தி கொடு… சக்தி கொடு….”

“சத்தியமாவா தாத்தா வாங்கட்டீங்க?”

“சத்தியமா சத்தியத்திலேடா…”

“சப்பாஷ் தாத்தா!”

“இதோடா டிக்கெட்!”

அப்புசாமி நாலு பாபா டிக்கெட்டுகளைக் காட்டினதும் ரசகுண்டுவும் ருக்மிணியும் அவர் காலில் விழுந்து விழுந்து கும்பிட்டனர். ”உப்புமா கிளறுடி தாத்தாவுக்கு?” என்று உத்தரவு போட்டான்.

“இதோ கிளறுகிறேனுங்க!” என்று ருக்மிணி ரவை டப்பாவை எடுக்க விரைந்தாள்.

தொடரும்..

கலைவேந்தன்
17-08-2012, 02:21 PM
தொடர்ச்சி..

முதல் நாள், முதல் ஷோ பாபாவுக்குப் போய் வந்து விட்டார்கள்.

ஒரு வாரத்துக்கு அதே பேச்சுத்தான். தாத்தாவைப் பார்க்க ரசகுண்டு தினமும் காலையில் வந்து விடுவான்.

வந்ததும் டி.வி. பெட்டி அருகிலிருந்த சிரிப்புப் புத்தர் சிலையின் வயிற்றை ஒரு இரண்டு நிமிஷம் தடவிக் கொண்டு நிற்பான்.

“தாத்தா! சிரிப்பு புத்தர் ரொம்ப லக்கிதான் தாத்தா! நேற்று தடவிட்டுப் போனேனா? ஊரிலிருந்து எங்க பாட்டி, ‘வேர்க்கடலை வித்த பணம் இருநூறு ரூவா வந்தது. உனக்கு ஒரு ஐம்பது ரூபா அனுப்பிச்சிருக்கேன்னு மணியார்டர் வர்ரது தாத்தா! தொந்தி புத்தர் வாழ்க! வளர்க!” என்று புகழ்ந்தான்.

ஒரு சின்ன மாலை வாங்கி வந்து போட்டான். ஊதுவத்தி ஏற்றிக் கற்பூரம் காட்டினான்.

“பாட்டி! பாட்டி! நீங்க வெச்சிருக்கிற தொப்பை புத்தர் ரொம்ப ரொம்ப சக்தி பாட்டி! எங்க முதலாளி நேத்து சொன்னார். தீபாவளிக்கு இந்த வருஷம் போனஸ் தரப் போறாராம்… தினமும் இங்கே வந்து ஒரு தடவை தாத்தாவையும் பார்த்துட்டு, தொப்பையையும் தடவிட்டுப் போக பர்மிஷன் குடுங்க பாட்டி…. தொந்தரவு பண்றேனேன்னு நினைச்சிக்காதீங்க…” என்றான் சீதாப்பாட்டியிடம்.

“சரி.. சரி… ஆனால் கற்பூரம் காட்டறது, தேங்கா உடைக்கிறதுன்னெல்லாம்.. நீ ரெகுலர் கோவில் மாதிரி ஓவர் டூ பண்ணிடுவியோன்னு ஐ ஹாவ் மை ஓன் டெளட்ஸ்…” என்றாள்.

நாலு நாளாயிற்று.

சீதாப்பாட்டி கிளப்புக்குப் போய் விட்டு இரவு வந்தவள் ஹாலைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.

அவளுடைய சிரிப்புப் புத்தருக்குப் பக்கத்தில் இன்னொரு உள்ளூர் (கொசப்பேட்டை) சிரிப்புப் புத்தர்! மஞ்சளும், பச்சையும் சிவப்புமாக வர்ணம் பூசிய ஒரு களிமண் சிரிப்பு புத்தர் ‘கிண்’ என்று உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அறையுடைய அழகையே சுரண்டி எடுத்துவிட்டது போலிருந்தது அவளுக்கு.

“பேப்பர் மேஷா!” என்று கேட்டவாறு அதை நெருங்கிப் பார்த்தாள். களிமண்தான்.

இன்னொரு திடுக்!

அந்தக் களி மண் சிரிப்புப் புத்தர் அருகே இன்னொரு குட்டி சிபு.

ஜன்னல் அருகே டீபாயின் மீது அவள் வைத்திருந்த மெல்லிசான பூஜாடியைக் காணோம். அதற்குப் பதில் டீபாயின் மீது ஒரு சிரிப்புப் புத்தர் – இன்னொரு சைஸில்…

புக்ஷெல்·பில் என்ஸைக்ளோபீடியா வரிசையில் ஏதோ மாறியிருப்பது தெரிந்தது – அந்த அடுக்கில் எஸ் முதல் யு வரையிலான வால்யூம்கள் உருவப்பட்டுக் கீழே கிடந்தன. அந்தக் காலி இடத்தில் இரு அணிகளுக்கும் நடுநாயகமாக ஒரு சிபு. (சிரிக்கும் புத்தர்).

அணிவகுப்புப் பார்வையிடும் பிரமுகரின் கூடவே அறிமுகம் செய்து வைக்க வருகிற நபரைப் போல சீதாப்பாட்டியுடனே அப்புசாமி பெருமிதமாக அவளுடன் தொடர்ந்தார்.

“எப்படி சீதே! அதை நீ பார்க்கலையே! அப்படி! அப்படி! அப்படி பீரோ மேலே பார்! சரியான குள்ளி! அண்ணாந்து பார்த்தால்தானே தெரியும்!”

காட்ரெஜ் பீரோ மீது வரிசையாக ஏழெட்டு சைஸில் எட்டு ஏழு சிபுக்கள் – கன்னா பின்னா கலர்களில்.

“·பிரிஜ்ஜைப் பார்க்கலையே?” என்றார் அப்புசாமி உற்சாகத்துடன்.

·பிரிஜ்ஜின் மேல் சீதாப்பாட்டி ஒரு சின்ன நெய்ல் கட்டரைக் கூட வைக்க மாட்டாள்.

இப்போது பயங்கர சைஸில் இரண்டு புத்தர்கள்.

“சீதே! எப்படி! நல்லாருக்கா… ஒவ்வொண்ணு என்ன விலை இருக்கும். சொல்லு பார்க்கலாம். உன் துட்டைக் கொள்ளை அடிக்கலைடி தாயே! ரசகுண்டு வாங்கித் தந்தான். போனஸ் தந்துட்டாங்களாம். ஒரு டஜன் புத்தர் வாங்கித் தள்ளிட்டான். எனக்கும் ரெண்டு குடுத்தான்…”

“ஒரே புத்தர் ஸ்ப்ரீயாக இருக்கே! இத்தனை வேணுமா? மை காட்! வாஷிங் மெஷின் மேலே கூடவா?”

“ரொம்ப அதிருஷ்டம் சீதே!”

சீதாப்பாட்டி பெருமூச்சுவிட்டாள்.

பீரோ சாவிக்கொத்தை இடுப்பில் சரி செய்து கொண்டாள்.

“அடியே கியவி! என் மேலே நீ சந்தேகப்படற மாதிரி தெரியுது… இடுப்புச் சாவியைத் தொட்டுக்கறே… இந்த மாச பேட்டா பணம் ஐந்நூறு ரூபா கொடுத்தியா… தீபாவளிக்குன்னு ஒரு ஐந்நூறு குடுத்தியா… அந்தப் பணத்திலேதான் வாங்கி ரொப்பறேன்… சிரிப்புப் புத்தர், அதிருஷ்டப் புத்தர், ஆகா… எங்களையெல்லாம் பாபா பார்க்க வைத்த அதிருஷ்டப் புத்தர்! அடியே கெயவி! ‘நீ அறிஞ்சது துளி! அறியாதது கடல் அளவு! புரியுதா… நீ போய் ரசகுண்டு வீட்டுலே பார்! ஒரு கடையே வைக்கலாம்.. நூறு சிரிப்புப் புத்தர் வாங்கி வெச்சிட்டான். காலைக் கீழே வைக்க முடியாது. ருக்மிணியே தன் கை வளையலைக் கழற்றிக் குடுத்து, ‘இன்னும் நிறைய புத்தர் வாங்கிட்டு வாங்க நாதா’ன்னு கதறுகிறாள்! ஏதாவது லாட்டிரி சீட்டுலே எங்க கூட்டணிக்கு ரெண்டரை கோடி பரிசு அடிச்சாலும் ஆச்சரியப்பட்டு சாகாதே! அத்தனை புத்தருங்க தொப்பையையும் தடவித் தடவி என் விரலைப் பார்த்தியா… முக்கால் விரல் தான் இருக்குது!”

சீதாப்பாட்டி விக்கித்து நின்று விட்டாள். ” ஆர் யூ கிரேஸி! தேர் இஸ் எ லிமிட் ·பார் எவரி திங்” என்று கூவத்தான் நினைத்தாள்.

ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

பாட்டரி கடியாரத்தின் நுண்ணிய டிக் டிக் போல ஓசைப்படாமல் சுறுசுறுப்பாக ஓர் ஒலி கேட்கத் தொடங்கியது. சீதாப் பாட்டியின் மூளை எழுப்பிய ஒலிதான் அது.

எக்ஸிபிஷன் கம் ஸேல் என்ற துணிப் படுதா காற்றில் அல்லாடியது.

செட்டியார் ஹாலில் ஒரு பகுதியைச் சீதாப்பாட்டி தன் சொந்த செலவில் வாடகைக்குப் பிடித்து, அப்புசாமிக்கு அர்ப்பித்திருந்தாள்.

ரசகுண்டு வினாடிக்கு வினாடி, ”பாட்டி! நீங்கதான் எனக்கு அம்மா…” என்றான்.

அப்புசாமி வழி மொழிந்தார்.

“சீதே! நீ ரசகுண்டுவுக்கு மட்டுமில்லேடி! எனக்கும் கூட அம்மாதான்! பாபாவைப் பார்க்க வெச்ச அம்மா! அம்மா என்றழைக்காத உயிரில்லையே…”

சீதாப்பாட்டி அடக்கமாக ”நான் இப்போ என்ன செய்துட்டேன் என்று ‘அம்மா அம்மா’ என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடறீங்க. ஐ ஹாவ் டன் நத்திங்! உங்க புத்தா கலெக்ஷன் எல்லாருக்கும் தெரியணும்னு தோணித்து… எக்ஸிபிட் பண்ண வாடகைக்கு ஒரு இடம் பிடித்துத் தந்தேன். ஸேல் பண்ணினாலும் லாபம்தானேன்னு ஸஜஸ்ட் செய்தேன். லீ·ப்லெட்ஸ் அடித்து டிஸ்ட்ரிப்யூட் பண்ணியிருக்கேன்… தட்ஸ் ஆல்…”

ஸ்டாலில் கூட்டம் அலை மோதியது. எல்லாரும் இளைஞர்கள். விதவிதமான கிராப்… விதவித ஜீன்ஸ்…

அவ்வளவு கூட்டத்தை அப்புசாமியும் ரசகுண்டுவும் எதிர்பார்க்கவே இல்லை.

எந்த விலை சொன்னாலும் டகார் டகாரென்று வாங்கிக் கொண்டு ஓடினார்கள்.

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை.

ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் திரும்பி வந்து, ”இது வேண்டாம். வேற குடுய்யா!” என்று திருப்பித் தந்தனர்.

“பர்ஸ்ட் கிளாஸ் அதிருஷ்டம் நைனா! தொப்பையைத் தடவிப் பாரு தெரியும்…” என்றார் அப்புசாமி.

“யோவ்! உன் தொப்பையைத்தான் தடவணும்! இதுலே ஒண்ணுமில்லைய்யா. வேற எங்ஙனா சொருகி வெச்சிருக்கியா?”

அப்புசாமிக்குப் புரியவில்லை.

“சொருகி வெச்சிருக்கேனா? இன்னாபா நீ சொல்றது, புரியலையே… தொப்பையைத் தினமும் தடவிகினு இருந்தா அதிருஷ்டம் அடிக்கும்கறேன்.”

“யோவ் பெரீவரு!” என்ற அதட்டல் அப்புசாமியைச் சற்றுக் கலக்கியது. கூடவே சுருக்கென்ற கோபமும்.

அவர் தோளை அந்தக் குரல் அழுத்தமாகத் தொட்டுத் திருப்பிய மாதிரி கூட இருந்தது.

“யோவ்!” என்று உறுமியவாறு அப்புசாமி திரும்பினார். ”தோளைப் புடிச்சு உலுக்காம அப்படித் தூரப் போய் நின்னு கேளுய்யா… உன் அதிருஷ்டத்தை யாரும் வாங்கிட்டுப் போயிடமாட்டாங்க!”

“மிஸ்டர்!” என்றார் ஆட்டுக்கடா மீசை கமிஷனர். வீரப்பனைப் பிடிப்பதற்காக ஒரு காலத்தில் காட்டுக்குப் போய் வெறும் கையோடு வந்தவர்.

கை வெறுமே இருக்க வேண்டாமேன்பதற்காக அடிக்கடி அதற்கு வேலை கொடுப்பதற்காக மீசையை முறுக்கிக் கொண்டிருப்பார்.

“யோவ் டூ நாட் ·போர். எல்லா புத்தரையும் மூட்டை கட்டி ஜீப்புலே எற்றுய்யா. இவுங்களையும் சேர்த்து.”

“நாங்க என்ன சார் தப்பு பண்ணினோம்! அனாவசிய அராஜகமாயிருக்குதே! இப்ப என்ன எலெக்ஷனா ஒண்ணா… எதுக்கு எங்களைப் பயமுறுத்துறீங்க?” என்ற ரசகுண்டு முட்டியில் ஒன்று வாங்கிக் கொண்டான்..

“எல்லாம் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லுங்க. ஏன்ய்யா.. ஒவ்வொரு பொம்மைக்குள்ளயும் ஒரு பாபா டிக்கெட்டா இருக்குது பாபா டிக்கெட்!”

“ஐயோ அப்படியெல்லாம் நாங்க சொல்லலியே…”

“சொல்லலை. ஆனால் பிட் நோட்டீஸ் அடிச்சு ஊர் பூராக் குடுத்திருக்கியே!”

“நாங்க ஒண்ணும் அடிக்கலையே…”

“உங்க பாட்டன் அடிச்சானா?”

அருகிலிருந்த ஜால்ரா போலீஸ் சிரிப்போடு போட்டுக் கொடுத்தார். ”பாட்டன் இல்லேன்னா பாட்டி அடிச்சிருப்பா!”

லொட் லொட்டென்று அப்புசாமி காலிலும் ரசகுண்டு காலிலும் போட்டார் கமிஷனர். ”பாபா பெயரைக் கெடுக்கணும்னு யாராவது இப்படி உங்களை அனுப்பிச்சாங்களா? ஸ்டேஷனிலே வந்து குடு ஸ்டேட்மெண்ட்.”

இருபத்து நாலு மணி நேரம் கழித்து அப்புசாமி சற்றே நொண்டியபடி வீடு திரும்பினார்.

சீதாப்பாட்டி அதை எதிர்பார்த்திருந்தவள் போல் கையில் முட்டிக்குத் தடவ ஆயிண்ட்மெண்ட்டுடன் அவரை வரவேற்றாள்.

“இதுக்குத்தான் டோன்ட் ஓவர் டூ எனி திங் என்கிறது. அதிருஷ்ட புத்தர்னு கிறுக்குப் பிடிச்சாப்பலே அலைஞ்சீங்களில்லே… அதுக்குத்தான் யாரோ பொறாமைக்காரங்க இப்படி நோட்டீஸ் அடிச்சு உங்களை மாட்ட வெச்சுட்டாங்க. பணத்தை ரொம்ப செலவழிச்சிட்டீங்களில்லே… பொறாமைக்காரங்களுக்கு ஆகலை.”

“அந்தப் பொறாமைப் பிண்டம் எனக்கு அரை அடி தூரத்திலேதான் நிற்குதுன்னு எனக்குத் தெரியும்!” உறுமினார் அப்புசாமி.


முற்றும்.

Keelai Naadaan
20-08-2012, 12:29 PM
நகைச்சுவை ததும்ப யாருடைய மனமும் புன்படாமல் கதை எழுதுவது மிக அரிய ஆற்றல்.
அந்த பாக்கியம், பாக்கியம் ராமசாமி அவர்களுக்கு வெகு எளிதாய் கைகூடி இருக்கிறது. பல ஆயிர உள்ளங்களை மகிழ்வித்த கதாபாத்திரங்கள் சீதாபாட்டியும் அப்புசாமியும்.

மன்றத்தில் பதிந்தமைக்கு பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி கலைவேந்தரே.

கலைவேந்தன்
20-08-2012, 02:57 PM
மிக்க நன்றி கீதம்.. அடுத்த கதை ஒன்றை விரைவில் பதிக்கிறேன்.

கலைவேந்தன்
20-08-2012, 03:05 PM
7.கிளிண்டனை வரவேற்கிறார் அப்புசாமி..

http://www.appusami.com/HTML/htmlv103/images/clintonappu2.gif

”அடியே கிழவி! இதெல்லாம் அபூர்வம்டி. பேப்பரிலே கொட்டை எழுத்திலே போட்டிருக்கானே. உன் காடராக்ட் கண்ணுக்குத் தெரியலையா? இருபத்திரண்டு வருஷத்துக்கு அப்புறம் நம்ம இந்தியாவுக்கு வர்றார்டி அமெரிக்க ஜனாதிபதி!” அப்புசாமி மனைவியிடம் மன்றாடிக் கொண்டிருந்தார்.

ஆந்திரா மஹிளா மண்டல் என்ற சமூக அமைப்புடன் சீதாப்பாட்டிக்கு நல்ல நெருக்கம்.

ஹைதராபாத்துக்கு விஜயம் செய்யும் கிளிண்டன், அங்குள்ள பிரபல மகளிர் சமூக நல மன்றம் ஒன்றுக்கு ஓரிரு நிமிடங்கள் வருகை தர ஒப்புக் கொண்டுள்ளதாக சீதாப்பாட்டிக்கு ‘ரிலயபிள் சோர்ஸ்’ மூலம் தெரிய வந்தது.

ஹைதராபாத் மஹிளா மண்டலின் தலைவி அல்லுபொட்டி ஆவக்கா முடுவுடன் ஈமெயிலில் தொடர்பு கொண்டு கிளிண்டன் விஜயத்தின் போது அவரைச் சந்திக்கும் குழாத்தில் தனக்கும் அனுமதி பெற்றுவிட்டாள்.

ஜனாதிபதியுடன் ஒரு ஸ்னாப், சில வார்த்தைகள் உரையாடல், வினாடி நேர வீடியோ அது போதுமே இந்த வருஷ பா.மு.க. தேர்தலில் அவளுக்கு வெற்றி தேடித் தர.

”நான் ஹைதரபாத் போகிறாப்பலே இருக்கும். டேக் கேர் ஆ·ப் த ஹவுஸ். மாவடு வாங்கி வெச்சிருக்கேன். எல்லாத்தையும் நீட்டாக் கழுவி உப்புப் போட்டு அந்தப் பெரிய பாரி ஜாடியிலே போட்டு வையுங்க. டி.டி., ஸன், ராஜ், ஜெயா எல்லாத்திலும் நியூஸ் பாருங்கோ…. ஹோட்டலிலே சாப்பிட்டுக்குங்க… ப்ளீஸ்… நல்ல ஓட்டலிலே. ஒரு வாரத்துக்கு உங்க அலவன்ஸ் ·பைவ் ஹண்ட்ரட் இந்த பர்ஸிலே வெச்சிருக்கேன்….”

”அடியே அராஜகி! கும்பலோட கோவிந்தாவாக நானும் உங்க திருக் கூட்டத்திலே கலந்து கிளிண்டன் தரிசனம் பண்ணிட்டு வந்துடறேண்டி…”

”சைல்டிஷாப் பேசாதீங்க… உங்களை யாராவது ரெகமண்ட் பண்ணணும்… அதற்கெல்லாம் உங்களுக்கு யோக்யதை இல்லே. சில பேர் சிலதுக்கு ஆசைப்படக் கூடாது” சீதாப்பாட்டி சொல்லிவிட்டு, கழகத்துக்குப் புறப்பட்டு விட்டாள்.

அவமானங்கள் அப்புசாமிக்குப் புதிது அல்ல. ஒரொரு தடவை அவமானப் படும்போதும் எழுச்சிக் குரல் எழும்பும். கொடிகட்டி ஆள்கிறவனின் கொட்டம் அடக்கிக் காட்டிட முடியவில்லையே ”அடியே சீதேய்! கூனனும் நிமிர்ந்து நடப்பான், குருடனும் விழி பெறுவான்… அடியே கிழவி! நிலைமையை மாற்றிக் காட்டுகிறேனடி…”

சவால் விட்டாயிற்று… ஜெயித்துக் காட்டணுமே என்று மண்டையைக் கிளறிக் கொண்டார்.

புழலேரி காய ஆரம்பித்தால் அரசியல்வாதிகளுக்கு கிருஷ்ணா நதி ஞாபகம் வருகிற மாதிரி, ஐடியா வற்றிப் போனால் நண்பன் ரசகுண்டுவை நாடுவதுதான் அப்புசாமிக்கு மாமூல்.

அவர் போன சாயந்தர நேரம், ரசகுண்டுவின் வீட்டில் ஜேஜேஜே என்று சாஸ்திரிமார் கும்பல். பளீர் பளீரென நெற்றியில் விபூதிப் பட்டைகள் மின்ன, ஒரு கையில் விசிறிச் சின்னத்துடனும் இன்னொரு கையில் ரெக்ஸின் போர்த்த ஏதோ புத்தகத்துடனும் ஏராளமான சைவப் பழங்கள் குழுமியிருந்தனர்.

என்னவாவது சினிமா ஷ¥ட்டிங்குக்கு இடத்தை விட்டிருக்கிறானா?

அகில இந்திய புரோகித சம்மேளனமா?

சித்தநாதன் மணம் வாசல்வரை வந்து அப்புசாமியை வரவேற்றது.

குழுமியிருந்த எல்லா வைதிக சிரோமணிகளும் எதற்கோ காத்திருந்தனர்.

ரசகுண்டு ஏ.ஆர். ரகுமான் மாதிரி ஓர் ஓரத்தில் நின்று கொண்டு, ”இஸ்டார்ட்! ஆரம்பிங்கோ,” என்று கத்தினான்.

உடனே அனைவரும் ஏதோ மந்திரங்களை ஏக காலத்தில் கோர(மா)ஸாகச் சொல்லத் தொடங்கினர்.

‘அடப்பாவி! ஏதோ ஓட்டல்லே சர்வரா இருக்கிற பயல்னு நினைத்துக் கொண்டிருந்தால் பயல் ஒரு வேத பாடசாலையே நடத்தறானே…’ ”ரசம்! ரசம்! சாதா ரசமாயிருந்த நீ எப்போடா வேத ரசமாக ஆனே?” என்று அவனருகே தாவிப் போய் அவனைக் கட்டிக்கொண்டார்.

”தாத்தோவ்! கிளிண்டன் வரவேற்பு மந்திர ·பைனல் ரிஹர்சல் நடந்துகிட்டிருக்கிறது. முடிச்சிகிட்டு உங்களோட பேசறேன்… உங்களுக்கும் பாட்டிக்கும் தினமும் சண்டை வரும்… ஆனால், அமெரிக்க பிரசிடெண்ட் கிளிண்டன் தினமும் வருவாரா?” ஐம்பது புரோகிதர்களை செலக்ட்பண்ணி தயார்பண்ணி ஹைதராபாத்துக்கு பேக்பண்ணி அனுப்பனும்” என்றவன், ‘அப்படி ஓரமாப் போய் அந்த பெஞ்சு மேலே சமத்தா உட்கார்ந்துக்குங்க’ என்றான்.

”ஏண்டா, நானென்ன சவரம் பண்ணிக்க சலூனுக்கா வந்தேன்! பெஞ்சுலே போய் உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்க… நெருப்புப் பத்திண்ட மாதிரி ஓடி வந்திருக்கேண்டா…” என்றார் படபடப்புடன்.

”எது தாத்தா பத்திக் கொண்டு எரியறது. ஒரு வாளித் தண்ணியை எடுத்து ஊத்த வேண்டியதுதானே? கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க… நான் பெரிய காண்ட்ராக்டுலே இருக்கேன்…” என்றான்.

அப்புசாமி, மனைவி சீதாப்பாட்டியிடம் தான் விட்ட சவாலை சுருக்கமாகத் தெரிவித்தார். ”எங்கும் கிளிண்டன் என்பதே பேச்சு… அந்த ஆளைச் சந்திக்கிறதே என் மூச்சு… ஆடுவமே பல்லு பாடுவமே!…” என்று அப்புசாமி வாயை முழுசாகத் திறந்து பாடிக் காட்டினார்.

”உங்க பல்லு ரொம்பத்தான் ஆடுது…” என்ற ரசகுண்டு, ”நீங்க எப்படித் தாத்தா கிளிண்டனை சந்திக்க முடியும் – அதுவும் ஹைதராபாத் போய்?”

”அடே படுபாவி!” என்ற அப்புசாமி அவன் முதுகில் பளாரென்று ஓர் அறை வைத்தார்.

”இத்தனை புரோகிதர்களோடே என்னையும் ஒரு ஆளாச் சேர்த்துவுட்டுடணும்னு உனக்குத் தோணலையே. ஒரு கும்பத்தையும் விசிறியையும் தூக்கிகிட்டு நானும் இவங்களோட புறப்பட்டுடறேன்… இது ஏன் உன் மர மண்டைக்குத் தோணலை?”

”மந்திரம்! மந்திரம் சொல்லணுமே தாத்தா! ஒங்களுக்கு மசால் தோசைதான் தெரியும்!”

”அடேய் ரசம்!… ஒரே ஒரு சான்ஸ்… சிங்கிள் டீ மாதிரி சிங்கிள் சான்ஸ் குடுத்துப் பாருடா! நம்ப ஊர் கிரிக்கெட் ஆட்டத்துலேகூட, உருப்படாத கேஸ்னு துரத்துன ஆளைத் திரும்பக் கூப்பிட்டுக்கிறது உண்டுடா… நீங்களெல்லாம் சொல்ற மந்திரத்தை நானும் மனப்பாடம் பண்ணிடறேன். விசிறி சொந்தச் செலவுலே வாங்கிக்கறேன். விபூதி நல்லாக் குழைச்சு பட்டை பட்டையாகத் தீட்டிக்கிறேன்… நீ சொல்றபடியெல்லாம் கேட்கிறேன்…”

”சரி, இந்தாங்கோ. இந்தக் காகிதத்தில் அச்சடிச்சிருக்கிற மந்திரங்களை நல்லாக் கடம் அடிச்சு மனப்பாடம் பண்ணுங்க.” என்று டர்ரென்று ஒரு தடிப் புஸ்தகத்திலிருந்த இரண்டு பக்கங்களைக் கிழித்துத் தந்தான் – அவர் உபத்திரவம் விட்டால் போதும் என்று.

அப்புசாமி அவன் தந்த காகிதத்தை வெகு பத்திசிரத்தையுடன் வாங்கிக் கொண்டு புறப்பட்டார்.

திடுக்கிட்டாள் சீதாப்பாட்டி. ஹைதராபாத்தில் அவள் தங்கியிருந்த ஓட்டல் அல்லோலகல்லோலப்பட்டது.

சீதாப்பாட்டியும் அவளது சினேகிதி ஒருத்தியும் பொறுமையாக லி·ப்டுக்காகக் காத்திருந்தனர். அப்போது,

‘தட்’ என்று சீதாப்பாட்டி மீது யாரோ அனாயாசமாக, எதிர்பாராத விதமாக ஒரு மோது மோதினார்கள். மாம்பலம் காய் மார்க்கெட் மாடு மாதிரி தனக்கு எதிர்பாராத விதமாக முட்டு கொடுத்த முரட்டு மிருகம் எது என்று கடுங்கோபத்துடன் சீதாப்பாட்டி திரும்பி நோக்கினாள்.

கணவர் அப்புசாமி!

சீதாப்பாட்டிக்கு இருதயமே நின்று விடும் போலிருந்தது. உடம்பு எங்கும் பட்டை பட்டையாக விபூதி. இடுப்பில் பளபளப்பட்டு! கமகம விபூதி வாசனை.

”மை காட்! என்ன கூத்து இது? ஹெளகம் நீங்க இங்கே வந்து முளைச்சீங்க?” என்றாள்.

”ஆமாண்டி கியவி! தானே முளைச்ச லிங்கம்…! தனுஷ்கோடி ராமலிங்கம்… பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருட்டாப் போய்விடாது. கிளிண்ட்டனை நான் நேருக்கு நேராக நின்னு வரவேற்கப் போறேன். சரி சரி… உன்கிட்டே பேசிக்கிட்டிருந்தால் என் மந்திரம் மறந்து போயிடும்…” என்றார் கையிலிருந்த சீட்டைப் படபடப்புடன் பார்த்துக் கொண்டு.

அதற்குள் இன்னொரு சாஸ்திரி அப்புசாமியை நெருங்கி, ”என்னய்யா கையிலே துண்டுச் சீட்டு! யாரு அந்தக் கிழவி? லவ் லெட்டரோ? யோவ்! கலிகாலம்ய்யா கலிகாலம்! நீரெல்லாம் ஒரு புரோகிதர். உமக்கு ஒரு மந்திரம்…” என்று கிண்டலடித்தார்.

அப்புசாமிக்குக் கோபம் பொத்துக் கொண்டு, வந்தது. ”டேய் கசுமாலம்! நீரெல்லாம் ஒரு புரோகிதர். உமக்கு ஒரு மந்திரம்…” மனப்பாடம் பண்ணினதைச் சரி பார்த்துக்கறேன். புரியுதா? பாரு உன் பொட்டைக் கண்ணைத் திறந்து…”

அந்த சந்தேக சரபசாஸ்திரி, அப்புசாமி நீட்டிய துண்டுக் காகிதத்தை வாங்கிப் பார்த்தார். படித்தார்.

பிறகு வாய்விட்டு கடகடவெனச் சிரித்தார்… ”இது… இதுவா உம்ம மந்திரம்! நாசமாய் போச்சு! இது வசிய மந்திரமய்யா…

நரம் வர்ஷீயாம்ஸம், நயன விரஸம் நர்மஸ¤ ஜடம்…

இந்த மந்திரத்துக்கு ‘ஸ்திரீ வஸ்யதரம்’னு பேரு! அர்த்தம் என்னன்னா… ஒரு கிழட்டு மனுஷன், காமாலை முதலிய தோஷங்களோடும் விகாரமான கண்ணோடு கூடினவனை ஸ்திரீ சுகமே விரும்பாத பரம ப்ராருதனாக இருந்தாலும் பராசக்தியுடைய கடைக்கண் பார்வைக்குப் பாத்திரமாக ஆகிவிட்டால் அந்தக் குரூர வடிவமான புருஷனை பூலோக புவர்லோக ஸ்வர்கலோகத்திலுள்ள ஸ்திரீகள் மன்மதனாக எண்ணிப் பின் தொடர்ந்து போவார்கள்..னு அர்த்தம்… கண்ணராவியே. இதையா உங்களுக்கு ரசகுண்டோ அணுகுண்டோ கொடுத்தான்… தெரிஞ்சுதுன்னா முதுகுக்கு டின்னு கட்டிடுவாங்கய்யா…”

அப்புசாமிக்கு இடி விழுந்தாற் போலாச்சு… ”ஐயோ… இதைதானே கஷ்டப்பட்டு மனப்பாடம் பண்ணி வெச்சிருக்கேன்..”

”சரி… சரி… உரக்க சொல்லாமல் வெறுமே வாயசைச்சுண்டு கோஷ்டியோட நில்லும்…” என்று சொல்லிவிட்டு ஓட்டல் வாசலுக்கு விரைந்தார் வாகனத்தில் சவுகரியமான இடம் பிடிக்க…

பிர்லா மந்திர் மேளதாள வாத்திய கோஷங்களுடன்… வேத வித்துக்களுடன், பண்டிதர் படையோடு காத்திருந்தது.

கிளிண்டன், மகளோடும் மாமியார் கிழத்தோடும் காரிலிருந்து இறங்கினார். கிளிண்டன் இஸ்லாமாபாத் விஸிட் பற்றிய கவலையில் இருந்தாலும் மாமியார் பாரதி ரோதத்துக்கு வேத கோஷ்டியின் கோஷம் பிடித்திருந்தது.

”வொண்டர்புல்! சூப்பர் ரிதம்!” என்று பாராட்டிக் கொண்டிருந்தவள் தனது அந்தரங்கக் காரியதரிசியிடம், ”ஐ லைக் திஸ் வேதா சான்ட்டிங் வெரிமச்… இந்த குரூப்புடன் ஒரு ஸ்னாப் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்,” என்ற தன் விருப்பத்தைச் சொன்னாள்.

ஆனால், இதைக் கேட்டு எரிச்சல்பட்ட கிளிண்டன். ”வேணுமானால் யாரானும் ஒருத்தருடன் படம் எடுத்துக்கொள்ளட்டும். க்ரூப்புடன் என்றால் டிலேயாகும். செக்யூரிடிகளுக்கு பாதுகாப்புப் பிரசினை ஏற்படும்,” என்று தனது அதிருப்தியை பிரத்தியேக காரியதரிசி மூலம் தெரிவித்துவிட்டார். ‘நோ ப்ராப்ளம்’ என்று மாப்பிள்ளையின் ஆட்சேபத்தை முக மலர்ச்சியுடன் பெற்றுக் கொண்ட பாரதி ரோதம், ”அதோ! அந்த பண்டிட் ஸ்மார்ட்டாக இருக்கிறார்.” என்று அப்புசாமிக்குப் பின் வரிசையிலிருந்த ஒரு அழகிய தடபுடலான மேக்கப்புடனிருந்த கனபாடிகளை சுட்டிக் காட்டினாள்.

ஆனால், துரதிருஷ்டவசமாக காரியதரிசிக்கு, மாமியார் மேடம் வரிசையிலிருந்த அப்புசாமியைத்தான் சுட்டிக் காட்டுகிறாள் என்று தோன்றி அப்புசாமியை மேடைக்கு அழைத்துப் போய் விட்டார்.

அப்புசாமிக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ‘நம்ம வசிய மந்திர ஊழலை அமெரிக்கத் துப்பறியும் இலாகா எப்படியோ கண்டு பிடித்துவிட்டது… நம்ம கதி அதோ கதிதான்’ என்று நினைத்தவாறு, ‘நான்… நான்… ரசம்… ரசம்… குண்டு! ரச குண்டு…’ என்று உளறினார்.

”குண்டு” என்ற வார்த்தையைக் கேட்டதும் காரியதரிசி ”மை காட்!” என்று அலறியவள், செக்யூரிடிகளுக்கான ரகசிய சமிக்ஞை பட்டனை தன்னிடமிருந்த ஸெல்லில் அழுத்தினாள்.

அடுத்த கணம் கும்பலிலிருந்த கண்காணிப்புப் படையினரின் ஒரு பகுதி வந்ததே தெரியாமல் வந்து அப்புசாமியை அலேக் செய்து கொண்டு போய் விட்டது.

கிளிண்டனும் கோஷ்டியினரும் வெற்றிகரமாக ஹைதரபாத் பயணத்தை முடித்துக் கொண்டு பம்பாய் புறப்பட்டாயிற்று.

அப்புசாமி ஒரு பயங்கரவாதக் கும்பலின் தலைவரோடு சம்பந்தப் பட்டிருக்கலாம் என்று அமெரிக்க உளவு ஸ்தாபனம் சந்தேகப்படுவதாகத் தெரிந்ததால், அவரை வெகு ஸ்பெஷலாக, வெகு ரகசியமாக நம்ம ஊர் போலீஸ் விசாரித்தது.

‘குண்டுன்னு அவர் உளறினது விபரீதமாயிற்று. தீவிரவாதிகள் யார் யார் என்று அவரை விசாரித்து உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது போலீஸ். ரசகுண்டு என்பது ஒருத்தன் பெயர் என்பதை சீதாப்பாட்டி தக்க சமயத்தில் ரசகுண்டுவையும் அழைத்துவந்து அவனது விசிட்டிங் கார்டு முதலியவற்றைக் காட்டி நிரூபித்து அவரை விடுவித்துக் கொண்டு, சென்னை வந்து சேர்ந்தாள்.’

ஸ்பெஷல் போலீஸ் விசாரணையினால் ஸ்பெஷலாக ஏற்பட்டிருந்த ஸ்பெஷல் ரணங்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.

அப்புசாமியின் உடம்பு பூராக் கட்டு.

”இதுக்குத்தான் சில ஆசைகள் சில பேருக்கு வரவே கூடாதுன்னு நான் சொன்னது…” என்றாள் சீதாப்பாட்டி. அத்தனை கட்டுகளுக்கு நடுவிலும் அப்புசாமி ரோஷமாக, ”அடியே கியவி! நானாவது கிளிண்ட்டனைப் பக்கத்துலே போய்ப் பார்த்தேன். நீ மண்டலி, சுண்டெலின்னு ஜம்பமாப் போனியே… பார்க்க முடிஞ்சுதா… அங்கே பிரசிடெண்டு தலையே காட்டலியே…”

அவர் ஒடிந்த கை மீது ஒரு கடிதத்தைப் போட்டாள்.

ஜனாதிபதி கிளிண்ட்டனின் அந்தரங்கச் செயலரிடமிருந்து சீதாப்பாட்டிக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம்.

மதிப்பிற்குரிய சீதாஜி,

ஜனாதிபதி கிளின்ட்டனின் ஹைதராபாத் வருகையின் போது கோவில் வரவேற்பில் சம்பந்தமில்லாத ஓர் ஆசாமி ஊடுருவியுள்ளது பற்றிய தகவலை தக்க சமயத்தில் கொடுத்து அவரை அகற்றுவதற்கு உதவி கரமாக எச்சரித்ததற்கு மிக்க நன்றி.

ஜனாதிபதி தமது பிரத்தியேக நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறார்.

பியர்சன், அந்தரங்க செயலர் அலுவலகம்.

”துரோகி! துரோகி! நீதான் காட்டிக் கொடுத்த துரோகியா…” அப்புசாமி கூவினார்.

”பை த வே, மை டியர் சார்… இன்னியோட ஸ்பெஷல் நர்ஸிங் ஹோம் ட்ரீட்மெண்ட் முடிகிறது. இனிமேல் ஜெனரல் ஆஸ்பத்திரியிலே தரை வார்டுதான் உங்களுக்கு” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் சீதாப்பாட்டி.

”சரிதான் போடி… அந்த வசிய மந்திரத்தை மட்டும் ஒழுங்காக நான் சொல்லியிருந்தேனால் கிளிண்ட்டன் மாமியார் என்னை அமெரிக்காவுக்கே கூடக் கூட்டிப் போயிருப்பார்… பாவி கெடுத்தியேடி…” என்று முணுமுணுத்துக் கொண்டார் அப்புசாமி.

கலைவேந்தன்
24-08-2012, 03:17 PM
யாரும் இந்த கதையை படிக்கலையா..? சரி .. சரி.. இன்னும் சில கதைகள் போட்டுட்டு இந்த திரியை முடிச்சுக்கிறேன்.

கலைவேந்தன்
24-08-2012, 03:19 PM
8. ஸெல்லின் செல்வர் அப்புசாமி..

அப்புசாமி மட்டும் ஒரு தீவிர கட்சித் தொண்டனாக இருந்திருந்தால் நிச்சயமாக மனைவி சீதாவின் புகைப்படத்தை எல்லாச் செய்தித் தாள்களிலும் குறைந்த பட்சம் அரைப் பக்கத்துக்காவது போட்டு, ‘ஒலி கொடுத்த தெய்வமே! ஒப்பில்லா மணியே! ஸெல்லு கொடுத்த ஸெகதீஸ்வரியே! என் காது உன் காலில் அம்மா! நீயே இல்லத்தரசி! நீயே ஸெல்லுத்தரசி!

இவண்

உன் ஊழியனும் கணவனுமான ஸெல்லுசாமி (பழைய பெயர் – அப்புசாமி) என்று புகழ்மாலை சூட்டியிருப்பார்.

பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிற அளவுக்கு அவருக்கு வசதி இல்லாததால் பூசலார் நாயனார் மனசுக்குள்ளேயே இறைவனுக்குக் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்த மாதிரி, மனைவியைப் பலவாறு தோத்திரம் செய்து, அனைத்துப் பத்திரிகைகளிலும் மானசீகமாகப் பிரசுரித்து மகிழ்ந்தார்.

ஒரு பத்திரிகையில் இரண்டு முழுப்பக்கத்துக்கு சீதாப்பாட்டியின் முகத்தை மட்டும் க்ளோஸப்பாகப் போட்டு, ஓர் ஜாதகக்தில் ஸ்டாம்பு சைஸில் அடக்க ஒடுக்க முகபாவத்துடன் பயம் முக்கால் பக்தி கால்வழியும் அப்புசாமியின் தலை!

‘தலைவியின் காலடியில் தொண்டன் அப்புசாமி? என்று நாலே நாலு வார்த்தை மட்டும்தான் இரண்டு பக்கத்திலும். இன்னொரு பத்திரிகையில் அதனுடைய பதினாறு பக்கங்களிலும் ஓரொரு பக்கத்திலும் சீதாப்பாட்டியின் தலை. ஒரே மாதிரியான தலை. கம்பீரமான அதே சிரிப்பு. ஏன் பதினாறு பக்கத்திலும் ஒரே தலை? ஆமாம். இன்னும் பதினாறு பக்கம் இருந்தாலும் போடுவேன். கேட்க நீ யார்? ஸெல்லு வழங்கிய என் செல்லம்மா என் சீதை! உனக்கேன் கும்பி எரிந்து குடல் கருகுது. வெந்த என் உள்ளத்தை சொந்த ஸெல்லு கொடுத்து, ரணம் ஆற்றிய குணமே! உன் கருணையே மறவேன் தாயே மறவேன்!

தன் மனசுக்குத் தோன்றிய வசனத்தையெல்லாம் மனைவி மீது மானசீகமாகக் கொட்டி மகிழ்ந்தார்.

ஒரு சாண் வயிறு வளர்க்கப் பல சாண் நீளத்துக்குப் புகழ்வதுதான் மரபாகிவிட்டது! அப்புசாமி ஓர் ஆறங்குல நீள ஸெல்லுலர் போனுக்காகத்தான் மனைவியைப் புகழ்ந்து கொண்டாடினார்.

அவரது நெடுநாளைய ஆசையைச் சீதாப்பாட்டி நிறைவேற்றி விட்டாள். ‘உங்களுக்கு பர்த்டே ப்ரெசென்ட்டாக என்ன வேண்டும்? உங்கள் சாய்ஸ்!’ என்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ஒரு வார்த்தை மரியாதைக்குக் கேட்டதும் டகாரென்று பிடித்துக் கொண்டு விட்டார்.

“சீதே! நீ போகிற இடத்திலெல்லாம் கையில் வெச்சிக் கொண்டு பேசறியே! அது மாதிரி எனக்கும் ஒரு ஸெல்போன் வாங்கிக் குடுத்துடு! என் ஆயுசுக்கும், ஏன் அவசியமானால் ஆயுசு முடிஞ்சவுட்டுக் கூட ஆவியா இருந்து உன்னை வாழ்த்திக் கொண்டிருப்பேன்! இதுவே என் இறுதி ஆசை!” என்று அவர் சொன்னது சீதாப்பாட்டியின் மனசை ‘டச்’ செய்து விட்டது.

“ஓய் டு யு டாக் ரப்பிஷ்! வாயைப் போய் வாஷ் செய்யுங்க!” என்று செல்லமாகக் கடிந்து கொண்டு பிறந்த நாளன்று ஞாபகமாக அவருக்கு ஒரு ஸெல் போன் வாங்கித் தந்து விட்டாள்.

அது வந்ததிலிருந்து அப்புசாமி ‘சொல்லின் செல்வர்’ மாதிரி ‘ஸெல்லின் செல்வர்’ ஆகிவிட்டார் – முழு நேரத்துக்கும்.

பாட்டி காரில் போய்க் கொண்டிருக்கும் போது வீட்டிலிருந்து அப்புசாமி கூப்பிட்டு நலம் விசாரிப்பார்.

கழகக் குரலாக இருக்கும் என்று பாட்டி காதில் வைத்தால் அரை நிமிஷத்துக்கு முன் பேசிய கணவரேதான். “ஹி ஹி! சீதே! எப்படி இருக்கே! கார் ஓட்டிண்டிருக்கியாக்கும்! இப்போ எந்த இடத்திலே இருக்கே!” என்று மினிட்டுக்கு மினிட் அவள் இருக்குமிடத்தை விசாரிப்பார்.

“பனகல் பார்க் பக்கமா? சீதே! பசுபசுன்னு கொத்தமல்லி இருக்கும்! ஒரு கட்டு வாங்கிப் போட்டுண்டு வா!” என்று உத்தரவிடுவார்.

“இங்கே மழை தூறுகிறது! துணியையெல்லாம் எடுத்து மடிச்சு வெச்சிட்டேன். ஆமாம். பட்டுப் புடவையை இன்னிக்கே கொண்டு போய் அயர்னுக்குக் கொடுத்துடட்டமா? மணி மூணாகிறது. அவன் பாட்டுக்கு வண்டியைத் தள்ளிகினு போயிட்டான்னா… ஹஹஹ! எதுக்குக் கேட்கிறேன்னா…”

“ப்ளீஸ்!” என்று சீதாப்பாட்டி அலறுவாள். “போனைக் கட் பண்ணுங்க. ஸெல்லில் பேசறீங்க ஜாக்கிரதை! உங்க இடியாடிக் அரட்டைக்கெல்லாம் நான் பே பண்ணியாகணும்!”

சிகரம் வைத்தாற்போல் ஒரு காரியம் ஆகிவிட்டது. டிரைவ் செய்து கொண்டே ஸெல்லில் பேசியதற்காக சீதாப்பாட்டியை ஒரு சார்ஜண்ட் மடக்கிவிட்டான். ஆன் த ஸ்பாட் ஆயிரம ரூபாய் அபராதம் போட்டே தீருவேன் என்று சார்ஜ் ஷீட்டைக் கூட எடுத்து விட்டான்.

சீதாப்பாட்டி தான் ஓர் ஆனரரி மாஜிஸ்திரேட்டாக இருந்ததை விசிட்டிங் கார்டை எடுத்துக் காட்டிக் கூறியதால் ஒரு சலாமடித்து சார்ஜண்ட் அபராதம் விதிக்காமல் விட்டு விட்டான்.

“இனி மேல் நெவர் யூஸ் யுவர் ஸெல், ஐ ஸே” என்று கடுமையாக எச்சரித்து வைத்தாள் பாட்டி.

ஆனால் அவள் ஆணையால் அப்புசாமியின் ஆவலுக்கு அணையிடமுடியவில்லை.

பாத்ரூமில் இருந்து கொண்டு ஸெல்லில் நண்பன் ரசகுண்டுவின் ஓட்டலுக்கு பேசுவார். “சப்ளையர் ரசகுண்டு அங்கே இருக்காரா?” என்பார். “அவரு டூட்டியிலே இருக்கார்” என்று முதலாளி கடுகடுத்தால், “அர்ஜெண்டா கூப்பிடுங்க சார். அவுங்க அம்மாவை ஜெனரல் ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்குது” என்றார்.

ரசகுண்டு லைனில் வருவதற்கு ஐந்து நிமிஷமாவது ஆகும்.

“என்னடா ரசம்! ரொம்ப வேலையோ? உங்க முதலாளி என்ன ரொம்பத்தான் அலட்டிக்கிறான்!” என்று சாவகாசமாகப் பேசுவார். “இன்னிக்கு பீச்சுக்கு வர்ரியா? பீமனையும் தள்ளிகிட்டு வா. முடிஞ்சா எதுனா மிக்ஸர், பக்கோடா அழுக்கிக்கினு வா… ஏண்டா துடிக்கிறே? உங்க முதலாளி என்ன தலையை வாங்கிடுவானா?” இந்தத் தினுசில் சாவகாசமாகப் பேசுவார்.

மாதத்துக்கு அறுநூறு ரூபாய் கட்டியது போக சீதாப்பாட்டி இப்போது அப்புசாமியின் ஸெல்லுக்கும் சேர்த்து, அவர் வீணாகக் கூப்பிடும் கால்களுக்கும் சேர்த்து ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் கட்ட வேண்டியிருந்தது.

ஸெல்லை ஒரு வினாடியும் பிரியாது, செல்லுகிற இடமெல்லாம் எடுத்துக் கொண்டு போவார். நடந்து கொண்டே பேசுவார். குளித்துக் கொண்டே, ஏன் தூங்கிக் கொண்டே கூடப் பேசுவார். ‘என் குறட்டை சத்தம் கேட்டியா? ஹஹஹ! சிம்ம கர்ஜனை மாதிரி இல்லே? சீதேக் கிழவி இது ஒண்ணுக்குத்தான் என்கிட்டே பயப்படறா?” என்று ரசகுண்டிடம் பேசிப் பெருமைப்பட்டு மகிழ்வார்.

குரங்குகிட்டே, கொடுத்த வாழைப் பழத்தைப் பிடுங்குவதை விட, அப்புசாமியிடம் தந்த ஸெல்லைப் பறிப்பது படு கடினமான வேலை என்பதை சீதாப்பாட்டி உணர்ந்தாள்.

நைஸாக அவரிடமிருந்து ஸெல்லை வாங்கி உள்ளேயிருக்கிற ஸிம் கார்டைக் கழற்றிச் செயலிழக்கச் செய்து விடலாமென்று பார்த்தாள். ஆனால் ஸெல்போனை இரவும் பகலும் இருபத்து நாலு மணி நேரமும் நல்ல பாம்பு மாணிக்கத்தைப் பாதுகாக்கிறது என்ற கதையாக, சந்தேகக் கணவன் மனைவியை நாள் பூரா உஷாராகப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஆட்டோப் பிரியாணி மீட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போல ஸெல்போன் நினைவாகவே இருந்தார்.

“பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு ஒரு ப்ராவர்ப் உண்டு. அது சரியாயிருக்கு” என்றாள் சீதாப்பாட்டி.

“என்னைப் பிச்சைக்கார நாயி என்கிறே? அப்படித்தானே?” என்ற சீறினார் அப்புசாமி.

“ஏறக்குறைய” என்றாள் சீதாப்பாட்டி.

அப்புசாமியின் ரோஷப் பகுதிகளில் ஏவுகணையாக அந்த வார்த்தை பாய்ந்தது.

“இனிமேல் ஒரு பைசா என் ஸெல்லுக்காக நீ தரத் தேவையில்லைடி. ஸெல் பில்லுக்காக நான் வண்டி இழுத்தோ, சென்ட்ரல் ஸ்டேஷனிலே போய் லைசன்ஸ் இல்லாத போர்ட்டராக உழைத்தோ, கட்சி ஊர்வலங்களிலே கலவரத் தொண்டனாகக் கலந்து கொண்டோ சம்பாதிக்கிறேண்டி.”

“வெல்கம். ஆம்பிளையாக இருந்தால் செய்யுங்கள்.”

அப்பு¡சமியிடம் ரோஷத் தீயை மூட்டிவிட்டு சீதாப்பாட்டி ஷாப்பிங்குக்குப் புறப்பட்டு விட்டாள்.

சென்ட்ரல் ஸ்டேஷன். ஸதாப்திக்குப் போகும் பெங்களூர்க் கும்பல் விடியற்காலையில் விரைந்து கொண்டிருந்தது.

வயசான ஒரு போர்ட்டர் – வித்தவுட் யூனிபார்ம், “சார், சார்! லக்கேஜு சார்! மூட்டை முடிச்சு அம்மணி! குடுக்கறதைக் குடுங்க! போணிபண்ணுங்க தாயி!” என்று சகல பிரயாணிகளிடமும் ஓடி, ஓடி வேட்பாளர் ஓட்டுக்குக் கொஞ்சுவது போல் கார்களை வழிமறித்துக் கரடிப் பொம்மை விற்பவன் போல கெஞ்சிக் கொண்டிருந்தார்.

“யோவ பெரீவரு!” என்று இரும்புக் கரம் ஒன்று அப்புசாமியைக் கப்பென்று பற்றியது.

சிவப்பு உடையும் லைசன்ஸ் பட்டையும் அணிந்த அதிகார பூர்வமான கொழுத்த போர்ட்டர்!

“எடுமே கையை!” என்றார் அந்த யூனிபாரம் அணியாத கிழவர்.

“ஏய்யா பெரிசு! நாங்க இங்கே உட்கார்ந்திருக்கிற வங்கள்ளாம் புய்யனுங்களா? மரியாதியா ஏரியாவைக் காலி பண்ணிகிட்டு ஓடிரு!”

“ஓடாட்டி?”

“மவனே! கிராஸ் பண்ணாதே! கிழிஞ்சு பூடுவே! ஒரு எலும்பு கூட வேலைக்கு ஒதவாது.”

“மேலே கையை வெச்சிப்பாரு.”

“போடாங்க சொன்ட்டி! கையை வைக்கற தென்ன தூக்கித் தண்டவாளத்திலேயே கடாசிடுவோம்…”

“தைரியமிருந்தா செய்யி! முதல் அடி என்னுதா இருக்கட்டும்!” அப்புசாமி போர்ட்டரை ஓர் குத்து விட்டார்.

தனது பலத்தையும், சட்ட மீறுதலையும் கொஞ்சமும் எண்ணிப் பார்க்காமல் உரிமம் பெற்ற போர்ட்டரிடம் அவர் காட்டிய வீரம் சில சிமிட நேரமே நீடித்தது. கலாமை எதிர்த்த லட்சுமி ஸஹாய்போல வலுவில்லாத எதிர்ப்பு.

போர்ட்டர் ஒரு ·ப்ரீ கிக்கொடுத்தான் அப்புசாமிக்கு!

இலவச இணைப்பாக மூக்கில் ஒரு குத்து. ‘ஹா’வென்று மல்லாந்தார் அப்புசாமி. சக போர்ட்டர்களும் அப்புசாமிக்குத் தங்களாலான உதைகளைத்தந்தனர்.

கும்பல் கூடிவிட்டது. அப்புசாமி நினைவு இழக்கு முன் ஸெல்லில் வீட்டு எண்ணை அழுத்தினார். “சீ… சீ… சீதே! இங்கே சென்ட்ரல் ஸ்டேஷன்… ஸதாப்தி… நான் நான்… ஸமாப்தி! போர்ட்டர் வெள்ளம்… ரத்தம் அடிச்சி… நீ… வா… வா…”

அப்புசாமியின் மூக்கு மேல் பயங்கரமான பிளாஸ்திரி போட்டிருந்தது. டிரிப்ஸ் இறங்கிக் கொண்டிருந்தது.

ஒரு தனியார் நர்ஸிங் ஹோமில் செளகரியமான படுக்கையில் இதமான ஏர்கண்டிஷனுடன் தான் இருப்பதை உணர்ந்தார் அப்புசாமி. அருகே ஆவி பறக்கும் சூப்புடன் சீதாப்பாட்டி காத்திருந்தாள். அப்புசாமி அந்த ஆவி தன்னுடையதா சூப்புடையதா என்று சந்தேகாஸபதமாகப் பார்த்து மூக்கைத் தடவிக் கொண்டார். மூக்கு இருந்த இடத்தில் ஒரு ஸ்பீடு பிரேக்கர்!

“சீதே! சீதே! என் மூக்கு?” அலறினார்.

சீதாப்பாட்டி, கவலையுடன் “ஓய் த ஹெல் நீங்கள் ஸ்டேஷனுக்கெல்லாம் போய…” என்று அனுதாப்பட்டாள்.

“சீதே! ரோஷமில்லாமல் பல வருஷம் வாழறதைவிட, ரோஷத்தோடு சில மணி நேரம் வாழ்ந்தாலும் போதும்னு தோணிதது. ஆண்டவன் கொடுத்த கை, கால் உழைக்கறதுக்கு இருக்கு. மூட்டை தூக்கத் துணிஞ்சிட்டேன்!

மூக்கு தேவலையானதும் லைசன்ஸ் பட்டை வாங்கிகிட்டு முழு நேரப் போர்ட்டராக வேலை செய்யப் போறேன். என்னுடைய ஸெல் போனுக்காக நான் உழைக்கத் தீர்மானித்துவிட்டேன். நீ என் கண்ணைத் திறந்துட்டே. ஆனால் மூக்கை உடைச்சுட்டான் பாவி போர்ட்டர். ஆனால் நான என் ஸெல்லுக்காக உழைப்பதை மக்கள் சக்தி வந்தாலும் சரி, மகேசன் சக்தி வந்தாலும் சரி தடுக்க முடியாது. என் உயிரைக் கொடுத்து ஸெல்லைக் காப்பேன்!”

உங்கள் ஸெல்போன் பக்தியைப் பாராட்டறேன். ஆனால் என்றாள் சீதாப்பாட்டி. “உங்கள் ஸெல்போன் உங்க ஸெல் போன்… திணறினாள் சீதாப்பாட்டி.

“ஐயோ சீதே! என் ஸெல் எங்கே?” அவரை அவசரமாகத் தன் இடுப்பின் பக்கவாட்டுப் பகுதி, சுற்றுப் பகுதி மேல் கீழ் இடங்களைச் சோதித்துக் கொண்டார்.

வேறு ஏதேதோ தட்டுப்பட்டது! ஸெல் கிடைக்கவில்லை. “என் ஸெல்! என் ஸெல்!”

“பதட்டப்படாதீர்கள் டியர்! மனசைத் திடம் பண்ணிக்குங்க. எக்ஸைட் ஆகாதீங்க. உங்க ஸெல்… உங்க ஸெல்…”

“சீதே! என்னாச்சி என் ஸெல்போனுக்கு… எங்கே என் ஸெல்?”

“எனக்கு ஸெல்லை விட நீங்கதான் முக்கியம்…” கைக்குட்டையை உதடுகளில் ஒத்திக் கொண்டு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் சீதாப்பாட்டி.

“சீதே! இன்னாடி இழவு சொல்றே?”

“உங்க ஸெல்லைக் கொடுத்துத்தான் உங்களை மீட்டுக் கொண்டு வந்தேன். நீங்க மோதினது, தாக்கினது, போர்ட்டர்ஸ் யூனியன் தலைவரைப் பெரிய இடத்துலே மோதிட்டீங்க! விவகாரம் போலீஸ் வரைக்கும் போயிடும் போலிருந்தது. சரி, அவன் பெரிசு பண்ணாமல் இருக்க என்ன பண்றதுன்னு பார்த்தேன். நூறு இருநூறுக்கு காம்ப்ரமைஸ் ஆகிறவனாக இல்லை. உங்க செல் உங்க ஜிப்பாப் பையிலே இருந்தது.

சட்டென்று ஒரு ஐடியா ·பிளாஷ் ஆச்சு! இந்தாப்பா போர்ட்டர். கோபிச்சுக்காதே. கேஸைப் பெரிசு பண்ணாதே! சாரோட ஸெல் ·போனை நீ வெச்சுக்கோ’ன்னு சொல்லிட்டேன். உங்களை மீட்டுக் கொண்டு வர எனக்கு வேறு வழி தெரியலே. சென்ட்ரல் ஸ்டேஷன் பூராவும் ஜே ஜே என்று போர்ட்டர் கும்பல். உங்களை அடிப்பேன், வெட்டுவேன் குத்துவேன்னு… நீங்க மயக்கம் போட்டு விழுந்திருந்ததால் யு ஆர் நாட் அவேர் அ·ப்த ஸீனரி!”

“சீதே! ஸெல்லை அவனுக்குத் தாரை வாத்துட்டியா? அக்கிரமம்டி!” அலறினார்.

“ஸாரி மைடியர் சார்! யுவர் ஸெல்·ப் இஸ் மோர் ப்ரிஷியஸ் தேன் யுவர் ஸெல்,” என்றாள் சீதாப்பாட்டி அமைதியாக.

அப்புசாமிக்கு உடம்பு குணமாகி வீடு வந்து சேர்ந்து சில நாட்களாயிற்று.

“ஊம்… நடுவிலே வந்தது, நடுவிலே போய் விட்டது. வரும்போது என் கொண்டு வந்தோம். போகும்போது என்ன கொண்டு போகப் போகிறோம். இது என்னுதுதான்னு உலகத்திலே எதை எண்ண முடியுது. நேத்தைக்கு வேறொருத்தனது. இன்னிக்கு இன்னொருத்தனது. நாளைக்கு அது வேறொருத்தனது ஆகுது…”

துக்கம் கேட்க வந்த நண்பன் ரசகுண்டுவிடம் வேதாந்த பரமாக அங்கலாய்த்தார் அப்புசாமி.

ரசகுண்டு சொன்னான். “தாத்தா! நேத்துகூட உங்க ஸெல்லுக்கு போன் செய்தேன். அது எங்கியோ இருக்கு தாத்தா… அடிக்குது! ஆனால் ரீச்சபிளா இல்லை. ரீச்சபிளா இல்லைன்னு பதில் வர்றது. ஆ·ப் பண்ணி வெச்சிருக்காங்களோ என்னவோ” என்றான். “இப்பக்கூட போன் பண்றேன் பாருங்க” என்று டெலிபோனைச் சுழற்றினான்.

‘கிணு கிணுங்! கிணு கிணுங்!’ என்ற சன்னமான ஓசை சீதாப்பாட்டியின் காட்ரெஸ் பீரோவுக்குள்ளிருந்து மிக மிக மெல்லிசாக்க கேட்டது!

“அடியே கிழவி! போர்ட்டர்கிட்டே என் ஸெல்லைக் கொடுத்துட்டதெல்லாம் உன் ரீலா? பாவி…” சீதாப்பாட்டி சிரித்துக் கொண்டே, “உங்க ஸெல்·போனை நீங்க எனக்கு ப்ளெட்ஜ் பண்ணியிருக்கிறதாக நினைச்சுக்குங்க. உங்க மூக்கு வைத்தியத்துக்கு செலவான மூவாயிரம் ரூபாயை நீங்க மாசம் டென் ருபீஸோ ட்வென்ட்டி ருபீஸோ உங்க மன்த்லி பேட்டாவிலிருந்து கொடுத்துக் கழிச்சி முடித்ததும் உங்க ஸெல்லை நான் உங்களுக்குத் தந்துடறேன்!” என்றவாறு அவர் பதிலைத் தெரிந்து கொள்ள விரும்பாமல் கழகத்து வேலைக்குப் புறப்பட்டாள்.

jayanth
24-08-2012, 06:50 PM
இவ்வளவு அடி வாங்கிய அப்புசாமித் தாத்தாவ யாரும் "ரொம்ப நல்ல தாத்தா" ன்னு (நம்ம வடிவேல் ஸ்டைலில்) சொன்னாங்களா...???

கீதம்
25-08-2012, 07:14 AM
பாபா தாசன் அப்புசாமித் தாத்தா, சிரிக்கும் புத்தர் தாசன் அப்புசாமித் தாத்தாவான கதை ஜோர். எப்படியும் அவரை மருத்துவமனையில் படுக்கவைத்துவிடுகிறார் சீதாப்பாட்டி. இதிலே கணவன் சென்டிமெண்ட் வேறு. பாவம் தாத்தா.... என்ன இருந்தாலும் அவரை இப்படிப் போட்டு வாட்டுவது பரிதாபம்தான். அப்புசாமித் தாத்தாவின் தொடரும் சாகசங்களுக்காகக் காத்திருக்கிறேன். ரசனைமிக்கக் கதைகளின் பகிர்வுக்கு நன்றி கலைவேந்தன்.

கலைவேந்தன்
26-08-2012, 03:20 AM
பாக்கியம் ராமசாமியின் கதைகளுக்கு நான் சிறுவயது முதலாகவே ஆவல் கொண்ட வாசகன். இன்றும் அவரது கதைகள் பொலிவு குறையாமல் உள்ளமை பாராட்டத்தக்கது. என்னைப்போலவே அவரது கதைகளை ரசித்துப் பாராட்டும் உங்களுக்கு என் நன்றியும் பாராட்டுதல்களும். தொடர்வேன் கீதம்.

கலைவேந்தன்
06-09-2012, 04:15 AM
9.முறுக்கிக் கொண்டார் அப்புசாமி..

பா.மு கழக அங்கத்தினர்கள் ஸ்பெஷல் பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டு சாத்தனூர்க்கு உல்லாச பயணம் புறப்பட்டு போயிருந்தனர் சீதாப்பாட்டி பிரசிடெண்டாயிற்றே. கூடப் போகாமல் இருப்பாளா? அப்புசாமியின் காப்பிச் செலவுக்குக் காசு வைக்காமல் போய்விட்டாள்.

அப்புசாமி பல்லை கடித்துக்கொண்டு காப்பி போட தொடங்கினார். இரண்டாவது நிமிடமே கட்டை விரலைச் சுட்டுக்கொண்டு, சிறிது மெக்ஸிகோ நடனம் ஆடித் தீர்த்தார்.

வயிறு பசிக்கவும் வலை பீரோவை திறந்து பார்த்தார். எட்டணா சில்லறை மட்டும் ஒரு டப்பாவில் போட்டுவைத்திருந்தது. ஒரு மசால் தோசை அரை ரூபாய் விற்கிறதாம். என்னத்துக்காகும் இந்த ஐம்பது பைசா!

ஆத்திரத்துடன் வாசல் வழியே விட்டெறிந்தார், அடுத்த கணம், ”ஆ!” என்றொரு குரல் கேட்டது.

அப்புசாமி, பதறிப்போனவராய் பார்த்தார்.

அவர் வீசிய காசால் மண்டையில் அடிப்பட்டவராகத் தலையைக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு கொடுவால் மீசைக்காரர் நின்றிருந்தார்… அவர் பெயர் லிங்கப்பா.

தேனாம்பேட்டையிலுள்ள ஒரு பணக்கார சுப்பையாவின் காரியதரிசி.
சுப்பையாவின் ஒரே மகள் காத்தாயிக்கு கல்யாணம். ”பட்டணத்திலே பெஸ்ட்டாக யார் கல்யாணப் பலகாரம் செய்கிறவர்களோ, அவர்களைப் போய் பார்த்து ஆயிரம் அல்லது இரண்டாயிரம் என்றாலும் அட்வான்ஸ் குடுத்துவிட்டு வாரும் சீக்கிரம்!” என்று கட்டளைப் போட்டிருந்தார் சுப்பயா.

காரியதரசி லிங்கப்பா ஒரு இடத்துக்குப் பத்து இடமாக விசாரித்ததில், எல்லோருமாக ஒருமுகமாக நுங்கம்பாக்கத்தில் ஒரு அம்மாள் பெயரைச் சிபாரிசு செய்தார்கள்.

”சீதையம்மாள் என்று பெயர். சாதாரணச் சமையல் ஆள் என்று நினைக்க வேண்டாம். ரொம்ப ரொம்ப பெரிய இடத்துக் கல்யாணத்துக்தான் அந்த அம்மாள் பலகாரம் செய்வது வழக்கம். மலேயா, சிங்கப்பூர், ஜப்பான் முதலிய இடங்களுக்கெல்லாம் கூடப் போய் தமிழ்நாடு முறுக்கு தினுசுகளைச் செய்து கொடுத்து அகில உலக புகழ் பெற்றவளாக்கும். மிகவும் வசதியான நிலையில் இருப்பவள். ரேட் கொள்ளையா இருக்கும்,”என்று சொன்னார்கள்.

”ரேட்டைப் பற்றி என்ன?” என்று காரியதரிசி லிங்கப்பா தனது கொடுவாள் மீசையை வருடிக்கொண்டு காரில் விர்ரென்று சீதையம்மாளைத் தேடிக்கொண்டு கிளம்பினார்.

”சீதையம்மாள் வீடு எது?” என்று லிங்கப்பா கேட்டதற்கு வழியோடு போன யாரோ ஒருத்தர், ”அடுத்த தெரிவிலே இருக்காங்க, சீதாப்பாட்டினு கேட்டா யாரும் சொல்வாங்க,”என்று சொல்லிவிட்டார். அவர் நேரா சீதாப்பாட்டி வீட்டுக்கு வந்து விட்டார்.அப்போதுதான் டங்கென்று ஒரு நாணயம் அவர் தலையில் வந்து விழுந்தது.

”அடடே உங்க மேலே காசு பட்டுவிட்டதா? என் காசுதான். ஆத்திரத்தில் விட்டெறிந்துவிட்டேன். இப்போ அதைத் தேடி எடுத்தால்தான் டிபன். என் தலையெலுத்தைப் பாருங்கள், இப்படிப்பட்ட மனைவியைக் கட்டிக்கொண்டு…” என்று அங்கலாய்த்தார் அப்புசாமி.

”உங்க மனைவி மாதிரி ஒரு அம்மா இனி பிறந்துதானுங்க வரவேண்டும். அட!அட! அவர்களைப் புகழாதவங்க இல்லை. வெளியூர்காரங்களெல்லாம் பாராட்டினர். இல்லாட்டா நான் ஏன் வீடுதேடி வர்றேன்?” என்றார் லிங்கப்பா, அடிப்பட்ட வலியையும் மறந்து.

அப்புசாமிக்குக் சுடச்சுட இஞ்சி கஷாயத்தை ஊற்றிய மாதிரி இருந்தது.
சீதையைத் தேடிக்கொண்டு வந்து இப்படி ஒரு புகழ் மாலையா?செத்தும் கெடுத்தான் திருவாழத்தான் என் பதைப் போல,அவள் ஊரிலே இல்லாதபோதும் அவளுக்குப் புகழுரைகளா?

வந்தவர் அம்மா இல்லீங்களா?” என்றார்.

”சாத்தனூர் இல்லே,சாத்தனூர்!அங்கே போயிருக்கிறாங்க உல்லாச பயணம்….”

”ஓஅப்படியா?’ ‘திடுக்கிட்டார் வந்தவர். ”எப்போ வருவாங்க?”

”யாருக்குத்தெரியும்? ஆமாம் எதற்காக இவ்வளவு அக்கறையாகக் கேட்கறீங்க சீதைப்பத்தி?”

”வேறு எதுக்குங்க தேடிவரப் போறேன்? வருகிற மாசம் நாலாம் தேதி எஜமானர் பொண்ணுக்கு கல்யாணம். அம்மாவைத்தான் பெரிசாக நம்பியிருக்கிறேன். எல்லா விஷயத்துக்கும் உங்களைப் பார்த்துப் பேசி அட்வான்ஸையும் கொடுத்துட்டுப் போகலாம்ணுதான் வந்தேன்.”

”அட்வான்ஸ்!”அப்புசாமி விழித்தார். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் என்ன சம்பந்தம்?

”எதற்கு அட்வான்ஸ் தரப்போறீங்க?”

”வேறு எதற்குங்க முறுக்கு, அதிரசம், இன்னும் மீதி கல்யாண பட்சணங்கள் செய்வதற்குதான்.”

தன்னைப்போல யாரும் பேத்த முடியாது என்று தருக்கிக் கிடந்த அப்புசாமி அயர்ந்து போய்விட்டார். ஆசாமி என்ன இப்படிப் பேத்துகிறான் என்று.

”அட்வான்ஸ் வாங்கிக் கொள்ளுங்கள் முதலில். அம்மா இல்லாட்டி என்ன? வந்ததும் சொல்லுங்க.” என்று நூறு ரூபாய் நோட்டு ஒன்றை அப்புசாமியின் கைக்கு எதிராக நீட்டினார் லிங்கப்பா.

அப்புசாமி அட்வான்ஸை வாங்கிச் சட்டைப்பையில் போட்டுக்கொண்டார்.

”அவள் வந்தவுடன் சொல்லிவிடறேன். ரொம்பச் சந்தோஷம்,”விடை கொடுத்தார்.

கைக்கு நூறு ருபாய் வந்ததும்,ஆனந்தம் தாங்கவில்லை, நுறு ரூபாய்க்குத் திடீர் எஜமானராகியதும்,புது ரத்தம் பாய்ந்தது போலிருந்தது.

‘அடி அற்ப சீதே! எட்டணாவை வைத்துவிட்டுப் போனாயே என் செலவுக்கு!எப்படித் தானாக நூறு ரூபாய் தேடிவந்தது பார்த்தாயா? இனி இந்த நூறு ரூபாய் நரி தின்ன கொக்கரக்கோதான்!’என்று சீட்டி அடித்தவாறு தன் சினேகிதர்களான பீமாராவையும், ரசக்குண்டுவையும் தேடிக்கொண்டு கிளம்பினார்.

உல்லாசப் பயணத்திலிருந்து திரும்பி வந்து பல நாள் ஆகியும் கூட, அப்புசாமி நடந்த விஷயத்தையோ, அட்வான்ஸ் மோசடியையோ பற்றி வாய்திறக்கவில்லை.

கைமுறுக்கு அட்வான்ஸ் ஊழலிலிருந்து எப்படித் தப்புவது என்று திணரிக் கொண்டிருந்தார்

நாள் நெருங்க நெருங்க, அவரைக் கவலைகள் பிடித்துத் தின்ன ஆரம்பித்துவிட்டன. கொடுவால் மீசைக்காரன் எப்போது வந்து விசயத்தை உடைக்கப் போறானோ? எங்காவது தலைமறைவா ஓடி ஒளிந்துவிடலாமென்றால் சீதை அல்லவா பாஸ்போட் வழங்கித் தொலைக்க வேண்டும்?

அன்றைக்கு சீதாப் பாட்டி பா.மு. கழகத்திலிருந்து வீட்டுக்கு வந்தால், போர்டிகோவில் ஒரு கார் நின்றுக்கொண்டிருந்தது. யாருடைக் கார் அது என்று தனக்குள் யோசித்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள். அவள் கண்ட காட்சி அவளை மெய் சிலிர்க்க வைத்தது.

அப்புசாமி சாஷ்டாங்கமாக ஒரு கொடுவால் மீசைக்காரரை நமஸ்காரம் செய்து, அன்னாருடைய காலைப்பிடித்துக் கொண்டிருந்தார்.டிப்ளமாடிக்காக ஓர் அழுத்தமான கனைப்பு கொடுத்தாள், வாசற்படி பக்கமிருந்து சீதாப்பாட்டி.

அப்புசாமி ”ஆ! சீதே! வந்திட்டியா.என்னக் காப்பாத்து சீதே…”என்று எழுந்து ஓடிவந்து சீதாப்பாட்டியின் பின்னால் ஒளிந்து கொண்டார்.

சீதாப்பாட்டி அவரைத் தட்டி கொடுத்து, ” பயப்படாதீங்கள். ஐ அம் ஹியர்… வாட் இஸ் த மாட்டர்?’என்று அபயம் கொடுத்த பிறகுதான், அவருக்கு உயிர் வந்தது.

சீதாப்பாட்டியைப் பார்த்ததும், ”கொண்டுவா முறுக்கை!”என்றார் மீசைக்காரர்.

”வாட் நான்ஸன்ஸ் ஆர் யூ டாக்கிங்…யார் நீங்கள்?ஹ¥ ஆர் யூ?” என்று கர்ஜித்தாள் சீதாப்பாட்டி. ”என்ன ‘கட்ஸ்’ இருந்தாள் இங்கே வீட்டுக்குள் வந்து என் ஹஸ்பண்டை மிரட்டுவீர்கள்?முறுக்காவது கிறுக்காவது.’

”நன்றாயிருக்கம்மா நீங்க பேசறது. கெளரவமா பெரிய இடத்து ‘முறுக்கம்மா’ ஆயிற்றே என்று வீடு தேடி வந்து அட்வான்ஸ் நூறு ரூபாய் கொடுத்தால், அதை வாங்கி முழுங்கிட்டு, முறுக்கு கிறுக்கு என்றா பேசுறீங்க!”

சீதாப்பாட்டிக்குச் சட்டென்று புரிந்தது. அடுத்த தெரு முறுக்கு சீத்தையம்மாவைத் தேடி தவறுதலாக இந்த நபர் இங்கே வந்திருக்கிறார். அப்புசாமி அவரைப் பயன்படுத்திக் கொண்டு விட்டார் போலும். ”டோண்ட் வொர்ரி” என்றாள் சீதாப்பாட்டி அமைதியாக. ”எல்லாப் பட்சணங்களுக்கும் யார் அட்வான்ஸ் வாங்கினார்களோ அவரே வந்து செய்து தருவார். ப்ளீஸ்… உங்கள் அட்ரஸைக் கொடுத்துவிட்டு போங்கள்”

”சீதே..” அப்புசாமி திணறினார்.

”இவரா …இவரா வந்து பலகாரம் பண்ணுவார்?” லிங்கப்பா திகைத்தார்.

சீதாப்பாட்டி சிரித்தாள் அலட்சியமாக. ”யூ டோண்ட் நோ ஹிம். கல்யாண பலகாரம் செய்வதற்கென்றே அவதாரம் பண்ணினவராக்கும் இவர். இவர்தான் என் குரு. இவரிடம்தான் நான் கற்றுக்கொண்டதெல்லாம். ரொம்ப அடக்கமானவர். அதனால் இப்படி நடுங்குகிறார். ஐ ஷல் ஸீ இட் இஸ் டன்… நீங்கள் போய் வாருங்கள்.”

அவர் போனதும், சீதாப்பாட்டியின் பார்வை அப்புசாமியின் மேல் பாய்ந்தது. ”எவ்வளவு நாளாக இந்தமாதிரி ·ப்ராட்? வேர் இஸ் தட் மணி? மேசை மீது வையுங்கள் ”என்றாள்.

அப்புசாமி பூசை மணியைக் கொண்டுவந்து பவ்யமாக வைத்தார்.

”ஐ ஸே, கரன்ஸி!” என்று சீதாப்பாட்டி அதட்டிய அதட்டலில், அப்புசாமி இரண்டு கைகளையும் மேலே தூக்கினார்.

”சீதே… நீ சொல்றதை நான் செய்கிறேன். ரூபாய்க்கு ஒரு தோப்புக்கரணமா. நூறு போட்டுவிடட்டுமா?”

சீறினாள் சீதாப்பாட்டி: ”ஹ¥ வான்ட்ஸ் யுவர் அக்ளி பஸ்கீஸ்? உங்களை எப்படி டீல் பண்ணுவதென்பது எனக்குத் தெரியும்.
பி ப்ரபேர்ட்…”

விடியற்காலை நாலு மணி. ‘சரக்’ என்று அப்புசாமியின் துப்பட்டி பறிமுதலாயிற்று.

” ஓ! நீயா சீதே! காப்பி சாப்பிடுவதற்காக நான் சமையலறைக்கு வரணுமா? என் சமர்த்துக் கண்ணில்லையா, கொண்டு வந்துடுடா மணி!” என்று செல்லம் கொஞ்சினார் அப்புசாமி.

“காப்பி வேறு எக்ஸ்பக்ட் பண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? சீக்கிரம் வந்து அரிசியை இடியுங்கள்! நைட்டே ஊறப்போட்டு விட்டேன்,” என்று உறுமினாள் சீதாப்பாட்டி.

அப்புசாமி புரியாதவரைப்போல, ”அரிசியை இடிக்கிறதா? எதற்குச் சீதே?” என்றார்.

”வாயை மூடிக்கொண்டு ஒபே மை ஆர்டர்ஸ்… எடுத்துக் கொள்ளுங்கள்அந்த
உலக்கையை!”

”எதற்குச் சீதே இதெல்லாம்?”

”இதுதான் உங்கள் கொழுப்பு கரைவதற்கான எக்ஸ்ர்ஸைஸ்கள்! சீக்கிரம் நைஸாக அரிசியை இடிக்கணும். மிஷின் தோற்றுப் போகணும்.”

”சீதே! இது அநியாயம், அக்கிரமம். என்னைப் பார்த்தா உலக்கை போடச் சொல்கிறாய்?”

”எஸ்…..”என்ற சீதாப்பாட்டியின் கண்களில் கறாரும் கண்டிப்பும்…கொப்பளித்தன.

”என்ன சீதே…மாவு எதற்கு? எதற்கு இதை இடிக்கச் சொல்கிறாய்?”

”எதற்காக? யுவர் குட் ஸெல்·ப் இஸ் கோஸ்ட் டு மேக் கல்யாண முறுக்கு! முறுக்கு
செய்ய உங்களுக்கு ட்ரெயினிங் தரப் போகிறேன். ஒருவாரம்.”

அப்புசாமிக்கு உலக்கையைப் பார்த்ததும் அழுகை அழுகையாக வந்தது.

”க்விக்! சீக்கிரம் ஆகட்டும்… உலக்கையை எடுங்கள். டோன்ட் ஹோல்ட் இட். ஸ்ட்ரெய்ட்… கொஞ்சம் சாய்வாக …கரெக்ட்…இடியுங்கள்!” என்று அதட்டினால் சீதாப்பாட்டி. ஒரு வாரத்துக்கு முறுக்குப் பயிற்சியில் சிக்கிய அப்புசாமி படாதபாடு பட்டுவிட்டார். அப்படியும், முழுசாக ஒரு வட்ட முறுக்கு செய்ய அவரால் முடியவில்லை.

குறிப்பிட்ட தினம். கல்யாண வீட்டுக் ஆள் காரில் வந்தான். ஈவு இறக்கமில்லாமல் சீதாப்பாட்டி அப்புசாமியை ஏற்றுமதி பண்ணி விட்டாள்.

அப்புசாமி வியர்த்து வழியக் கல்யாண வீட்டில் சமையல் கட்டில் நின்று கொண்டிருந்தார். எப்படி அடி உதை படாமல் இந்த வீட்டிலிருந்து வெளியேறுவது? இந்த லட்சணத்தில், ” எஜமானர் ஒரு ஸாம்பிள் முறுக்கு கொண்டு வரச் சொல்கிறார்!” என்று ஆள் வேறு வந்து விட்டது.

அப்புசாமி மாவைப் பிசைய, மாவு அவர் வயிற்றைப் பிசைந்தது. கொதிக்கும் எண்ணெயில் குதித்து விடலாமா என்று கூடப் பார்த்தார்: ஆனால் எண்ணெய் போதுமான அளவு சூடாகவில்லை.

கார் ஸ்டேரிங்கை ஒடிப்பது போல கஷ்டப்பட்டு ஒரு பெரிய முறுக்குக்கு மாவை வளைத்துக் கொண்டிருந்தார் அப்புசாமி. ”ஏண்டாப்பா, நீ என்ன கைமுறுக்கு பண்ணுகிறாயா, கால் முறுக்கா? கண்ணராவியாக இப்படியா முறுக்குச் சுற்றுவது?” என்ற குரல் கேட்டுத் திரும்பினார்.

எங்கோ கேட்ட குரல்; மிகவும் பழக்கமானது மாதிரி இருந்தது.

திரும்பிப் பார்த்தால் கீதாப்பாட்டி!

அண்ணலும் நோக்கினன்… அவளும் நோக்கினள்.

”யாரு! கீதா மாமியா?” என்று அப்புசாமியின் வாய்பிளந்தது. சீதாப்பாட்டியின் பரம வைரியும், எதிரியும் ஏற்கெனவே பல தடவை சீதாவிடம் மோதி வெற்றிக் கண்டவளுமான கீதாப்பாட்டிதான் அது.

”யாரு! அப்பு சாமி மாமாவா! அடப் பாவமே!” என்று ஆச்சரியப்பட்ட கீதாப்பாட்டி அடுத்த கணம், ”ஐயோ பாவமே! உங்களுக்கா இந்தக் கதி! வீடும் வாசலும் காரும் சைக்களுமாய் ஓகோன்னு இருந்துட்டு, இப்போது பரிசாரகமா பண்ணுகிறீர்கள்– அதுவும் பண்ணத் தெரியாமல்?”

அப்புசாமி முழங்காலிலிருந்த மாவை பிய்த்துக்கொண்டே, ” அதை ஏன் கேட்றீர்கள்? இன்னும் கார், மோர், வீடு, என் பொண்டாட்டி சீதை எல்லோரும் அப்படியே முழுசாக இருக்கிறார்கள்! என் தலையிலே எழுத்து இப்படி வந்து முறுக்கு சுற்றுகிறேன்.”

”என்ன ஒரு கொழுப்பும் திமிரும் உங்க பொண்டாட்டிக்கு இருக்கணும்? நீங்க இப்படி முறுக்குச் சுற்றி சம்பாதிச்சுதான் அவளுக்கு குடித்தனம் நடக்கணுமா? மூஞ்சிலே கொட்டிக் கொள்கிற மாவைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளட்டுமே… அநியாயம்… அக்கிரமம்… கைத்தடியிலே நாலு போடறதில்லையா ஒரு ஆம்பிளை… நகருங்கோ சொல்கிறேன்… முறுக்கு சமாசாரத்தைப்பற்றி இனிக் கவலையை விடுங்கள் நான் பார்த்துக்கறேன். ஐயோ பாவம். நறநறன்னு இந்த மாவைப் போட்டா முறுக்கு வெடிச்சு மூஞ்சியெல்லாம் போயிருக்குமே…. நான் எல்லாக் காரியத்தையும் பண்ணிவிடட்டுமா உங்களுக்கா?”

”கீதா மாமி!” என்றார் அப்புசாமி, தழு தழுக்க. உங்களைத் தெய்வம்தான் கொண்டுவந்து விட்டுருக்குது. எப்படி நீங்க இந்த கல்யாண வீட்டுக்கு வந்தீர்கள்?”

”இந்த வீட்டுக்காரர்களுடைய கரும்பு மில்லெல்லாம் எங்க கிராமத்து பக்கம்தானே. ஊர் பூரா பத்திரிகை வைத்து அழைத்தார்கள். என்னை நேரிலேயே வந்துக் கூப்பிட்டுப் போனார்கள். கல்யாண சமையலுக்கு உதவி செய்ய. நகருங்கோ, போய்க் கையை நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். ஒரு காப்பிப் போட்டுத் தர்ரேன். குடிச்சிட்டு அக்கடா என்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.”

”கீதே!”என்றார் அப்புசாமி உணர்ச்சிப் பரவசமாக.

ஆனால் கீதாப்பாட்டியின் உள்நோக்கம் அவருக்கு எங்கே தெரியப் போகிறது? தான் செய்கிற ஒவ்வொரு முறுக்கையும் அதிரசத்தையும் கீதாப்பாட்டி கரெக்டாக எண்ணி, அதிலே எத்தனை இழைகள் இருக்கிறதோ அதையும் கூட எண்ணி, அதற்கு கூலி வசூலிக்கப் போகிறாள் என்பதை அப்புசாமி அறியமாட்டார்.

மாலையில் சீட்டி அடித்துக் கொண்டு, உல்லாசமாக உடம்பெல்லாம் பல்லாக ஒரே ஆனந்தமாக வீட்டுக்கு வந்தார் அப்புசாமி.

சோபா மீது ஜிங் என்று ஏறிப் படுத்துக்கொண்டவர், ”எண்ண எண்ண இனிக்குது… ஏது ஏதோ நடக்குது என்றுப் பாடத் தொடங்கினார் உல்லாசமாக.

சீதாப்பாட்டி திடுக்கிட்டுப் போனாள்.

”ஏன் கிழவி வாயைப் பிளந்துக் கொண்டு நின்னுட்டே? அடி உதை பட்டுக் கொண்டு வராமல், சீட்டி அடித்துக் கொண்டு வருகிறேனே என்று வாயை பிளந்துட்டியா? ஒரே புகழ் மாலைகள்தான். இந்தா உன் கழுத்திலே ஒரு முறுக்கை மாட்டிக் கொள்!” என்று அப்புசாமி ஒரு பெரிய முறுக்கை சீதாப் பாட்டியின் கழுத்தில் மாட்டினார். ” நீங்க …நீங்க… செய்ததா ?” விக்கித்துப் போனாள் சீதாப்பாட்டி.

”நான் ஏன் செய்கிறேன்! குரு மகராஜி கீதா மாதாகீ ஜேய்! அனாதைக்கு அபயம் கொடுத்த கீதா தேவி வாழ்க!” அப்புசாமி கூறினார்.

சீதாப்பாட்டிக்கு, கீதா என்று கேட்டதும் மெய் சிலிர்த்தது. ”வாட் டிட் யூ ஸே! என்ன பேர் சொன்னீர்கள்?”

”சொல்லட்டுமா! குரு மகராஜி கீதா மதாகி ஜேய் என்றேன்! அபயம் கொடுத்த கீதாப்பாட்டி அடியோடு வாழ்க என்றேன்!”

”கீதா!” சீதாப் பாட்டி பல்லை நறநறத்தாள். உடம்பெல்லாம் அவளுக்கு வியர்த்தது. ”யூ மீன் தட் ரெச்சட் ஓல்ட் வுமன்.”

அப்புசாமிக்கு ஆனந்தம் தாங்கவில்லை, பாட்டியின் பதற்றத்தைப் பார்த்து.

”ஆமாம் ஆமாம் என் கைகேயி! உன் பிரியமான சினேகிதி கீதாப் பாட்டியைத்தான் வாழ்த்திக் கொண்டிருக்கிறேன். கல்யாண வீட்டில் கையையும் மாவையும் பிசைந்து கொண்டு நின்றிருந்தேன். கடவுள், கடவுள் என்கிறார்களே–அது உயரமான ஒல்லிக் கிழவியாக உருவெடுத்து அங்கே வந்தது. பார்த்தால், கீதாப் பாட்டி. அவ்வளவுதான்! அதோ வந்து கொண்டிருக்கும் கை கொடுத்த தெய்வத்தை…முறுக்கைக் கொடுத்த தெய்வத்தை பார். பார்…பார்…எனக்காக தன் கரிய நீண்ட மேனி, மேலும் கரியடைய முறுக்குகள் செய்து அடுக்கியத் திருவுருவத்தைப் பார்!”

சீதாப் பாட்டி கண்கள் ஆத்திரத்தாலும், வியப்பாலும் விரிய வாசலைப் பார்த்தாள். படு தைரியமாக கீதாப்பாட்டி வாசற் படி ஏறி உள்ளே வந்து கொண்டிருந்தாள்.

அப்புசாமி , ”வாருங்கள் மாமி, வாருங்கள்.” என்று விரைந்து முன்னே ஓடிச் சென்று வரவேற்றிருப்பார், சீதாப்பாட்டியின் கை அவருக்கு ‘வாக்குவம் பிரேக்’ போடாதிருந்தாள்.

வந்தவளை வா என்று சீதாப் பாட்டி சொல்லவில்லை.

ஆனால் கீதாப் பாட்டி அதிகாரம் செய்து வரவேற்பை வேண்டினாள். ” ஏண்டியம்மா சீதே! வந்தவளை வாவென்று சொன்னால் உனக்கென்ன வாய் முத்தா உதிர்ந்துவிடும்? வீட்டுக்காரர் பாவம் வயசானவர்–அவருக்குத் சொத்தில்லையா, சுதந்திரமில்லையா, மனுஷயசகாயம் இல்லையா? அவர் இப்படி நாலு கல்யாண வீட்டிலே கையைச் சுட்டுக் கொண்டு பரிசாரகம் பண்ணிப் பிழைக்கிற மாதிரி நடுரோட்டில் விட்டுடியா! உன்னைக் கேட்பார் இல்லை என்று நினைக்துக் கொண்டிருக்கிறாயா? கேட்பதற்க்குதான் என்னைக் கடவுளே இங்கு அனுப்பிவிட்டார்!”

”ஷட் அப்!” சீறினாள் சீதாப் பாட்டி, ”ஒழுங்கா வெளியே போய்விடுங்கள். இது பூரா பூரா எங்க ·பேமலி மேட்டர்!

”எந்த எலி மாட்டரா இருந்தா என்ன,எந்தப் பெருச்சாளி மாட்டரா இருந்தாள் எனக்கென்ன? நான் எத்தனை முறுக்கு எத்தனை இழை சுற்றினேனோ அத்தனைக்கும் எனக்குக் கூலி வந்தாகணும். நீ படிச்சு கிழிச்சவளாச்சேனு பேப்பரிலேயே போட்டுக் கொண்டு வந்து விட்டேன். உங்க வீட்டுக்காரர் என் காலைப்பிடித்துக் கொண்டு கெஞ்சினதற்காக வேணும்னா, ஒரு ரூபா கம்மிப் பண்ணிக்கொள். ஏழு நெளியிலே எழுப்பதோரு முறுக்கு, ஐந்து நெளியிலே நூறு முறுக்கு, மூன்று நெளியிலே முன்னூறு, எழுபத்தோரு அதிரசம், ஸ்வீட் நானூறு எல்லாமாகச் சேர்த்து முன்னூறு ரூபா எனக்குச் சேரணும். தெரிந்ததா? உன் வீட்டுப் படி நான் ஏன் ஏறணும் இல்லாட்டா? கடன்காரியாக்கும் நீ? வசூலுக்காக நான் வந்திருக்கிறேனாக்கும்…”

”ஓ! மை குட்னஸ்! முன்னூறு ரூபா பில்லா!”

“பில்லோ வைக்கோலோ!பணத்தை முன்னே எண்ணி வை கீழே!” கீதாப்பாட்டி வாசற்ப்படியில் நின்று கொண்டு கீச்சிட்டாள். அப்புசாமியை எரிப்பதுபோல் பார்த்துவிட்டு, சீதாப்பாட்டி பணத்தை ஓர் உறையில் போட்டு, கீதாப் பாட்டியிடம் வீசிப் போட்டாள்.

“லட்சுமியை தூக்கியா எறியிறே? எல்லாம் பறி போய் நட்ட நடு ரோட்டிலே நிற்கப் போறே பார்,” என்று ஆசிர்வதித்து விட்டு கீதாப் பாட்டி நகர்ந்தாள்.

கீதாப் பாட்டி போனதும் அப்புசாமி, “ஹ ஹ! ஒரு வேடிக்கை பார்த்தாயா?” என்று சிரித்தார். “உன் புருஷன் எப்படி கல்யாண வீட்டிலிருந்து அடி உதை வாங்காமல் வந்தான் பார்த்தாயா? அவர்கள் என்னை கரும்பு பிழிகிற மாதிரி பிழிந்து விடுவார்கள், அது இது என்றாயே எப்படிக் கடைசியில் மாலைப் போட்டு அனுப்பினார்கள் பார்த்தாயா? இந்த அப்புசாமி மீது ஒரு பயல் கை வைக்க முடியாது!” என்று பெருமைப்பட்டார்.

சீதாப்பாட்டி அப்புசாமியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன அப்படி வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாய்? ஹி ஹி! எனக்கு கூச்சமாயிருகிறது!”

“ஷட் அப்!” என்று சீறின சீதாப்பாட்டி, “கெட் அப்·பர்ஸ்ட்!” என்று கூவினாள்.”எப்படி உங்களிடமிருந்து அந்த நஷ்டத்தை ரெகவர் பண்ணுவதென்பது எனக்கு தெரிந்து விட்டது. நம் வீட்டிலே பெரிய கூடையாக இருக்கிறதல்லவா? அதை எடுத்துக்கொண்டு வாருங்கள் சொல்கிறேன் க்விக்!”

“எதுக்கு சீதே கூடை?” அப்புசாமி குழம்பினார். “ஏதாவது மாஜிக் செய்யப் போகிறாயா?”

“எஸ்! மாஜிக்தான்! ஆனால் செய்யப்போரது நீங்கள்! இடம் மெரினா பீச்.”

“சீதே… நீ சொல்கிறது புரியவில்லையே… எனக்கு என்ன மாஜிக் தெரியும்? மாஜிக் பண்ணி முன்னூறு ரூபாய் சம்பாத்துக் கொடு என்கிறாயா?”

“நோ… நோ நம்ம வீட்லே நீங்கள் முறுக்கு டிரெய்னிங் எடுத்துக் கொண்டபோது செய்த ஏராளமான முறுக்கு ஸ்க்ரேப்ஸ் அப்படியே இருக்கிறது. அதையெல்லாம் எடுத்துப்போய் பீச்லே தினமும் கொஞ்சமாய் விற்றுக் கொண்டு வாருங்கள்! கல்யாண வீட்லே உங்களுக்கு குடுத்த ரிவார்டை, பீச்சிலே உங்களிடம் முறுக்கு வாங்கிறவர்கள் கட்டாயம் கொடுப்பார்கள்! கெட் ரெடி…த்ரீ ஓ கிளாக் ஆகப்போகிறது!”

“சீதே” என்று அப்புசாமி மீண்டும் கருணை மனு கொடுத்துப் பார்த்தார்.

“இந்த வீட்டிலே என்ட்டர் ஆகணும்னு அபிப்பிராயமிருந்தால், முறுக்கை பீச்சிலே விற்றுவிட்டு வாருங்கள். லெட் மீ ஸீ…எந்த கிழவி வந்து எங்களை இப்போ ஸேவ் பண்ணுகிறாள் என்று!”

“முறுக்கேய்… தேங்காய்ப் பால் முறுக்கேய்… கை… முறுக்கேய்… கால்முறுக்கேய்…” என்று அப்புசாமி கடற்கரையில் குரல் எழுப்பிக் கொண்டு, வியர்த்து விறுவிறுக்கச் சென்று கொண்டிருந்தார்.

“அம்மா!அம்மா! கால் முறுக்குமா, வாங்கிக் குடுமா!” என்று ஒரு குழந்தை தாயாரிடம் கேட்டது.

அப்புசாமி முறுக்குக் கூடையை இறக்கினார். “என்ன இது, முறுக்கெல்லாம் இப்படி உடைந்திருக்கிறது,” என்றாள் கூடையை இறக்கச் சொன்ன பெண்மணி.

“கால் முறுக்கு என்றுதானே சொன்னேன். முக்கால் முறுக்கு உடைந்து விட்டது! ஹி ஹி! பார்த்து போனி பண்ணுங்கமா. சீதேக் கிழவி பொல்லாதவள்…எட்டணா துட்டாவது கொண்டு போய்க் கொடுக்காட்டி வாட்டி வதைத்து விடுவாள்…”

“யாரது சீதாக் கிழவி?” என்றாள் அந்தப் பெண்.

“அதை ஏன் கேட்கிறீங்க? அது ஒரு பிடாரி! நீங்க முறுக்கு துட்டை சீக்கிரம் எடுங்க தின்னுப் பாக்கறதுக்கு முன்னாடி!” என்று கேட்டு, ஐந்து நயா பைசாவை வாங்கிக்கொண்டு, “முறுக்கேய் என்று கத்தியவாறு அடுத்த கிராக்கி தேடியும், இந்தக் கிராக்கியிடமிருந்து தப்பிப்பதற்க்கும் ஓடத் தொடங்கினார் அப்புசாமி.

கீதம்
06-09-2012, 04:46 AM
அப்பப்பா... இந்த சீதாப்பாட்டி என்னமா தாட்பூட்னு இங்கிலிஷில் பிளந்துகட்டுகிறார்! அப்புசாமித் தாத்தாவை இப்படியா விரட்டுவது? கொஞ்சங்கூட கருணை காட்டமறுக்கிறாரே... எல்லா முறுக்கையும் விற்றுமுடித்து எப்போது வீட்டுக்குத் திரும்பவாரோ? முறுக்கைத் தின்னுமுன் காசை எடுக்கச் சொல்வது சூப்பர். வேர் இஸ் த மணி என்றதும் பூஜை மணியைக் கொண்டுவந்து வைத்த தாத்தாவின் துணிவைப் பாராட்டியே ஆகவேண்டும். மற்றுமொரு அருமையானக் கதைப்பகிர்வுக்கு நன்றி கலைவேந்தன்.

மசால் தோசையின் விலை அரை ரூபாயா? ஆறு ரூபாயா? சின்ன சந்தேகம் :)

நாஞ்சில் த.க.ஜெய்
06-09-2012, 05:29 AM
அனைத்து கதையினையும் இன்று படித்து முடித்தேன் ..நான் விரும்பி படிக்கும் அப்புசாமி சீதா பாட்டி கதை அருமை ..

sarcharan
15-09-2012, 06:29 AM
அப்புசாமிக்குக் சுடச்சுட இஞ்சி கஷாயத்தை ஊற்றிய மாதிரி இருந்தது.
சீதையைத் தேடிக்கொண்டு வந்து இப்படி ஒரு புகழ் மாலையா?செத்தும் கெடுத்தான் திருவாழத்தான் என்பதைப் போல,அவள் ஊரிலே இல்லாதபோதும் அவளுக்குப் புகழுரைகளா?


தாத்தாவின் மனக்கஷ்டத்தை சூசகமாக சொல்லி இருக்கீங்க

செத்தும் கொடுத்தான் சீதக்காதி



வந்தவர் அம்மா இல்லீங்களா?” என்றார்.

”சாத்தனூர் இல்லே,சாத்தனூர்!அங்கே போயிருக்கிறாங்க உல்லாச பயணம்….”

”ஓஅப்படியா?’ ‘திடுக்கிட்டார் வந்தவர். ”எப்போ வருவாங்க?”

”யாருக்குத்தெரியும்? ஆமாம் எதற்காக இவ்வளவு அக்கறையாகக் கேட்கறீங்க சீதைப்பத்தி?”



அப்புசாமி ஒரு ஹவுஸ் ஹஸ்பண்டு என்பதை இவ்வளவு வெளிச்சம் போட்டு காட்டணுமா?




சீதாப்பாட்டி அவரைத் தட்டி கொடுத்து, ” பயப்படாதீங்கள். ஐ அம் ஹியர்… வாட் இஸ் த மாட்டர்?’என்று அபயம் கொடுத்த பிறகுதான், அவருக்கு உயிர் வந்தது.

”என்ன ‘கட்ஸ்’ இருந்தாள் இங்கே வீட்டுக்குள் வந்து என் ஹஸ்பண்டை மிரட்டுவீர்கள்?



அப்புசாமி புல்லரிச்சு போய் இருப்பாரே






அவர் போனதும், சீதாப்பாட்டியின் பார்வை அப்புசாமியின் மேல் பாய்ந்தது. வேர் இஸ் தட் மணி? மேசை மீது வையுங்கள் ”என்றாள்.


அப்புசாமி பூசை மணியைக் கொண்டுவந்து பவ்யமாக வைத்தார்.



"வேர் இஸ் தட் மணி? " - இந்த இடத்துல நம்ம காத்தாடி ராமமுர்த்திய நான் அப்புசாமியா நெனச்சி பார்த்தேன்.
சிரிப்பை வரவழைத்தது.




திரும்பிப் பார்த்தால் கீதாப்பாட்டி!

அண்ணலும் நோக்கினன்… அவளும் நோக்கினள்.


ரொமான்சா? ஒரு தலை காதாலா? நடக்கட்டும்...நடக்கட்டும் ...



”யாரு! அப்பு சாமி மாமாவா! அடப் பாவமே!” என்று ஆச்சரியப்பட்ட கீதாப்பாட்டி அடுத்த கணம், ”ஐயோ பாவமே! உங்களுக்கா இந்தக் கதி! வீடும் வாசலும் காரும் சைக்களுமாய் ஓகோன்னு இருந்துட்டு, இப்போது பரிசாரகமா பண்ணுகிறீர்கள்– அதுவும் பண்ணத் தெரியாமல்?”


”என்ன ஒரு கொழுப்பும் திமிரும் உங்க பொண்டாட்டிக்கு இருக்கணும்? நீங்க இப்படி முறுக்குச் சுற்றி சம்பாதிச்சுதான் அவளுக்கு குடித்தனம் நடக்கணுமா? மூஞ்சிலே கொட்டிக் கொள்கிற மாவைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளட்டுமே… அநியாயம்… அக்கிரமம்… கைத்தடியிலே நாலு போடறதில்லையா ஒரு ஆம்பிளை… நகருங்கோ சொல்கிறேன்… முறுக்கு சமாசாரத்தைப்பற்றி இனிக் கவலையை விடுங்கள் நான் பார்த்துக்கறேன். ஐயோ பாவம். நறநறன்னு இந்த மாவைப் போட்டா முறுக்கு வெடிச்சு மூஞ்சியெல்லாம் போயிருக்குமே…. நான் எல்லாக் காரியத்தையும் பண்ணிவிடட்டுமா உங்களுக்கா?”

”கீதா மாமி!” என்றார் அப்புசாமி, தழு தழுக்க. உங்களைத் தெய்வம்தான் கொண்டுவந்து விட்டுருக்குது. எப்படி நீங்க இந்த கல்யாண வீட்டுக்கு வந்தீர்கள்?”





”நான் ஏன் செய்கிறேன்! குரு மகராஜி கீதா மாதாகீ ஜேய்! அனாதைக்கு அபயம் கொடுத்த கீதா தேவி வாழ்க!” அப்புசாமி கூறினார்.

”கீதா!” சீதாப் பாட்டி பல்லை நறநறத்தாள். உடம்பெல்லாம் அவளுக்கு வியர்த்தது. ”யூ மீன் தட் ரெச்சட் ஓல்ட் வுமன்.”

அப்புசாமிக்கு ஆனந்தம் தாங்கவில்லை, பாட்டியின் பதற்றத்தைப் பார்த்து.


எரியிற கொள்ளியில் என்னை ஊற்றுவது இதுதானோ?




வீட்டுக்காரர் பாவம் வயசானவர்–அவருக்குத் சொத்தில்லையா, சுதந்திரமில்லையா, மனுஷயசகாயம் இல்லையா? அவர் இப்படி நாலு கல்யாண வீட்டிலே கையைச் சுட்டுக் கொண்டு பரிசாரகம் பண்ணிப் பிழைக்கிற மாதிரி நடுரோட்டில் விட்டுடியா! உன்னைக் கேட்பார் இல்லை என்று நினைக்துக் கொண்டிருக்கிறாயா? கேட்பதற்க்குதான் என்னைக் கடவுளே இங்கு அனுப்பிவிட்டார்!”


அப்புசாமி தாத்தா பின்னாலே வெள்ளைவெளேர் என்று தேவதைகள் ஓடி வந்திருப்பாங்களே... ஒரு பேட்டா சாங்கு வேற கேட்டு இருக்குமே..


சீதா- கீதா ஃபைட்டு சூப்பர். அப்புசாமி தாத்தா உச்சகட்ட சந்தோசம் அடைந்திருப்பாரு.





சீதாப்பாட்டி அப்புசாமியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன அப்படி வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாய்? ஹி ஹி! எனக்கு கூச்சமாயிருகிறது!”



இந்த ரணகளத்துலேயும் தாத்தாவுக்கு ஒரு நமுட்டு கிளுகிளுப்பு...



“ஷட் அப்!” என்று சீறின சீதாப்பாட்டி, “கெட் அப்·பர்ஸ்ட்!” என்று கூவினாள்.”எப்படி உங்களிடமிருந்து அந்த நஷ்டத்தை ரெகவர் பண்ணுவதென்பது எனக்கு தெரிந்து விட்டது. நம் வீட்டிலே பெரிய கூடையாக இருக்கிறதல்லவா? அதை எடுத்துக்கொண்டு வாருங்கள் சொல்கிறேன் க்விக்!”

“எதுக்கு சீதே கூடை?” அப்புசாமி குழம்பினார். “ஏதாவது மாஜிக் செய்யப் போகிறாயா?”

“எஸ்! மாஜிக்தான்! ஆனால் செய்யப்போரது நீங்கள்! இடம் மெரினா பீச்.”


இது உச்சகட்ட அவமானம்

கலைவேந்தன்
11-12-2012, 05:21 AM
நன்றி நண்பர்களே...

கலைவேந்தன்
11-12-2012, 05:23 AM
10. அப்புசாமியும் அழகிப் போட்டியும்

அப்புசாமிக்கு அவசரமாக மூன்று கூடை அழுகல் தக்காளியும், இரண்டு கூடை அழுகல் முட்டையும், ஒரு கூடை காது அறுந்த செருப்புகளும் தேவைப்பட்டன.

மாம்பலத்தின் கசகச காய் மார்க்கெட்டில் தக்காளி செல்வரங்கத்தின் ஹோல்ஸேல் தக்காளி மண்டியில் பேரம் செய்து கொண்டிருந்தார்.

“நல்லா அழுகியிருக்கணும் கூடைக்கு அஞ்சு, பத்து அதிகம் கேளு, குடுத்துடறேன். ஆனால் தக்காளி சும்மா கப்பெடுக்கணும். ஆமாம், “என்றார். “எதுக்கு சாமி அவ்வளவு அழுகின தக்காளி? ஓட்டல் எதுனா வெச்சிருக்கியா?” என்று செல்வரங்கம் விசாரித்தான்.

“அதையெல்லாம் கேட்காதே. உன்னை வடையைத் தின்னச் சொன்னால் தொளையை எண்ணுறியே…” என்று அவனைக் கடிந்துகொண்டார். “நீயாகப் பொறுக்கித் தர்றியா? நானாகப் பொறுக்கி ஆகட்டுமா?”

ஒரு வழியாக நல்ல அழுகல் தக்காளி கூடை இருநூறு ரூபாய் வீதம் விலை பேசி ஆட்டோவில் வைத்துக்கொண்டார்.

“இன்னா சார், இந்தக் கப்பு அடிக்குது,” என்று முகம் சுளித்தான் ஆட்டோக்காரன் “மாட்டுக்கா சார்?”

“எல்லாம் மனுசனுங்களுக்குத் தான். உன்னை வடையைத் தின்னச் சொன்னால் துளையை எண்ணுறியே. அம்பது ரூபா அதிகம் தர்றேன்னு சொல்லியிருக்கேனில்லே? நேராக முட்டைக் கடைக்கு வண்டியைச் சீக்கிரம் வுடு. இரண்டு கூடை அழுகல் முட்டை வாங்கணும். அப்புறம் பிளாட்பாரத்திலே பழைய செருப்பு தைக்கிறவனாப் பார்த்து நிறுத்து. பழைய செருப்பு ஒரு கூடை வாங்கியாகணும்.” நாற்றம் குடலைப் பிடுங்கினாலும், வந்த கிராக்கியை விட்டுவிடக் கூடாது என்று ஆட்டோக்காரன் பல்லையும், மூக்கையும் கடித்துக் கொண்டு பொறுமையாக வண்டியை விட்டான்.

திடீரென்று ஒரு பயம், வந்துவிட்டது. ஒரு கால் இந்தக் கிராக்கி பைத்தியம் கியித்தியமோ? பாதியிலே மீட்டருக்குப் பணம் குடுக்காம இறங்கி ஓடிடுமோ…’

வண்டியை டக்கென்று ஒரு ஸ்பீடு பிரேக்கரில் வேகமாக ஏற்றி ஒரு மாபெரும் சிறப்புக் குலுக்கல் செய்தான். பல சில அழுகல் தக்காளிகள் எழும்பிக் குதித்தன. அவற்றுடன் அப்புசாமியும் எகிறிக் குதித்தார் என்று சொல்லத் தேவையில்லை.

“வண்டி பிரேக்டவுன் சார். இறங்கிக்குங்க…”

“என்னப்பா இது? டகால்னு இப்படிச் சொன்னால் எப்படி?”

“நீங்க துட்டை முதல்லே அட்வான்ஸாக் குடுத்துடுங்க… ரிப்பேர் பண்ணிப் பார்க்கிறேன். வண்டியைத் துடைச்சுக் கிளீன் பண்ணினாக்கூட கப்பு நாத்தம் போக ஒரு வாரம் ஆகும்.”

அப்புசாமி புரிந்துகொண்டார். “இன்னா நைனா… கலாச்சாரக் காவலர் நான். என்கிட்டே இப்படி ‘கப்’ அண்ட் ரைடாப் பேசிறியே. துட்டா பெரிசு? மனுசங்கதான் முக்கியம். நம்ம நாட்டோட பண்பு, கலாச்சாரம், கிழவிங்க இவுங்கதான் முக்கியம்.”

“சரி. சரி… துட்டை வெட்டுங்க மொதல்லே. இல்லாட்டி வண்டி நவுராது.”

அப்புசாமி இரண்டு நூறு ரூபாய் நோட்டை அலட்சியமாக அவனிடம் நீட்டினார். “ஏம்பா, என்னை அன்னக்காவடின்னு நினைச்சிட்டியா? சரி… சரி… முட்டைக் கடைக்கு வுடு, ரெண்டு கூடை அழுகல் முட்டை உடனடியாக வேணும்.”

ஆட்டோக்காரன் ரூபாயை வாங்கிப் போட்டுக்கொண்டதும் அவரது பரம தாசனாக ஆகிவிட்டான்.

“செய் சார். தப்பா நெனச்சிக் காதேபா… வண்டியிலே நல்லவனும் ஏறுவான். மிஸ்டீக்கான கசுமாலங்களும் ஏறும். ஆட்டோக்காரன் பொல்லாதவன்னு பப்ளிக்கு நெனக்கறாங்களே கண்டி, ஏறுகிற வன்லே எத்தினி பேரு சாவு கிராக்கி, ரெளடின்னு யார் ஆக்ஷன் எடுக்கறானுங்க. சொம்மா ஒரு வார்த்தைக்கு சொல்றேன்.”

“சரி…சரி… நீ ரொம்ப நல்லவன். வண்டியை வுடுப்பா முட்டை கடைக்கு.”

அப்புசாமியைத் தேடித் தடாலென்று ஒருபட்டம் வந்தது. வீடு தேடி வந்த மகாலட்சுமியைக் காலால் உதைப்பதாவது என்று எண்ணி ஒப்புக்கொண்டார்.

சில தினங்கள் முன்பு அவரிடம் சஞ்சீவி என்ற கிழவர் வந்து கண்ணில் நீர் விட்டுக் கதறி விட்டார். “அண்ணா, உங்களை சொந்த அண்ணா மாதிரியே நினைச்சு சொல்றேன் நம்ம தமிழ்ப் பண்பாட்டை நீங்கதான் காப்பாத்தனும். நம்ம தமிழ் நாட்டிலே இப்படி ஒரு அக்கிரமமான விழா நடக்கலாமா? நம்ம வீட்டுக் கிழவிங்களை அடக்க ஒடுக்கமா வீட்டோடு இரு என்று நாம சொல்லை. அவுங்களுக்கு நல்லாச் சுதந்திரம் குடுத்துத்தான் இருக்கோம். நகைக்கடையிலே, புடவைக் கடையிலே, ஏஸி ஓட்டலிலே, பஸ்ஸிலே, ரயிலிலே, விழாக்களிலே பாருங்கள். எல்லா
இடத்திலும் கிழவிங்கதான் மினுக்கிட்டுத் திரியறாங்க. உங்க சம்சாரம் நடத்தற பாட்டிகள் முன்னேற்றக் கழகத்திலே பாருங்க… கில்லாடிக் கிழவிங்க கூட்டம் அட்டகாசம் பண்ணது.”

அப்புசாமிக்குக் கேட்கக் கேட்கக் காதிலே ஜிலேபி நீங்கிய ஜீரா பாய்வது போலிருந்தது.

“சபாஷ் பாண்டியா?” என்று அந்தக் கிழவரைத் தட்டிக் கொடுத்தார். “சரியான போடு போடறீங்க… கிழவிங்க கொட்டம் அடங்கணும்.”

“எப்போ எப்போவெல்லாம் அதர்மம் மிகுந்து தருமம் நலிவடைகிறதோ அப்போ அப்போவெல்லாம் நான் அவதரிப்பேன்னு கீதையிலே பகவான் சொன்னாரில்லையா? அந்த மாதிரி கிழவிங்க தொல்லை எப்போ எப்போவெல்லாம் அதிகமாகப் போகுதோ அப்போ அப்போவெல்லாம் அவுங்களை அடக்க உங்க மாதிரி ஒருத்தர் பொறக்கறாரு, அவதரிக்கிறார்னும் சொல்லலாம்.”

அப்புசாமிக்கு உச்சி பல் செல்ஷியஸ் உறைந்து விட்டது. “நான் ஒரு அவதார புருஷன் என்கிறீங்களா?”

“ஆமாம். சந்தேகமென்ன?” “நான் ஏதோ சீதேக்கிழவியோட புருஷன்னு இத்தினி நாளா அஸால்ட்டா இருந்துட்டேன்,” வருந்தினார் அப்புசாமி.

“ஆஞ்சநேயருடைய பலம் அவருக்கே தெரியாது.”

“நான் ஆஞ்சநேயர் என்றீர் சந்தோஷம் இப்போ நான் எந்த சஞ்சீவி மலையைக் கொண்டு வரணும்? உம்ம பேர்கூட சஞ்சீவிதான். உம்மைத் தூக்கிக்கொண்டு கடலைத் தாண்டணுமா?

கிழவர் சஞ்சீவி விளக்கமாகச் சொன்னதன் சுருக்கமாவது சீதாப்பாட்டி ஒரு அழகிப்போட்டி நடத்தப் போகிறாள் அறுபது வயது தாண்டிய கிழவிகள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

அழகுக் கிழவிகளுக்கான ‘கிளவியோபாட்ரா போட்டி’ என்று அதற்குப் பெயர். மேற்படி போட்டியில் எல்லாக் கிழவிகளும் கலந்து கொள்ளலாம். சென்னை ராணி சீதை ஆச்சி ஹாலில் விரைவில் நடை பெறப் போகும் அந்த அழகுக் கிழவிப் போட்டியில் சஞ்சீவியின் மனைவியும் கலந்து கொள்ளத் துடிக்கிறாள்.மேற்படி போட்டி நடப்பது தமிழகக் கலாச்சாரத்துக்கு விரோதமானது. அதை எப்படியாவது அப்புசாமி நிறுத்திவிட வேண்டும்.

“உங்க சம்சாரம் ஒரு புரட்சிப் பாட்டியாக இருக்கலாம். ஆனால் ஊரிலுள்ள எல்லாக் கிழவிகளையும் தப்பாக ஊக்குவிக்கக் கூடாது. சார், உங்ககிட்டே சொல்றதுக்கென்ன?” என்றுசஞ்சீவி குரலைத் தாழ்த்திக் கொண்டார். “என் சம்சாரம் நிஜமாகவே ரொம்ப அழகாக இருப்பாள். வயசு அறுபத்திரண்டிலும் செக்கச் செவேல்னு நெகு நெகுன்னு சந்தன சோப்பாட்டம் இருப்பா. ஆனால் நான் அவளை ‘பியர்ஸ்!’ ‘பியர்ஸ்’ னுதான் செல்லமாக் கூப்பிடுவேன். இந்தப் பக்கமிருந்து பார்த்தா அந்தப் பக்கம் தெரியும். ஸீத்ரூ என் பாங்களே அந்த ரகம்.”

அப்புசாமி பல்லைக் கடித்துக் கொண்டார்.

“யோவ்! என் சம்சாரம் சீதே கூடத்தான் பேரழகி. நீர் என்னவோ உங்க சம்சாரம்தான் ஒரே அழகிங்கற மாதிரி ஜம்பம் அடிச்சிக்கிறீங்களே? இப்படியெல்லாம் கர்வப்படறதாலே தான் அழகிப் போட்டிங்க வைக்கறாங்க… அப்புறம் குய்யோ முறையோன்னு கத்தறது. என் சம்சாரத்தைவிட உம்ம சம்சாரம் அழகா. தங்க பெல்ட்டு மாதிரி இடுப்பு என் சீதேக்கு! இஞ்சி இடுப்பழகின்னு ஒரு பழைய பாட்டு வருமே அதைத்தான் நான் பாடறது. ஆனால் டபுக்குனு இழுத்துப் போர்த்துக் கொண்டுவிடுவாள்.”

“ரொம்ப மன்னிக்கணும். நான் அதிகப்பிரசங்கித்தனமாப் பேசிட்டேன். என் சம்சாரம் ஒரு சுமாரான அழகின்னு வெச்சுக்குங்க.”

அப்புசாமி கோபமாக, “நான் கல்யாணமானவன். யார் சம்சாரத்தையும் நான் வெச்சுக்கத் தேவையில்லை…” என்றார்.

“சார், மன்னிக்கணும். இந்த அழகிப்போட்டி நடக்கக்கூடாது. என் சம்சாரத்து அழகைப் பிறத்தியார் பார்க்கறதை நான் விரும்பலை. அவள் அழகு இத்தனை வயசிலும் ஒரு போதை ஊட்டற அழகு. சுபாவத்தில்லேயே கொஞ்சம் சுற்றுகிற சுபாவம்.”

அப்புசாமி கவலையுன், “கற்பு எல்லாம் கியாரண்டிதானே?” என்றார்.

“சே! சே! நெருப்பு சார்… ஆனால் பாருங்கோ…”

“ஆனால் பார்க்காதீங்கோன்னு சொல்லுங்கோ.”

“ஹி! ஹி! சரியாச் சொன்னீங்க. அம்பதிலும் ஆசை வரும்னு சிவாஜி கூடப் பாடியிருக்கார்.”

“புரிஞ்சது!” என்று அப்புசாமி தலையாட்டினார். “உம்ம சம்சாரம் போட்டியுலே கலந்து கொண்டால் அவளைப் பார்த்து எந்தக் கிழவனாவது கொத்திக் கொண்டு போயிடுவாங்களோன்னு பயப்படறீங்க.”

“நீங்க மகா புத்திசாலி சார். நீங்கதான் போட்டி நடக்காதபடி செய்யணும். இந்த சூட்கேஸிலே ஐம்பதாயிரம் ரூபா இருக்கு எப்படிச் செலவு செய்வீங்களோ… ஏதாவது பண்ணி இந்தப் போட்டியை உங்க மனைவி நடத்தாமல் பண்ணிடணும்.”

அப்புசாமி உடனடியாகச் செயலில் இறங்கினார்.

“கலாச்சாரக் காவலர்’ என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டார். பலவீனமான பத்திரிகை நிருபர்களை வரவழைத்தார். காட்ட வேண்டியதைக் காட்டி, பெற வேண்டிய பப்ளிஸிட்டியைப் பெற்றார்.

‘அழகிப் போட்டியை நடத்தவிட மாட்டோம்!

கலாச்சாரக் காவலர் அப்புசாமி’ யின் வீர முழக்கம்!’ என்று கொட்டை எழுத்தில் பத்திரிகைகளில் செய்தி வருமளவுக்குச் செய்து விட்டார்.

மேற்படி செய்தி வந்த பத்திரிகையை மனைவி சீதே மீது வீசி அடித்தார்.

சீதாப் பாட்டி அதை வாங்கி மேலோட்டமாகப் பார்த்துவிட்டு அதனாலே தன்னை விசிறிக் கொண்டாள்.

“ஆஸ் யூஷீவல் சாலஞ்சா? வெல்கம்,” என்றாள்.

“அடியே கெயவி! என்கிட்டே மோதாதே. நான் பார்த்தாலும் புலி, பாய்ஞ்சாலும் புலி!” என்று கர்ஜித்தார்.

“ராணி சீதே ஆச்சி ஹால் முன்னாலே எங்க கோஷ்டி நாளைக்கு மறியல்டீ மறியல்…”

சீதாப்பாட்டி சிந்திக்கத் தொடங்கினாள்.

(அவள் சிந்தனையின் விளைவு-அடுத்த வாரம்)

அப்புசாமியை இரண்டு போலீசார் தரையோடு தரையாகத்தரதர செய்து கொண்டு போனார்கள்.
ஒரு காவலர் (கால் பந்தாட்டத்தில் பரிசு பெற்றவர்) எட்டி உதைத்தார்.

அப்புசாமி எதற்கும் அஞ்சவில்லை. அடிவாங்க, அடி வாங்க குரல் உரத்து ஒலித்ததே தவிர குறையவில்லை.

காப்போம்! காப்போம்! கற்பைக் காப்போம்!

காட்டாதே காட்டாதே! அழகைக் காட்டாதே!

நடத்தாதே! நடத்தாதே! கிழவிகளுக்குப் போட்டி நடத்தாதே!
சாரம், சாரம் – சம்சாரம்!
சாரம் சாரம் – கலாச்சாரம்.
அப்புசாமியின் உதட்டின்மீது விண்ணென்று ஒரு காவலர் தன் பூட்ஸைப் பதிப்பித்தார்.

கொடகொடவென்று ரத்தம் கொட்டியது. சே! பல்செட்டை உடைத்துவிட்டானே பாவி என்பதே அப்புசாமியின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

காலைக் கையை உதறிக்கொண்டு சிலிர்த்து எழுந்தார், விடுபட்டார் போலீஸ் பிடியினின்று. பார்த்த சினிமாக்கள் பகபகவென்று ஞாபகத்துக்கு வந்தன. போலீசின் கையிலிருந்து தடியைப் பறித்துக்கொண்டார். தன்னை நெருங்கிய போலீஸைப் புயல் வேகத்தில் சுழன்று சுழன்று தாக்கினார்.

ஒரு போலீஸைத் தூக்கி வீசி எறிந்தார். மேற்படி போலீஸ் ஏதோ ஒரு நீச்சல் குளத்தில் போய் தொபுகடீரென்று விழுந்தார். இன்னொரு போலீஸ்காரரையும் தூக்கிக் கடாசினார். அவரும் கரெக்டாக அதே நீச்சல் குளத்தில் விழுந்தார். மேலும் பல காவலர்களைத் தூக்கித் தூக்கி எல்லாத் திசையிலும் எறிந்தார்.

என்ன ஆச்சரியம் – தொந்தியும் தொப்பையுமாகக எல்லாக் காவலர்களும் எங்கே வீசப்பட்டாலும் அதே நீச்சல் குளத்தில் விழுந்தார்கள். அப்படி விழுந்தாயிற்று என்றால் கதாநாயகன் ஜெயித்தாயிற்று என்று அர்த்தம்.

அப்புசாமி தனது கோஷ்டியுடன் பா.மு. கழகத்தை நோக்கி முன்னேறினார்.

கலாச்சாரக் காவலர் அப்புசாமி வாழ்க! ஜெய்! என்ற கோஷங்களுடன் அவரைத் தோளிலேயே கிழத் தொண்டர்கள் தூக்கி மகிழ்ந்தனர். திடுமென்று ஒரு ஜீப் வந்தது.

ஸ்தலத்துக்கு ஐ.ஜி.யே வந்து விட்டார்.

அடுத்த நிமிஷம் ‘டிஷ்யூ! டிஷ்யூ’ என்று துப்பாக்கிகள் குண்டுகளைக் கக்கின. ஒரே புகை மயம்! கண்ணீர்ப் புகைக் குண்டுகள்!

அப்புசாமியின் காது, மூக்கு, கண் போன்ற சகல துவாரங்களிலும் புகை புகுந்து அவரைத் திக்குமுக்காடச் செய்தது.

திடுக்கிட்டுக் கண் விழித்தார்!

இதெல்லாம் கனவுதானா? ஆனால் அறையெங்கும் ஒரே புகையாக இருக்கிறதே!

அவர் குழம்பியவராக விளக்கைப் போட்டார். கனவுப் புகையாயிருந்தால் கண் விழித்ததும் மறைந்திருக்க வேண்டுமல்லவவா?

ரொம்ப ஸ்டிராங்கான கனவாக இருந்திருக்குமோ என்று எண்ணிக் கொஞ்சம் இயற்கைத் நீரைத் (எச்சில்) தொட்டுக் கண்ணைத் தேய்த்துக் கொண்டார்.

ஊஹ¥ம். நிஜமான புகையேதான்.

அவர் அடிவயிற்றில் ஜிலீங் என்று

ஒரு கண்ணாடி ஜாடி விழுந்து நொறுங்கியது. முதலைப் பண்ணையிலிருந்து அவசரமாக ஒரு முதலை விரைந்து வந்து அவரது சிறுகுடலைக் கவ்வி இழுத்தது.

இது நிஜப்புகையாக இருக்குமானால்… இருக்குமானால்… இருக்குமானால்…

நெருப்பில்லாது புகையுமா?

யார் அந்த நெருப்பு – சீதேக் கிழவியைத் தவிர அந்த நெருப்பு யாராக இருக்க முடியும்.

பாண்டவர்களை அரக்கு மாளிகையில் அடைத்துக் கொல்லப் பார்த்த துரியோதனன் மாதிரி – சீதேக் கிழவி தன்னை ஒழித்துக்கட்ட அறைக் கதவைப் பூட்டி, நெருப்பு வைத்து விட்டாளா?

அடியே பத்தீனி! உனக்கு இத்தீனி கொழுப்பா, திமிரா? பதறினார். கொதித்தார். கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழி வெறும் பேத்தல் அல்லவா?

சே! சே! சீதே அந்த அளவு போக மாட்டாள். என்னதான் பெண் முன்னேற்றத் தீவிரவாதியானாலும் இந்த மாதிரி குரூரமாகவெல்லாம் நடந்து கொள்ளமாட்டாள்.

‘கபால்’ என்று கதவைத் திறந்தார். வேகமாக மாடியிலிருந்து கீழே இறங்கினார்.

சீதாப்பாட்டி ஹாலில் அமைதியாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். யோகப் பயிற்சியை ஒரு பெண் கூடுமானவரை கவர்ச்சிகரமாகச் செய்து காட்டிக் கொண்டிருந்தாள்.

“சீதே! ஏ சீதே!” அப்புசாமி அலறினார். “என்னை நெருப்பு வெச்சே கொளுத்துற அளவு நீ போயிட்டியா?”

சீதாப்பாட்டி எழுந்துகொண்டாள். “குட் மார்னிங்! எழுந்ததுமே டென்ஷனோடு எழுந்திருக்கீங்க? வாட்ஸ் ராங் வித் யூ?”

அப்புசாமி மனைவியை எடை போடுவது போல முறைத்தார்.

சீதாப்பாட்டி பதறாமல் “ஜஸ்ட் எ மினிட்,” என்று சொல்லி வாசற் கதவைத் தாழிட்டு வந்தாள். “டியர் சார், நேற்று உங்களோடு வந்த சஞ்சீவி என்ற ஓல்ட்மேனை என்ன செய்தீர்கள்? ஏதாவது சிதம்பரம் வேலை செய்து சூட்கேஸில் அடைத்து விட்டீர்களா? அவர் மிஸஸ் வந்து இங்கே கவலைப்பட்டுட்டுப் போகிறாள். வீட்டிலே ஐம்பதாயிரம் மிஸ்ஸிங்காம். அவரையும் காணோம். கடைசியாக அவர் உங்களுடன்தான் இருந்திருக்கிறார். வீடு பூரா ஒரே ·பெளஸ் ஸ்மெல்! அவரை என்ன பண்ணினீங்க? அவுட் வித் யூ.”

அப்புசாமி ஆடிப் போய் விட்டார். “என்னடி பேத்தறே? என் தொண்டர்களையெல்லாம் ரகசியமாக ருக்மாங்கதா லாட்ஜில் தங்க வெச்சிருக்கேன். சஞ்சீவியாரை ஸ்பெஷலாக ஏஸி ரூமில் தங்க வைத்திருக்கிறேன்.”

“ஐ ஹாவ் மை ஒன் டெளட்ஸ்,” என்ற சீதாப்பாட்டி, “பின்னே இத்தனை ஸ்மெல்லும் உங்க ரூமிலிருந்து வருவானேன்! கட்டுக் கட்டாக ஊதுவத்தி உங்க ரூமுக்கு வெளியே கொளுத்தி வைத்தேன். அப்படியும் ரூமை நெருங்க முடியவில்லை…”

அப்புசாமி கடகடவெனச் சிரித்தார். “அழுகல் நாற்றத்துக்குக் காரணம் கேட்கிறியாடி ஆரணங்கே. நாளைக்கு நடக்கப்ப போகிற உங்க ‘கிளவியோபாட்ரா’ அழகுப்போட்டிக்குன்னு ரெண்டு கூடை தக்காளியும் அழுகல் முட்டையும் ஸ்பெஷலாக வாங்கி வைத்திருக்கேன். சொய்ங் சொய்ங்குனு எறிய. இப்ப வேணும்னா உன் மேலே வீசட்டுமா?”

சீதாப்பாட்டி நிம்மதிப் பெருமூச்சு விடுபவள்போல், “மைகாட்! நல்லவேளை! நான் போலீஸ் கமிஷனருக்குப் போன் செய்ய இருந்தேன். சமூகவிரோத சக்தியாகச் செயல்பட்டால் அவர் என் ஹஸ்பெண்டாகவே இருந்தாலும் நான் டாலரேட் பண்ணிக்க மாட்டேன்” என்றாள்.

அப்புசாமி அவள் சொல்லிக் கொண்டிருந்தபோதே மாடிக்குத் தன் அறைக்குச் சென்று முட்டைக் கூடையை மூக்கைப் பிடித்துக் கொண்டு தூக்கி வந்தார்.

“ப்ளீஸ்! ப்ளீஸ்!” என்று சீதாப்பாட்டி கதறிவிட்டாள். “உங்கள் கூடையைத் தூக்கிக்கொண்டு இப்பவே எங்காவது தொலையுங்கள். எங்கள் அழகுப் போட்டியை வேணும்னா வித்ட்ரா பண்ணிக் கொண்டு விடறேன்.”

அப்புசாமி, “ஹையா! வெற்றி! வெற்றி! எங்கள் போராட்டம் வெற்றி!” என்று கூடையைச் சுற்றி வந்து கும்மி அடித்தார். “இப்பவே நான் சஞ்சீவிக்கு இந்த சந்தோஷ சமாச்சாரத்தைச் சொல்லுகிறேன்,” என்று புறப்பட்டார்.

“எக்ஸ்கியூஸ் மி… ஜஸ்ட் எ மினிட்” என்று சீதாப்பாட்டி அவரது அவசரத்துக்கு அணை போட்டாள்.

“நீங்கள் உங்கள் சஞ்சீவிகிட்டே சொல்றதுக்கு முன்னே நான் ஔவை சண்முகிகிட்டே போய் இன்·பா¡ம் பண்ணணும். என்னைப் பொறுத்தவரை வித்ட்ரா பண்ணிக்க முடியும் ஆனால் கமலும் இதற்குச் சம்மதிக்கணுமே…”

“கமல்ஹாசனா? ஔவை சண்முகியா?”

“வோன்ட் யூ ஸிட்டெளன்? சில விஷயங்களை உங்களுக்கு விளக்க வேண்டும். கமல்தான் எங்க ‘கிழவியோபாட்ரா’ போட்டிக்கு ஜட்ஜ்! ஸ்பெஷலாக அவர் ஔவை சண்முகி வேஷத்துடன் ஜட்ஜாக வருகிறார்.”

“அத்திரிபச்சா! கில்லாடியான யோசனையா கீது? சீதே! சீதே! எனக்கு ஓசி டிக்கெட்டு ஒண்ணு குடுடி…” அப்புசாமி தனது லட்சியத்தை மறந்து கெஞ்சினார்.

சீதாப்பாட்டி சிரித்தாள். “யூ ஸில்லி! உங்களுக்கு டிக்கெட்டாவது… காரியிங் டொமடோ டு பேங்களூர்! சிரிப்பார்கள் யாராவது. உங்ககிட்டே சர்ப்ரைஸாகச் சொல்ல வேண்டும் என்று ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டிருந்தேன். அதற்குள் நீங்க அவசரப்பட்டு மறியல், பொறியல்னு ஆரம்பிச்சிட்டீங்க. பெட்டர் லேட் தேன் நெவர். இப்போ சொல்றேன் கேட்டுக்குங்கோ. கமல்ஹாசனோடு இன்னொருத்தரையும் ஜட்ஜாகப் போட்டிருக்கிறது. அவர் யார் தெரியுமோ? சாட்சாத் நீங்கள்தான்!”

அப்புசாமியின் கையிலிருந்து முட்டைக்கூடை தடாலென்று கீழே விழுந்தது. “நான்… நான்… நானும்… கமலோடு ஒரு ஜட்ஜா! அவர்கூட நானும் சரிசமமாக உட்காரப் போகிறேனா, ஓளவை சண்முகி மேக்கப்பிலேயே அவர் வரப் போகிறாரா? இன்னா சீதே! இதையெல்லாம் நீ முன்கூட்டியே சொல்றதில்லையா? அந்த சஞ்சீவிப்பயல் வந்து கெடுத்தான்.”

“லெட் அஸ் ·பர்கெட் அண்ட் ·பர்கிவ்…” என்று கணவனை ஆசுவாசப்படுத்தினாள். நீங்க அந்த சஞ்சீவி கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க. ஏதாவது நீங்க செலவழித்திருந்தாலும் நான் கொடுத்துடறேன். நோ ப்ராப்ளம்…”

“சீதே! என்னை எப்படியெல்லாம் கெளரவப்படுத்தியிருக்கிறே… அது தெரியாமல் நான்…” அப்புசாமிக்குத் தொண்டை கரகரத்தது. “கமல் சார்கிட்டே என்னைப் பற்றிச் சொன்னாயா? என்ன கேட்டார்?”

“ரொம்பச் சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால் நீங்க ·பங்ஷன்போது அவரிடம் ரொம்ப டீசன்ட்டாக நடந்துக்கணும். ஔவை சண்முகி வேஷத்திலே இருப்பார். நைஸாகத் தொட்டுகிட்டெல்லாம் பார்க்கக் கூடாது.” சீதாப்பாட்டி எச்சரித்தாள்.

“சீதே!” என்றார் அப்புசாமி திடீர் ஞாபகம் வந்தவராக, “என் ஜிப்பாவைக் கொஞ்சம் மடிப்பா அயர்ன் பண்ணித் தர்றியா?”

“நோ ப்ராப்ளம்,” என்றாள் சீதாப்பாட்டி. “புதுசாகவே இரண்டு வாங்கி பீரோவில் வைத்தாச்சு – குர்தா அண்ட் பைஜாமாகவாகவே பர்ச்சேஸ் பண்ணிட்டேன்!”

அப்புசாமி எதிர்பாராத மகிழ்ச்சியில் குரங்குபோல ஒரு தாவுத் தாவி மனைவியைக் கட்டிக்கொண்டு விட்டார்.

கரப்பு மேலே விழுந்ததுபோல் “சீ!” என்று சீதாப்பாட்டி அவரை ஓர் உதறல் உதறிவிட்டாள். “இது மாதிரியெல்லாம் அப்ஸர்டாக நடந்து கொள்வீங்கன்னு தான் உங்ககிட்டே எதுவும் சொல்லாமல் இருந்தேன்ன. பிஹேவ் யுவர்ஸெல்·ப்… உங்க மறியல் கோஷ்டிக்கு சமாச்சாரத்தைச் சொல்லிவிட்டு வாங்க… ஈவினிங் ஸிக்ஸ¤க்கு ரிஹர்சல் இருக்கு. கமல் வர்றார். நீங்க வர்றீங்க… காம்ப்பெடிட்டர்ஸ் வர்றாங்க. க்விக்… வி ஆர் ரேஸிங் வித் டைம். ஈவினிங் எடிஷன் பேப்பர்லே, உங்கள் மறியல் வாபஸ்னு நியூஸ் வந்தாகணும்…”

அப்புசாமி “தங்கள் சித்தம் என் பாக்கியம்! இதோ புறப்பட்டேன் தாயே…” என்று தாவாத குறையாக விரைந்தார்.

“எக் பாஸ்கெட்! எக் பாஸ்கெட்! இதை எடுத்துக்கொண்டு தொலையுங் ள்,” சீதாப்பாட்டி பதறினாள். “சீக்கிரம் வந்து வீடெல்லாம் சென்டட் ·பினைல் போட்டுச் சுத்தம் பண்ணுங்க. ரூம் ஸ்பிரேயர் எடுத்து என் ரூமுக்கு ஸ்பிரே பண்ணி வையுங்க…”

“உத்தரவு மகாராணி” என்று அப்புசாமி கிளம்பினார்.

‘கிழவியோபாட்ரா’ போட்டிக்கென பா.மு.கழகத்தின் நாடக அரங்கம் விசேஷமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளப் போகும் கிழவிமார்களோ, நீதிபதி கமலோ யாரும் வந்திருக்கவில்லை.

அப்புசாமி துடித்தார்: “அவ்வை சண்முகி இன்னும் வரலையே. கிழவிப் பட்டாளத்தையும் காணோம்.”

நீதிபதி அமர்வதற்கான சிங்கார ஆசனத்தைச் சீதாப்பாட்டி காட்டினாள்.

“ப்ளீஸ், முதலில் நீங்கள் அதில் போய் உட்காருங்கள். கமல் வருகிறபோது வரட்டும். அவர் திடீரென்று பெங்களூர் போய்விட்டாராம். அநேகமாக நீங்கள் ஒருத்தரே ஒருத்தர்தான் ஜட்ஜாக இருக்கப் போகிறீர்களோ, என்னவோ.”

அப்புசாமிக்கு கமலைப் பார்க்க முடியவில்லையென்ற விஷயம் ஏமாற்றம் தந்தாலும் நீதிபதிப் பொறுப்பு தனக்கு மட்டுமே என்பதில் பெருமை வழிந்தது.

“நீங்க நீதிபதி ஸ்தானத்தில் உட்காருகிறீர்கள். அழகிகளின் பரெட் தொடங்குமுன் ஓர் அழகிய கிழவி வந்து உங்களுக்கு மரியாதை செய்வாள். இந்தக் கைப்பிடியைப் பிடித்து ஓர் இழுப்பு இழுப்பாள். திபுதிபு என்று பூக்கள் உங்கள்மேல் கொட்டும். அந்த அழகிய கிழவி யாராயிருக்கும் என்று நீங்கள் கெஸ் செய்யுங்கள் பார்க்கலாம். ஒரு சின்ன க்ளூ தர்றேன். ‘சீ’யில் ஆரம்பித்து ‘தா’வில் முடியும்!”

அந்தக் கஷ்டமான புதிரை விடுவிக்கச் சிறிய போராடினார். பிறகு பளிச்சென்று விடை தெரிந்தது.

“நீயா!” என்று ஆச்சரியப்பட்டவர், “நம்பவே முடியலை சீதே. உன் கையால் எனக்கு பூமாரி பெய்யப் போகிறியா?”

“ஆமாம். நம்ம இண்டியன் கல்ச்சர்படி ஒரு மனைவிக்கு அவள் புருஷன்தானே தெய்வம். சரி, நீங்க போய் உங்கள் நீதிபதி ஆசனத்தில் உட்காருங்கள்.”

அப்புசாமி மிடுக்குடன் அமர்ந்தார்.

சீதாப்பாட்டி “ஸ்மைல் ப்ளீஸ்! நீங்க வீடியோ காமெராவைப் பார்ப்பதுபோல இருங்க. நேச்சுரலாக சிரியுங்க. சீரியஸாக வெச்சுக்காதீங்க…” என்றெல்லாம் டைரக்ட் செய்தாள்.

அப்புசாமி, “இவ்வளவு சிரிப்பு போதுமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தபோதே சீதாப்பாட்டி கை பிடியைப் பிடித்து இழுத்தாள்.

தபதபவென்று அப்புசாமி மீது மலர்மாரி கொட்டவில்லை. அதற்குப் பதில் மண் மாரி! காரமான சிவப்பு மண்! (மிளகாய்த்தூள் என்று சொல்வார்கள்!)

அப்புசாமி, “ஐயோ, அம்மா! அப்பா!” என்று கண்ணையும், மூக்கையும், வாயையும் தேய்த்துக்
கொண்டு குதித்தார். சில விநாடிகள் குதித்தபிறகு அது வெறும் மிளகாய்ப் பொடி மட்டுமல்ல; செந்தட்டி இலைப்பொடியும் விசேஷமாகக் கலந்து தயாரிக்கப்பட்ட மிளகாய்ப்பொடி என்று தெரிந்தது. உடம்பு பூராப் பற்றி எரிவதுபோல் அரித்தது.

“ஆ! ஐயோ! அப்பா! எரியுதே! எரியுதே!” என்று கத்திக்கொண்டு ஹால் பூரா ஓடினார். “அடியே துரோகி! பாவி! சண்டாளி!”

தனியார் நர்ஸிங்ஹோம் ஒன்றில் ஐந்தே முக்கால் அடி நீளத்துக்கு ஒரு நீளமான சேனைக்கிழங்கு படுக்கையில் படர்ந்து கிடந்தது. கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தால்தான் அந்த வீக்கக் குவியலுக்குள் ஓர் அப்புசாமி மறைந்திருப்பது தெரிய வரும்.

மிளகாய்ப் பொடியும், செந்தட்டியும் அவரை இரண்டுநாள் படுக்க வைத்து விட்டன. உடம்பு பூராவும் வீங்கிப் பரிதாபமாகப் படுத்திருந்த அவரிடம் தினந்தந்தியை ஒரு நர்ஸ் அன்புடன் தந்தாள்.

சென்னையை அயர வைத்த கிழவியோபாட்ரா அழகுப்போட்டி! பாட்டிகள் முன்னேற்றக் கழகம் ஏற்பாடு செய்திருந்த தமிழக அழகிய முதியோர் போட்டி சிறப்பாக நடந்தேறியது. ஆர்ப்பாட்டக்காரர்களின் மறியல் பிசுபிசுத்தது! சிறந்த அழகியாக விமலா சஞ்சீவி தேர்வு.

“என் மனைவி அழகிய கிழவியாகத் தெர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமைப்படுகிறேன்.” அழகிக் கிழவியின் கணவர் பெருமிதம்!

‘வயசானாலும் அழகாயிருப்பது எப்படி?’ என்பது பற்றி பா.மு.கழகத் தலைவி திருமதி சீதா அற்புதமாக ஓர் உரை நிகழ் தியது நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தது போலிருந்தது.

அப்புசாமி பத்திரிகையைத் தூள் தூளாகக் கிழித்தார்.

“அடியோ! மிளகாப்பொடி தூவி என் மறியலைப் பொறியல் பண்ணிட்டே இல்லை… உன்னை… உன்னை…”

நர்ஸ் நறுக்கென்று ஓர் ஊசி ஏற்றியதால் அவரால் மேற்கொண்டு பாட்டியைத் திட்ட முடியவில்லை.

கீதம்
11-12-2012, 09:00 AM
இந்த தாத்தாக்களும் பாட்டிகளும் பண்ணும் கூத்தைப் படிக்கப் படிக்க சிரிப்புதான். அதிலும் சீதாப்பாட்டி அப்புசாமித்தாத்தாவை இப்படி நையப்புடைக்கக்கூடாது. பாவம் மனிதர்! மீண்டும் அப்புசாமியின் அசகாய லூட்டிகளைத் தொடர்வதற்கு நன்றி கலைவேந்தன்.