PDA

View Full Version : பரிசு



PremM
12-08-2012, 05:53 PM
கருநிறப் பட்டுடையில்,
மின்னும் வெள்ளி முத்துக்கள்
நிலவுக்கோர் பரிசாகும்..

வானத்தின் பிரதி எடுத்து
வெண்மேக நுரை ததும்பும் அலைகளெல்லாம்,
கரைகளுக்கோர் பரிசாகும்..

உடை களைந்து,உடல் தளர்ந்து
கூடுகளாய் உருமாறும்,செடிகொடிகள் அனைத்தும் இங்கே
பறவைகளுக்கோர் பரிசாகும்..

முந்தானை குடைப் போல் ஒன்று,
ஒசோன் படலமானது அன்று
அது பூமி என்னும் குழந்தைக்கோர் பரிசாகும்..

காற்றிசைக்கு செவிமடுத்து,
மயங்கும் பூக்களெல்லாம்
மண்ணுக்கோர் பரிசாகும்..

************

மழை மேகம் தரும் பரிசு
விதையின் கூட்டுக்குள்ளே..

கண்ணீர் தரும் பரிசு
கரையும் துக்கத்தினுள்ளே..

பெண்மையின் பரிசு
உறங்கும் கருவினுள்ளே..

உறக்கம் தரும் பரிசு,
விடியலில் உடையும் சோம்பலின்னுள்ளே..

**************

மேகங்கள் எல்லாம் கைகுலுக்கிக் கொண்டால்,
மழை பரிசாகும்..

நதிகள் எல்லாம் கைகுலுக்கிக் கொண்டால்,
எதிர்காலம் பரிசாகும்..

எல்லைக் கோடுகள் எல்லாம் கைகுலுக்கிக் கொண்டால்,
அமைதி பரிசாகும்..

****************************

தந்தையின் விரல்கள் நடை பழகித் தந்தால்
அது மழலையின் பரிசாகும்..

தந்தையின் கைகள் தோள் மீது படர்ந்தால்
அது இளமையின் பரிசாகும்..

முதுமையின் வாசல் தேடும்போது மட்டும்
மகனே பரிசாகிறான்..

************************

இயற்க்கைக்கு நிகரான பரிசொன்றும் இல்லை..

அவை தரும் பரிசுகளை
திருப்பிக் கேட்பதும் இல்லை..

அதன் கைமாறாய் வேறொரு
பொருளை எதிர் பார்ப்பதும் இல்லை..

அதைப் பெறுபவனின்
தரத்தை சரிப் பார்ப்பதும் இல்லை..

**********************

ஓர் இரவில்,
உடல் படைத்து,
உயிர் பாய்ச்சி,
இதோ பூமிக்கோர் பரிசென்று
இறைவன் வைத்தான்...

காலையில்
விழித்த கடவுள்,
விழித்தது,
அவன் பல கடவுள் செய்து
பரிசளித்தான்..

கீதம்
12-08-2012, 11:20 PM
பரிசுகளின் பல்வேறுப் பரிமாணங்களை அழகாய் அலசிய கவி வரிகள்.

பூமிக்குழந்தைக்கு அம்மாவின் முந்தானையாய் ஒசோன் படலம்,

விரல் பற்றி நடக்கக் கற்றுத்தந்தத் தந்தைக்கு முதுமையில் பற்றிக்கொள்ளத் தோள் தரும் மகன்,

கடவுளுக்கே கடவுளர்களைப் பரிசளித்து வியக்கவைத்த மனிதன்...

பற்று, பாசம், பந்தம், பரவசம் என்று வாழ்வின் பல்வித உணர்வுகளையும் அழகாய்க் கட்டித்தந்தக் கவிப்பரிசுக்குப் பாராட்டுகள் Prem.

M.Jagadeesan
13-08-2012, 12:44 AM
இயற்கையின் ஒவ்வொரு படைப்பும், இறைவன் மனித குலத்துக்குத் தந்த பரிசாகும்.

"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!" என்று பாரதி பாடிய கவிதைதான் நினைவுக்கு வருகிறது. பாராட்டுக்கள் பிரேம்!

PremM
17-08-2012, 03:28 AM
தங்கள் ரசனைக்கும் ஊக்கத்திற்க்கும் நன்றி கீதம்..


நன்றி திரு.ஜகதீசன்..கண்டிப்பாக இயற்கையின் பரிசு அளவில்லாதது..