PDA

View Full Version : பெண் பார்க்க வந்தபோது.



M.Jagadeesan
12-08-2012, 04:23 AM
வெள்ளையடிக்கப்பட்டு புது மெருகோடு வீடு விளங்கியது. பெண் பார்ப்பதற்காக பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்தார்கள். வீட்டின் முன்புறத்தில் இருந்த ஹால், விருந்தினர்களால் நிரம்பி இருந்தது. வீட்டிலிருந்த பெண்கள் சிற்றுண்டி கொடுப்பதற்காக ஏற்பாடு செய்துகொண்டு இருந்தார்கள். வீடு கல்யாண களை கட்டியிருந்தது.

மாப்பிள்ளை நல்ல உயரம்; சிவப்பு நிறம்; கோட்டும் சூட்டும் அணிந்திருந்தார். அவருக்கு வலதுபுறம் அவருடைய அப்பாவும், இடதுபுறம் அவருடைய அம்மாவும் அமர்ந்து இருந்தார்கள். மற்ற உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள்.மணப்பெண்ணின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.

அம்மா அவர்களிடம்," என் பெண்ணைப் பாத்துட்டு , எல்லாம் இருந்து டிபன் சாப்பிட்டுப் போகணும். " என்று கேட்டுக் கொண்டார்.

அருகில் தூண்மறைவில் நின்றுகொண்டு மாப்பிள்ளையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். காஞ்சிப் பட்டுடுத்திக் கஸ்தூரித் திலகமிட்டுத் தேவதைபோல் இருந்த என்னை , மாப்பிள்ளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.எனக்கு குப்பென்று வியர்த்தது. சட்டென்று என்னைத் தூண் மறைவில் முற்றிலுமாக மறைத்துக் கொண்டேன்.

உள்ளே வந்த அம்மா," கமலா! விமலா! சீக்கிரம் வாங்க! விருந்தாளிகளுக்குக் காபியும், டிபனும் கொண்டுபோய் கொடுங்க!" என்று கேட்டுக் கொண்டார். கமலா என்னைப் பார்த்து சிரித்தாள். கமலா என்னுடைய உயிர்த் தோழி. சிறுவயது முதற்கொண்டே நானும், அவளும் இணைபிரியாத தோழிகள். நானும், கமலாவும் வந்திருந்த விருந்தாளிகளுக்குக் காபியும், டிபனும் எடுத்துக்கொண்டு போனோம். கமலா , மாப்பிள்ளைக்கு டிபன் கொடுத்தாள். மாப்பிள்ளை என்னை ஓரக் கண்ணால் பார்ப்பதைக் கவனித்தேன்.உடனே மாப்பிள்ளையின் அப்பா,

" டேய்! பொண்ணை நல்லா பாத்துக்கடா!" என்று சொன்னார். மாப்பிள்ளை வெட்கத்தில் நெளிந்தார். மற்ற விருந்தாளிகளுக்கு டிபன் கொடுத்துவிட்டு அவசர அவசரமாகத் தூணின் மறைவிலே நின்றுகொண்டேன். உடம்பில் லேசான நடுக்கம் தோன்றியது. எல்லோரும் காபி குடித்து முடித்தபின், மாப்பிள்ளை, அவருடைய அப்பாவின் காதிலே ஏதோ சொன்னார். உடனே அவர் அம்மாவை நோக்கி,

" பையன் , பொண்ணு கூடத் தனியா ரெண்டு வார்த்தை பேசணும்னு சொல்றான் ." என்று சொன்னார்.

" அதுக்கென்ன ! தாராளமா பேசட்டும்." என்று அம்மாவும் அனுமதி கொடுத்தார். உடனே மாப்பிள்ளை என்னை நோக்கி வந்தார். எனக்குத் தலை சுற்றி மயக்கம் வருவதுபோல இருந்தது. கெட்டியாகத் தூணைப் பிடித்துக் கொண்டேன். உடனே அம்மா,

" மாப்பிள்ளை! எம் பொண்ணு கமலா இங்க இருக்கா! அவ விமலா; பக்கத்து வீட்டுப் பொண்ணு. தாயில்லாத பொண்ணு; அவளும் என்னை ' அம்மா " ன்னுதான் கூப்பிடுவா! நீங்க அவசரமா வந்ததாலே எம் பொண்ணோட போட்டோவை உங்களுக்கு அனுப்ப முடியல; அதுதான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம்." என்று சொல்லி விளக்கினாள். மாப்பிள்ளை பேய் அறைந்ததுபோல நின்றார்.


நீதி: பெண் பார்க்க வரும்போது, மணப்பெண்ணின் அருகில் , அவளைவிட அழகான பெண்களை அனுமதிக்க வேண்டாம்.

jayanth
12-08-2012, 04:46 AM
சிக்கலாக்கி சீராகப் பிரித்தீர்கள்...
அருமை ஐய்யா...

கீதம்
12-08-2012, 05:41 AM
தர்மசங்கடமான சூழல். நல்லவேளையாக பெண்ணின் அம்மா உடனடியாய்ப் புரிந்துகொண்டு சொல்லிவிட்டார். ஆனால் மாப்பிள்ளை பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான். அந்தத் தாயில்லாப் பெண்ணுக்குத் தானாகவே வந்துசேரும் பழி. இதனால்தான் பல வீடுகளில் பெண்ணின் தங்கையைக் கூட, அக்காவின் திருமணம் நிச்சயமாகும்வரை மாப்பிள்ளை வீட்டார் கண்ணில் காட்டாமல் தவிர்க்கிறார்கள் போலும்.

இறுதித் திருப்பத்தை இடையில் ஊகிக்க இயலாதவாறு கொண்டுசென்றது சிறப்பு. பாராட்டுகள் ஐயா.

கவிதைகள் பகுதியில் தவறுதலாய்ப் பதியப்பட்டிருந்த இக்கதையை சிறுகதைகள் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன்.

Keelai Naadaan
12-08-2012, 06:26 AM
கதை திடீர் திருப்பத்துடன் ரசனையாகவும் பாடம் கற்பிக்கும் வகையிலும் இருக்கிறது.
சிறிய கதையிலேயே சொல்ல விரும்பும் கருத்தை நேர்த்தியாக சொல்லும் ஆற்றல் இயல்பாக அமைந்திருக்கிறது உங்களிடம்.

பெண்ணை பார்க்க வருபவர்கள் முன்பு பார்த்திராத பெண்ணாக இருந்தால் எதாவது கோயிலுக்கோ, உறவினரின் திருமண விழா அல்லது பூங்கா போன்ற பொது இடத்துக்கு வர வைத்து பெண்ணை பார்த்து விட்டு பிடித்திருந்தால் அதன் பிறகு ஊரார் உறவினர் அறிய வீட்டுக்கு வந்து நிச்சயம் செய்வது நல்லது.
அதை விடுத்து முன் பின் பார்த்திராத பெண்ணை உற்றார் உறவினர் சூழ பெண் பார்க்க வந்து பலகாரங்களை கொறித்து விட்டு பெண்ணை பிடிக்கவில்லை என்பது நியாயமல்ல.
அந்த பெண் மனம் என்ன பாடுபடும்...

M.Jagadeesan
12-08-2012, 07:20 AM
ஜெயந்த் , கீதம், கீழைநாடன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

அமரன்
16-08-2012, 09:13 PM
முடிவை ஊகிக்க முடியாதபடி கதையை நகர்த்திச் சென்றிருக்கின்றீர்கள்.

ஈழத்தில் பெண்பார்க்கும் படலம் இந்த மாதிரி இருந்ததில்லை. இப்போதும் இல்லை என்றே நினைக்கிறேன். கீழைநாடான் சொன்னது போல கோயிலிலோ வேறு பொது இடத்திலோ வைத்துப் பெண் பார்ப்பதே வழக்கம். அதனால் நடைபுறைகள் சரிவரத் தெரியாது..

படங்களில் பார்த்தவரை மாப்பிள்ளைக்குத் தேனீர் கொடுப்பது பெண்தானே. அந்த வகையில் கமலா மாப்பிளைக்கு டிபன் கொடுத்தாள்.. மாப்பிள்ளை ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தார்.. என்று சொல்லும் போதே சுதாரிச்சிருக்கனும்.. ஆனால் கதையை நகர்த்திய விதம் சுதாரிக்க வாய்ப்பு வழங்கவில்லை..

பாராட்டுகள் அய்யா.

M.Jagadeesan
17-08-2012, 05:08 AM
அமரன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

கலைவேந்தன்
17-08-2012, 02:37 PM
சிந்திக்க வைத்த சிறப்பான கதை. இறுதிவரை மர்மம் நிலவியதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பொதுவாகப் பெண்பார்க்கச்செல்லும் முன் புகைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு பிடித்திருந்தால் மட்டுமே செல்வது சிறப்பு. முன்பின் பார்த்திராத பெண்ணை பார்த்த ஒருகணத்திலேயே பிடித்துப்போனாலும் அதுவும் விபரீதம்தான். ஒருமுறையில் பெண்ணின் குணாதிசயங்களை அளவிட முடியாதன்றோ..?

என்னைக்கேட்டால் காதல்திருமணம் தான் சிறந்தது என்பேன். இதுகுறித்து ஒரு பட்டிமன்றம் வைத்தாலும் நல்லதே..

விரைவில் மன்றத்தில் பட்டிமன்றம் ஒன்றையும் தொடங்கலாமா என ஆலோசித்து வருகிறேன். இன்ஷா அல்லாஹ் நிறைவேறட்டும்.

பாராட்டுகள் ஐயா..!

அனுராகவன்
17-08-2012, 05:56 PM
பாராட்டுகள் ஐயா..!
:aktion033::aktion033:

நாஞ்சில் த.க.ஜெய்
19-09-2012, 01:28 PM
நிகழ்காலத்தில் ஜாதகம் பொருந்தி புகைபடம் அனுப்பி மணமகள் பற்றி அறிந்து பின்னர் மணமகள் காணும் சடங்கினை நிகழ்த்தும் போது இது போன்ற தவறுகள் நிகழ வாய்ப்புண்டா எனும் எண்ணம் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை..மாறுபட்ட கதை..வாழ்த்துக்கள்...

A Thainis
19-09-2012, 08:41 PM
கதை சொல்லிய விதம் சிறப்பு, தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு விறுவிறுப்பு, நல்ல படைப்பு வாழ்த்துக்கள் ஜெகதீசன் அவர்களே.

M.Jagadeesan
20-09-2012, 12:29 AM
கலைவேந்தன், அச்சலா, நாஞ்சில் த.க.ஜெய், ஆ.தைனிஸ் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி!

aren
20-09-2012, 02:50 AM
பெண் யார் என்று பெண் வீட்டார்கள் சொல்லவேண்டாமா? அதுபோல் பக்கத்துவீட்டுப் பெண்ணும் மணமகள் மாதிரி ஆடை உடுத்தியிருக்க மாட்டாளே. ஏதோ தப்பு நடந்திருக்கிறது.

நல்ல படிப்பினை. இனிமேலாவது மக்கள் கொஞ்சம் கவனத்துடன் இருக்கவேண்டும். அதனால்தான் அதே வயதொத்த பெண்களை மாப்பிள்ளையின் எதிரில் நடக்க விட மாட்டார்கள். சில வீடுகளில் அக்கா தங்கைகள் இருப்பர். ஆக்காவை பெண் பார்க்க வந்தால் தங்கையை அங்கே உலாவ அனுமதிக்கமாட்டார்கள். அவள் சமையலறையிலோ அல்லது வேறு அறையிலோ மறைந்து உட்கார்ந்திருப்பாள். இது ஒரு தர்ம சங்கடமான நிலமையை ஏற்படுத்தாமல் இருக்கவே.

சுஜா
20-09-2012, 09:09 AM
நல்ல டுவிஸ்ட் . நன்றாக இருந்தது... வாழ்த்துகள் ஜெகதீசன் அண்ணா..